நீருக்கடியில் சில குரல்கள்

%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3

பிரபு காளிதாஸின் நீருக்கடியில் சில குரல்கள் தமிழுக்கு ஒரு புதிய வரவு. எதிர்பார்த்ததை விட நாவலை கச்சிதமான வடிவத்தில் தந்திருக்கிறார். ஜி.நாகராஜனின் நாளை மற்றொமொரு நாளே நாவலை நினைவுபடுத்தும் கதை சொல்லல். முதல் நாவல் என்று கருத முடியாத அளவுக்கு வரிகள் தெளிவான, நெருடலற்ற விவரணையைத் தருகின்றன. விளிம்பு நிலை மனிதர்கள் அதிகம் தென்படும் இந்த கதைக் களத்தில் தயக்கமின்றி அவரால் பயணிக்க முடிகிறது. பாலியல் விஷயங்களைக் கூட போகிற போக்கில் ஒரு சில வரிகளில் விவரித்துச் சென்றுவிடமுடிகிறது. மேலும் அதில் முதிர்ச்சி தென்படுகிறது.
சுந்தரின் அம்மா, அப்பளம் கணேசனின் அம்மாவைத் தவிர்த்து மீதி எல்லாப் பெண்களுமே வரம்புகளைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனாலும் அச்சூழலில் இயல்புடன், அவர்களால் அப்படித்தான் இருக்க முடியும் என்பது போலப் பொருந்திப் போகிறார்கள்.
சிறுவர்களின் மனப்போக்கு சில இடங்களைத் தவிர மிகையின்றி வெளிப்பட்டிருக்கிறது. சூழலில் அவர்கள் காட்டும் ஆவேசமும் அத்துமீறலும் வன்முறையும் திகைக்கச் செய்கிறது. சில நேரங்களில் வாய்விட்ட சிரிக்க வைக்கிறது.
மனிதர்களைத் தாண்டி சூழலை கவனத்துடனும் நுட்பத்துடன் காட்சிப்படுத்தக் கற்றிருக்கிறார் பிரபு காளிதாஸ். உதாராணமாகத் ராணிப் பேரடைஸில் காலைக் காட்சித் தொடங்கும் நேரத்தில் தர்மலிங்கத்தைப் பார்க்க கதிரவன் காத்திருக்கிறான். அப்போது அங்கே கொக்கு வேட்டைக்கு சென்றுவிட்டு சினிமா பார்க்கக் காத்திருக்கும் குருவிக்காரர்களை சுற்றி நிகழும் சம்பவங்கள். அது கதைப் போக்குக்கு அவசியம் இல்லை என்றாலும் துருத்தலாக இல்லாமல் சேர்க்கப்பட்டுள்ளது. ரவியோடு சுந்தரின் அப்பா சண்டை பிடிக்கும் போது மேல பறவைக் கூட்டம் ஒன்று வேகமாக கடந்து செல்கிறது.
மேலும் சுந்தர், கதிரவன் என்ற இரண்டு பிரதானப் பாத்திரங்களின் இணையான நகர்வுகள் தபால் அலுவகத்தில் ஒன்றை ஒன்று தொட்டுச் செல்லும் இடம் நாவலின் வடிவமைப்பில் படைப்பாளியின் கவனமான பிரக்ஞை நிலை வெளிப்படுகிறது.
ஆரம்ப அத்தியாயங்களில் தென்படும் தடுமாற்றம் பின்பு நீங்கி கதை எந்த சிடுக்கும் இல்லாமல் பயணிக்கிறது. சுந்தர், கருவாயன், கதிரவன் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களாக இருந்தாலும் வாசகர்கள் அவர்களின் வயதை நிர்ணயத்துக்கொள்வதற்கான காட்சிகளோ, குறிப்புணர்த்தல்களோ இல்லாதது குறையாகத் தோன்றியது. அப்பளம் கணேசன் என்கிற தாதா தொடர்பான பகுதியில் சினிமாத்தனம் தென்படுவதை கொஞ்சம் வேறுவிதமாக வெளிப்படுத்த முயன்றிருக்கலாம். கே.என்.செந்தில் கூட இது போல ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அதுவும் இந்த ஆபத்தில் சிக்கிவிட்ட கதையாகவே தோன்றியது. ஒருவேளை சினிமாக்காரர்கள் வேண்டிய அளவு அவ்வாழ்வியலை பாழ்படுத்திவிட்டார்களோ என்னவோ.
ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் முன்பும் உபநிஷத்திலிருந்து மேற்கோள் ஒன்றை சொருகியிருக்கிறார். என் அறிவுக்கு எட்டியவரை அவற்றைப் பொருத்திப் பார்த்தேன் எதுவும் பொருந்தியது போலத் தெரியவில்லை.
ஒரே அமர்வில் வாசித்துவிடக் கூடிய விஷயங்கள் நிறைந்துகிடப்பது நாவலை முக்கியப்படுத்துகிறது. தமிழுக்கு ஒரு நல்ல கதை சொல்லி கிடைத்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

உயிர்மை வெளியீடு, பக்கங்கள்: 128, விலை ரூ.120.

%d bloggers like this: