சிறுகதை: நீலா

neela

அந்த மாநகரத்தில் புதிதாக உருவாகியிருந்த மையப் பேருந்து நிலையத்தில் அவன் உட்கார்ந்திருந்தான். இப்போதேப் பேருந்தைப் பிடித்தால் பிற்பகலிலேயே வீடு போய் சேர்ந்துவிடலாம். போய் என்ன செய்வது? இக்கேள்விதான் அவனை இங்கேயே உட்கார வைத்திருந்தது. இந்தப் பேருந்து நிலையம் அவனுக்குச் செளகரியமான ஒரு உணர்வையேத் தந்தது. வட்ட வடிவில் பிரமாண்டக் கட்டமைப்பு கொண்டது அது. அதன் முழுமையைக் காண வெகு தூரம் நடக்க வேண்டும். அவ்வப்போது கேட்ட அறிவிப்புகளையும், பேருந்துகளின் இரைச்சலையும், நடத்துனர்களின் விசில் சப்தங்களையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஒரு அமைதி அங்கே படர்ந்திருந்தது. அவ்வப்போது குளிர்ந்த காற்றும் வீசியது. நான்கு வரிசை கொண்ட இருக்கைகளில் கடைசி வரிசையில் அவன் அமர்ந்திருந்தான். குறைவான ஆட்களே அங்கே காணப்பட்டனர். உட்கார்வதும் எழுந்து போவதுமாக அவர்கள் இருந்தனர்.

அவன் கண்களை மூடிக்கொண்டான். அந்நிலை இதமாக இருந்தது. தன்னுள் அமைதி கூடிய ஒரு இருக்கையைத் தேடி அவன் மனம் அலைந்தது. அவன் உடலில் தோன்றிய வலியும், இயலாமையும் அதை அரிக்கத் தொடங்கி மாதங்கள் பல ஆகிவிட்டன. அவன் சிந்தனையின் தீவிர கதியை, உயிரோட்டத்தை, பாய்ச்சலை, ஒளிச்சிதறலை உடலின் வலி உறிஞ்சிவிடும் என்றால் அவனில் எஞ்சப் போவது என்ன? நீர் வற்றுவது போல மனமும் காய்ந்து சருகாகப் போகப்போகிறதா என்ன? அந்த கடைசி நாட்களுக்காகவா, கடைசிக் கனங்களுக்காகவா, அந்த கடைசிச் சொட்டு ஈரம் காய்வதற்காகவா அவன் காத்திருக்கிறான்?

என்ன சிந்தனை இது? என்ன ஆகிவிட்டது உனக்கு? எங்குத் தொடங்கியது இதெல்லாம்? எங்கு முடியும்? உன் தொடக்கத்தை நிர்ணயிக்க முடியாத உன்னால் உன் முடிவையும் நிர்ணயிக்க முடியாதோ?  உடலை கொடுத்ததுவே நோயையும் வலியையும் கொடுத்ததா? நோய்தான் உடல் அழிவின் தொடக்கமா? மரணத்தின் வாசலா?

என்ன சிந்தனை இது? ஏன் இப்போது முடிவைப் பற்றிய யோசனை? மரணத்தைப் பற்றியத் தத்துவ விசாரம்?

தூக்கத்திலிருந்து விழிப்பது போல அவன் கண் திறந்துப் பார்த்தான். வெளி உலகின் சப்தங்களும், வெளிச்சமும் அந்த கனத்துக்காகவே காத்திருந்தது போல மீண்டும் அவனுக்குள் புகத் தொடங்கின.

இந்த உணர்வு நிலையிலிருந்து விடுபட அவன் விரும்பினான். ஏதாவது அருந்தினால் ஆகும் எனத் தோன்றவே மெல்ல எழுந்து நின்று பின்னால் திரும்பிப் பார்த்தான்.  தேனீர் கடைகள் சில கண்ணில் பட்டன. எதிர் இருக்கைகளைப் பிடித்தபடியே நகர்ந்து வெளியே வந்தான். கையை விடுவித்துவிட்டு இரண்டு எட்டுகள் வைத்த பிறகுதான் தன் நிலையை அவனால் உணரமுடிந்தது. ஆனால் அதற்குள் அவன் உடல் சமநிலை பிறழ்ந்து கீழே சரிந்தது. ஆமாம் அவன் விழுந்துவிட்டான். இப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதுதானே அவன் கவனமெல்லாம். உடல் தரையில் மோதுவதும், வலி கிளர்ந்து பரவுவதும்… பிரக்ஞையுமா தப்பிப் போகும்?

அவன் இப்போது இருக்கையில் உட்கார்ந்திருந்தான். இடது கையிலும் இடுப்பிலும் கடுமையான வலி தெரிந்தது.

“உனக்கு என்ன ஆச்சி?”

இக்குரல் அவனை துணுக்குறச் செய்தது. திரும்பிப் பார்த்தான். பக்கத்தில் சற்றுத் தள்ளி அவள் அமர்ந்திருப்பது தெரிந்தது.

நீலா?

“இங்க எதுக்கு வந்த?”

அவள் கேட்டக் கேள்வியைவிட அதிக கேள்விகளை அவன் மனம் கேட்கத் தொடங்கியது.  நீ எப்படி இங்கே? அதுவும் நான் வீழும் தருணத்தில், நான் விரும்பாத, நிகழக்கூடாது என அச்சப்பட்டிருந்த அக்கனத்தில்? நீ வருவதற்காகவே இது நிகழ்ந்ததா? உன் வருகையின் அலைகள் தாக்கித்தான் என் உடல் சரிந்ததா?”

“ஒடம்புக்கு ஏதாவது முடியலையா? தனியாவா வந்த?”

என் அருகில், கையெட்டும் தொலைவில் நீ. என்ன பேசுவேன் நான்?

“ஊருக்கு போறயா, ஊரிலிருந்து வர்றயா?”

பதில் எதுவும் சொல்லாமல் அவன் திகைப்பதைப் பார்த்து, வெட்கத்துடன் அவள் சிரிக்கிறாள்.

எதிர்பாராத கனத்தில், பின்னால் வந்து நின்று கண்களைப் பொத்தி அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டு, எதிரே வந்து சிரிப்பது போல அவள் சிரிக்கிறாள். பயந்திட்டியா? நான்தான் என்பது போல.

நீலாவதி!

அவன் சிரிக்கிறான். அவளும் சிரிக்கிறாள்.

அவள் கேட்டாள், “இங்க எப்ப வந்த?”

“ரெண்டு நாள் ஆச்சி. ஊருக்குப் போய்க்கிட்டிருக்கேன். நீ? ”

“இப்பத்தான் வர்றேன். சாந்தி வீட்டுக்கு வந்தேன். அவ வண்டி எடுத்துக்கிட்டு வர்றேன்னு சொல்லியிருக்கா. அவளுக்காகத்தான் அங்க நின்னுகிட்டிருந்தேன். திடீர்ன்னு பாத்தா… என்ன ஆச்சி? மயக்கமா? ஒடம்பு சரியில்லையா?”

“ஆமாம். ஆஸ்பிட்டல்ல சேர்றதுக்காகத்தான் வந்தேன். ஆனா கொஞ்சம் சிக்கலாயிடுச்சி.”

“ஒடம்புக்கு என்ன? ஏன் இப்படி ஆயிட்டே? தலையெல்லாம் நரைச்சிப் போயி, ஏதோ எழுவது வயசு கிழவன் மாதிரி. அடையாளமே கண்டு பிடிக்க முடியல.”

அவன் சிரித்தான். ஆமாம், அவன் தோற்றம் அப்படித்தான் ஆகிவிட்டது. ஒரு கிழவனைக் கூப்பிடுவது போல கூப்பிடவும், மதிக்கவும், இரக்கம் காட்டவும், சலுகை வழங்கவும் கூட முன் வருகிறார்கள்.

“எந்த ஆஸ்பத்திரி, என்ன பிரச்சின?”

அவன் சொன்னான். அதன் தொடக்கம், மருத்துவர்கள், பரிசோதனைகள், ஊர் ஊராக, மருத்துவமனை மருத்துவமனையாக அலைந்தது, படுத்தது… இறுதியாக இங்கே.

“இந்த நெலமையில நீ ஊருக்கெப்படி போவ?”

“போய்த்தானே ஆகனும். இங்க என்ன பண்றது?”

“சாந்தி வீட்டல தங்கிட்டு நாளைக்கு போ.”

அவன் வியப்புடன் அவளைப் பார்த்தான். என்ன சொல்கிறாள் இவள்? இங்கு அவள் மகள் வீட்டில் தங்குவதா?  என் உடல் நிலை குறித்து அவளுக்கு அதிக அவநம்பிக்கைத் தோன்றியிருக்க வேண்டும்.

“அதெல்லாம் வேணாம். நான் போய்டுவேன். பஸ்ஸ விட்டு இறங்கினா ஆட்டோ பிடிச்சி வீடு போயி சேரப்போறேன்.”

“வழியில ஏதாவது ஒன்னுன்னா என்ன பண்ணுவ? இதோ இங்க விழலயா.”

ஆமாம் அவன் விழுந்துவிட்டான். விழுந்திருக்கக் கூடாது. இனி அவன் நிலை என்ன? நம்பிக்கையோடு இது போன்ற பயணத்தை அவனால் மேற்கொள்ளவே முடியாதா? இவள் அதை உணர்ந்துவிட்டாளா?

“சாந்தி இப்ப வந்துடுவா. அவக்கிட்ட சொல்லி திருப்பி அனுப்பிச்சிட்டு நாம ஆட்டோவுல வீட்டுக்குப் போயிடலாம்.”

சாந்திக்கு அவனைத் தெரியும். அவள் கணவனுக்கு? அவன் குடும்பத்தாருக்கு? எந்தத் தைரியத்தில் இவள் கூப்பிடுகிறாள்?

“சாந்தி வீட்டுக்காரன் சரவணன நீ பார்த்திருக்க மாட்டே.”

“இல்லை.”

“நல்லப் பையன்.”

சாந்தி வந்துவிட்டாள். அவள் அம்மாவை நோக்கி சிரித்துக்கொண்டே வந்தாள். அவனை அவளால் சட்டென்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால் சுதாகரித்துக்கொண்டுவிட்டாள். அவளுக்கு எந்த சங்கடமும் தோன்றவில்லை போல.

அவள் கேட்டாள், “நல்லா இருக்கீங்களாண்ணா?”

“இருக்கேம்மா.” அவன் சிரித்தான்.

நீலா எழுந்து அவளைத் தனியே கூட்டிக்கொண்டு போய் பேசினாள். அவன் கண்ணில் படும்படிதான் அவர்கள் நின்றிருந்தனர். எதிர்பாராத, உணர்ச்சிவசப்பட்ட இந்த நிலை எந்த சங்கடத்துக்கும் வழி வகுத்துவிடக்கூடாது என அவன் அஞ்சினான்.

இருவரும் திரும்பி வந்தனர்.

“போலாம் வாங்கண்ணா” என்றாள் சாந்தி. அவனுடைய பையையும் தன் அம்மா கொண்டு வந்த பையையும் அவள் எடுத்துக்கொண்டாள். அவன் எழுந்து முன் இருக்கையைப் பற்றியபடியே வெளியே வந்தான். நீலா அவன் கையைப் பிடித்துக்கொண்டாள்.

அவர்கள் இருவரையும் ஒரு ஆட்டோ பேசி ஏற்றிவிட்டு சாந்தி தன் ஸ்கூட்டரில் போய்விட்டாள்.

நகரத்தின் விளிம்பைக் கடந்து ஆட்டோ போய்க்கொண்டிருந்தது.

“கூட தேவிய கூட்டிகிட்டு வர்றதானே. ஏன் வரமாட்டேன்னிடுச்சா?”

இதற்கு என்ன பதில் சொல்வது என அவனுக்குத் தெரியவில்லை. அவளை அவன் அழைக்கவில்லை. அவளும் வருகிறேன் எனச் சொல்லவில்லை. இது வரை மூன்று மருத்துவமனைகளில் படுக்கையில் இருந்திருக்கிறான். எங்கேயுமே அவள் உடனில்லை. இதற்காக அவள் மீது பழி போடவும் அவன் விரும்பவில்லை. அவள் உதவியில்லாமல் நடமாட அவன் விரும்பினான்.

அவன் சொன்னான், “அவ கூட வந்துட்டா பசங்கள யாரு பாத்துப்பாங்க?”

அவள் எதுவும் பேச வில்லை. ஆனால் அவள் முகத்தில் மளர்ச்சி தெரிந்தது. அவனைப் பார்த்ததில் அவளுக்கு எந்த சங்கடமோ, வருத்தமோ இல்லை போல. ஆனால் இந்த சந்திப்பு நிகழக்கூடாது என அவன் விருப்பியிருந்தான். அப்படி நிகழ்ந்தால் அது கசப்பின் வெளிப்பாடாக ஆகிவிடக்கூடாது என்பதே அவன் அச்சம். அவள் மீது அவனுக்கிருந்த கோபம் சில ஆண்டுகளிலேயே தணிந்துவிட்டது. ஆனால் அவளுக்கு? அவள் மீது அவன் பாய்ச்சிய ஈட்டி? அந்த காயம் ஆறியிருக்குமா? அதன் வலி தணிந்திருக்குமா? ஆனால் அப்படி எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. இதோ நீலா தனக்குள் சிரித்தபடி வருகிறாள், அவளிடம் ஒரு பரவச உணர்வு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால் காலம் கடந்துவிட்டது. கடைசியாக அவளைப் பார்த்த போது நரை கண்டிருந்தது. இப்போது முழுவதுமே நரைத்துவிட்டது. வெறுமையான அந்த முகம் சற்றே சிறுத்திருக்கிறது. உடலில் தளர்ச்சி தெரிகிறது. முன்பு போலவே கழுத்தில் ஒரு சங்கிலி, கைகளில் கவரிங் வளையல்கள், நீல நிறத்தில் பூக்கள் வரையப்பட்ட புடவை, எளிமையான அதே விதவைக் கோலம்.

அவன் கேட்டான், “மருமகன் என்ன பண்றான்?”

“மார்கெட்டுல காய்க்கறி கடை வச்சிருக்கான்.”

“எத்தனை கொழந்தைங்க?”

“ரெண்டு பேரு. பொண்ணு ஒன்னு பையன் ஒன்னு. பெரியவ ஸ்கூலுக்குப் போறா. பையனுக்கு ரெண்டு வயசுதான் ஆவுது.”

பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அவன் குடும்பத்தைக் குறித்தோ பிள்ளைகள் குறித்தோ எதுவும் அவள் கேட்கவில்லை. ஒரு வேளை அவளுக்குத் தெரிந்திருக்கலாம். சொல்வதற்கு ஆட்கள் இருந்தார்கள். அவன்தான் எதுவும் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. தெரிந்து என்ன ஆகப்போகிறது? ஒருவேளை தெரிந்துகொண்டிருந்தால், அதன் தொடர்ச்சி அவன் மனதில் நிலைத்து இன்று இந்த சந்திப்பை சகஜமாக்கியிருக்கும். அப்படி ஆகியிருந்தால் இப்போது அவன் மனம்கொண்டுள்ள பரவசத்தை இச்சந்திப்பு நிகழ்த்தாமல் போயிருக்கலாம். பரவசம் என்றுதானே சொன்னோம். ஆமாம் அவன் அப்படித்தான் இருக்கிறான். உடலின் வலி தணிந்து, ஏன் அவன் நோய்கூட பின்வாங்கிவிட்டது போலவே இருந்தது.

புறநகர் பகுதியில் இருந்த இரண்டு மாடி வீடுதான் அது. சொந்த வீடாகத்தான் இருக்க வேண்டும். அவள் உதவியில்லாமலேயே மெல்ல நடந்து வீட்டினுள் சென்றான். வரவேற்பறையில் இருந்த சோபாவில் போய் உட்கார்ந்தான். சாந்தியின் பையன் தரையில் விளையாடிக்கொண்டிருந்தான். மகள் பள்ளிக்குச் சென்றிருக்கிறாள். சாந்தியின் கணவன் இரவுதான் வீட்டுக்கு வருவானாம்.

“கொஞ்சம் நேரம் படுக்கிறியா?” நீலா கேட்டாள்.

“இல்ல, இப்ப வேணாம்” என்றான் அவன்.

படுத்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் எங்கே படுப்பது? சமையல் அறை தவிர மேலும் இரண்டு அறைகள் இருந்தன என்றாலும் சங்கடமாக உணர்ந்தான். கட்டிலில்தான் அவனால் படுக்க முடியும். அனேகமாக அந்த அறைகளில் ஏதோ ஒன்றில்தான் கட்டில் இருக்க வேண்டும்.

அந்த சிறுவனை இவன் அருகில் வருமாறு அழைத்தான். அவனோ தலையாட்டி மறுத்துவிட்டான். பெயர் கேட்டதற்கும் சொல்லவில்லை. இவன் வருகையால் அவன் மிரட்சி கண்டிருக்க வேண்டும்.

குளியல் அறையைத் திறுந்துகொண்டு வெளியே வந்த நீலா, “பாத் ரூம் போறதா இருந்தா போ” என்றாள். அவன் சென்று வந்தான்.  சாந்தி தொலைக்காட்சி பெட்டியை முடுக்கி ஒரு தமிழ்ச் செய்திச் சேனலை வைத்துவிட்டுப் போனாள்.

மதியம் உணவுக்குப் பிறகு நீலாவின் வற்புறுத்தலுக்கிணங்க படுக்கையறையில் இருந்த கட்டிலில் போய் படுத்துத் தூங்கினான்.

மாலை பள்ளியிலிருந்து சாந்தியின் மகள் வந்தாள். அவள் இரண்டாம் வகுப்பு படிக்கிறாளாம். அவள் அவனுடன் சகஜமாக ஒட்டிக்கொண்டாள்.

இரவு எட்டுமணி அளவில் சாந்தியின் கணவன் வந்தான். ஏற்கெனவே அவனுக்கு கைபேசியில் சாந்தி தகவல் சொல்லியிருக்க வேண்டும். இன்முகத்துடனேயே அவன் பேசினான். அவனை என்னவென்று அறிமுகப்படுத்தியிருப்பாள்? தன் தந்தையின் நண்பன் என்றா அல்லாது ஊர்க்காரர் என்றா? ஆனால் சங்கடப்படும்படி எதுவும் அங்கே நடப்பது போலத் தோன்றவில்லை. நாளை காலை வரை அவன் அங்கே தங்கயிருக்க முடியும். நீலா சகஜமாக மருமகனுடன் பேசினாள். இவன் வருகை அவளுக்கு எந்த குற்ற உணர்வையும் அங்கே ஏற்படுத்திவிடவில்லை என்பது தெரிந்தது.

இரவு சாப்பாடு முடிந்த பின் சாந்தியின் கணவனிடம் அவன் வியாபாரம் குறித்து விசாரித்தான். அவனும் இவனுடைய உடல்நிலை பற்றி அக்கறையுடன் கேட்டறிந்தான். படுக்கப் போவதற்கு முன்பு நீலாவும், சாந்தியும், அவள் கணவனும் தனியாக ஏதோ பேசினார்கள்.

தம்பதிகளை சங்கடப்படுத்த விரும்பவில்லை அவன். பாத் ரூம் எழுந்து போக வசதியாக இருக்கும் எனக் கூறி இரவு சோபாவிலேயே படுத்துக்கொள்வதாக சொல்லிவிட்டான். நீலாவும் அவள் பேத்தியும் கீழே பாயில் படுத்துக்கொண்டனர். சோபாவை விரித்துப் போட்டு தலையணையும் போர்வையையும் அவனுக்கு கொடுத்திருந்தனர்.

அவன் படுத்துக்கொண்டான். அந்த சிறுமி தூங்கிவிட்டாள். நீலா உட்கார்ந்திருந்தாள். அவள் சொன்னாள், “நாளைக்கு ஊருக்குப் போக வேணாம். ஆஸ்பத்திரியில சேர்ந்துடு.”

அவன் எழுந்து உட்கார்ந்துகொண்டான். என்ன சொல்கிறாள் இவள்?

“அட்வான்ஸ் பணம்தானே பிரச்சினை. அதைக் கட்டிக்கலாம்.”

அவன் சொன்னான்,”பணம் மட்டுமில்ல, கூட ஒரு ஆளு இருக்கனும்ன்னு சொல்லிட்டாங்க.”

“நான் வர்றேன்.”

அவன் அதிர்ந்துபோனான். என்ன சொல்கிறாள் இவள்? எந்தத் தைரியத்தில்? அவள் மருமகன் என்ன நினைப்பான்? இதை எப்படி புரிந்துகொள்வான்?.

“வேணாம். நான் ஊருக்குப் போயி தேவிய கூட்டிகிட்டு வந்து சேந்துக்கிறேன்.”

“எப்பப் போயி, எப்பக் கூட்டிக்கிட்டு வர்றது? எனக்கொன்னும் பிரச்சினையில்ல. இங்க வந்தா பத்து பாஞ்சி நாளு தங்கிட்டுத்தான் போவேன். உன்ன ஆஸ்பத்திரியில சேர்த்துட்டு நான் வந்து போயிக்கிட்டு இருக்கேன்.”

அவன் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தான். நீலாவை சந்தித்தது, இங்கு வந்தது, அவள் தன்னுடன் மருத்துவமனைக்கு வருவதாகக் கூறுவது எல்லாம் நிஜத்தில் நடந்துகொண்டிருக்கிறதா? இதெல்லாம் எப்படி? இதைத்தான் தெய்வாதீனம் என்கிறார்களா?

அவன் எதற்கு தயங்குகிறான் என்பதை அவள் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

“சரவணன்தான் சொன்னான். அவரு எதுக்குப் போயி திரும்ப வரனும். எவ்வளவு ஆகுதோ நாம கட்டிடலாம். டிஸ்சார்ஜ் ஆனப் பிறகு  ஊருக்குப் போயி பணத்தை என் அக்கவுன்ட்ல போட சொல்லிடுங்கன்னு சொன்னான்.”

“அது இல்ல… உனக்கு எதுக்கு இந்த தொல்லைன்னுதான்…”

“இதல என்ன இருக்கு. நான் வர்றேன். நாளைக்கு காலையில சாப்பிட்டுக் கிளம்பலாம்.”

அவனுக்கு எதையும் நம்ப முடியவில்லை. என் மீதான பற்றுதலில் இதை செய்கிறாளா? அல்லது நான் அவ்வளவு பரிதாபம் காட்டும் மனிதானாக மாறிவிட்டேனா? நம்மால் இவர்களுக்கு எவ்வளவு தொல்லை. எதற்காக இந்தச் சுமையை இவர்கள் மீது இறக்க வேண்டும் என்றெல்லாம் யோசித்தபடி வெகுநேரம் தூக்கம் வராமல் படுத்திருந்தான்.

அவள் வீட்டில் படுத்திருந்துறங்கிய சில இரவுகள் இப்போது அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தன. அது சிறிய அளவிலான வீடு. அங்குதான் எல்லோரும் படுத்துறங்க வேண்டும். இவன் கட்டிலில் படுத்திருப்பான். கீழே நீலா தன் மகளோடு படுத்திருப்பாள். கொஞ்சம் தள்ளி அவள் சொந்தங்கள். இரவு விளக்குக்கூட இல்லாமல் அறை இருண்டு கிடக்கும். மற்றவர்கள் உறங்கியப் பிறகு அவள் எழுந்து கட்டிலுக்கு நெருங்கி வந்து உட்கார்ந்துகொள்வாள். அவளுடைய வாசனையையும் விரல் தொடுதலையும் அவனால் உணர முடியும். தகிக்கும் அவள் உடலையும் ஆற்றாமையின் பெருமூச்சுகளையும் ஸ்பரிசிப்பான். உணர்வுப் பெருக்கில் அவள் கைகள் அவனைப் பற்றி கீழே இழுக்கும் போது பயம் அவனைத் தடுத்து நிறுத்திவிட்டிருக்கிறது. ஒரு வேளை அந்த நிறைவின்மையின் மிச்சங்கள் இன்னும் அவளுக்குள் புதைந்திருந்து இப்போது உயர்த்தெழுந்து வருமோ என்றுகூட அவன் எதிர்பார்த்தான். ஆனால் இந்தச் சூழலில் அதெற்கெல்லாம் இடமிருக்குமா என்ன? இந்த எதிர்பார்ப்பு அவனைக் குற்ற உணர்ச்சிக்குள் அமிழ்த்தவே செய்தது. ஒரு வேளை அவனுடைய இறைஞ்சுதல், முன்னெடுப்புகள் இல்லாமலேயே அவனை நோக்கி அவளே வந்தால் என்ன செய்யப்போகிறான்? ஆனால் அதற்கான ஏக்கமோ, எதிர்பார்ப்போ அவளிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு இயலாக் குழந்தையை அரவணைத்துக் கொள்ளும் வாஞ்சைதான் அவளிடம் வெளிப்படுவதாக அவனுக்குத் தோன்றியது.

மனதின் கற்பனைகளை, அது விகாரம் கொள்ளுதலைக் கட்டுப்படுத்த முடிகிறதா என்ன? பிறகு அதன் ரத்த உறவான இந்தக் கனவுகள்! உடல் உறக்கம் கொண்டிருக்கும் வேலையில் ஆவை ஆடும் நடனம்! அன்றிரவு அது ஒரு நாகத்தைப் போல நீலாவின் உடலை தீண்டித் தீண்டிப் படமெடுத்து ஆடியது. உறக்கத்தின் விளிம்பை கடந்து அவை நீள்கையில் பலமுறை அவன் விழிப்புகண்டான். ஒரு நடனத்தின் முடிவில் அவன் உயிர் மூலம் விம்மி பாகாக வடிந்தும் போனது. வெட்கத்துடன் எழுந்து மெல்ல குளியல் அறைக்குச் சென்று வந்தான். பிறகு சோபாவில் உட்கார்ந்து நீலாவைப் பார்த்தான். இரவு விளக்கின் மங்கிய ஓளியிலும் அவள் உறங்கிக் கொண்டிருக்கும் தோற்றம் தெளிந்த காட்சியாக அவனுக்குள் இறங்கியது. அவள் முகத்தையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். தூக்கத்தில் குழந்தைகள் சிரிப்பது போல அவள் சிரிப்பது தெரிந்தது. அவன் கனவும் அவள் கனவும் ஒன்றுதானோ? இரு உடல்களையும் மேடையாக்கி அந்த நடனம் நிகழ்ந்ததோ?

மறுநாள் காலை, வேளையோடு கிளம்பி சரவணன் மார்க்கெட் போய் விட்டான். பெண்ணைப் பள்ளிக்கு அனுப்பிட்டு தன் பையனுடன் சாந்தியும் உடன் வந்தாள். மூவருமே ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்குப் போனார்கள்.

அவன் சிகிச்சைப் பெற வேண்டிய வார்டு இரண்டாவுது மாடியில் இருந்தது. நர்ஸ் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து நீலாவிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டாள். சாந்தி போய் முன் பணத்தை கவுன்ட்டரில் செலுத்தி ரசீது பெற்று வந்தாள்.  அவன் தங்கப் போகும் அறையை அங்குப் பணியிலிருந்த உதவியாளர் பெண் ஒருத்தி காட்டினாள். அது இரண்டு நோயாளிகள் தங்கும் அறை. அது சுத்தமாகவும் விஸ்தீரணமாகவும் இருந்தது. இரண்டுநோயாளிகளுக்கான கட்டில்களும் உடன் தங்குபவர்களுக்கு இரண்டு கட்டில்களும் இருந்தன.

வழிக்குப் பக்கத்தில் இருந்த கட்டிலில்  மெலிந்த தேகத்துடன் வயதான ஒருவர் படுத்திருந்தார். அவர் தன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்ததில் அவர்கள் இந்திக்காரர்கள் என்பது புலப்பட்டது. அவனுக்கு ஒதுக்கியிருந்த கட்டில் உள் பக்கமாக இருந்தது. இடையிலிருந்த திரையை இழுத்துவிட்டால் அடுத்தவர் பார்வை படாமல் கொஞ்சம் சுதந்திரமாக இருக்கலாம். ஒவ்வொரு நோயாளிக்கும் தலா ஒன்று என இரண்டு பிளாஸ்டிக் நாற்காளிகளும் பொருள்களை வைத்துக்கொள்ள இரண்டு மர அலமாரிகளும் அங்கிருந்தன. குளியல் அறைகூட சுத்தமாக இருந்தது.

அவர்கள் அறைக்கு வரும் போது பனிரண்டு மணிக்குமேல் ஆகிவிட்டது. சாந்தி கேன்டீனுக்குப் போய் இரண்டு சாப்பாடு வாங்கி வந்தாள். தான் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்கொள்வதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். ஏதாவது தேவை என்றால் கைபேசியில் தகவல் சொல்லும்படிச் சொல்லி தன் எண்ணை அவனுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றாள். நீலா அவளை வெளியேச் சென்று வழியனுப்பிட்டு வந்தாள்.

அவள் உள்ளே வரும்போது அந்த வட இந்தியப் பெண்மணி நீலாவிடம் எதுவோ இந்தியில் கேட்டாள். எனக்குத் தெரியாது என்பது போல அவள் தன் கையை விரித்துக் காண்பித்துவிட்டு அவனைப் பார்த்து சங்கோஜத்துடன் சிரித்துக்கொண்டே வந்தாள்.

உதவியாளர் படுப்பதற்கான அந்த தாழ்வான கட்டிலிலில் உட்கார்ந்து கொண்டு கேட்டாள், “உனக்கு இந்தி தெரியுமா?”

“தெரியாது” என்றான் அவன்.  “ஏதாவது பேசுனும்ன்னா ஊமைகிட்டப் பேசற மாதிரி சைகையிலேயே பேச வேண்டியதுதான்.”

அவள் சிரித்தாள்.

அவன் சொன்னான், “அவுங்கப் பேசறது நமக்குப் புரியாது. நாமப் பேசறது அவுங்களுக்குப் புரியாது. நல்லக் கூத்தாதான் இருக்கப் போவுது.”

அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனை என்பதால் பல மொழிப் பேசும் மக்களும் சிகிச்சை பெற இங்கே வந்து குவிந்தார்கள். தமிழ் பேசக்கூடியவர்கள் மிகக் குறைவு. இந்த மருத்துவமனைக்கு வந்தாலேயே அவனுக்கு மொழிப் பிரச்சினையும் உடன் வந்துவிடும்.

“சாப்பிட்றயா?” எனக் கேட்டாள் நீலா.

“பசி இல்ல. கொஞ்ச நேரம் ஆகட்டும்.”

அவன் கட்டிலின் மீது ஏறி உட்கார்ந்தான்.

“நீ படுக்கிறதா இருந்தா படு” என்றான்.

அவள் கட்டிலில் உள் நகர்ந்து சுவரில் சாய்ந்து கொண்டாள். அவன் படுத்து கண்களை மூடிக்கொண்டான். மருத்துவமனைக்குள் வெகு தூரம் நடக்க வேண்டியிருந்ததால் கால்களில் வலி இருந்தது. ஆனால் அவன் மனம் நீலா என்ற எதிர்பாராத வரவால் பரவசமும், பதற்றமும் கொண்டுவிட்டிருந்தது. நேற்று காலைத் தொடங்கி இந்த கனம் வரை நடப்பது எல்லாமே ஒரு நீண்ட கனவின் தொடர்ச்சி போலவே தோற்றம் தந்தது. இதோ அவனுக்கு மிக அருகில், அவனுக்கு உதவியாக அவள் வந்திருக்கிறாள். அவனுடன் ஒரு வாரம் இருக்கப் போகிறாள். அவளோடு பழகிய நாட்களில் இப்படியான சந்தர்ப்பத்திற்காக இருவரும் காத்திருந்திருக்கிறார்கள். எத்தனை தயக்கம், அச்சம், அவஸ்தை. அதையும் தாண்டி கிடைத்த சந்தர்ப்பங்களில் கூட பதற்றமில்லாமல் கலக்கவே முடிந்ததில்லை. அவர்கள் இருவருக்காக ஒதுக்கப்பட்டதும், எல்லாம் அனுமதிக்கப்பட்டதுமான இடம் ஒன்று பூமியில் இருப்பதற்கான நம்பிக்கை துளிர்க்கவே இல்லை. உட்கார்ந்து பேசவும், அணைத்துக்கொள்ளவும், கிளந்தெழும் உடல்களின் விம்மல்களுக்கு பதில் கூறவுமான ஒரு இடம் எங்கே என்று பல காலம் அவர்கள் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அது நிறைவேறாமலேயே நிகழ்ந்த விலகல், பெரிய இடைவெளியாகி சுமார் பதினைந்து ஆண்டுகள் கடந்து இப்போது ஒன்று சேர்ந்திருக்கிறது. ஒரு வேளை அவர்கள் தேடிய இடம் இதுதானோ. முதுமையின் பாதையில் நடக்கத் தொடங்கி சற்றேயான தொலைவையும் கடந்து வந்துவிட்ட இந்த சந்தர்ப்பங்களில் என்ன நடக்கப் போகிறது?

இந்த சந்திப்பு ஒரு விபத்துதான். நல் விபத்து. ஆனால் அவள் ஒரு புன்னகையையோ, சம்பிர்தாயமான விசாரிப்பையோ செலுத்திவிட்டு ஏன் அவள் வழியில் சென்றிருக்கக் கூடாது? அவனைப் போலவே இச்சந்தர்ப்பத்திற்கு அவளும் காத்திருந்தாளா? திரும்ப அதை இழக்க விரும்பாத பேரார்வம்தான் இந்த மருத்துவமனை வரை அவளை அழைத்து வந்திருக்கிறதா? ஆனால் இதற்கு எதிரான பதில் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. அவனுக்குள் சந்தேகத்துடன் துடிக்கும் கேள்வி ஒன்றும் இருந்தது. “நீ காட்டும் இந்த அன்புக்கு தகுதியுள்ளவனா நான்?” என்பதுதான் அது.

எத்தனை சந்திப்பு, பேச்சு, ஏக்கங்கள், விருப்பங்கள், அவமானம், கண்ணீர் என கட்டப்பட்ட அந்த உறவை ஒரு கனத்தில் போட்டு நொறுக்கிவிட்டு வருவது எவ்வளவு அறிவீனம், மூடத்தனம். அவனாலேயே அவனை மன்னிக்க முடியாத போது அவள் எப்படி மன்னித்தாள்?

அவர்கள் இருவரும் இப்போது தனியே இருக்கிறார்கள். அவர்கள் பேசியாக வேண்டும். எங்கிருந்து தொடங்குவது? விட்ட இடத்திலிருந்தா? அல்லது இப்போதைய அவர்களின் வாழ்க்கையின் நிகழ்வுகளிலிருந்தா? எதுவாக இருந்தாலும் அது ஒரு நோக்கத்தின்பாற்பட்டே செல்லும் என்பதில் சந்தேகமில்லை.  ஆனால் இருவருக்கான நோக்கம் ஒன்றாக இருக்க முடியுமா?

“டாக்டர் வந்திருக்காங்க.”

நீலாவின் குரல் கேட்டு கண் திறந்து பார்த்தான். டாக்டர் அவனுக்கு அருகில் நின்றிருந்தார்.

“தூக்கமா?” அவர் சிரித்தபடி ஆங்கிலத்தில் கேட்டார்.

“இல்லை சார்.” அவன் அவசரமாக எழுந்து உட்கார்ந்தான்.

“தமிழா?” அவர் கேட்டார். ஆனால் அதில் வட இந்திய வாடை இருந்தது. இளைஞர்தான். கையில் அவன் பெயர் பொறித்த ஒரு கோப்பும் விண்ணப்பம் போன்ற காகிதங்கள் கொண்ட ஒரு அட்டையும் இருந்தன.

“என்ன வேலை செய்றீங்க?”

அவன் சொன்னான்.

உட்கார்ந்தவாக்கிலும், படுக்க வைத்தும், நடக்க வைத்தும் அவர் அவனைப் பரிசோதித்தார். அரை மணி நேரத்துக்கு மேல் அது தொடர்ந்தது.  அவன் தன்னுடன் கொண்டு போயிருந்த, இதற்கு முன் பல மருத்துவமனைகளில் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளை வாங்கிப் பார்த்தார். அவற்றைப் பிறகு தருவதாகக் கூறி கோப்பில் சேர்த்து வைத்துக்கொண்டார்.

புறப்படும்போது சொன்னார், “நிறைய டெஸ்ட் எடுக்க வேண்டியிருக்கு. அதையெல்லாம் பார்த்துட்டு கடைசியாத்தான் என்ன ட்ரீட்மென்ட் குடுக்கிறதுன்னு சொல்ல முடியும்.”

அவன் கேட்டான், “எவ்வளவு நாள் இங்க தங்க வேண்டியிருக்கும்?”

அவர் சொன்னார், “மினிமம் ஒன் வீக். டென் டேஸ் கூட ஆகலாம்.”

அவர் போய் விட்டார்.

இந்தப் பரிசோதனைகளை நீலா பார்த்துக்கொண்டிருந்தது அவனுக்கு சங்கடமான ஒரு உணர்வைக் கொடுத்தது. அவளுக்கு முன் ஒரு நோயாளியாக நிற்க வேண்டிய நிலை, ஒரு தாழ்வுமனப்பான்மையையும் அவனுக்குள் எழுப்பவே செய்தது.

அந்த சூழ்நிலையை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் விதமாக அவன் சொன்னான், “பசி எடுத்துகிச்சி, சாப்பிடலாம்.”

தன் பையிலிருந்து ஒரு செய்தித் தாளை எடுத்து அந்த சின்ன கட்டிலின் மீது விரித்துவிட்டு, கைக் கழுவ குளியல் அறைக்குச் சென்று வந்தான். அவள் பொட்டலங்களைப் பிரித்து வைத்தாள்.

சாப்பிடும் போது கேட்டாள், “ஆஸ்பத்திரியில சேந்துட்டேன்னு தேவிக்குச் சொன்னையா?”

“இல்ல, சொல்லனும்” சங்கடத்துடன் அவன் சிரித்தான்.

சொல்வதில் நிறைய சிக்கல் இருந்தது. என்ன சொல்வது என அவன் யோசித்துக்கொண்டிருந்தான். நண்பர்தான் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பார்த்துக்கொள்கிறார் எனச் சொல்ல வேண்டும். பொய் சொன்னால் அதை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும். அத்திறமை அவனுக்குக் குறைவு.

அவன் கேட்டான், “நீதான் கூட இருந்துப் பார்த்துக்கிறன்னு சொல்லிடட்டுமா?”

“சொல்லேன்.  எனக்கென்ன பிரச்சினை? நீதானே அவஸ்தைப் படப்போற.”

சாப்பிட்டுவிட்டு அவன் கொஞ்சம் நேரம் புத்தகம் படித்துக்கொண்டிருந்தான். அவள் படுத்தாள். கண்களை மூடி படுத்திருந்தவள் தூங்கிவிட்டது தெரிந்தது. அவன் முயற்சிக்கவில்லை. இப்போது தூங்கிவிட்டால் அவனால் இரவில் தூங்க முடியாது.

மாலை ஐந்து மணி வாக்கில் அவள் எழுந்து கொண்டாள். பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்த அவனைப் பார்த்து சிரித்தாள்.

“நல்லாத் தூங்கிட்டேன்.”

எழுந்து குளியல் அறைக்குச் சென்று முகம் கழுவிக்கொண்டு வந்தாள்.

பக்கத்து படுக்கையிலிருந்த நோயாளியும் அவன் மனைவியும் இல்லாததைப் பார்த்து சைகையில் எங்கே என்று கேட்டாள்.

அவன் சொன்னான், “இங்க வேலை செய்ற பொம்பள வந்து எங்கியோ கூட்டிகிட்டு போச்சி. ஏதாவது டெஸ்ட் எடுக்க இருக்கும்ன்னு நெனைக்கிறேன். ”

அவள் தனது பையிலிருந்து ஒரு துண்டை எடுத்து முகம் துடைத்துக்கொண்டாள்.

அவன் கேட்டான், “வெளியே வராண்டாவுல கொஞ்சம் நேரம் நிப்பமா?”

அவன் எழுந்து புத்தக்தை கட்டிலின் மேல் போட்டுவிட்டு மெல்ல நடந்தான். அவள் அவனுக்கு அருகில் வந்தாள். அவள் தோல் மேல் கையை வைத்துக்கொண்டு நடந்தான். வராண்டா வெகு தொலைவுக்கு நீண்டிருந்தது. அதில் பொருத்தப்பட்டிருந்த நகர்த்தும் கண்ணாடி ஜன்னல்கள் வழியே எதிரே இருந்த தோட்டமும் மரங்களும் தெரிந்தன. தோட்டம் நன்கு பராமரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. தரை முழுவதும் வியாபித்திருந்த புல்வெளி சீராக வெட்டப்பட்டிருந்தது. ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு அவன் நின்றான். அவளும் அருகில் வந்து நின்று தோட்டத்தை வேடிக்கைப் பார்த்தாள். அவன் மூடியிருந்த கண்ணாடி ஜன்னலை நகர்த்தினான். சில்லென்ற காற்று உள்ளே வந்து அவர்கள் மீத மோதியது.

“ராத்திரியில நல்லா குளிரும்ன்னு நினைக்கிறேன்” என்றான் அவன். “போர்வை ஏதாவது எடுத்துகிட்டு வந்தியா? எனக்கு கட்டில்லேயே ஒன்னு இருக்கு.”

“சாந்தி சால்வ ஒன்னு கொடுத்தனுப்பியிருக்கா.”

அங்கிருந்து சற்று தள்ளி அறைகளுக்கு மையப்பகுதியில் ஒரு பெரிய ஹால் இருந்தது. அதில் நிறைய இருக்கைகள் போடப்பட்டிருந்தன. எதிரே ஒரு தொலைக் காட்சிப் பெட்டி இயங்கிக்கொண்டிருந்தது. அதில் ஏதோ ஒரு இந்தி மொழி நிகழ்ச்சியை சிலர் உட்கார்ந்துப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“அங்க போயி கொஞ்சம் நேரம் உட்காரலாமா?” எனக் கேட்டான்.

“வா” என்றாள் அவள்.

பக்கத்தில் நடந்து வந்த அவள் கையைப் பிடித்துக்கொண்டான். இருவரும் அந்த இடத்தை நோக்கி நடந்து சென்றனர். பின்னால் இருந்த இருக்கைகளில் அருகருகே அமர்ந்து கொண்டனர்.  தொலைக்காட்சிப் பெட்டியில் தெரிந்த நிகழ்ச்சி எதுவும் அவர்கள் கவனத்தைக் கவரும்படி இல்லை. வெளியே இருள் கவிந்து வருவது ஜன்னல்களின் வழியேப் புலப்பட்டது. அந்த இடத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளிலிருந்து வந்த ஒளி அதை ஈடுசெய்யும் அளவுக்கு இல்லை. எதுவும் பேசாமல் யாருடைய அழைப்புக்காகவோ காத்திருந்தது போல அவர்கள் இருந்தனர்.  அவள் அவனது வலது கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டாள். அவளுடைய அந்த நகர்வை அங்கீகரிப்பது போல அவனும் அவள் விரல்களைப் பற்றி அழுத்தினான். வெகு நேரம் அந்த விரல்கள் ஒன்றை ஒன்று தழுவி, நீண்ட காலத்துக்குப் பிறகான அந்த சந்திப்பை கொண்டாடிக் கொண்டிருந்தன.

அவன் ஏனோ சட்டென்று கைகளை விடுவித்துக்கொண்டான். அவள் வியப்புடன் அவனைப் பார்த்தாள். அவன் முகத்தில் முன்பிருந்த பரவசம் மறைந்து ஏதோ குழப்பம் படிந்ததை அவள் கவனித்தாள்.

“நாம ரூமுக்குப் போகலாம். டாக்டர் யாராவது வருவாங்க ” என அவன் எழுந்தான்.

இருவரும் அறைக்கு திரும்பினர். அப்போதும் அந்த அறை காலியாகவே இருந்தது. அந்தத் தம்பதிகள் இன்னும் திரும்பவில்லை என நினைத்தான். ஆனால் அவர்களுடைய பொருள்கள் எதுவும் அங்கே காணப்படவில்லை. சிகிச்சை முடிந்து அவர்கள் டிஸ்சார்ஜ் ஆகி கிளம்பிச் சென்றிருக்க வேண்டும்.

“நேரமாயிடுச்சி நான் போயி கேன்டின்ல டிபன் வாங்கியாந்திட்றேன்.” என்றாள் நீலா.

அவள் போய்விட்டாள். அவனுக்குள் ஏற்பட்ட மாற்றம் அவளை குழப்பமடையச் செய்திருக்க வேண்டும். இதற்கு அவனால் என்ன செய்ய முடியும்? ஹாலில் அவர்கள் அமர்ந்திருக்கும் போது வராண்டாவில் அவன் பார்த்ததுதான் அவனைத் துணுக்குறச் செய்திருந்தது. ஆமாம் அந்த வழியே வந்துப் போய்க் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் கவிதாவை அவன் பார்த்தான்.அவள் பார்வையும் அவன் மேல் படிந்து சென்றது போலத்தான் இருந்தது. அவள் எதற்கு இங்கே வந்தாள்? அவளுடைய கையில் பிளாஸ்க் ஒன்று இருந்ததையும் அவன் பார்த்தான். அவள் இங்குதான் யாருடனோ வந்திருக்க வேண்டும். ஒருவேளை அவள் கணவனுக்கு உடம்பு சரியில்லையா?

அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. திரும்பவும் அறையை விட்டு வெளியே வந்து வராண்டாவைப் பார்த்தபடி நின்றான். அவன் பார்வை அவள் வர வேண்டிய இடது திசையை நோக்கியிருந்தது.  காலில் வலி இருந்தாலும் சிறிது நேரம் நின்றிருந்தான். அத்திசையிலிருந்து வந்து கொண்டிருந்தவர்களில் அவளைத் தேடினான். தொலைவில் அவள் வருவது தெரிந்தது. வழக்கம் போலவே அவள் நல்ல அலங்காரத்தில் இருந்தாள். வயலட் நிற சேலையில், புருவத்தை சீர்படுத்தி முகத்தை பொலிவாக்கியிருந்தாள். இப்போதும் அவள் கையில் அந்த பிளாஸ்க் இருந்தது. அவள் நெருங்கி வந்தாள். ஆனால் அவனைப் பார்க்காதது போல கடந்து சென்றாள்.

“கவிதா” அவன் அவளை அழைத்தான்.

அவள் திரும்பிப் பார்க்காமல் வேகத்தை அதிகப்படுத்தி நடந்தது போல இருந்தது. ஆமாம் அவள் அவனிடமிருந்து தப்பி ஓடுகிறாள் என்பது நன்றாகவே புலப்பட்டது. அவனை இங்கே சந்தித்ததில் அவள் அதிகம் அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். அவள் அந்த ஹாலை ஒட்டியிருந்த ஒரு அறைக்குள் போய் நுழைவது தெரிந்தது. அவள் அங்குதான் இருக்கிறாளா? அவள் யாருடன் வந்திருக்கிறாள்? ஒருவேளை அது “அவன்” தானோ?

அவள் போன திசையில் மெல்ல அவன் நடந்தான். அவளுடைய திருட்டுத் தனங்கள் எதுவும் இப்போது அவனிடம் பலிக்காது. இனியும் அவனை மறைத்து வைக்க அவளால் முடியாது. அவன் யாரென்று இப்போது தெரிந்துவிடும்.

மூடியிருந்த கதவைத் திறந்து உள்ளே பார்த்தான். அது காலியாக இருந்தது. அவன் திகைத்துப் போனான். அதற்குள் எங்கே போய் அவர்கள் ஒளிந்து கொண்டார்கள்? உள்ளே நுழைந்து குளியலறைக் கதவைத் திறந்து பார்த்தான். அது குளியல் அறை இல்லை, இன்னொரு அறைக்குச் செல்வதற்கான வழி. அதன் முடிவிலிருந்த வாசல் திரையால் மூடப்பட்டிருந்தது. அதை நோக்கி நடந்தான். திரையை விளக்கிப் பார்த்தான். விஸ்தீரணமான அறையாக அது இருந்தது. அதன் ஒரு ஓரத்திலிருந்த கட்டிலில் அவளுடைய கணவன் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு பக்கத்தில் அவள் உட்கார்ந்தாள்.

குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்த அந்த அறையில் ஒரு குளிர்பதனப் பெட்டியும் இருந்தது. கட்டிலுக்கு அருகே ஒரு சோபாவும், அதற்கு எதிரே ஒரு டீப்பாயும், அதன் மேல் அவள் கொண்டு வந்த பிளாஸ்க்கும் வைக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு அது ஒரு வீட்டின் வரவேற்பறைப் போலவே இருந்தது.  அந்தப் பகட்டுத் தோற்றம் அவன் பொறாமையைத் தூண்டி கோபத்தையும் அதிகப்படுத்தியது. அவன் உள் நுழைந்ததும் இருவரும் அவனைப் பார்த்து ஒரு சிரிப்பை உதிர்த்தனர்.

அவள் கணவன் சொன்னான், “உட்காரு தம்பி. கவிதா இப்பத்தான் சொன்னா நீ இங்க பெட்ல சேர்ந்திருக்கேன்னு. உடம்புக்கு என்ன?”

இன்னும் அவர்கள் ஏன் அவனைத் துரத்துகிறார்கள்? அவனை முட்டாளாக்கிப் பார்ப்பதில் அவர்களுக்கு என்ன அப்படி ஒரு ஆனந்தம்? ஒருவேளை கணவனையும் நம்ப வைத்து, அவனையும் முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறாளா அவள்? இனியும் அவளுடைய சாதுர்யம் பலிக்கப் போவதில்லை.

அவர்களுக்கு முன் நிற்பது தன்னை குற்றவாளி போல உணரச் செய்துவிடும் என்பதால் அந்த சோபாவில் அவன் உட்கார்ந்தான்.

அவன் தன் மனைவியைப் பார்த்து சொன்னான், “தம்பிக்கு காப்பி ஊத்திக் கொடு.”

“வேண்டாம்” அவன் எரிச்சலுடன் சொன்னான், “உங்கக் காப்பி எதுவும் எனக்குத் தேவையில்லை. வீட்டுக்கு வரும்போதெல்லாம் இப்படி காப்பிப் போட்டுக் கொடுத்துத்தான் இவ என்னை மயக்கினா.”

“இவ உன்னை மயக்கினாளா?” அவன் வியப்புடன் கேட்டான்.

“ஆமாம். நீங்க வாங்கின கடன கேக்கறதுக்காக வீட்டுக்கு வரும் போதெல்லாம். இந்த மாதிரி காப்பிப் போட்டுக்கொடுத்து, சிரிச்சி சிரிச்சி பேசுவா. உங்களுக்கு இவளப் பத்தித் தெரியலன்னு நெனைக்கிறேன். என்னை ஏமாத்தின மாதிரி உங்களையும் இவ ஏமாத்திகிட்டிருக்கா.”

“ஏமாத்திகிட்டிருக்காளா?” அந்த வியப்பு இன்னும் அவனிடம் மாறவில்லை. அது சந்தேகமாகவோ, கோபமாகவோ மாறாததற்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவளுடைய நடிப்புதான் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆமாம் தன் சிரிப்பால் அவள் இதையெல்லாம் ஒரு விளையாட்டு போல மாற்றிக் கொண்டிருந்தாள்.

அவள் நிகழ்த்தும் இந்த சதுரங்க ஆட்டத்தில், அவன் தன் நகர்வை திறம்பட செய்ய வேண்டும். அவள் கணவனை அவளுக்கு எதிராக திருப்பிவிட வேண்டும்.

அவன் சொன்னான், “இவளாலதான் நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன். அது தப்புன்னு தோனாதபடி இவ செய்ஞ்சிட்டா. நினைச்சா இப்ப கூட வருத்தமா இருக்கு.”

அவள் கணவன் சங்கடத்துடன் சிரித்தான்.

“என்ன சொல்லிகிட்டிருக்கத் தம்பி? அதெல்லாம் ஒன்னும் இருக்காது. உனக்கு உடம்பு சரியில்லை. மனசும் சரியில்லேன்னு நெனைக்கிறேன்.”

அவன் சற்றே கோபத்துடன் சொன்னான், “எனக்கு உடம்பு சரியில்லைதான். ஆனா நான் சொல்றது நிஜம். இவள இன்னும் நீங்க நம்பறீங்களே அதுதான் ஆச்சர்யமா இருக்கு. உங்களுக்கு இன்னும் அவனப் பத்தித் தெரியலன்னு நெனைக்கிறேன். என்கிட்ட இருந்து அவன மறச்ச மாதிரி, உங்ககிட்ட இருந்தும் இவ மறச்சிருப்பா.”

அவன் வியப்புடன் கேட்டான், “யாரை?”

“ஆமாம் உங்களுக்குத் தெரியல. தெரிஞ்சிருந்தா இவள நீங்க கொன்னுகூடப் போட்டிருப்பீங்க.”

“யாரை சொல்ற தம்பி?”

“இவளோட இன்னொரு காதலன். இளம் காதலன். அவன நீங்கப் பாத்திருக்க முடியாது. நான் கூட பாக்கல. இந்த திருட்டு ராஸ்கெல் எங்கியோ அவன மறச்சி வச்சிருக்கா.”

ஏதோ ஒரு நகைச்சுவையைக் கேட்டது போல கவிதா கொஞ்சம் உரக்கவே சிரித்தாள். பின்னர் பிளாஸ்கிலிருந்த காப்பியை இரண்டு சில்வர் டம்ளர்களில் ஊற்றி ஒன்றை அவனிடம் நகர்த்தினாள்.

சிரித்துக்கொண்டே சொன்னாள், “முதல்ல காப்பி குடிங்க. அதான் என்னப் பத்தி நல்லாத் தெரிஞ்சிடுச்சி இல்ல. இனிமே நீங்க மயங்கத் தேவையில்லை.”

அவளுடைய கேலி அவனை ஒரு அசட்டுத்தனமான ஆள் போல் காட்டியதை அவனால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்?

“சிரிக்கிறத மொதல்ல நிறுத்து” என்று ஆத்திரத்துடன் சொன்னவன், அவள் கணவன் பக்கம் திரும்பி,  “இந்தச் சிரிப்பப் பாத்து இவள நீங்க நம்பிடாதீங்க. அவன இங்கக்கூட எங்கேயோதான் ஒளிச்சி வச்சிருக்கா” என்றான்.

“இங்கியா?” அவன் வியப்புடன் கேட்டான்.

அவன் சுற்றிலும் பார்த்துக்கொண்டே சொன்னான், “இங்கதான்.”

அவன் வந்த வழியில்லாமல், எதிர் திசையில் இன்னொரு கதவு இருந்தது தெரிந்தது. “அதுக்குள்ளதான் அவன் இருக்கனும்.” அந்த கதவை அவன் சுட்டிக்காட்டினான்.

அவள் கணவன் சொன்னான், “அது பாத் ரூம் தம்பி.”

“அப்படித்தான் தெரியும், ஆனா அது இல்ல. இப்ப நான் வந்தேனே அது கூட அப்படித்தான் மொதல்ல தெரிஞ்சது. ”

அவன் எழுந்து கொண்டான். அவளுடைய சுய ரூபத்தை வெளிப்படுத்தும் தருணம் வந்துவிட்டதாகவே அவன் கருதினான். இனி அவள் அந்த பொய்யை சொல்லிக்கொண்டிருக்க முடியாது.

வேகமாகச் சென்று அந்தக் கதவைத் திறந்தான். அவன் சந்தேகப்பட்டது போலவே அது குளியல் அறை இல்லை. அதுவும் வழிதான். அதன் இறுதியில் ஒரு திரை தொங்கியது. வேகமாக அதை நோக்கி நடந்தான். திரையை விலக்கிப் பார்த்தான், அது வராண்டாவில் முடிந்தது. அதிர்ச்சியுடனும், அவமானத்துடனும் அங்கு நின்றான். அவள் இன்னொரு முறையும் வென்றுவிட்டதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

“எங்க போனே? என்ன ஆச்சி உனக்கு?” என கேட்டுக்கொண்டே நீலா அவனை நோக்கி வந்தாள். எதுவும் சொல்லாமல் பித்துப்பிடித்தவன் போல அவன் நின்றிருந்தது அவளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும்.

“பயந்தே போயிட்டேன். ரூமுக்கு போலாம் வா.”

கையைப் பிடித்து அவனைக் கூட்டிச் சென்றாள். எதுவும் பேசாமல் அவன் நடந்தான். கொஞ்சம் நேரத்துக்கு முன் நடந்தவற்றை அவளுக்கு எப்படி சொல்வான்? அவனுடைய இது போன்ற நடத்தையை, அவனை பீடித்துள்ள நோய்க்கூற்றின் ஒரு பகுதியெனவே அவள் எண்ணியிருக்க வேண்டும்.

அவன் மனம் அதிகமே கலக்கமடைந்திருந்தது. இந்த இரண்டு நாட்களாக நடந்துகொண்டிருப்பதை அறிவிப்பூர்வமாக அவனால் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை.  நீலாவின் வருகைதான் இதையெல்லாம் கொண்டு வந்ததா? பதினைந்து ஆண்டுகளில் அவள் இருப்பு இப்படித்தான் புதிரான உலகமாக மாறிப் போய்விட்டதா? அதற்குள்தான் அவனை அழைத்து வந்து காட்டிக்கொண்டிருக்கிறாளா? பித்து நிலைக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறாளா? நீலா, சாந்தியின் குடும்பம், கவிதா, அவள் கணவன் இவர்களெல்லாமே அந்த உலகத்தின் சஞ்சாரிகள்தானா? எதற்கு இப்படியான நிகழ்வுகள்? ஒருவேளை இதெல்லாம் அவன் மீதான இறுதி விசாரணையா?

அவன் மனக் கலக்கத்தை புரிந்து கொண்டவள் போல நீலா சொன்னாள், “டிபன் சாப்பிட்டு படு. தூங்கியெழுந்தா எல்லாம் சரியாயிடும்.”

என்ன சரியாய்யிடும்? எதைச் சொல்கிறாள் இவள்?

சாப்பிடும் போது அவள் சொன்னாள், “எனக்குத் தெரிஞ்ச பொண்ணு ஒருத்திய கேன்டீனுக்குப் போற வழியிலப் பாத்தேன். அவ புருஷனுக்கு ஒடம்பு சரியில்லையாம். இங்கதான் கொண்டு வந்து சேர்த்திருக்காளாம்.”

அவன் வியப்புடன் கேட்டான், “யாரு?”

“உனக்குத் தெரியாது. எங்கப் பக்கத்து ஊரு அவ.”

எட்டு மணி வாக்கில் வேறொரு மருத்துவர் வந்து அவனைப் பரிசோதித்துவிட்டுச் சென்றார். வழக்கமானக் கேள்விகள், வழக்கமானப் பதில்கள். அவன் படுத்துக்கொண்டான். நீலாவிடம் எதுவும் அவன் பேசவில்லை. அவளுடைய எதிர்பார்ப்புகளை, புதிய நம்பிக்கைகளை அவன் தகர்த்துக் கொண்டிருக்கிறானோ எனத் தோன்றியது. ஆனால் எதுவும் விரயமாகிவிடவில்லை. இன்னும் சில நாட்கள் அவனோடு அவள் இருக்கப் போகிறாள். அவளுக்கு நிறைவான தருணங்கள் அதில் நிகழலாம்.

ஒன்பது மணி வாக்கில், இரவுப் பணியில் இருந்த நர்ஸ் வந்து ரத்த அழுத்தத்தை பரிசோதித்துவிட்டுச் சென்றாள். அவள் போனதும் கதவைச் சாத்திவிட்டு வந்தாள் நீலா.

“லைட்ட நிறுத்தட்டுமா?” எனக் கேட்டாள்.

“நைட் லேம்ப் இருக்கு பாரு அதப் போட்டுட்டு மத்ததை நிறுத்திடு” என்றான் அவன்.

அவன் சொன்னது போலவே செய்தாள். அறையில் போதிய வெளிச்சம் இருந்தது. அவளும் படுத்துக்கொண்டாள்.

போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு கண்களை மூடினான் அவன். மாலையில் நடந்த சம்பவங்களால் ஏற்பட்ட மனத் தோய்வு இல்லையென்றால் இந்த இரவு அவர்களுக்கு வேறு விதமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தனிமை அவர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டது போல இருந்தது. பக்கத்துப் படுக்கையில் இருந்தவர்கள் கிளம்பிப் போனதும் அதற்காகத்தானோ? அவளுக்கும் அந்த எதிர்பார்ப்பு கலைந்துப் போனதில் வருத்தம் இருந்திருக்கும். அது அவள் முகத்தில் தெரிந்தது. அது மருத்துவமனை என்பதும், அதன் நடைமுறைகள் இன்னும் பரிச்சயமாகியிருக்கவில்லை என்பதும் கூட காரணமாக இருக்கலாம். ஆனால் அவன் மனம் கேட்பதாக இல்லை. கட்டிலிலிருந்து இறங்கி அவள் படுத்திருந்த கட்டிலுக்கு அருகே அந்த பிளாஸ்டி நாற்காலியை எடுத்துப் போட்டு உட்கார்ந்தான்.

கண் திறந்து அவனைப் பார்த்து சிரித்தாள் அவள். அவளுடைய கையை எடுத்து அதில் முத்தம் ஒன்றைப் பதித்தான். அவள் எழுந்து அவனை நெருங்கி வந்து உட்கார்ந்தாள். முன்னால் சாய்ந்து அவள் மடியில் தலைப் புதைத்துக் கொண்டான்.  அது அவனுக்கு இதமாகவும் ஆறுதலாகவும் இருந்தது. அவள் அவன் தலையைக் கோதிக் கொடுத்தாள். அதே நிலையில் சிறிது நேரம் இருந்தவன் நிமிர்ந்து அவளை அணைத்து, இதழ்களைக் கவ்விக்கொண்டான். பதற்றமில்லாமல், அவசரமில்லாமல் அது நடந்தேறியது. பின்னர் அவளை எழுப்பி நின்ற வாக்கில் தழுவிக்கொண்டான். முழுமைகூடிய அந்த தழுவல் அவர்களை ஆவேசப்படுத்தி, நிர்வாணமாக்கி படுக்கையில் கிடத்தியது. அவளுடைய உடலின் ஆகர்சனத்துக்கு, மேலிருந்து இயங்கிய அவன் உடலின் விசை போதாமல் அவனை கீழிறுத்தி மேல் வந்தாள் அவள். அவளுடைய பித்தம் தசைகளைக் கடந்து அவனுக்குள்ளும் இறங்கியது. இதுவரை உணர்ந்திடாத ஒரு பேரிசை அவர்கள் இருவரின் உடலிலும் ஊடுறுவி அவற்றை மாய வெளியில் கறைக்க முயன்றது. இசை முடிந்த போது அவள் சோர்ந்து அவன் மேல் கவிழ்ந்தாள். அதே நிலையில் நீண்ட நேரம் அவள் அவன் மேல் படுத்திருந்தாள். இந்தப் பிணைப்பை தன் உடல் மீண்டும் இழந்துவிடக்கூடாது என அவள் நினைத்திருக்கலாம். குளியல் அறைக்குச் சென்று வந்த பின்னர் இன்னும் ஒரு முறை அந்த உடல்கள் கூடி முயங்கின. அவன்தான் அதிகம் சோர்ந்து போனான்.

நள்ளிரவுக்குப் பின் அவன் வந்து தன் படுக்கையில் படுத்துக்கொண்டான். அவள் உடலின் துடிப்பு ஏற்படுத்திய அதிர்வுகளை அவனுடல் இன்னும் இழக்காமல் அதன் கடைசி தேய்வை கண்டுகொண்டிருந்தது.

தூங்குவதற்கான பிரக்ஞை நிலையை அவன் கண்டபோது, அவள் தேகத்தை மீண்டும் அவன் உடல் உணர்ந்தது. அவள் எழுந்துவந்து அவனருகே படுத்துக் கொண்டாள். அவனை இறுக அணைத்தபடி ஒரு குழந்தை போல அவள் சொன்னாள், “பொழுது விடியற வரைக்கும் இப்படியே தூங்கப் போறேன்.”

அவனுக்கு முன்பே அவள் துங்கிப் போனாள்.

அவன் கண்விழித்த போது வெளிச்சம் பரவியிருந்தது. அவன் அருகிலோ, அறையிலோ அவள் இல்லை.  குளியல் அறையில் தண்ணீர் விழும் சப்தம் கேட்டது.

சிறிது நேரத்தில் கதவைத் திறந்துகொண்டு அவன் மனைவி வெளிப்பட்டாள். அதிர்ச்சியில் சித்தம் கலங்குவது போல இருந்தது அவனுக்கு.

அவள் சிரித்தாள்.

“நீ எப்ப வந்த?”

“இப்பத்தான். கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி.”

துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டே கட்டிலுக்கு அருகில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் வந்து உட்கார்ந்தாள்.

அவன் தன் பதற்றத்தை மறைத்தபடி கேட்டான், “நான் இங்க இருக்கிறத யாரு சொன்னாங்க?”

“எனக்கு ஆளா இல்ல.”

அவள் சிரித்தாள். அவன் அதிகக் குழப்பத்துக்கு ஆளானான்.

“யாருன்னு சொல்லு.”

“நீலாவதி அக்காதான் போன் பண்ணி சொன்னாங்க.”

“நீலாவா?”

“ஆமாம். நீங்க பஸ்டேன்ட்ல விழுந்துட்டதாவும், அதனால உங்கள கொண்டுவந்து இங்க சேர்த்திருக்கிறதாவும் அவுங்கதான் சொன்னாங்க.”

“எப்பப் பேசினாங்க?”

“நேத்து சாய்ந்திரம் ஆறு மணிக்கு மேல இருக்கும். நான் பயந்து போயிட்டேன். விடிகாலமே கிளம்பி பஸ்ஸ புடிச்சி வந்துட்டேன்” என்றாள் அவள்.

000

 

%d bloggers like this: