ஆந்ரேய் தார்க்கோவஸ்கியின்
சேக்ரிபைஸ்
நல்லதும், பரிபூரணமானதும்
சாக விரும்புகிறது
ஜீ.முருகன்
‘சேக்ரிபைஸ்’ தார்க்கோவஸ்கியின் கடைசித் திரைப்படம். அக்கிரா குருசோவாவின் ‘ட்ரீம்ஸ்’ திரைப்படமும் அவருடைய கடைசி காலத்தில் எடுக்கப்பட்டதுதான். இரண்டுக்கும் சில பொதுத்தன்மைகள் உண்டு. இரண்டுமே அணு குண்டுக்கு எதிராகவும், போருக்கு எதிராகவும், இயற்கையின் மீதான மனிதனின் வன்முறைக்கு எதிராகவும் உரையாடல்களை முன்வைத்தன. வழக்கத்துக்கு மாறாக இருவருமே நேரடியாகவே தங்களது கண்டனங்களை முன்வைத்திருக்கிறார்கள். அணுகுண்டு என்ற ஆபத்தை உலகுக்கு அறிவிப்பது அவர்களது கடமையாக இருந்திருக்கிறது. இயற்கை குறித்து எச்சரிக்க வேண்டியிருந்தது அவர்களுக்கு.
சேக்ரிபைஸ் படத்தின் இறுதியில் ஒட்டோ என்று அழைக்கப்படும் தபால்காரரின் அறிவுரைப்படி தனது வேலைக்காரி மரியாவின் வீட்டுக்கு நள்ளிரவில் செல்லும் அலேக்ஸாண்டர் அவளிடம் சொல்கிறார், “எனக்கு திருமணம் ஆவதற்கு முன் கிராமத்தில் வசித்த என் அம்மாவை காணச்செல்வேன். அவள் வசித்த அந்த சிறு வீட்டைச் சுற்றி தோட்டம் இருந்தது. அது பராமரிக்கப்படாமல் தன் போக்கில் புதர்மண்டிக் கிடந்தது. வீட்டு ஜன்னலின் வழியே நாற்காலியில் அமர்ந்தவாறு அம்மா அதைப் பார்த்துக்கொண்டிருப்பாள். ஒரு முறை அம்மா நோய்வாய்பட்டு படுக்கையில் இருந்த போது நான் அங்கு போயிருந்தேன். புதர் மண்டிக்கிடந்த அந்தத் தோட்டத்தை சுத்தம் செய்தேன். மரங்களையும் செடிகளையும் வெட்டிச் சீர் படுத்தினேன். பிறகு குளித்துவிட்டு நல்ல உடை உடுத்திக்கொண்டு வந்த நான், அம்மாவுக்கு அந்தத் தோட்டத்தைக் காட்டுவதற்கு முன் அவள் உட்காரும் நாற்காலியில் அமர்ந்து ஜன்னலின் வழியே தோட்டத்தைப் பார்த்தேன். நான் திடுக்கிட்டுப் போனேன். அந்த தோட்டம் வன்முறையின் சாட்சியாக மாறியிருந்தது.
“எனக்கு ஒரு சகோதரி இருந்தாள். மிக நீண்ட கூந்தலுடன் லேடி காடிவாஸ் போல மிக அழகாக இருப்பாள். ஒரு நாள் அவள் பார்பர் ஷாப்புக்கு போய் கூந்தலை வெட்டி கொண்டு வந்துவிட்டாள். அப்போது அப்படி வெட்டிக்கொள்வது பேஷனாக இருந்தது. அந்தக் கோலத்தில் அவளைப் பார்த்த என் தந்தை அழத்தொடங்கிவிட்டார். இதுதான் அந்த தோட்டத்துக்கும் நேர்ந்திருந்தது.’’
படத்தின் ஆரம்ப காட்சிகளிலேயே அலேக்ஸாண்டர் தன் ஊமை மகனிடம் சொல்கிறார், “மனிதர்கள் எப்போதும் சக மனிதர்களுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் எதிரானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இயற்கையின் மேல் நிரந்தரமாக வன்முறையை பிரயோகித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதனால்தான் மனிதனின் நாகரீகம் அதிகாரத்தின் மீதும், பயத்தின் மீதும் உருவாகியிருக்கிறது. நம்முடைய தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான வன்முறையையும் அது கொண்டிருக்கிறது. நாம் காட்டுமிராண்டித்தனத்தை விரும்புகிறோம். நுண்ணோக்கியை கைத்தடி போல பயன்படுத்துகிறோம். இப்படி சொல்வதுகூட தவறுதான். காரணம் காட்டுமிராண்டித்தனம் ஆன்மிகத்தன்மை கொண்டது. நாமோ எல்லாவற்றையும் விஞ்ஞான மயமாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். விஞ்ஞானத்தை வைத்துக்கொண்டு கெட்ட ஆவிகளுக்காக நாம் சேவகம் செய்கிறோம். ஒரு ஞானி சொன்னார், ‘தேவையில்லாதவற்றை வைத்திருப்பது பாவம்’ என்று. ஆரம்பம் முதல் இறுதிவரை நமது நாகரீகம் பாவங்களால் ஆனதுதான். நம் வாழ்க்கையில் மோசமான சுரபேதம் ஏற்பட்டிருக்கிறது. நமது பருண்மை உலகத்துக்கும் ஆன்மீக உலகத்துக்கும் சமனற்ற நிலை உருவாகியிருக்கிறது. நமது கலாசாரம் பழுதடைந்திருக்கிறது. நமது நாகரீகத்தின் ஆதாரத்திலேயே பழுது ஏற்பட்டுவிட்டது. காலம் கடந்துவிடவில்லை. இதற்கான காரணத்தை ஆராய்ந்து தீர்வை கண்டுபிடிக்கலாம்.’’
தனது பிறந்த நாளில், கடற்கரை ஓரத்தில் ஒரு பட்டுப்போன ஜப்பானிய மரத்தை நடுகிறார் அலேக்ஸாண்டர். தன் மகனிடம் சொல்கிறார், “முன்னொரு காலத்தில் ஒரு புத்த மடாலயத்தில் பாம்வே என்ற புத்த பிட்சு வாழ்ந்துவந்தார். மலையில் அவர் இதே போன்ற ஒரு பட்டுப்போன மரத்தை நட்டார். அது துளிர்க்கும் வரை தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கும் படி லோன் கோலவ் என்ற தன் சிஷ்யனிடம் சொன்னார். அவர் சொன்னது போல அவரும் ஒரு வாளியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு தினமும் காலையில் மலை மேல் ஏறிச்சென்று ஊற்றிவிட்டு மாலையில் வீடு திரும்பினார். இதே போல தினமும் செய்தார். மூன்று ஆண்டுகள் கழித்து ஒரு நாள் அவர் காலையில் சென்று பார்த்தபோது அந்த மரம் பூக்களால் நிறைந்திருந்திருந்தது. எனக்கு நானே சொல்லிக்கொள்வேன், ஒரே நேரத்தில், ஒரு செயலை, சடங்கு போல, தினமும் செய்து கொண்டு வந்தால் இந்த உலகம் மாறிவிடும். நிச்சயம் ஏதாவது மாற்றம் நிகழும்.’’
‘கடவுளுக்கும் உங்களுக்கும் உறவு எப்படி?’ இது ஒட்டோவின் கேள்வி. இதற்கு ‘அப்படி ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை’ என்கிறார் அலேக்ஸாண்டர். புதுமைப்பித்தன் சொன்னது போல அவரும் சொல்கிறார், ‘ஆனால் நான் பயப்படுகிறேன்.’
அணுகுண்டால் ஐரோப்பா முழுவதும் அழியப்போகிறது என்ற அறிவிப்பு வந்த உடன், அதைத் தடுத்த நிறுத்த இயலாது என்ற நிலை வரும்போது அவருக்கு வேறு மாற்று இருப்பதாகத் தெரியவில்லை. அவருக்கு கடவுளின் தேவை வருகிறது. அவர் கடவுளிடம் பிரார்த்திக்கிறார், “இதுதான் இறுதி யுத்தம், பயங்கரமான யுத்தம். இதன் பிறகு யாரும் இருக்கப் போவதில்லை. இந்த நகரம் இருக்கப் போவதில்லை. புற்களோ, மரங்களோ இருக்கப் போவதில்லை. கிணறுகளில் நீரோ, வானத்தில் பறவைகளோ இருக்கப் போவதில்லை. என்னிடம் இருப்பதையெல்லாம் உங்களுக்கு தந்துவிடுகிறேன், நான் மிகவும் நேசிக்கும் குடும்பத்தையே உங்களுக்குத் தருகிறேன், எனது வீட்டையே அழித்துவிடுகிறேன், எனது மகனைக்கூட தந்துவிடுகிறேன், நான் ஊமையாகி விடுகிறேன், அதன் பிறகு யாருடனும், ஒரு வார்த்தையும் பேசப்போவதில்லை. வாழ்க்கையிலிருந்தே என்னை துண்டித்துக்கொண்டுவிடுகிறேன். எல்லாவற்றையும் முன்பு இருந்தது போலவே மாற்றி கொடுங்கள், இன்று காலையிலும் நேற்றும் இருந்ததுபோன்ற உலகத்தை எங்களுக்கு கொடுங்கள். இந்த நோயிலிருந்து, இந்த சாவிலிருந்து, இந்த பயத்திலிருந்து என்னை விடுவியுங்கள். எனக்கு உதவுங்கள், நான் வாக்குக்கொடுத்தது போல எல்லாவற்றையும் உங்களுக்கு தந்துவிடுகிறேன்.’’
கடற்கரையோரம் தனியாக உள்ள ஒரு வீட்டில் மனைவி, மகள் மற்றும் மகனுடன் வாசித்துவரும் அலேக்ஸாண்டர் பிரபலமான பத்திரிகையாளர், நாடகம் மற்றும் இலக்கிய விமர்சகர், பல்கலைக்கழகத்தில் அழகியலை போதிக்கும் பேராசிரியர். முன்னாள் நாடக நடிகரும் கூட. அவருக்கு டாக்டர் விக்டரும், தபால்காரர் ஒட்டோவும் நண்பர்கள். மேலும் ஜூலியா என்ற சமையல் காரி, மரியா என்ற வேலைக்காரி, இவர்கள்தான் இந்த படத்தின் பிரதான பாத்திரங்கள்.
இதில் ஒட்டோவும் மரியாவும் பக்கத்துவீட்டுக்காரர்கள். அவர்கள் வீடு சர்ச்சுக்கு பின்புறம் இருப்பதாக ஒட்டோ ஒரு முறை சொல்கிறார். இருவருமே வினோத பண்புகளையும், கடவுளின் தூதுவர்கள் போன்ற தோற்றத்தையும் பேச்சிலும் செயலிலும் வெளிப்படுத்துகிறார்கள். மரியாவை நள்ளிரவில் அலேக்ஸாண்டர் சந்திக்கச் செல்லும் போது ஆட்டு மந்தை ஒன்று அவளுடைய வீட்டு முகப்பை கடந்து போய் திரும்ப வருகிறது.
அலேக்ஸாண்டரின் வீட்டில் மரியா வீட்டு வேலைகளை முடித்துவிட்டு கிளம்பும் போது அலேக்ஸாண்டரின் மனைவியிடும் கேட்கிறாள், “மிஸ்ஸஸ் அடிலைடு, எல்லாவற்றையும் வரிசைப்படி அடுக்கி வைத்துவிட்டேன் நான் கிளம்பட்டுமா?’’
“தட்டுகளை சூடுபடுத்திவைத்துவிட்டு நீ போகலாம், மற்ற வேலையை ஜூலியா பார்த்துக்கொள்வாள்’’
“தட்டுகளை சூடுபடுத்திவைத்துவிட்டு நான் கிளம்பட்டுமா? வேறு ஏதாவது வேலை இருக்கிறதா?’’
“மெழுகு வர்த்திகளை மேஜையின் மேல் எடுத்து வைக்காமலிருந்தால் அதை எடுத்தவை, பிறகு அந்த ஒயின் பாட்டில், அதை திறந்து வைத்துவிடு. அவ்வளவுதான் நீ போகலாம்.’’
“தட்டுகள், மெழுகுவர்த்திகள், ஒயின்’’ அவளுடைய பார்வை அர்த்தத்துடன் நம் மீது நிலைகொள்கிறகு.
‘சரி, வேறு என்ன செய்யவேண்டும்?’ என்ற அவளுடைய கேள்வி அணுகுண்டு பற்றிய அறிவிப்பு வந்த பிறகு வேறு அர்த்தம்கொடுப்பதாக மாறுகிறது. அலேக்ஸாண்டர் வீட்டுக்கு வெளியே, சமவெளியில் வியக்கத்தக்க ஒன்றை பார்க்கிறார். அது அவருடைய வீடு போலவே செய்யப்பட்ட மிகச் சிறிய வீடு. ‘யார் இதைச் செய்தார்கள்? ஒருவேளை கடவுளா?’ என்று தன்னையே கேட்டுக்கொள்கிறார். அப்போது மரியா அந்த இடத்திலிருந்து அகன்று தனது வீடு நோக்கி போய்க்கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அவளை நிறுத்தி யார் இதைச் செய்தது என்று கேட்கிறார். அவருடைய மகனும், ஒட்டோவும் சேர்ந்து அவருக்கு பிறந்தநாள் பரிசு தருவதற்காக செய்ததாக சொல்கிறாள். பிறகு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லிவிட்டுச் செல்கிறாள். அதை நம்பாதவர் போல அவர் அவளையே பார்த்துக்கொண்டு நிற்கிறார். ‘வெளியே மிகவும் குளிராக இருக்கிறது, வீட்டுக்குப் போங்கள்’ என்று சொல்லிவிட்டு மீண்டும் வீடு நோக்கி நடக்கத் தொடங்குகிறாள்.
கடவுளிடம் செய்த பிரார்த்தனைக்குப் பிறகும் நம்பிக்கையற்ற நிலையில், செய்வதறியாது நிற்கும் அலேக்ஸாண்டருக்கு ஒட்டோ ஒரு யோசனை சொல்கிறார்: மரியாவுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டால் எல்லாம் நல்லபடியாக முடியும் என்று. கடைசியாக இருக்கும் ஒரே வாய்ப்பு அது மட்டுந்தான் என்கிறார். பெரும் தயக்கத்துக்கு பிறகு இதற்கு சம்மதிக்கும் அலேக்ஸாண்டர் அந்த நள்ளிரவில் அவளிடம் போகிறார். அந்த சமயத்தில்தான் கிராமத்தில் அம்மாவைப் பற்றியும், அவள் வளர்த்துவந்த தோட்டத்தைப்பற்றியும் சொல்கிறார். பிறகு அவளுடைய காதலை வேண்டுகிறார். அவருக்கு உதவுமாறு மண்டியிடுகிறார். அவள் மறுக்கிறாள். வேறு வழியில்லாமல் தன்னுடன் கொண்டு சென்றிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து தன் நெற்றியில் வைத்துக்கொண்டு ‘எங்களை காப்பாற்று’ என்று கெஞ்சுகிறார். திடுக்கிட்ட அவள் அவருடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள சம்மதிக்கிறாள். அவரை சாந்தப்படுத்துகிறாள்.
“என்ன நடந்தது? ஏன் இப்படி பயப்படுகிறீர்கள்? யார் உங்களை துன்புறுத்தியது? அமைதியாக இருங்கள். எனக்குப் புரிகிறது. உங்கள் வீட்டில்தான் பிரச்சினை. எனக்கு அவளைத் தெரியும். அவள் நல்லவள் இல்லை. எனக்குத் தெரியும், அவர்கள் உங்களை துன்புறுத்தினார்கள். எதைப்பற்றியும் நீங்கள் பயப்படத்தேவையில்லை. எல்லாம் சரியாகிவிடும். இந்த இடத்தில் உங்களுக்கு ஒன்று ஆகாது. அழாதீர்கள், எல்லாம் சரியாகிவிட்டது. என்னை விரும்பினால் போதும்…’’ ஆடைகளை கலைந்து அவரை அணைத்துக்கொள்கிறாள். இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிய நிலையில் படுக்கையை விட்டு மேலெழுந்து அந்தரத்தில் மிதக்கத் தொடங்குகிறார்கள்.
பூமி அதிர்கிறது. ஐப்பானிய இசை பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்க, குழப்பமான சில சம்பவங்கள் நிகழ்கின்றன. கவிழ்ந்த நிலையில் அவருடைய மகன் படுத்திருக்கிறன். அடுத்த காட்சியில் அலேக்ஸாண்டர் படுத்திருக்கிறார். அவருக்கு அருகில் அவருடைய மனைவியின் உடையிலும், அதே தலைப்பின்னலோடும் மரியா அமர்ந்திருக்கிறாள். அக்காட்சி மறைந்து டாவின்சியின் புகழ்பெற்ற ‘அடோரேஷன்’ ஓவியம் தோன்றுகிறது. “என்னால் முடியாது, முடியாது’’ என்று அலேக்ஸாண்டர் குழந்தையைப் போல அடம்பிடிக்கும் குரல் கேட்கிறது. “இதை குடியுங்கள்’’ என்று வலியுறுத்தும் மரியாவின் குரல். “அவ்வளவுதான் எல்லாமே முடிந்துவிடும்’’ என்கிறது அது. அலேக்ஸாண்டரின் மகள் மார்த்தா நிர்வாணமாக, வெண்ணிற கோழிகளை துரத்தியபடி ஓடுகிறாள்.
மறுநாள் காலை அலேக்ஸாண்டர் தூக்கத்தில் பிதற்றியபடி படுத்திருப்பதை அவர் மனைவி காண்கிறாள். விழிதெழுந்த அலேக்ஸாண்டர் எல்லாம் பழைய நிலையில் இருப்பதை பார்க்கிறார். இரவு துண்டிக்கப்பட்டிருந்த மின்சாரம் திரும்ப வந்துவிட்டிருக்கிறது. தொலைபேசி இணைப்பு வேலை செய்கிறது. பேராபத்திலிருந்து அவர்கள் காப்பாற்றப்பட்டிருப்பது புரிகிறது.
அவரது குடும்பத்தினர் அனைவரும் காலை உணவுக்காக, வீட்டுக்கு வெளியே திறந்த வெளியில் போடப்பட்டிருக்கும் மேஜையில் தயாராகிக்கொண்டிருக்க, அலேக்ஸாண்டர் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் முனைப்பில் இருக்கிறார். சிறுவன் அந்த பட்ட மரத்துக்கு தண்ணீர் ஊற்ற சென்றுவிடுகிறான். அவருடைய குடும்பத்தினர் எல்லாரும் உலாவச் சென்றுவிட்ட சமயம் பார்த்து ஜப்பானிய இசையை ஒலிக்கச்செய்துவிட்டு, வீட்டுக்கு தீ வைக்கிறார். வீடு முழுவதும் பற்றி எரிந்து சாம்பலாகிறது. அந்த சமவெளியில் புதிர் மிக்க ஒரு நாடகம் நிகழ்கிறது. ஓடி ஒலிய நினைக்கும் அலெக்ஸாண்டரை ஆம்புலன்ஸ் வேன் வந்து வலுக்கட்டாயமாக அழைத்துச்செல்கிறது. யார் அதை வரவழைத்தார்கள் என்பது புதிராக இருக்கிறது. ஒட்டோவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேனை பின்தொடரும் வேலைக்காரி மரியா, சிறிது தூரம் சென்று நின்றுவிடுகிறாள். வேன் சென்று விடுகிறது.
அந்த சிறுவன் மரத்துக்கு தண்ணீர் ஊற்றிவிட்டு அங்கேயே படுத்துக்கொள்கிறான். “ஆதியிலே வார்த்தை இருந்தது என்று சொன்னீர்களே அது என்ன அப்பா?’’ என்று முணுமுணுப்பதோடு படம் முடிகிறது.
வேலைக்காரி மரியாவும், தபால்காரர் ஒட்டோவும் இந்த திரைப்படத்துக்கு முக்கியத்துவம் குறைந்தவர்கள் போன்று முதல் பார்வைக்குத் தோன்றினாலும் அவர்கள்தான் ஆற்றலுடன் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். முன்பே சொன்னது போல கடவுளின் தூதுவர்கள் போல தோன்றுகிறார்கள். உலகின் ஆதார சக்திகளை நன்கு புரிந்துகொண்டவர்களாக இருக்கிறார்கள்.
அணுகுண்டு பற்றிய அந்த அறிவிப்பு வருவதற்கு முன்பே அதை முன் உணர்ந்தது போல, மூர்ச்சையாகி கீழே விழும் ஒட்டோ, நினைவு தெளிந்து எழுந்து ஒரு கெட்ட ஆவி தன்னை கடந்து போனதாகக் கூறுகிறார். 1600-ல் வெளியான உலக வரைபடம் ஒன்றை அலேக்ஸாண்டருக்குப் பிறந்து நாள் பரிசாக கொடுப்பதற்கு ஒட்டோ கொண்டு வருகிறார். அது தனக்கு கிடைத்த பெரிய பரிசு என்கிறார் அலேக்ஸாண்டர். பெரிய தியாகம் என்கிறார். ஒட்டோ சொல்கிறார், “எல்லா பரிசுகளிலுமே தியாகம் கலந்திருக்கிறது’’ என்று.
வரைபடத்தில் உள்ள உலக வரைவு அலேக்ஸாண்டரை மிகவும் கவர்கிறது. “உலகத்தை இந்த விதமாக யோசித்தது அழகாக இருக்கிறது. ஐரோப்பா செவ்வாய் கிரகம் போல இருக்கிறது. ஆனால் இது உண்மையான வரைபடம் இல்லை. உண்மைக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை’’ என்கிறார்.
ஒட்டோ சொல்கிறார், “அப்போதும் மனிதர்கள் நன்றாகத்தான் வாழ்ந்தார்கள். உண்மை என்றால் என்ன? அப்படி ஒன்றும் இல்லை. நாம் பார்க்கிறோம், ஆனால் உண்மை நம் கண்களுக்கு புலப்படுவதில்லை. ஒரு கரப்பான் பூச்சி ஒரு தட்டின் மேல் ஏறி சுற்றிச்சுற்றி வருகிறது. நிச்சயம் அதற்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும். அதனால்தான் அப்படி சுற்றி வருகிறது.’’
“அது என்ன யோசிக்கிறது என்று உங்களுக்கு எப்படி தெரியும்? அது என்ன ஒரு சடங்கா?’’ என்று கேட்கிறார் டாக்டர் விக்டர்.
“அப்படிகூட இருக்கலாம். எல்லாமே அப்படித்தான். இல்லை என்றால் உண்மையிலிருந்து நாம் விலகிப் போய்விடுவோம்’’ என்கிறார் ஒட்டோ.
இத்திரைப்படம் சிறிது சிறிதாக வாழ்வின் ஆழ்ந்த அபத்த நிலைக்கும், நிச்சயமற்ற தன்மைக்கும் நம்மை நகர்த்திச் செல்கிறது. இந்த நிலையில் மனிதர்கள் கொள்ளும் மனோபாவமும், அடுத்து என்ன செய்வது என்ற கேள்வியும், ஏதாவது செய்யவேண்டிய நிர்பந்தமும் அவர்களை துன்புறத்துகின்றன. ‘ஏதாவது செய்யுங்கள், அலேக்ஸாண்டர் ஏதாவது செய்யுங்கள்’ என்று கதறுகிறாள் அவருடைய மனைவி. மனிதர்களின் ஒட்டுமொத்த இயலாமை, பெரிய ஓலமாக அவளிடம் வெளிப்படுகிறது. இந்த நெருக்கடிதான் அலேக்ஸாண்டரை கடவுளின் இருப்பை நோக்கி அழைத்துச் செல்கிறது. வேலைக்காரி மரியாவிடம் மண்டியிட்டு கெஞ்ச வைக்கிறது.
அலேக்ஸாண்டர் இதையெல்லாம் தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் செய்வதில்லை. அவருடைய துயரம் அவருக்கானதில்லை. ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கானது. அது எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை முன்பே அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால்தான் பிறந்த நாள் அன்று கூட அவர் துயரத்தின் இருள் படிந்தது போல காணப்படுகிறார்.
“விமர்சகன், பேராசிரியர், எழுத்தாளன், ஆனால் ஏன் இப்படி உற்சாகமில்லாமல் இருக்கிறீர்கள்?’’ என்று கேட்கிறார் ஒட்டோ. “நீங்கள் எதற்காகவோ காத்திருக்கவேண்டும்’’
“யார் சொன்னது நான் காத்திருக்கிறேன் என்று?’’ அலேக்ஸாண்டர் கேட்கிறார்.
“நாம் எல்லாருமே எதற்காகவாவது காத்திருக்கிறோம். அதற்கு நானே சாட்சி. என் வாழ்நாள் முழுக்கவும் ஏதற்காகவாவது நான் காத்திருந்திருக்கிறேன்…’’
டிவியில் அந்த அறிவிப்பு வந்த உடன் அலேக்ஸாண்டர் தனக்குத் தானே கேட்டுக்கொள்கிறார்,
“என் வாழ்நாள் எல்லாம் இதற்காகத்தான் நான் காத்துக்கொண்டிருந்தேனா?’’
அவருடைய துயரத்துக்கு, அவருடை மனைவி கூட காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. விக்டருக்கும் அவளுக்குமான உறவு துல்லியமாக காட்சிப்படுத்தப்படவில்லை என்றாலும் அவர்களுக்குள் நிலவும் அந்நோன்யம் அந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆஸ்திரேலியா போய்விடப்போவதாக விக்டர் சொல்லும் போது அதை தாங்கிக்கொள்ள முடியாமல் அவள் அழுகிறாள். அலேக்ஸாண்டருடன் படுக்கைக்கு வர சம்மதிக்கும் மரியா ‘அவளைத் தெரியும், அவள் நல்லவள் இல்லை’ என்று சொல்வது அவருடைய மனைவியைத்தான் என்பது விளங்குகிறது. அணுகுண்டு பற்றி அறிவிப்பு வந்ததும் அழுது புலம்பும் அவள் தனது பாவங்களுக்கான பரிசாகவே அதைப் பார்க்கிறாள். விக்டருக்கும் அலேக்ஸாண்டரின் மகள் மார்த்தாவுக்குமான உறவு குறித்தும் நெருடல் எழுகிறது. அலேக்ஸாண்டரின் கனவில் தனது ஆடைகளை கலைந்தபடி அவள் விக்டரை அழைக்கிறாள். தனக்கு உதவுமாறு வேண்டுகிறாள். விக்டர் ஆஸ்திரேலியா செல்வதை அனுமதிக்கப் போவதில்லை என்கிறாள்.
மேலோட்டமாகவோ, கறாரான பகுத்தறிவோடோ பார்த்தால் ‘சேக்ரிபைஸ்’ படம் மூட நம்பிக்கையை வலியுறுத்துகிறதோ எனத்தோன்றும். சாமிக்கு பிரார்த்தித்துக்கொண்டு கோயிலுக்கு போய் மொட்டை போடுவதுபோலவோ, கிடா வெட்டுவது போன்ற ஒரு மூட நம்பிக்கை. கடவுளையும், சடங்குகளையும், வழிபாட்டையும் நம்புகிறவர்களுக்கு இது சரி. ஆனால் கடவுளின் இறுப்பை சந்தேகத்தோடு பார்த்து வந்த ஒருவன், மனிதர்கள் மீது நம்பிக்கை கொண்ட ஒருவன், நெருக்கடி வரும் போது என்ன செய்வான்? சக மனிதர்களே கேடு விளைவிக்கும் போது, அவன் வளர்த்தெடுத்த விஞ்ஞானமே அவனைக் கொல்ல வரும்போது, இயற்கையே அழிக்க நினைக்கும் போது அவன் என்ன செய்வான்? எதை நம்பி அவன் வாழ்வது? அவனுடைய அச்சத்தை போக்க என்ன மருந்திருக்கிறது? மீட்சிக்கான வழி எங்கே இருக்கிறது?
இதற்கான விடையைத்தான் தார்க்கோவஸ்கியின் திரைப்படங்கள் தேடிப்போகின்றன. தார்க்கோவஸ்கியே சொல்வது போல இன்று உலகில் ஏற்பட்டிருக்கும் ஆன்மிக வறட்சியை ஈடுசெய்வதற்கான ஒரு முயற்சியே அவருடையத் திரைப்படங்கள். இதற்காக கடந்த காலத்தின் படிமங்களை தனது தேடுதலுக்கு ஆதாரங்களாக எடுத்துக்கொள்கிறார். நோஸ்டால்ஜியாவில் பியரோ டெல்லா பிரான்ஸிஸ்காவின் ‘மடோனா டெல் பார்ட்டோ’ (கர்ப்பிணி மடோனா) ஓவியத்தை எடுத்துக்கொள்வது போல சேக்ரிபைஸில் டாவின்ஸியின் ‘அடோரேஷன்’. இந்த ஓவியத்தோடுதான் தலைப்புக் காட்சியே தொடங்குகிறது. அந்த ஓவியத்தில் இடம்பெரும் மரத்திலிருந்துதான் தனது கதையாடலை அவர் தொடங்குகிறார். ஒட்டோவை அந்த ஓவியம் அச்சமுறச் செய்கிறது. ‘டாவின்ஸி’ இந்த பெயரே அவரை அச்சமூட்டுகிறது. பிரத்தியட்சத்தைக் கண்டு மனம் கொள்ளும் அச்சம்தான் அது. அந்த ஓவியம் ஏதோ ஒரு உண்மையின் ஒளியாக இருக்கிறது. அந்த ஒளியில்தான் தார்க்கோவஸ்கி தனது பயணத்தைத் தொடர்கிறார்.
மரியாவுடன் படுக்கையில் இருக்கும் போது அவர்கள் இருவரும் அந்த ஓவியத்தின் உருவங்களாக மாறிப்போய்விடுகிறார்கள். அவருடைய மகன் மரியாவின் மகனாகி அவளுடைய மடியில் தவழ்கிறான். அவருமே கூட மரியாவின் குழந்தையாகிவிடுகிறார்.
இப்படத்தின் முதல் காட்சியில் அலேக்ஸாண்டர் ஜப்பானிய மரத்தை நடுகிறார். வீட்டில் அவர் ஜப்பானிய இசையைக் கேட்பவராக இருக்கிறார். வீட்டை எரிக்கும் போது அந்த இசையைத்தான் ஒலிக்கவிடுகிறார். இது ஏன் என்ற கேள்விக்கான விளக்கம் படத்தில் சொல்லப்படுவதில்லை. ஆனால், அணுகுண்டால் மிகப்பெரிய பேரழிவை சந்தித்த நாடு என்பதின் சாட்சியாக அவற்றை அர்த்தப்படுத்த முடிகிறது.
நீட்ஷேவின் ஜரதுஷ்ட்ரா இந்த படத்துக்கு பெரும் பங்களிப்பு செய்திருப்பதாக கினோ மோலிட்டர்னோ தனது கட்டுரை ஒன்றில் கூறுகிறார். நீட்ஷேவின் ‘முடிவற்ற சுழற்சி’ குறித்து அலேக்ஸாண்டரும் ஒட்டோவும் செய்யும் உரையாடலை இக்கட்டுரை அதிகம் கவனப்படுத்துகிறது. ‘எது உண்மையாகவும், பரிபூரணமாகவும் இருக்கிறதோ அது சாக விரும்புகிறது. எது கெட்டதோ அது வாழ விரும்புகிறது’ என்ற நீட்ஷேவின் வாசகத்தை இக்கட்டுரைக்கான மேற்கோளாக அவர் தருகிறார். மேலும் அலேக்ஸாண்டரின் மகனை நீட்ஷேவின் ‘குள்ளன்’ பாத்திரத்தோடு ஒப்பிடுகிறார். ஒரு தீவினையின் தாக்குதல் போல அந்த சிறுவன் ஒருமுறை அவர் தோல்மேல் பாய்கிறான். அவனை அவர் ‘சின்ன மனிதரே’ என்றுதான் அழைக்கிறார். ஆரம்ப காட்சியில் அலேக்ஸாண்டரிடம் ஒட்டோ, ‘சில நேரங்களில் மிக முக்கியமான சமிக்ஞைகள் எனக்குக் கிடைக்கும். குள்ளனுக்கு கிடைத்தது போல’ என்கிறார்.
நீட்ஷேவைப் பற்றி பேச்சு வரும் போது, நீட்ஷேவை முழுமையாக தான் படிக்கவில்லை என்று சொல்லும் ஒட்டோ ‘முடிவற்ற சுழற்சி’ குறித்து பேசுகிறார்.
“நமது வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் இருக்கின்றன. நாம் சிலவற்றை நம்புகிறோம். சிலவற்றுக்காக காத்திருக்கிறோம். நாம் நம்பிக்கையை இழக்கும் போது மரணத்தை நோக்கி போகிறோம், முடிவில் சாகிறோம். திரும்ப பிறக்கிறோம். ஆனால் எதுவுமே நமக்கு ஞாபகத்தில் இருப்பதில்லை. எல்லாமே திரும்பவும் தொடங்குகிறது. துல்லியமாக அதே பாதையில் அல்ல. சற்றே வித்தியாசம் இருக்கலாம். ஆனால் அதுவும் நம்பிக்கையற்ற நிலையில்தான் இருக்கிறது. ஏன் என்று நமக்குத் தெரிவதில்லை. என்னைப் பொறுத்தவரை இதுவும் அதேதான், இது இன்னொரு நிகழ்வு. ஒருவேளை இதையெல்லாம் நானே நிர்ணயித்திருந்தாலும் கூட இப்படித்தான் செய்திருப்பேன்.’’
இந்த ‘முடிவற்ற சுழற்சி’ என்ற தனது நம்பிக்கையை உறுதிபடுத்திக்கொள்ளவோ என்னவோ அபூர்வமான சில சம்பவங்களை சேகரிப்பவராக இருக்கிறார் ஒட்டோ. இதற்காக நிறைய பயணங்களை மேற்கொள்வதாகவும், செலவு செய்வதாகவும் சொல்கிறார். ‘எப்படிப்பட்ட சம்பவங்கள்?’ என்ற டாக்டர் விக்டரின் கேள்விக்கு ஒட்டோ சொல்கிறார், “இந்த சம்பவம் போருக்கு முன் நிகழ்ந்தது. கூநிக்ஸ்பர்க் நகரத்தில் தனது மகனுடன் ஒரு விதவைத்தாய் வசித்து வந்தாள். மகனுக்கு 18 வயதிருக்கும். போருக்கு வரும்படி அவனுக்கு அழைப்பு வருகிறது. அவன் போகவேண்டும். அதற்கு முன் தன் மகனுடன் அவள் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்கிறாள். போருக்கு சென்ற அவன் முன்னணி படையில் சேர்ந்து போர்புரிகிறான். அந்த போரில் அவன் கொல்லப்படுகிறான். இது 1940-ல் நடக்கிறது. அந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு அவள் இடம்பெயர்ந்து விடுகிறாள். அந்த புகைப்படம் குறித்து அவள் மறந்துவிடுகிறாள். 1960-ல் தனது தோழிக்கு கொடுப்பதற்காக ஸ்டுடியோவில் போய் புகைப்படம் எடுத்துக்கொள்கிறாள். அதில்அவளுக்கு பக்கத்தில் அவளுடைய மகனும் அமர்ந்திருக்கிறான். 1940-ல் அவன் இருந்த அதே சீருடையோடு.’’
அந்த பெண்மணியிடம் தான் பேசியிருப்பதாகவும், அந்த புகைப்பட நகலும், அவனுடைய இறப்பு சான்றும் தன்னிடம் இருப்பதாக சொல்கிறார். இது போல் 284 சம்பவங்களை அவர் சேகரித்திருக்கிறார். நம்ப முடியாத இதுபோன்ற சம்பவங்களை எதற்காக அவர் சேகரிக்கிறார்?
தினசரி வாழ்வில் நேரும் சில சம்பவங்களின் ஒத்திசைவை கண்டு வியப்பவர்களும், ஏதேச்சைகளுக்கு காரணகாரியங்களை தேடுபவர்களும் இருக்கிறார்கள். ஏற்கெனவே எல்லாம் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தியால் முடிவு செய்யப்பட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். அதன் சமிக்ஞைகளை தாங்கள் புரிந்துகொள்வதாக நம்பத்தொடங்குகிறார்கள். ஒட்டோ அதற்கு மேலும் ஒரு படி மேலே போய் அற்புதங்களை நம்புகிறவராக இருக்கிறார். அற்புதம் நடக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் மரியாவிடம் போனால் எல்லாம் சரியாகிவிடும் என்று அலேக்ஸாண்டருக்கு யோசனை சொல்கிறார். உண்மையில் அற்புதங்கள்தான் மனித குலத்தை காப்பாற்றப் போகிறதா? தார்க்கோவஸ்கி இதைத்தான் நம்புகிறாரா?
இத்திரைப்படத்தில் நிகழும் சம்பவங்கள் எல்லாம் ஒரு நாளில் நிகழ்கின்றன. குறிப்பாக அலேக்ஸாண்டரின் பிறந்த நாளில். அமைதியான உரையாடலோடும், பரிசுகளோடும் தொடங்கும் அவருடைய அன்றைய வாழ்க்கை பேராபத்து ஒன்றை எதிர்கொள்ளத் தயாராகி, அதிலிருந்து விடுபட்டு, தனது வாழ்க்கையையே தியாகம் செய்யவேண்டிய முடிவை நோக்கி நகர்கிறது. தொடர்ச்சியான காட்சி அமைப்புகளோடு, பெரிய அரங்கில் நிகழ்த்தப்பட்ட ஒரு நாடகம் போன்ற தன்மையை வெளிப்படுத்துகிறது இதன் ஆக்கம்.
‘சேக்ரிபைஸ்’ துயரத்தை இழைக்கும் ஒரு நாடகம்தான் என்பதில் சந்தேகமில்லை. அது ஒரு புனிதப் பிரதி. மனித மீட்சியைக் குறித்த ஒரு கனவு. அது நம் இருதயத்தை கையில் பிடித்து சோதித்துவிட்டுச் செல்கிறது. மேலான இருப்பை உணர்த்திவிட்டுச்செல்கிறது. அதன் தேகத்தில் பதியும் சாட்டையிலிருந்து தெரிக்கும் ரத்தம் நம் முகத்தில் சிதறுகிறது.
ஒரு படைப்பாளியின் மௌனம் அவனையே தீய்க்கக்கூடியது. அதனால் அவன் பேசவேண்டியிருக்கிறது. அவனுக்குள்ளான முரண்களை, ஆதங்கங்களை, வருத்தங்களை, கல்மிஷங்களை, ஆபாசங்களை இந்த உலகுக்கு முன் வைக்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் அவை விஷமாகி அவனுடைய ரத்தத்தில் கலக்கவே செய்யும். வாழ்க்கையின் உள் முரண்களை, உலகத்தின் துயரங்களை அவன் கவனம்கொள்ளவேண்டியிருக்கிறது. தார்க்கோவஸ்கியின் பாத்திரம் அதுதான். ‘இவான் சைல்டு வுட்’ தொடங்கி சேக்ரிபைஸ் வரை அவருடைய படைப்புகள் எல்லாமே துயர காவியங்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. உலகத்தின் மேல் கவிந்துள்ள பேராபத்தை குறித்து அவர் திறந்த மனதுடன் பேச விரும்பினார். தனது குரலை இந்த உலகம் கேட்க வேண்டுமென்று விரும்பினார். அதுதான் அவருடையத் திரைப்படங்கள்.
Leave a Reply