கவிதைகள்

egansely1

எலிக்குட்டிகள்

எனது கணினி அறையில்

எலிகுட்டிகள் தென்படுகின்றன

துண்டிக்கப்பட்ட

என் சுண்டுவிரல் போல

எட்டிப்பார்த்துவிட்டு

மறைந்து விடுகின்றன

தொலைபேசி நரம்பின் வழி

வெளியே சென்று

சங்கடத்துடன் திரும்பி வருகின்றன

ஒரு நாள் எலிக்குட்டி ஒன்றை

என் நகல் எந்திரத்தின்

கண்ணாடிப் பரப்பிற்குள் கண்டேன்

அன்றிரவு கனவில்

எலிக்கூட்டமொன்று பெருகி ஓடியது

கடும் வேலையின்பொழுது

அதன் வேடிக்கை சற்று ஆறுதல்தான்

அருகே வந்து விளையாடுகிறது

என்னைப் பற்றிய அச்சமேயில்லை

யாராவது அவைகளிடம் சொல்லுங்கள்

கணிணியின் நரம்பொன்று துண்டிக்கப்படும் ஒரு நாளில்

சகல நியாயங்களுடன்

அந்த எலிக்கூட்டத்தை கொல்வேன் என்று.

தண்டனை

உன்னுடைய இருக்கையில் நீ இருப்பதே இல்லை

போவதென்னவோ வருவதென்னவோ செய்வதென்னவோ

எதையோ படிக்கிறாய் எதையோ எழுதுகிறாய்

உன் சினேகிதர்கள் வருகிறார்கள் போகிறார்கள்

வீடு முழுவதும் நிறைகிறது

புத்தகங்களும் பாட்டில்களும்

இதில் அந்த தேவிடியாக்களின் சிநேகிதம் வேறு

உன்னுடைய கடன்களைகூட நீ அடைப்பதில்லை

உன் பிள்ளைகளைப்பற்றிய அக்கறையும் இல்லை

உனக்காக இன்னமும் உழைக்கிறேன்

என்ன விதைக்கிறேன் என்ன விளைகிறது

என்னத் தெரியும் உனக்கு

நிலத்தில் தங்குகிறதா உன் கால்கள்

அம்மாவின் குற்றச்சாட்டுகள்

சற்றும் குறைந்திடாத குற்றச்சாட்டுகள்

என் மனையிடம் இருக்கிறது

என் பிள்ளைகளிடம் இருக்கிறது

என் பிரிய தேவதைகளிடம் இருக்கிறது

என்மேல் பகைமை பாராட்டுபவர்களிடம்

ஏன் என் நண்பர்களிடம்கூட இருக்கிறது

இவ்வளவு குற்றங்கள் நிறைந்தவனான என்னை

இன்னும் ஏன் தூக்கிலிடாமல் இருக்கிறாய்

குற்றங்களை உருவாக்கி

குற்றங்களை ஆளும்

என் குடிகாரக் கடவுளே?

இரண்டு நதிகள்

(ஒரு கணிதம்)

அன்பின் நதி பகைமையின் நதி

அறியேன் ஊற்றை

இரண்டும் சங்கமித்து பிரிகின்றன

அன்பின் நீர் வெள்ளை நிறம்

பகைமையின் நீர் சிவப்பு நிறம்

அரசர்கள் உண்டென்றால்

கடவுளும் சாத்தானும்

அன்பின் நதிக்கரையில்தான்

டால்ஸ்டாயின் பண்ணை

பஷீர் பாத்துமாவுடைய ஆடு

எழுதிக்கொண்டிருக்கிறார்

காந்தியும் காரல் மார்க்சும்

வாழ்வியலைக் கற்றுதரும்

ஆசிரியர்கள்

ஆத்மாநாம் தனது ரோஜா பதியன்களுக்கு

நீரூற்றிக்கொண்டிருக்கிறார்

வண்ணத்துப்பூச்சிகளைச் சூடி

குளிர்ந்த காற்று வருகிறது

பகைமையின் நதிக்கரையில்தான்

அரசனின் அரண்மனை

அதிகாரிகளும் அங்குதான்

காதலியின் காதலர்களும்

காரில் போகும் கனவான்களும்

கனவானின் நாய்களும்

நாய்களைத் திண்ணும் பூச்சிகளும்

இடம்பெயர்வதுமுண்டு

ஒரு நதியிலிருந்து இன்னொன்றுக்கு.

கருநாகமும் முட்டாள் கொக்குகளும்

கவிதையின் பொருள் அவன்தான்

நீ சொன்னதாக அவர்கள் சொன்னார்கள்

ரசிக்கும்படியில்லை உன் பொய்

என்றாலும்

உன் நந்தவனத்தில் உதிரும் சருகுகளைப் பெருக்கி

குப்பை மேடுகளை சேர்க்கும் பணிக்கு நடுவே

அவனுக்காக ஒரு கவிதை எழுதியிருக்கிறாய்

நல்லது

கோடை வெப்பம் தந்த அசதியில்

மரங்களுக்கு நடுவே உறங்கும் உன் கனவில் அவன் வந்திருக்கிறான்

மகிழ்ச்சி

காய்ந்து விறகாகும் மரங்கள் உன் கனவில்

பூத்து குலுங்குவதும்

ஒரு மீன் தொட்டியை கையிலேந்தி

நீ நிற்பதும்

தண்ணீரும் மீன்களுமற்ற தொட்டியில்

கருநாகம் போல அவன் தவழ்ந்து கொண்டிருப்பதும்

நல்ல படிமம்

காற்று வீசும்போதெல்லாம் மீன் தொட்டி

சருகுகளால் நிறைகிறது

அவன் அசதியில் நெளிகிறான்

நாட்கள் நகர்கின்றன

படிமங்களை சாகசங்களால் உருமாற்றுகிறாய்

கருநாகம் கழிவு நீர் கால்வாயாகவும்

உன் நந்தவனம் பெருநகரமுமாகிறது

நீயோ செல்போன் கோபுரமாகிறாய்

உன் கையில் பொய்கள் சுருட்டப்பட்ட சிகரெட் புகைந்துகொண்டிருக்கிறது

உன் பிரசங்கத்தை தொடங்குகிறாய்

ஆயிரம் செல்போன்கள் டாலியின் குரலில் வழிகின்றன

நகர் காட்சியில்

உதிரும் சிகரெட் சாம்பலை சுமந்து கடலுக்கு போகிறான்

அழுக்குக் குளியல்காரர்கள் சக பயணிகளாகின்றனர்

பாலிதீன் படகுகளில் கடல் நோக்கி விரைகின்றனர்

கருத்த அவன் உடல் கரைந்து நீல நிறமாகிறது

கடலோடு உன் மீன் தொட்டியிலிருந்து எப்போதோ பறந்து போய்விட்ட மீன்களை சந்திக்கிறான் அங்கே

உன் பிரசங்கத்தை கேலி செய்கின்றன அவை

மேய்ப்பன் அற்ற மீன்களே…என்று தொடங்கினாயாம்

அவமதித்த நண்பர்களையும்

மீனாக உருமாறி சக மீன்களை விழுங்கியதையும்

பட்டியலிட்டு கண்ணீர் சிந்தின

மீன் தொட்டியிலிருந்த பொழுதுகளில்

அவன் மேல் ஊர்ந்த சிலந்தி

உன் உடலிலிருந்து புறப்பட்ட நடுக்கம்தான் என்கிறான்

மீன் தொட்டி நொறுங்கி

உன்னை தீண்டி விடுவானா என்ன?

நீ பயந்திருக்கலாம்

பயத்தை மறைப்பதில்லை

உன் நடுக்கம் கவிதைகளாகின்றன

கால்வாயின் கறுத்த நீரில் நிழல் தேடி அலுத்த

முட்டாள் கொக்குகளுக்கு செல்போன் கோபுரம்தான் புகலிடம்

கழுகுகள் கால்வாயில் விழுந்து செத்து

ஆண்டுகள் பல கடந்துவிட்டன

வருத்தம் உனக்கில்லை

உன் அப்பழுக்கற்ற குறியை சுவைத்து மகிழ்விக்கிறது சுயபட்சாதாபத்தின் தேவதை

நீயோ இன்பத்தை வலியென்று சொல்லி அழுகிறாய்

பிரசங்கப் பொழுதில்

ரகசியமாக வெளியேறும் சீழ் கழிவு நீர் கால்வாயில்தான்

அதை வேறு எங்கு கரைப்பாய்?

கருநாகத்தின் உதடுகள் அல்லாது எது உனக்கான பரிசு?

வேர்கள்

வெளியே நின்று அழைக்கிறான்

கவுண்டரே!

எனது நிலத்தை

எனது மரங்களை

விலங்கினங்களை

பூச்சிகளை

கிணற்று நீரை

குளிர்ந்த காற்றை

வீட்டை

தெருவை

ஊரை

உறவினர்களை

நிரப்பிக்கொண்டு வந்திருக்கிறான்

ஒரு வார்த்தையில்

கண்ணாடிகளால் பாதுகாக்கப்பட்ட

எனது கணினி அறையில்

பத்திரமாக இறக்கி வைக்கிறான்.

நீதி வழங்குங்கள்!

மை லார்ட்!

எல்லோரும் நீதி வேண்டி காத்திருக்கிறார்கள்

கண்ணீருடனும் பணப்பெட்டிகளுடனும்

ஆவணங்களுடனும் பிச்சுவாகத்திகளுடனும்

அறிவாள்களுடனும் தடிகளுடனும்

துப்பாக்கிகளுடனும் எறிகுண்டுகளுடனும்

ஏவுகணைகளுடனும் அணுஆயுதங்களுடனும்

நீதி வழங்குமாறு மன்றாடுகிறார்கள்

அவரவர்களுக்கு வேண்டிய நீதிகள்

கோடிக்கணக்கான நீதிகள்

மை லார்ட்!

உங்கள் புராதன கட்டடத்தில் நீதி

குழம்பிய நீர் வடிவில்

தேங்கி வழிந்து கொண்டிருக்கிறது

எருமை மாட்டைப்போல

பிரகாசத்துடன் அதிலிருந்து

மேலெழுகிறீர்கள் நீங்கள்!

உங்களை ரணப்படுத்த வரும் காகங்களுக்கும்

திருட்டு சவாரிக்காக வரும் சிறுவர்களுக்கும்

மன்னிப்பு வழங்கி

பங்குத்தந்தை போல ஆசிர்வதிக்கிறீர்கள்

நைந்த கயிற்றுக்கு கட்டுப்பட்டு

சுற்றிசுற்றி வந்து புற்கள் தீர்ந்த பூமியை

பற்களால் சுரண்டுகிறீர்கள்

மை லார்ட்!

அழுகிக்கொண்டிருக்கும் உடலிலிருந்து

புழுவைப் போல வெளிப்படுகிறீர்கள்!

நித்தியமானவர் நீங்கள்.

மை லார்ட்!

உங்கள் அதிகாரத்தின் எல்லை கண்ணியமானது

ஒரு பூச்சிக்குக்கூட சிறை வழங்காத

இரக்கமுள்ளவர் நீங்கள்

உங்கள் கிரீடத்தின் மேல் எச்சமிட்ட

காகத்தைக்கூட விரட்டாமல்

நீதி வழங்க விரையும் அற்புதம் நீங்கள்

மை லார்ட்!

தீர்ப்பைத் தள்ளிப்போடுவதால் மனிதனாகவும்

அதை வழங்கிவிடுவதால்

கடவுளாகவும் காட்சி தருகிறீர்கள்

மை லார்ட்!

உங்கள் மன்றத்தில் நாங்கள் எல்லோரும்

அங்கத்தினர்களாக இருக்கிறோம்

அதன் வறையரைகளுக்கு

கட்டுப்பட்டவர்களாகவும்

அதை மீறும் சுதந்திரம் கொண்டவர்களாகவும்

எங்களின் பட்டியல் ஒன்று

உங்களிடம் இருக்கிறது

குற்றங்களின் வகைமை போலவே

முழுமையற்று நீள்கிறது பட்டியல்

இன்னும்கூட நம்பிக்கை வற்றவில்லை

மை லார்ட்!

என்றாவது நீங்கள் எல்லோருக்குமான

நீதியை வழங்கத்தான் போகிறீர்கள்

சாவற்ற உங்கள் வாழ்வு

அதை சாத்தியமாக்கத்தான் போகிறது

அப்போது மனிதர்கள் யாருமே இல்லையென்றாலும்

நடுங்கும் உங்கள் நாவினால்

அந்த நீதியை உச்சரிக்கத்தான் போகிறீர்கள்

அது அடிவானத்தை நோக்கி

மெல்ல நடக்கப்போகிறது

சாப்ளினைப்போல

தனிமையாகவும் துயரமாகவும்.

கேள்வி பதில்கள்

உங்கள் உருவகங்களால்

பாழ்பட்டுப்போன

ஜன்னல்களையும் கதவையும்

அறைந்து மூடுகிறேன்

மேஜைக்கு முன் அமர்ந்து

நானாகத் தேர்ந்தெடுத்த

மது புட்டியைத் திறக்கிறேன்

நன்றாக சமைக்கப்பட்ட

இளம்பெண்ணின் மாமிசம்

உணவு மேசையில் காத்திருக்கிறது

வெட்கமற்று கெஞ்சும்

செல்போனின் குரல்வளையை நெரித்துவிட்டு

வண்ணத்துப் பூச்சியின் சுவை கொண்ட

மதுவை அருந்துகிறேன்

புத்தகங்கள் கணக்கும் சவப்பெட்டி

என்னை வெறித்துப் பார்க்கிறது

அவைகளைப் புதைத்திருக்கக்கூடாது எரித்திருக்க வேண்டும்

வெளியே கேட்ட உங்களின் கூச்சல்

அடங்கி வருகிறது

விலகிச் செல்வது

நீங்களா?

நானா?

குமட்டித் துப்புகிறேன் கேள்வியை

கேள்விகளாலும் பதில்களாலுமான

திருட்டு உலகம்.

சந்திப்பு

நீங்கள் எனக்களித்த நாட்களைவிட

அதிகம் வாழ்ந்துவிட்டேன்

நீங்கள் அனுமதித்த மதுவைவிட

அதிகம் குடித்துவிட்டேன்

நீங்கள் வழங்கிய உயிர்களைவிட

அதிகம் கொன்றுவிட்டேன்

சவக்குழிகளைக் கடந்து

ஆலயத்திற்கு வந்தேன்

பிரார்த்தனை முடிந்துவிட்டிருந்தது

ஆலயத்திலிருந்து

வெளியேறிக்கொண்டிருப்பவர்களோடு

நீங்களும் நழுவிச் சென்றீர்கள்

இரவு உங்களைத் திரும்பவும்

மதுவிடுதியில் சந்தித்தேன்

ஏதாவது கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்

நீங்களோ போதையில் தனியாக

அழுது கொண்டிருந்தீர்கள்

கோப்பையைக் காலிசெய்துவிட்டு

அவசரமாகவே திரும்பி வந்தேன்

அப்போதும் நீங்கள்

குடித்துக்கொண்டிருந்தீர்கள்

உங்களிடம் வந்து நானே

பேசியிருக்கலாம்

வருத்தமாக இருக்கிறது.

தொலைவு

ஒரு மலை அருகே

ஒரு நதி அருகே

ஒரு மரத்தின் அருகே

எனது வீடு

அதனிடம் கேளுங்கள்

அது சொல்லும்

நான் தனியாக இருக்கிறேன்

புதர்களுக்குள் அமிழ்ந்துபோன

அதன் கண்கள்

இங்கும் அங்கும் துழாவும்

அதன் இருதயத்தில் கட்டி வைத்திருக்கும்

ஊஞ்சல் எனக்காக இசைக்கும்

கதகதப்பான அதன் மடி

வானத்தை வெறிக்கும்

அதன் விரல்களுக்கு எட்டாத ஒரு தொலைவில்

ஊஞ்சலின் இசை கேட்காத தொலைவில்

எனது வாகனம்

விரைந்துகொண்டிருக்கிறது.

ரகசியம்

உங்களில் ஒருவரை

எப்போதும்

தேடிக்கொண்டிருக்கிறேன்

குருட்டுக் கடவுள்

துணைக்காக

ஒருவனைத் தேடுவது

போன்றதல்ல இது

நீங்கள் காத்திருப்பதாக கருதும்

பிளாட்பாரத்திற்கு வந்து சேர்கிறேன்

கடைசியாக தயங்கித் தெரிந்த

ஒருவனும்

நிலையத்திலிருந்து

வெளியேறிப் போகிறான்

யாரையும் தேடாது

எந்தப் புகை வண்டிக்கும் காத்திராத சிலர்

உறங்க ஆயத்தமாகும் போது

கூட்ஸ் ஒன்று

ரகசியமாக நகரத் தொடங்குகிறது.

அழைப்பு

ஆமாம் இந்த அழைப்பு பற்றி

என் மனைவியிடம் சொல்லவில்லை

தனது மகிழ்ச்சியை அவள் எவ்வளவு

மறைக்க முயன்றாலும்

எனக்குத் தெரிந்துவிடுவதில்தான்

பயங்கரம் ஒளிந்திருக்கிறது

நான் இனிவரப்போவதில்லை என்பது

தெரிந்தால் என் பிள்ளைகள் வருத்தப்படுவார்கள்

அம்மா அழுவாள்

எதையும் சிதைக்காமல்

எதையும் அழிக்காமல்

யாரையும் புண்படுத்தாமல்

யாருக்கும் தெரியாமல்

சென்றுவிடத்தான் விரும்புகிறேன்

ஒரே ஒரு வருத்தம்

எல்லாவற்றையும் இப்படியே

விட்டுச் செல்வதில்தான்

நீங்கள் எனக்கு உதவ நினைத்தால்

அந்த வண்டியை ஞாபகம்படுத்தாமல் பேசுங்கள்

திரும்பிப் பார்க்காதீர்கள்

அது வேறொருவருக்கான வண்டி

எல்லா சப்தங்களும்

எனக்குத் துல்லியமாகக் கேட்கின்றன

அந்த அழைப்பு வந்த பிறகுதான் இதெல்லாம்

நான் எழுதப்போகும் ஒரு கதையைப்பற்றி

சொல்கிறேன் கேட்கிறீர்களா?

அந்த கதையில்

இறந்த மூன்றாம் நாள் ஒருவன்

விழித்தெழுந்துவிடுகிறான்.

மலையைப் போல

மலையை நம்பி ஆயிரம் உயிர்கள்

மலையில்

ஒளி – இருக்கிறது

இருள் – இருக்கிறது

காற்று – இருக்கிறது

மண் – இருக்கிறது

நீர் – இருக்கிறது

சப்தம் – இருக்கிறது

முள் இருக்கிறது – முள்களைப் போல துன்பம்

பழம் இருக்கிறது – பழங்களைப் போல இன்பம்

உறவினர்கள் போல

நண்பர்களைப் போல

பக்கத்து வீட்டானைப் போல

சக ஊழியரைப் போல

சக பயணியைப் போல

சக கைதியைப் போல

சக போராளியைப் போல உன் முன்

தூக்குக் கயிறு தொங்கிக்கொண்டிருக்கையில்

எதைப் போல இருக்க விரும்புகிறாய்

நண்பா துன்பா இன்பா?

ஆயிரம் மானுடரைக் கொன்ற தோட்டாக்களின்

தலைவன் நகர்ந்து வருகையில்

எங்கு சென்று ஒளிவது

நண்பா துன்பா இன்பா?

இறந்தவன்

மண்சரிவதுபோல சரிகின்றன பார்வைகள்

கறும்புழுதி எழுந்து ஆடைகளில் படிகிறது

பேசத்தொடங்கும் போது

வார்த்தைகள் உதிர்கின்றன

உயிரின் கணமில்லாமல்

பூமியின்மேல் மிதக்கிறது

உரையாடல்கள்

ஏதோ சொல்ல வந்து

சொல்லாமல் கடப்பவர்களின்

முகத்தில் படர்ந்திருக்கிறது

யாரோ முன்மொழிந்திருக்கவேண்டும்

எனது மரணத்தை

எதிரியாக இருக்க வேண்டுமென்பதில்லை

என்னை நேசித்த ஒருவளின்

கனவில் சம்பவித்து

அவள் தனது தோழியிடம் சொல்ல

சொல் திரிந்திருக்கலாம்

என்னை ஆழ்ந்து கவனித்த ஒருவனின்

ஆன்மீகக் கூற்றாகவும் இருக்கலாம்

கடவுளேகூட யாருடைய

சொல்லாகவோ சொல்லிச் சென்றிருக்கலாம்

இனி நிரூபணம் செய்வதற்கு எதுவுமில்லை

மேஜையின்மேல்

காலிகோப்பை ஒன்று

நிரம்பிய கோப்பை ஒன்று

மதுவை சேகரிக்க வேண்டுமா

தீர்க்கவேண்டுமா?

நடுநிசி வேளையில்

எழுதிப் பார்க்கிறேன்

முருகன் சாகவில்லை

முருகன் செத்துவிட்டான்.

நம் அரசன்

திருடனைப் போல இல்லை

முட்டாளும் இல்லை குடிகாரனும் இல்லை

புரட்சிக்காரனும் இல்லை புலவனும் இல்லை

குடிமகனின் சாயல் கொஞ்சமும் இல்லை

அவன் நல்லவனைப் போல இருக்கிறான்

மகிழ்ச்சியோடு இருக்கும்படி கேட்கிறான்

நாம் விரும்புவதும் அதைத்தானே

எப்படி என்றுதான் கேட்க விரும்புகிறோம்

தயக்கத்தை கண்டு கெஞ்சுகிறான்

அவன் கருணையை நம்ப தொடங்கும் போதே

ஆணை பிறப்பிக்கிறான் பின்பற்ற வேண்டுமென

முடியாத தருணங்களில்

சாட்டையை சுழற்றுகிறான்

ஏன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க மறுக்கிறீர்கள்?’

நம்மில் சிலர் துணிச்சலுடன் சொல்கிறோம்

உன்னால்தான்

அவனோ தனது வாளை உருவிக்கொண்டுவிடுகிறான்

திரும்பவும் சொல்கிறோம்

உன்னால்தான்

அரசனின் வாள் எல்லா நேரங்களிலும்

சும்மா இருப்பதில்லை.

மேன்மைமிகு அதிகாரிகளே!

(ஒரு குடியானவனின் கவிதை)

செடிகொடிகளை வெட்டி

பாறைகளை அகற்றி

நான் செப்பனிட்ட நிலமிது

மரங்களை செதுக்கி

புற்களை அறுத்து வந்து

நான் வெய்த வீடிது

நீங்களோ உரிமை வழங்குகிறீர்கள்

இலவசமாக அரிசி தருகிறானா

உங்கள் அரசன்?

அவனல்லவா பிச்சைக்காரன்

நானல்லவா சோறிடவேண்டும்

என் நிலத்தை உழுகிறேன்

என்னுடைய மரத்திலிருந்து

காய்களைப் பறிக்கிறேன்

என் மனைவியைப் புணர்கிறேன்

அவனுடைய நீதி எனக்கெதற்கு?

வளமான காடு இருக்கிறது என்னிடம்

அவனிடம் என்ன இருக்கிறது

கொள்ளையடிக்கும் தந்திரங்கள் தவிர?

உங்கள் அரசனிடத்தில் சொல்லுங்கள்

நான் வருவேன் என்று

அவன் சிம்மாசனத்தின் மேல்

மூத்திரம் பெய்வேன் என்று.

பவர் மேஜிக்

அப்போது நானொரு அரசன்

தனக்கு நீதி வழங்குமாறு

ஒரு ஆண்டி என்னைத் தேடிவந்தான்

நீதி வழங்கினேன்

(அது என் கடமை)

அவன் அரசனானான்

நான் ஆண்டியானேன்.

நடன விருந்து

தீய கனவுகளால் அலைக்கழிக்கப்பட்ட

குடியானவன் ஒருவன் இருந்தான்

முட்டாள்தனங்கள் நிறைந்த

பாடல்களைப் புனைபவன் என்பதால்

பலராலும் அறியப்பட்டிருந்தான்

அவன் ஒரு கனவு காண்கிறான்

அரசன் விருந்துக்கு அழைத்திருப்பதாக

நூறு குதிரைகள் பூட்டிய

சாரட் வண்டியில் பயணம்

நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட

நூறாவது மாடியில் விருந்து

கடலின் மேல்பரப்பில்

மான் கறியும் மதுவும் பரிமாறப்படுகின்றன

மதுவின் ஒளியில் மண்டபம் அலைகிறது

அரசன் அறிவிக்கிறான்

இன்று நம் விருந்தினன்

நடனமாடப்போகிறான்

அவனுக்குப் பாட மட்டுந்தானே தெரியும்?

வந்திருக்கும் அரசர்களின் விருப்பமது

தடுமாறிய கால்களைக் கூட்டிக்கொண்டு

நடனமண்டபத்திற்குப் போகிறான்

குழுவின் இசைக்கு

ஆடத் தொடங்குகிறான்

தரை நோக்கிச் சரியும் உடலின் கணத்தில்

கால்கள் தள்ளாடி நகர

துழாவுகின்றன கைகள்

மேகத்தைப் பற்றிக்கொள்ள

அரங்கேறுகிறது ஒரு விகார நடனம்

ஈசன் வெட்கித் திரும்ப

அரசர்கள் கைதட்டி மகிழ.

சிம்மாசனம்

எனது பணிதல்களும் மன்றாடுதல்களும் கண்ணீரும்

தற்காலிகமானவைதான்

எளியவனான எனக்காக

தொலைவில் உள்ள ஒரு நகரத்தில்

ஓராயிரம் பணியாள்களைக்கொண்ட

ஒரு அரண்மனையும்

காவலாளிகளால் பாதுகாக்கப்பட்ட

சிம்மாசனமும் செங்கோலும்

காத்திருக்கின்றன

சொன்னார்கள் அவர்கள்

அவர்கள் சொல் கேட்டு

இந்நகர் வந்து சேர்ந்தேன்

ஈட்டி பிடித்த இரு காவலர்கள் என்னை

அரண்மனைக்குள் அழைத்து வந்தனர்

சிம்மாசனத்திலிருந்தவன் அழுதான்

ஆரத்தழுவி சொன்னான்:

தாமதமாகிவிட்டதே நண்பா

பரிசாக கொலைவாள்தான் மிச்சமிருக்கிறது

கொடிய நஞ்சை மட்டுமே உணவாகத் தரமுடியும்

தங்கிக்கொள்ள சிறைச்சாலைதான்.

துயரங்களின் பாடல்

காற்று அதைக் கொண்டு வருகிறது

வெறிச்சிட்ட வானத்தில் மிதக்கிறது

வறண்ட நதிகளில் பாய்கிறது

மிருகங்களின் கண்களில்

பறவைகளின் குரல்களில்

மது விடுதிகளில்

அன்னதான வரிசையில்

விமானங்களின் கூச்சல்களில்

கடலின் தத்தலிப்பில்

நடு நிசியில் கரை சேரும் படகில்

விடியலில் அமர்ந்திருக்கும் மௌனங்களில்

வண்ணங்களற்ற அப்பாடலில்

நாம் வண்ணங்களை நிரப்ப வேண்டும்

சிவப்பு நிறத்தை

கறுப்பு நிறத்தை

தீயின் நிறத்தை

சாம்பல் நிறத்தை

ஒலிகளற்ற அப்பாடலை

நாம் ஒலிகளால் நிரப்ப வேண்டும்

அனாதைகளாக்கப்பட்ட

குழந்தைகளின் குரல்களை

கேமராவுக்கு முன்

தலையை சீவியெறியும் சப்தத்தை

டாங்கிகளின் சப்தத்தை

உடல்கள் சிதறும் ஒலியை

விஞ்ஞானிகளின் கவிதையை

அரசனின் சிரிப்பை

மந்திர உச்சாடனங்களை

துயரங்களின் பாடல்

வெறும் வார்த்தைகளால் ஆனதில்லை.

குற்றமும் தண்டனையும்

குடிமக்களாகிய நமக்குமுன்

அரசன் குற்றவாளியாக நிற்கிறான்

இதெல்லாம் எப்படி நடைபெற்றனவென்பது

எல்லோருக்கும் தெரியும்

இப்போதும் அவனொரு அரசனே

சோதனையைத் தொடரவேண்டிய

பொறுப்பாளியும் அவனே

சமநிலை குலைந்த நீதியை முன்வைத்து

மந்திரி ஒருவனை சிறையிலடைக்கிறான்

நம்பிக்கையூட்டாத இந்த நகர்வை

புறக்கணித்துவிடுகிறோம்

ராஜகுருவை சிறையிலடைத்த போதும்

நிகழ்வு சலிப்படையவேச் செய்கிறது

நாம் எதிர்பார்ப்பதில்லை

மகனையே சிறையிலடைப்பானென்று

குற்றங்களுக்கான ஆதாரங்கள்

முன்வைக்கப்படுகின்றன

இதுநாள்வரை இல்லாமல்

இப்போதும் மட்டும் ஏன் என்ற

சந்தேகத்தால் விழிப்புறுகிறது நம் மனம்

புன்னகைக்கிறோம்

பீதியுற்ற அரசன்

தன்னையே சிறையிலடைத்துக்கொள்கிறான்

இதுதான் கடவுளின் தீர்ப்பு என்பது

உண்மையின் வெற்றி என்பது

இப்போது சொல்லுங்கள்

உங்கள் ஆதரவு யாருக்கு?

வாள்களின் பாடல்

தலும்பும் தசைக்கடல் தகிக்கும்

சூரியன் திசைத்திணறிச் சாகும்

பறவைகள் எலும்புகள்

தோரணங்கள் அரண்மனையெங்கும் கொப்பளிக்கும்

குருதி அகழிகள் துர்க்கமழும்

முதலைகள் முலைகள்

வாய்ப்பிளந்து நாக்கு விழுங்கும்

காற்றில் கால் அலைந்து

அழகு காட்டுகிறாள்

கோரச்சிரிப்பு கோனிக் குழைகிறது

சாமரங்களின் காற்றுக்கு ஏங்கி

நமைக்கும் புண்

ஆயத்தப் படைகள்

போர் அறிவிப்பும் புகைச்சலும் களேபரக் கூச்சலும்

எந்திர கதியில் அசைகின்றன தொடை நடுவே வாட்கள்

தெறித்த மாமிசத்துண்டுகள்

பின்வரும் காலத்தின் மயான வெளிகளில்

விழுந்து அழுகின்றன.

மேஜை

ஆயிரமாயிரம் புத்தகங்களை

அடுக்கிவைக்கலாம்

பத்துக்கும் அதிகமான நண்பர்கள் அமர்ந்து

விஸ்கி பருகலாம்

எண்ணற்ற கணினிகளை இணைக்கலாம்

எனது மகன்

தனது வகைவகையானத் துப்பாக்கிளையும்

பீரங்கி முதலானப் போர் தளவாடங்களையும்

அதற்குள்தான் மறைத்து வைத்திருக்கிறான்

ரரஊ வீரர்களின் வண்ண அட்டைகளை

பரப்பிவைத்து விளையாடுகிறான்

உலகப்புகழ்பெற்ற எனது கட்டுக்கதைகளை

அதன்மேல்தான் புனைகிறேன்

ஏவுகணைகளைகூட நிறுத்தலாம்

ஏன் நீங்கள் கொன்றுகுவிக்கும்

பிணங்களையும் பார்வைக்கு வைக்கலாம்

உங்கள் பெண் செயலர்களை கிடத்திப் புணரலாம்

இந்தத் தெருவில்

இந்த நகரத்தில்

யாரிடமிருக்கிறது இப்படி ஒரு மேஜை

இவ்வளவு கம்பீரத்துடன்

இவ்வளவு பகட்டுடன்

இவ்வளவு கர்வத்துடன்?

அதன் மேல் ஊறும் சிற்றெரும்புகள்தான்

ஒரே அச்சுறுத்தல்

எங்கிருந்து எதற்காக எதுவுமே

விளங்குவதில்லை

நான் அமைத்திருக்கும் ஆய்வுக்கூடத்தில்

இதற்கான பதில்கள் தயாராகி வருகின்றன.

சமதர்மம்

கைகளை அருகே வைத்து சோதிக்கிறேன்

இவற்றின் எஜமானன் நான்தான் என்றாலும்

இன்னும் ஒரு மனிதனின் தலையையும்

இவை உடைக்கவில்லை

ஒரு மனிதனின் கழுத்தையும் அறுக்கவில்லை

எனது எதிரிகளின் எண்ணிக்கை

பெருகிக்கொண்டே போகின்றன

நீங்களும் அவர்கள் கட்சித்தானா?

என் கவிதையை ஆபாசமென்பதும்

என் நடனத்தை கேலிசெய்வதும்

வாருங்கள்

எதிரே வந்து வாயைக் கோணி

கண்களை சிமிட்டி குழந்தையைப்போல

அழகு காட்டுங்கள்

ஆடைகளை விலக்கி குறியை எடுத்து

உள்ளுக்குள் தேங்கிக்கிடப்பவற்றை

வெளியேற்றுங்கள்

மூத்திரம் விந்து தீர்த்தம் ரத்தம்

உங்களுடன் கொணர்ந்த கத்தியை

இந்த பீடத்தின்மேல் பொதுவில் வையுங்கள்

இதுதான் சமதர்மம்

இதுதான் பொது நீதி.

ஒரு ஆண்மகன் தனக்குள்

கடவுளாகி

பாவங்களை மன்னிக்கிறான்

கடவுளாக வேண்டுமானால் குடிக்கவேண்டும்

சர்வாதிகாரியைப்போல

சித்ரவதை முகாம்களை அமைக்கிறான்

தனக்காகவும்

அரசனைப்போல நீதி வழுவாது

நீண்ட வாளால் குடிமக்களின் தலைகளை வெட்டுகிறான்

வாள்களை பரிமரிப்பதில் உள்ள சிரமம் அரசர்களுக்குத்தான் தெரியும்

புரட்சிக்காரனாகி

அரசர்களை வீழ்த்துகிறான்

உடல்கள் சிதறும் மொழி சிக்கலானது

போஸ்த்நிஷெவின் பாத்திரமேற்று

மனைவியைக் கொல்கிறான்.

டால்ஸ்டாயின் கிரேய்ஸர் சோனாட்டா

ராஜ்யம்

நம் வீட்டைப் பற்றி பேசாதே

இந்தக் கதவுக்கு வெளியே

பெரிய ராஜ்யம் இருக்கிறது

வெளியே நிற்கும் குதிரையில் ஏறி

சடுதியில் நான் போகவேண்டும்

என் அதிகாரத்தைப் பற்றி பேசாதே அது

ஒரு அணுகுண்டை இயக்க வல்லது

என் அறிவைப் பற்றி பேசாதே

பிரபஞ்சத்தின் கருவை

சிதைக்க வல்லது

கருணையைப் பற்றி பேசாதே அது

என் சாட்டையின் நுனியிலும்

என் வாளின் கூர்மையிலும் இருக்கிறது

நம் மகன்களைப் பற்றி பேசாதே

என் ராஜ்யத்தை அவர்களுக்குப் பகிர்ந்தளிப்பேன்

எனதே போன்ற இரண்டு குதிரைகளையும்

காதலைப் பற்றி பேசாதே

ஆயிரம் பெண்களுக்கு பகிர்ந்தளிக்க

காதல் கொட்டிக்கிடக்கிறது

என் ஒழுக்கத்தைப் பற்றி பேசாதே

சகோதரனைப் புணரும் பெண்ணை

மகனைப் புணரும் பெண்ணை

என்னை அவனை அவர்களைப் புணரும்

பெண்ணைப் பற்றிச் சொல்வேன் நான்

சுதந்திரத்தைப் பற்றி பேசாதே

உன் வாயையும் மூடுவதில் இருக்கிறது அது.

மிருகங்கள்

தொலைவில் எங்கோ

தொடங்கியிருக்கவேண்டும் சண்டை

நெருங்கி வந்து

பல்கிப் பெருகிச்

சாலைக்கு வருகிறது

நாய்க்கூட்டமொன்று

சிதறிக் கூச்சலிட்டு குறைத்து நிற்கிறது

அருகிலும் தொலைவிலும்

பீதியூட்டும்படி நள்ளிரவு நேரத்தில்

என்ன மிருகங்கள் இவை?

வெளிச்சம் பரவுகிறது

ஆண்களும் பெண்களும் அலுவலகம்

புறப்படுகிறார்கள்

குழந்தைகள் பள்ளிக்கு விரைகிறார்கள்

வாகனங்களை வழிமறித்து

சாலையில் நின்று ஒரு கழுதை

இன்னொரு கழுதையை

புணர்ந்து கொண்டிருக்கிறது

சூலத்தைப்போல முழம்நீள குறியதற்கு

எச்சரிக்கை வேண்டும்

காட்டை வயல்வெளியை

தெருவை பேருந்து நிலையத்தை

ஆக்கிரமித்த இவைகள்

நம் மதுவை

நம் படுக்கையை

நம் இணையை

பரித்தெடுக்கும் முன்

ஆயுதங்களை தயார்படுத்தவேண்டும்.

காட்டோவியம்

வண்ணத்துப்பூச்சிகள் துயில் கலைகின்றன

சுனை நீரில் முகம் பார்த்துத் திரும்புகின்றன

அன்றைக்கான வேலை இருக்கிறது அவைகளுக்கு

நாற்றங்காலிலிருந்து பிடுங்கி

காற்றில் நடவேண்டும் வண்ணங்களை

வனமெங்கும் பறக்கின்றன ஈரிலை வண்ணத்துப்பூச்சிகள்

ஓய்வெடுக்கின்றன இலைகள்

மரங்களில் செடிகளில் கொடிகளில்

புதர்களுக்குள் பதுங்கிவந்த நீர் – பாம்பு

பாறைகளில் சரிந்து நழுவித் தேங்கி

சமவெளிகளில் பறக்கிறது

வண்ணத்துப்பூச்சிகளைக் குறுக்கிட்டபடி

வண்ணத்துப்பூச்சிகளின் காட்டுக்குக்

காகங்கள் வருவதில்லை

யுகங்களாகக் கவளச்சோற்றுடன் காத்திருந்த

பாஞ்சாலிப்பாறையின் கூந்தல் படிகத்தின்மேல்

மலர்களைச் சூட்டுகின்றன வண்ணத்துப்பூச்சிகள்

கறும்பாறைகளின் கனவுகளில் தொலைந்து

நிலத்தில் விழித்தவளான ரூசோவின் மங்கை குழல் ஊதுகிறாள்

எட்டிப் பார்க்கின்றன மந்திகள்

மேயச் சென்ற கருநாகங்கள்

திரும்பிவந்து அடைகின்றன அவளின் புற்றில்

வண்ணத்துப்பூச்சிகள் உறங்கச் செல்கின்றன

தசம ஆண்டுகளுக்கு முன்

வேட்டைக்குச் சென்ற

புலிகளின் ஞாபகங்களுடன்

தனது நீண்ட கூந்தலில் சிக்கிய நிலவின் ஒளிக்கசிவில் நின்று

ரூசோவின் மங்கை குழல் ஊதுகிறாள்

வானத்தின் பச்சைநிறத்தில் வந்து தவழ்கின்றன

கருநாகங்கள்.

ஒரு தேவதையின் கதை

தன் ரகசியக் காதலர்கள்

வந்து போன தடயங்களை

அழித்து மாளவில்லை அவளுக்கு

அவர்களின் தேகத்தைச்

சுவைத்த வாயைக்

கொப்பளித்த நீர்

குளமாகத் தேங்கி நின்றது

கொல்லையில்

விந்து வடியும் யோனியையோ

கழுவித் தீரவில்லை

ஒரு நாள்

தனது வீட்டையே

நீரால் நிரப்பி

அதில் நீந்தும் மீனாகிப் போனாள்.

குற்றச்சாட்டு

வேட்கை கொண்ட

உன் சரீரத்தின் நிழலில்

நீ அமர்ந்திருக்கிறாய்

நானோ காற்றாக உன்னை

சுற்றிலும் சூழ்ந்து

அலைக்கழிகிறேன்

உன் திட்டங்களால் சிதைந்தபடி

உன் பொய்களால் சினந்தபடி

உன் நினைவின் புகை

என்னுள் கலந்து பரவும் திசைகளெங்கும்

சந்தேகத்தின் பசிகொண்ட மிருகமொன்று

எதிர்பட்டுக்கொண்டே இருக்கிறது

உன்னிடம் பெறப்பட்ட முத்தங்களை

அதற்குத் தீனியிடுகிறேன்

நஞ்சு கலந்த உன் எச்சிலை

மதுவென ஊட்டுகிறேன்

இருந்தும் என் எதிரே வந்து

கெஞ்சுகிறது

விசுவாசத்தின் உமிழ்நீரை

வழியவிடுகிறது

சாத்தானோ எச்சரிக்கிறான்

எனது வாசலில்

பிடுங்கி நடப்பட்ட விஷப்பல்

ஒன்று இருப்பதாக.

கடவுளிடம் முறையிடல்

என் வாழ்வை ஒரு பைத்தியக்காரனிடம்

கொடுத்தனுப்பினீர்கள்

கடைவீதிகளில் பாலிதீன் பைகளை

சேகரித்துக் கொண்டு வீடு திரும்புகிறேன்

காகிதங்களைப் பொறுக்கி வந்து

அலமாரிகளை நிறைக்கிறேன்

நாடாக்களிலிருந்து சப்தங்களை எழுப்புகிறேன்

கழிப்பறையில் அழுகிறேன்

தேவதைகளைத் தேவடியா என்று திட்டுகிறேன்

பாறைகளை உடைத்து

கல்லறைகளை அமைக்கிறேன்

சூரியன் சேற்றுக்குள் நழுவுகிறது

பைத்தியக்காரனின் நிழல் எனது

படுக்கையில் துயில்கிறது.

நம் பாவங்கள்

பரிதாபமாக நடந்து போகிறது

ஒரு கழுதை

ரத்தமும் சீழும் வடிகிற கால்களை ஊன்றி

நம் பாவங்களையும் சுமந்தபடி

நான் என் மனைவிக்கும்

நீ உன் கணவனுக்கும்

நான் உனக்கும்

நீ எனக்கும் இழைக்கும்

துரோகங்கள் அதன் முதுகில்

மூட்டையாகக் கனத்துச் செல்கின்றன

ரட்சிப்பற்ற காலவெளியில் கழுதை நடக்கிறது

நொண்டிக் கடவுள்

அதை விரட்டி நடக்கிறான்.

நம் பொய்கள்

பனிப் பொழிவைப்போல

நம் வாழ்க்கையின்மேல்

உதிர்ந்து கொண்டிருக்கின்றன பொய்கள்

சில பொழுது மேகங்களைப் போல

காதலின் வசீகரமாகி

முத்தத்தில்

எச்சிலைப்போல கலக்கின்றன

ஆடை கலைப்பில்

கூடி முயங்கி

முனகலிட்டு

தாபத்தில் கலக்கும்

பொய்யும் பொய்யும்

விடுபட்டு

சரிந்து

களைப்புறுகின்றன

ஒவ்வொரு முறையும் நாம்

பொய்யின் பரிசுகளையே பரிமாறிக்கொண்டு

விடைபெறுகிறோம்

பொய்கள் விடைபெறுவதில்லை

அவை வாழ்க்கையின்

கண்ணாடி குடுவையை

நிரப்பிக் கொண்டிருக்கின்றன.

பரிசு

எனக்குத் தருவதற்காக

பரிசொன்றை வைத்திருக்கிறாய்

தருணத்திற்காகக் காத்திருக்கிறாய்

இந்தத் தாமதப் பொழுதில்தான்

நாம் சந்தித்துக்கொள்வதும்

முத்தங்களைப் பரிமாறிக்கொள்வதும்

பரிசு விரித்திருக்கும்

கால வலையில்

நிச்சயமின்மையும்

சந்தேகங்களும்

பயங்கரங்களும்

சேகரமாகிக்கொண்டிருக்கின்றன

ஒருநாள் எனக்குத் தரப்போகும்

ரகசியமான அதை

எல்லோரும் பகிரங்கமாகத்

பகிர்ந்து செல்லப்போகிறார்கள்.

வாளுக்கு இறையான தேவதை

உறங்குவது போல

அவள் உறங்கிக்கொண்டிருக்கிறாள்

என்னை பார்க்கும் நோக்கமற்று

மூடிய இமைகளுக்குள்ளே

ரகசியமாக

வெளியே தாழிடப்பட்டிருக்கிறது

கதவு

கிரீடத்துடனும்

புஜக்கட்டுகளுடன்

வெளிச் செல்ல

அனுமதி மறுக்கிறது

ஜன்னல்

உரையிலிருந்து வாளை உருவி

மேலிருந்து கீழாக அவளை

நேர்க்கோட்டில் பகுத்து

இரு துண்டுகளாக்கி

நடுவில் படுத்து

உறங்கத் தொடங்குகிறேன்.

ஏமாற்றம்

நேற்றிரவு என்னுடன்

ஒரு பாம்பு படுத்துறங்கியது

ஜன்னலின் வழி காற்றேறி வந்த பூனை

உன் உதடுகளால் முத்தமிட்டது

உன் இமைகளின் இழைகளால்

வலை பின்னியது ஒரு சிலந்தி

மழை எறும்புகள் உன் ஓவியத்தை

சுவரில் வரைந்து சென்றன

உன் பெயரை இரைச்சலிட்டன தவளைகள்

ஜன்னலை அசைக்கும் காற்றோசை

என் செவி அருகில் மிதக்க

பூமியை உலுக்கும் ஒரு கனத்த ரயில்போல

ஒரு இரவு என்னைக் கடந்து போனது.

பாவம் அம்மன்கள்

சில நேரங்களில் தோன்றுவதுண்டு

இந்த அம்மன்களைப் பொறுத்தவரை

என்னிடம் எந்த நியாயமும் இல்லையென்று

வெட்கப்படும்படிகூட இருக்கிறது

கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டால்

எளிதாக வென்றுவிடுகிறேன்

அவ்வளவு நியாயங்கள் இருக்கின்றன

என் கேள்விகளில்

தர்க்க முறைப்படி

பொறுப்புணர்வுடன்

நீதி தவறாது

ஒழுக்கத்துடன்

பிறகு அவர்கள் பணிந்து போகிறார்கள்

அழுகிறார்கள்

தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சுகிறார்கள்

முகத்தை அருகே கொண்டுவரச் செய்து

முத்தமிடுகிறேன்

அம்மன்களை முத்தமிடுவது

உடலுக்கு நல்லது.

தற்கொலை

கறுத்த பாறைகளின் மேல்

வண்ணத்துப்பூச்சிகள் பறக்கின்றன

நம் கண்களுக்கு வெளியேதான்

சற்றே தொலைவேதான்

பறந்தேகும் வண்ணத்துப்பூச்சிகளுடனும்

நீராடும் பாறைகளுடனும்

அமர்ந்திருக்கிறாள் ஒரு அம்மன்

ஒட்டன்தழைகளைக் கொண்டுவந்து

உணவு சமைத்திருக்கிறாள்

பாறைகளுக்கு மேலேயும்

வண்ணத்துப்பூச்சிகளுக்கு கீழேயும்

நழுவிச்செல்லும் நீரில்

மிதந்து செல்வது எது

அவளுடைய நிழலா உடலா?

பறக்கின்றன வண்ணத்துப்பூச்சிகள்

நீரில் பாறைகளை எறிந்தபடி.

அனுமதி

தேவதைகள் விண்ணப்பிக்க வேண்டியதில்லை

உங்கள் தேனூறும் உதடுகளுடன் வந்து

என் அனுமதியின்றியே

முத்தமிடலாம்

நான் சற்று விசித்திரமானவன்

நீங்கள் அணுகும் சந்தர்ப்பங்களில்

ஒரு பாலத்தின் கீழ்

தலைகீழாக நடந்து கொண்டிருப்பேன்

நீருக்கடியில் ஒரு மீனுடன்

கலவியில் இருப்பேன்

ஓடும் ரயிலின் மேல்தளத்தில் படுத்து

வானத்தில் சிதறும் விதமாக

சிறுநீர் கழித்துக்கொண்டிருப்பேன்

இங்கே பயப்படும்படி

எதுவுமில்லை.

காத்திருக்கும் மரணம்

காலை பொழுதொன்று வந்து

ஜன்னலைத் தட்டிக்கொண்டிருக்கிறது

கதவைத் திறந்து

வரவேற்கப் போவதில்லை

நேற்று காட்டிலிருந்து துரத்திவந்த

வண்ணத்துப்பூச்சி

என் மேஜையின் மேல்

இறந்து கிடக்கிறது

அதன் மரணத்தைப் பற்றிய

முதல் வரியை எழுதவேண்டும்

கட்டிலின்மேல் என் இளையமகன்

உறங்கிக் கொண்டிருக்கிறான்

அவன் இமைகள் மெல்ல அசைகின்றன

அவன் உதடுகள் ஒதுங்கிச் சிரிக்கின்றன

தன் சிறு விரல்களால்

தன் சிறு குறியோடு

விளையாடிக்கொண்டிருக்கிறான்

வண்ணத்துப்பூச்சியின் ஆவி

அறை முழுவதும் அலைகிறது

தாழிடாமல் விட்டிருந்த

கதவைத்திறந்துகொண்டு

அம்மா உள்ளே வருகிறாள்

நான் திடுக்கிட்டு சரிகிறேன்.

விதையின் கதை

ஒருவன் விதை ஒன்றை கொண்டுவந்து

சிறுவனிடம் கொடுத்தான்

சிறுவனோ அதை

தன் தாயிடம் கொடுத்தான்

அவளோ அவன் வரும் பாதையில்

நட்டுவைத்துக் காத்திருந்தாள்

உஷ்ணமான ஒரு இராப்பொழுதில்

அவன் வந்தான்

விதையைக் கடந்து

அவளிடம் போனான்

பாதை முளைத்து

கிளைப்பரப்பி

சென்று சேர்ந்தன

கடலிலும் கானகத்திலும்

பிறகொருநாள்

பிணமாக அவள் கடலில் மிதந்தாள்

அவன் கானகத்தில் திரிந்தான்.

பெயரிடுதல்

ஒவ்வொரு கலவிக்கும் பெயரிடலாம்

சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்து

இடமும் வாய்க்கப்பெற்றப் பின்

இரண்டு கிரகங்கள் கலப்பதுபோல

நடந்தேறும் ஒரு எழுச்சிமிகு கலவிக்கு

நாம் ஏன் பெயரிடக்கூடாது?

உடல்களைச் சுத்தம் செய்தபின்

உறங்குவதற்கு முன்பாக

இன்னொரு கலவிக்கு முன்பாக

அழுவதற்கு முன்பாக

தாக்குதலுக்கு முன்பாக

விஷமருந்துவதற்கு முன்பாக

இதைச் செய்யலாம்

இருவருமே ஆலோசித்துச் செய்யுங்கள்

சச்சரவுகளுக்கு இடம் வேண்டாம்

அது உங்களுடைய குழந்தை

ஓர் ஆணின் பெயரோ

ஒரு பெண்ணின் பெயரோ

ஒரு மலரின் பெயரோ

ஒரு நதியின் பெயரோ

எதுவோ

நினைவு கூறவும் மகிழவும்

துக்கப்படவும்

விவாதங்களுக்கு உட்படுத்தவும்

என்று பெயரிட்ட ஒரு கலவியில்

ஒரு இனிய பயணத்திற்குப்பின்

கரை ஒதுங்கியதை ஞாபகம் கொள்வீர்கள்

பதற்றமான ஒரு பகல்பொழுதையும்கூட

சில பெயர்கள் கண்ணீரை வரவழைக்கும்

என்று பெயரிட்ட ஒரு கலவியை

உங்கள் வேறொரு இணையிடம் சொல்லி

பொறாமை கொள்ளச் செய்யலாம்

கர்வப்படலாம் சாகசமாக்கலாம்

ஒருவரையொருவர் நம்புவதில்

தயக்கம் உண்டென்றால் பெயரை

அரசாங்கத்தில் பதியலாம்

இனிய இந்த யோசனைக்கு

நன்றி சொல்ல விரும்புவீர்கள் என்றால்

சஞ்சலங்கள் நிறைந்த ஒரு கலவிக்கு

என் பெயரைச் சூட்டுங்கள்.

கலவி பற்றிய குறிப்புகள்

1

கலவிக்கு

காதல் அவசியமில்லை

கையில் கத்தியுடன்கூட

கலவி செய்யலாம்.

2

கலவியின் கணம்

கடலாகித் ததும்புகிறாள்

மீனாகி நழுவுகிறாள்

உதடுகளில் உப்பின் சுவை

உடலெங்கும் முள்புதைந்த

காடு.

3

கூந்தலை எப்படி முடிவது

எப்படி ருசியாக சமைப்பது

துணிகளை எப்படித் துவைப்பது

கடவுளுக்கு எப்படிப் படைப்பது

எப்படி குழந்தைகளைக் குளிப்பாட்டுவது

எல்லாம் தெரிகிறது

ஒரு ஆண்குறியை எப்படி

பக்குவமாக பற்றிக்கொள்வது என்று

தெரியவில்லை அம்மன்களுக்கு.

4

கடலுக்குள் மூழ்கிப்போன

நட்சத்திரப் பரப்பின்மேல்

மீன் ஒன்று அழைக்கிறது

வனத்திற்குள் பறந்து போய்விட்ட பறவையின்

பின்தங்கிய நிழல் ஒன்று அழைக்கிறது

என் உடலை ஒட்டி வளரும்

பெருமரத்தின் வேர் ஒன்று அழைக்கிறது

நானோ புதைந்து கொண்டிருக்கிறேன்

வளராத வேர் ஒன்றை ஊனி

ஒரு அம்மனின் கால்களுக்கிடையில்.

5

தேவதைகளின் குளத்தை

நிரப்பாதவன்

மதுக் கோப்பைகளையும்

மரணக் கடலையும்

நிரப்புவானாக.

பித்தம்

சுழலும்

நாற்காலியில்

உட்கார்ந்து

சுழன்று

கொண்டேயிருக்கிறேன்

சுழலும்

நாற்காலி

சுழலத்தானே?

சுழலும்

நாற்காலியில்

உட்கார்ந்து

சுழலாமல்

இருப்பதெப்படி?

ஓசை

பெருநகருக்கு

சென்று வந்திருக்கும் நான்

ஒரு பெருங்கடலால்

நிரம்பி வந்துள்ளேன்

உற்றுக் கேளுங்கள்

அதன் சலசலப்பு உங்களுக்குக்

கேட்கவில்லையா?

இன்னும் கவனம் வேண்டும்

நகரத்தின் பேரிரைச்சலை வடிகட்டி

கடலை நிரப்புவது

எவ்வளவு சிரமம் தெரியுமா?

என் செல்லமே!

நம்முடன் இன்னும்

பறவைகள் வாழ்கின்றன

செடிகொடிகள் வளர்ந்து

பூக்களையும் கனிகளையும் தருகின்றன

அந்திப்பொழுது வருகிறது

வானத்து நட்சத்திரங்கள்

காணக் கிடைக்கின்றன

மழை பெய்து ஏரி குளங்கள் நிறைகின்றன

குடியானவர்கள் இன்னும் நிலங்களை

உழுதுகொண்டிருக்கிறார்கள்

ஓவியர்கள் ஓவியங்களை வரைகிறார்கள்

இசைக்கலைஞர்கள் இசையை

உருவாக்கியபடி உள்ளனர்

பாடகர்கள் இருக்கிறார்கள்

கவிஞர்கள் மற்றும்

கதைச்சொல்லிகள் இருக்கிறார்கள்

பல வகையான மதுப்பானங்கள்

அருந்தக் கிடைக்கின்றன

சிரிப்பு இன்னும் மறைந்து போகவில்லை

தம்மை தாரளமாகக் காதலிக்கத்

தருகிறார்கள் பெண்கள்

வேறொரு உலகத்தின்

செய்தியைச் சொல்லியபடி

குழந்தைகள் வருகிறார்கள்

இத்தனை அற்புதங்கள் இருக்கும்போது

வேறு சிலரும் இருக்கிறார்கள்

அவர்கள் நம்மை பார்ப்பதே இல்லை

நாம் சொல்வது எதையும் கேட்பதில்லை

விளக்குகளை ஒளிரவிடுவார்கள்

நம்மைக் குருடாக்கும்படி

பேசுவார்கள்

நம்மைச் செவிடாக்கும்படி

சிறுநரியைப் போல ரகசியமாக

மணலின் ஆழத்திற்குள் சென்று

பரிசோதிப்பார்கள் ஒரு அணுவை

பூமி கதறும்படி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: