நீண்ட தொலைவுக்குப் பரந்து கிடக்கும் காடு அது. அதன் மத்தியில் ஆங்காங்கே சில குன்றுகள் தென்படுகின்றன. காட்டின் தெற்கு பகுதியில் ஒரு நதி அதைக் கடந்து செல்கிறது. அதன் குறுக்கே ஒரு அணையும் உண்டு. காட்டின் வடக்கு எல்லையையொட்டி மண் சாலையும், வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகாமல் இருப்பதற்காக மின் வேலியும் அமைக்கப்பட்டிருந்தன. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து வரும் மண் சாலை குப்பக் கவுண்டர் நிலத்தருகேதான் இடப்புறமாகத் திரும்பி காட்டின் ஓரமாகக் கிழக்கே செல்கிறது. எல்லையோரம் காடு அடர்த்தியில்லாமல் சிறிய மரங்களும், செடிகளும், சீங்கைப்புதரும்தான் மண்டிக்கிடந்தன. சில நாள்களாக அப்பகுதியில் சுற்றி வந்த பாம்பு ஒன்று காட்டை விட்டு வெளியேறி, குப்பக் கவுண்டர் தோட்டத்துக்குச் செல்ல சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தது.
அன்று காலையிலேயே வேலியை ஒட்டியப் பகுதிக்கு வந்து சேர்ந்தது பாம்பு. தான் கடக்க வேண்டிய மண்பாதையை நோட்டம் பார்த்தது. அப்பாதையில் அவ்வப்போது ஆட்களின் நடமாட்டம் இருக்கும். சிலர் ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு செல்வார்கள், மிதி வண்டிகளும், இருசக்கர வாகனங்களும் போய் வந்து கொண்டிருக்கும். சில பொழுது டிரேக்டர்களும் பெரும் சத்தத்துடன் அப்பகுதியைக் கடந்து போகும்.
மின் வேலியை கடந்து, பள்ளத்தில் இறங்கி மேலே ஏறிய போதுதான் ஏதோ சத்தம் கேட்டு பாம்பு தயங்கி நின்றது. ஆனால் எதுவும் தென்படாததால் பாதையைக் கடக்கத் தொடங்கியது. மையப் பகுதிக்கு வந்த போது ஒரு இருசக்கர வாகனம் வருவது தெரிந்ததும் தனது வேகத்தைக் கூட்டி சாலையைக் கடந்து செடிகளுக்குள் மறைந்துவிட்டது.
000
குப்பக் கவுண்டர் வீட்டுக் களத்துக்குள் ரகுமான் பாயின் இருசக்கர வாகனம் நுழைந்த போது அங்கே மேய்ந்துகொண்டிருந்த கோழிகள் சிதறி ஓடின. அவர் தனது வண்டியைத் தெற்குப் பக்கமாக இருந்த காண்கிரிட் வீட்டின் சுவர் ஓரமாக நிறுத்திவிட்டு சுற்றும்முற்றும் பார்த்தார். களத்தின் கிழக்கே புங்க மர நிழலில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த குப்பக் கவுண்டர் வண்டிச் சத்தம் கேட்டதும் தலையைத் தூக்கிப் பார்த்தார். மெல்லமாக எழுந்து உட்கார்ந்தார். கட்டிலுக்குப் பக்கத்தில் படுத்திருந்த டைகர் என அழைக்கப்படும் அந்த கிழட்டு நாய், பழக்க தோஷத்தில் ஒரு குரைப்புடன் திடுக்கிட்டு எழுந்து முன்னோக்கி போய் அப்படியே நின்றுவிட்டது. பிறகு திரும்பி வந்து வேறு இடம் பார்த்துப் படுத்துக்கொண்டது. கட்டிலுக்கு அடியில் படுத்திருந்த பூனை தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டது.
களத்துக்கு வடக்கே இருந்த பழைய ஓட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த கவுண்டரின் மருமகள் காளியம்மாள் “வாங்க பாய்” என்று வரவேற்றாள்.
“வரம்மா, நல்லா இருக்கீங்களா”
“இருக்கம் பாய்”
“ராஜா இருக்காப்பிடியா?”
“இருக்காங்க பாய். இன்னிக்கி கால கரண்ட். தோட்டத்தில தண்ணி கட்டிகிட்டு இருக்காங்க”
ரகுமான் பாய் பம்பு செட்டு இருக்கும் பக்கம் பார்த்தார். அங்கே ராஜா இருப்பது தெரிந்தது. பாய் குப்பக் கவுண்டரை நோக்கிச் சென்றார். அவருக்கு காது சற்று மந்தம் என்பதை ஞாபகம் கொண்டவராக மிக அருகில் சென்று,
“உடம்பு பரவாயில்லையா?” என்று கேட்டார்.
அவர் நடுங்கிய குரலில் சொன்னார், “ஒடம்புக்கு என்ன நல்லாதான் இருக்கு”
“ஆஸ்பத்திரிக்கு ஏதாவது போயி வர்றதானே”
“ஊசி போட்டா மட்டும் என்ன… இன்னும் கொஞ்சம் நாள்தான்… எல்லாம் முடிஞ்சிடும்…”
காளியம்மாள் ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். அவள் மகன் சங்கர் பின்னாலேயே ஒரு பிளாஸ்டி நாற்காலியை கொண்டு வந்து நிழலில் போட்டான். தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தார் பாய். சங்கரைப் பார்த்துச் சொன்னார்,
“ஏம்பா கவுண்டர ஏதாவது ஆஸ்பத்திரிக்குக் கூட்டிகிட்டு போறது”
“நாங்க கூப்பிட்டுக்கிட்டுத்தான் இருக்கோம். அவர் வந்தாதானே”
“சங்கர்தானே உன் பேரு? நீ காலேஜிக்குப் போறதில்ல?”
காளியம்மாள் சொன்னாள், “அவன் பத்தாவதோட நின்னுட்டான். பாப்பாதான் காலேஜிக்குப் போறா”
“ஓ அப்படியா? சரி சரி… நீ போய் தண்ணிக் கட்டிக்கிட்டு அப்பாவ அனுப்பு” என்றார் பாய்.
அவன் போனான்.
“பாப்பா எங்க காணோம்” என்று காளியம்மாவிடம் கேட்டார் பாய்.
“உள்ளதான் பாய் இருக்கா, ஏதோ எழுதிகிட்டு இருக்கா”
“இன்னும் எத்தனை வருஷம் படிக்கனும்?”
“இரண்டாவது வருஷம் முடியப்போவுது. இன்னும் ஒரு வருஷம் இருக்கு”
“முடிச்சதும் கல்யாணம் பண்ணிடுங்க”
“அவளுக்கு இப்ப எங்க பாய். தென்னந்தோப்பு குத்தகைப் பணம் வந்ததும், இந்த வருஷமே பையனுக்கு முடிச்சிடனும்னு சொல்லிகிட்டு இருக்காங்க. பொண்ணு பாத்துகிட்டு இருக்கோம். எதுவும் அமையல.”
“உங்க ஜாதியிலயா பொண்ணுக்குப் பஞ்சம்?”
“பொண்ணுங்க இருக்கு, குடுத்தாத்தானே. எல்லாம் படிச்சி வேலைக்குப் போற மாப்பிளையா பாக்கிறாங்க.”
“கம்பத்தம் பாக்கிறதுக்குத் தோதா இருக்கிற ஏதாவது பொண்ணா பாருங்க. பாத்து சீக்கிரம் முடிச்சிடுங்க.”
ராஜா வந்து சேர்ந்தான்.
“வாங்க பாய். இந்தப் பக்கமே எட்டிப் பார்க்க மாட்டேன்றிங்க. காய் தள்றதுக்கு பசங்கல அனுப்பிட்றிங்க”
“முன்ன மாதிரி எங்க அலைய முடியுது. ஏதாவது அவசியம்ன்னா போறதோட சரி. எல்லாம் பசங்க பாத்துக்கிறாங்க” என்றவர், “ஆடு, மாடு, கோழிங்களோட நெலத்தில பாம்பையும் வளக்கிறிங்க போல இருக்கு” என்று சொல்லிச் சிரித்தார் பாய்.
“பாம்பா! எங்க பாய்?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் காளியம்மா.
“வழியிலதான் பார்த்தேன்” என்றவர் லுங்கியை சற்று விலக்கி தன் கெண்டைக் காலை தட்டிக் காட்டிச் சொன்னார், “இவ்வளவு பெரிசு இருக்கும், அஞ்சாறு அடி நீளமிருக்கும். கருகருன்னு இருந்திச்சி. அனேகமா அது கருநாகமாத்தான் இருக்கனும். ரோட்டத் தாண்டி இந்த பக்கம் வந்துகிட்டு இருந்திச்சி.”
“ஏங்க போய் பாத்துட்டு வர்றிங்களா” என்று அச்சத்துடன் சொன்னாள் காளியம்மாள்.
“அது கெடக்கட்டும் உட்றி. அதுக்கெல்லாம் பயந்தா இந்த காட்ல குடியிருக்க முடியாது” என்றவன், “நீ போய் காப்பி ஏதாவது போட்டுகிட்டுவா” என்றான்.
அவள் அங்கிருந்து தயக்கத்துடன் போனாள்.
“சொல்லுங்க பாய். ஆடிப் பொறந்துடுச்சி. உங்களத்தான் எதிர்பார்த்துகிட்டு இருந்தோம்” என்றான் ராஜா.
“நானும் வரனும்முன்னுதான் இருந்தேன். மார்க்கெட் நெலவரம் சரியில்ல. காசையும் பொறட்ட முடியல. இருந்தாலும் நாளாவுதில்ல அதான் பேசிடலாம்ன்னு வந்தேன்.”
சங்கர் தண்ணீர் பாய்ச்சுவதை விட்டுவிட்டு வந்தான். கரண்ட் நின்றுவிட்டதாம்.
குத்தகை பேரம் நடந்தது. சுமார் ஒரு மணி நேரம், ஏதேதோ கதைகள் சொல்லி தென்னந்தோப்பு குத்தகையைப் பேசி முடித்தார் பாய். மூன்று வருஷத்துக்கு ஒரு லட்சத்து பத்தாயிரத்துக்கு ஒப்புக்கொண்டான் ராஜா. அவன் எதிர்ப்பார்த்ததைவிட அது குறைவானத் தொகை. கடந்த முறையைவிட பத்தாயிரம்தான் கூடுதல். அதற்கே அவரிடம் கெஞ்ச வேண்டியிருந்தது.
தன் பனியனுக்குள் கைவிட்டு ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றை எடுத்தவர் எழுந்து நின்று ராஜாவிடம் நீட்டினார்.
“இதுல அம்பது இருக்கு. மீதி அறுபத இன்னிக்கி எட்டான்த்து நானே கொண்டாந்து குடுத்துட்டுப் போறேன்.”
“அய்யாகிட்ட குடுங்க பாய்”
அவர் வேண்டாம் என்பது போலத் தலையாட்டினார். அவன் பக்கமே கையை காட்டினார்.
“யார் வாங்கினா என்ன, நீ வாங்கிக்கம்மா” என்று காளியம்மாவிடம் நீட்டினார் பாய். அவள் தன் கணவனைப் பார்த்தாள். அவன், “வாங்கிக்க” என்றான். அவள் வாங்கிக் கையில் வைத்துக்கொண்டாள்.
சங்கரைப் பார்த்துச் சொன்னார், “தம்பி உள்ள போயி ஒரு பேப்பரு எடுத்துகிட்டு வா. எவ்வளவு அமௌண்ட், எந்த தேதியில இருந்து எந்த தேதி வரைன்னு குறிச்சிக்குடுத்துட்டுப் போறேன்.”
அவன் உள்ளே போய் சிறிது நேரம் கழித்து ஒரு பேப்பரும், வைத்து எழுத ஒரு நோட்டையும் கொண்டு வந்தான். அவர் அதை வாங்கி தன் ஜோபியிலிருந்த மைபேனாவை எடுத்து சுருக்கமாக விவரங்களை எழுதி ராஜாவிடம் கொடுத்துவிட்டு விடைபெற்றுச் சென்றார்.
000
நன்றாக வெயில் ஏறியிருந்தது. புங்கமரத்தின் அடர் நிழலின் குளுமையில் படுத்திருந்த குப்பக் கவுண்டர் ஏதோ உரத்தப் பேச்சுச் சத்தம் கேட்டு எழுந்து உட்கார்ந்தார். வீட்டுக்குள்ளிருந்துதான் சத்தம் வந்தது. அண்ணன் தங்கையும் ஏதோ சண்டையில் இறங்கியிருந்தார்கள். அவர் சுற்றுமுற்றும் பார்த்தார். வரப்பில் காளியம்மாள் வருவது தெரிந்தது. பக்கத்தில் இருந்த கைத்தடியை எடுத்து நீட்டி அதை அசைத்தார். அவள் அதை கவனித்துவிட்டு சற்று நடையைத் துரிதப்படுத்தி களத்துக்கு வந்தாள்.
அவர் உள்ளே காண்பித்துச் சொன்னார், “ரெண்டு பேரும் ஏதோ மாயறாங்க பாரு.”
அவர் சொல்வது தெளிவாகக் கேட்கவில்லை என்றாலும் புரிந்துகொண்டு வீட்டுக்குள் போனாள். வரவேற்பறையில் டிவிக்குப் பக்கத்தில் சுவரில் சாய்ந்து தலையை கவிழ்ந்தபடி கவிதா உட்கார்ந்திருந்தாள். சங்கர் அவளுக்கு எதிரே நின்று முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“உனக்கு வேற வேலை இல்லையா, அவள ஏண்டா சீண்டிகிட்டிருக்கிற”
அவன் எதுவும் பேசவில்லை. அவளும் எதுவும் சொல்லவில்லை.
“உங்க ரெண்டு பேருக்கும் என்னடா ஆச்சி. சொல்லி தொலைங்களண்டா.”
அவன் தன் சட்டை ஜோபியிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து அவளுக்கு முன் கீழே எறிந்துவிட்டுச் சொன்னான், “கேக்கறாங்க இல்ல சொல்லேன் உன் பவிசிய”
அவள் அதே நிலையில் அமர்ந்திருந்தாள்.
“ஏன் என்னடா அது பேப்பரு” என்று குழப்பத்துடன் கேட்டாள் காளியம்மாள்.
“உன் பொண்ணு எவனுக்கோ லவ் லெட்டர் எழுதியிருக்கா. யாருன்னு கேட்டா ஊமக் கோட்டான் மாதிரி உட்கார்ந்திருக்கா”
காளியம்மா அதிர்ச்சியில் நிலை குலைந்து போனாள். தன் மகளின் எதிரே உட்கார்ந்து கேட்டாள், “என்னடி இது வேலை. இப்படி தலையில கல்லக் கொண்டாந்து போட்டிருகேயடி.. யார்றி அவன்…”
அவன் அவளுக்கு அருகே வந்து எட்டி உதைத்துச் சொன்னான், “கேக்கறாங்க இல்ல, சொல்லு”
அவள் தலையை நிமிர்த்தி சீறினாள், “இந்த மாதிரி ஒதைக்கிற வேலையெல்லாம் என்கிட்ட வச்சிக்காத”
அவன் திரும்பவும் வந்து உதைத்தபடி சொன்னான், “என்ன மயிருக்கு உனக்குக் கோபம் வருது. காலேஜிக்கு அனுப்பிச்சா நீ லவ் பண்ணிகிட்டு திரியிறயா?”
“அவள ஒதைக்காதடா, நான் பேசிக்கிறேன். நீ கொஞ்சம் வெளிய போடா” என அவனை முறைத்தாள் காளியம்மாள்.
“பாயி பேப்பர் கேட்டாருன்னு போயி தேடுனா இது கெடச்சது. இல்லென்னா இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த கூத்து நடந்திருக்குமோத் தெரியல” என்றபடி அவன் கோபத்துடன் வெளியே போனான்.
அவன் போனதும் அழுது கொண்டிருந்த தன் மகளின் முகத்தைத் தூக்கிக் கேட்டாள், “சொல்றி யாரு அது. ஏண்டி உனக்கு புத்தி இப்படி போயிடுச்சி?”
அவள் திரும்பவும் தலையை மடியில் புதைத்துக்கொண்டாள். ஆனால் காளியம்மா மீண்டும் அவள் முகத்தைத் நிமிர்த்திக் கேட்டாள், “சொல்றி யாரு அவன்?”
அவள் சொன்னாள். “திருவண்ணாமலை”
“கூடப் படிக்கிறவனா?”
“இல்ல, படிச்சிட்டு வேலத் தேடிகிட்டிருக்கான்”
“என்ன ஜாதி”
இதுவரை தைரியமாக பதில் சொன்ன அவள் மௌனமானாள். இது காளியம்மாவை கலவரப்படுத்தியது.
“சொல்றி, என்ன ஜாதி அவன்?” எனக் கேட்டபடி அவளுடைய இரண்டு கன்னத்திலும் மாறி மாறி அறைந்தாள். இதனால் நிலை குலைந்த அவள் கீழே சுருண்டு படுத்துவிட்டாள்.
அவள் கேசத்தைப் பற்றித் தூக்கிய காளியம்மா, “சொல்லப் போறயா இல்லையா?” என ஆத்திரத்துடன் கேட்டு மீண்டும் அறைந்தாள். “சொல்லுடி யாரு அவன், வேற ஜாதிப் பையனா?”
அவள் சொன்னாள், “ஆமாம். காலனிப் பையன்.”
000
‘என்ன சண்ட’ என கிழவன் கேட்டும் சொல்லாமல், ரகுமான் பாயிக்காகக் கொண்டு வந்து போட்டிருந்த நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்திருந்தான் பேரன். ஓட்டு வீட்டு வாசலில் இருந்து வெளிப்பட்ட பூனை மெல்லக் கத்திக் கொண்டே வந்து கட்டிலின் மேலே தாவி ஏறி கிழவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டது. ஏதோ முறையிடுவது போலத் தொடர்ந்து அது கத்திக் கொண்டிருந்தது.
வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த காளியம்மாள் வேகமாக அவர்கள் இருவருக்கும் எதிரே வந்து மண்டுயிட்டு உட்கார்ந்தாள்.
“இப்படி ஒரு தீங்க கொண்டு வந்திருக்காளேடா, நான் என்ன பண்ணுவேன். போயும் போயும் ஒரு சேரி பையனா அவளுக்குக் கெடச்சான். நெனச்சாலே ஒடம்பெல்லாம் பத்திகிட்டு எரியுதே நான் என்ன பண்ணுவேன்” என தலையில் அடித்துக்கொண்டாள். உரத்துச் சொல்ல முடியாத ஒலமாக அது வெளிப்பட்டது.
தன் மகனைப் பார்த்துச் சொன்னாள், “எவ்வளவு தைரியம்டா அவளுக்கு. அவன் கூடத்தான் வாழ்வேன்னு சொல்றாடா. என்ன கேவலம் இது?”
ராஜா களத்தைக் கடந்து வேகமாக நடந்து வந்தவன் அவளுக்குப் பின்னால் வந்து நின்று கேட்டான், “ஏன் என்ன ஆச்சி, ஏன் சாவு வீடு மாதிரி ஒப்பாரி வைச்சிகிட்டிருக்கே?”
“பாவி மனுஷா, நீ ஒன்னு பெத்து வச்சிருக்கியே அவளுக்கு சேரிக்கார மாப்பிளதான் வேணுமாம். போய் கட்டி வையி… ஊரே பாராட்டும்” என ஆத்திரத்துடன் சொன்னாள்.
அவன் அதிர்ந்து நின்றுவிட்டான்.
எழுந்து நின்று அவனிடம் சொன்னாள், “இத பாரு இந்த அசிங்கம் வெளிய தெரியறதுக்குள்ள ஏழையோ பாழையோ எவனையாவது பாத்து புடிச்சிக் குடுத்து வீட்ட உட்டுத் தொரத்து. இல்லேன்னா வெஷம் வச்சி அவளக் கொன்னுடு.”
அவன் அதிர்ச்சியில் உறைந்தவனாக திண்ணையில் போய் உட்கார்ந்துவிட்டான். காளியம்மாள் தன் மகனைப் பார்த்துச் சொன்னாள், “உன் மாமனுக்கு போன் பண்ணிக் கூப்பிடு. அவன் வரட்டும். பன்னன்டாவது முடிச்சதுமே அவள எவனுக்காவது கட்டிக் கொடுத்துடலாம்ன்னு சொன்னேன். அவன்தான் தடுத்தான். காலேஜி படிக்கட்டும்ன்னு சொன்னான். இப்ப இப்படி ஒரு கல்லத் தூக்கிக் கொண்டு வந்து போட்டிருக்காளே நான் என்னப் பண்ணுவேன்… போடா போயி அவன வரச் சொல்லு…”
000
சாலையோர புதரிலிருந்து வெளியேறிய பாம்பு குப்பக் கவுண்டரின் சாமந்தித் தோட்டத்துக்குள் இறங்கியது. தோட்டத்தைத் தாண்டிவிட்டால் தென்னஞ்சாலையை அடைந்துவிடலாம். மறைந்து கொள்ள அங்கே ஏராளமான இடங்கள் இருக்கின்றன. தென்னை மட்டைகளும், ஓலைகளும், செடிகளும் அடந்த பகுதி அது. ஆட்களின் நடமாட்டமும் அதிகம் இருக்காது. அப்பகுதியை இலக்காகக் கொண்டு தோட்டத்தில் வேகமாக நகர்ந்தது பாம்பு.
000
காளியம்மாவின் தம்பி சந்திரனுக்கு ஊருக்குள் வீடு. அவன் அன்று வரவில்லை. முக்கியக் கட்சி வேலை இருப்பதாகவும், நாளை காலை வருவதாகவும் சொல்லிவிட்டான். அவன் வந்துப் பேசினால் அவள் கேட்பாள், பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என நம்பினாள் காளியம்மா. இது குறித்து யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. துக்க வீடு போல அது மாறி இருந்தது. அன்று இரவு கவிதா சாப்பிடவில்லை. சாப்பிடு என்று யாரும் சொல்லவில்லை. பார்வையிலும், உடல் அசைவுகளிலும் தன் பிடிவாத்த்தை வீடு முழுவதும் அவள் நிறைத்துக்கொண்டிருந்தாள். அது அவர்களை ஆத்திரமூட்டியது. அவள் அங்கிருந்து நழுவிவிடக்கூடாது என்பதில் அவர்கள் எச்சரிக்கையாக இருந்தார்கள். அவள் கொண்டு வந்து சேர்த்திருக்கும் தீங்கு எப்படிப்பட்டது என்பதையும், அது அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை யோசிப்பதற்கான அவகாசத்தை அந்த இரவு அவர்களுக்கு வழங்கியது. ஆனால் அது துன்புறுத்துவதாகவும், அச்சமூட்டும் ஒரு நாளை எதிர்கொள்ள அவர்களைத் தயார் படுத்துவதாகவும் இருந்தது.
இது வரை அமைதியாக இருந்த வீட்டில், தன் மரணத்துக்கு முன்பே ஏதோ விபரீதம் நிகழப் போகிறது என்பதை உள் உணர்ந்தார் குப்பக் கவுண்டர். இந்த பிரச்சினை அவர்களை எதில் கொண்டுபோய் சேர்க்குமோ என்ற அச்சம் அவர் மனதை வாட்டியது. அந்த மனநிலையிலேயே தூங்கப் போனார். வெயில் நிறைந்த ஒரு பகல் பொழுதை கனவில் கண்டார். பேத்தி கவிதா அவருடைய கையைப் பிடித்து காட்டு வழியே கூட்டிக்கொண்டு போகிறாள். “எங்கமா போறோம்?” “வா தாத்தா காட்றேன்.” எதிர் பட்ட ஒரு குன்றை நோக்கி அவர்கள் போகிறார்கள். சூரை, பூலா, காரச் செடிகள் எல்லாம் காய்த்துக் கிடக்கின்றன. ஓடி ஓடி அவற்றைப் பறித்துத் தின்றபடி அவரை அவள் கூட்டிச் செல்கிறாள். வழியிலும் புதரிலும் புகுந்து அவர்கள் போகிறார்கள். அவள் கொண்டு போய் நிறுத்திய இடம் ஒரு கிணறு. முன்பு அந்த இடத்தில் ஒரு குட்டைதானே இருந்தது? எப்படி இவ்வளவு பெரிய கிணறு? முக்கால் பாகத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி, ஒரு குளம் போல அது தோன்றியது. ஊரில் அய்யர் தோட்டத்தில் உள்ள ஆலமரக் கிணறுதான் இவ்வளவுப் பெரியதாக இருக்கும். படி இருப்பதால் அதில்தான் ஊரில் உள்ள சிறுசுகள் முதல் பெருசுகள் வரை குதித்து கும்மாளம் அடிப்பார்கள். அவரும் போய் குதித்து விட்டு வருவார்.
கிணற்றின் கரையில் அவர் வியப்புடன் நின்றிருந்தார். “இங்க எதுக்குமா கூட்டிகிட்டு வந்த?” “அண்ணன் எனக்கு நீச்சல் தெரியாதுன்னு சொன்னான் இல்ல இப்பப் பாரு.” அவள் தயங்காமல் கிணற்றுக்குள் குதித்தாள். நீருக்குள் ஆழச் சென்று மேலே வந்தவள், ஒரு தேர்ந்த நீச்சல்காரியைப் போல நீந்தத் தொடங்கினாள். அவர் ஆச்சிரயத்துடன் பார்த்துக் கொண்டிருக்க அவள் கரையைத் தொடாமல் கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்தாள். அந்த நீள் சதுர கிணற்றில் இடமும் வலமும் போய் வந்தாள். அப்போது ஒரு பாம்பும் கரை ஓரமாக நீந்திக் கொண்டிப்பது கிழவனின் பார்வையில் படுகிறது. அவர் அச்சத்துடன் கத்துகிறார், “கவிதா உன் பக்கத்தில பாம்புமா!” அவள் தலையைத் தூக்கி கிழவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே சொன்னாள், “அது தண்ணிப் பாம்பு தாத்தா, ஒன்னும் பண்ணாது.” அவருக்கு அப்படித் தோன்றவில்லை. அந்த உச்சிப் பொழுதில் நீரில் தெரிந்த சூரியனின் உக்கிரத் தோற்றத்தைச் சிதைத்தபடி அவள் நீந்திக்கொண்டிருந்தாள். பின்னர் சட்டென்று தெருக்கூத்தில் வரும் தேவ மாதைப் போல தோற்றம் பெற்றிருந்தாள், சுடிதாருக்குப் பதில் பட்டுச் சரிகைகள் மின்னும் சேலை உடுத்தியிருந்தாள். இடுப்பில் ஒட்டியானம், கையில் தங்க வளையல்கள், புஜங்களில் கற்கள் பதிக்கப்பட்ட நெலிவு, தலையில் பிரகாசமான நெத்திச் சுட்டி. அவள் கூப்பிட்டாள், “நீங்களும் குதிங்க தாத்தா… ஒன்னும் ஆகாது குதிங்க…” அவரும் குதித்தார். வெகு ஆழத்துக்குள் போனவர் கால்களை உதைத்து மேல் நோக்கி வரத் தொடங்கினார், வந்து கொண்ட இருந்தார் ஆனால் நீர் மட்டத்தை எட்ட முடியவில்லை… கால்களை வேகமாக உதைத்தார், கைகளை அலைந்தார்… மூச்சித் திணறத் தொடங்கியது… அந்த உணர்வுடனேயே அவருக்கு விழிப்புத் தட்டியது.
000
காலை பத்து மணி வாக்கில் சந்திரன் தனது பைக்கில் வந்து சேர்ந்தான். இங்கு வருவது வரை அவனுக்கு விஷயம் என்ன வென்று தெரியாது. அவன் வந்ததும் ஓட்டுவீட்டுத் திண்ணையில் உட்கார வைத்து காளியம்மாள் விஷயத்தைச் சொன்னாள். அவன் அதிர்ந்து போய் விட்டான். அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் கால்களுக்கு அருகே வந்து உட்கார்ந்து அவள் சொன்னாள், “சந்திரா, அவ மனச மாத்திக்களன்னா நாங்க யாரும் உசுரோடவே இருக்க மாட்டோம்.”
சந்திரன் சொன்னான், “நீ நெனக்கிற மாதிரியெல்லாம் எதுவும் நடக்காது. கவலப்படாதேக்கா. நான் கவிதாகிட்ட பேசறேன். அவ எங்க இருக்கா?”
“உள்ளதான் இருக்கா” என்று எதிர் வீட்டை காண்பித்தாள்.
அவன் எழுந்து களத்தைத் தாண்டி வீட்டுக்குள் போனான். அவள் படுக்கையறையில், சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள். அவள் முகம் பொலிவற்று காணப்பட்டது. அவன் வந்திருப்பது அவளுக்குத் தெரியும். அவன் வந்து தன்னிடம் என்னப் பேசப் போகிறான் என்பதை அறிந்தவளாகவும், தான் அதற்கு என்ன பதில் கூற வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டவளாகவும் அவள் இருந்தாள்.
அவளுக்கு எதிரே வந்து நின்றவன் சற்று நிதானமாகவே கேட்டான், “உனக்கு என்ன ஆச்சி? ஏன் இப்படியெல்லாம் பண்ற? நாம யாரு, நம்ம குடும்பம் என்னன்னு உனக்குத் தெரியாது? நீ என்னக் கொழந்தையா? இதெல்லாம் என்ன வெளையாட்டா?”
அவள் தன் முகத்தை அவன் பக்கம் திருப்பவே இல்லை.
“காதலிக்கிறது தப்புன்னு சொல்ற ஆளு நானு இல்ல. ஆனா அவன் யாரு, என்ன, நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருமான்னு பாக்க வேணாம்.”
அவள் எந்த அசைவையும் வெளிப்படத்தவில்லை.
“இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம்? உன்னால குடும்பமே கதிகலங்கி போயிருக்கு பாத்தியா இல்லையா?”
அவள் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்துவிட்டு மீண்டும் திருப்பிக்கொண்டு தெளிவாகச் சொன்னாள், “மொதல்ல அவன் அந்த ஜாதின்னு எனக்குத் தெரியாது மாமா. பழகனப் பெறகுதான் தெரியும்.”
“அப்புறம் போடான்னிட்டு வந்திட வேண்டியதுதானே?”
அவள் அமைதியாக இருந்தாள்.
“இதப் பாரு கவிதா. நீ நெனக்கிறதெல்லாம் எதுவும் நடக்காது. அதுக்கெல்லாம் வழியே இல்ல. வீணா உன் வாழ்க்கைய கெடுத்துக்காத.”
அவள் அவனை திரும்பிப் பார்க்கவில்லை. இது குறித்து பேசவும் விரும்பாதவள் போல காணப்பட்டாள்.
அவன் வெளியே வந்தான். ராஜாவும் சங்கரும் நிலத்திலிருந்து வந்துவிட்டிருந்தார்கள். எதிர் வீட்டின் வலது பக்கத் திண்ணையில் ராஜா உட்கார்ந்திருந்தான். சங்கர் கிழவனுடன் கட்டிலில் உட்கார்ந்திருந்தான். காளியம்மாள் கதவோரம் சந்திரனுக்காக காத்திருந்தாள். அவன் இடது பக்கத் திண்ணையில் போய் உட்கார்ந்தான். அவன் முகத்தைப் பார்த்தே அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துக் கொண்டாள் காளியம்மாள்.
அவள் கேட்டாள், “என்ன சொன்னா அந்தத் தேவிடியா? அந்த மாப்பிளதான் வேணுமாமா?”
அவன் எதுவும் சொல்லவில்லை. என்ன சொல்வது, என்ன முடிவெடுப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை.
ஆத்திரத்துடன் காணப்பட்ட காளியம்மாள் அவன் கால் அருகே வந்து உட்கார்ந்து சொன்னாள், “டேய் சந்திரா, பெத்த வயிறு பத்தியெறியச் சொல்றேன். இப்படி ஒரு பொண்ணே எனக்குப் பொறக்கலன்னு நெனச்சிக்கிறேன். அவளக் கொன்னுடுங்க.”
இது வரை அதிர்ச்சியில் உறைந்துபோனது போல, யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்த ராஜா, திண்ணையிலிருந்து களத்தில் இறங்கினான். தன் மகனைப் பார்த்துச் சொன்னான், “போயி உன் பெரியப்பன கூட்டிகிட்டு வா.”
“அவரு எதுக்கு மாமா” என்று சந்திரன் சங்கடத்துடன் தடுத்தான்.
“வரட்டும். இத இப்படியே உட்டா இந்த ஊர்ல நாம மானத்தோட துணி கட்டிகிட்டு உலாத்த முடியாது. டேய் சங்கரு நீ போயி அவன கூட்டிகிட்டுவா. இன்னிக்கி ஏதாவது முடிவு கட்டியாவனும்.”
காளியம்மாள் சொன்னாள், “ஏன்னு கேட்டா, வரச் சொன்னாங்கன்னு மட்டும் சொல்லு. அவளுக்குச் தெரிஞ்சா ஊரு பூரா நாறடிச்சிடுவா”
தன் மாமாவின் இருசக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு அவன் போனான்.
000
நேற்று சாமந்தித் தோட்டத்தைக் கடந்து வந்த பாம்பு, முத்துக்காய் செடிகளும் நந்திவெட்டான் செடிகளும் மண்டிக்கிடந்த தென்னஞ்சாலை மேட்டில் வந்து குடிபுகுந்திருந்தது. அங்கே ஏராளமான தென்னை மட்டைகள் வெட்டிப் போடப்பட்டு, விறகுக்காகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த குவியல்களில் ஒன்றில் புகுந்து சௌகரியமான இடம் பார்த்துச் சுருண்டு கொண்டது பாம்பு. அவ்வப்போது தலையை வெளியே நீட்டி நோட்டம் பார்த்தது. தொலைவில் வீட்டருகே தெரிந்த ஆட்களின் நடமாட்டம்தான் அதை அச்சமடையச் செய்தது, என்றாலும் காட்டை விட இந்த இடத்தை சௌகரியமாகவே உணர்ந்தது. தென்னை மர நிழலும், ஈரமும் படிந்து பூச்சிகளுக்கும் தவளைகளுக்கும் புகலிடமாக அது இருந்தது.
000
அழைத்த உடனேயே புறப்பட்டு வந்தான் ராஜாவின் அண்ணன் கோவிந்தன். ஏதோ முக்கிய விஷயம் என்பது மட்டும் சட்டென்று புரிந்தது அவனுக்கு. சங்கர் கொண்டு வந்திருந்த பைக்கின் முன்னால் மாட்டியிருந்த சிகப்புக் கொடி சந்திரனும் வந்திருக்கிறான் என்பதை காட்டியது. கொஞ்சம் காலமாகவே சகோதரர்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லை. பாகப்பிரிவினையின் போது ஏற்பட்ட சிறு மனஸ்தாபம் அவர்களின் மனைவிகளால் ஊதி பெருக்கப்பட்டிருந்தது. அதையும் தாண்டி அழைப்பு வருகிறதென்றால் முக்கியமாகத்தான் இருக்கும். ஒரு வேளை கிழவனுக்குத்தான் ஏதாவது ஆகிவிட்டதா என்ற பதற்றமும் அவனிடம் தொற்றிக்கொண்டது. தம்பியின் தோட்டத்துக்கும் அவனுடைய தோட்டத்துக்கும் ஒரு பர்லாங் தொலைவிருக்கும். சங்கருக்கு பின்னாலேயே அவனும் தனது இருசக்கர வாகனத்தில் வந்து சேர்ந்தான். மரத்துக்குக் கீழே கிழவனைப் பார்த்தப் பின்னர்தான் அவனுக்கு நிம்மதி ஏற்பட்டது. வண்டியை நிறுத்திவிட்டு நேராக சந்திரன் உட்கார்ந்திருந்த ஓட்டுவீட்டுத் திண்ணையில் அவனுக்கப் பக்கத்தில் போய் உட்கார்ந்தான். சந்திரன்தான் அவனை “வாங்க மாமா” என்று வரவேற்றான். எதிர் திண்ணையில் உட்கார்ந்திருந்த ராஜா எதுவும் பேசவில்லை. காளியம்மா மூத்தாரைப் பார்த்ததும் உள்ளே சென்று கதவுக்குப் பின்னால் நின்று கொண்டாள்.
“என்ன மச்சான் காலையிலேயே இந்தப் பக்கம்?” என்று சந்திரனின் கையைப் பிடித்தான் கோவிந்தன். “கட்சி வேலையெல்லாம் எப்படி போய்கிட்டிருக்கு?” என ஒரு சகஜ பாவத்தை அங்கே உருவாக்க விரும்பினான். ஆனால் சந்திரனின் முகம் காட்டிய சங்கட உணர்வு அவனைப் பின்வாங்கச் செய்தது.
“ஏதாவது பிரச்சனையா என்ன?” என சந்திரனின் கையை அழுத்திக்கேட்டான் கோவிந்தான்.
“பிரச்சனை என்ன பிரச்சனை மாமா…” என்ற பீடிகையுடன் விஷயத்தை மெல்லச் சொன்னான் சந்திரன். அவன் சொல்ல சொல்ல கோவிந்தனின் முகம் மாறி விட்டது. இது அவன் தம்பி வீட்டு விஷயம் மட்டுமா என்ன? அவன் திண்ணையிலிருந்து இறங்கி நின்று கொண்டான்.
“என்ன எழவு மயிரு இதெல்லாம். என்ன புள்ளைய வளர்த்து வச்சிருக்கீங்க? யாருக்கு இது அடுக்கும்? அக்கம் பக்கத்தில கேட்டா காறி துப்ப மாட்டாங்க…”
சந்திரன் அவன் கையைப் பிடித்து “உட்காருங்க மாமா பேசலாம்” எனச் சொல்லி மீண்டும் உட்கார வைத்தான்.
“மச்சான்! இந்த அசிங்கமெல்லாம் தெரிஞ்சா எவன் நம்ம வாசல மிதிச்சி தண்ணி வாங்கிக் குடிப்பான்? என்னத்துக்கு இந்த கழுதையெல்லாம் காலேஜிக்கு அனுப்புறிங்க? இவ எல்லாம் படிச்சித்தான் குடும்பத்த கரையேத்தப் போறாளா?”
அவன் தன் கால்களை மடக்கி திண்ணை சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டான். சிறிது நேரம் யாரும் பேசவில்லை.
அவன் சொன்னான், “அய்யா இதைத்தான் படிச்சிப் படிச்சி சொன்னாங்க. அவனுங்க இதே வேலையா திரியறானுங்க, ஜாக்கிரதையா இருங்கன்னு. அங்க இங்க நடந்தது இப்ப நம்ம வீட்டுக்கே வந்துடுச்சி. ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியா மனுசனக் கடிச்ச கதையா நம்ம வீட்லயே கைய வச்சிட்டாங்களா? யாரு அந்த பரதேசி நாயி? சொன்னாளா இல்லையா?”
“அவ எங்க சொல்றா…” என காளியம்மாள் உள்ளே இருந்து பதிலளித்தாள்.
“இவளுக்கு என்ன வயசாவுது?”
“போன மாசியோட பதனெட்டு முடிஞ்சிடுச்சி”
கோவிந்தன் சொன்னான், “தலைக்கு வந்தது தலைப்பாயோட போயிடுச்சின்னு நினைச்சிக்கு வேண்டியதுதான். இப்பவாவது தெரிஞ்சதே. அவன் கூட ஓடியிருந்தான்னா என்ன ஆயிருக்கும்? எல்லாம் தலமேல கைய வச்சிகினு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். அப்புறம் போலீஸ் ஸ்டேஷன், பத்திரிக, டிவின்னு நம்ம குடும்ப மானம் பறந்திருக்கும்.”
தன்னால் தான் இதெல்லாம் தொடங்கியது என்பதில் பெரும் குற்ற உணர்வுக்கு ஆட்பட்டிருந்தான் சங்கர். அவன் பெரியப்பா சொல்வது போல நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தபோது மனம் பதறியது. தன் தங்கச்சி மீது ஆத்திரமாக வந்தது.
கோவிந்தன் சொன்னான், “இவள இனிமே வெளிய அனுப்புனிங்கன்னா அப்புறம் நம்ப குடும்ப மானத்த யாராலும் காப்பத்த முடியாது. வீட்ல வச்சிருக்கிறதும் ஆபத்துதான். இருவத்தி நாலு மணி நேரமும் அவள நீங்க காவல் காத்துக்கிட்டிருக்க முடியாது.”
இந்தப் பிரச்சினை அவனை அதிகம் பதற்றமடையச் செய்திருந்தது. இதுகெல்லாம் காரணமானவன் யாரென்பதை தெரிந்துகொள்ளும் ஆத்திரம் அவனிடம் மேலிட்டது.
“மச்சான் அவன் யாருன்னு மட்டும் கேட்டுச் சொல்லு, அவன பலி போட்டுட்டு வந்திட்றேன்” என்றான் கோவிந்தன்.
சந்திரன் சொன்னான், “பிரச்சனைய பெருசாக்க வேணாம் மாமா, அப்புறம் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லேங்கிற கதையா ஆயிடும். நம்ம பொண்ணு மேல தப்ப வச்சிகிட்டு அவனப் போயி சீண்டிகிட்டிருக்கிறதல அர்த்தமில்ல.”
சட்டென்று ராஜா சொன்னான், “இவ்வளவு ஆன பிறகு அவ உசுரோடவே இருக்கக் கூடாது. ஒன்னும் அவ சாகனும் இல்லே நாங்க சாகனும். வேற பேச்சுக்கே எடமில்லை.”
சந்திரன் கலங்கித்தான் போனான். இப்படி யோசிக்கவே அவனுக்கு அச்சமாக இருந்தது. அவன் அக்காளும் இதையேதான் சொல்கிறாள், ஏற்கெனவே முடிவு செய்துவிட்டு, இந்த நெருக்கடியை உருவாக்கத்தான் தன் அண்ணனை வரவழைத்தானா அவன் மாமான்? என்ன ஆயிற்று இவர்களுக்கு? எப்படி இதற்குத் துணிந்தார்கள்?
கோவிந்தன் சொன்னான், “மச்சான் நீ திரும்ப அவகிட்டப் பேசிப் பாரு, என்ன சொல்றான்னு கேளு”
சந்திரன் தயக்கத்துடன் எழுந்து எதிர் வீட்டுக்குள் போனான். கவிதா முன்பு பார்த்த இடத்தில், இப்போது உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு எதிரே ஒரு பிளாஸ்டிக் சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான். அவளை எப்படியாவது தன் முடிவிலிருந்து திசைத் திருப்பி அழைத்து வந்துவிட வேண்டும் என்று அவன் துடித்தான். இதனால் எந்த விபரீதமும் நடந்துவிடக் கூடாது.
“கவிதா என்ன இதெல்லாம்? உன்ன இதுக்கா நாங்க வளர்த்தோம்? நம்ம குடும்பம் என்ன ஆவும்ன்னு யோசிக்கவே மாட்டியா? இப்ப சொல்லு, உனக்கு எந்த மாதிரி மாப்பிளை வேணும்? கொண்டு வந்து நிறுத்திறேன். கல்யாணச் செலவு எவ்வளவு ஆவட்டும் நானே பாத்துக்கிறேன். ஆனா நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காதும்மா. ஏன் புரிஞ்சிக்காம பிடிவாதம் பண்ற?.”
அவள் தலை நிமிர்த்தி அவனைப் பார்த்து உறுதியுடன் சொன்னாள், “மாமா என்னை வெளிய விட்டிருங்க. நான் என் வழியிலப் போய்க்கிறேன். இல்லேன்னா வெஷம் வாங்கிக் குடுத்துடுங்க. குடிச்சிட்டு செத்துட்றேன்.”
“அவுங்க அதுக்கு தயாராதான் இருக்காங்க” என்று நாற்காலியிருந்து அவன் கோபத்துடன் எழுந்தான். “இதுதான் உன் முடிவா?”
“ஆமாம் மாமா.”
000
அன்று மதியம் வெயில் உக்கிரமாக காய்ந்து கொண்டிருந்தது. களத்தில் யாருமில்லை. குப்பக் கவுண்டர் கட்டிலில் படுத்திருந்தார். காலையில் வந்திருந்த சந்திரனும், கோவிந்தனும் பிரச்சினைக்கு முடிவு காணாமலேயே குழப்பத்துடன் கிளம்பிப் போயிருந்தார்கள். ஆனால் ராஜா ஏற்கெனவே தான் எடுத்திருந்த முடிவிலிருந்து பின் வாங்கவில்லை. அதற்கு காளியம்மாவும் உடன்பட்டுப் போனாள். அவளால் எதையும் தடுக்க முடியவில்லை. அவளுக்கு வேறு மார்க்கமும் தெரியவில்லை. ஓட்டு வீட்டை சாத்திக்கொண்டு உள்ளே உட்கார்ந்து அழுதபடி இருந்தாள். என்ன செய்வதென்றே அவளுக்கு விளங்கவில்லை. சுவரில் தலையை முட்டிக்கொண்டுக் கதறினாள், “படுபாவி… படுபாவி… எங்கள பழிகாரங்களா ஆக்கிட்டியே… பழிகாரங்களா ஆக்கிட்டியே… இதுக்கா உன்னப் பெத்து வளத்தேன்…”
பம்புசெட்டருகே ராஜா சிலை போல உட்கார்ந்திருந்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தன. சங்கர் எதிரே குந்தக்காலிட்டு உட்கார்ந்து அவனிடம் கெஞ்சி அழுதுகொண்டிருந்தான், “அய்யா போயி கதவத் தெறந்து உட்றுங்கய்யா, அது எங்கனா போவட்டும்…அழிஞ்சி சாவட்டும்… கதவத் தொறந்து உட்றுங்கய்யா…” ஆனால் அவன் அசையவில்லை. அவன் மனம் இரங்கவில்லை. அது இறுகிப்போயிருந்தது.
000
பாம்பு மறைவான அந்த மேட்டிலிருந்து இறங்கி கரம்பாகக் கிடந்த நிலத்தின் வழியே குப்பக் கவுண்டர் வீட்டை நோக்கிச் செல்லத் தொடங்கியது. புழுதியில் ஊர்ந்து, ஆளரவம் வற்றி நிசப்பத்துடன் காணப்பட்ட அந்த வீட்டை நெருங்கியது. அப்போது கரம்பில் மேய்ந்துகொண்டிருந்த கோழிகள் பதறி ஓடி வீட்டுக்குப் பின்னால் வளர்த்திருந்த தீவணப் புற்களுக்குள் மறைந்து விட்டன. வீட்டுக்கு இட்டுச் செல்லும் மண்பாதையை அடைந்த பாம்பு சாக்கடை தட்டியை ஒட்டி நகர்ந்து களத்துக்கு வந்தது. சற்று தயங்கி தலையை தூக்கிப் பார்த்தது. பின்னர் தொடர்ந்து முன்னேறி களத்தின் மையப் பகுதிக்கு வந்து சேர்ந்தது. அப்போது கட்டிலுக்குப் பக்கத்தில் படுத்திருந்த பூனை வெகுண்டெழுந்து பாம்பை நோக்கித் தாவிச் சென்றது. ஆனால் அருகே போகாமல் மிரண்டு பின் வாங்கி கோபத்துடன் சீறியது. அந்த கிழட்டு நாய் எழுந்து நின்று குரைக்கத் தொடங்கியது. ஆனால் அருகில் செல்லவில்லை. குப்பக் கவுண்டர் எழுந்து உட்கார்ந்து என்னவென்று பார்த்தார். பாம்பு அவரைப் பார்த்த வாக்கில் படமெடுத்து நின்று கொண்டிருந்தது. பதற்றத்துடன் அவர் தன் கைத்தடியை எடுத்து பாம்பை நோக்கி அசைத்தார். ‘சங்கரு பாம்புடா’ என கத்தினார். ஆனால் சத்தம் அவர் வாயிலிருந்து எழும்பவில்லை.
000
இரண்டு நாள் சரியான தூக்கம் இல்லாத்தால் சந்திரன் அன்று காலை ஒன்பது மணி வரை எழாமல் தூங்கிக்கொண்டிருந்தான். அவன் மனைவி வந்து அவனை தட்டி எழுப்பினாள். அவனைப் பார்க்க தோழர் பெருமாள் வந்திருப்பதாக அவள் சொன்னாள். முகம் கழுவி, சட்டையை மாட்டிக்கொண்டு வரவேற்பறைக்கு வந்தான். பெருமாள் நாற்காலியில் உட்கார்ந்து தன்னுடன் கொண்டு வந்திருந்த தினசரியை பிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.
“வாங்க தோழர்” சந்திரன் அவரை வரவேற்றான்.
“வணக்கம் தோழர்” என பெருமாள் தினசரியை மூடி வைத்தபடி சிரித்தார்.
“காப்பி சாப்பட்றிங்களா?”
“இல்ல தோழர். உங்களுக்குத்தான் தெரியுமே. காப்பி டீ சாப்பிட்றத உட்டு ரொம்ப நாளாச்சி. நேத்து சாய்ந்திரம்தான் தகவல் சொன்னாங்க. கூட்டத்துக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன், வர்ல. போன் பண்ணா சுவிட்ச் ஆப்ன்னு வந்தது, நீங்க அப்படி சுவிட்ச் ஆப் பண்ண மாட்டீங்களே. என்னவோ தெரியலேயேன்னு யோசிச்சிகிட்டிருந்தேன். அப்புறம் இந்த மாதிரின்னு தகவல் சொல்றாங்க. நம்ம காளியம்மா மகதானே தோழர்?”
“ஆமா தோழர். அதுதான்.”
“காலேஜ் அட்மிஷனப்ப நானும் கூடதானே இருந்தேன். என்ன ஆச்சி தோழர்? ஒடம்பு ஏதாவது சரியில்லாம இருந்திச்சா?”
“அதெல்லாம் ஒன்னுமில்லே தோழர். நல்லாதான் காலேஜ் போய் வந்துகிட்டிருந்தது. முந்தாநாளு தோட்டத்துப் பக்கம் போறப்ப பாம்பு கடிச்சிட்டிருக்கு. ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறதுக்குள்ள போயிடுச்சி, காப்பாத்த முடியல…”
அந்தத் துயர நிகழ்வு மீண்டும் வந்து மனதை தாக்கத் தொடங்கியதால் அவன் உள்ளமிழ்ந்து போனான்.
“அவ்வளவு சீக்கிரமாவா வெஷம் ஏறிடுச்சி? நம்பவே முடியலையே தோழர். என்ன பாம்பு தோழர்? கண்டுபிடிச்சிட்டாங்களா?”
“அங்கியேதான் இருந்திருக்கு, அடிச்சி அதையும் கொளுத்திட்டாங்க. கருநாகம் மாதிரிதான் தெரிஞ்சது.”
சந்திரனின் வருத்தத்தை தானும் பகிர்ந்து கொள்வது போல பெருமாள் கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தார். கூட்டம் குறித்தும் அதன் வெற்றி குறித்தும் சந்திரனிடம் சொல்ல வேண்டும் என்ற ஆவலை அவர் கட்டுப்படுத்திக்கொண்டார். அதைத் தெரிந்துகொள்ளும் நிலையில் அவன் இல்லை என்பது அவருக்குப் புரிந்தது.
சந்திரன் சொன்னான், “உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியாதில்ல. காளியம்மாவோட மாமனாரும் நேத்து காலமாயிட்டாரு.”
“என்ன சொல்றிIங்க தோழர்!” பெருமாள் அதிர்ச்சியுடன் பார்த்தார்.
“ஆமாம் தோழர். அடுத்தடுத்து ரெண்டு சாவு. கவிதா சாவுக்கு வந்திருந்தவங்க அங்கதான் தூங்கிக்கிட்டிருந்திருக்காங்க. இவரு எப்பயும் போல திண்ணையிலதான் படுத்திருந்திருக்கார். காலையில பாத்தப்போ படுக்கையில இல்ல. தேடிப் பாத்தா கெணத்துல கெடந்திருக்கிறார்.”
“என்ன தோழர் இதெல்லாம்?”
“அதான் யாருக்கும் ஒன்னும் புரியல. ஒன்னுக்கு ரெண்டுக்குக்கூட கோல ஊணிக்கிட்டு தட்டுத்தடுமாறிதான் போவாரு. இருட்ல இவ்வளவு தூரம் எப்படி நடந்து போனாருன்னுதான் தெரியல. போயிருந்தா வரப்புலதான் நடந்து போயிருக்கனும். அதுதான் ஆச்சிரியமா இருக்கு.”
000