1. மான்
அவன் எங்கோ வெறித்தபடி நின்றிருந்தபோது ஒரு நாய் ஒரு மானைத் துரத்திக்கொண்டு வருவதைப் பார்த்தான். அந்த இடம் மேடும் பள்ளமும் ஓடையும் பின்னிய சமவெளியாக அவனுக்குத் தெரிந்தது. ஓடையை ஒட்டி இரு கரைகளிலும் வளர்ந்து அடர்ந்து கிடந்த மரங்களும் புதர்களும் வேலிபோல அச்சமவெளியைப் பிரித்துச் சென்றன. ஓடை அநேகமாகக் கடலில் சென்று சேரும் போல் தோன்றியது. ஆமாம். அதோ தெரிகிறதே மேடு, அதன் சரிவில் வெகு தொலைவில் ஒரு பிரம்மாண்டமான கடல் இருக்கிறது.
மேட்டில் ஏராளமான ஆட்கள் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவனுக்குச் சமீபத்தில் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் உல்லாசமாகத் திரிகிறார்கள். இந்த இடம் திறந்தவெளி மிருகக்காட்சி சாலையே தவிர வேறில்லை. இதைக் காணத்தான் அவனும் வந்திருக்கிறான்.
சில மிருகங்களைக் கூண்டுகளில் அடைத்து வைத்துவிட்டுச் சில மிருகங்களை வெளியே உலாவ விட்டிருக்கிறார்கள். கூண்டுக்கருகில் அதிக நெரிசல் காணப்படுகிறது. அந்த மிருகங்களைக் காண முட்டி மோதுகிறார்கள். ஆபத்தான காட்டு மிருகங்கள் அவை. காட்டுமிருகங்கள்தான் என்றாலும் எப்போதாவது காட்டைப் பார்த்திருக்கின்றனவா – தெரியவில்லை. ஒரு வேளை அவற்றின் தாய் மிருகங்களோ, மூதாதையர்களோ காட்டில் வசித்திருக்கலாம்.
இதோ இந்த மான் போன்ற சாதுவான பிராணிகள் திறந்தவெளியில் திரிகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித்தான் நாய் மானைத் துரத்திக்கொண்டு வந்திருக்கிறது. சுற்றி வளைத்து விட்டது. மானின் முகத்தருகே உறுமி, தனது விரோதத்தைத் திறந்த பற்களின் மூலம் உணர்த்துகிறது. மானோ அச்சமுற்று திகைத்து நிற்கிறது.
அது ஓடையை ஒட்டிய சரிவு. இரண்டு பக்கமும் வேலி போட்டதுபோல் புதர். ஒரு பக்கம் நாய், இன்னொரு பக்கம் இவன். இப்படித்தான் அந்த மான் இவனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவன் மகிழ்ச்சியுற்றான். எதிர்பாராமல் ஒரு அற்புத அன்பளிப்பு அவனுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த நாய்க்கு மான் தேவைப்படவில்லை. விரட்டிக்கொண்டு வந்தது அவ்வளவுதான்; ஏதோ ஒரு தினவு, நாயாக பிறந்துவிட்டதன் குணசேஷ்டை.
மான் நல்ல வளர்ச்சியுடன் இருந்தது. கொம்புகள்கூட நேர்த்தியாக இருந்தன. கொம்புகளுடன் உள்ள மான்களைக் காணும்போது, பொருத்தமில்லாத எதையோ தலையில் சுமந்தபடி திரிகிறதே எனத் தோன்றும் அவனுக்கு.
மான் கறி சாப்பிட்டு அவனுக்கு வெகு நாட்களாகி விட்டது. எப்போது கடைசியாகச் சாப்பிட்டோம் என்பதுகூட மறந்து போய் விட்டது. இப்போதெல்லாம் மான்கள் அவ்வளவு சுலபமாகக் கிடைப்பதில்லை. வேட்டைக்காரர்களுக்குப் புலப்படாமல் காட்டில் வெகு தொலைவுக்குப் போய்விட்டன அவை.
அவனுக்கு அருகில் ஆட்கள் யாரும் தென்படவில்லை. எல்லோரும் தொலைவில் இருக்கிறார்கள். பக்கத்தில் போனதும் நாயும் பின்வாங்கிவிட்டது. இனி தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதுபோல மான் அவனிடத்தில் பணிந்து நின்றதைக் கண்டான். தன்னைச் சீண்டும் உல்லாசிகளுடனும், நாயுடனும் போராடிக் களைத்ததுபோலக் காணப்பட்டது.
அவன் மானின் அருகே போய் முதுகின் மேல் தட்டி உரிமையுடன் அதட்டினான். அது அவனுடன் ஓடையை நோக்கிச் சென்றது. இருவரும் பள்ளத்தில் இறங்கினார்கள். ஓடையில் நீர்வரத்து நின்று, வெறும் மணல் பாட்டை மட்டும் ரகசியமாகப் புதருக்குள் நீண்டு படுத்திருக்கிறது. இந்த ஓடை அதோ தெரிகிறதே காடு, அதற்குள்ளிருந்துதான் வெளிப்பட்டு இச்சமவெளிக்கு வருகிறது. காடுகளிலிருந்து ஒவ்வொன்றாக வெளியேறிக் கொண்டிருக்க இந்த ஓடை மட்டும் தனது வேர்களைக் காட்டுக்குள் எப்போதும் புதைத்தே வைத்திருக்கிறது.
அகலமான இலைகள் கொண்ட சில செடிகளை வெட்டி மணலின் மேல் பரப்பி மானை அதன் மேல் நிற்க வைத்தான். அதிசயிக்கத்தக்க ஒரு பணிதலுடன் அது நின்றது. துக்கத்தில் உறைந்திருந்தது அதன் கண்கள். அதன் குரல்வளையை அறுத்தபோதும், மினுமினுப்பான அதன் வயிற்றைப் பிளந்தபோதும் அது திமிறவில்லை, எதிர்ப்பெதுவும் தெரிவிக்கவில்லை.
கத்தியால் மானைச் சிறிய துண்டுகளாக்கினான். சிறிது நேரத்திற்கு முன் துள்ளி விளையாடிக்கொண்டிருந்த மான் இப்போது வெறும் மாமிசப்பிண்டங்களாகப் பகுக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டபோது மனம் சற்று வருந்தத்தான் செய்தது. ரத்தம் தோய்ந்த இலைகள் அங்கே கலைந்து கிடந்தன. புதர்களுக்கு மேலே காகங்கள் கூச்சலுடன் வட்டமிட்டுக்கொண்டிருந்தன. பக்கத்தில் துண்டை விரித்து அதன் மேல் பசும் இலைகளை அடுக்கினான். அப்போது புதருக்குள் தலையை விட்டுப் பார்த்துக்கொண்டிருந்த நாய் அவனைத் திடுக்கிட வைத்தது. மானை முதலில் துரத்திக்கொண்டு வந்த நாய்தான் அது. மாமிசத்தின் மீதான விருப்பமும், இயலாமையும் அதன் பார்வையில் தெரிந்தது. குடலை எடுத்து நாய் இருந்த திசையில் வீசி எறிந்தான். அவசரத்தில் ஒன்றுக்கும் உதவாதபடித் தோலைச் சிதைத்து விட்டிருந்தது கத்தி. மிச்சமிருந்தது கொம்பு ஒன்றுதான். இது போன்ற மான் கொம்புகளைத் தனது வீட்டில் நிறைய பார்த்திருக்கிறான். அவனுடைய அப்பா கொண்டுவந்து வைத்திருந்தார். அந்தக் கொம்புகளுக்கு மான் தலை செய்யச்சொல்லி குயவனுக்குச் சொல்லியிருந்தார். அவனோ செய்து கொடுக்காமல் கடைசிவரை ஏதேதோ சாக்கு சொல்லி தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தவன் ஒரு நாள் செத்தே போனான். ஒரு வேளை மான்தலை செய்ய அவனுக்குத் தெரியவில்லையோ என்னவோ. இறுதிவரை தங்களுக்கு ஒரு தலை கிடைக்காத அந்த மான் கொம்புகள் நீண்ட நாட்கள் பரணிலேயே கிடந்து காணாமல் போயின.
கொம்பைக் கொண்டுபோனால் நிச்சயம் அது நம்மைக் காட்டிக்கொடுத்துவிடும் என்று யோசித்தவன் அதைப் புதருக்குள் வீசியெறிந்தான். மூட்டையைத் தூக்கிக்கொண்டு ஓடையை விட்டு மேலே வந்தான். செருப்புக்குள் ஒட்டியிருந்த மாமிசத்துண்டு கால்களில் நசுங்கிப் பிசுபிசுத்தது. சங்கடத்துடன் செருப்பைக் கழட்டித் துடைத்து மாட்டிக்கொண்டான். ஒருவரும் அவனைக் கவனிக்கவில்லை, சந்தேகம் கொள்ளவில்லை.
வயல் வரப்பு வழியே அவன் வந்து கொண்டிருந்தான். மூட்டை அதிகம் கனத்தது. தோள்பட்டையெல்லாம் வலி. இரண்டு பக்கங்களிலும் மாற்றி மாற்றிச் சுமந்து வந்தான். மூட்டையில் ஆங்காங்கே ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. வீட்டிற்குக் கொண்டு போய்விட்டால் பிரச்சினை இல்லை. இன்னும் அவனுடைய வீடு வெகு தொலைவில் இருக்கிறது. அங்குபோய் சேர்வதற்குள் துண்டு முழுவதும் நனைந்துவிடும்.
ஏதோ ஒரு உணர்வில் பின்னால் திரும்பிப்பார்த்தான். தொலைவில் கூட்டமாக ஆட்கள் தென்பட்டார்கள். அவர்கள் இவன் வந்த பாதையில்தான் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள், ஆமாம், அவர்களுக்குத் தெரிந்துவிட்டிருக்கிறது. எதுவோ காட்டிக்கொடுத்திருக்கிறது. பயத்தில் சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுக்குச் சமீபத்தில் இருந்தது சின்னத்தம்பி கவுண்டனுடைய வீடுதான். அங்குதான் போக வேண்டும். எப்போதும் இதுபோல் குற்றம் புரிந்ததில்லை. அவனுக்கு இதெல்லாம் பழக்கமில்லை. ஏதோ ஒரு உந்துதலில், ஆர்வத்தில் செய்துவிட்டான்.
வீட்டுக்கு முன்னால் இருந்த களத்தில் ஆட்கள் யாரும் தென்படவில்லை. தொலைவில் எங்கோ வேலை செய்து கொண்டிருப்பார்கள்; இல்லையெனில் அருகிலிருக்கும் காட்டுக்குப் போயிருக்க வேண்டும். வரப்பிலிருந்து களத்தில் இறங்கித் துரிதமாக நடந்து வீட்டுக்குள் புகுந்தான். கதவு வெறுமனே சாத்தப்பட்டிருந்தது. இரண்டு திண்ணைகளும் மூங்கில் தட்டியால் மறைக்கப்பட்டிருந்தன. வலது பக்கத் திண்ணையில் உரலும், உரலுக்குப் பின்னால் கூடைகளும், மண்வெட்டிகளும் கிடந்தன. திண்ணையின் மேல் ஏறி ஒரு கூடையை எடுத்து அதற்குக் கீழே மூட்டையை வைத்துக் கவிழ்த்து மூடினான். அதன் மேல் மண்வெட்டி ஒன்றை வைத்தான். கீழே இறங்கி வந்து வெளியே எட்டிப்பார்த்தான். ஆட்கள் இன்னும் வந்துகொண்டே இருந்தார்கள். ஆனால் அவன் இங்கே ஒளிந்துகொண்டதை யாரும் பார்த்திருக்க முடியாது.
அவர்கள் யாராக இருக்குமென்று அவனால் சரியாக யூகிக்க முடியவில்லை. மிருகக்காட்சிசாலை பாதுகாவலர்களா? வனத்துறையினரா? வரிசையான அந்தக் கூட்டத்தைப் பார்த்தால் அது மலைவாசிகள் போலவும் இருந்தது. நிச்சயம் இவனைத் தேடித்தான் அவர்கள் வருகிறார்கள். இந்த மானுக்கு உரியவர்களாக இருக்கலாம். மான் யாருக்குச் சொந்தமானதாக இருக்கும்? மான் கறியில் அவர்களுக்குப் பங்கு தர வேண்டியிருக்குமோ, என்று சந்தேகம் எழுந்தது.
கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனான். வீட்டில் ஒருவரும் இல்லை. கதவை லேசாக மூடிவிட்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்தான். கையில் ரத்தம் பிசுபிசுத்தது. அவனுடைய வேட்டி சட்டையிலும்கூட சில இடங்களில் ரத்தம் படிந்திருந்தது. இன்னும் நன்றாக மூடித் தாழ் போட்டான். திரும்பவும் உட்கார்ந்தான். ஆட்கள் பேசும் சத்தம் தொலைவில் கேட்டது. அது இன்னும் நெருங்கி வந்துகொண்டிருந்தது. தன்னைப் பிடிக்கமுடியாது என்று தெரிந்தும்கூட பயம் அவனை விட்டு அகலவில்லை. அவர்களிடம் அகப்பட்டுக்கொண்டிருந்தால் எவ்வளவு அவமானம்? சின்னத்தம்பி கவுண்டனோ அவன் வீட்டில் வேறு யாராவது இப்போது வந்துவிட்டால் என்ன செய்வது என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை. கவுண்டன் மட்டும் யோக்கியனில்லை. திருடிவிட்டு எத்தனையோமுறை பஞ்சாயத்தில் கைகட்டி நின்றிருக்கிறான். இவர்களுடைய தோப்பிலேயே ஒருமுறை தேங்காய் திருடிவிட்டு அகப்பட்டுக் கொண்டவன்தான். அவனைப் பிடித்துவந்து மரத்தில் கட்டித் தென்னம்பட்டையால் விளாசினார் இவனுடைய மாமா. அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் குறைக்கச் சொல்லி அவன் ஊராரின் காலில் விழுந்து கெஞ்சியது இவனுக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.
வீட்டுக்குள் ஏதோ நாற்றம்? என்ன நாற்றம் என்பது புரியவில்லை. சுற்றிலும் பார்த்தான். மேலே கூரையில் தையல் இலைகளைக் கோர்த்துத் தொங்கவிட்டிருந்தனர். இன்னொரு இடத்தில் மாட்டின் கழுத்துமணிகள், நெற்றிக் கயிறுகள், அதற்குப் பக்கத்தில் கருத்த நிறத்திலான மாமிசத்துண்டுகள் ஒரு நூலில் கோர்க்கப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தன. உப்புக்கண்டத் தோரணம். என்ன கறி என்று தெரியவில்லை. மான் கறியாகக்கூட இருக்கலாம், சின்னதம்பி கவுண்டனும் வேட்டைக்காரன்தான். தின்றது போக மீதியை இங்கே தோரணமாகத் தொங்கவிட்டு வைத்திருக்கிறான் போல. கூரைக்குக் கீழே பரண் ஒன்று இருந்தது. பெரிய பரண். அதில் ஏழெட்டு வாக்கூடைகள் ஒன்றாக கட்டிப் போடப்பட்டிருந்தன. இன்னும் என்னென்னவோ சாமான்கள். எல்லாம் திருட்டுப் பொருட்களாகத்தான் இருக்க வேண்டும். உள்ளே தேடினால் இவர்களுடைய பொருட்கள்கூடக் கிடைக்கலாம். பரணில் அவைகளுக்கு மத்தியில் நிறைய மான் கொம்புகள் தென்பட்டன.
இப்போது ஆட்களின் சத்தம் கேட்கவில்லை. அவர்கள் இந்த இடத்தைக் கடந்து போய்விட்டிருந்தார்கள். இதற்கு மேல் ஒன்றும் பயமில்லை. தப்பித்துவிட்டோம் என்பது உறுதியாகிவிட்டது அவனுக்கு.
மறுநாளாகத்தான் இருக்க வேண்டும், அவன் தன்னுடைய வயலில் நின்றிருந்தபோது தொலைவில் சின்னதம்பி கவுண்டன் தெரிந்தான். வரப்பில் இவனைப் பார்த்துத்தான் வந்து கொண்டிருந்தான். எதற்காக இங்கே வருகிறான் என்பது தெரியவில்லை; பயம் அடிவயிற்றில் இறங்கியது.
கவுண்டன் எப்போதும் போல உற்சாகத்துடன் காணப்பட்டான். குற்றத்தின் நிழல் இன்னும் மறையவில்லை; பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அருகே நெருங்கி வருகிறான். அவன் முகத்தில் தெரிந்த சிரிப்பு, தேகத்தின் ஒவ்வொரு அணுவிலும் அவமானத்தின் ஊசியைப் பாய்ச்சுகிறது.
அருகில் வந்ததும் கேட்டான், “சுப்பிரமணி, நாளைக்கு நடுகுப்பம் காட்டுக்கு வேட்டைக்கு போறோம் வர்றியா? அங்கே மானுங்க தென்படுதாம்.’’
“இல்லை, நான் வரலை’’ என்றான் இவன்.
“ஏன் உனக்கு மான் கறி ஒத்துக்காதோ?“
“வேலையிருக்கு.’’
“வேலையா? பொண்டாட்டிதான் ஊரிலே இல்லையே, இராத்திரியில போயி என்ன வேல பாக்க போற. ஆத்துத் தெரு ஆட்களெல்லாம் வர்றேன்னு சொல்லியிருக்காங்க’’
“பருத்திக்கு தண்ணி மாறணும், பத்து நிமிசத்தில வடிஞ்சு போகுது, நிறுத்தி நிறுத்தி விடணும். சப்ளை வேற சரியா வரலை…’’
“சரி உனக்கு இஷ்டமில்லை. நேத்துகூட எங்க ஊட்ல மான் கறி’’ இரண்டு கையையும் சேர்த்துச் சொன்னான். “இவ்வளவு மான் கறி, யாரோ ஒரு புண்ணியவான் துண்டுல கட்டி கொண்டுவந்து போட்டுவிட்டு போயிருந்தான்.’’
திரும்பிப் போகையில்தான் அவனுடைய கால்களைக் கவனித்தான். இவனுடைய செருப்பை அவன் போட்டிருந்தான். அவசரத்தில் செருப்பை அவன் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தது இப்போதுதான் ஞாபகத்தில் வந்தது.
2. வழித்துணை
சாலையில் ஆட்களின் நடமாட்டம் நின்று போயிருந்தது. அவன் மட்டும் தனியாக நடந்துகொண்டிருந்தான். பத்துப்பதினோரு மணிக்கு வீடுதிரும்புவது என்பது அவனுக்கு இப்போது சகஜமாகிவிட்டது. அவனுடைய குடியிருப்பு நகரத்திலிருந்து விலகியிருந்தது. இரண்டு கிலோமீட்டருக்கும் மேலே இருக்கும். இடையில் தெருவிளக்குகள் இல்லாததால் அது முற்றாகத் துண்டிக்கப்பட்ட பிரதேசம் போன்று தோற்றம் தந்தது.
இன்று வானத்தில் நிலவு இல்லை. நட்சத்திரங்கள் மட்டும் மினுமினுத்துக்கொண்டிருந்தன. இதுபோன்று எப்போதாவதுதான் வானம் அவனுக்குப் பார்க்கக்கிடைக்கிறது. அப்படியே கிடைத்தாலும் அது பிரக்ஞைக்குள் வந்து படர்வது அரிதாகிவிட்டது. அவன் அம்மாவைப் பற்றிய நினைவுகூட அப்படித்தான். இரண்டு மூன்று நாட்கள்கூட அவளைப் பற்றிய யோசனைகள் இல்லாமல் இருக்க நேரிடுகிறது. வேறு ஏதேதோ வேலைகள், உறவுகள். இவ்வளவு இருந்தும் சமீப காலங்களில் ஜனசஞ்சாரத்திலிருந்து விலகி விலகி எங்கோ தனியாகப் பிரயாணப் பட்டுக்கொண்டிருப்பதான ஒரு உணர்வு ஏற்படுகிறது. இது தன்னை எங்கே கொண்டு சேர்க்குமோ என்று அச்சப்பட்டான்.
அவனுடைய சினேகிதி சொல்கிறாள்,
“உங்களைத் திரும்பவும் சந்திக்காமலேயே போய்விட்டால் என்ன ஆவேன்? பயமாக இருக்கிறது…எதையும் நம்பமுடியவில்லை.’’
அவனுக்கும்தான், அவள் கிடைப்பாள் என்பதை, இப்போது கிடைத்திருப்பதை. காலம் எப்போது வேண்டுமானாலும் அற்புதங்களைப் பிடுங்கிக்கொண்டு போய்விடலாம். இதுதான் எல்லோரையும் கலங்கச்செய்கிறது போலும்.
அவளைப் பற்றிய எண்ணங்களுடன் துக்கமும் ஏன் உடன் சேர்ந்து வர வேண்டும்? பிரகாசிக்கும் கண்களுடன் தோன்றிய அவள் முகம் படர்ந்த நினைவுகள், நீரைப் போல அலைவுற்றபடி வருகையில் அவனுக்கு முன்னே நாய்க்குட்டி ஒன்று போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். எதிர்பாராமல் அது எங்கோ ஓரமாக இருந்து சாலைக்கு வந்ததில் ஒரு கணம் அவன் உடல் திடுக்கிட்டு அடங்கியது. சாதாரண நாய்க்குட்டிதான். கறுத்¢த நிறம். வேறு அடர்ந்த நிறமாகக்கூட இருக்கலாம். இந்த தாட்சண்யமற்ற இருளில் எதைத்தான் சரியாகப் பார்க்க முடிகிறது?
எந்தத் துணையுமில்லாமால் இந்த நேரத்தில் எங்கே போய்க்கொண்டிருக்கிறது நாய்க்குட்டி? பகல் பொழுதென்றால் யாரும் இதைக் கவனிக்கப்போவதில்லை; எதிர்ப்படும் எவ்வளவோ நாய்களைப்போல என இருந்திருப்பான். ஆனால் இதுவோ அவனுக்காகவே காத்திருந்து, வம்புக்கு வந்ததுபோல வந்திருக்கிறது.
அவன் கேட்டான்,
“நாய்க்குட்டியே, நீ யாருக்காகக் காத்திருந்தாய், எனக்காகவா?’’
அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல், அது சாலையே தானென்று போய்க்கொண்டிருந்தது. எவ்வளவு நேரம் வெறுமனே நடப்பது? ஏதாவது பேச வேண்டியதுதானே? அவனிடம் பேச அதற்கு விருப்பமில்லை போலத் தெரிந்தது. ஆமாம், மனிதர்களிடம் பேச அதற்கு என்ன இருக்கிறது?
அவன் கேட்டான்,
“நாய்க்குட்டியே! உன் புகலிடம் எங்கே இருக்கிறது? அங்குதான் பிரயாணமா, வேறு எங்காவதா? ‘’
அது அவனுடைய கேள்விகளைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அச்சமூட்டும் இந்த இரவில் சாலையில் தனியாக… அவனுக்கு தாஸ்தாவஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ கதாநாயகன் ஞாபகத்தில் வந்தான். ஒரு வேளை இந்த நாய்க்குட்டியும் காதலைத் தேடித்தான் போய்க்கொண்டிருக்கிறதோ என்னவோ.
திரும்பவும் பேச்சுக் கொடுத்துப்பார்த்தான்,
“உணவை முடித்துக்கொண்டாயா? எங்கே உறங்கப்போகிறாய்?’’
ஒரு பதிலும் இல்லை.
அவனது துணையை நிராகரிக்கத்தான் இந்த மௌனம் காட்டுகிறதாக இருக்கும். இல்லை மனிதர்களைப்போல அசட்டுத்தனமாக ஏதாவது வைராக்கியமா, பேசுவதில்லை என்று?
அவன் கேட்டான்,
“நீ எங்கிருந்து வருகிறாய்? உனது பூர்வீகம் எது? அந்நிய தேசமா? கடல்கடந்து வருகிறாயா? ஒரு வேளை வேற்றுக்கிரக வாசியா நீ?’’
அவன் மகன் பிறந்ததும் இப்படித்தான் நினைக்கத் தோன்றியது, வேற்றுக்கிரக வாசிபோல; ஒரு பயணியாக அவன் இந்த பூமிக்கு வந்திருக்கிறவன்போல.
சாலையில் நாய்க்குட்டியைக் காணவில்லை. எங்கே போய்விட்டது?
கூப்பிட்டுப் பார்க்கலாமா என்று நினைத்தான். என்னவென்று கூப்பிடுவது? பெயர் தெரியவில்லை. இது பெயர் இடப்படாத நாய்க்குட்டியாக இருக்கலாம். சுதந்திரவான்களுக்குப் பெயர் தேவையில்லை. மனிதர்களுக்குத்தான் பெயர் அவசியம்; அடிமை கொள்வதற்கும் அடிமையாவதற்கும். அது கெடாவா பெட்டையா என்றுகூடத் தெரியவில்லை. பெட்டை என்றால் சிரமம்தான். கறுப்பாகவேறு தெரிகிறது. மனித ஆதரவின்றி தெருவிலேயே வாழ்ந்து தெருவிலேயே மடிய வேண்டியதுதான். இதற்காக ஒன்றும் அது வருந்தப்போவதில்லை. வெட்டவெளிதான் இவைகளுக்கு வாழ்விடம். மனிதர்களுக்குதான் பாதுகாப்பான கூடு தேவை. அலங்காரமான கூடாக இருந்தால் இன்னும் அவனுக்கு சந்தோசம்.
திரும்பவும் அது சாலையில் தோன்றியது.
இருளானது, தாய் தன் குட்டியோடு விளையாடுவது போல இந்த நாய்க்குட்டியோடு விளையாடுவதாக அவனுக்குத் தோன்றியது; கவ்வியிழுப்பதும் தப்பவிடுவதுமாக.
அவன் சொன்னான்,
“வந்துவிட்டாயா ரொம்ப மகிழ்ச்சி. எங்கே போயிருந்தாய்? திரும்பவும் வரமாட்டாயோ என்று நினைத்தேன்.’’
இப்போதும் கூட அது அவனைப் பொருட்படுத்தவில்லை. மனிதனின் ஆதரவை ஏன் இப்படி நிராகரிக்க வேண்டும்? ஏன் வினோதமாக நடந்துகொள்கிறது? ஒரு வேளை பிசாசோ! பிசாசுகள்தான் நாயுருவில் தோன்றுமென்று சொல்வார்கள். பகலில் இவ்வழியாக நடந்துபோன ஒரு நாய்க்குட்டியின் நிழல்தான் இப்படிப் பின்தங்கிவிட்டதாகவும் அவனுக்குத் தோன்றியது. இந்தநிழல் தனிமைப் பட்டதாக, துக்கம் நிறைந்ததாக இருக்கிறது.
“ஆமாம், எல்லோரும் என்னைக் கடந்து சடுதியாகப் போய்க்கொண்டிருக்கையில் நான் மட்டும் பின்தங்கிப் போனேன்’’ என்றாள் ஒரு நாள் அவன் சினேகிதி. “எனக்காக நீங்கள் தாமதம் காட்டுவது ஆறுதலாக இருக்கிறது. யாராவது உங்களைச் சங்கடப்படுத்தி உடன் கொண்டு போய்விடுவார்களோ என்ற அச்சமும் தோன்றுகிறது. என்னை விட்டு அவர்களுடன் செல்லும் நீங்கள் திரும்பிப் பார்க்கும் வேளை என் தனிமை மேலும் வலிமிக்கதாகும் இல்லையா?’’
தனிமை!
“நாய்க்குட்டியே! இந்த வலியும், துன்பமும் எங்களுக்கு மட்டும்தானா? இது உன்னைத் துன்புறுத்தவில்லையா?’’
“இந்தத் தோட்டத்தில் தனியே கிடந்து ஏன் கஷ்டப்பட வேண்டும். என்னுடனேயே நகரத்திற்கு வந்துவிடுங்கள்’’ என்று சொன்னபோது அவன் அம்மா சொன்னாள், “எனக்கு இது ஒன்றும் புதுசில்லையே, நான் இங்கேயே இருந்து விடுகிறேன், எனக்குப் பழகிப்போய்விட்டது.’’
ஆமாம், இந்த நாய்குட்டிகூட தனிமைக்குப் பழகி விட்டிருக்கலாம் இந்த நகரத்திற்கு; நான் பழகிக்கொண்டது போல.
எத்தனை விதமான யோசனைகளில் கிடந்து அல்லாடுகிறேன்! ஆனால் இதுவோ கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டிருக்கிறது. வைராக்கியம் மிக்கதான மௌனம். யாருக்குத் தெரிகிறது, இந்த மௌனமே இதன் கண்டுகொள்ளும் முறையாகக்கூட இருக்கலாம்.
அவன் கேட்டான்,
“உன்னுடைய தாய் எங்கே இருக்கிறாள்? உன்னைத் தனியாக்கிவிட்டு எங்கே போயிருக்கிறாள்? என்னைப்போல நீதான் அவளை விட்டு வந்திருக்கிறாயா?’’
“இந்நேரத்தில் தோட்டத்தில் உள்ள எங்களது வீட்டில் திண்ணையில் வானத்தைப் பார்த்தபடி அவள் படுத்திருப்பாள்; உறங்கிப்போயிருக்கலாம்; சுவரில் சாய்ந்து உட்கார்ந்து, இருளில் அசையும் தென்னை மரங்களை வெறித்தபடி இருக்கலாம். அழுதுகொண்டிருக்கக்கூடும். எத்தனையோ இரவுகளில் தனிமையில் அவள் அழுவதைப் பார்த்திருக்கிறேன். எதற்காக அழுகிறாள்? யாருக்குத் தெரியும், எவ்வளவோ காரணங்கள். தனது வாழ்நாளில் இழந்தவற்றையும், அடைந்தவற்றையும் அவள் மனம் கணக்கிட்டுக்கொண்டே இருக்கும் போல.’’
“நீ எப்போதாவது அழுதிருக்கிறாயா? சென்டிமென்ட் டெல்லாம் உண்டா உனக்கு? ஓரு வேளை போஸ்ட் மார்டனிஸ்டா நீ?’’
அவன் தலைக்கு மேலே காற்றை உலுக்கியபடி ஒரு வௌவால் விருட்டென்று பறந்து மறைந்தது. அண்ணாந்து பார்த்துத் துழாவினான். எதுவும் தென்படவில்லை. வான்வெளி இன்னும் வசீகரமாகத் தெரிந்தது.
“என்னுடைய கேள்விகளும் பதில்களும் உனக்குப் புரிகிறதா என்று தெரியவில்லை. ஆனால் எனக்கோ உன்னுடன் பேசிக்கொண்டு வருவது ஆறுதலாக இருக்கிறது. நான் சொல்லுவதையெல்லாம் கேட்டுவிட்டுப் புத்திபுகட்டமாட்டாய் என்ற தைரியமாகக்கூட இருக்கலாம்.’’
குடியிருப்பின் விளக்குகள் சமீபித்துக் கொண்டிருந்தன. நாய்க்குட்டியைத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தான். ஏர் போல அது அவன் மனதை உழுதுகொண்டே முன்செல்கிறது.
அவன் சொன்னான்,
“நமக்கு மேலே கவிழ்ந்திருக்கும் இந்த வானம், நம்மைச் சூழ்ந்திருக்கும் இருள், இந்தச் சாலை, எதேச்சையான இந்தக் கணம், நாம் இருவரும் ஏதோ ஒரு நிச்சயமற்ற புள்ளியில் சந்தித்துக்கொள்கிறோம்; அதே நேரத்தில் விலகியும் இருக்கிறோம். ஏதோ ஒரு உணர்வு நம்மைப் பிரித்து வைத்திருக்கிறது; ஒரு வேளை என் குற்ற உணர்வாக இருக்குமா அது, இல்லை மானுடத்தின் ஒட்டு மொத்தமான சீரழிவா?’’
நாய்க்குட்டியைக் காணவில்லை.
‘திரும்பவும் எங்கே போய் ஒளிந்துகொண்டுவிட்டது? ஏன் இப்படி என்னிடம் கண்ணாமூச்சி விளையாடுகிறது? ஒரு வேளை தோன்றி மறைவதுதான் அதன் குணாதிசயமோ; இருளுக்கும் ஒளிக்கும், நினைவுக்கும் மறதிக்கும், வார்த்தைக்கும் மௌனத்திற்கும் இடையே?’
மறைந்து போன நாய்க்குட்டி இக்கணத்தில் எங்கே இருக்கும் என்று அவனால் யூகிக்கவும் முடியவில்லை.
வீடு வந்துவிட்டது. ஏதோ ஒரு அசாதாரண கணம் முடிவுக்கு வந்து விட்டதுபோல ஒரு பிரமை. ஒரு பிரகாசம் அணைந்து விட்டது போன்ற இருளின் அழுத்தம். திரும்பவும் அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
கதவைத் தட்டி அவன் மனைவியைக் கூப்பிட்டான். அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்க வேண்டும். நீண்ட அழைப்புக்குப் பின் கதவைத் திறந்தாள். அவன் வீட்டுக்குள் வந்ததும் தூக்க கலக்கத்திலேயே அவள் தெருவை எட்டிப்பார்த்து எதையோ தேடினாள்.
இந்த இருளில் எதைத் தேடுகிறாள்?
கேட்டான், “என்னது?’’
“பொழுதெல்லாம் ஒரு நாய்க்குட்டி இங்கே சுத்திக்கிட்டிருந்தது, எங்க போச்சின்னு தெரியல, பாவம்’’ என்றாள் அவள்.
அவன் வியப்புடன் கேட்டான், “நாய்க்குட்டியா?’’
“ஆமாம் ஒரு கறுப்பு நாய்க்குட்டி’’ என்றாள் அவள்.
3. ரகசியப் பெயர்
அப்போது எனக்கு முன் இரண்டே இரண்டு வழிகள்தான் மிஞ்சியிருந்தன. கம்யூனிஸ்ட் ஆகி புரட்சியின் மூலம் மனிதகுலத்திற்கு சுபீட்சத்தைக் கொண்டுவருவது, முடிய வில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வது. இதில் சமரசத்திற்கு இடமே இல்லை. இந்த பூமியின் மேல் அனாதரவாக விடப்பட்டிருக்கிற மனிதனுக்கு அறிவு ஒன்றுதான் துணை; அதுதான் அவனைக் காப்பாற்றப்போகிறது என்பதில் திடமான நம்பிக்கை எனக்கு.
சென்னை நகரில் கடற்கரைக்கு இட்டுச்செல்லும் ஒரு சாலையில் விடுதி ஒன்றில் அப்போது நான் தங்கியிருந்தேன். ஒரு நாள் அந்த மனிதன் என்னோடு அறையைப் பகிர்ந்துகொள்ள வந்து சேர்ந்தான். வட தமிழ்நாட்டில் ஒதுக்குப்புறமான ஒரு கிராமத்திலிருந்து வந்து, ஒரு வியாபாரியின் மூலமாக வாழை மண்டி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். பேச்சும், உடைகளை அணியும் விதமும் நகர நாகரீகத்திலிருந்து அவனைப் பிரித்தே காட்டியது. அறையிலிருந்த என்னுடைய புத்தகங்கள், இசை ஆல்பங்கள், டேப்ரிக்கார்டர், மற்ற அலங்காரங்களெல்லாம் அவனை மலைக்கச் செய்தன என்றாலும் என்னுடன் சகஜமாகவே பழகத் தொடங்கினான்.
அவனுடைய தேர்வுகள் எல்லாம் எளிமையாக இருந்தன. எதைக்குறித்தும் அவனுக்கு வருத்தமோ, துக்கமோ தோன்றவில்லை. எப்போதும் அவன் மகிழ்ச்சியாகவே இருந்தான். அந்தப் பெரிய நகரத்தை ஒரு குழந்தையைப் போல ஆர்வத்துடன் பார்த்தான். மாலையில் கடற்கரைக்குப் போய் இரவு வெகுநேரம் கழித்துதான் திரும்புவான். விடிந்ததும் மீண்டும் போய்விடுவான். கடலில் எதையோ தேடவே இந்த நகரத்திற்கு வந்தவன்போல இருந்தது அவன் போக்கு. இதுவரை நான் பார்த்திராத, என் கற்பனைக்கப்பாற்பட்ட ஒரு தன்மை அவனிடம் வெளிப்பட்டது. நானும் கிராமத்திலிருந்து வந்தவன்தான் என்றாலும் இவனை இப்படி வடிவமைத்திருக்கும் ஒரு சூழலை என்னால் கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை. ஒரு புதிரைப் போல அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்குள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது.
அவனுடைய கிராமத்தைப் பற்றியும், தாய் தந்தையைப் பற்றியும், சகோதரர்கள் பற்றியும், ஊரில் நடக்கும் விசேஷங்கள் பற்றியும் அவ்வப்போது அவன் சொல்வதுண்டு என்றாலும் இதெல்லாம் மிக சாதாரணத் தகவல்களாகவே எனக்குத் தோன்றின. ஏதோ ஒன்றைப் பற்றிச் சொல்லாமல் நழுவுகிறான் என்பது மட்டும் புரிந்தது.
ஒரு நாள் இரவு தன் மௌனத்தைக் கலைந்து, நம்ப முடியாத இந்தக் கதையை எனக்குச் சொன்னான். நான் தொடர்ச்சியாகச் சொல்லும் இந்தக் கதை, ஒரு கனவை விவரிப்பது போல தெளிவற்றும் முன்பின்னாகவும் அவனால் எனக்குச் சொல்லப் பட்டதுதான்.
இந்த வினோதம் நடந்தபோது அவனுக்கு ஐந்தாறு வயதுதான் இருக்கும். இரண்டு மலைத்தொடருக்கு மத்தியில் நீண்டு செல்லும் ஒரு நிலப்பகுதியில் ஒரு நதிக்கரையில் அவனுடைய கிராமம் இருந்தது. முன்னொரு காலத்தில் வானவர்கள் இந்தப் பாதை வழியாகவே பூமியைக் கடந்து சென்றார்களாம். எப்போதும் காணாத பெரும் வறட்சி தோன்றி அந்நிலப்பகுதியைச் சருகாக்கிக் கொண்டிருந்த பல மாதங்களுக்குப் பின் ஒரு மதியப் பொழுதில் திடீரென்று வானத்தில் கருமேகங்கள் கூடி பூமியை இருளச் செய்தன. மிருகங்களையும் குழந்தைகளையும் மிரளச் செய்த இடி முழக்கத்திற்குப் பின் பெருமழை ஒன்று பெய்தது. காற்றின் பெரும் வீச்சில் தலை கலைத்து பேயாடின தென்னை மரங்கள். தொடர்ந்து பெய்த மழையின் தணிவு நேரங்களில் அவனுடைய தந்தை தென்னங்கீற்றுகளைக் கொண்டுவந்து கூரையை பலப்படுத்தினார். வாசலில் வந்து தெறித்து விழுந்த ஆலங்கட்டிகளைச் சகோதரர்கள் இருவரும் ஓடிச் சென்று பொறுக்கி எடுத்தனர். அவனுடைய அம்மா அடுப்பை மூட்டி வேர்க்கடலையை வறுத்துக் கொண்டு வந்து அவர்களுக்கு முன் கொட்டினாள். நதியில் நீரின் சத்தத்தை மாலையில் அவர்கள் கேட்டார்கள். முன்னிரவையும் தாண்டிப் பெய்த மழை எப்போது நின்றதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. அச்சத்துடன் போர்வைக்குள் முடங்கியபடி அவர்கள் உறங்கிப் போயிருந்தார்கள்.
மறுநாள் காலையில் வெளியே வந்தபோது மழை நின்றிருந்தது. மலையிலிருந்து இரைச்சலுடன் ஓடைகள் இறங்கின. நதி பிரவாகமெடுத்திருந்தது. நதியில் அன்று தொடங்கிய நீரோட்டம் இன்றுவரை வற்றவேயில்லை என்று அவன் எனக்குச் சொன்னான். செந்நிறத்தில் ஓடிய நதியின் இரண்டு கரைகளிலும் மனிதர்கள் வந்து நின்று வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தங்களுடைய சக்திக்கும் அப்பாற்பட்ட ஒன்றைக் காண்பதுபோல் கண்டார்கள். மரங்களையும், கிளைகளையும் பெயர்த்துக்கொண்டு வந்தது வெள்ளம். மலைப் பாம்புகள் கரை ஒதுங்கின. மாடுகள் மிதந்து போயின. எங்கிருந்தோ வீடுகளையும் சேர்த்துப் பெயர்த்துக்கொண்டு வந்திருந்தது நதி. உறி பிணைக்கப்பட்டிருந்த வீட்டுதூளம் ஒன்று மிதந்து கரை ஒதுங்கியதை அவன் அப்பா தூக்கி வந்தார். தென்னை மரங்களும், வாழை மரங்களும் குலைகளுடன் பெயர்ந்து வந்தன. இரண்டு மூன்று மனிதர்களையும் அடித்துக் கொண்டு போனதாகச் சொன்னார்கள்.
பிற்பகலில் மெல்ல வடியத் தொடங்கிய வெள்ளத்தை அதன் போக்கில் விட்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள் எல்லோரும். அப்போது கைவிடப்பட்ட ஒரு பழைய பள்ளிக்கூடக் கட்டிடத்தில் யாரோ ஒரு புதியவன் உறங்கிக் கொண்டிருப்பதாகச் சிறுவர்கள் செய்தி கொண்டுவந்தனர். நனைந்த ஆடைகளை வெளியே செடிகளின்மேல் உலர்த்திவிட்டு இடுப்பில் கட்டிய சிறு முண்டுடன் அங்கே அவன் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
அவன் எங்கிருந்து எப்போது வந்து சேர்ந்தான் என்பதைப் பற்றி ஒருவருக்கும் தெரியவில்லை என்றாலும் வெள்ளத்தில் நீந்திக் கரையேறி வந்தவன் என்பதான யூகமே எல்லோருக்கும் இருந்தது. இதை உறுதிப்படுத்துவதாக இருந்தன அவனுடைய பளிச்சிடும் தேகமும், குளிர்ந்த கண்களும். தங்களுக்கு அவன் ஒரு அபூர்வ விருந்தினன் என்பதை விரைவிலேயே உணர்ந்தார்கள். இளமையை மீறிய முதிர்ச்சியுடன் தென்பட்டான். அவன் பேசினான் என்றாலும் அது ஒருவருக்குமே விளங்கவில்லை. ஏதோ விலங்குகளின் மொழிபோல இருந்தது அது. சிறுவர்களின் தொந்தரவு தாங்க முடியாதபொழுது ஒரு பறவையைப் போல அவன் கிறீச்சிட்டான். மற்றபடி சிறுவர்களுக்கும், அவனைப் பார்க்க வந்த ஆண்களும் பெண்களும் அவனுடைய இன்முகத்தையே தரிசித்தனர். உணவு கொண்டு வந்து கொடுத்தனர். களங்கமற்ற குழந்தையினுடையது போன்ற அவன் கண்களைக் கண்டு தாயின் உபசரணையைப் பொழிந்தனர் பெண்கள். வறண்டு கிடந்த பூமிக்கு நீரைக் கொண்டுவந்தவன் என்று நம்பியதால் அவனுடைய வருகை ஒரு அற்புத நிகழ்வாக உணரப்பட்டது.
விழித்தெழுந்ததும் நதியை நோக்கி நடப்பான். காலை சூரியனின் கிரணங்கள் பட்டுத் தெறித்த அவன் தேகம், ஆற்றிலிருந்து கரையில் வந்து குதித்த மீனினுடையது போல மின்னியதைக் கண்டனர். சிலர் அவனுடைய உடலில் மீனின் வாசனை வீசுவதாகக் கூடச் சொன்னார்கள்.
நதியில் நீரோட்டத்திற்கு எதிர்த் திசையில் நீந்திப் போய் அக்கரையை அடைந்து மேற்குதிசை காட்டிற்குப் போவான். பகல் முழுக்கத் திரிந்துவிட்டு மாலையில் மீண்டும் நதியைக் கடந்து நீர் சொட்டக் கரையேறுவான். வரும்போது பழங்களோ, கிழங்குகளோ, மலர்ச்செடிகளோ கொண்டுவருவான். சிறுவர்களுக்குப் பகிர்ந்தளிப்பான். எல்லாப் பருவங்களுக்கும் உரிய பழங்களையும், காய்களையும் கொண்டு வந்ததுதான் அவர்களை வியக்க வைத்தது. நெல்லிக்காய்களும், களாக்காய்களும், சூரைப்பழங்களும் ஒரே பருவத்தில் கிடைத்தன. கார்த்திகை மாசத்தில் கிடைக்கக்கூடிய காட்டு வள்ளிக்கிழங்கு புரட்டாசியிலேயே அவனுக்குக் கிடைத்தது.
புற்களும் பூண்டுகளும் மண்டிக்கிடந்த பள்ளிக்கூடத் தோட்டத்தில் அவன் கொண்டுவந்து நட்டு வைத்த ஒரு மலர்ச்செடியில் பூத்த பூக்கள், நீரைப்போல வானத்தின் நிறத்தைப் பிரதிபலித்தன. காலைமுதல் மாலைவரை அவைகளின் நிறம் மாறிக்கொண்டே இருந்தது.
ஒவ்வொருவரும் அவனைக் கனவில் கண்டனர்; அவனோடு நதியில் நீந்துவது போலவும், காடுகளில் திரிவது போலவும், தன்னுடைய வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினன் போலவும். இளம் பெண்களின் கனவுகளில் அவர்களுடன் அவன் படுத்துறங்கினான். வீட்டுப் பெண்களோ பெரும் சீதனத்தைக் கொண்டுவந்திருக்கும் ஒரு சகோதரன் போலவும் அவனைக் கண்டார்கள். குடியானவர்களுக்கு வறண்ட பாறைக் கிணறுகளில் நீரூற்றைக் கண்டுபிடித்துக் கொடுத்தான்.
சிறுவர்கள் எல்லோருக்கும் அவன் நண்பனாக இருந்தான்; டவுசர் ஜோபிகள் நிறையும் அளவுக்குப் பழங்களைப் பரிசளித்தான். பறவைகளைக் கொண்டுவந்து அவைகளோடு பேசி அவர்களை மகிழ்வித்தான். பொன்வண்டுகளைப் பிடித்துக் கொடுத்தான். காடுகளுக்குக் கூட்டிச்சென்று ஓடைகளைக் காண்பித்தான். குரல் கொடுத்து மிருகங்களை வரவழைத்தான். நதியில் நீந்தப் பழக்கினான். மீன் குஞ்சுகளைப் போல அவனோடு வெகுதூரம் அவர்களும் நீந்திச் சென்றார்கள். பெற்றோர்கள் யாரும் அவனோடு சேர்வது பற்றியும் சுற்றித்திரிவது பற்றியும் கண்டிக்கவேயில்லை என்பதுதான் இன்னும் அவர்களைக் குதூகலப்படுத்தியது.
இப்படிக் கனவிலும், நிஜத்திலுமாக அவர்களோடு வாழ்ந்தான். அவனுடைய வருகையைப் பற்றி வேற்று மனிதர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல், ரகசியமாகத் தங்களுடனேயே அவனை வைத்துக்கொள்ள விரும்பினார்கள். இந்த அற்புதத்தை யாரும் பெயர்த்துக்கொண்டு போய்விடக் கூடாதே என்று கவலைப்பட்டார்கள். இந்த மகிழ்ச்சியையும், செழுமையையும், குதூகலத்தையும் எல்லா காலத்திற்குமாகக் கடத்திப் போக ஆசைப்பட்டார்கள்.
சில நாட்களுக்குப் பிறகு அவனுக்கு ஒரு பெயர் தேவைப்பட்டதை உணர்ந்த அவர்கள், அற்புதப்பெயர் ஒன்றால் அவனை அழைக்க விரும்பினார்கள்; கூடிப் பேசினார்கள். அது தோல்வியிலேயே முடிந்தது. மனிதர்களுக்கோ, தெய்வங்களுக்கோ வழங்கும் எந்தப் பெயரும் அவனுக்குப் பொருந்தவேயில்லை. அந்தப் பெயர்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு தன்மைக்குள் அவனைச் சிறைபடுத்துவது போலவே அவர்களுக்குத் தோன்றியது. நதிகள், மலர்கள், மரங்கள், பறவைகள், மீன்கள்… எதனுடைய பெயரும் அவனுக்குப் பொருந்தவில்லை. இந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.
அவனுக்குப் பெயரிடும் எண்ணமே வடிந்துபோன சில நாட்களுக்குப் பின் ஓர் இரவு எல்லோருடைய கனவிலும் தோன்றி தன் ரகசியப் பெயரை அவன் சொன்னான்.
“அதுதான் அவனுக்கு மிகவும் பொருத்தமான பெயர் என்பதை நாங்கள் உணர்ந்தோம். மறுநாள் காலையில் விடிவதற்கு முன்பாகவே அந்தப் பெயரால் அவனை அழைக்க ஒவ்வொரும் அங்கே ஓடினோம். ஆனால் அவன் அங்கே இல்லை; போய்விட்டிருந்தான்.
“நதியில்தான் அவன் நீந்திச் சென்றிருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவன் திரும்பி வரவேயில்லை. எங்களை மகிழ்ச்சியான மனிதர்களாக்கிய அந்தப் பெயரை ஒவ்வொருவரும் ரகசியமாகப் பாதுகாத்தோம். தெரிந்தவர்களுக்குள்கூட அதைச் சொல்லிக் கொள்வதில்லை நாங்கள். ஒரு மூலிகைச் செடியின் பெயர்போல பகிர்ந்துகொள்ளப்படாததாலேயே அதன் மகத்துவம் காப்பாற்றப்பட்டு வருவதாக நாங்கள் நம்புகிறோம்’’ என்றான் அந்த இளைஞன்.
“அந்தப் பெயர் தெரிந்துவிட்டால் உலகத்தில் உள்ள மனிதர்கள் யாவரும் மகிழ்ச்சியானவர்களாக மாறிவிடுவார்கள் இல்லையா?’’ என்று கேட்டேன் நான்.
“ஆமாம்’’ என்றான் அவன்.
“நீயும் சொல்லவில்லையென்றால் அந்தப் பெயரை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்வது, யாரிடம் போய்க் கேட்பது?’’ என்றேன் உருக்கமான பாவத்துடன்.
“அந்த நதியைக் கேட்டால் சொல்லும். இந்தக் கடலுக்குக் கூட அவன் பெயர் தெரிந்திருக்கலாம்’’ என்று பதிலளித்தான் அவன்.
4. வெம்மை
தொலைவிலிருந்தே அவனைக் கவனித்தாள். கனகாம்பர பாத்திக்குப் பக்கத்திலிருந்த புழுதியைக் கீரை விதைப்பதற்காகச் சரிபடுத்திக்கொண்டிருந்தான். வரப்பின் விளிம்பில் மண்வெட்டி பாயும் சப்தம் வெப்பவெளியில் கரைந்தது.
பொழுது ஏறிக்கொண்டிருந்தது. அடர்ந்து நீண்டு செல்லும் பனஞ்சாலைகள், நீர் காணாமல் காய்ந்து சூடேறிய கரம்பு நிலங்கள், அகற்ற முடியாமல் மண்ணில் ஆழமாகப் பாய்ந்து நிற்கும் பாறைகள்; எங்கோ சில இடங்களில் தனித்து நிற்கும் வீட்டை ஒட்டியோ, பம்பு செட்டுக்குப் பக்கத்திலோதான் கொஞ்சம் பச்சை தெரிந்தது. கிணறுகளில் ஏதோ ஒரு மூலையில் மெல்லக் கசிந்து வந்த ஊற்று நீரைத்தான் சொட்டிச் சொட்டி இறைத்துக் கொண்டிருந்தார்கள்.
பம்பு செட் கட்டிடத்தின் முன் நிழலில் போய் நின்று அவனைப் பார்த்தாள்.
“இந்த வெய்யில்ல… ஏன், அப்புறமா செய்ஞ்சுக்கலாமே, என்ன அவசரம்’’ என்றாள்.
அப்போதுதான் அவள் அங்கே வந்து நின்றிருப்பதை நிமிர்ந்து பார்த்தான்.
“இன்னும் கொஞ்சம் தான் இருக்கு.’’
மண்வெட்டியின் உட்பகுதியில் பிடித்திருந்த மண்ணை விரல்களால் சுரண்டிக்கொண்டே புன்னகைத்தான்.
சற்று மெலிந்து கருத்த சரீரம் அவனுக்கு. முட்டிவரை தொங்கும் நீண்ட ரெடிமேட் ட்ராயர் போட்டிருந்தான். அவர்கள் தோட்டத்திற்கு ஆளாக வந்து ஐந்து வருஷங்களுக்கு மேல் ஆகிறது. வரும்போது சிறுவனாக இருந்தான். இப்போது அவனுக்கு வாலிபக் களை வந்துவிட்டது. மீசை அரும்பிவிட்டது.
திரும்பவும் குனிந்து வரப்பைக் கொத்த ஆரம்பித்தான்.
“உங்க அண்ணன் ஒருத்தன் இருந்தானே, அவனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?’’
“போன மாசம்தான் ஆச்சி’’ கொத்திக்கொண்டே சொன்னான்.
“இப்ப எங்க இருக்கான்?’’
“கல்யாணம் பண்ணிக்கிட்டு பெங்களூருக்கே போயிட்டான்.’’
சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டாள்.
காய்ந்து போன கனகாம்பரச் செடிகளையும், பார்த்தீனியச் செடிகளையும் பிடுங்கி இரண்டு இடங்களில் கும்பலாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
தொலைவில் பனஞ்சாலைக்கு கீழே காதர் பாயுடைய கரும்புத் தோட்டம் தெரிந்தது. அதற்குச் சற்று தள்ளி முனுசாமி கவுண்டருடைய பருத்தித் தோட்டம். அவர்களைப் போல கடன் வாங்கி தோட்டா வைத்துக் கிணற்றைத் தோண்டும் தைரியம் அவளுடைய அப்பாவுக்கு இல்லை. நிலத்தில் வரும் வரும்படி வட்டிக்குத்தான் கட்டும்; கெடக்கட்டும் என்று விட்டுவிட்டார். மழை பெய்து என்று தண்ணீர் ஊறுகிறதோ அன்றைக்குப் பயிர் வைத்துக்கொள்ளலாம். இருந்த ஒரு ஜோடி உழவு மாடுகளும் போய் இப்போது இருப்பது ஒரு பசு மட்டும்தான். இது ஒன்றுக்கே தீனி போடமுடியவில்லை அவர்களால்; காசு கொடுத்து வைக்கோல் வாங்க வேண்டியிருக்கிறது. மேல்நிலை வகுப்பில் பெயிலாகிவிட்டிருந்த அவளுடைய தம்பி இப்போது டவுனுக்கு வேலைக்குப் போகிறான். ஒயின் ஷாப்பில் வேலை. அவனும் அவளுடைய அப்பாவைப் போல குடிக்கிறான் போல தெரிகிறது. அவனுடைய போக்குவரத்து எதுவுமே சரியில்லை என அவளுக்குப் பட்டது.
சேட்டு இன்னும் கொத்திக்கொண்டிருந்தான். சிறுவயதிலிருந்தே வேலை செய்து வந்ததாலோ என்னவோ அவனுடைய தசைகள் இறுகிக் கடினமாகிவிட்டிருந்தன. அவனுடைய நீண்ட கால்களில் நரம்புகள் புடைத்துக் காணப்பட்டன.
“சரி, உனக்கெப்ப கல்யாணம்?’’
வெட்கத்துடன் சிரித்தான்.
“சொந்தத்தில பொண்ணு இல்லே?’’
“ஏன், எங்க அக்கா பொண்ணு இருக்கே…’’
“தரமாட்டாங்களா?’’
“டவுன்ல இருக்கிற மாப்பிள்ளையா வேணுமாம் அவுங்களுக்கு. இந்த மாதிரி வெயில்ல நடப்போறது, கொத்தப்போறதெல்லாம் அவுங்க பொண்ணால முடியாதாம்…’’
“படிச்சிருக்கா?’’
“ஊம், பத்தாவதோ என்னமோ படிச்சிருக்கா.’’
கொத்தி முடித்தவன் மண்வெட்டியை வரப்பில் காய்ந்து கிடந்த புல்லில் தேய்த்து சுத்தப்படுத்தினான்.
“ஊர் உலகத்திலே வேற பொண்ணா இல்லே? வேலையப் பாரு’’ என்றவள், “பொண்ணுக்கு உன்மேல இஷ்டமா?’’ என்று கேட்டாள்.
“அவளுக்கு இஷ்டம்தான், எங்கக்காதான் பிடிவாதமா இருக்கு.’’
மண்வெட்டியை வரப்பின் மேல் வைத்துவிட்டு ஜோபிக்குள் கை விட்டு தீப்பெட்டி ஒன்றை எடுத்தான். கும்பலாகக் குவித்துப் போட்டிருந்த செடிகளுக்கருகில் உட்கார்ந்து தீக்குச்சியைக் கொளுத்திக் கைகளால் அண்டக்கொடுத்தவாறு பற்றவைத்தான். உள்ளே காய்ந்துபோன கனகாம்பரச் செடிகளும், புற்களும் இருந்ததால் சட்டென்று தீப்பிடித்துக்கொண்டது. புகையின் அடர்த்தி பெருகி வதங்கிக்கிடந்த பார்த்தீனியச் செடிகள் தீக்குள் அடங்கிக்கொண்டிருந்தன.
எவ்வளவுதான் பிடுங்கிப்போட்டாலும் இந்தச் செடிகள் மட்டும் ஏன் மாளவே மாட்டேன் என்கிறதோ என்று சலிப்பு தோன்றும் அவளுக்கு. ஒரு துளி ரத்தத்தில் ஓராயிரம் அரக்கர்கள் எழுந்து வருவதுபோல இந்தப் பூண்டுகளும் முளைவிட்டு எழுந்துவிடுகின்றன.
சற்று தள்ளி விழுந்து கிடந்த ஒரு பனை ஓலையைக் கொண்டு வந்து பற்ற வைத்து இன்னொரு கும்பலுக்குக் கொண்டுபோய் தீ வைத்தான். கும்பலின் மேல் நீரலைபோல தீ உக்கிரமாக ஆடிக்கொண்டிருந்தது. எரியாமல் ஒதுங்கி நின்ற செடிகளை எடுத்துத் தீக்குள் போட்டான்.
ஏனென்று விளங்காத ஒரு ஈர்ப்பில் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். கசிந்து வடிந்த வியர்வையில் அவன் உடல் பிரகாசத்துடன் தெரிந்தது. கானல் அலையும் வெளியில், விரைத்து நிற்கும் பனைமரங்களின் பின்னணியில் தீயை ஆலிங்கனம் செய்தபடி அவன் நின்றிருக்கக் கண்டாள். தீயுடன் சேர்ந்து அவனது சரீரம் எரிந்துகொண்டிருந்தது. உடல், மனம் எல்லாம் அந்தக் கனலில் இளகி வடிந்து கொண்டிருப்பதான அச்சம் தோன்ற எழுந்து நின்றுகொண்டாள். தலை சுற்றுவதுபோல இருந்தது. அங்கிருந்து நடந்தாள்.
புழுக்கம் தாளாமல் அவள் விழித்துக்கொண்டாள். உடல் வியர்த்துவிட்டிருந்தது. மின்விசிறி சுற்றவில்லை. அவளது வயிற்றின் மேல் மகனின் கசகசத்த கை விழுந்திருந்தது. திண்ணையிலேயே படுத்திருக்கலாம். இந்த மின்விசிறியை நம்பி அறைக்குள் படுத்ததுதான் பிசகு. ஒரு அட்டையைக் கொண்டுவந்து மகனுக்கு விசிறிவிட்டாள்.
ஜன்னல் திறந்திருந்தும்கூட காற்று உள்ளே வரவில்லை. வெளியே சுழன்று சுழன்று காற்று வீசினாலும் இந்த அறைக்கு மட்டும் ஏன் காற்று வரமாட்டேன் என்கிறதோ என்ற சலிப்புடன், ஜன்னலில் தெரிந்த வானத்தைப் பார்த்தாள். இன்று வெய்யில் உடைந்து காய்கிறது. சாய்ந்திரமோ, இரவோ மழை வரலாம்; நிச்சயமில்லை. இரண்டு மூன்று நாட்களாகவே வானம் இப்படித்தான் பூச்சாண்டி காட்டுகிறது.
முந்தானையை தளர்த்தி மடிமேல் நழுவவிட்டாள். மகனுக்கு விசிறிவிட்டுக்கொண்டே தன் மார்பிலும் விசிறிக்கொண்டாள். காற்று போதவில்லை. ஜாக்கட்டின் மேல் கொக்கியை மட்டும் கழட்டி விட்டுக்கொண்டாள். உள்ளே இறுகிக்கிடந்த உடம்பு வியர்வையில் கசகசத்து வெளிர்ந்த நிறத்தில் பிதுங்கித் தெரிந்தது. அவளுக்குச் சற்று பெரிய முலைகள்தான். முன்பெல்லாம் இது பற்றிப் வெட்கமும், பெருமிதமும் அவளுக்கு இருந்ததுண்டு. இப்போது அதுவே சுமையெனத் தோன்றியது. அவளுடைய மகன் பால் குடிப்பதை மறந்து இரண்டு வருஷத்திற்கு மேல் ஆகிறது. இதன் மேல் பெரும் மோகம் கொண்டிருந்த அவளுடைய கணவனோ இனிமேலும் வரப்போவதில்லை.
அம்பை உச்ச பட்ச வேகத்தில் செலுத்தக்கூடிய வில்லாக அவளுடைய உடலை வளைத்து நாணேற்றியிருந்தான் அவன். கூச்சமற்ற வெளியில் அவளுடைய உடலை மலரச் செய்திருந்தான். அவனுக்குத் திகட்டுவதே இல்லை. அந்தக் கடைசி இரவிலும்கூட விடியற்காலை இரண்டு மணிக்கு விழித்துக்கொண்டு அவளை எழுப்பினான். “செல்வி, செல்வி…’’
அவள் விழித்துக்கொண்டாள். அவளைத் தன்பக்கம் இழுத்து மேலே போட்டுக்கொண்டான்.
“நேரங்காலமே கிடையாதா?’’
“ஊருக்கு போயிவர இரண்டு மூணு நாளு ஆகும்.’’
“அதுக்கு…’’
“செல்வி.. ’’ அவன் கெஞ்சினான்.
“வேனும்ன்னா நானும் கூட வரட்டுமா?’’
“முடிஞ்சா கூட்டிகிட்டு போகமாட்டேனா?’’
அவளுடைய இதழ்களைக் கவ்வி கீழே புரட்டினான். “பக்கத்தில கொழந்தங்க’’ என்றாள் அவனுடைய ஆவேசத்தை நிதானப்படுத்தும் விதமாக.
அதுதான் கடைசி. விடியற்காலை நான்கு மணிக்குப் புறப்பட்டுப் போனான். ஏழு மணிக்கெல்லாம் விபத்தில் இறந்த செய்தி அவளுக்கு எட்டியது.
கொஞ்சம் காலம்தான் அவனோடு வாழ்ந்தது; அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. தூங்கி விழித்ததுபோல, ஒரு இன்ப சொப்பனம் கண்டதுபோல. படுக்கையறையிலிருந்து வெளியே வருகிறாள். அவளது உறவினர்களெல்லாம் நின்றுகொண்டிருக்கிறார்கள். திருமணத்திற்காக வந்தவர்களல்லவா இவர்கள்? வெட்கமில்லாமல் இன்னும் ஏன் இங்கேயே நின்று கொண்டிருக்கிறார்கள்? முன்பு மகிழ்ச்சியாகத் தெரிந்தவர்கள் இப்போது துக்கத்துடனல்லவா இருக்கிறார்கள்! இது என்ன நாடகம்! நேற்றுத்தான், நேற்று போலத்தான் அவனை மணந்தது. முன்னிரவில் அவனுடன் படுக்கையில் புரண்டேன்; பின்னிரவில் அவனை அணைத்துக்கொள்ள நீட்டிய கை வெறுமையை உணர்கிறது. எழுந்து போய்விட்டிருக்கிறான்; திரும்ப இயலாத இடத்திற்கு. முன்வாசலில் புகுந்து பின்வாசலைத் திறந்து கொண்டு அவன் வெளியே போய்விட்டான். எல்லாம் அத்துடன் முடிந்து விட்டது. முடிந்துதான் விட்டதா? இன்னும் எத்தனை வருஷங்கள் வாழ வேண்டியிருக்கும்? ஒவ்வொரு நாளும் இப்படி ஒரு யுகமெனக் கழிந்தால் எப்போது முதுமை வருவது, அடிவயிற்றின் தகிப்பு எப்போது அடங்குவது?
பாழான வீடு ஒன்றில் கைவிடப்பட்டு, ஆணியடித்துத் தொங்க விட்டதுபோல, சுட்டெரிக்கும் வெய்யிலில் அவள் தொங்கிக்கொண்டிருக்கிறாள். தலையில் அறையப்பட்டிருக்கும் ஆணியை உருவிவிட்டுக் கீழிறங்கும் வலுவற்று அவள் மனம் சோர்வுற்றிருக்கிறது. வலி, வெப்பம், புழுக்கம், உடலின் கனம், தகிப்பு – இப்படியே எரிந்து சாம்பலாகி உதிர்ந்துவிடுவோமானால் எவ்வளவு பெரிய விடுதலை! எங்கிருந்தோ தொடங்கி தேகம் முழுமைக்கும் பரவி தனது இரக்கமற்ற நாவினால் ருசிபார்த்தது அந்தத் ‘தீ’. எனது கேவலின் ஒலிகூடப் பிறருக்குக் கேட்காமல், கைகால்களைக்கூட அசைக்க முடியாமல்… நான் என்ன கல்லறைக்குள் படுத்திருக்கிறேனா? மண் என்னை விழுங்கிக்கொண்டுவிட்டதா?
முன்பு அறுபட்ட உறக்கத்தின் இழையும், புழுக்கத்தின் மயக்கமும் அவளை மீண்டும் உறக்கத்திற்குக் கொண்டு போனது.
அம்மாவை வெளியே காணவில்லை. பையனை எடுத்துக்கொண்டு பொறை வாங்கிக்கொடுக்கக் கடைக்குப் போயிருப்பாள். கரும்புத் தோட்டத்தைப் பார்த்து நடந்தாள் அவள். ஒதுங்கப்போவதென்றால் இங்கே பிரச்சினைதான். இரவிலென்றால் பரவாயில்லை; பக்கத்திலேயே எங்காவது போய்க்கொள்ளலாம். இந்தக் கருப்பந்தோட்டம் இல்லையென்றால் வெகுதூரம் நடந்து ஆற்றுப் பள்ளத்திற்குத்தான் போக வேண்டும். ஆற்றிலும் நீர் வற்றி ஒரு வருஷத்திற்கு மேலாகிறது; தண்ணீருக்கு வீட்டுக்கு வர வேண்டும்.
இன்னும் வெப்பம் தணியவில்லை. தொலைவில் தெரிந்த மலைச் சரிவு மஞ்சம் புற்கள் எரிந்துபோய்க் கறுத்துத் தெரிந்தது.
பனஞ்சாலையிலிருந்து தோட்டத்து வரப்பில் இறங்கினாள். கரும்பு முற்றி வெகு நாட்களாகிவிட்டது. இன்னமும் கட்டிங் ஆர்டர் கிடைக்கவில்லை. இப்படியே விட்டால் ஒரு மாசத்தில் கரும்புகள் காய்ந்து விறகாகிவிடும்போலத் தெரிந்தது. மேலே பூக்களுடன் காணப்பட்ட நான்கைந்து சோகைகள் தவிர கீழே எல்லாம் காய்ந்து போயிருந்தன. ஒரு தீப்பொறியில் சட்டென்று எரிந்து எல்லாம் சாம்பலாகிவிடும்போல ஒரு அனல் அதற்குள்ளிருந்து வீசியது.
தோட்டத்தின் மையப்பகுதியில் குறுக்கிட்ட ஒரு வரப்பில் திரும்பி அக்கம்பக்கம் பார்த்தபடி சாய்ந்திருந்த கரும்புகளைத் தாண்டித் தாண்டிப் போனாள். சோகைகள் கால்களை அறுத்து விடாதமாதிரி பார்த்து நடந்தாள். ஒரு இடத்தில் குகைபோன்ற ஒரு வழி தெரிந்தது. அதன் வழியே உள்ளே போனால் ஒதுங்குவதற்குச் சௌகர்யமான இடம் கிடைக்கும்.
உள்ளே நுழைந்து கரும்புகளின் அடர்த்தி குறைந்த ஒரு இடத்தைத் தேடினாள். அந்த இடத்தில் கரும்புகளை எலிகள் நாசம் செய்துவிட்டிருந்தன.
மேலும் போக முடியாமல் திகைத்து நின்றுவிட்டாள். நடுக்கால்வாயில் அவளுக்கு முதுகு காண்பித்தவாக்கில் கறுத்த தேகத்துடன் அவன் உட்கார்ந்திருந்தான்.
சட்டென்று திரும்பி வந்த வழியே வேகமாக நடந்தாள். இவளுக்குப் பின்னால் சோகைகள் மிதிபடும் சத்தம் அவசரமாக விலகிப்போய் கொண்டிருந்தது. அவனும் பார்த்துவிட்டிருக்க வேண்டும்.
தோட்டத்தை விட்டு வெளியே வந்தாள். அந்த வெப்ப வெளி மீண்டும் அவளுக்கு முன் பீதியுடன் விரிந்தது. அதில் சலனமில்லாமல் விறைத்து நின்றுகொண்டிருந்தன பனை மரங்கள். அதற்குமேல் நகர முடியாதவளாக வரப்பிலேயே உட்கார்ந்தாள். வெளியே எதையும் காண அஞ்சியவளாக மடியில் முகம் புதைத்துக்கொண்டாள். தனியே… ரகசியமாக… தனது கைகளால் தன்னையே ருசித்தபடி… அவனேதான்… நம்ப முடியவில்லை அவளுக்கு. கோபமா, ஆத்திரமா, துக்கமா எதனால் பீடிக்கப்பட்டிருக்கிறோம் என்பதுகூட விளங்காமல் அழத் தொடங்கினாள்.
5. இழப்பு
மதிப்புக்குரிய நண்பர் அர்ஜுனன் அவர்களுக்கு, வணக்கம்.
உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்கள் கேட்டிருந்த கணேசன் அவர்களின் விலாசத்தைப் பின்னால் இணைத்துள்ளேன். கடிதம் எழுதுவதற்குத் தாமதமாகிவிட்டது; மன்னிக்கவும். உங்கள் தேவையை அனாவசியப்படுத்திவிட்டதாக நீங்கள் நினைத்துக்கொள்ளக் கூடாது. யாருக்கும் அதிகமாகக் கடிதம் எழுதும் வழக்கமில்லை என்னிடம். அப்படி எழுதினாலும் விஷயத்திற்கு மேல் ஒரு வார்த்தைகூட எழுதத் தோன்றுவதில்லை. ஆனால் கணேசன் சாரைப்பற்றிச் சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொண்டால் ஆறுதலாக இருக்குமென்று படுகிறது.
மறுநாள்தான் எனக்கு தகவல் கிடைத்தது. உடனே எதையும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. கணேசன் இறந்துவிட்டார் என்பதை எப்படி நம்புவது? வெறும் வதந்தியோ, விளையாட்டோ இல்லை, உண்மையாக நடந்துவிட்டிருக்கிறது என்பதை நிதானமாகத்தான் புரிந்து கொண்டேன். மரணம் என்ற அந்த இறுதி உண்மையை யாரும் நம்பித்தானே ஆகவேண்டும்?
அவருடைய வீட்டுக்குப் போய் விசாரித்துவிட்டு வந்தேன். விசாரிக்காமலேயே கூட இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. யாரும் அதை எதிர்பார்க்கவும் இல்லைதான். விஷயத்தைக் கேட்டுவிட்டு எதுவும் செய்யாமல் என்றால் எப்படி?
இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு முன்தினத்திலேயே எல்லாம் நடந்து முடிந்துவிட்டிருந்தது. ஊர்வலத்தில் சொற்பமானவர்களே இருந்ததாகத் தகவல் தெரிவித்த நண்பர் சொன்னார். வருத்தமாக இருந்தது. ஆட்களின் எண்ணிக்கை ஒரு மனிதனின் முக்கியத்து வத்தை உணர்த்துவதாகுமா? ‘முக்கியத்துவம்’ என்ற இந்த வார்த்தை கணேசனைப் பொறுத்தவரை அர்த்தமற்றது என்றும் தோன்றுகிறது.
முன்பே உங்களுக்குக் கணேசனைத் தெரியும் இல்லையா? கணேசன் சொல்லியிருக்கிறார். பால்யகால நண்பர்கள் நீங்கள்; ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அவருடைய விலாசம்கூடத் தெரிந்திருக்காதபடி சமீபத்திலோ உங்களுக்குள் பெரிய இடைவெளி.
எங்களுக்கு இடையேயான நட்பு நிச்சயம் உங்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கும் ‘எப்படி இவர்கள்’ என்று. கம்ப்யூட்டர் சம்பந்தமாகத்தான் முதன்முதலாக அவரைச் சந்தித்தேன். எங்களுக்குள் நடந்த சின்ன வியாபாரத்தின்போது வெளிப்பட்ட அவருடைய குணாம்சம் என்னைக் கவர்ந்தது. இதுதான் எங்கள் நட்பு தொடாந்ததற்கும், பலப்படுவதற்குக் காரணம் என நினைக்கிறேன்.
சாவு நிகழ்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு கணேசன் என்னுடைய மையத்திற்கு வந்து பேசிவிட்டுத்தான் போனார். இந்தக் கடைசி சந்திப்பில் மரணத்தின் சாயலை அவரிடம் கண்டேனா என்று இப்போது யோசித்துப்பார்த்துக்கொள்கிறேன். அசாதாரணமான எதையும் உணர்ந்ததாக நினைவில்லை. சாதாரண பார்வைக்குப் புலப்படாமல் எல்லாமே உள் உறைந்திருக்கும் போலத் தெரிகிறது. இவ்வளவு துரிதமாக மரணம் அவரை அணுகும் என்று என்னால் எண்ணவே முடியவில்லை. அதற்கு இடமில்லாமல் எவ்வளவு பரிமாற்றங்கள், பற்றிக் கொள்ளுதல்கள்!
“மரணம் ஒரு பிரச்சினையா?’’ என்று ஒரு முறை கணேசன் என்னிடம் கேட்டார். “மரணத்தைப் பற்றி எத்தனை கேள்விகள், பதில்கள்! மகாமேதைகள் என்பவர்கள்கூட மரணம் பற்றிப் பேசத் தொடங்கும்போது குழந்தையாகிவிடுகிறார்கள்; உறுதியாக ஒன்றும் சொல்ல முடிவதில்லை. மரணம் என்பது என்னவென்று தெரிந்துவிட்டால் அதைக் கடந்துவிடலாம். இதுவோ பிரபஞ்ச விதிக்கு எதிரானது. பிரபஞ்சமோ என்றைக்கும் தனது விதிகளை மனிதர்களுக்காக விட்டுக்கொடுக்கப்போவதில்லை. எல்லாவற்றையும் கிடப்பில் போட்டுவிட்டு இறுதியில் அதிலேயே போய் அமிழ்ந்துபோவதுதான் நாம் செய்யக்கூடியது; ஒன்றிரண்டு நீர்க்குமிழிகளைக்கூட வெளிப்படுத்த இயலாத அமிழ்ந்து போதல். ஒவ்வொரு மனிதனின் வாழ்தலும் மரணத்திற்கான பல நிலை விளக்கங்கள்தாம் என்பதாகவும் தோன்றுகிறது. நம் பகட்டான அறிதல்களுக்கு அப்பாற்பட்ட மிக எளிதான உண்மையாகக்கூட அது இருக்கலாம்’’
“பிரபஞ்சத்தின் மிகப் பெரிய சாபம்தானே நாமெல்லாம்? மனிதனில்லாத பிரபஞ்சம் களங்கமற்றதல்லவா? ‘’ என்றுகூட ஒரு முறைக் கேட்டிருக்கிறார்.
தன்னுள் உறைந்திருக்கும் நோயைப்பற்றி கணேசன் என்னிடம் பேசியதாகவும் நினைவிலில்லை. முன்னறிவிப்பற்று அது திடீரென்று அவரைத் தாக்கியிருக்கிறது.
ஒரு நாள் நான் உங்களது கவிதைத்தொகுப்பு ஒன்றை வைத்திருந்ததைக் கண்டு அவர் திகைத்தார். எதேச்சையாக எவ்வளவு சம்பவங்கள் நடந்துவிடுகின்றன; ஒரு புனைவு போல! அப்போதுதான் உங்களைத் தன்னுடைய நண்பர் என்று சொன்னார். சகமாணவர்களாகக் கல்லூரியில் படித்தது, இலக்கிய ஈடுபாடு குறித்தெல்லாம் சொன்னார்.
தற்கால எழுத்துக்கள் குறித்து அவருக்குக் கடுமையான விமர்சனங்கள் இருந்தன. டால்ஸ்டாயின் மேல் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த அவருக்கு இந்த நவீன எழுத்துக்கள் பக்குவமற்றதாகவும் அரைவேக்காட்டுத்தனம் கொண்டதாகவும் தோன்றியதில் வியப்பேதுமில்லை. உங்கள் கவிதைகள் குறித்துக்கூட அவருக்கு நல்ல அபிப்ராயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் நீங்கள் வருத்தப்படமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அவருடைய விமர்சனம் எப்போதும் இப்படித்தான் இருக்குமென்று உங்களுக்குத் தெரிந்ததுதானே.
சமீப காலங்களில் அவர் திருவண்ணாமலை வந்து சென்றதன் காரணம் நீங்கள் அறிந்ததா என்பது எனக்குத் தெரியவில்லை. அவருடைய ஆன்மீக ஈடுபாடு அவரை மார்க்ஸிஸ்டாக அறிந்த உங்களுக்கு அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம்.
திருவண்ணாமலையில் தங்குவதுதான் அவருக்கு வழக்கம். அங்கே அவருக்கு நண்பர்கள் இருந்தார்கள். வீட்டுக்குப் போகாமலேயே இரண்டு மூன்று வாரங்கள் அங்கே இருந்து கொள்வார். மரணம் சம்பவித்தபோது அவருடன் இருந்தது கண்ணன் என்ற நண்பர்தான். அவருடன்தான் கணேசன் தங்கியிருந்தார். நோய் கண்டவுடன் மருத்துவமனையில் சேர்த்ததும், உடனிருந்து பார்த்துக்கொண்டதும் அவர்தான். மரணம் நேர்ந்ததும் காரில் ஏற்றிக்கொண்டு போய் அவர்தான் வீட்டில் சேர்த்திருக்கிறார். அவருடன் சில நண்பர்களும் உடனிருந்து உதவியிருக்கிறார்கள். அவருடைய வீட்டுக்கத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பிறகுதான் அவருடைய மச்சினன் வந்து உடலை எடுத்துச் சென்றிருக்கிறான்.
தனது குடும்பத்தைப் பற்றி கணேசன் அதிகம் பேசி நான் கேட்டதில்லை. அவருக்கு மனைவியும், ஒரு பையனும் உண்டென்பதைத் தவிர வேறு எந்த தகவலையும் அவர் பேச்சிலிருந்து அறிந்ததில்லை நான். இது எனக்கு வியப்பாகவும் இல்லை. காரணம் அவர் குடும்பத்திற்கு வெளியே உள்ள நபர் என்பது போன்ற தோற்றந்தான்.
கம்ப்யூட்டரில் ஆழ்ந்த ஞானம் இருந்த அளவுக்கு அதைக் காசாக்கும் விஷயத்தில் அவருக்கு அதிக நாட்டம் இருந்ததில்லை. சொற்பமான ஒரு தொகையை மட்டுமே எதிர்பார்த்து அந்த வேலையைச் செய்துகொண்டிருந்தார். அவருடைய இந்தக் குணம் பலருக்குச் சாதகமாக இருந்திருக்கிறது.
கம்ப்யூட்டர் மட்டுமல்ல வேறு தொழில் நுட்பம் குறித்தும்கூட அவருக்கு மதிப்பேதுமில்லை. “எல்லாவற்றிற்கும் விடைகள் இந்த கம்ப்யூட்டரில் ஒளிந்திருப்பது போல கற்பிதம் செய்துகொண்டு, நமது நாகரீகத்தை முன்னெடுத்துச்செல்லும் பொறுப்பை இதனிடம் ஒப்படைத்திருக்கிறோம்; அறிவின் பொக்கிஷமாகக் கொண்டாடுகிறோம். நம் நாகரீகத்தைப் போலவே இதற்கும் ஆன்மா இல்லை. இது வெறும் ஜடம்; தர்க்க விளையாட்டு, தற்காலிக பவிஷு’’ என்று சொல்வார்.
விஞ்ஞானத்திற்கெதிரான அவருடைய இந்தப் பரிகாசம் என்னை முதலில் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இதையே தொழிலாகக்கொண்ட ஒருவர் இப்படி சொல்வது யாருக்குத்தான் முரணாகத்தோன்றாது? நோக்கங்களும், திட்டங்களும், எதிர்பார்ப்புகளுமற்ற அவருடைய வாழ்க்கை என்னைச் சில சமயம் அச்சம் கொள்ளச் செய்திருக்கிறது.
அதிகம் எழுதி உங்களைச் சலிப்படையச் செய்கிறேனோ தெரியவில்லை. கணேசனைப் பற்றி உங்களுக்கு எழுதுவது மேலும் சில தெளிவுகளுக்கு இட்டுச்செல்லும் என்ற ஆர்வம்தான் இதற்குக் காரணம்.
ஒரு நாள் தாமதமாகவே சாவு நிகழ்ந்த வீட்டிற்குக் சென்றேன். அங்கே போவது அதுதான் முதல் முறை. அறிமுகமற்ற அவருடைய பந்துக்கள் அங்கே இருப்பார்கள் , அவர்களுடன் எப்படிப் பேசுவது, அவருடைய மனைவியை எப்படிக் காண்பது, என்னை எப்படி அறிமுகப்படுத்திக்கொள்வது என்றெல்லாம் சங்கடமாகவும், தயக்கமாகவும் இருந்தது. எங்களுக்குள் உண்டாகியிருந்த நட்பையும், அவருடைய மரணத்தினால் நான் அடைந்திருக்கும் துயரத்தையும் எப்படி அவர்களுக்கு உணர்த்துவது?
அங்கு சென்று வந்ததன் நினைவு இன்னும் பனிமூட்டம் போலக் கலையாது நின்றிருக்கிறது. ஏதோ மேலும் பாரத்தைச் சுமந்துகொண்டு வந்துவிட்டதுபோல ஒரு தெளிவற்ற உணர்வு. இதுதான், இப்படித்தான் என்பதுபோல முடிவாக இல்லாமல் ஒரு கதையைப் போலத்தான் அங்கு நடந்தவைகளைச் சொல்ல முடியும் என்று தோன்றுகிறது.
கணேசன் சாருடன் பழகிய காலங்களில் ஒருமுறைகூட அவருடைய வீட்டுக்கு நான் சென்று பார்த்ததில்லை. அநேக நாட்களை அவர் வெளியிலேயே கழித்தார் என்பதால் அதற்கு அவசியமே நேரவில்லை. வ.உ.சி. சாலை என்பது அந்த பகுதியிலிருக்கும் பிரதான சாலை. அதில் வலது பக்கம் நகராட்சிக்குச் சொந்தமான ஒரு பள்ளியை ஒட்டிக் கிளைவுறும் தெருவில் சென்றால் இடது பக்கமாக மூன்றாவது தெரு சர்ச் தெரு. அதே இடது வரிசையில்தான் அவருடைய வீடு. ஒரு வேளை நீங்கள் அங்கே செல்வதாக இருந்தால் இக்குறிப்புகள் உதவும் என்று நினைக்கிறேன்.
அந்த வழியாகப் போகும்போது, கையில் சூட்கேஸுடன் கணேசன் சார் எதிர்வருவாரோ என்ற பிரமை இருந்துகொண்டே இருந்தது. தேநீர் பிரியரான அவர் அங்கிருந்த தேநீர் விடுதி ஒன்றில் உட்கார்ந்திருக்கப்போவதாக ஒரு எதிர்பார்ப்பு.
அந்த காம்பவுண்டுக்குள் நான்கைந்து வீடுகள். கணேசன் சாரின் வீடு எதுவென்று தயங்கி நி¢ன்றுவிட்டேன். சாவு நிகழ்ந்ததற்கான அடையாளம் எதுவும் அங்கே தென்படவில்லை. வதங்கிய பூக்கள் சிலதைத் தெருவில் காண நேர்ந்ததுபோல இங்கே எதுவும் இல்லை; எல்லாவற்றையும் துடைத்து எறிந்து விட்டிருக்கிறார்கள்.
கையில் பால் பாக்கட்டுடன் என்னைக் கடந்து போன ஒரு பெண்ணை அவசரமான என் கேள்வியால் நிறுத்தினேன்.
“கணேசன் சார் வீடு…?’’
நின்று திரும்பியவள் என்னை வியப்புடனும், அக்கறையுடனும் கவனித்து நோக்கினாள்.
“வாங்க.’’
அழைத்துவிட்டு முன்னால் நடந்தாள். அடுத்தடுத்திருந்த கதவுகளை விடுத்து கடைசியை நோக்கிப் போனாள். கணேசனுக்கு உறவுக்காரப் பெண்ணாக இருக்கலாம். மரணத்தின் துயரம் அவள் மேல் படர்ந்திருந்ததாகத் தெரியவில்லை. ஒரு வேளை பக்கத்து வீட்டுப் பெண்ணாக இருக்கலாம்போல் பட்டது. கடைசி கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போய் மறைந்தாள் அவள். நான் வெளியே நின்றேன். ஏன் என்னை உள்ளே அழைக்காமல் இப்படி விட்டுச்சென்றாள் என்ற குழப்பம்.
உள்ளே சட்டென்று ஒரு அமைதி. சிலர் பேசிக்கொண்டிருந்திருக்க வேண்டும். குழந்தைகளின் பேச்சுக்கள், கேரம் காய்களின் சப்தம் எல்லாம் நின்று போனது மாதிரி ஒரு கவனம்.
“யாராம்?’’ ஒரு வயதான பெண்ணின் குரல் கேட்டது. அந்தப் பெண் திரும்பவும் வெளியே வந்து, “உள்ள வாங்க ‘’ என்றாள்.
உள்ளே ஒரு வரவேற்பறை. அதை ஒட்டி இரண்டு அறைகள். பெண்கள் சிலர் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். இரண்டு மூன்று சிறுவர்கள். ஆண்கள் யாரும் இல்லை. நடுங்கும் குரல் கொண்ட அந்த வயதான பெண் மட்டும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். இடுப்பில் மட்டும் ஒரு துணி உடுத்தி மேல் பக்கம் திறந்திருந்த அவள் உடல் முதுமையின் குழந்தை தன்மையில் சரிந்துகொண்டிருந்தது. அவள் அழத்தொடங்கினாள். அவள் கணேசன் சாரின் தாயாராக இருக்க வேண்டும். வேறு இருக்கைகள் எதுவும் அங்கே காணப்படவில்லை. என்னை அழைத்துச்சென்றவள் உள்ளேயிருந்து ஒரு ஸ்டீல் நாற்காலியைக் கொண்டுவந்து போட்டாள். நான் உட்கார்ந்தேன். அந்த பெண்ணிடம் கேட்டேன்,
“அவரோட மனைவி?’’
“இவங்கதான்.’’
சுவரோரம் உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணைச் சுட்டிக் காட்டினாள். அவள் அழத் தொடங்கியிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் நின்றிருந்த ஒரு சிறுவன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன்தான் கணேசனின் மகனாக இருக்க வேண்டும். அவருடைய சாயல் எதுவும் அவனிடம் காணப்படவில்லை. அவனுக்கு அருகில் கேரம் போர்டு ஒன்று சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. கீழே தரையில் காய்கள் இறைந்து கிடந்தன.
கிழவியின் அழுகை தணிந்திருந்தது. நான் அந்தப் பெண்ணைப் பார்த்துச் சொன்னேன்,
“நான் திருவண்ணாமலை பக்கமிருந்து வருகிறேன். இன்று காலையில்தான் எனக்கு விஷயம் தெரியும்…இரண்டு நாட்களுக்கு முன்புதான் என்னைப் பார்க்க வந்திருந்தார்…நம்பவே முடியவில்லை… நன்றாகத்தான் இருந்தார்… இதற்கு முன்னே இப்படி எதுவும் வந்திருக்கிறதா…?’’
பதில் எதுவும் சொல்லவில்லை. என்னையே வெறித்துப்பார்த்துவிட்டு கீழே குனிந்துகொண்டாள் அவர் மனைவி. இதை அவள் கேள்வியாகக் கருதவில்லைபோல் பட்டது.
எனக்கே சொல்லிக்கொள்வதுபோலச் சொன்னேன்,
“முதல் அட்டாக்கிலேயே இப்படி ஆகுமென்று யாரும் எதிர்பார்க்கவேயில்லை. ஆஸ்பத்திரியில்கூட நன்றாகக் கவனித்துக் கொண்டதாகத்தான் சொன்னார்கள்.’’
எனக்குச் சமீபமாக உட்கார்ந்திருந்த ஒரு பெண் எழுந்து சமையலறை பக்கம் போனாள். இன்னொரு பெண் வெளியே வந்து என்னைக் கவனித்தாள். காஃபியின் மணம் வீடு முழுக்கப் பரவிக்கொண்டிருந்தது.
“எனக்கு இது பெரும் இழப்பு, அவர் இல்லாதது ஏதோ இருள் சூழ்ந்ததுபோல இருக்கிறது.’’
ஏன் இதைச் சொன்னேன் என்றுத் தெரியவில்லை. ஏதோ ஒரு நாவலின் வரிபோல அசட்டுத்தனமாகக்கூடப் பட்டது. என் கண்கள் கலங்கியது; கட்டுப்படுத்த முடியாது துக்கம் வெளிப்பட்டது. அந்தச் சிறுவன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். கீழே தரையில் உட்கார்ந்திருந்த ஒரு சிறுமி கேரம் காய்களை விரல்களால் சுண்டிக்கொண்டிருந்தாள்.
கர்ச்சிப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டேன்.
சுவரில் ஒரு வயதானவரின் புகைப்படம் மாட்டப் பட்டிருந்தது. அதையே கவனமற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது கணேசன் சாரின் தந்தையாக இருக்க வேண்டும். சாருடைய புகைப்படம் எதுவும் அங்கேக் காணவில்லை. இதற்குமேல்தான் ஏதோ ஒரு படத்தைப் பெரிதாக்கி அங்கே மாட்டிவைப்பார்கள். மாலை அணிவிப்பார்கள்.
இனி பேசுவதற்கு ஏதுவுமில்லை எனத் தோன்றியது. அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அவர்களும் ஏதோ ஒரு முடிவிற்குக் காத்திருந்ததுபோலத் தெரிந்தது. அந்தச் சிறுவன் அமைதியற்று காணப்பட்டான். அவ்வளவுதான்; புறப்பட வேண்டிய கட்டம் வந்துவிட்டதை உணர்ந்தேன்.
“நான் கிளம்பறேன்’’ என்றேன் அந்த பெண்ணிடம். அவள் ‘சரி’ என்பது போல நின்றாள். கீழே குனிந்தவாறிருந்த அவர் மனைவியோ அவ்வண்ணமே இருந்தாள். நான் எழுந்து வெளியே வந்தேன்; இருள் கவியத் தொடங்கியிருந்தது. தெருவில் இறங்கி நின்றேன். எப்பக்கமிருந்து வந்தேன் என்று ஒரு திகைப்பு.
அங்கிருந்து வந்ததிலிருந்தே மனம் சோர்வு கண்டதுபோல இருக்கிறது. இந்தச் சம்பவத்தை ஒட்டிய எது என்னை இப்படி ஆக்கியது என்பதுதான் விளங்கவில்லை. அவரை இழந்து விட்டோம் என்பதற்கு அப்பாற்பட்டு நான் எதிர்கொள்ள நேர்ந்த வேறு விஷயங்களாக இருக்கலாம்.
கணேசன் சாரைப் பற்றி உங்களை நேரிலும் பார்த்து பேசவேண்டும் என்ற விருப்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது வருகிறேன். அவசியம் கடிதம் எழுதுங்கள்.
நட்புடன்,
பா. சீனுவாசன்
நண்பர் சீனுவாசன் அவர்களுக்கு,
உங்கள் கடிதம் கிடைத்தது. கணேசனைக் குறித்த உங்கள் அக்கறை உண்மையிலேயே என்னை வியப்படையச் செய்கிறது. உங்கள் நட்பை மதிக்கிறேன். இறந்து போகும் ஒவ்வொரு மனிதனும் வாழ்வு குறித்தான பல கேள்விகளை விட்டே செல்கிறான். இவைகள்தான் வாழ்பவர்களுக்கு விளங்கிக்கொள்ள முடியாத புதிர்களாக மிஞ்சுகின்றன. இந்தப்புதிர்களுக்குள்தான் நீங்களும் சிக்கிக்கொன்டிருப்பதுபோலவும் தோன்றுகிறது. கணேசனைப் பற்றிய உங்கள் நம்பிக்கைகள் பாசாங்கற்றவை என்பது புரிகிறது. இதுதான் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான சங்கடத்தையும் உருவாக்குகிறது. இறந்துபோன ஒரு மனிதனைக் குற்றம் சாட்டுவதை நம் மனம் எப்போதும் ஒப்புக்கொள்வதில்லை. மரணம் அவனுடைய எல்லாக் குற்றங்களையும் மன்னித்து விடுகிறது.
நாம் சிந்திக்கிறோம் என்பதாலேயே சராசரி உணர்வு நிலைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்துவிட முடிவதில்லை. மனிதனின் மேன்மைகளோ, கீழ்மைகளோ எப்போதும் ஒப்பிடப்படுவது கடவுள் தன்மையோடுதான். கடவுள் தன்மையோ நிர்ணயித்துக் கூற முடியாத அடிப்படைகளால் ஆனது.
கணேசன் ஒரு காலத்தில் மார்க்சிஸ்டாக இருந்தது எனக்குத் தெரிந்ததுதான் என்று எழுதியிருந்தீர்கள். மார்க்சியப் புத்தகங்களை அவன் ஆர்வமுடன் படித்தான் என்பது எனக்குத் தெரியும். மார்க்சிஸ்டாக இருந்தானா என்பதில்தான் பிரச்சினை இருக்கிறது. நானும் ஒரு கட்டத்தில் அவற்றைப் படித்துக்கொண்டிருந்தேன் என்றாலும் என்னை என்றைக்கும் மார்க்சிஸ்டாகக் கருதிக்கொண்டதில்லை; என்னால் இருக்கவும் முடிந்ததில்லை.
கணேசனை குடும்பத்திற்கு வெளியே உள்ள நபர் என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். அவனுடைய குடும்பத்தைப் பற்றி எனக்கு ஓரளவு அறிமுகம் உண்டு. பெண்களைவிட ஆண்கள் மேல் ஈர்ப்பு கொண்ட அவனுக்குக் குடும்பம் நிறைவைத் தராதது ஆச்சர்யம் ஒன்றுமில்லை. இந்த உண்மை உங்களுக்கு அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம். எங்களுக்கிடையிலான நட்பு பிளவுபட்டதற்கு அவனுடைய இத்தகைய போக்குதான் காரணம். என்னிடமே அவன் காட்டிய அத்துமீறல் இன்றைக்கும் எனக்கு அச்சமூட்டுகிறது. அவனுடைய எதிர்பார்ப்புக்கு உரியவனாக நான் இல்லை. அப்போதிருந்தே என்னை அவன் காணவருவதில்லை. என்னைப்பற்றியும், என் கவிதைகளைப் பற்றியும் அவன் அவதூறுகளைப் பரப்பிவருவதும் இதனால்தான். ஒரு வரியைக்கூட எழுதிப்பார்க்காத சிலர் இப்படி மேதாவித்தனமாக உளறிக்கொண்டிருப்பது சகஜமான விஷயம்தான்.
‘பிரபஞ்சத்தின் சாபம் மனிதன்’ என்ற அவனுடைய பிரகடனம் ஆர்ப்பாட்டமானது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? மனிதனின் உடல், அறிவு, அட்டூழியங்கள் எல்லாமே பிரபஞ்சத்தை உள்ளடக்கியதுதான். வேறொரு பிரபஞ்சத்திலிருந்து வந்தக் கலகக்காரர்கள் அல்ல மனிதர்கள். காலம்காலமான மனிதர்களின் தேடலும், உழைப்பும், கண்டுபிடிப்புகளும், வியர்த்தமானது என்றால்; மனிதனையே மறுக்கும் கூற்றல்லவா இது! மனித அறிவை நெறிப்படுத்த முடியாமல் போய்விட்டதுதான் பெரிய துரதிர்ஷ்டம்.
நீங்கள் மதிக்கும் அவனுடைய ஆன்மீக ஈடுபாடு நம்பகமானதுதானா என்று எனக்குத் தெரியவில்லை. கடைசிக் காலத்தில் கடவுள் பற்றி அவன் என்ன சொல்லிக்கொண்டிருந்தான்? ஒரு காலகட்டத்தில் கணேசனைப் போல் பகுத்தறிவுக் காரர்களாகவும், மார்க்சிஸ்டுகளாகவும் தங்களைப் பறைசாற்றிக்கொண்டவர்கள் ஒன்றும் செய்ய இயலாத துன்பம் வரும்போது மீண்டும் இந்த நிலைகளுக்குள் போய் சிக்கிக் கொள்வது நடந்துகொண்டிருக்கக் கூடியதுதான்.
கணேசனைப்பற்றிய இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஏதோ பகை உணர்வில் எழுந்ததல்ல. இந்தப் பகையைப் பாராட்டும் நோக்கமும் எனக்கில்லை. மனிதர்களின் முரண்பட்ட தன்மைகளை, புதிரான இந்தச் செயல்பாடுகளை உங்களுக்குத் தெளிவுபடுத்தவே இவற்றைச் சொல்ல நேர்ந்தது. மேலும் நட்பு என்பது தூய்மையான குணங்களால் மட்டும் கட்டமைக்கப்படுவதல்ல என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளத்தான்.
கணேசனின் வீட்டிற்குச் சென்றுவந்ததைப்பற்றி எழுதியிருந்தீர்கள். உங்களைக் கண்டதும் அழுது ஆர்ப்பாட்டத்துடன் தங்களின் துக்கத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள் இல்லையா? அவனுடைய மரணம் குறித்து அவர்கள் காட்டிய மௌனம் உங்களை அதிர்ச்சியுறச் செய்திருக்கிறது. சில பொழுது குடும்பம் இயல்பாகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டுவிடுகிறது. அந்தக் குடும்பத்திற்கு கணேசனால் ஆனது என்ன என்பது உங்களுக்குத் தெரியாததாலேதான் இந்தக் குழப்பம். ஒரு கட்டத்தில் அவனிடம் இல்லாத பழக்கங்களே இல்லை. வாழ்வின் உச்சபட்ச சுகித்தல் என்னவென்று அவன் தேடிக்கொண்டிருந்தான். இதிலிருந்து அவன் மீண்டு வெளிவந்தபோது குடும்பம் அவனைவிட்டு விலகிப் போயிருந்தது. தான் தனிமைப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த பிறகுதான் கடவுளைத் தேடி அவன் திருவண்ணாமலைக்கு வந்தது எல்லாம்.
மேலும் இதுபற்றி நாம் சந்திப்பது, பேசுவதெல்லாம் அவ்வளவு முக்கியமென்றும் எனக்குத் தோன்றவில்லை. இதற்காக நீங்கள் பெரிய முயற்சி எதையும் மேற்கொள்ளத் தேவையில்லை என்றும் படுகிறது. அவசியமானால் கடிதம் எழுதுங்கள்.
அன்புடன்
அர்ஜுனன்
6. நீதி
நீதியே மக்களின் ரொட்டி…
– ப்ரக்ட்
அவன் கடவுளிடம் சொன்னான்,
மை லார்ட்!
எல்லோரும் நீதி வேண்டிக் காத்திருக்கிறார்கள், கண்ணீ ருடனும், கையில் ஆவணங்களுடனும், பிச்சுவாகத்திகளுடனும், அரிவாள்களுடனும், தடிகளுடனும், பணப்பெட்டிகளுடனும், துப்பாக்கிகளுடனும், எறிகுண்டு களுடனும், ஏவுகணைகளுடனும், அணுஆயுதங்களுடனும். நீதி வழங்குமாறு மன்றாடுகிறார்கள். ஆணைகள் பிறப்பிக்கிறார்கள். அவரவர்களுக்கு வேண்டிய நீதிகள். கோடிக்கணக்கான நீதிகள்.
மை லார்ட்!
உங்கள் புராதன கட்டிடத்தில் நீதி ஒரு குழம்பிய நீர் வடிவில் தேங்கி வழிந்துகொண்டிருக்கிறது. ஒரு எருமை மாட்டைப் போல பிரகாசத்துடன் அதிலிருந்து மேலெழுகிறீர்கள் நீங்கள்!
உங்களை ரணப்படுத்த வரும் காகங்களுக்கும், திருட்டு சவாரிக்காக வரும் சிறுவர்களுக்கும் மன்னிப்பு வழங்கி ஒரு பங்குத்தந்தை போல ஆசிர்வதிக்கிறீர்கள். ஒரு நைந்த கயிற்றுக்குக் கட்டுப்பட்டு சுற்றிச்சுற்றி வந்து புற்கள் தீர்ந்த பூமியைப் பற்களால் சுரண்டுகிறீர்கள்.
மை லார்ட்!
அழுகிக்கொண்டிருக்கும் உடலிலிருந்து ஒரு புழுவைப் போல வெளிப்படுகிறீர்கள். நித்தியமானவர் நீங்கள்.
மை லார்ட்!
உங்கள் அதிகாரத்தின் எல்லை கண்ணியமானது. ஒரு பூச்சிக்குக்கூடச் சிறை வழங்காத இரக்கமுள்ளவர் நீங்கள். உங்கள் கிரீடத்தின் மேல் எச்சமிட்ட காகத்தை விரட்டக்கூடச் செய்யாமல் நீதி வழங்க விரையும் அற்புதம் நீங்கள்.
மை லார்ட்!
தீர்ப்பைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போவதன் காரணமாக மனிதனாகவும், அதை வழங்கிவிடுவதன் மூலம் கடவுளாகவும் காட்சி தருகிறீர்கள்.
மை லார்ட்!
உங்கள் மன்றத்தில் நாங்கள் எல்லோரும் அங்கத்தினர்களாக இருக்கிறோம். அதன் வரையறைகளுக்குக் கட்டுப் பட்டவர்களாகவும் அதே சமயத்தில் அதை மீறும் சுதந்திரம் கொண்டவர்களாகவும். எங்களின் பட்டியல் ஒன்று உங்களிடம் இருக்கிறது. குற்றங்களின் வகைமை போலவே முழுமையற்று நீள்கிறது பட்டியல்.
தாசில்தார், வேலைவாய்ப்பு அதிகாரி, சிகரெட் புகைப்பவர், பேங்க் மேனேஜர், பைனான்ஸ் கம்பெனி நடத்துபவர், பிக்பாக்கெட் அடிப்பவர், ஆட்டோ டிரைவர், ஒரு போலீஸ் அதிகாரி, விபச்சாரி, டெலிபோன் ஊழியர், பால்காரர், அச்சக முதலாளி, கவிஞர், கட்சித் தொண்டர், மார்க்சியவாதி, சாமியார், கலெக்டர், போஸ்டர் ஒட்டுபவர், பங்குத்தந்தை, ஜெராக்ஸ் போடுபவர், விளையாட்டு வீரர், மலைவாசி, தொண்டு நிறுவனம் நடத்துபவர், உரக்கடைக்காரர், தறி நெய்பவர், பத்திரம் எழுதுபவர், பதிவாளர், மோட்டார் மெக்கானிக், ஒரு புரட்சிக்காரர், தீவிரவாதி, சாலை ஓரத்தில் மூத்திரம் பெய்பவர், சேட்டிலைட் டிவி ஓனர், செய்தித் தொகுப்பாளர், ஒரு ஓவியன், இசைக் கலைஞன், சினிமா தயாரிப்பாளர், மாமா வேலை செய்பவர், எழுத்தாளன், ஒரு ஆசிரியர், கந்துவட்டிக்காரர், சைக்கிள் கடைக்காரர், சினிமா இயக்குனர், ஜவுளி கடைக்காரர்.
ஒரு ராணுவ அதிகாரி, கசாப்பு கடைக்காரர், வித்தை காட்டுபவர், ஒரு விஞ்ஞானி, டாக்டர், வெட்டியான், ஓட்டல் முதலாளி, பிராந்திக் கடை அதிபர், ஆட்டோ புரோக்கர், வேவுபார்ப்பவர், ஒரு கம்யூனிஸ்ட், கஞ்சா புகைப்பவர், உதவி இயக்குனர், மார்வாடி, மண்டிக்காரர், சிறுபத்திரிக்கை ஆசிரியர், சுயஇன்பக்காரர், ஒரு காதலன் அல்லது காதலி, ஜாதிசங்க நிறுவனர், ஓரினப்புணர்ச்சிக்காரர், ஒரு விவசாயி, டவுன் பஸ் கண்டக்டர், சுரங்கத் தொழிலாளி, கிராம பிரசிடெண்ட், கவுன்சிலர், சாலையில் நடப்பவர், பிரதமர், சர்க்கஸ் முதலாளி, தச்சன், பேருந்தில் சத்தமாகப் பாட்டுவைக்கும் டிரைவர், கருவாடு விற்பவர், ஜனாதிபதி, பைத்தியக்காரன், லாண்டரி கடைக்காரர், வன அதிகாரி, சந்தனக் கட்டை திருடுபவர், கோயில் பூசாரி, போர்னோ விற்பவர், வழக்கறிஞர், ஒரு பாடகன் அல்லது பாடகி, ஒரு தாய் அல்லது தந்தை, ஒரு குழந்தை, சவரத்தொழிலாளி, முதல்வர், கேப்ரே டான்சர், சர்வாதிகாரி…
இவர்களில் யாரை வேண்டுமானாலும் நீங்கள் குற்றவாளியாக்கலாம், தூக்கிலிடலாம், குற்றத்திலிருந்து விடுவிக்கலாம்; அவ்வளவு நீதி குவிந்து கிடக்கிறது உங்களிடம். அனால் இதுவரையிலான உங்கள் தீர்ப்புகள் எங்களை அவமானப்படுத்துவதாகவே இருந்திருக்கின்றன.
முடிவாக அவன் கடவுளிடம் சொன்னான்ஙி
இன்னும்கூட நம்பிக்கை வற்றவில்லை,
மை லார்ட்!
என்றாவது ஒரு நாள் நீங்கள் எல்லோருக்குமான நீதியை வழங்கத்தான் போகிறீர்கள். சாவற்ற உங்கள் வாழ்வு அதைச் சாத்தியமாக்கத்தான் போகிறது. அப்போது மனிதர்கள் யாருமே இல்லையென்றாலும் நடுங்கும் உங்கள் நாவினால் அந்த நீதியை உச்சரிக்கத்தான் போகிறீர்கள். அது அடிவானத்தை நோக்கி மெல்ல நடக்கப்போகிறது – சாப்ளினைப் போலத் தனிமையாகவும் துயரமாகவும்…
.
7. கடிகாரம்
சீட்டு விளையாடுவதற்கு நண்பன் ஒருவனது வீட்டு மொட்டை மாடியை நாங்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். குடித்தனம் செய்வதற்கு லாயக்கற்ற அந்தப் பழைய வீட்டை ஒரு எலக்ட்ரிக் கடைக்காரன் வாடகைக்கு எடுத்து குடௌனாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தான்.
ஒரு கோடை காலத்தின் சாயந்திர வேளையில் எங்கள் கச்சேரி நடந்துகொண்டிருந்தது. ஒரு கீற்றுக் கொட்டகையை இதற்குப் பிரத்யேகமாக ஏற்பாடு செய்து வைத்திருந்தோம். கான்கிரீட் தளம் சூடேறி, வெக்கையானது எங்கள் கிளப்பையும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. பக்கத்து வீட்டுப் பாதாம் மரத்தின் இலைகளில்கூட துளியும் அசைவில்லை. காற்று ஸ்தம்பித்து நின்றிருந்தது. உடல்கள் வேர்வையில் நனைந்து கசகசத்தன. ஆட்டத்தின் தீவிரத்தில் இதெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. இந்தக் கதையின் வில்லன், அறி என்று நாங்கள் சுருக்கமாக அழைக்கும் அறிவழகன் மட்டும் சட்டையை கழட்டி ஒரு மூங்கில் கொம்பில் மாட்டிவிட்டு வெற்றுடம்புடன் ஆடிக் கொண்டிருந்தான். புஸ்புஸ்ஸென்று அவன் எழுப்பிய சத்தம் எங்களுடைய அதிகப்படியான சகிப்புத் தன்மையை வேண்டி நின்றது.
நான் எங்கள் ஜமாவில் சேரும்போது அவன் அதனுடைய பழைய வாடிக்கையாளன். நான் அப்போது குடியிருந்த தெருவில் அவனுக்கு சொந்தமான ஒரு வாடகை வீடு இருந்தது. அந்த வீட்டைத் தவிர இன்னும் இரண்டு வீடுகளும், நாலு ஆட்டோக்களும் அவனுக்குச் சொத்துக்கள்.
ஒரு நாள் ஏதேச்சையாக அவனை எங்கள் தெருவில் பார்த்தேன். வாடகை வசூல் செய்ய வந்திருந்தான். வீட்டுக்குக் கூப்பிட்டதில் அவனுக்கு ரொம்ப சந்தோஷம். மனைவிக்கு அறிமுகப் படுத்தினேன். அவள் காப்பி தயார் செய்ய உள்ளே போனாள்.
அவன் தேர்ந்தெடுத்து உட்கார்ந்த நாற்காலி தனது அந்திமகாலத்தில் இருந்ததால் ஒரு அசம்பாவிதத்தை எதிர்பார்த்திருந்தேன் நான்.
கேட்டான், “இந்த வீட்டுக்கு எவ்வளவு வாடகை தர்றே?’’
சொன்னேன்.
இன்னும் இரண்டு மூன்று மாசம் போனால் இதைவிட குறைந்த வாடகையில் இதைவிட சிறந்த ஒரு வீட்டை அவனே ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னான். அவனுடைய கவனம் மேஜைமேல் இருந்த கடிகாரங்களின் பக்கம் திரும்பியது.
“உனக்கு இந்த வேலையெல்லாம் கூடத் தெரியுமா?’’ என்று கேட்டான் ஆச்சரியத்துடன்.
“தெரியும்’’ என்றேன்.
வெகு நாட்களாக சுவர் கடிகாரம் ஒன்று அவனுடைய வீட்டில் பழுதடைந்து கிடக்கிறதாம், அதை சரிபடுத்தித்தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டான். பிறகு அவனுடைய அக்கறை என் உத்தியோகத்தைப் பற்றித் திரும்பியது. நான் வேலையை விட்டுவிட்ட விபரத்தை தெரிந்து வைத்திருந்தான்.
“ஏன் நல்ல வேலையை விட்டுவிட்டு வந்தாய்?’’ என்று கேட்டான்.
“இதுபற்றி இப்போது என்ன? பிறகு பேசிக் கொள்ளலாம்’’ என்றேன்.
“இந்த விஷயத்தில் நீ இவ்வளவு அநாவசியமாக இருக்கக்கூடாது’’ என்றவன் “நிரந்தரமான ஒரு உத்தியோகமாக ஏன் தேடிக் கொள்ளக்கூடாது?’’ என்று கேட்டான்.
எனக்கு இதுநாள் வரை தோன்றாத யோசனை அது!
மிக்சரும் காப்பியும் வந்தது.
“உங்க வீட்டுக்காரு இன்னும் விஷயம் தெரியாத ஆளாவே இருக்காரே! நீங்களாச்சும் சொல்லக்கூடாதா? வேலைன்னா அந்த இடத்துல நம்பளமாதிரியே ஆட்கள் இருப்பாங்கன்னு எதிர்பார்க்கமுடியுமா? அப்படி ஒத்து வரலேன்னா அங்க இங்க அலையாம வாட்ச் ரிப்பேர் பண்ணியே காசு சம்பாதிக்கலாம்’’
என் பக்கம் பார்த்து சொன்னான், “இன்னிக்கி ரிப்பேர் தொழில்ல என்ன காசு தெரியுமா?’’
மீண்டும் அவள்பக்கம் திரும்பி, “நாலு காசு கையிலே இல்லேன்னா என்ன இருக்கு சொல்லுங்க? இந்த காலத்துல கை நிறைய சம்பாதிக்கறவனாலேயே தாக்கு பிடிக்கமுடியலை….’’
அவன் சொன்னதை ஆமோதிப்பவள் போல புன்னகைத்துவிட்டு அவள் உள்ளே போய்விட்டாள். நல்ல வேளையாக என் மனைவி அதிகம் பேசும் ரகம் இல்லை. இருந்தாலும் என் புத்திசாலித்தனத்தைப் பற்றி அவளுக்கு அதிருப்தி இருந்து வந்தது உண்மை. வேலை பற்றிய பேச்சுக்கள் எல்லாமே கடும் மனக்கசப்பில் கொண்டு போய் நிறுத்திக்கொண்டிருந்தன.
அவனுடைய அடுத்த கேள்வி, “கல்யாணமாகி எத்தனை வருஷமாகிறது?’’ என்பது.
சொன்னேன்.
“மூன்று வருஷமாகிறதே ஏன் இன்னும் குழந்தைப் பெற்றுக் கொள்ளவில்லை?’’
நான் பதில் சொல்லவில்லை. அவனும் அதை எதிர்ப்பார்த்தவனாக தெரியவில்லை. நல்ல டாக்டரை பார்க்கச் சொன்னான். ஒரு டாக்டர் பெயரை பரிந்துரை செய்தான்; மேலும் அவருடைய மகிமைகள்….
உபதேசிகளை சிரச்சேதம் செய்த அற்புதம் எங்கேயாவது நடந்திருக்கிறதாயென்று யோசித்துப் பார்த்தேன். ஒன்றும் ஞாபகத்தில் வரவில்லை. ஒரு வழியாக கிளம்பினான். வாசலில் போய் நின்றுகொண்டு என் மனைவியிடம் சொன்னான்.
“நல்ல நேரம்னு ஒன்னு வந்தா, எல்லாம் சரியாப் போயிடும் கவலைப் படாதீங்க’’
அந்த நாற்காலிக்கோ அவனுக்கோ எந்த சேதாரமும் ஆகவில்லை. எங்கள் வீட்டுக்கு கிருஷ்ணபரமாத்மாவின் முதல்வருகை இப்படி எந்த வித அசம்பாவிதமும் நிகழாமல் முடிவடைந்தது.
மறுநாள் காலையில் ஒரு பெரிய சுவர் கடிகாரத்துடன் தனது ஆட்டோவில் வந்து இறங்கினான். இதற்கு முன்னால் எப்போதும் அப்படி ஒரு கடிகாரத்தை நான் பார்த்ததில்லை. அவனுடைய தாத்தா காலத்திலிருந்தே அது அவனுடைய வீட்டில் இருக்கிறதாம். அனேகமாக ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்திலிருந்துதான் அதை அவர் திருடிக் கொண்டு வந்திருக்கவேண்டும். அவன் வைத்திருந்த ஸ்கூட்டர் கூட அப்படித்தான் பாதிநாள் ஒர்க்ஷாப்புகளிலேயே தன் ஆயுளை கழித்துக்கொண்டிருந்தது. அந்த கடிகாரத்திற்கு உயிர் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை துளி கூட எனக்கேற்படவில்லை. அதை எப்படியாவது சரி செய்து கொடுத்துவிடுவது என்று அதிக சிரத்தை எடுத்துக்கொண்டேன். அதற்குள் ஐந்து முறை என் வீட்டுக்கு வந்து போயிருந்தான். அதில் இரண்டு முறைதான் நான் வீட்டில் இருந்தேன். என் மனைவி என்னிடம் அந்த கடிகாரத்தை திருப்பிக் கொடுத்துவிடும்படியும் அவன் இங்கே வருவதை விரும்பவில்லையென்றும் சொன்னாள். எப்படியோ முயன்று அந்த கடிகாரத்தை நான் ஓடவைத்துக் கொடுத்தனுப்பிவிட்டேன். இது நடந்து ஒரு மாதம் ஆகியிருக்கும், அன்று உற்சாகமாக பறந்து கொண்டிருந்த சீட்டுகளுக்கு மத்தியிலும் அவனுடைய கவனம் முழுவதும் என் பக்கமே இருந்தது. அவன் ஆடிக்கொண்டிருந்த ஆட்டத்தை விட முக்கியமான விஷயம் ஒன்று இருப்பதை எனக்கு குறிப்புணர்த்திக் கொண்டிருக்கிறானாம். இதை நான் பிறகுதான் தெரிந்து கொண்டேன்.
அன்றைய ஆட்டம் முடிந்து புறப்பட்ட போது என்னுடனேயே புறப்பட்டு வந்தான். அவன் ஏதோ பேசும் ஆர்வத்தில் இருந்தது தெரிந்தது. என் பேரிலும் என் குடும்பத்தின் பேரிலும் அவனுக்கு அக்கறை இருப்பதால்தான் இந்த விஷயத்தை சொல்ல வருகிறானாம். அவன் சொல்லப் போகும் விஷயம் அதிர்ச்சி தருவதாக இருந்தாலும் நான் நிதானமாக கேட்டு முடிவெடுக்க வேண்டும் – இது பீடிகை. எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லும்படி கேட்டேன். குரலை தாழ்த்தி ரகசியம் சொல்வதைப் போல சொன்னான். எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பஸ் நிறுத்தத்தில் அதற்கு முன் தினம் என்மனைவியுடன் இன்னொரு ஆளையும் பார்த்தானாம். மிகவும் அந்நோன்யமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்களாம். சந்தேகமில்லாமல் அது என் மனைவிதான் என்று சொன்னான். தெருவின் ஓரத்தில் ஒதுங்கி நின்று கொண்டேன். அவனும் வந்து பக்கத்தில் நின்று குழப்பத்துடன் என்னைப் பார்த்தான். மேலும் பேச நான் கொஞ்சம் நிதானப்படுத்திக் கொள்ளவேண்டியிருந்தது. என் மனைவியின் கற்பை பாதுகாக்கும் வேலை அவனுக்கு அவசியமற்றதென்னும் எச்சரிக்கைக்கு பின்னால், அவளுடன் அன்று பேசிக் கொண்டிருந்தது அவளுடைய தம்பி என்றும்; அவனை வழியனுப்பத்தான் அவள் அங்க போயிருந்தாள் என்றும் சொன்னேன். இந்த விளக்கமே எனக்கு அருவருப்பான ஒன்றாகப் பட்டது. ஒரு மடையனிடம் நான் எதற்காக இதை தெளிவுபடுத்திக் கொண்டிருக்கவேண்டும்?
“ஸ்….ஓ! சரிசரி நான் வேற யாரோன்னு தப்பா நினைச்சிட்டேன் சரி சரி….’’ என்றான், ஏதோ ஆச்சரியத்தை கேட்டவனைப் போல. என்னிடம் மட்டுமல்ல என் நண்பர்கள் சிலரிடமும் அவன் இந்த அநியாயத்தைப்பற்றி முறையிட்டி ருக்கிறான் என்ற விஷயம் எனக்கு பின்னால்தான் தெரியவந்தது.
கோடை வெப்பம் மிகுந்த ஒரு நாளைப் பற்றிதானே நான் சொல்ல ஆரம்பித்தேன்? அன்று அதிர்ஷ்ட தேவதை அவன் கட்சியில் இருந்திருக்கவேண்டும். ஆரவாரத்துடன் உடம்பை அசைத்தும், சிரித்தும் தனது வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தான். அவன் நல்ல சிவந்த நிறம். அறிவுதான் கொஞ்சம் கம்மியே தவிர அழகன்தான். அவனுடைய மார்பில் தடிமனான தங்கச் சங்கிலி ஒன்று அசைந்து கொண்டிருக்கும். அவனுக்கு அபாரமான ஞாபகச் சக்தி. குறிப்பாக தனது சூட்சும அறிவையும், புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தும்படி அமைந்த ஆட்டங்கள்தான் அபாரமாக அவன் ஞாபகத்தில் இருக்கும். அதையெல்லாம் வார்த்தைகளாலேயே திரும்ப ஆடிக் காண்பித்துவிடுவான். சீட்டுக்களின் ஏதேச்சைத்தன்மையின்மேல் நம்பிக்கை வருவது அவன் மோசமாகத் தோற்ற ஆட்டங்களின் போது மட்டும்தான்.
அன்று மாலை திரும்பும்போது என்னுடன் வழி முழுக்க பேசிக் கொண்டே வந்தான். தவிர்க்க முடியாத சில கட்டங்களில் அவன் சொல்வதை நான் ஆமோதித்தேன். ‘என்ன சொல்கிறாய்’ என்றோ ‘அப்படித்தானே’, போன்ற இடங்களில் நான் ‘சரிதான்’ என்று பதில் சொல்வேன். வேண்டா வெறுப்பாகவே எனது குரல் எழுந்தாலும் அவன் திருப்தியடைந்துவிடுவான். நாம் ஏதாவது ஒன்று சொல்ல அது அவனுக்கு வாய்ப்பாகப் போய்விடக்கூடாதே என்ற எனது சாதூர்யம் ஒன்றும் அவனிடம் பலிக்கவில்லை. அன்றுபார்த்து அவனுடைய ஸ்கூட்டர் ரிப்பேர் ஆனது என்னுடைய துரதிஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். பஸ்நிறுத்தம் வந்ததும் அவனே பேச்சை நிப்பாட்டிக் கொண்டான். என் நன்றிக்குரிய நான்கைந்து பேர் அங்கே நின்றிருந்தார்கள்; இல்லையென்றால் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்திருப்பான்.
முன்பே முடிவு செய்து கொண்டிருந்தானோ என்னவோ என்னை மது அருந்த கூப்பிட்டான். அன்று நான் குடிக்கும் மனநிலையில் இல்லை. அதிலும் அவனுடன் குடிப்பது நினைத்துப் பார்க்கவே எரிச்சலாக இருந்தது. என்னால் வரமுடியாது என்று சொல்லிவிட்டேன். உடனே வந்துவிடலாமென்றான். எனக்கு வேறு முக்கியமான ஒரு வேலை இருப்தாகச் சொன்னேன். ‘பரவாயில்லை வா’ என்றான். அவனுடைய குரல் கொஞ்சம் உரத்து ஒலிக்க சிலர் எங்கள் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். இது என்னை சங்கடத்துக்குள்ளாக்கியது. கையைப்பற்றிக்கொண்டு இழுத்தான். இப்படி ஒரு சூழலையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டான்.
ஒரு பிராந்திக்கடைக்கு பின் பக்கமாக இருந்த ஒரு ஓட்டுவீடு பாராக அவதாரம் எடுத்திருந்தது. அங்கே அதிக கூட்டமில்லை. ஒரு மேஜையைத் தேர்ந்தெடுத்து எதிரெதிரே உட்கார்ந்து கொண்டோம். இரண்டு மேஜைகளுக்கு மத்தியில் மேலே சுற்றிக்கொண்டிருந்த மின் விசிறி வெப்பக்காற்றை வெறுமனே தள்ளிவிட்டுக் கொண்டிருந்தது. திரும்பத் திரும்ப ஒரு விதமான இறுக்கத்திற்குள் நான் அகப்பட்டுக் கொள்வதாகப்பட்டது.
எனக்குத் தேவையான அயிட்டத்தைப்பற்றிக் கேட்டான். நான் சொல்லும் வரை காத்திருப்பவனைப் போல என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். வேறு வழியில்லாமல் ‘விஸ்கி’ என்றேன் . அவனுக்கு அது சரிபட்டு வராதாம். அரைபாட்டில் பிராந்திக்கும் இரண்டு ஆம்லெட்டுக்கும் ஆர்டர் சொன்னான்; கலப்பதற்கு சோடா. இதற்கு என்னை கேட்கவேண்டிய அவசியமில்லையே!
நான் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எங்களுக்கு பக்கத்திலிருந்த மேஜையில் மூன்று இளைஞர்கள் உட்கார்ந்திருந்தனர். மேஜையின் மேலிருந்த வகையறாக்களை பார்த்தபோது மதுவை எவ்வளவு அற்புதமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் என்பது புரிந்தது. அவர்களுடைய பேச்சு ரொம்பவும் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் இருப்பவர்கள் எப்போதோ அவர்களுக்கு மறந்து போயிருக்கவேண்டும். அதில் தனியாக உட்கார்ந்திருந்த ஒரு ஒடிசலான இளைஞன் மட்டும் மற்ற இருவரின் பேச்சைக் கேட்டு குழந்தையைப் போல சிரித்துக்கொண்டிருந்தான். அவ்வப்போது தாடியை அழுத்தமாக தடவிவிட்டுக் கொண்டான். எனக்கு எதிரே இரண்டு மேஜை தள்ளி, சுவரில் ஒரு கேலண்டர்தொங்கிக் கொண்டிருந்தது. அது மதுபான கம்பெனி ஒன்றின் விளம்பரப்படம். விஸ்கி பாட்டில் ஒன்று நீளமான ஒரு கயிற்றில் பெண்டுலம் மாதிரி தொங்கவிடப் பட்டிருக்கிறது; நிர்வாண கோலத்திலிருக்கும் ஒருத்தி மூடிக்கு மேலே நின்று கயிற்றை தன் இரண்டு செழித்த முலைகளுக்கிடையே அழுத்திப்பிடித்தபடி உல்லாசமாக ஆடிக்கொண்டிருக்கிறாள். அந்த பார் இருந்த இடம் இதற்கு முன் ஒரு வீடாக இருந்து அதில் ஒரு குடும்பம் வசித்திருக்கும் என்பதை யோசிக்கவே பொருத்தமற்றதாக இருந்தது.
இவன் பேசிக் கொண்டிருந்தான். கடிகாரம் குறித்து அவன் ஏதோ சொல்லத் தொடங்கியதும் திரும்பினேன். அந்த சுவர் கடிகாரத்தை என்னிடம்கொடுப்பதற்கு முன்னால் வேறு இரண்டு கடைகளில் கொடுத்திருக்கிறான். காசுதான் செலவானதேயொழிய கடிகாரம் சரியாக ஓடவில்லை என்றான். என்னைப் போல திறமையுள்ள ஆட்களைப் பார்ப்பது அபூர்வம் என்றான். அவனுடைய கடிகாரத்தை ரிப்பேர் செய்து கொடுத்ததற்கு நான் பணம் எதையும் வாங்கிக் கொள்ளாதது அவனுக்கு வருத்தமாம். அதற்கு பிரதி உபகாரமாக இன்று எவ்வளவு வேண்டுமானாலும் எனக்காக செலவழிக்கத் தயாராக இருப்பதாகச் சொன்னான். இதுதான் விஷயம் போலும்! இதெல்லாம் அவசியமில்லாதது என்று சொல்லி நான் தலையைத் திருப்பிக் கொண்டேன். இரண்டு உயரமான கண்ணாடி டம்ளருடன் இரண்டு பாட்டில் சோடாவும் அரைபாட்டில் பிராந்தியும் வந்தன. அவனே அளவு பார்த்து ஊற்றினான். சோடா பாட்டிலை குலுக்கி அதன் வாயை விரல்களால் அழுத்திக் கொண்டு டம்ளரில் பீய்ச்சியடித்து கலந்தான். ‘சியர்ஸ்’ சடங்குக்குப்பிறகு குடிக்க ஆரம்பித்தோம். ஆம்லெட் வந்தது. விரைவாகவே நான் போதையின் பிடிக்குள் சிக்கினேன். உடல் சமநிலை தளர்ந்து மயக்கம் கொள்ளத் தொடங்கியது.
தனது வியாபார நுட்பங்களைப்பற்றி அவன் பேசிக்கொண்டிருந்தான். அவனுடைய வெற்றிகள் குறித்தும், தோல்விகள் நெருங்கிய காலத்தில் அதை எப்படி சமாளித்து வெளிவந்தான் என்பதைப் பற்றியும் அவன் பேசியதாக ஞாபகம்.
என்னுடன் பிணைக்கப்பட்டிருந்த ஒரு கயிற்றின் முனையை பிடித்து தொங்கியபடி ஒரு இரும்பு குண்டைப் போல அவன் ஊசலாடிக்கொண்டிருந்தான். வலி கயிற்றின் வழியே ஏறி விஷம்போல என்னுள் பரவிக் கொண்டிருந்தது. எனக்கு நானே பரிதாபம் கொள்ளக்கூடிய நிலையில், விடுதலை செய்துவிடும்படி அவனிடம் கெஞ்சிக் கேட்கத் தாயாராகிகொண்டிருந்தேன்.
“இந்தா இன்னொரு டம்ளர் குடி’’ என்றான் அதிகாரத்துடன்.
“எனக்குப் போதும்’’ என்றேன்.
அவனுடைய முகம் போதையில் நொடித்தது. அவன் இன்னுமொரு கால் பாட்டில் வரவைழத்திருந்தான். என்னை முறைத்துப் பார்த்தபடி சொன்னான். “பேசாமகுடி, நீயா காசு குடுக்கப்போற?’’. அந்த போதையிலும் நான் குன்றிப்போனேன். அதற்கு மேலும் நான் குடிக்க விரும்பவில்லை. மீதியை அவனே குடித்தான்.
பாரை விட்டு நாங்கள் வெளியே வந்தபோது ஒன்பதரை மணிக்கு மேல் இருக்கும். அவன் நிதானம் தவறியிருந்தான். அவனை வீட்டில் கொண்டுபோய் சேர்க்கவேண்டிய பொறுப்பு என் மேல் விழுந்தது. ஆட்டோவில்தான் அவனை கொண்டு போக முடியும். ஜோபியிலிருந்த காசு போதுமாவென்று பார்த்து ஆட்டோவை கூப்பிட்டேன். ஆட்டோக்காரனுக்கு இவனை தெரிந்திருந்தது.
வழியில் உளறிக்கொண்டே வந்தான். தானும் சில ஆட்டோக்களுக்கு சொந்தக்காரன் என்ற உரிமையில் ஆட்டோகாரனின் தன்மானத்தை சீண்டும் விதமாக சில வார்த்தைகளை பேசினான். கேட்டருகில் ஆட்டோவை நிறுத்தச் சொல்லி அவனை கீழே இறக்கி நிற்க வைத்தேன். ஆட்டோக்காரனே கேட்டைத் திறந்து விட்டான். வீட்டிலிருந்து ஒரு நாய் குரைத்துக் கொண்டே ஓடி வந்தது. கதவைத் திறந்துகொண்டு அவன் மனைவி வெளியே வந்தாள். நாய் பக்கத்தில் வந்ததும் குரைப்பதை நிறுத்திக்கொண்டு வாலாட்டியது. இரண்டு கதவையும் பறக்க திறந்துவிட்டு அவள் கடுமையான முகத்துடன் ஒதுங்கி நின்று கொண்டாள்.
ஆட்டோக்காரனைக் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு, அவனை வீட்டுக்குள் இழுத்துக் கொண்டுபோய் ஒரு பிரம்பு நாற்காலியில் உட்காரவைத்தேன். எது நடந்து விடக்கூடாது என்று நான் பயந்தேனோ அது அப்போது நடந்துவிட்டது; அவன் வாந்தியெடுக்கத் தொடங்கினான். அவனுடைய மனைவியின் பார்வையை சந்திக்க அச்சப்பட்டு திரும்பும்போது வரவேற்பறையின் சுவரில் இருந்த அந்த ராட்சஷ கடிகாரத்தைப் பார்த்தேன்; மணி பன்னிரண்டு ஐம்பதைக்காட்டியது. பெண்டுலத்தில் அசைவில்லை. கடிகாரம் நின்றுவிட்டிருந்தது.
.
8. மஹாவிஜயம்
சூரியனிலும், சந்திரனிலும், நட்சத்திரங்களிலும், அடையாளங்கள் தோன்றும்; பூமியின் மேலுல்ல ஜனங்களுக்கு தத்தளிப்பும், இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும், அலைகளும் முழக்கமாய் இருக்கும். வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம். அப்போது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
லூக்கா 21:25:27
சிறிய நகரம்தான் என்றாலும் தெய்வீக ஒளி ஒன்று சூழ்ந்திருப்பதாகக் கருதி இந்நகரத்தை காண வெகு தொலைவிலிருந்தெல்லாம் ஆட்கள் வரத் தொடங்கியிருந்தார்கள். எந்த மலைத் தொடரோடும் தொடர்பற்று தனித்திருந்த ஒரு உயரமான மலைக்குன்றின் கிழக்குச் சரிவில் அமைந்திருந்ததால், மாலையில் இந்நகரத்தின்மேல் பெரும் நிழல் ஒன்று கவிந்தது. மழைக்காலங்களில் தேக்கமற்று உருண்டு ஓடும் நீர், நகரத்தைப் பரிசுத்தமாக்கிவிட்டு ஒரு அகன்ற ஏரியில் சென்று கலந்தது. அன்னச்சத்திரங்களும், மடங்களும் கொண்ட வீதிகளில் காவி உடைதரித்த சாதுக்களையும், ரிஷிகளின் ஆஸ்ரமங்களுக்கு வருகைதரும் வெளி நாட்டுக்காரர்களையும் சகஜமாக இங்கு காணலாம்.
ஒரு பைத்தியக்காரனின் தீயகனவு என்று சொல்வதைவிட வேறு என்ன சொல்வது இதைப்பற்றி? கூச்சலும், குழப்பமும், களேபரமும் கொண்ட இக்கனவினுள் இந்நகரம் தன்னை மூழ்கடித்துக்கொண்டதை அவ்வளவு எளிதாக மறந்துவிடவும் முடியாது.
முதல்வரின் வருகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பின்னிரவில்தான் அது தொடங்கியிருக்கவேண்டும். அதிலும் கட்சித்தொண்டர்கள் நடு சாமத்தையும் தாண்டி வேலை செய்துவிட்டு, களைப்பில் உறங்கப்போய்விட்ட பின்புதான் நடந்திருக்கவேண்டும். பெரியார் சிலை சந்திப்பை சுற்றியிருந்த சுவர்களில் தலைவரின் உருவப்படங்கள் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களுக்கு மேல் அடாவடித்தனமாக அவை ஒட்டப்பட்டிருந்தன. வெள்ளைத்தாளில் சிவப்பு மையினால் பின்வருமாறு அச்சிடப்பட்டிருந்தது.
‘பூமியில் மீண்டும் கடவுளின் சாம்ராஜ்யம்! சூன் 8 இரவு 12.00 மணிக்கு இங்கே கடவுள் எழுந்தருளப்போகிறார்’
‘கடவுள்’ என்ற வார்த்தையை மட்டும் பெரிய எழுத்தில் அச்சிட்டிருந்தார்கள்.
தாலுக்கா அலுவலகத்தின் சுவர், அதை ஒட்டிய கைவிடப்பட்ட ஒரு பொதுக்கழிவறைச் சுவரிலும், எதிர்சாரியிலிருந்த தேவாலயத்தின் சுவரிலும், பெரியார் சிலையை சுற்றி கட்டப்பட்ட சுற்றுச்சுவரிலும் அது ஒட்டப்பட்டிருந்தது.
முதல்வர் வருகை தரும் அதே இரவில் கடவுளும் இந்நகருக்கு விஜயம் செய்யப்போகிறார்! பொழுது புலரும் போதே இந்த விஷயம் நகரத்தின் ரத்தநாளங்களில் கலந்து பரவியது. முதல் பார்வைக்கு சாதாரண அத்துமீறல்போல் தோன்றினாலும் அந்த வாசகம் எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்தியது.
சிவப்பு மையினால் அச்சிடப்பட்டிருந்ததால் தோற்றத்தில் அது ஏதோ கம்யூனிஸ்ட்டுகளின் சுவரொட்டிகள் போலவே தெரிந்தது; இருந்தாலும் அவர்கள் இதை ஒட்டியிருக்கமுடியாது. ‘கடவுள்’ என்ற இடத்தில் ‘காரல்மார்க்ஸ்’ என்று வேண்டுமானால் அவர்கள் எழுதியிருக்கக்கூடும்.
தேவன் பூமிக்கு வரப்போவதாகவும் பரலோக சாம்ராஜ்யத்தை நிறுவப்போவதாகவும், சொல்லிக்கொண்டிருப் பவர்கள் ஒருவேளை இதை ஒட்டியிருக்கலாம். அதிலும் அருகிலேயே பழமையான தேவாலயம் ஒன்று இருக்கிறது. அதன் சுவர்களில் கூட அந்த விஷமத்தனமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. ஆனால் ‘எழுந்தருளல்’ என்பது அவர்களுடைய பாஷையில்லை. எல்லாவற்றையும் ‘அவன் கேட்டுக்கொண்டிருக்கிறான்’, ‘பார்த்துக்கொண்டிருக்கிறான்’ என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள்கூட கடவுள் பூமிக்கு வந்து மனிதர்களுடன் கலப்பார் என்பதை நம்பியதில்லை.
முதல்வரை கடவுளாக பாவித்து தீவிர கட்சித்தொண்டன் எவனோகூட இந்த வரவேற்பை கொடுத்திருக்கலாம். ‘தெய்வமே’ என்பதற்கு பதிலாக ‘கடவுள்’ என்ற வாசகத்தை பயன்படுத்தி யிருக்கலாம். ஆனால், அவர்களுடைய கட்சியின் வண்ணத்திற்கும் இந்த சுவரொட்டிக்கும் சம்மந்தம் இல்லை. அடுத்ததாக முதல்வர் பேசுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடமும், நேரமும் வேறு.
இதை எதிர்கட்சிகளின் சதி என்றுகூட பேசிக்கொண்டார்கள். முதல்வர் இங்கே தொடங்கப்போகும் திட்டம் அவர் ஆட்சிக் காலத்தின் சாதனையாக எப்போதும் பேசப்படப்போகிறதே என்ற பொறாமையில் அவர்கள்தான் செய்திருக்கவேண்டும். வழக்கமான இந்த யூகமும் அவ்வளவாக எடுபடவில்லை.
பிரசித்திபெற்ற பல கோவில்களும், மடாலயங்களும், ஆஸரமங்களும் மலிந்துகிடக்கும் இந்த நகரத்தில், இதையெல்லாம் விட்டுவிட்டு கடவுள் ஏன் இந்த இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றுதான் ஒருவருக்கும் விளங்கவில்லை. இங்கே பேருந்துகளுக்காக நிற்கிற ஜனங்கள் தனக்காகத்தான் காத்துநிற் கிறார்கள் என்று கடவுள் தவறாகத்தான் புரிந்து கொண்டிருக்கவேண்டும்.
கட்சித்தொண்டர்கள்தான் வருத்தமுற்று காணப்பட்டார்கள். தலைவரின் வருகை எங்கே ரத்தாகிவிடுமோ என்று பயந்தார்கள். லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவிடப்பட்டு செய்யப்பட்ட அலங்காரத்தையெல்லாம் அவர் பார்க்காமல் போனால் என்ன ஆவது?
ஆரம்பத்தில் சலசலப்பாகவும், புரளியாகவும் இருந்த இச்சம்பவம் திரண்டு வளர்ந்தது. மத ஸ்தாபனங்களும், ஆன்மீக இயக்கங்களும் தங்களுக்குள் கூடிப்பேசின. பத்திரிக்கைகள் எழுதின. தொலைக்காட்சிகள் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை விவாதித்தன. எண்ணிக்கையற்ற கேள்விகள் நகரத்தின் மேல் வட்டமிட்டன.
கடவுள் வரப்போவது உண்மையானால் எந்த கடவுள்? ஆண் தெய்வமா, பெண்தெய்வமா? கோவில் சிற்பங்களிலோ, ஓவியங்களிலோ, நாடகத்திலோ, சினிமாவிலோ பார்த்த மாதிரியா மனிதனின் உருவத்தைத்தான் ஒத்திருப்பாரா? வேறு ஏதாவது ஒரு மிருகத்தைப்போலவோ, பறவைகள் போலவோ இருப்பாரா அல்லது இதுவரை காணா புதுவகை உருவத்துடனா? ஆடை, ஆபரணங்கள் அணிந்திருப்பாரா? எந்த மொழியில் பேசுவார்? சிரிக்கத்தெரியமா அவருக்கு? நாடு சுபீட்சமடையுமா? சமூகத்தை எப்படி மாற்றி அமைக்கப்போகிறார்? காலத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதற்கு தக கட்சி தொடங்கி ஆட்சி அமைப்பாரா?
ஒருவேளை அவர் குடும்பத்துடன் வரக்கூடுமென்றால் அவருக்கு இந்த ஆலயங்கள் வசதிப்படுமா? கடவுளுக்கு உறக்கம் உண்டென்றால் ஆலயத்தில் எங்கே படுத்துறங்குவார்? உணவு உண்பவராக இருப்பாரானால் கழிவறை வேண்டியிருக்குமே அதை எங்கே நிர்மாணிப்பது? அவருக்கு மதுவருந்தும் பழக்கம் இருந்தால் எத்தகைய மதுவை அவருக்கு பறிமாறுவது?
காலம்காலமாக தன் மேய்ப்பனுக்காக காத்திருந்த கிறிஸ்துவர்களோ ஆச்சரியப்படத்தக்க வகையில் வரப்போவது இயேசுவாக இருக்கமுடியாதென்றார்கள். ஒருவன் சொன்னான், ‘வானத்திலிருந்து சங்கிலி வழியே இறங்கி வரும் அவர் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு சாத்தானைக் கட்டிப்போடுவார்’ இப்படி அவர்தான் வரப்போகிறார் என்று நம்பியவர்களுக்கும்கூட சில குழப்பங்கள் இருந்தன. மனிதர்களின் பாவங்களை தொடர்ந்து அவர் மன்னிப்பாரா என்று. இந்த போப் விஷயம் என்ன ஆவது? இயேசு இந்த நகரத்திற்கு வந்தால் போப் இங்கே வந்து இவரை சந்திப்பாரா, இல்லை இயேசுவே போய் அவரைப் பார்க்கவேண்டியிருக்குமா? பாவமன்னிப்பு வழங்கிய பின்பான ஓய்வு நேரங்களை அவர் எப்படி கழிப்பார்? கல்வாரி மலையில் உயரே இருந்து அவர் கவனித்துக்கொண்டிருந்த சூதாட்டம் அவருக்கு கைகொடுக்குமா?
முஸ்லீம்களோ பெரும் மௌனம் காத்தார்கள். அவர்களால் அல்லாவின் வருகையை நிச்சயிக்கமுடியவில்லை. உருவமற்ற அல்லா உருவுடன் வருவதை அவர்களால் எப்படித்தான் நம்ப முடியும்?
பெரியார் சிலை சந்திப்பை ஒட்டி கடைகளின் முன்னால் நடமாடிக்கொண்டிருந்த ஒரு பிச்சைக்காரனும், தேவாலயத்தின் உச்சியில் சிலுவையின் மேல் உட்¢கார்ந்திருந்த கழுகும் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தார்கள். ஆரம்பம் முதல் எல்லாவற்றையும் பிச்சைக்காரன் பார்த்துக்கொண்டிருந்தான். எல்லாம் அவனுக்குக் கனவு போலத்தான் தோன்றியது. அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டது முதல் அவனுடைய கனவு தொடங்குகிறது.
மனிதர்களின் உரையாடல்களை அவன் கேட்கிறான். அவர்கள் அச்சம் கொள்வதையும், கேலி பேசுவதையும் அவன் கவனிக்கிறான். அவனைப் பொருத்தவரை எல்லா நிகழ்வுகளையும் போல இதுவும் ஒன்று. மனிதர்கள் இங்கும் அங்கும் போகிறார்கள், வருகிறார்கள், கூடிப் பேசுகிறார்கள், போண்டா, பஜ்ஜி சாப்பிடுகிறார்கள், டீ அருந்துகிறார்கள் பின்பு கலைந்து செல்கிறார்கள். அங்கே நிற்பவர்களின் முகங்களை சற்று கவனித்தபடி ஏதோ ஒரு விதத்தில் ஆட்களை தேர்ந்தெடுத்து “நமஸ்காரம் சார்¢, ஒரு டீ வாங்கிக் கொடுங்க சார்’’ என்று இரண்டு கைகளையும் குவித்து அவர்களை வணங்குவான்.
என்னவென்று விளங்காமலேயே கடவுளின் வருகையை அவனும் எதிர்பார்த்திருந்தான்.
இந்த குழப்பத்தை முன்னிட்டு முதல்வரின் வருகை ரத்தானதை கேள்வியுற்ற தொண்டர்கள் மனமொடிந்து போனார்கள். இது திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்பதில் எள்ளளவும் அவர்களுக்கு சந்தேகமில்லை. முடியுமென்றால் கடவுளின் வருகையைக்கூட ரத்துசெய்ய முயற்சி மேற்கொண்டிருந்தார்கள். அவருடைய பிரதிநிதிகள் எங்கே இருக்கிறார்கள்? யார் மூலம் அதைசெய்வது? எதுவுமே அவர்களுக்கு விளங்கவில்லை.
இதனால் பெரும் கலவரம் ஏதாவது நிகழக்கூடுமென்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முதல்வருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடவடிக்கைகள் எல்லாம் கடவுளின் வருகைக்கு என்றானது. இந்த சதியில் ஈடுபட்டவர்களை தேடும் பணி துரிதமாக நடந்துகொண்டிருந்தது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை இந்த விவகாரம் வீண் வதந்தியே தவிர வேறில்லை. நிச்சயம் அவர்களை கைது செய்துவிடுவோம் என்றார்கள். பெரியார் சிலை சந்திப்பில் எந்த கூட்டமும், ஆர்ப்பாட்டமும், நடத்தக்கூடாது என்று தடைவிதித்திருந்தது. அந்த ரகசிய போஸ்டர்கள் அகற்றப்பட்டன.
ஆரம்பத்தில் இது ஏதோ ஒரு புரளி போலத் தோன்றினாலும் நம்பாமலும் இருக்கமுடியவில்லை. இவ்வளவு நாள் வெறுமனே நம்பிக்கொண்டிருந்த ஒரு விஷயம் நிஜத்தில் நிகழப்போகிறது. கடவுள் பூமிக்கு வரப்போகிறார். எப்போதோ அல்ல, இன்று இரவு அது சம்பவிக்கப்போகிறது. அதை நினைத்தபோதே பெரும் பீதி ஒன்று அவர்களை கவ்வியது. சகலத்தையும் உருவாக்கியவர், எல்லாவற்றையும் இயக்குபவர், பூமிக்கு வரப்போகிறார்; மனிதர்களின் செயல்பாடுகளை நேரடியாக பார்வையிடப் போகிறார்; இதுதான் அவர்களை அச்சுறுத்தும்படி இருந்தது.
கடவுள் ஏற்கனவே நகரத்திற்கு வந்தவிட்டார் என்பது போன்றுகூட ஊர் முழுவதும் புரளி பரவியது. ஏதோ ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கிகொண்டு தனது ஆட்கள்மூலம் திட்டங்களை செயல்படுத்திகொண்டிருக்கிறாராம்.
கோவில்களையும், மடாலயங்களையும், ஆஸ்ரமங்களையும் சார்ந்து வாழ்ந்தவர்களின் மனங்கள் தீயாய் பற்றி எரியத் தொடங்கின. இதுவரையிலான அவர்களுடைய நம்பிக்கைகளும், சடங்குகளும், ஸ்திரத்தன்மையும் கடவுளின் வருகையால் எங்கே சிதறுண்டு போகுமோவென்று அஞ்சினார்கள். எல்லாம் அம்பலத்திற்கு வரப்போகிறது. புராண இதிகாசப் புத்தகங்களை சுருட்டி அவர் சிகரெட் புகைக்கப் போகிறார்.
அவருடைய வருகையை எப்படி தடுத்து நிறுத்துவது என்பதுதான் ஒருவருக்கும் புரியவில்லை. கடவுள் மிக நல்லவர், ஒருநாளும் அவர் பூமிக்கு வந்து இப்படி மனிதர்களை கலவரத்திற் குள்ளாக்கமாட்டார் என்று நம்பினார்கள் சில பக்தர்கள். சூன்யக்காரர்களோ இது பிசாசுகளின் வேலையாகத்தான் இருக்கும் என்றார்கள்.
சமீபத்தில் பிரபலமாகியிருந்த பீடி புகைக்கும் ஒரு சாமியார் கலக்கத்துடன் காணபட்ட தன் சீடர்களுக்கு சொன்னார்:
“இதற்காக நீங்கள் அஞ்சதேவையில்லை பிரபஞ்சமே கடவுளின் சரீரமா இருக்கும்போது இது எப்படி நிகழ முடியும்? தனது உடலின் ஒரு பகுதிக்கு, முழு உடலும் எப்படி விஜயம் செய்யமுடியும்?’’
ஒரு கவிஞன் எழுதினான்ஙி
‘மொழி வெளியில் இருப்பற்று அலைகிற ஒரு சொல்தான் கடவுள்’ என்று.
“ஏன் இந்த மனிதர்கள் கடவுளோடு இப்படி விளையாடுகிறார்கள்?, எல்லாமே இவர்களுக்கு விளையாட்டு போல அல்லவா ஆகிவிட்டது’’ நம்மையும் மீறிய சக்தி ஒன்று இருக்கிறது என்பதை நம்பும், மிதவாத மனிதர் ஒருவர் ஆதங்கப்பட்டார்,
ஆஸரமத்திற்கு பக்கத்திலிருக்கும் ஒரு உணவகத்தில் கேழ்வரகு ரொட்டியை மென்று கொண்டே ஒரு வெள்ளைக்காரன் சொன்னான்,
“சில்லி கேம்’’
போலீஸ் உத்தரவின் பேரில் மூடிக்கடந்த ஒயின்ஷாப்பை பார்த்துவிட்டு ஒரு குடிகாரன் திட்டினான்,
“லவடிக்கேபால்’’
கடவுள் மறுப்பாளர்களோ, வரப்போகும் கடவுளுக்கு கறுப்பு கொடி காண்பிக்கப்போவதாகச் சொன்னார்கள்.
கோவில்களிலும், வீடுகளிலும் குடிகொண்டிருந்த உருவங்களில் கடவுள் தன்மை வடிந்து வெளியேறிவிட மனிதமனங்களை பீதிகவ்வியது. எல்லா ஆலயங்களும் பூட்டப்பட்டுவிட்டன. அர்ச்சகர்களும், பக்த சிரோன்மணிகளும் தங்களுடைய வீடுகளுக்குள் அடைந்துகிடந்தார்கள். ‘கடவுள் தீயவர்களையும், ஏமாற்றுக்காரர்களையும் தனது பலிபீடத்திற்கு அழைத்துச்செல்வார்; அங்கே வைத்து அவர்களை பலியிடுவார்’ என்று எவனோ ஒருவன் சொன்னதை கேள்வியுற்று பெரியகோபுரத்தின் மேல்மாடத்திற்கு ஏறிச்சென்று ஒருவன் தற்கொலை செய்துகொண்டான். பலருக்கு நோய்கண்டது.
போக்குவரத்து வேறு பாதைக்கு திருப்பி விடப்பட்டிருந்தது. தேவாலயமோ ஒருவரையும் காணாமல் வெறிச்சோடிப்போனது. இரவு பத்து மணி வாக்கில் தேவாலயத்தின் மொத்தக் கதவுகளையும் அதன் காவலாளி மூடித்தாளிட்டான்.
தேவாலயத்தை ஒட்டிய வீடு ஒன்றில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த ஒரு நாய் ஏனோ ஓயாமல் குரைத்துக் கொண்டே இருந்தது.
நகரத்தை பெரும் பீதி சூழ்ந்த அந்த மாய இரவில் மனிதர்கள் தங்களுடைய இருப்பிடங்களில் பயத்துடன் பதுங்கி¢க் கொண்டிருக்க, நகரின் தெருக்களில் கட்சித் தோரணங்கள் மட்டும் வெறுமையாக அசைந்துகொண்டிருந்தன.
கட்டளை பிறப்பிக்கவும், மேற்பார்வை இடுவதற்காகவும் அவ்வப்போது வந்து போன அதிகாரிகளின் வருகை நின்று போயிருந்தது. இதற்குமேல் ஒரு கலவரமும் அங்கே நிகழாது என்பதில் தெளிவடைந்து காணப்பட்ட காவல் துறையினர் அவ்விடத்தைவிட்டு அகன்று போய்விட்டார்கள்.
பிச்சைக்காரனுக்குதான் இது ஆச்சர்யமாக இருந்தது. ‘ஏன் கடவுளை காண ஒருவரும் வரவில்லை?’
எந்த அசம்பாவிதமும் நிகழாமல் அந்த இரவு கடந்து, மறுநாள் நகரமே பெருமூச்சுடன் விழித்தெழுந்தது. வழக்கம்போல காகங்கள் கரைந்தன, பால்காரர்கள் மணியடித்தார்கள், பெரியார் சிலைக்கு அருகிலிருந்த டீக்கடையில், சினிமாப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. மனிதர்கள் நினைத்தது போல கடவுள்பூமியில் பெரும் வெடிப்பு தோன்றி மேலெழுந்தோ, அமைதியாக வானத்திலிருந்து இறங்கியோ, ஒரு தூணை பிளந்துகொண்டோ தேவாலாயத்திலிருக்கும் இயேசுவின் உருவத்திலோ, பெரியாரின் உருவத்திலோ இவர்கள் எதிர்பார்த்தது போல எதுவாகவும் அவர் வரவில்லை.
பேரமைதி கவ்விய அந்த நடுநிசி வேளையில் ஒரு சம்பவம் நடந்தது. மூடப்பட்ட கடைகளின் தடுப்புக்குபின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த பிச்சைக்காரன்தான் அதைப்பார்க்கிறான். தாலுக்கா அலுவலகத்தின் மதில்சுவரை ஒட்டி பராமரிப்பில்லாமல் விடப்பட்டிருந்த பொதுக்கழிவறை பக்கமிருந்து ஒரு மனிதர் வெளிப்பட்டு, சாலையை கடந்து தேவாலயத்தின் சுற்றுச்சுவரை ஒட்டிய சந்தில் நுழைந்து மறைந்தார். அந்த நாயின் குரைப்பு சத்தம் நின்றது. தேவாலயத்தின் சிலுவைமேல் உட்கார்ந்திருந்த கழுகு படபடத்து எழுந்து சென்று பக்கத்திலிருந்த நெட்டிலிங்க மரத்தில் உட்கார்ந்தது. அது ‘அவர்தானோ’ என்ற சந்தேகம் எழுந்தாலும் இதை யாரிடம்போய் அவனால் சொல்லமுடியும்? அப்படிச்சொன்னாலும் யார் நம்பப்போகிறார்கள்? ஒருவேளை அவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்குமானால் ஒரு டீ வாங்கிக்கொடுக்கச் சொல்லி அவரிடம் அவன் கேட்டிருக்கக்கூடும்.
.
9. விசுவாசி
வழக்கத்தைவிட சோர்வுடன் அவன் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். இரண்டு நாட்களாக ஒர்க்ஷாப்பில் அதிகவேலை. எல்லாவற்றையும் அவனே கவனிக்க வேண்டியிருந்தது. ஒன்றும் தெரியாத ஒரு பையனை உதவிக்கு வைத்துக்கொண்டு எத்தனை வேலையைத்தான் அவனால் செய்யமுடியும்? இவ்வளவு நாள் இந்த கஷ்டம் தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்புதான் வழக்கமாக வருபவன் நின்று விட்டான். இவனிடம்தான் அவன் வேலை கற்றுக்கொண்டான். ஒரு குறையும் வைக்கவில்லை. எல்லாம் அவன் போக்குபடிதான் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று அவனுக்கு மூளைதான் பிசகிவிட்டிருக்கவேண்டும்; வேறுஒரு ஒர்க்ஷாப்பில் போய் வேலைக்கு சேர்ந்துவிட்டான். வெட்கமில்லாமல் அவர்களும் அவனை சேர்த்துக்கொண்டு விட்டார்கள். என்ன ஆசை காட்டினார்களோ!
கேட்டைத்திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததும் அவனுடைய கிரி ஓடி வந்தது. வாலை வேகமாக ஆட்டி பரபரப்புடன் அவன் கால்களை நக்கியது.
‘கிரி! போ அப்பாலே’ என்று செல்லமாக விரட்டினான். ஆனால் அது போகவில்லை. ‘உய்ங் உய்ங்’ என்று ஏதோ சப்தம் எழுப்பிக்கொண்டே வாலையும் உடம்பையும் ஆட்டியது.
கதவை தட்டும் உத்தேசமில்லாமல் வாசல் படியிலேயே உட்கார்ந்தான். உள்ளே அவள் தூங்கி விட்டிருப்பாள். கதவை தட்டினால் கடமைக்காக திறந்துவிட்டு திரும்பவும் போய்ப் படுத்துக்கொள்வாள். சாப்பாட்டை தானே எடுத்து வைத்து சாப்பிட்டுவிட்டு திரும்பவும் எடுத்து வைக்கவேண்டும். எந்த காரணத்திற்காகவும் தூக்கத்தை மட்டும் அவளால் விட்டுக் கொடுக்கவே முடியாது. தூங்குவதற்கு முன்னாலேயே போய்விட்டால் தான் மற்ற சமாச்சரங்கள். எழுப்பினால் எரிந்து விழுவாள்.
கிரி அவனுக்கெதிரிலே வந்து நெருங்கி நின்று வாலை ஆட்டியது. இந்த நாய்களுக்குத்தான் தங்கள் எஜமானர்கள் மேல் எவ்வளவு நன்றி விசுவாசம்! மனிதர்களுக்கோ மற்ற எந்த வளர்ப்பு மிருகங்களுக்கோ, விலங்குகளுக்கோ இப்படிப்பட்ட ஒரு அற்புத ஏற்பாடு இல்லை.
நாய் உடலை இசைக்கருவிபோல பாவித்து வாலை அசைக்கிறது. கண்களில் நேசத்தின் பிரகாசம். இரண்டு மூன்று நாய்கள் வரிசையாக நின்று இதுபோல் அசைந்தால் இன்னும் அற்புதமான ஒரு காட்சியாக இருக்கும். ஒரே இசையை நான்கைந்து வயலின்களில் இசைக்கும்போது எழும் நாதம்போல! இந்த வீட்டில் ஒரு நாயைக் காப்பாற்றுவதே பெரும்பாடாக இருக்கும்பட்சத்தில் நான்கைந்து நாய்களை எங்கேவைத்துக்கொள்வது?
அவனுடைய மெக்கானிக்கல் புத்திக்கு ஒரு எண்ணம் உதித்தது; ஒரு நாய்க்கே இரண்டு மூன்று வால்கள் இருந்தால்? ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான அசைவுகளை வெளிப்படுத்தும் மூன்று வால்கள்! அதிகப்படியான விசுவாசம்!
இன்று இது வெறும் கனவல்ல, சாத்தியமாகக்கூடிய ஒன்றுதான். அதற்கான மையங்கள் இந்த நகரத்தில் தொடங்கி நடத்தப்பட்டுவருகின்றன. விலங்குகளை நாம் வேண்டியபடி வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கிக்கொள்ளலாம். இரண்டு சக்கர வாகனங்களுக்கு எக்ஸ்ட்ரா பிட்டிங் செய்து, வடிவங்களை மாற்றியமைத்துக்கொள்வது போல நாய், பூனை, மாடு போன்ற வளர்ப்பு மிருகங்களை நாம் மாற்றிக்கொள்ளலாம். அதற்கான தொழில்நுட்பத்தை வழங்குகிறது இந்த மையங்கள்.
எந்த வேலை எப்படி இருந்தாலும் நாளை இந்த நாயைக்கூட்டிக்கொண்டு போய்விடுவது என்ற தீர்மானத்திற்கு வந்தான். இதைச்சொன்னால் அவன் மனைவி சண்டைக்குத்தான் வருவாள். ஒரு மிருகத்தின் விசுவாசத்தை அதிகப்படுத்துவது எவ்வளவு அற்புதமான காரியம் என்று அவளுக்கு எங்கே தெரியப்போகிறது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஒர்க்ஷாப் விடுமுறைதான். விடுமுறை நாட்களில் அந்த மையங்கள் செயல்படுமா என்று தெரியவில்லை. சிட்டி கைடில் பார்த்தால் தெரிந்துவிடும். எல்லா விபரங்களும் அதில் அடங்கியிருக்கிறது.
நாயை கூட்டிக்கொண்டு ஒரு ஆட்டோவில் ‘ஜீனோம் அனிமல்ஸ் பியூட்டி பார்லர்’ என்ற அந்த மையத்திற்கு சென்றான். ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் மையம் அது ஒன்றுதான். பிரதான வீதி ஒன்றில் பிரமாண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் அது இயங்கிவந்தது. வரவேற்பறை அகலமானதாகவும் பகட்டாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உருமாற்றம் செய்யப்பட்ட விலங்குகளின் துள்ளியமான புகைப்படங்கள் ஆங்காங்கே மாட்டப்பட்டிருந்தன. ‘கடவுளுடன் போட்டி போட்டுக்கொண்டு இத்தனை விதமான சிருஷ்டிகளா!’ என்று வியந்து போனான். நாய்களின் படங்கள்தான் அதிகம் இருந்தன. அடுத்ததாக பூனைகள், பறவை இனங்கள், பன்றிகள், ஆடுகள், கோழிகள்…
அவன் கொண்டுபோயிருந்தது நாட்டு நாய். இதுவே அவனிடம் ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டுபண்ணியது. நாட்டுநாய் என்றாலும் கிரி அவ்வவளவு சாதாரண நாய் என்று சொல்லிவிடமுடியாது. செந்நிறத்தில் வசீகரமாகத்தான் இருந்தது. அது குட்டியாக இருக்கும்போதே அவன் அம்மாதான் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப்போனார்கள்.
இந்த நகரத்தில் அவரவர்களின் அந்தஸ்திற்கு ஏற்ப வகை வகையான நாய்களை வளர்க்கிறார்கள். அவைகளை பராமரிப்பதற்கென்றே நிறைய தொகையை செலவிடுகிறார்கள். சொகுசு கார்களிலும், பகட்டான மாடி வீடுகளின் ஜன்னல்களிலும் மட்டுமே தென்படக்கூடிய நாய்கள் அவை. யூரியா போட்டு வளர்ந்தது போல புசுபுசுவென்று உடம்பெல்லாம் முடியுடன் கூடிய நாய்கள், நன்றாக வளர்ந்த ஒரு கன்றுக்குட்டியளவுக்கு உயரமான நாய்கள், பளபளப்பான தேகத்துடன் கட்டை குட்டையான செந்நிற நாய்கள், புள்ளி போட்டது, கோடு போட்டது… காரில்போகும் சிவந்த தோளுடைய மனிதர்களைப்போல இந்த நாய்களும் பணக்காரத்தன்மையுடனேயே பிறக்கின்றனவோ என்னவோ.
அந்த குளுகுளு வரவேற்பறையில் சிவந்த நிறத்தில் ஒரு ஆண் பகட்டான ஆடையுடன் காணப்பட்டான். அவனுக்கு உதவியாக ஒரு பெண். அவள் பூங்காவில் செடிகளை வெட்டிவிடுவதுபோல கேசத்தை ஏதோ ஒரு விதத்தில் வெட்டிவிட்டுக்கொண்டிருந்தாள். உதட்டுக்கு லிப்ஸ்டிக். அவள் அணிந்திருந்த பனியனுக்கு உள்ளே பெரிய அளவிலானஇரண்டு முலைகள் பதுங்கியிருப்பது நன்கு புலப்பட்டது. ஒருவேளை அது செயற்கையாக பெரிதுபடுத்தப் பட்டதோ என்று நினைத்தான்.
அந்த வாலிபனோ இவன் இருக்கும் இடத்திற்கு வந்து “என்ன செய்யவேண்டும் இதற்கு?’’ என்று விசாரித்தான்.
“இந்த நாயின் விசுவாசத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்’’ என்று பதிலிருத்தான் இவன்.
அவன் சற்று திகைத்தவனாக,
“உருவத்தை வேண்டுமானால் மாற்றித்தரலாமே தவிர குணத்தை எங்களால் மாற்றமுடியாது’’ என்றான்.
“இரண்டே இரண்டு மாற்றங்களை செய்து கொடுத்தால் போதும். வாலுக்குப்பக்கத்தில் அதேபோன்ற இன்னும் இரண்டு வால்களை பொருத்தித்தரவேண்டும்; விசுவாச வெளிப்பாட்டின் போது அதன் வாயிலிருந்து வெளிவரும் சப்தத்தை இனிமைப் படுத்தவேண்டும் அவ்வளவுதான்’’
“இது சற்று வினோதமான மாற்றம்தான். இதுவரை வடிவத்தையோ நிறத்தையோதான் நாங்கள் மாற்றித்தந் திருக்கிறோமே தவிர உறுப்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தித் தந்ததில்லை’’
“அதுபோல் செய்யமுடியாது என்கிறீர்களா?’’ என்று ஏமாற்றத்துடன் இவன் கேட்டான்.
“இது பெரிய விஷயமே இல்லை. இதுபோன்று எத்தனை வால்களை வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளளலாம். ஆனால் நாய்க்கிருக்கும் நல்லதோற்றம் போய்விடுமே என்று பார்க்கிறேன்’’
“தோற்றத்தில் என்ன இருக்கிறது! எனக்குவேண்டியது அதன் விசுவாசம்! அதிகப்படியான விசுவாசம்’’
“வால்களை எப்படி பொருத்தலாம் செங்குத்தான திசையிலா கிடைமட்டத்திலா?’’
சற்று யோசித்துவிட்டு சொன்னான். “கிடைமட்டத்திலேயே பொருத்துங்கள் அப்போதுதான் சற்று மேலிருந்து பார்க்கும்போது மூன்று வால்களும் ஒரமாதிரியான கோணத்தில் நம் கண்ணில் படும்’’
ஒரு விண்ணப்பத்தை எடுத்துவந்து பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக்கொண்டாள் அந்த பெண். இவனுடைய விலாசம், நாயின் பெயர், இனம், வகை, வயது, நிறம், நாய்க்கு என்ன விதமான மாற்றங்கள் செய்யவேண்டும் போன்ற விவரங்களை அதில் பூர்த்தி செய்துதந்தான். ‘சிகிச்சையின்போது ஏற்படும் எதிர்பாராத அசம்பாவிதங்களுக்கு நிறுவனம் பொறுப்பேற்க முடியாது’ என்ற பாரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள்.
கம்பிகள் இடப்பட்ட கூண்டு ஒன்றை தள்ளிக்கொண்டு வந்த இரண்டுபேர் அவனிடமிருந்து நாயை வாங்கிக்கொண்டார்கள். இருவரும் நீல நிற சீருடையும், முரட்டு தனமான கையுறையும் அணிந்திருந்தார்கள். கூண்டுக்குள் போக மறுத்து முரண்டு பண்ணியது நாய். ஒருவன் முன்னாலிருந்து அதன் கழுத்துப்பட்டையைப் பிடித்து இழுக்க, பின்னாலிருந்து ஒருவன் தள்ளினான். கூண்டு அடைக்கப்பட்டது. வந்தவழியே அந்தக்கூண்டை தள்ளிக்கொண்டு போனார்கள்.
இதற்கான தொகைதான் முதலில் அவனை அதிர்ச்சியடைய செய்தது; வேறுவழியில்லை. அவனுக்கு இப்போது பணம் முக்கியமல்ல; விசுவாசம்! அதிகப்படியான விசுவாசம்!
மறுநாள் ஒர்க்ஷாப்பில் அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. மாலை நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். நாயை ஐந்து மணிக்குத்தான் கொடுப்பதாக சொல்லியிருந்தார்கள்.
அரைமணிநேரத்திற்கு முன்பாகவே அங்கே போய்விட்டான். ரசீதை காட்டியபோது அந்த பெண் – அவள் இன்று வேறுவிதமான தலையலங்காரத்துடனும், ஆடைகளுடனும் காணப்பட்டாள் அதே அளவு முலைகள் – கறாராக சொல்லிவிட்டாள், சரியாக ஐந்து மணிக்கு வாருங்களென்று.
மீண்டும் சாலைக்கு வந்து ஒரு சிகரெட்டை எடுத்து புகைத்தான், தொலைவில் சென்று ஒரு கடையில் டீ அருந்திவிட்டு, நடைபாதையின் ஓரத்தில் முன்னும் பின்னும் நடந்தான்.
‘இன்றுமுதல் கிரிக்கு மூன்று வால்கள்! இதை விட விசுவாசம் கொண்ட நாயை யாரும் வேறுஎங்கும் பார்க்கப்போவதில்லை’
அவனுடைய மனைவியோ இதுவென்ன பைத்தியக் காரத்தனம் என்று எதிர்ப்பு தெரிவித்தாள். ஒரு அதிசய நாய்க்கு தான் ஒரு எஜமானியாக இருக்கபோகிறோம் என்ற விஷயம் அவளுக்கு இன்னும் விளங்கவேயில்லை.
சரியாக ஐந்து மணிக்கு வரவேற்பறைக்குள் நுழைந்தான். சீட்டை நீட்டினான். உட்காருங்கள் என்றாள் அவள். இன்டர்காமில் ஏதோ பேசினாள். சிறிது நேரத்தில் கூண்டைத் தள்ளிக்கொண்டு, அதே நீல நிறசீருடையும், முரட்டுத் தனமான கையுறைகளையும் கொண்ட இரண்டுபேர் வந்தனர். நேற்று பார்த்தவர்களில் ஒருவன் இல்லை, அதற்கு பதில் இன்னொருவன் இருந்தான்.
உள்ளே கிரி நின்றிருந்தது. கம்பிகள் மறைத்தாலும் அதன் இடுப்பு பாகத்தை பார்க்கமுடிந்தது. அந்த பகுதி முழுவதும் பேண்டேஜ் சுற்றியிருந்தார்கள். வால் எதுவும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கவில்லை.
இவனைக் கண்டதும் நாய் பரபரப்புற்றது. அவர்கள் கூண்டைத் திறந்து வெளியே விட்டதும் அருகே வந்து, உற்சாகத்தையெல்லாம் வலி அழுத்திக்கொண்டிருக்க அது மெல்ல முனகியது.
இந்த நிலையில்கூட அது எவ்வளவு விசுவாசமாக இருக்கிறது! அதனுடைய குரல்தான் முன்புபோல இல்லாமல் கரகரப்புடன் வெளி வந்தது. தொண்டையில் ஏதோ சிகிச்சை செய்திருக்கிறார்களாம். காயம் ஆறியவுடன் சரியாகிவிடும்; முன்பை விட குரல் இனிமையாகிவிடும் என்றார்கள்.
மூன்று நாட்களுக்குப் பிறகுதான் இடுப்புப்பகுதியில் போடப்பட்டிருந்த பேண்டேஜை அவிழ்க்கவேண்டும் என்பது உத்தரவு. இது பெரிய ஏமாற்றமாக இருந்தது அவனுக்கு. நாய்க்கு தரவேண்டிய உணவு வகைகளையும், மருந்து கொடுக்கவேண்டிய முறைகளையும் விளக்கிச் சொன்னாள் அந்தப் பேரழகி.
மூன்று நாட்கள்! இப்படி காத்திருப்பது பெரும் நரகம். மனமும் உடலும் தவித்து நோய்கண்டுவிட்டது. இரண்டு மூன்று முறை கட்டை அவிழ்க்கும் வேலையில் இறங்கிவிட்டான் அவனுடைய பையன். அவனுடைய மனைவியோ பிள்ளையைத் திட்டும் சாக்கில் கணவனையும் சேர்த்துக்கொண்டாள், ‘உருப்படாத ஜென்மங்கள்!’
மூன்றாம் நாள் காலை தூங்கி விழித்ததும் முதல்வேலையாக கத்தரியை கொண்டு பேண்டேஜ்களை அவிழ்த்தான். மூன்று வால்களும் வெளிப்பட்டன. மேலே பசை பூசப்பட்டிருந்ததால் புண் பிடித்ததுபோல கோரத்துடன் காணப்பட்டன. அதை சுத்தம் செய்வதற்கான ஏதோ ஒரு திரவத்தையும் அவர்கள் கொடுத்தனுப்பியிருந்தார்கள். அதைக்கொண்டு காய்ந்துபோயிருந்த பசையை அகற்றினான். ஈரம் வற்றியவுடன் சிறிது நேரத்தில் வால்கள் இயல்பான வடிவத்திற்கு வந்தன. மூன்று வால்கள்! இயற்கையாகவே பிறந்து வளர்ந்ததுபோலவே அவ்வளவு இயல்பாக!
இந்த மூன்று நாட்களில் நாயின் குரல்கூட ரொம்பவும் இனிமையாகிவிட்டது. அது தனது விசுவாசத்தை வெளிப்படுத்தும் போது அற்புதமான ஒரு சத்தம் அதன் வாயிலிருந்து வெளி வருகிறது.
வால்களை தடவிக்கொடுத்தான். மெல்ல இழுத்துப் பார்த்தான். நேர்த்தியாகத்தான் செய்திருக்கிறார்கள். உள்ளேபோய் அதற்கு பிரத்தியேகமாக வாங்கி வைத்திருந்த பிஸ்கட்டை கொண்டு வந்து அதன் எதிரில் காண்பித்தான். நாய்க்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. உடலை அசைத்து இனிமையாக கத்தியது. ஆனால் வாலில்தான் ஏதோ குறைபோல தெரிந்தது. நன்றாக கவனித்தான். நடுவிலிருந்த ஒரிஜினல் வால் மட்டும் திணறிக்கொண்டு மெல்ல அசைய, மற்ற இரண்டும் வெறுமனே தொங்கிக்கொண்டிருந்தன.
.
10. குளோப்
என்னுடைய பெயர் ஆறுமுகம். வெறும் ஆறுமுகம் என்றோ, மிஸ்டர் ஆறுமுகம் என்றோ, திருவாளர் ஆறுமுகம் என்றோ எப்படிவேண்டுமானாலும் அழைக்கலாம். இது ஒன்றும் அவ்வளவு முக்கியமான விஷயமில்லை. மனிதர்களாகிய உங்களுக்கோ நிறைய வேலைகள். விசேஷமாக கிடைத்த அறிவைப் பயன்படுத்தி நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. வெற்றிகளைக் குவிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு மத்தியில் என் பேச்சை வேறு கவனிக்கிறீர்களே இதுவே என் பாக்கியம்.
இந்தக் கதை சமீபத்தில் இறந்து போன நாராயணன் சார் பற்றியும், ஸ்டீபன் என்கிற மோசக்காரப் பூனையையும் பற்றியது. ஸ்டீபனை இவ்வளவு கடுமையான வார்த்தைகளால் சாடியதால் அதை என்னுடைய எதிரியோ என்றுகூட நீங்கள் நினைக்கலாம். ஒரு பூனை எனக்கு எப்படி எதிரியாக இருக்க முடியும்? எதிரி என்றால் சமபலம் வேண்டும். ஒரு எலியால் என்றைக்கும் ஒரு பூனையை வேட்டையாடி விழுங்க முடியாது இல்லையா? அதன் குணசேஷ்டையை வைத்துத்தான் அப்படிச் சொன்னேன். பக்கத்து வீட்டில் வசிக்கும் கிறிஸ்துவர்கள்தான் அதற்கு இந்தப் பெயரைச் சூட்டியிருந்தார்கள். அது அவர்களுடைய செல்லப்பிராணி. பூனைகளுக்கு உணவிடுவதுபோல எலிகளுக்கும் நீங்கள் ஏன் உணவு வழங்கக்கூடாது? இந்தச் சங்கிலியில்தான் ஏதோ சிக்கல் விழுந்து விட்டது; அதர்மம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு கணமும் எத்தனையோ உயிர்கள் ஜெனிப்பதும், மரணமடைவதும் நிகழ்ந்துகொண்டே இருந்தாலும் மனிதர்களைப் பொறுத்துதான் இது பிரச்சனைக்குரியதாக மாறிவிடுகிறது. நாராயணன் சாரின் மரணம் குறித்துக்கூட பலவித அபிப்பிராயங்கள் சொல்லப்படுகிறது. தற்செயலாக நடந்த விபத்து என்றும், தற்கொலைதான் என்பது போலவும். பைத்தியம் முற்றி தற்கொலை செய்துகொண்டாராம்! அவரை அருகிலிருந்து கவனித்து வந்த எனக்கும் கூட இது பிடிபடவில்லை. சில பொழுது அது ஒரு கொலையோ என்றும் ஐயம் எழுகிறது.
நாராயணன் சார் ஒரு கவிஞர். ஓவியங்களிலும் அவருக்கு ஈடுபாடுண்டு. இயற்கையின் ஆன்மாவுக்கு மிக நெருக்கத் திலிருக்கும் வண்ணங்களையும், இசையையும் விட்டுவிட்டு இப்படி மனிதர்களை சுமந்துத்திரியும் வார்த்தைகளைக் கட்டிக்கொண்டு மாராடிக்க வேண்டியிருக்கிறதே என்று வருத்தப்படுவார். அலுவலகம் போய் வந்த பின்பு ஓய்வு நேரங்களில் அவர் நிறைய புத்தகங்கள் வாசிப்பார். நண்பர்களுடன் இலக்கியம் குறித்து பேசிக்கொண்டிருப்பார். சில பொழுது விஸ்கி துணையிருக்கும். தூரமாக இருந்து கவனித்துக்கொண்டிருப்பேனே ஒழிய இவர்கள் பேசுவது என்னவென்றே எனக்குப் புரிவதில்லை. ஸ்டீபனோ இதிலெல்லாம் பட்டுக்கொள்ளாமல் இதைவிட வேறு ஏதோ பெரிய காரியம் இருப்பது போல போய்விடும்.
நாராயணன் சாருடையது பழைய வீடு. அவருடைய அப்பா ஓய்வு பெற்ற வரலாற்றாசிரியர் என்பதற்கும் இந்த பழமைக்கும் யாதொரு சம்மந்தமுமில்லை. மாடியிலிருந்த இரண்டு அறைகளில் ஒன்றை சார் படிப்பறையாக பயன்படுத்தி வந்தார். அவருடைய பள்ளியறையும் அதுதான். முதன் முதலாக நாராயணன் சாரை இந்த அறையில் பார்த்தபோது பேராபத்து ஒன்றில் சிக்கிக் கொண்டிருந்தேன். ஸ்டீபன் என்னைத் துரத்திக்கொண்டுவர அவருடைய அறைக்குள் ஓடி புத்தகங்களுக்குப்பின்னால் ஒளிந்துகொண்டேன். அப்போது அறைக்குள் நாராயணன் சார் நாற்காலியில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தார். என்னை துரத்திக்கொண்டுவந்த ஸ்டீபனோ அவரைப் பொருட்படுத்தாமல் அலமாரியின்மேல் ஏறி என்னைத் தேடியதில் புத்தகங்கள் சரிந்து விழுந்தன. திடுக்கிட்டு திரும்பியவர் அங்கே ஸ்டீபனைக் கண்டார். புத்தகம் விழுந்த சப்தத்தில் அதுவும் மிரண்டுதான் போயிருந்தது.
அவர் கேட்டார், “ஏன் புத்தகங்களை தள்ளுகிறாய், என்ன வேண்டும்?’’, அலமாரியிலிருந்து ஸ்டீபன் கீழே குதித்து, சற்று தயங்கியபடி மேஜைக்கு அருகில் போய் நின்று அவரைப் பார்த்தது. திரும்பவும் அவர் கேட்டார், “உனக்கு என்ன வேண்டும்?’’, “ரொம்ப பசிக்கிறது, ஒரு எலி வேண்டும்’’ என்றது. “இங்கே இருக்கிறதா?’’, “ஆமாம் இந்த புத்தகங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறது’’, “அதை விட்டுவிடு உனக்கு வேறு உணவு தருகிறேன்’’ என்ற நாராயணன் சார் மேஜைமேல் அவருக்காக கொண்டுவந்து வைத்திருந்த ஆர்லிக்ஸ் கலந்த பாலை எடுத்து கீழே ஊற்றினார். ஸ்டீபன் அதை நக்கிக் குடித்துக்கொண்டிருந்தது.
நான் அச்சம் தெளிந்தவனாக கீழே இறங்கி வந்து, மேஜையின் மேல் ஏறி நின்று சாரைப் பார்த்தேன். முன் கால்கள் இரண்டையும் தூக்கி “நன்றி’’ என்றேன். பாலைக் குடித்து முடித்த ஸ்டீபன் மேஜைக்கு ஏறிவந்து ‘என்ன தைரியம்!’ என்பதுபோல் என்னை முறைத்துப் பார்த்தது. பயந்துபோன நான் நடுங்கியபடி அவருடைய கைக்கருகில் போய் ஒடுங்கிக் கொண்டேன். “நீ பயப்படாதே, அது உன்னை ஒன்றும் செய்யாது’’ என்றார். “எப்போதுமா?’’, “ஆமாம் இனி எப்போதுமே உன்னைத் தொந்தரவு செய்யாது, நாம் மூவரும் நண்பர்களாகிவிட்டோமில்லையா?’’
ஸ்டீபனுக்கோ ஏமாற்றம். “அது எப்படி முடியும்?’’ என்றது வருத்தம் தொணிக்க.
“ஏன்?’’ என்றார் அவர்.
“உணவுக்கு நான் எங்கே போவேன்? எலிகளை வேட்டையாடுவதை விட்டால் வேறு என்ன தொழில் தெரியும் எனக்கு?’’
“இந்த எலியை மட்டும் விட்டுவிட்டு, வேறு எலிகளை வேட்டையாடிக்கொள். உன் பெயரென்ன?’’ என்று கேட்டார் அதனிடம்.
“ஸ்டீபன்’’ என்றது.
“நல்லது’’ என்னைப் பார்த்து, “உன்னுடைய பெயர்?’’ என்றார்.
“எங்களுக்குத்தான் யாருமே பெயர் வைப்பதில்லையே?’’ என்றேன் வருத்தத்துடன்.
“சரி உனக்கு நான் பெயர் வைக்கிறேன்’’ என்று யோசித்தவர், “ஆறுமுகம்’’ என்றார்.
“எளிமையாக இருக்கிறது, இது போதும் எனக்கு’’ என்றேன் நான்.
“நீ ஏன் இன்னும் வருத்தத்துடன் இருக்கிறாய்’’ என்று கேட்டார் ஸ்டீபனைப்பார்த்து.
“நீங்கள் கேட்டுக்கொண்டதுபோல நான் இந்த எலியை சாப்பிடப் போவதில்லை; ஆனால் துரத்தவேண்டும்; அது அகப்படும் கணம்வரை விரட்டவேண்டும்’’
“சரி, உன் இஷ்டம். ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் அதன் மரணத்திற்கு நீ காரணமாகக்கூடாது சரியா?’’
“சம்மதிக்கிறேன்’’ என்றது ஸ்டீபன்.
இப்படியாக நாங்கள் நண்பர்களானோம்.
நாராயணன் சார் ஒருநாள் பூனையைப் பற்றி முன்பு அவர் எழுதியிருந்த கவிதை ஒன்றை எங்களுக்கு வாசித்துக் காண்பித்தார்.
‘ஒரு பறவையைப்போல
லேசாக இருக்கிறது பூனை
பந்து தக்கையாகவும்
காற்றைபோல நழுவிச்செல்லுவதாகவும்
இருக்குமெனில்
லாவகமாக உருட்டி விளையாடுகிறது
கைகளில் வைத்து சுழற்றுகிறது
சுவர்மேல்
வேகமாக நடந்துவந்து
தாவி குதித்து
எளிதாக கலந்து விடுகிறது
என் சுவாசத்தில்
அனாதரவாக விடப்பட்ட
பந்தைநோக்கி
மீண்டும் நழுவிச்செல்கிறது’
ஸ்டீபன் உற்சாகமாகி “அற்புதம்’’ என்றது.
நான் சாரிடம் கேட்டேன்.
“பூனைகள் எந்த கடவுளுக்காவது வாகனமாக இருந்திருக்கிறதா? புராண இதிகாசங்களில் இடம் பெற்றிருக்கிறதா?’’
சற்று யோசித்துவிட்டு,
“எனக்குத் தெரிந்தவரை இல்லை’’ என்றார்.
ஸ்டீபனின் முகத்தில் சோகரேகை தோன்றியது.
“உங்களுக்கு கடவுளோடு சம்மந்தமில்லை பிசாசுகளோடுதான்’’ என்றேன் நான்.
ஒரு எலி கிண்டல் செய்யும் அளவுக்கு நாம் ஏன் தாழ்ந்து போனோம் என்று நினைத்ததோ என்னவோ, ஸ்டீபன் வருத்தத்துடன் படுத்துக்கொண்டது.
அதை குஷிபடுத்தும் நோக்கில் நாராயணன் சார் சொன்னார்,
“உனக்கு பந்து ஒன்று வாங்கித் தருகிறேன். கவிதையில் உள்ளது போல நீ விளையாடலாம், காற்றாகி விடலாம்’’
ஸ்டீபன் தெம்புடன் எழுந்து கொண்டது. அதன் கண்களில் பிரகாசம்.
இப்படித்தான் அந்த விபரீதம் தொடங்கியது. அவர் பந்து வாங்கித் தருவதாக சொன்னார் என்பது நிஜம் என்றாலும் அலுவலகத்திலிருந்து திரும்பி வரும்போதெல்லாம் வெறுங்கை யோடுதான் திரும்பி வந்தார். ஸ்டீபன் ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்த அவர் மறந்தபடியே இருந்தார். அவருடைய யோசனைகளெல்லாம் வேறொன்றில் குவிந்திருந்தது. தன்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணின்மேல் அவர் காதல் வயப்பட்டிருந்தார். பிறகென்ன பக்கம் பக்கமாக காதல் கவிதைகள் குவிந்தன. இந்த இரண்டு தனித்தனி அற்புதங்களும் ஒரே நேரத்தில் அவர் பிரக்ஞையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கையில் பந்து பற்றி அவருக்கு எங்கே நினைவிருக்கப்போகிறது.
ஏமாற்றத்துடன் வலம் வந்த ஸ்டீபனோ இதை ஈடு செய்ய வேறொரு மார்க்கத்தை கண்டுபிடித்தது. நாராயணன் சார் அலுவலகம் போன பின்பு அவருடைய அறைக்குச் சென்று மேஜையின்மேல் வைக்கப்பட்டிருந்த உலக உருண்டையை உருட்டிப்பார்த்தது. இரண்டு பக்கமும் மாறிமாறி சுழற்றி மகிழ்ந்தது. இந்த விளையாட்டு தினமும் நடந்திருக்கவேண்டும். ஒரு நாள் எதேச்சையாக இதை நான் பார்க்க நேர்ந்தபோது அதனிடம் எச்சரித்தேன். நாராயணன் சாரின் அனுமதியில்லாமல் இதை நீ தொடக்கூடாது என்று. அதற்கு கோபம் வந்துவிட்டது.
“பந்து வாங்கித்தருவதாகச் சொல்லிவிட்டு எத்தனை நாட்களாக என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்’’
“அவருக்கு மறந்து விடுகிறது’’
“மறக்கவில்லை, இவர்கள் பேசும் இலக்கியம் போல வெத்து வேட்டு…’’
“நான் அதிர்ந்து போனேன். “ஸ்டீபன் நீ எல்லை மீறிப் பேசுகிறாய். இன்றைக்கு சார் வரட்டும் சொல்கிறேன்…’’
ஸ்டீபன் என்னைப் முறைத்துப் பார்த்து.
“சொல்லிவிடுவாயா?’’ என்றது.
“சொல்வேன் எனக்கென்ன பயம்?’’
“அந்த ஒப்பந்தத்தால் குளிர்விட்டுப் போய்விட்டது உனக்கு. நீ இருக்கும் வரைதானே இந்த ஒப்பந்தமெல்லாம்’’ என்று சொல்லி முடிக்கும் முன்பே அதன் நோக்கம் என்னவென்று புரிந்ததால் அவ்விடத்தைவிட்டு அகன்று வெளியே ஓடினேன். ஸ்டீபன் எனக்குப் பின்னாலேயே துரத்திக்கொண்டு வந்தது. மாடியிலிருந்து படிவழியாக கீழே இறங்கி, வரவேற்பறையின் ஓரத்தில் சுவரை ஒட்டி ஓடி, பின்பக்கமிருந்த குளியலறைக்குள் புகுந்தேன். அதுவும் பின்னாலேயே வந்துவிட்டதால் தண்ணீர் வெளியேறும் துளை வழியாக தப்பிவிட நினைத்து உள்ளே புகுந்தேன். துரிதமாக ஓடிவந்த ஸ்டீபன் தன் கால்களால் வாலை மிதித்துக்கொண்டது. வாலின் பாதிக்கு மேல் அதன் காலடியில். சிரமத்துடன் இழுத்துப்பார்த்தும் ஒன்றும் பலிக்கவில்லை. ஸ்டீபனின் கால் நகம் ஒன்று வாலின் மேல் அழுத்திக்கொண்டிருந்தது.
தப்பிக்கவும் முடியாமல் அகப்படவும் முடியாமல் என்ன நிலைமை இது? எதுவும் சொல்லாமல் சிறிது நேரம் அப்படியே வலைக்குள்ளேயே படுத்துக் கிடந்தேன். ஸ்டீபனும் அசைந்தபாடில்லை. அசமந்தமான வேளையில் சட்டென்று உருவிக்கொண்டு ஓடிவிடலாமென்று முயன்ற கணத்தில்தான் இன்னும் அது அழுத்தமாக நின்றது. நகம் பட்டதில் வலிவேறு.
“ஸ்டீபன் என்னை விட்டுவிடு’’ என்றேன் அதனிடம்.
“உன்னை விடப்போவதில்லை’’ என்றது ஆத்திரத்துடன்.
“என் வால் மட்டும்தானே உன்னிடம் இருக்கிறது, அதை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறாய்?’’
“இப்போது கடித்துத் துப்பப்போகிறேன்’’ என்றது இரக்கமற்று.
கிலிபிடித்துக் கொண்டது எனக்கு. இதை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதைத்தவிர வேறு வழியில்லை.
“சரி நான் இப்போது என்ன செய்யவேண்டுமென்கிறாய்?’’
“அந்த உருண்டை விஷயத்தையோ, வெத்துவேட்டு என்று சொன்னதையோ நீ நாராயணன் சாரிடம் சொல்லக்கூடாது’’
“சரி நான் சொல்லவில்லை’’
“அப்படி சொன்னாயானால் அடுத்த நிமிஷமே எனக்கு இரையாகிவிடுவாய், சம்மதம்தானே’’
“சம்மதம்தான்’’
இப்படித்தான் அன்று நான் அந்த பேராபத்திலிருந்து தப்பித்தது. இல்லையென்றால் இப்போது வாலில்லாமல் திரிந்திருப்பேன்.
ஸ்டீபன் அத்துடன் நின்று விடவில்லை. உருண்டையை வெறுமனே சுழற்றிவிடும் விளையாட்டு சலித்துப் போனதால் அதை சுவாரஸ்யப்படுத்த வேறு ஒரு உத்தியைக் கையாண்டது. உலக உருண்டையில் ஒரு இடத்தைக் குறிவைத்துக் கொண்டு சுழற்றிவிடும். சுற்றும் போதே கூர்ந்து கவனித்து கையால் தடுத்து நிறுத்த, அது குறிவைத்த இடம் வந்திருந்தால் வெற்றி பெருமிதத்தில் நகத்தால் அந்த இடத்தில் ஒரு அடையாளமிடும்.
அறைக்குள் எங்கேயாவது ஒளிந்திருந்து இந்த விபரீத விளையாட்டை நான் கவனித்துக் கொண்டிருப்பேன்.
இந்த சமயத்தில்தான் அவருடைய காதல் விவகாரம் மோசமான ஒரு நிலைமைக்கு வந்திருந்தது. ஒவ்வொரு நாளும் எங்கேயாவது அழைத்துப் போகச் சொல்லி நச்சரிக்கிறாளாம். பெரிய ஓட்டல்களுக்கோ, சினிமாக்களுக்கோ தன்னுடன் வரவேண்டு மென்கிறாளாம். தாடியை எடுத்துவிட்டு தினமும் முகச் சவரம் செய்துகொள்ள வேண்டுமாம். நன்றாக ஆடை உடுத்திக்கொள்ளவேண்டுமாம். இதெல்லாம் அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியதே தவிர சந்தோஷமான விஷயங்களாக இல்லை. இருந்தும் சொன்னார், “இதெல்லாம் சரியில்லைதான். ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு அவளிடம் இருக்கிறது’’ என்று.
“அவள் ஒரு பெண் அதுதான்’’ என்றான் அருடைய நண்பன் ஒருநாள்.
தவிர்க்கவே முடியாத ஒரு சம்பவம் போல அதுவும் நிகழ்ந்தேவிட்டது. நாராயணன் சார் ஒரு நாள் அந்த குளோப்பை கவனித்துவிட்டார். பெரும் அதிர்ச்சி அவருக்கு.
“இவ்வளவு கீறல்கள் எப்படி வந்தது இதில்?’’ என்றார்.
“எனக்குத் தெரியவில்லை’’ என்றேன்.
“ஸ்டீபனைக் கேட்டால் தெரியுமா?’’
“கேட்டுப்பாருங்கள்’’ என்று சொல்லி நழுவிவிட்டேன்.
அடுத்த நாள் ஸ்டீபனிடம் அவர் விசாரித்தார். அதுவும் தனக்குத் தெரியாது என்று சொல்லிவிட மேலும் அவர் குழப்பத்தில் ஆழ்ந்து போனார். ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் கீறல்களினால் அவர் கலவரமடைந்தார் என்பதை கவனித்தேன்.
ஒரு நாள் மிகவும் சோர்ந்து போய் வீடு திரும்பினார். அவரை கழட்டிவிட்டுவிட்டு சோக்கு காண்பிக்கும் ஒரு தடியனுடன் அவள் ஒட்டிக்கொண்டுவிட்டாளாம். முன்பே அவர் எதிர்பார்த்ததுதான் என்றாலும் மனம் உடைந்து காணப்பட்டார். நாடக பாணியில் சொல்வதென்றால் அவருடைய மனம் மட்டுமல்ல மேஜைமேலிருந்த குளோபும் கீழே விழுந்து உடைந்து போயிருந்தது.
‘ஸ்டீபனே! ஏ நம்பிக்கை துரோகியே! அந்த குளோபை உடைத்தே போட்டுவிட்டாயா’ என்று மனதிற்குள் திட்டினேன்.
நாராயணன் சாருக்கு கடுமையான ஜுரம் கண்டது. வீட்டிலேயே படுத்துக்கிடந்தார். தூங்கினால் மோசமான கனவுகள் வந்து தொந்தரவு செய்கின்றன என்றார் நண்பர்களிடம்.
“உடல் மட்டுமல்ல கனவு கூட தகிக்கிறது… எல்லாமே உருகுவது மாதிரி இருக்கிறது…. புத்தகங்கள், அலமாரி, மேஜை, உடைந்து போன குளோப்… இதில் அவளுடைய தொந்தரவு வேறு… என் படுக்கை அருகில் வந்து கைகளை பற்றிக்கொண்டு என் வயிற்றில் முத்தமிடுகிறாள்… அவளுடைய பெருத்த முலைகளை என் மார்பில் படரவிட்டு அழுத்தி அணைக்கிறாள். மூச்சு முட்டுகிறது… காதில் கிசுகிசுக்கிறாள் ‘சாகமாட்டாய்’ என்று…’’
“தூங்கவே அச்சமாக இருக்கிறது’’ என்றார். மருத்துவமனைக்கு சென்று வந்ததில் ஜுரம் நின்றுவிட்டது. ஆனால் அவருடைய மனம்தான் பிதற்றிக்கொண்டிருந்தது.
அவர் கேட்டார்.
“சிறு நீர்த்துளி இருக்கிறதே அது ஏன் உருண்டு நிற்கிறது? பரப்பு இழுவிசை… நம் கண்கள்? நிலா? சூரியன்? பூமி?… பூமி ஏன் உருண்டையாக இருக்கவேண்டும்? பந்தைப் போல தரையிலா அது உருண்டு செல்லப்போகிறது?’’
கண்கள் மூடி ஜுரத்தில் பிதற்றுவது போல சொன்னார்,
“நான் நினைக்கிறேன் பிரபஞ்சமே முழுமையற்ற ஒரு உருண்டை… இயற்கையிலுள்ள மற்ற எல்லாமே அதன் சாயலில்… இல்லை… ஒன்றைத் தவிர அது ஒன்றுதான் வேறு விதமாக இருக்கிறது… மனிதனின் அறிவு… அவனுடைய விஞ்ஞானம்… கணிதம்… ‘’
அவருடைய முகம் கடுமையாகிவிட்டது.
“முக்கோணங்கள், சதுரங்கள், உருளைகள் இயற்கையிலுள்ள பொருட்களின் சாரமாக இருக்கிறதென்கிறான் செசான்… முட்டாள்… கேண்டன்ஸ்கியின் சில ஓவியங்களைகூட கொளுத்தி விடலாம்… எப்படியோ பாஸ்க்கல் தப்பிவட்டான்… ஜோசியர்களோ ஸ்ரீ சக்கரங்களை வரைகிறார்கள்… பூமியின் தேகமெங்கும் சூன்யக்காரர்களின் நகக்கீறல்கள்… ‘’
ஆவேசத்துடன் எழுந்து உட்கார்ந்து கொண்டார்.
அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. நான் பயத்துடன் விலகிப் போய் நின்று அவரைப் பார்த்தேன். இதற்குள் அவருடைய அம்மா வந்து அவரை திரும்பவும் படுக்கையில் கிடத்தி ஆறுதல் படுத்தினாள்.
அவருடைய உடல் தேறி வந்தது. வழக்கம்போல அலுவலகம் சென்று வந்தார்; புத்தகங்கள் வாசித்தார்; மொட்டை மாடியில் வானத்தைப் பார்த்தபடி மல்லாந்தவாக்கில் படுத்திருப்பார். மற்றவர்களுடன் குறைவாகவே பேசினார் என்றாலும் அவருடைய எண்ணங்கள் முழுவதும் வேறு எங்கோ நிலை பெயர்ந்திருந்ததை புரிந்து கொள்ளமுடிந்தது.
வழக்கம்போல நண்பர்கள் வந்தார்கள். மதுக்குப்பிகளுடன் உரையாடல் தொடங்கியது. அவருடைய பேச்சில் பிரபஞ்ச இசை, பேரன்பு, பேரறிவு என்றெல்லாம் புதியவார்த்தைகள் வந்து விழுந்ததில் அவருடைய நண்பர்களோ வியப்புடன் பார்த்தார்கள். விஞ்ஞான மனோபாவத்திற்கெதிரான அவருடைய பேச்சு அவர்களை நிலைகுலையச் செய்தது என்றே சொல்லவேண்டும்.
“மனிதனுக்குள்ள அறிவையும், விஞ்ஞானத்தையும் எடுத்துவிட்டு அந்த இடத்தில் கடவுளைத் தவிர வேறு எதை நீ முன் வைக்கமுடியும்?’’ என்று அவர்கள் சினந்தார்கள்.
இந்த பகை பல நாட்கள் அவர்களுடைய உரையாடலில் தொடர்ந்து வந்தது.
ஒரு நாள் அவர்களுடைய போதை அதிகமாகி அந்த பகையும் விஸ்வரூபமெடுத்து நின்றது.
“ஆமாம்’’ என்று அவர் கத்தினார். “இந்த நாகரீக சீமான்களும், சீமாட்டிகளும், இந்தக் கடவுள்களும் இல்லாத ஒரு உலகத்தில் வாழ ஆசைப்படுகிறேன் அதுதான் என் கனவு, கவிதை எல்லாம்’’
ஒருவன் சிரித்தான். சிகரெட் புகையை ஊதியபடியே அவன் சொன்னான், “அப்படியானால் இந்த உலகத்தை காலி செய்துவிட்டு இன்றே வெளியேறிவிடு… உன்னுடன் உன் கட்சிக்காரர்கள் யாராவது இருந்தால் அவர்களையும் கூட்டிச் சென்றுவிடு, ஜனநெரிசல் வேறு அதிகமாகிவிட்டது…’’
இந்த காரமான உரையாடல் கண்டு இன்னொருவன் சங்கடத்தில் சிரித்தான்.
நாராயணன் சாரும் இதை ஆமோதிப்பதுபோல,
‘ஆமாம், வெளியேறிவிடவேண்டும்’ என்று முணு முணுத்தார்.
எல்லாமே நிஜத்தில் நடந்துகொண்டிருக்க நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் நம்பினேன், இதெல்லாம் வெறும் பேச்சுதான், போதை அதிகமாகிவிட்டால் வீராப்பும் கூடித்தெரிகிறதென்று.
அவர்கள் சென்ற பிறகு நானும் விடைபெற்றுக்கொண்டேன்.
மறுநாள் பொழுது புலர்வதற்கு முன்பே ஏதோ ஒரு உணர்வால் உந்தப்பட்டு வேகமாக அவருடைய அறைக்கு சென்ற நான், அந்த விபரீதத்தைக் கண்டேன். மின் விசிறியில் தலை சிதறடிக்கப்பட்டு அவர் இறந்து கிடந்தார். அவருக்குப் பக்கத்தில் விழுந்திருந்த ஸ்டூலின் மேலும், சுவர்களிலும், தரையிலும், புத்தகங்கள் மேலும் ரத்தம் தெறித்து உறைந்திருந்தது.
.
11. ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
சற்றுத் தொலைவில் போய்க்கொண்டிருந்த அவரைக் காட்டி உங்கள் அம்மா சொல்கிறாள், “உன்னை அவருக்குத் தெரியும், உன்னை மட்டுமல்ல எல்லோரையுமே அவருக்கு நன்றாகத் தெரியும்’’. உங்களுக்கு வியப்பாகத்தான் இருக்கிறது, ஏனென்றால் அவள் மிகைப்படுத்திப் பேசக்கூடியவள் அல்ல. மேலும் அவள் சொல்கிறாள், “அவருடைய ஆசீர்வாதம் இருந்தால் நிச்சயம் உனக்கொரு நல்ல எதிர் காலம் வாய்க்கும்’’. முன்பேகூட அனேகமானபேர் சொல்லியிருக்கிறார்கள் என்றாலும் அவரைப் பற்றியோ, அவரை சென்றடைவது பற்றியோ விருப்பம் எதையும் நீங்கள் கொண்டிருந்ததில்லை. உங்கள் தாயின் ஏதோ ரகசியத்தோடு பிணைக்கப்பட்டவராக நீங்கள் அவரைப் பார்த்து வந்ததுகூட காரணமாக இருக்கலாம். இணக்கமற்ற இடைவெளி ஒன்று நடுவில் விழுந்துவிட்டிருந்தது. ஆனால் இப்போது நிர்பந்தம் காரணமாக, ஒரு நம்பிக்கையால் உந்தப்பட்டவராக அவரைப்பின்தொடர்வது என்ற முடிவுக்கு வருகிறீர்கள். ஒரு கடைவீதி வழியே அவர் போய்க் கொண்டிருக்கிறார். அது நெரிசல் மிக்கதாக இருக்கிறது. பார்வையிலிருந்து அவரை இழந்து விடாமல், நெருங்கிச் சென்று விடலாமென்ற ஆவலில் நடக்கிறீர்கள். பின்பக்கத் தோற்றம்தான் தெரிகிறது என்றாலும் அவருடைய முதிர்ச்சியை, வசீகரத்தை உங்களால் கண்டுகொள்ள முடிகிறது. நெருங்கிக் கொண்டிருக்கிறோமா, பின்தங்கிக் கொண்டிருக்கிறோமா என்று தெரியாதபடிக்கு அவருடைய நடையின் வேகம் தீர்மானமற்றதாக இருக்கிறது. அந்த சாலையிலோ, விலகிச் செல்லும் பிரயத்தனம் இருந்தாலும்கூட ஆட்கள் ஒருவரையொருவர் உராய்ந்து செல்லும்படி நேர்கிறது. அவர்களுக்கு மத்தியில்தான் என்றாலும் அவருக்கு மட்டும் ஏனோ மரியாதையுடனும், பயத்துடனும் அவர்கள் விலகி வழிவிட்டு நகர்வது போலத் தெரிகிறது. சிலர் அவருக்குத் தங்களுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். கடைவீதியைத் தாண்டியதும் ஒரு சந்தில் ஒதுங்கி நின்று அவர் சிறுநீர்க்கழிக்கச் செல்கிறபோது சற்று நெருங்கிவிடுகிறீர்கள். அருகில் செல்ல துணிச்சலற்று, தாமதம் காட்டி, அவர் சாலைக்கு வந்ததும் பின் தொடர்கிறீர்கள். களேபரங்கள் தணிந்த குடியிருப்புகள் வழியே அவர் போகிறார். வீடுகள் நெருங்கித் தெரிகின்றன. ஒவ்வொரு வீட்டையும் பல குடும்பங்கள் பகிர்ந்து கொண்டு வாழ்வது புலப்படுகிறது. அதுமாதிரியான ஒரு வீட்டுக்குள்தான் அவர் போகிறார். அடுத்தடுத்து நான்கைந்து கதவுகள். இரண்டாவது கதவு திறந்திருக்க உள்ளே போகிறார். இந்த வீடுதான் அவர் வசிப்பிடமா என்று வியப்படைகிறீர்கள். ஆனால் அதுவோ உட்புறம் அகன்று பெரிய மண்டபமாக விரிகிறது. அங்கே அவருக்காக நிறைய ஆட்கள் காத்திருக்கிறார்கள். மத்தியிலிருந்த அவருக்கான பீடத்தில் போய் அமர்ந்து கொள்கிறார். தன்னை வணங்குகிறவர்களுக்கு கற்கண்டுகளை வழங்கி ஆசீர்வதிக்கிறார். உள்ளே சென்று தானும் ஆசீர்வாதம் பெறலாமே என்பதாக தோன்றிய எண்ணத்தை ஏனோ உங்கள் மனம் ஏற்கத்தயங்குகிறது. சிலர் அவரிடம் எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை வெறுமனே கேட்டுக் கொள்கிறார். அழக்கூடச் செய்கிறார்கள் சிலர். அவரைச்சுற்றி கம்புகளையும், கத்திகளையும் வீசி வீர சாகசங்கள் செய்து காட்டுகிறார்கள், நடனமாடுகிறார்கள், பாடல்களைப் பாடுகிறார்கள். பாடல்கள் சேர்ந்து ஒலிக்கின்றன. இதற்காக அவர்கள் முன்பே ஒத்திகை செய்து கொண்டு வந்திருக்க வேண்டும். ª
எல்லாவற்றையும் பார்க்கவும், அறியவும்கூடிய கண்கள் அல்லவா அவை. அதில்தான் எவ்வளவு கருணை! எவ்வளவு கனிவு! இந்த சடங்குகளுக்கு பின் அங்கிருந்து அவர் வெளியே வருகிறார். ஒருவன் அவருக்குப் பின்வந்து மரியாதையுடன் வழியனுப்பி வைக்கிறான். அவர் தெருவில் இறங்கி நடக்கிறார். கையில் சிகரெட் ஒன்று புகைந்து கொண்டிருக்கிறது. தெருக்களைக் கடந்துபோகிறார். வீதிகள், வீடுகள், எல்லாம் பெருகி நகரத்தை விட்டு வழிந்தோடிக் கொண்டிருக்கின்றன. அது புறநகர் பகுதி போலத்தான் தெரிகிறது. குடிசைகள் நிறைந்த குடியிருப்புகள். இங்கேயும் சிலர் அவருக்கு வணக்கம் சொன்னார்கள் என்றாலும் அவ்வளவு உற்சாகம் கொண்டதாக இல்லை. இவ்வளவு தொலைவு அவரைப் பின்தொடர்ந்தும்கூட ஏன் அவர் கவனித்தது போல காட்டிக் கொள்ளவில்லை? ஏதோ சதிக்குள் நாம் சிக்கிக்கொண்டி ருக்கிறோமோ என்ற அச்சம் எழுகிறது. எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல இருப்பது அவருடைய சுபாவமாக இருக்கலாம் என்று எண்ணி சமாதானம் கொள்கிறீர்கள். குடிசைப்பகுதியை ஒட்டிய மாதிரியான ஒரு இடம். கான்கிரிட் வீடு ஒன்றின் முகப்புப் படிகளில் ஏறிச்சென்று கதவை ஒட்டியிருந்த அழைப்பு மணிக்கான பொத்தானை அழுத்துகிறார். கதவு திறக்கிறது. ஒரு நடுத்தர வயது பெண்மணி வெளிப்பட்டு அவரை வரவேற்கிறாள். “யாரு, சாமியா? உள்ள வாங்க’’ என்கிறாள் அவள். தடித்த சரீரத்துடன் ஒரு பழைய நடிகையின் சாயல் அவளிடம் தென்படுகிறது. அவள் தனது முதிர் பருவத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளற்றுப்போய் ஒரு கட்சியின் உறுப்பினராகி செயல்பட்டுக்கொண்டிருந்தாள் என்பது போன்றும் அவளைப் பற்றி ஒரு எண்ணம் தோன்றுகிறது. அவர் உள்ளே போகிறார். “எங்கள் அதிர்ஷடம் இது. சரியான சமயத்தில்தான் வந்திருக்கிறீர்கள்.’’ அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்ததும், அவருக்கு முன் பணிவுடன் நின்று அவள் சொல்கிறாள், “புதுசா ஒரு குழந்தை வந்திருக்கு’’. அவள் உள்ளே பார்த்து அழைக்கிறாள், “கொழந்த இங்கே வா’’. ஒரு அறைக் கதவைத் திறந்துகொண்டு சிறுபெண் ஒருத்தி வெளிவருகிறாள். அவளுக்குப் பன்னிரெண்டு பதிமூன்று வயதிருக்கலாம். அச்சத்துடன், இருவருக்கும் எதிரே வந்து நிற்கிறாள். அவளுடைய தயக்கத்தைப் புரிந்து கொண்டவராக சிறு கையைப்பற்றி அருகில் இழுத்து தன்மடிமேல் இருத்திக் கொள்கிறார். “பயப்படாத கொழந்த.
அவர் உன்னை ஒன்றும் செய்யமாட்டார். இந்த சாமிதான் நமக்கு எல்லாம். அவரின் தயவில்தான் நம் வாழ்க்கை இருக்கிறது. உன் அதிர்ஷ்டம் அவர் இன்று இங்கே வந்தது’’ என்கிறாள் அந்தப் பெண். மடியிலிருந்தவளை தன் பக்கம் திருப்பி நெற்றியில் முத்தம் ஒன்றைப்பதிக்கிறார். மகிழ்ச்சியுடன் கூவுகிறாள் அவள்,“உன்னை அவர் ஆசீர்வதிக்கிறார் பெண்ணே!’’. மடியிலிருந்தவளை எடுத்து தனது கைகளில் ஏந்திக்கொண்டு, திறந்திருந்த ஒரு படுக்கையறைக்குள் தூக்கிச் செல்கிறார் அவர். அங்கிருந்த திரைச்சீலைகள் மற்றும் படுக்கையின் மேல் பரப்பியிருந்த விரிப்புகளின் நிறங்களால் அந்த அறையே செம்மஞ்சள் நிறத்தாலான ஒரு ஒளி பூசியதாகத் தோன்றுகிறது. கட்டிலின்மேல் அவளை அமர்த்தியபோது, அவளுடைய கண்கள் மிரட்சியுடன் நோக்குகின்றன. அவர் அவளை நோக்கி ஒரு கனிவான ஒரு புன்னகையை உதிர்க்கிறார். அவளுடைய கன்னங்களை இதமாகத் தடவிக்கொடுத்து, மீண்டும் ஒருமுறை அவளுடைய நெற்றியில் தனது உதடுகளால் ஆசீர்வதிக்கிறார். அவளுடைய மேல்சட்டையை அவர் கழற்றிய போது அவளது உடல் முழுக்கவும் ஒரு நடுக்கம் பரவுகிறது. பறவையைப் போன்ற அவளுடைய மெல்லிய தேகத்தைக் கைகளில் பற்றித்தூக்கி படுக்கையில் கிடத்திவிட்டு, தனது ஆடைகளையும் களைந்து கொள்கிறார். அவருடைய உடலின் பிரகாசம் அவளை திகைக்கச்செய்கிறது. அருகில் நெருங்கிப்படுத்து அவளை அணைத்துக்கொள்கிறார். அவளுடைய சிறிய மார்புக் காம்புகளை உறிஞ்சி, கீழே தவழ்ந்து யோனியில் முத்தமிடுகிறார். அவளுடைய கால்களுக்கிடையே அமர்ந்து தனது வீரியத்தால் அவளுடைய சரீரத்தை பிளக்கையில், அவளுடைய தேகம் அதிர்கிறது. கசிந்த ரத்தமும், அவளுடைய வலியும், வீறிடலும்… அலறல்களும்… அப்போது ஒரு கனவின் சாயல் கொண்ட ரூபங்களின் தாக்குதலில் பிரம்மை பிடித்தவர் போல தெருவில் நின்றிருந்த உங்களைக் கூச்சலும் குழப்பமும் கொண்ட ஒரு அமிலக்காற்று சுழ்ந்து, சுழன்று நகர்கிறது. ஆட்கள் இங்கும் அங்கும் பரபரப்புடன் ஓடிக்கொண்டும், கூச்சலிட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். ஆயுதம் தாங்கிய சிலர் ஒன்றுகூடி தாக்குதலுக்கான இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார்கள். தெருக்களைக்கடந்து பிரதான சாலைக்கு வந்த போது கலவரத்தின் முழுதீவிரத்தையும் நீங்கள் பார்க்கிறீர்கள். கடைகள் உடைக்கப்படுவதும், வாகனங்கள் எரிக்கப்படுவதும் சடங்குகள் போல நிகழ்ந்து கொண்டிருக் கின்றன. வெறி கொண்டு திரிந்த சிலருக்கு பயந்து, பதுங்க இடம்தேடி ஆட்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆயுதங்களுடன் ஒரு சந்திலிருந்து வெளிப்பட்ட ஒரு கும்பல், எதிர்பட்ட சிலரை இனங்கண்டு வெட்டி வீழ்த்துவதையும், தீயிட்டு கொளுத்து வதையும் பீதியுடன் பார்க்கிறீர்கள். பயந்து பின்வாங்கிய உங்களை ஒரு தொலைபேசி அறை மறைத்துக்கொள்கிறது. நீங்கள் ஒளிந்திருந்த இடத்தை அவர்கள் நெருங்கியபோது நீங்கள் திடுக்கிட்டுப்போகிறீர்கள். அவர்தான் அந்த கும்பலுக்கு தலைமை தாங்கி நிர்வாணியாக வந்து கொண்டிருக்கிறார்; ஆணைகள் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் தோய்வடையாத அவருடைய குறி தடிமனாக அசைகிறது. அவருடைய நரைத்த தாடியில் ரத்தக்கறை படிந்திருக்கிறது. பதுங்கியிருந்த உங்களை கண்டுகொண்ட ஒருவன் அந்த கும்பலுக்குள் இழுத்துச் செல்கிறான். இரையைக் கவ்வும் மிருகம் போல உங்களை அவர்கள் வளைத்துக் கொள்கிறார்கள். உங்களது ஆடைகள் அகற்றப்படுகின்றன. நிர்வாணமாக நிற்கிற உங்களுடைய முதுகிலும், புட்டத்திலும், மார்பின்மேலும் அடிகள் இறங்குகின்றன. ஒருவன் சொல்கிறான், “இவன் சாமியை வேவுபார்த்தபடி அவரைத் தொடர்ந்தே வந்து கொண்டிருந்தான்’’. ஒரு கழி உங்கள் கால் எலும்புகளை சிதைக்க, நிலைதடுமாறி கீழே விழுகிறீர்கள். “இவன் சாமியைப்பற்றி ஆபாசமாக கனவு கண்டுகொண்டிருந்தான்’’. உங்களின் நினைவை இழக்கச் செய்யும்படி, ஒரு தடி உங்கள் தலையைப் பிளக்கிறது. கேலியான குரலில் ஒருவன் சொல்கிறான், “இவனுக்கு சாமியின் ஆசீர்வாதம் வேண்டுமாம்’’. உங்களுடைய குறியைப் பரிசோதிக்கிற அவர், ‘தேவிடியா மகனே’’ என்று திட்டியபடி தனது கையிலிருந்த கத்தியால் உங்கள் குறியை அறுத்து சாலையில் வீசியெறிகிறார். அவர் முழக்கமிடுகிறார், ஆயுதங்களை உயர்த்திப்பிடித்தபடி அதை மற்றவர்களும் திரும்ப முழங்குகிறார்கள். “ஆண்கள் பெண்கள், அவர்களின் குறிகள், அதில் வடியும் ரத்தம், கடல், மழை, காற்று, இந்த பூமி, இதில் வாழும் புழு பூச்சிகள், செடி, கொடிகள், இரவு, பகல் அனைத்தும், நம் தெய்வம் நமக்களித்தவை, ஆமென்’’
“ஆமென்’’
12. கிழவன் இந்நேரம்…
இப்போது இந்த நகரத்தில் நான் எங்கே இருக்கிறேன்? இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் இங்கே வந்து இறங்கிய பஸ் நிலையம் எங்கே இருக்கிறது? எதுவும் தெரியவில்லை; இலக்கற்று நடந்து கொண்டிருக்கிறேன். விளக்குகளின் பிரகாசமான ஒளியில் தெரு வெறிச்சோடிக்கிடக்கிறது. கடைகள் எல்லாம் மூடப்பட்டிருக்கின்றன. எப்போதாவது சிலர் வாகனங்களில் என்னைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். சில பாதசாரிகள் தென்பட்டார்கள் என்றாலும் அவர்களும் இந்த இடத்தைவிட்டு உடனே போய்விட வேண்டும் என்ற அவசரத்துடனேயே நடக்கிறார்கள். பெரிய பாரத்தை சுமந்து செல்வது போல இரவு ஏனோ இன்று மெதுவாக நகர்கிறது. உடல் அசதியில் தள்ளாடுகிறது. முகத்தில் அறைவதைப்போல குளிர் தாக்குகிறது. இப்போது போட்டிருக்கும் மட்டமான இந்த சொட்டர்கூட இல்லையென்றால் நான் செத்தேபோய்விடுவேன். பாதையோரத்திலேயே எங்காவது சுருண்டு படுத்துவிட்டால் என்ன? யாராவது பார்த்தால் ஏதோ பிச்சைக்காரன் என்றுதான் எண்ணிக்கொண்டு போவார்கள். என்னுடைய தோற்றம் அப்படித்தான் இருக்கிறது. தோற்றம் மட்டுமென்ன… ஒரு பிச்சைக்காரனைவிட என் நிலை என்ன அவ்வளவு ஒசத்தி? என்னுடைய ஊரில் தோட்டம், வீடு எதுவும் இல்லையென்றாலும்கூட, எல்லாம் இருந்தது போலத்தான்… அப்படித்தான் வாழ்ந்திருக்கிறேன். திரும்பவும் அங்கேயே போய்விடாலாமென்றுகூட தோன்றுகிறது. வரும்போது கிழவனுடன் வந்தேன். போகும் போது அவனையும் தொலைத்து விட்டு இப்படி வெறுங்கையுடன்… ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோயிருந்தால் கிழவன் ஒருவேளை பிழைத்துக் கொண்டிருக்கலாம். இந்த இரவில் அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் சேர்ப்பது என்பது என்னால் முடியாத காரியம். பயத்தில் என் உடல்வேறு வெடவெடக்கத் தொடங்கிவிட்டது. இதோ இன்னும் கூட அந்த நடுக்கம் அடங்கவில்லை. என்னால் அங்கிருக்க முடியாது என்பது புரிந்துவிட்டது. யாருமே இல்லாத அந்த இருள் அடர்ந்த கட்டிடத்தில் செத்துக் கொண்டிருக்கும் கிழவனுடன் ஒரு இரவை எப்படி கழிப்பேன்?
என் ஊர்க்காரர்கள் நிறையபேர் இந்த நகரத்தில் எங்கெங்கோ கலைந்து கிடக்கிறார்கள்; கிழவனைப் புதைக்க அவர்களில் யாராவதுதான் வரவேண்டும். சுடுகாடு எங்கே இருக்கிறது என்றுகூடத் தெரியவில்லை (இங்கே சாகிறவர்களை எங்கே கொண்டுபோய் புதைப்பார்கள்?). என் ஒரே சினேகிதன் சுடுகாட்டு மேட்டிலிருந்துதான் ஓடிப்போனான். அதுதான் அவனை கடைசியாகப் பார்த்தது. அவனும்கூட இங்கேதான் பெங்களூருக்கு வந்து விட்டதாகச் சொன்னார்கள். இவ்வளவு பெரிய ஊரில் அவனை எப்படி தேடிக் கண்டுபிடிப்பேன்? ஒருவேளை நான் இங்கே இருக்கிறேன் என்பது தெரிந்திருந்தால் அவனும்கூட என்னைத் தேடிக்கொண்டுதான் இருப்பான். இந்த உலகத்தில் என்மேல் பரிவுகாட்டியவன் அவன்தான். என் உடலை ஆராதித்தவன் அவன்தான். என் உறுப்பை பற்றி உறிஞ்சுவான். அதன் பளபளப்பான முனையை அவன் தன் நாவால் தீண்டும்போது உயிர் போவது போல இருக்கும். அவனை அணைத்துக்கொள்ளவும் அவனுடைய சிறிய உறுப்பை சுவைக்கவும் ஆவல் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அந்த ருசி என் நாவில் இன்னும் தங்கித் தொல்லைபடுத்திக் கொண்டே இருக்கிறது. அவனுடையது தோல்பிரியாதது. நீர் சுரக்காதது. உச்சத்தில் அது துடிக்கும்; துவண்டு, என் மடியிலேயே உறங்கிப்போவான். பெண்கள் அண்டாத என் உலகத்தில் அவன்தான் என்னை ஆறுதல் படுத்தினான்.
பெண்கள் மட்டுமல்ல, எல்லோருமே என்னை ஒரு ஈனப்பிறவியாகவே கருதினார்கள். என்னுடைய இடதுகாலில் ஆணி வளர்ந்திருந்தது. கொஞ்சம் தாங்கிதான் நடப்பேன். நான் குழந்தையாக இருந்தபோது அம்மைபோட்டு படுத்துக் கெடந்தேனாம். மாரி என் உடல் முழுவதும் முத்துகளை வாரி இறைத்திருந்தாள். கடைசியில் மீந்த முத்தை எங்க போடுவதென்று தெரியாமல் – அவளுக்கு என்ன கணக்கோ – என் கண்ணில் போட்டுவிட்டு போய்விட்டாள். ஒரு கண்ணும் இருண்டு போனது. வளர வளர என் அவலட்சணமும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு எருமாட்டுத் தோலை முண்டுமுடிச்சான ஒரு கல்லின் மேல் இழுத்து கட்டினால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது என் சரீரம். எல்லோரும் என்னை நொள்ளக்கண்ணன் என்றோ, நொண்டிக்காலன் என்றோதான் அழைக்கிறார்கள். இதற்கெல்லாம் நான் கோபித்துக்கொள்வதில்லை. எனக்கு என் அப்பன் வைத்த பெயர் அர்ஜுனன். எனக்கு இரண்டு சகோதரர்கள். சின்னவன் பெயர் நகுலன், அவனுக்கும் இளையவன் பெயர் சகாதேவன். இன்னும் தருமனையும், பீமனையும் பெற்றெடுப்பதற்கு முன்பே என்னுடைய அம்மா என் அப்பனிடம் அடிதாங்கமுடியாமல் கல்லைக்கட்டிக் கொண்டு கிணற்றில் விழுந்து செத்துப்போனாள்.
நாங்கள் குபேரப் பரம்பரையில்லை. என் அப்பனுக்கு பங்காக வந்ததே கோவனம் அளவு நிலந்தான். அதையும் குடித்தே ஒழித்தான் கிழவன். கூலி செய்தால்தான் ஜீவனம். அதை எங்கே செய்தால் என்ன? சொந்த ஊரில், மானம் கெட்டுப் பிழைப்பதைவிட வேறெங்கேயாவது ஊரில் போய் பிழைக்கலாம் என்று கிழவன் சொன்னான். பிழைப்பைத் தேடி வேறு ஊருக்குப் போனோம். எங்களுடைய ஊரிலிருந்து பத்து மைல் தூரம் அந்த ஊருக்கு.
இரண்டுபக்கம் மலைகளும், நடுவில் ஒரு ஆறையும் கொண்ட வளமான ஊருதான் அது. தோண்டிய இடமெல்லாம் இறுகியபாறைகளும், நீர்காணாமல் காய்ந்து கொண்டிருந்த மரங்களும், கறுத்த பனைமரங்கள் நிற்கும் வறண்ட நிலப்பரப்பும், முட்புதர்களும் மட்டுமே கொண்ட எங்கள் ஊரை வெறித்துக் கொண்டிருந்த எங்களுக்கு இந்த ஊர் சொர்க்க பூமியாகவே தோன்றியது. வேலைக்கு ஒன்றும் பஞ்சமில்லை. ஆனால் எனக்குதான் எவரும் வேலைகொடுக்க முன்வரவில்லை. தம்பிகளோ ஆளுக்கொரு குடியானவர்களின் தோட்டங்களில் சேர்ந்து கொண்டார்கள். சுடுகாட்டு ஓனியில் குடிசை மாதிரி ஒன்று போட்டுக்கொண்டு அங்கேயே நாங்கள் தங்கிக் கொண்டோம். நான்தான் மற்றவர்களுக்கு சாப்பாடு செய்து போடவேண்டும். இந்த ஊருக்கு வந்த பிறகு கிழவனுக்கு கஞ்சா பழக்கம் வேறு வந்துவிட்டது. தன்னுடன் கஞ்சா புகைக்கும் ஒரு குடியானவனிடம் சொல்லி என்னையும் வேலைக்கு சேர்த்துவிட்டான் கிழவன். ‘மேயும் மாட்டைத் தோலை உரிப்பவன்’ என்று ஊரில் அந்தக் கவுண்டனை சொல்வதுண்டு. அப்போது அவனிடம் ஒரு சின்னப் பையனும் வேலை செய்துகொண்டிருந்தான். அவனும் பக்கத்து ஊரிலிருந்து வந்தவன்தான். ஆடு வாங்கிய கடனுக்கு பதிலாக பையனை கொண்டு வந்து இங்கே விட்டு விட்டுப்போயிருந்தான் அவனுடைய அப்பன். கவுண்டனுக்கு முப்பது உருக்களுக்கு மேல் ஆடுகள் இருந்தன. பையன் அதை கவனித்துக் கொண்டான். கூழை து£க்குச்சட்டியில் எடுத்துக்கொண்டு காலையில் காட்டுப்பக்கம் போனால் சாயங்காலம்தான் திரும்பி வருவான்.
அங்கு வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே நானும் கஞ்சா இழுக்கக் பழகிக்கொண்டேன். ஆனந்தமாக இருந்தது. கவுண்டனுக்கு வாங்கி வரும் பொட்டணத்தில் நானும் கொஞ்சம் எடுத்து வைத்து கொள்வேன். ஆரம்பத்தில் இதெல்லாம் அவனுக்குத் தெரியாமலே ரகசியமாக நடந்து வந்தது. ஒரு நாள் பம்பு செட்டில் புகைத்துக் கொண்டிருக்கும்போது பார்த்துவிட்டு அடித்தான். பிறகு இதுவே அவனுக்கு சாதகமாக போய்விட்டது. அடித்தாலும் உதைத்தாலும் நான் எங்கும் போய்விடமாட்டேன் என்று தெரிந்து கொண்டான். என் சம்பளத்தையும் வாங்கி குடித்துத் தீர்த்தான் கிழவன். எங்களுடைய மூன்றுபேர் கஷ்டத்தில் கிழவன் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்தான். நொண்டி மாடுதான் என்றாலும் என்னுடைய முதலாளிக்கு அதிகமாகவே உழைத்தேன். எனக்கென்று இருந்தது இரண்டு மக்கிப் போன சொக்காயும், ஒரு கந்தல் வேஷ்டியும்தான். அந்த சொக்காயில் ஒன்று அந்த கவுண்டன் கொடுத்தது. என்னுடைய மெலிந்த உடம்பில் அது தாறுமாறாகத் தொங்கிக் கொண்டிருந்தது.
இராத்திரியில் கண் விழித்து பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது என்னுடன் அந்த பையனும் வந்து பேசிக் கொண்டிருப்பான். சில நேரங்களில் அவனுடைய அம்மாவை நினைத்து அழுவான். பையனோட அப்பன் எப்போதாவது வந்து விசாரித்துவிட்டு போவான். அப்படி அவன் வரும்போது, ‘உன் பையன் செய்யற வேலை என் பணத்துக்கு வட்டிக்குக்கூட கட்டாது’ என்று புகார் சொல்வான் கவுண்டன். அவனுடைய அப்பனும் பையனை ஒழங்கா இருக்கச் சொல்லி கண்டித்துவிட்டுப் போவான். ஆடுகள் காட்டில் மேயும்போது கார்டு, வாச்சர் யாராவது பிடித்துக்கொண்டால், ‘உங்கப்பனா வந்து அபராதம் கட்டப்போகிறான். ஜாக்கிரதையா இருக்கவேண்டியதுதானடா தண்டக்கார நாயே’ என்று சொல்லி அடிப்பான்.
ஒருநாள் இரவு பட்டியிலிருந்த ஒரு ஆட்டைக் காணவில்லை. கவுண்டன் மேற்கே சந்தைக்கு போய்விட்டிருந்தான். பையனைக்கூட நம்பாமல் வழக்கமாக அவன்தான் பட்டிக்கு காவலிருப்பான். அவன் ஊரில் இல்லை என்ற தைரியத்தில் யாரோ களவாடிக்கொண்டு போய்விட்டிருந்தார்கள். பையன்தான் இரவு பட்டிக்குப் பக்கத்தில் படுத்துக்கொண்டான். விஷயம் தெரிந்ததும் காலையிலேயே அவன் மனைவியிடம் சொல்லிவிட்டான். அவளோ அவனுக்கு மேலே, தாடகி; ஒன்றை ஒன்பதாக்கி, ஒன்பதை நூறாக்கக் கூடியவள்; பேய்வந்தது போல ஆடினாள். ஆனவரை விசாரித்து விட்டோம். நரி இழுத்துக் கொண்டு போயிருந்தால் தடையமாவது தெரிந்திருக்கும். களவு போனதற்கான ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ஊரிலிருந்து வந்ததும் அந்தக் கவுண்டன் என்னைக் கூப்பிட்டு “அந்தப் பரதேசிக்கு பொறந்த பய ஆத்துப்பக்கம் வந்திருப்பான். நீ போய் ஆட்டப் பாத்துக்கிட்டு அவன அனுப்பு’’ என்று உறுமினான். எதிர்பார்த்தது போலவே விவகாரம் அவன் காதுக்குப்போய்விட்டது தெரிந்தது.
என்ன நடக்கப்போகிறதோ என்று பயந்தபடி பையனை கூட்டி வருவதற்காக நான் போனேன். ஆற்றில் நீர்வரத்து குறைந்து போயிருந்தது. மணற் திட்டுக்களுக்கிடையே கொஞ்சமாக உயிர் வைத்துக் கொண்டிருந்தது ஆறு. நீர் அதிகமாக இருந்த போது மாட்டை கழுவுவதற்கும், குளிப்பதற்கு இங்குதான் வருவேன். ஓடும் தண்ணீரில் நெடுநேரம் மல்லந்த வாக்கில் படுத்துக்கிடப்பேன். சூரிய ஒளி என் ஒரு கண்ணையும் குருடாக்கும்படி கூசச்செய்யும்.
சுடுகாட்டு மேட்டில் மூடிக்கிடந்த புதர்ச்செடிகளுக்கு மேலெல்லாம் காலைத் தூக்கிப்போட்டுக் கொண்டு ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. ஒரு துரிஞ்சை மரத்து நிழலில் அவன் உட்கார்ந்திருந்தான். தூக்குச்சட்டி அந்த மரத்தின் மொட்டை கிளை ஒன்றில் தொங்கிக் கொண்டிருந்தது. அவனுடைய முகம் வாடிப்போயிருந்தது.
“இன்னிக்கி எந்தப்பக்கம் ஓட்டிகினு போனே’’ என்று கேட்டுக்கொண்டே அவனருகில் போனேன்.
“லைனு ஓரமாத்தாண்ணா’’ என்று அவன் சொன்னான்.
“முதலாளி உன்னை ஊட்டுக்கு வரச்சொன்னான், விஷயம் அவன் காதுக்கு போய்விட்டது ‘’ என்று நான் சொன்னதும் பையன் பீதியுடன் என்னைப்பார்த்தான்.
“என்னை ஆட்டைப் பாத்துக்க சொல்லிட்டு உன்ன வரச்சொன்னான், லேட்டா போனா அதுக்கும் சேர்த்து விழும் சீக்கிரமாப் போ’’ என்றேன்.
அவனுடைய கண்ணில் தண்ணீர் கோர்த்துக் கொண்டது. அழுதுவிடுவான் போல இருந்தது.
“ரெண்டு அடிஅடிப்பான், உங்கோத்தா ஒங்கொம்மான்னு திட்டுவான்…நம்ம விதி அப்படி…போய்வா’’ என்று அவனை அனுப்பிவைத்தேன்.
ஆடு மேய்க்கும் கோலை என்னிடம் கொடுத்துவிட்டு புதர்களுக்கிடையே போன பாதையில் சோர்வாக நடந்தான். ஆற்று மேடேறும்போது அவன் மீண்டும் கண்ணில் தென்பட்டான். நின்று திரும்பி என்னைப் பார்ப்பது தெரிந்தது. அவனை கடைசியாக பார்த்ததும் அதுதான்.
சாயந்திரம் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வீட்டுக்குப் போனதும்தான் எனக்கு விஷயம் தெரிந்தது; பையன் எங்கோ ஓடிப்போய்விட்டான் என்று. முதலாளி அவன் எங்கே என்று கேட்டு குடைந்தான். எனக்கொன்றும் தெரியாது என்று நான் சொல்லிவிட்டேன். கடைசிவரை அவன் நம்பவேயில்லை. மறுநாள் காலை பையனைத் தேடிக்கொண்டு அவனுடைய ஊருக்குப் போனான். மதியம் மூன்று மணி இருக்கும், நான் புழுதி ஓட்டிக்கொண்டிருந்த போது கவுண்டன் திரும்பி வந்தான். வரப்போரத்தில் ஏர் போனபோது அவன் அருகில் நின்றிருப்பது தெரிந்தது. பையனைப்பற்றி அவனிடம் கேட்க பயந்து எனது வேலையை செய்து கொண்டிருந்தேன். என்னுடைய முதுகில், இடிவிழுந்த மாதிரி இருந்தது. அலறிக்கொண்டே திரும்பிப்பார்த்தேன். கையில் பச்சைப் பனமட்டையை வைத்துக்கொண்டு அவன் சூரன் மாதிரி நின்று கொண்டிருந்தான். திரும்பவும் கைமேல் ஒரு அடி விழுந்தது. கையை உதறிக்கொண்டு ஓடினேன். அவன் துரத்திக்கொண்டே வந்து மீண்டும் முதுகில் அடித்தான். பெரியப்பெரிய மண்கட்டிகள் நிறைந்திருந்த புழுதியில் எனது காலை இழுத்துக்கொண்டு ஓடமுடியவில்லை, சுருண்டு விழுந்தேன். கண்கள் இருண்டது. செத்துப் போய்விடுவேன் என்று நினைத்தேன். ஒவ்வொரு அடியும் எனது மார்பில் விழுந்ததுபோல இருந்தது. பயந்து, அவனே என்னை தூக்கிக்கொண்டு போய் பம்புசெட்டருகில் போட்டு தண்ணீர் கொடுத்தான். எழமுடியாமல் அங்கேயே விழுந்துகிடந்தேன். முதுகு, கைக்கால்களில் எல்லாம் காயம். அந்தப் பையனுக்கு நான்தான் சொல்லிக்கொடுத்து எங்கேயோ அனுப்பி விட்டேனாம்; ஆடு களவுபோனதில் எங்களுக்கும் பங்கிருக்கிறதாம். அதற்காகத்தான் இந்த தண்டனை.
ஏதோ ஒரு வைராக்கியம் … அன்றைக்கு இரவே யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அந்த ஊரை விட்டு கிளம்பி என்னுடைய சொந்த ஊருக்கே திரும்பிப்போனேன். வேலை செய்தால் யாராவது கூழ் ஊற்றாமலா போய்விடுவார்கள்? இரண்டு நாள் கழித்து என்னுடைய அப்பனும் தேடிக்கொண்டு அங்கே வந்துவிட்டான். நடந்த கதையை எல்லாம் கேட்டான். நொண்டி மாடு என்றால் கொஞ்சம் இரக்கம் வரத்தானே செய்யும். காயங்களைப் பார்த்து அவன் அழுதான். போதையில் இருக்கும்போதுதான் அவன் இப்படி அழுவான்.
அந்த ஊரிலேயே கொஞ்சம் நாள் இருந்தோம். அது ஒன்றும் செழிப்பான பூமி இல்லை. ஏரியில் தண்ணீர் இருந்தால் வயிறு ரொம்பும். இல்லையென்றால், பிழைப்புக்கு வேறு இடம் தேடவேண்டியதுதான். இரண்டு வருஷமாக மழையில்லை. எல்லோரும் பஞ்சம் பிழைக்க மெட்ராஸ், பெங்களூர் என்று மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பிப் போனார்கள். ஒரு ஆள் எங்களையும் பெங்களூருக்கு தன்னுடன் வருமாறு கூப்பிட்டான். வேலை பார்த்துத் தருவதாகச் சொன்னான். நாங்களும் அவனுடன் புறப்பட்டு இங்கே வந்து சேர்ந்தோம்.
தன் ஜென்மத்தில் இதைப் போன்ற ஒரு ஊரை பார்த்ததில்லையென்று கிழவன் சொன்னான். ஒவ்வொரு தெருவும் எவ்வளவு நீளம்! பெரிய பெரிய கட்டிடங்கள், கண்ணாடி மாளிகைகள்! கண்கள் வியக்கப் பார்த்தோம். இவ்வளவு பெரிய நகரத்தில் யார் எங்களை உட்கார வைத்து சோறுபோட போகிறார்கள்? கூட்டி வந்த ஆள் எங்களை ஒரு கட்டிட வேலையில் சேர்த்துவிட்டான். நாங்கள் இருவரும் இன்னும் முடிக்கப்படாமல் இருந்த அந்தக் கட்டிடத்தின் அறையிலேயே தங்கிக் கொண்டோம். எங்கள்மேல் இரக்கப்பட்டும், பாதுகாப்பு கருதியும் எங்களை அங்கே தங்கிக்கொள்ள அனுமதித்திருந்தார்கள். கூலி இங்கே கொஞ்சம் பரவாயில்லைதான். நாங்கள் இருவரும் சாப்பிட்டது போக மீதி இருக்கத்தான் செய்தது. எவ்வளவு சேர்ந்தால் என்ன, எல்லாவற்றையும் குடித்து ஏப்பம்விட கிழவன் கூடவே இருக்கிறானே. இப்படி உடம்பை வருத்தி சம்பாதித்துக் கொடுக்கிறானே என்று சிறிது வருத்தம்கூட அவனிடம் தென்படுவதில்லை. இரவானால் குடித்துவிட்டு வந்து பொண்டாட்டியை அடிப்பது போல அடிப்பான். மேஸ்திரிக்கு இரக்க சுபாவம். நான் நொண்டியாக இருந்து கஷ்டப்படுவதைப் பார்த்து சுலபமான வேலையாகக் கொடுப்பான். எப்படியோ இரண்டு மாசத்தை ஓட்டிவிட்டேன்.
நான் இங்கே வந்ததே என் சினேகிதனைத்தேடித்தான் என்பது போல, கொஞ்சம் நாட்களாக அவனைப்பற்றிய யோசனையாகவே இருந்தது. இன்று காலையிலிருந்தே அது இன்னும் தீவிரமாகத் தாக்கத் தொடங்கியது. ஆனால் கிழவன் என்னை எங்கும் போகமுடியாமல் செய்துகொண்டிருந்தான். ஒன்றும் தெரியாத என்னை, இந்தப் பெரிய நகரம் எப்போதும் விழுங்கக் காத்திருப்பது போல நினைத்து, அவன் கூடவே இருக்குமாறு பார்த்துக்கொண்டான். இங்கே வந்த புதிதில், ஊர்க்காரர் யாரிடமாவது விசாரித்தால் அவன் கிடைத்துவிடுவான் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கை விலகிப்போகப்போக என் நிம்மதியை இழக்கத் தொடங்கிவிட்டிருந்தேன். ஒரு பிசாசின் பிடியில் இருப்பதைப் போல நான் இருந்தேன்.
இந்த இரவின் முன்னேரத்தில்தான் எல்லாம் மோசமாக நடந்து முடிந்தது. கிழவன் குடித்துவிட்டு வந்து, காசுகேட்டு குடைந்தான். என்னிடமிருந்தது பத்து ரூபாய் சில்லரை மட்டுந்தான். நாளைக்கு இருந்திருந்தால் இந்த வாரத்திற்கான சம்பளத்தையாவது வாங்கியிருக்கலாம். கிழவனுக்கு குடித்திருந்தது போதவில்லை. திரும்பவும் குடிக்கத்தான் அவன் காசுகேட்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தான். நான் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்ததும், ‘நொள்ளத்தேவிடிய மகனே’ என்று திட்டிக்கொண்டே கையிலிருந்த தண்ணீர் டம்ளரை தூக்கி என் முகத்தில் வீசினான். அது என் நெற்றியைக் வெட்டிவிட்டு கீழே விழுந்து உருண்டது. ரத்தம் கசிந்துகொண்டு வந்து, என் பனியனில் ஒழுகியது. ஒரு கிழட்டு நாயைப்போல அவன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஓடிப்போய் அவன் தலையைப் பிடித்து சுவரில் வேகமாக மோதினேன். அவனுடைய தலை மோசமாக நசுங்கிப் போய்விட்டது. கிழவன் கீழே விழுந்து துடித்தான். தலையிலிருந்து வழிந்த ரத்தம் தரையை நனைத்தது. இன்னும் கதவுகள் பொறுத்தப்படாமல் வெறும் சிமண்ட் பைகளால் மூடப்பட்ட ஜன்னல்வழியே புகுந்த காற்றிலும், பயத்திலும் என் உடல் நடுங்கத்தொடங்கியது. ஆரம்பத்தில் கொஞ்சம் உரத்துக்கேட்ட அவனுடைய முனகல் மெல்ல அடங்கிக் கொண்டு வந்தது. எட்டியிருந்தே சிறது நேரம் அவனைப்பார்த்துக்கொண்டிருந்தேன். அச்சமூட்டும் பேய்கள் வந்து புகுந்துவிட்டது போன்ற அவ்விடத்தைவிட்டு ஓடவேண்டும் என்ற உந்துதல் எழுந்ததை மட்டுந்தான் என்னால் சொல்ல முடியும். அவனை அப்படியே விட்டுவிட்டு நான் புறப்பட்டு வந்து விட்டேன்.
கிழவன் இந்நேரம் செத்துப்போயிருப்பான். அந்த இருள் நிரம்பிய கட்டிடத்தில் தனியாக அவன் கிடப்பான். காலையில்தான் யாராவது அவனுடைய பிணத்தைப் பார்ப்பார்கள். நிச்சயம் நான்தான் அவனை கொன்றேன் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிடும்.
.
13. அதிர்ஷ்டமற்றப் பயணி
நகரத்தைத் தாண்டி வெகு தொலைவுக்கு வந்து விட்டிருந்தது பேருந்து. அதுவரை என் கவனமெல்லாம் அருகில் தெரிந்த மலைகளின் மேலேயே இருந்தது. பயணத்தின் வெகு தொலைவுவரை அவை காணக்கிடைக்கும் என்ற ஆறுதலூட்டும்படி மலை நீண்டிருந்தது. அப்போது பேருந்து பயணத்தின் சீரான இயக்கத்தில் தடங்கல் உண்டாகும்படி ஏதோ நடந்து கொண்டிருப்பதை உணர்ந்து திரும்புகையில், என் இருக்கைக்கு நான்கைந்து இருக்கைக்கு முன்னே நடத்துனர் ஒரு பயணியிடம் எதுவோ விசாரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
“இப்ப டிக்கட் வாங்கப்போறயா, இறக்கி விடட்டுமா?’’ என்று அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.
அவர் யாரை நோக்கி இந்தக் கேள்வியைத் தொடுத்தார் என்பது முதலில் தெரியவில்லை. அதற்கு வாய்பேற்படுத்தும்படி பிரச்சனைக்குரிய பயணி இப்போது எழுந்து நின்று கொண்டார்.
அவருக்கு ஐம்பது வயதிருக்கலாம். முகத்தில் லேசான தாடி. வறுமையின் சுவடு எதுவும் அவரிடம் காணப்படவில்லை. ஏமாற்றுக்காரர் போலவும் தெரியவில்லை. பணத்தை எங்கேயாவது தொலைத்துவிட்டு எப்படியாது சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்து பேருந்தில் ஏறிவிட்டிருக்கலாம்.
“நான் எதற்காக டிக்கட் வாங்க வேண்டும்?’’ என்று நடத்துனரிடம் அவர் கேட்டர்.
எகத்தாளமாக இல்லாமல் சாதாரணமாகத்தான் அவர் கேட்டார்.
இது என்ன கேள்வி? என்பதுபோல எல்லோரும் வியப்புடன் அவரைப்பார்த்தார்கள். சில கேள்விகள் சாதாரணமாகத் தோன்றினாலும் ஆச்சிரியப் படுத்துபவையாகத்தான் இருக்கின்றன; ஏதோ ஒரு புதிதான ஒன்றைப் பெறுவதற்காக வெட்ட வெளியை நோக்கி வலைவீசுகின்றன. சம்பத்தைப்போல அவர் அடிப்படையான கேள்விகளில் உழல்பவராக இருக்கலாம். ( ‘இடைவெளி’ சம்பத்தைத்தைத்தான் சொல்கிறேன்)
இந்தக் கேள்வி நடத்துனரை ஆத்திரப்படுத்தியது.
“இது என்ன உங்கப்பன் வீட்டு பஸ்ஸுன்னு நெனைச்சியா? இந்த லொல்லெல்லாம் எங்கிட்ட வச்சிக்காதே, குடிச்சிட்டு வந்து கலாட்டா பண்றயா?’’
அவர் குடித்திருப்பது போலத் தெரி£யவில்லை.
அவர் சொன்னார்,
“கலாட்டவெல்லாம் பண்ணவரல, நிஜமாகவே நான் டிக்கட் வாங்க வேண்டுமா என்று எனக்குத்தெரியவில்லை. ஒருவேளை அவருக்குத் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன்’’
“யாருக்கு?’’
பின்னால் திரும்பி ஆட்களை நோட்டம் விட்டவர், ‘அவர்தான்’ என்று நானிருந்த திசையில் கையைக்காட்டினார்.
‘யாரு அந்த நீலக்கலர் சட்ட போட்டிருக்கிறாரே அவரா?’
“அவருக்கு பக்கத்தில தாடிவச்சிருக்கிறாரே அவரு’’
என்னைத்தான் அவர் சுட்டிக்காட்டினார். நான் பயந்து போனேன். என்னை ஏன் இப்படி வேண்டாத சிக்கலில் மாட்டிவைக்க வேண்டும் ?
“அவர எதுக்காக கேட்கணுங்கிற ? டிக்கட் எடுன்னா எடுக்க வேண்டியதுதானே’’
“தயவுசெய்து என்னை மன்னிக்க வேண்டும், இந்த விஷயம் அவருக்குத்தான் தெரியும்’’
நடத்துனர் என்னைத்திரும்பிப்பார்த்தார். நான் சங்கடத்துடன் நெளிவதை அவர் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.
“அவரென்ன உன் கூட வந்தவரா?’’ என்று அந்த ஆளையே கேட்டார்.
“ஆமாம், அவர்தான் என்னை அழைத்து வந்திருக்கிறார்’’ என்றவர் என் பக்கம் திரும்பி ‘’சார் நான் டிக்கட் எடுக்க வேண்டுமா?’’ என்று கேட்டார்.
இந்த கேள்வியை எதற்காக என்னை கேட்கவேண்டும், இந்த ஆளுக்குக்கென்ன பைத்தியமா?
ஏதாவது பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாலும், இத்துடன் இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்பதாலும் ‘ஆமாம், டிக்கட் எடுக்கவேண்டும்’ என்றேன்.
‘அப்படியானால் எனக்கும் நீங்கள்தானே டிக்கட் எடுக்கவேண்டும்?’ என்று அவர் கேட்டார். நான் அதிர்ந்து போனேன்.
ஓட்டுனர் அவ்வப்போது திரும்பிப்பார்த்து சிரித்துக் கொண்டே பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தார். அவருக்கு இதெல்லாம் வேடிக்கையாக தெரிந்திருக்க வேண்டும். என் சக பயணிகளுக்கு இப்போது நானும் ஒரு வேடிக்கை பொருள் போல ஆகிவிட்டதை உணரமுடிந்தது. சிலர் என் மேல் பரிதாபப் பட்டிருக்கலாம், சிலர் என்னை துரோகியாகவும் நினைத் திருக்கக்கூடும்; உடன் அழைத்துக்கொண்ட வந்துவிட்டு இப்படி கஞ்சத்தனம் செய்கிறானே என்று.
அவர் எதோ சதியுடன் செயல்படுவதாகப் புரிந்து கொண்ட நான் அதிலிருந்து விடுபடுவதற்கான எத்தனங்களை செய்ய முயற்சித்தேன்.
‘ நீங்கள் யாரென்றே தெரியவில்லை, எதற்காக உங்களுக்கு நான் டிக்கட் எடுக்கவேண்டும்? ஏன் வீணாக என்னை தொந்தரவு செய்கிறீர்கள்,’ என்று கேட்டேன்.
‘ என்னைத்தெரியவில்லையா?’ அவர் வருத்தத்துடன் கேட்டார்.
இந்த விதமான கேள்வி எனது நிலைமையை இன்னும் மோசமாக்கியது. இப்போதுதான் முதன்முதலாக அவரைப்பார்க்கிறேன். பத்துரூபாய் டிக்கட்டுக்காக தெரிந்த ஒரு மனிதரை தெரியாதது போல காட்டிக்கொள்ளக்கூடிய அளவுக்கு சுயநலம் கொண்ட மனிதனா நான்? எப்படி இதை மற்றவர்களுக்கு புரியவைப்பது?
திரும்பவும் அவர் கேட்டார்,
‘நிஜமாகவே உங்களுக்கு என்னைத் தெரியவில்லையா?’
‘ஆமாம், தெரியவில்லை’ என்றேன்.
அவர் சிரித்தார். அதில் வருத்தம் கலந்திருப்பது போலத்தான் இருந்தது. ஒரு டிக்கட் விஷயத்திற்காக சகமனிதர்களை இப்படிக்கூட சங்கடத்திற்குள்ளாக்கி காரியம் சாதித்துக் கொள்ளக்கூடிய மனிதரா இவர்?
அவர் கேட்டார், ‘என்னை ஏன் தெரியாதது போல நடந்து கொள்கிறீர்கள் என்று தெரியவில்லை, நீங்கள் யாரென்று நான் சொன்னாலாவது நம்புவீர்களா?’
சந்தேகமில்லை அவர் ஏதோ திட்டத்துடன்தான் வந்திருக்கிறார்.
‘நீங்கள்தானே ஜீ.முருகன்? நீங்கள் ஒரு எழுத்தாளர். இதுவரை உங்களது இரண்டு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. நாவல் ஒன்றும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றும்’
நான் அதிர்ந்துபோனேன். ஆமாம், அவருக்கு என்னைத் தெரிந்திருக்கிறது, சந்தேகமில்லை. அவரிடமிருந்து இனிநான் தப்பிக்க முடியாது. ஏதோ ஒரு விதத்தில் சம்மந்தப் பட்டிருக்கிறோம். போர்ஹேவைப்போல நிச்சயம் இன்னொரு வயதான நானாக அது இருக்க முடியாது (போர்ஹேவைத் தெரியுமில்லையா உங்களுக்கு). என்னுடைய முகத்திற்கும் அவருடைய முகத்திற்கும் சம்மந்தமேயில்லை. அந்த ஆள் நல்ல கறுத்த நிறம். கேசத்திலிருந்து தொங்கும் தேன்கூடு போன்ற வடிவத்தில் முகம். மேலும் என்னுடைய கடந்த காலம் மட்டுந்தான் இவருக்குத் தெரிந்திருக்கிறது. இனிவரும் காலத்தில் நான் எழுதப்போகும் புத்தகங்களைப்பற்றியோ நான் ஆகப்போகும் விதம் பற்றியோ இவர் ஒன்றும் சொல்லவில்லை.
ஒருவேளை இவர் எனது வாசகராக இருக்கலாம். ஆனால் என்னுடைய பிரபல்யத்தைப்பற்றி எனக்கேத் தெரிந்திருக்கையில் இது எவ்வளவு மடத்தனமான எதிர்பார்ப்பு! அப்படி எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை.
நான் கேட்டேன்,
‘உண்மைதான், உங்களுக்கு என்னை நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனால் உங்களை யாரென்று தெரியவில்லையே’
‘என்னைத் தெரியவில்லையா?’ வியப்புடன் அவர் கேட்டார்.
நான் என்ன சொல்வது? ஏதோ ஒரு விபரீதம் வெளிவரப்போகிறது என்று அச்சத்துடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
‘நீங்கள் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் ‘அதிர்ஷ்டமற்ற பயணி’ கதையின் பிரதான கதாப்பாத்திரம்தானே நான்? இந்த பேருந்தில் பயணம் செய்வதற்கு நீங்கள் தானே அழைத்து வந்திருக்கிறிர்கள்?’ என்று அவர் கேட்டார்.
அப்போதுதான் எனக்கு விளங்கிற்று. இந்த குதர்க்க விளையாட்டுக்குள் தான் நான் சிக்கிக் கொண்டிருக்கிறேன் என்று.
தர்க்கப்படி அவர் சொல்வதும் சரிதான். நான்தான் அவருக்கு டிக்கட் எடுத்திருக்க வேண்டும். ஆனால் பஸ்ஸில் பயணிக்கும் கதாப்பாத்திரங்களுக்கெல்லாம் டிக்கட் வாங்கவேண்டுமென்றால் எந்த எழுத்தாளனும் கதையில் அவர்களை நடக்க வைத்தே அல்லவா கூட்டிக் கொண்டு போவான். இன்றைக்குப் பார்த்து என் நிலமைவேறு சரியில்லை. என்னிடம் இப்போது ஒரு கோட்டருக்கு மட்டும் தான் பணம் இருக்கிறது. அங்கே நண்பர்கள் எனக்காக காத்திருப்பார்கள். அவர்களுடைய பொருளாதார நிலை எப்படியிருக்கிறதோ தெரியவில்லை. இந்த அழகில் இவருக்கு நான் டிக்கட் எடுக்கவேண்டுமாம்.
அவர் சொன்னார்,
‘உங்கள் உதாசீனம், உண்மையாகவே என்னை வருந்தச் செய்கிறது. ஒரு மனிதனின் எதார்த்த இருத்தலைப்பற்றியோ, அவனுடைய துயரமிகு மனோபாவத்தைப் பற்றியோ நீங்கள் அக்கறை கொள்வதேயில்லை. உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கதை.’
எங்களுடைய இந்த உரையாடல் மற்ற பயணிகளை வியப்படையச் செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடத்துனர் கூட இது எப்படி முடியப்போகிறதோ பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் இருப்பது போலப் பட்டது.
நானும் விட்டுக் கொடுப்பதாக இல்லை, எனக்கான நியாயங்களை சொல்லியாக வேண்டும் இல்லையா?
‘நீங்கள் சொல்லும் அந்த துயரம், ட்ராஜடி எல்லாம் கடந்த நூற்றாண்டோடு காலாவதியாகிவிட்டது. எழுத்தாளன் அவனுடைய கலைக்கு மட்டுந்தான் பொறுப்பேற்க முடியும், மற்றபடி அவன் கருணையற்றவனாகவும் இருக்கலாம் என்று வில்லியம் பாக்னர் சொல்லியிருக்கிறார் (வில்லியம் பாக்னர் – அதுதான் அந்த அமேரிக்க எழுத்தாளன்). அவனுக்கு வேண்டிய தெல்லாம் காகிதம், உணவு, சிகரெட், கொஞ்சம் விஸ்கி…’
‘நிதானம் தவறிய ஒரு குடிகாரனாகவோ, வறுமையின் இயலாமையில் கௌரவத்தை இழந்து நிற்கும் மனிதனாகவோ, ஏன் ஒரு ஏமாற்றுக்காரனாகக்கூட இருந்திருக்கலாம், நானோ அதிர்ஷ்டமற்ற ஒரு பயணியாகிவிட்டேன்’ என்று அவர் முணுமுணுக்கையில், (எதிர்பாராத) அந்த சம்பவம் நடந்தேறுகிறது. நாங்கள் பயணம் செய்யும் பேருந்து பயங்கர விபத்தொன்றில் சிக்கிக்கொள்கிறது. எதிரே வந்த லாரி ஒன்றை தவிர்க்கும் பொருட்டு இடது பக்கமாக திரும்பி, ஒரு புளிய மரத்தின் மேல் மோதிவிடுகிறது. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிர் துறக்கிறார்கள், நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்படுகிறது. இறந்தவர்களில் ஒருவர் யாரென்று தெரியவில்லை; இன்னொருவர் ஓட்டுனர் மற்றவர் டிக்கட் வாங்கியிராத நம் பயணி.
இந்த கதையின் முடிவில் ஏதோ சதி நடந்திருப்பதாக உங்களுக்குத் தோன்றக் கூடுமென்றால் நான் ஓன்றும் சொல்வதற்கில்லை. ஒருவேளை அந்த பயணி திரும்பி நின்று தேடிய கணத்தில் என்னைப் பார்க்காமல் இருந்திருந்தால், எனக்குள் அந்தப்பதட்டம் ஏற்படாமல் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை தொடங்கியிருக்காதோ என்றும் தோன்றுகிறது.
.
14. பூனை ஏன் தற்கொலை
செய்துகொள்ள வேண்டும்?
மேலே சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியை வெறித்தபடி அவன் படுத்திருந்தான். அவனுடைய பிரக்ஞைக்குள் மின்விசிறி இல்லை; வேறு ஏதேதோ யோசனைகள். வெற்று மார்பில் அடர்ந்திருந்த கேசத்தை வருடிக்கொண்டிருந்தன. அவன் விரல்கள். அறை வெறிச்சோடிக் காணப்பட்டது. சில புத்தகங்களும் பத்திரிக்கைகளும் கட்டிலின் ஓரத்திலும் டீப்பாயின் மேலும் இரைந்து கிடந்தன. அவனுடைய பொருள்கள் என்று அங்கே அதிகமில்லை. யாராவது பார்த்தால் நிச்சயம் அவன் மாத வாடகையில் இங்கே வந்து தங்கியிருக்கிறான் என்பதை நம்ப மாட்டார்கள். ஆனால் அப்படித்தான் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறான். இதிலொன்றும் பெரிய சதி இல்லை. எவ்வளவு நாட்கள் தங்கவேண்டியிருக்கும் என்பது அவனுக்கே தெரியவில்லை என்பததால்தான் இந்த ஏற்பாடு. ரயில் நிலையத்திற்கு எதிரே ஜனசந்தடி நிறைந்த ஒரு சாலையில் இருந்தது அந்த விடுதி. மூன்றாவது மாடியில் தனித்திருந்த ஒரு அறை அது. கீழே இருக்கும் அறைகளைவிட சற்றுப்பெரியது. ஜன்னல் ரோட்டைப் பார்த்தவாக்கில் இருந்தது.
அவன் இங்கே வந்து ஒரு வாரம் முடியப்போகிறது. சதா படிப்பதும், யோசிப்பதும், உறங்குவதுமாக இருந்து கொண்டிருக்கிறான். வெளியே கூட அதிகமாக எங்கும் நடமாடப்போகவில்லை. உணவை விடுதிப்பையன் வாங்கிவந்து கொடுத்துக் கொண்டிருந்தான். தெரிந்தவர்கள் யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாது என்ற அச்சம்தான் அவனை இந்த அறைக்குள்ளாகவே அடைந்து கிடக்கச்செய்தது.
தூங்கிவிட வேண்டுமென்ற விருப்பம், இரைச்சலிடும் யோசனைகளால் நிறைவேறாமல் போய்க்கொண்டிருந்தது. இன்று பகலில் நடந்த ஒரு சம்பவம் அவனுக்குள் ஏதோ ஒன்றை உறுதிபடுத்திக்கொண்டிருப்பதாக தோன்றியது. வெளியே ஏதோ பரபரப்பான சப்தம் கேட்கிறதே என்று அறையைவிட்டு வெளியே வந்து பார்த்தான். விடுதிப்பையன்கள் இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கிடையே சட்டென்று தோன்றிமறைந்த ஒரு பூனையின் உருவத்தை அவன் பார்த்தான். ஆமாம், அதைத்தான் துறத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பையனை நிறுத்தி எதற்காக அதைத்துரத்துகிறீர்கள் என்று கேட்டான். ‘பூனை தற்கொலை செய்துகொள்ளப்போகிறது’ என்று சொல்லிவிட்டு அவசரமாக ஓடி அவர்களுடன் சேர்ந்து கொண்டான். அங்கே நடப்பதை இவன் பார்த்துக்கொண்டிருந்தான். பூனையும் பையன்களும் ஆங்காங்கே தோன்றி மறைந்து கொண்டிருந்தார்கள். பூனை அகப்பட மறுத்தது. புதுப்புது உத்திகளில் தப்பித்து தாவிப் பாய்ந்து கொண்டிருந்தது. பையன்களும் விடுவதாக இல்லை. துரத்திக்கொண்டிருப்பதே அவர்களை கிளர்ச்சியடையச் செய்திருக்க வேண்டும். அந்த சம்பவத்தின் உச்சகட்டமாக பையன்களின் முற்றுகையிலிருந்து தப்பிக்க மாடியிலிருந்து பூனை கீழே குதித்துவிட்டது. வெற்றியின் மிதப்பில் கூச்சலிட்டுக்கொண்டு பூனையைப்பார்க்க படிகளில் சப்தத்துடன் இறங்கி ஒடிக்கொண் டிருந்தார்கள் அவர்கள். இவனும் தன்னுடைய அறைக்குள் சென்று ஜன்னலின் வழியே கீழே பார்த்தான். பூனை சாலையில் விழுந்து கிடந்தது. இவனுக்காக என்று இல்லாமல் எதேச்சையாகத்தான் அது நடந்திருக்க வேண்டும். இந்த எதேச்சைகள் ஏதோ ஒன்றின் ஒழுங்குபடுத்தப்பட்ட கூறுகளாகக்கூட இருக்கலாம். இது போல் அவனுக்கு நிறைய நேர்ந்திருக்கிறது.
பகல் பொழுதில் ஜன்னலுக்கு அருகே உட்கார்ந்து சாலையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பான். ஜன்னலுக்கு கம்பிகள் இல்லை. கண்ணாடிக் கதவைத்திறந்தால் கீழே சாலையில் போகும் நாகரீக யுவன்களையும், யுவதிகளையும் இங்கிருந்து தெளிவாகப் பார்க்க முடியும். உணவுவிடுதிகளிலும், துணிக்கடைகளிலும் நேர்த்தி காட்டி நாசுக்குடன் பாயும் அவர்களை வேடிக்கை காட்சி போல பார்த்துக்கொண்டிருப்பான். ஒருவருடைய முகத்திலும் சாந்தமில்லை; பிரகாசம் இல்லை. இவர்களுடன் பேசுவதற்கும் உறவாடுவதற்கும் என்ன இருக்கிறது? அவனுடைய மனைவியுடன் நடக்கும் சம்பாஷனையை நினைத்துக்கொள்வான். சாதாரண உரையாடல் கூட சண்டையில்தான் போய்முடிகிறது. சிறிது பிசகினாலும் நம்மை அதல பாதாளத்தில் தள்ளி விட்டுவிடுகின்றன இந்த வார்த்தைகள். மொழிகள் எல்லாமே அழிவை நோக்கி நம்மை அழைத்துச்செல்லும் கருவிகளாக மாறிக்கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அவை கொலைகளுக்கான நியாயங்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறன.
என். டி. ஜோசப் என்ற பாதிரியார் மலையாளத்தில் எழுதி, நீலவாணன் என்பவரால் தமிழில் 1962-ல் வெளிவந்த ‘இந்தியாவில் பலிகள்’ என்ற பழைய புத்தகம் ஒன்றையும் சமீபத்தில் அவன் படித்திருந்தான். உயிர்களை பலி கொடுப்பது கடவுளுடன் செய்யும் பரிவர்த்தனையாக அவருக்கு தோன்றுகிறது. மனிதனின் குற்ற உணர்வுதான் இதற்கு காரணம் என்கிறார் அவர். எல்லா உயிர்களுக்கும் இயற்கை வழங்கியுள்ள கொடையை தான் அபகரித்து உண்பது அவனை பரிகாரம் செய்ய நிர்ப்பந்திக்கிறது. இதுதான் புதையலுக்காக நரபலி செலுத்துவது வரை அவனை இட்டுச்செல்கிறது என்ற முடிவுக்கு வருகிறார். இயற்கையிலிருந்து விலகுவதன் காரணமாக அதன் சமநிலைப்பற்றிய பிரக்ஞையை மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். மனிதனாக பிறந்து விட்டதற்காக நாம் செய்யக்கூடிய பரிகாரம்தான் என்ன? இந்த குற்ற உணர்விலிருந்து மீள்வது எப்படி? அந்த புத்தகத்தை வாசித்து முடிக்கையில் இந்தக் கேள்விகள் அவனுக்குள் எழுந்தன.
இந்த பூமியில் வாழ்வதற்கான உயிர்களுக்குரிய தகுதியை நாம் இழந்து விட்டோம் என்று அவன் கருதினான். தன்னையே அவன் கேட்டுக்கொள்வான், ‘வாழ்வது என்பது முக்கியமானதுதானா?’ காலம்காலமாக இந்த கேள்வி தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்று தோன்றியது. நிகழும் தற்கொலைகள் எல்லாம் இந்த கேள்வியின் ஒருதன்மையிலான பதில்களாக இருக்கலாம். இருந்தும் இந்த பூமியில் கோடான கோடி மனிதர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்; இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்தல் என்பது தற்காலிகமானதாகவும், மரணம் நிரந்தரமானதாகவும் இருக்கிறது. ஆமாம், இருளைப்போலவே மரணமும் பிரபஞ்சத்தில் நிரந்தரமாக நிறைந்திருக்கிறது.
இரவின் தூக்கமற்ற கணங்களில், யோசனைகளின் அழுத்தத்தில், தற்கொலைதான் சரியான முடிவாக உறுதியாகிக்கொண்டு வந்தது. இந்த வாய்ப்புதான் எப்போதும் அவனுக்கு அருகிலேயே தென்பட்டது. ஒரு வளர்ப்பு மிருகம் போல அது அவனை சுற்றிசுற்றி வந்துகொண்டிருந்தது. தற்கொலைக்கு எப்படிப்பட்ட வழியை மேற்கொள்வது என்பதிலும் அவனுக்கு தெளிவில்லை. வலியற்ற மரணம் சாத்தியமா என்று அவன் யோசித்துக்கொண்டிருந்தான். வலி என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால் தற்கொலை ரொம்பவும் சகஜமாகிவிடும் என்று தோன்றியது. சாவுநேரும் கணம் இது எந்த அளவுக்கு உணரக்கூடியதாக இருக்கும்? இதற்கு முன்புவரை தற்கொலை செய்து கொண்டவர்கள் எப்படி இந்த பிரச்சனைக்கு முடிவுகண்டார்கள்?. புறக்கணிக்கப்பட்டதன் ஆவேசம் வலி பற்றிய எண்ணத்தை வென்றிருக்கலாம். அப்படியானால் வாழ்தலின் மேலான ஈர்ப்பு தம்மிடம் இன்னும் மிச்சமிருக்கிறதா? பகல்பொழுதுகள் இதுபோல் அவனுக்குப் பிரச்சனையாய் இல்லை. இரவு நேரத்திலோ அவனுக்குள் கனன்று கொண்டிருந்த எண்ணங்களின் வெப்பம் கலவரமூட்டுவதாக இருந்தது.
கட்டிலைவிட்டு இறங்கி ஜன்னலருகில் போய் நின்று கீழே சாலையைப்பார்த்தான். தெரு விளக்குகளின் மஞ்சள் ஒளியில் வெறிச்சிட்டு படுத்திருந்தது சாலை. தொலைவில் திறந்திருந்த ஒரு டீக்கடையின் முன்னால் இரண்டு மூன்று மனிதர்கள் தென்பட்டார்கள். வெளியேகூட எங்கும் இப்போது போய் வரமுடியாது. நேற்று இரவு அப்படித்தான் நடந்தது. உலாவிவிட்டு வரலாமே என்று விடுதியை விட்டு அவன் சாலைக்கு வந்தான். மனிதர்களின் நடமாட்டம் நின்று சாலை வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதாவது சில வாகனங்கள் மட்டும் இருளின் அமைதியைகுலைக்கும்படி கூச்சலிட்டுச் சென்றன. வெகுதூரம் சென்று திரும்ப வேண்டும் என்ற உத்தேசத்துடன் நடந்தான். அவ்வளவாக பரிச்சயம் இல்லாத நகரமிது. ஏதாவது வாங்குவதற்காக இங்கே வந்து போவதைத்தவிர இந்த நகரத்திற்கும் அவனுக்கும் எந்த ஒட்டுறவும் இல்லை. நண்பர்களோ, உறவினர்களோகூட யாரும் இல்லை. இந்த நகரத்திற்கு வந்துவிட்டால் தவறாமல் கடற்கரைக்குப் போய்வருவான். மணலில் உட்கார்ந்து பெரும் ஆகிருதியுடன் அசையும் கடலையே பார்த்துக்கொண்டிருப்பான். கரையோரம் அலைகள் செய்யும் ஆர்பாட்டத்திற்கு அப்பால் விரியும் அமைதியில் லயித்திருப்பான்.
இங்கே வந்த பிறகு ஒருமுறைகூட கடலை சென்று பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தாலும் அது தனது நோக்கத்தை பின் வாங்கச் செய்துவிடுமோ என்ற அச்சம் அவனைத் தடுத்துக்கொண்டிருந்தது. இப்போது அறையைவிட்டு கிளம்பும்போதுகூட சபலம் தட்டியது; அப்படியே போய்வந்து விடலாமே என்று.
இரவில் இப்படி தனியாக நடப்பது இதமாக இருந்தது. அதே நேரத்தில் தன் மீதான பட்சாதாபத்தை பெருக்கியது. துயரமான ஒரு உணர்வுக்கு ஆட்பட்டு, அழவேண்டும் போல இருந்தது. யாரோ தனக்கு பின்னாலிருந்து ‘நீ ஒரு முட்டாள்’ என்று சொல்லிக்கொண்டிருப்பது போல ஒரு உணர்வு. இப்படி அவன் மனம் பின்னடைவு கண்டு குழம்பியபடி இருக்கையில்தான் இரண்டு போலீஸ்காரர்கள் ஒரு கடைக்கு முன்னாலிருந்து எழுந்து வந்து இவனை வழிமறித்தார்கள்.
‘இந்த நேரத்தில எங்கே போற?’ என்றான் மிரட்டும் தொனியில் ஒரு போலீஸ்காரன்.
‘சும்மா காலாற நடக்கலாமென்று வந்தேன்’ என்றான் இவன்.
‘இது என்ன உங்க அப்பன் வீட்டுத் தோட்டமுன்னு நினைச்சியா கண்ட நேரத்தில நடந்து பார்க்கிறதுக்கு; ஊர் நிலவரம் என்னன்னு தெரியுமில்லே. பத்து மணிக்கு மேல எவனும் அனாவசியமா ரோட்டுல நடக்கக்கூடாது. சந்தேகப்பட்டா புடிச்சி உள்ள போட்றுவாங்க’
‘எங்க வேல பாக்கிற?’ என்றான் இன்னொரு போலீஸ்காரன்.
‘கம்ப்யூட்டர் சென்டர்ல’
எந்த ஊர் என்று அவர்கள் கேட்காமல் போனது அவனுக்கு ஆறுதலாக இருந்தது.
‘பேசாம வீட்டுக்கு திரும்பிப்போ. உன் நல்லதுக்காகத்தான் சொல்றோம்’ என்றான் மற்றவன்.
‘பத்து ரூபாய் இருந்தா கொடுத்துட்டுப்போ டீ குடிக்கலாம்’ என்றான் அதே மிரட்டும் தொனியில். இவன் பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து கொடுத்துவிட்டு திரும்பி நடந்தான்.
அறைக்கு வந்த பிறகு வெகுநேரம் இந்த சம்பவத்தைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தான். அவர்களுடைய மிரட்டலுக்கு பயந்திருக்கிறோம் என்பது புரிந்தது. எதற்காக பயப்படவேண்டும்? எல்லோருக்கும் பொதுவான இந்த இரவின் அந்தகாரத்தை அனுபவி¢க்க முடியாமல் தடுக்க இவர்கள் யார்? இவர்கள் என்ன பிரபஞ்சத்தின் எஜமானர்களா? ஏன் சகமனிதனை இப்படி விரட்டியடிக்க வேண்டும்? இந்த முகங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் என்ன சம்மந்தம்? ஒரு பறவையோ புழுவோ சாவதுவரை அதுவாகவே வாழ்ந்து மடிகின்றது. மனிதர்கள் என்பதால் எதுஎதுவாகவோ மாறவேண்டியிருக்கிறது. மனிதனுக்கு மட்டுந்தான் நாம் சாகப்போகிறோம் என்பது தெரிந்திருக்கிறது. அதனால்தான் இந்த தப்பித்தல்கள் போலும். இது போன்ற நகரங்கள் அதற்கான வசதிகளைத்தான் செய்து கொடுப்பதாக அவனுக்கு தோன்றியது.‘பின்பு நான் எதற்காக இந்த நகரத்திற்கு வந்திருக்கிறேன்?’ என்று தன்னையே கேட்டுக்கொண்டான். குற்றங்களிலிருந்து வேண்டுமானால் தப்பித்து விடலாம் ஆனால் குற்ற உணர்வுகளிலிருந்து எப்படித்தான் தப்பிப்பது? கொஞ்சம் கொஞ்சமாக அது அவனைக் கொன்றுகொண்டிருக்கிறது.
கீழே உள்ள அறைகளில் யாரோ உரத்து சிரிப்பது கேட்டது. பின்னிரவில்தான் வழக்கமாக அவர்கள் தூங்கப்போகிறார்கள். இந்த சிரிப்பும் கும்மாளமும் அடங்குவதற்குள் நடுஇரவு கடந்துவிடும். இவர்களைக் காணும்போது நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட பிறந்தவர்கள் போலவே அவனுக்குத் தோன்றினார்கள். அவர்களுடைய எல்லா தேவைகளும் இங்கே பூர்த்தியாகி விடுகின்றன; பெண்கள் உட்பட. இங்கு வந்து சேர்ந்த அடுத்த நாள், உணவு கொண்டு வந்த விடுதிப்பையன் கேட்டான், ‘தனியாக இருக்கிறீர்களே ஏதாவது கம்பனி வேண்டுமா சார், ரேட் கம்மிதான்’ என்று. அன்பு, காதல் எல்லாம் ரொம்ப மலிவு இந்த நகரத்தில். பகல் முழுக்க நாகரீக பவிசு காட்டி காசுக்காக அலைந்து விட்டு இரவில் தங்களைத்தாங்களே அவமானப் படுத்திக்கொள்வது போல இருக்கிறது இவர்களுடைய செயல். நேற்று இரவு வருகிற வழியில் குடித்துவிட்டு எவனோ வாந்தியெடுத்து வைத்திருந்தான்.
திரும்பவும் கட்டிலில் சென்று படுத்தான். தூங்குவதற்கான பிரயத்தனங்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. தூங்கிவிட்டால் மட்டும் இந்த பிசாசுகளிடமிருந்து தப்பிக்கவா முடிகிறது; கனவுகளாக உருமாறியல்லவா துரத்துகின்றன. இப்போதெல்லாம் கனவுகள் காணாமல் தூங்கி எழமுடிவதில்லை அவனுக்கு. ஏதேதோ கனவுகள் தோன்றி மனதை அலைகழிக்கின்றன. இங்கு வந்து சேர்ந்த அன்றுதான் இப்படி ஒரு கனவு வந்தது அவனுக்கு. அவனுடைய கணினிமையம் போலத்தான் அது தெரிந்தது. வெளியே அசாதாரண கூச்சல் ஒன்று எழுந்து, நெருங்கி வருகிறது. ஒருவன் கண்ணாடி கதவைத்திறந்து கொண்டு உள்ளே நுழைகிறான். நிஜத்தில் அவனுடைய மையத்தில் கண்ணாடிக்கதவுகள் எதுவும் இல்லை. கையில் உள்ள கத்தியைப் பகட்டாக தூக்கிப்பிடித்தபடி இவனுக்கு எதிரே நெருங்கி வந்து நிற்கிறான். இவனோ தனது அதிர்ச்சியை வெளிகாட்டிக்கொள்ளாமல் வழக்கமான ஒரு வாடிக்கை யாளனிடம் கேட்பது போல கேட்கிறான், சொல்லுங்கள் உங்களுக்கு என்ன வேண்டும்?’ அருகில் வந்து இவனுடைய நீண்ட தலைமுடியை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே நடக்கிறான். ‘நம்பிக்கை துரோகி’ என்று அவன் முணுமுணுப்பதை கேட்கமுடிகிறது. அவனை எங்கோ பார்த்தது போல இருக்கிறது, ஆனால் சரியாக அடையளம் காணமுடியவில்லை. இவனுடைய வாடிக்கையாளர்களில் ஒருவனாக இருக்கலாம் என்று தோன்றியது. உச்சிவெய்யில் நேரம். முன்னால் சாய்ந்தவாக்கில் அவனுடன் நடக்கிறான். மற்ற கடைக்காரர்களும், சாலையில் போவோரும் சாவகாசமாக நின்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவரும் தடுக்க வரவில்லை. போக்கு வரத்து தடைபட்டிருந்தது போலத்தான் தெரிந்தது. இருந்தும் வாகனங்களின் பொறுமையற்ற கூச்சல்கள் காணப்படவில்லை. குழப்பமான ஒரு அமைதியங்கே சூழ்ந்து நிற்கிறது. அந்த இடம் சாலையின் விஸ்தாரமான பகுதியா அல்லது விளையாட்டு மைதானமா தெரியவில்லை. அருகில் ஒன்றிரண்டு மரங்கள் கூட தென்பட்டன. ஏதோ ஊர்வலத்தை வேடிக்கை பார்க்க காத்திருந்தவர்கள் போல உயரமான மாடியிலிருந்து ஆண்களும் பெண்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது தெரிகிறது. அவன் மனைவிகூட அந்த கூட்டத்தில் இரக்கமற்ற பாவத்துடன் நின்றிருக்கிறாள். அவளுக்கு அருகில் தோழி போல மற்றவளும் நின்று கொண்டிருக்கிறாள். இவர்கள் எப்படி சிநேகமானார்கள்? அவர்களிடம் ஏதோ அவன் சொல்ல நினைக்கிறான். சொல்லிவிட்டது போலவும் இருந்தது. சப்தம் வெளிவந்ததாகத் தெரியவில்லை. திணறலை மட்டும் அவனால் உணரமுடிந்தது. ‘நீங்கள் எல்லோரும் என்னை கைவிட்டுவிட்டீர்கள்.’ என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். கூடை பந்து மைதானம் போன்ற ஒரு இடத்தில் அவனை நிறுத்தி வைத்து ஒரு சடங்¢கை நிகழ்த்துவது போல அவன் தலையைத் துண்டிக்கிறான். கழுத்திலிருந்து பீறிட்ட ரத்தம் அந்த வெறிகொண்ட மனிதனை நனைக்கிறது. இவன் உடல் துடித்தபடி கீழே கிடக்கிறது. இப்போது அவனை அடையாளம் கண்டு கொள்கிறான்; அவனுடைய நண்பன்தான் அது. இந்த இடத்தில் கனவு இழை அறுபட்டு விழிப்பு வந்தது. அன்று நீண்ட நேரம் அவனால் தூங்க முடியவில்லை.
மூளைச்செல்கள் சிதறிவிடும் போல இருந்தது. இது பைத்தியம் பிடிப்பதற்கான அறிகுறியோ என்று பயந்தான். பைத்தியமாவதைவிட செத்துப்போகலாம். ஆமாம் தற்கொலைப் பறவை இதோ மறுபடியும் அருகில் வந்து பறக்கிறது. அதை எதிர்கொண்டு அழைப்பதுதான் உத்தமம். உடனே செயல்படுத்திவிட வேண்டும். இந்தக் கனவைப்போல ஆர்ப்பாட்டமாக இல்லாமல் மிக எளிதாக அது நிகழவேண்டும் என்று அவன் விரும்பினான். குளிர்ந்த காலை நேரம்தான் இதற்கு சரியானதாகத்தோன்றியது. பட்சிகளின் சப்தங்களும், கீழே சாலையில் பரபரக்கும் ஜனங்களின் இரைச்சல்களும் கேட்கத்தொடங்குகிறது. காலை சூரியனின் மஞ்சள் கிரணங்கள் அறைக்குள் பிரவேசித்துக்கொண்டிருக்கின்றன. உருகி வழிந்து விடுவது போன்ற பிரகாசத்திலிருக்கும் ஜன்னலின் வழியே அந்த பூனையைப்போல சாலையை நோக்கி தலைகுப்புற விழப்போகிறான். சாவகாசமான மனிதர்களுக்கு மத்தியில் அவன் தலை சிதறி சாகிறான். எல்லாமே ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது. ஒருவேளை இது பார்ப்பவர்களுக்கு வாழ்வில் தோல்வி கண்ட ஒருவனின் இறுதிமுடிவாகவே தோன்றக்கூடும். பார்த்துவிட்டு, முணுமுணுத்தபடி அவர்கள் கடந்து போய்க்கொண்டிருப்பார்கள். சிலர் பயந்து பார்ப்பதைக்கூட தவிர்த்துவிட்டு ஒதுங்கிச்செல்வார்கள். ஒரு வேடிக்கை காட்சியென சிலர் அங்கே நின்றிருப்பார்கள். இது இப்படி அபத்தத்தமாகவும், அலங்கோலமாகவும் முடிவுறாமல் வேறுவிதமாக ஆகுமென்றால், அக்கணத்தில் சப்தங்கள் அடங்கி, பூமியின் மேல் இருள் கவியலாம்… அப்போது எல்லாம் ஒரு ஆகர்ஷணத்தின் இழுவையில் ஒடுங்கி, ஒரு புள்ளியில் குவிந்து, மீண்டும் ஒளியும், சப்தமுமாக விரிந்து… பரிணாமத்தில் பின் நகர்ந்து பூமி சுழன்றுகொண்டிருக்கிறது…மனிதன் உருவாவதற்கு முந்தைய காலத்தில்…
ரயில் ஒன்று நிலையத்தைக் கடந்து செல்லும் ஒலி கேட்கிறது. இந்த வண்டிகள் ஓயாமல் வருவதும் போவதுமாக இருப்பது இரவின் அமைதியில் துல்லியமாக கேட்டுக்கொண்டிருக்கிறது. இன்னும் இரவின் பெரும்பகுதி மிச்சமிருந்தது. தனிமையும், துயரமும், வலியும், அப்ப்பணிப்பும், நிறைந்த நீண்ட அவகாசம்… மனதின் எழுச்சியில் உடல் ஆதாரமில்லாமல் தள்ளாடத் தொடங்கியது. காலை வரை எப்படி அதை காப்பாற்றி வைப்பதென்ற பதட்டம் அவனைப்பற்றிக்கொள்கிறது. அது காமமாக கசிந்ததனால் உடல் அல்லாடத்தொடங்குகிறது. ஒரு பெண்ணின் உடலில் புகுந்து முயங்கவேண்டுமென்ற ஆவேசம் எழுகிறது.
அழைப்பு மணியை அழுத்திவிட்டு விடுதிப்பையனுக்காக காத்திருந்தான். எழுந்து சென்று கதவைத்திறந்து வைத்து வாசலில் நின்றான். மீண்டும் ஒரு முறை அழைப்புமணியை அழுத்தினான். கீழே செல்வதற்கு அவனுக்கு அச்சமாக இருந்தது. நேரம் கழித்துத்தான் பையன் வந்தான். வெளியே போயிருந்தேன் என்றான். காலத்தைக்கடத்த விரும்பாமல் நேரடியாகவே அவனிடம் கேட்டான், ‘ஒரு பொம்பளைய கூட்டிவா’. எந்த சங்கோஜமும் இல்லாமல் இப்படிக் கேட்டது பையனை வியப்படையச்செய்தது. அதிலும் இந்த ஒருவார காலத்தில் இவனைப்பற்றி ஏற்பட்டிருந்த அபிப்பிராயங்களை எல்லாம் சிதறடித்தது இவன் கேட்ட தொனி. பையனின் கைகளை அழுந்த பற்றிக்கொண்டு ‘உடனே வேண்டும்’ என்றான். பையன் அச்சத்துடனேயே பார்த்தான் என்றாலும் நிதானமாவே பதில் சொன்னான், ‘உடனேன்னா எப்படி சார்? சாந்திரம் சொல்லியிருந்தா கூட ஏற்பாடு பண்ணியிருக்கலாம்…’. ‘ காசு எவ்வளவுன்னாலும் பரவாயில்ல’. ‘சார் காசுக்காக இல்ல ஏற்கனவே புக்காயிருக்கும் அதான்’. ‘முயற்சி பண்ணு’. பையன் யோசித்தான். இந்த சந்தர்ப்பத்தை அவன் பயன்படுத்திக்கொள்ள நினைத்தான், ‘வேற ஒருத்தருக்கு புக்கான சரக்கு… நல்லா இருக்கும் காசுகொஞ்சம் கூட ஆகும்…சார், ஒரு மணி நேரத்துக்குன்னா முன்னூறு ரூபாய், இராத்திரி பூரான்னா ஐநூறு…’ இவன் நிதானமில்லாமல் சற்று உரக்கவே சொன்னான், ‘போய் கூட்டிவா’.
பிரகாசமாக எரிந்துகொண்டிருந்த குழல் விளக்கை அணைத்துவிட்டு இரவு விளக்கின் மங்கிய ஒளியில் அவன் பொறுமையற்று காத்திருந்தான். இது நாள்வரை விலைமாதர்களை நாடியதில்லையவன். அதற்கான அவசியமும் நேர்ந்ததில்லை. இன்று மட்டும் ஏன் இப்படி ஒரு விபரீத எண்ணம் எழவேண்டும்? இப்படி தீர்த்துக்கொள்ள கொந்தளித்து அழைத்ததா அவன் காமம்? அவனால் எதையும் நிதானமாக புரிந்துகொள்ள முடியவில்லை. புதிதாக ஒரு பெண்ணை எதிர்கொள்ளப்போகிறோம் என்ற பதட்டமும் அவனிடம் இருந்தது. காதல் என்ற பெயரில் வரக்கூடிய பெண்களை அவனுக்குத் தெரியும். ஆனால் பணத்துக்காக வரக்கூடியவர்களின் உலகம் பெரும் புதிர்போல அவனுக்குமுன் வியாபித்து நின்றது இப்போது. ஏதோ ஒரு துரோகத்தின் சாயயை அவர்கள் சுமந்து திரிவதாக அவன் நினைப்பான். யாருக்கான துரோகம் என்பதை அவனால் யூகிக்க முடிவதில்லை. இப்போது தானும் அதில் பங்கெடுத்துக்கொள்ளப் போவதாகவே அவன் கருதினான்.
கதவைத்தள்ளிக்கொண்டு பையன் வந்தான். அவனுக்குப்பின்னால் அவள் தெரிந்தாள். இரவு விளக்கின் மங்கிய ஒளியில் அவளுடைய உருவத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. முகத்தில் இருள் கவிந்திருந்தது. ‘சரி காலையில வா’ என்றான் இவன். பையன் அங்கிருந்து அகன்றான். அவள் கதவை தாளிட்டுட்டுவிட்டு கட்டிலருகே வந்தாள். அவள் பயந்திருக்க வேண்டும், ‘லைட்ட போடவா’ என்று கேட்டாள். ‘வேண்டாம்’ என்றான். அவனுடைய முகத்தைகாணக்கூட அவள் பிரியப்பட்டிருக்கலாம். கட்டிலில் அவனுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். முதன்முதலாக ஒரு பெண்ணை தொடுவது போல பதட்டத்துடன் அவள் தோல்களைப்பற்றினான். அவள் அவன்மேல் சரிந்தாள். அவன் இறுக அணைத்துக்கொண்டான். அவளுடைய உடலின் இதம் அவனை சற்று நிதானப்படுத்தியது. சிறிதுநேரம் அதேநிலையில் அவளை தன் கைகளுக்குள் வைத்திருந்தான். அவளும் அதைவிரும்பியிருக்க வேண்டும். தனது கைகளை அவனுடைய முதுகில் படரவிட்டு பரிவுடன் அவளும் அவனை தழுவிக்கொண்டாள். அவள் கேட்டாள் ‘ஏன் லைட்டு வேண்டான்னிங்க, என்னப்பார்க்க பயமா இருக்கா?’ அவன் பேசப்பிரியப்படவில்லை. அவளுடைய இரண்டு தொடை களையும் பற்றிஅழுத்தினான். முகத்தை அவளுடைய முலைத் திரட்சியின்மேல் வைத்து மேல்சென்று கழுத்தில் முத்தமிட்டான். அவள் சற்றுவிலகி பின்னைநீக்கி முந்தானையை ரவிக்கையிலிருந்து விடுவித்தாள். இடுப்பை பற்றி முகத்தை மீண்டும் அவள் முலைகளில் வைத்து அழுத்தி அசைத்தான். ‘ஜாக்கட்ட கழட்டிடுறேன்’ என்றாள் அவள். ரவிக்கையையும், பிராவையும் கழட்டிப்போட்டதும் அவளை கட்டிலில் கிடத்தி கீழேயும் அவளை நிர்வாணமாக்கினான். தனது உடைகளை களைந்து எறிந்துவிட்டு பாம்புபோல அவள்மேல் கவிழ்ந்து பரவினான். ‘உறை போட்டுக்கிட்டு செய்யுங்க’ என்றாள் அவள். ‘என்கிட்ட சீக்கு எதுவும் இல்லை’ என்றான்.‘என்கிட்ட இருந்துச்சுன்னா’.‘நாளைக்கு காலைகுள்ள சாகமாட்டேன் இல்ல’. அவனுடைய பதில் அவளுக்கு நிச்சயம் புரிந்திருக்காது. அவள் எதுவும் பேசவில்லை. அவனுடைய ஆவேசமான அழுத்தத்தில் அவள் திணறினாள். அவளுக்குள் நுழைந்து இயங்கினான். தாபத்துடன் அவளுக்குள் புதைந்து மேலெழுந்தான். முழுதாக தனக்குள் அவனை அனுமதித்துவிட்டு நிலம்போல அவள் மலர்ந்து கிடந்தாள். மலையிலிருந்து நழுவி வரும் பாறைபோல கீழ்நோக்கி அவளுக்குள் அவன் சரிந்துகொண்டிருந்தான். அவள் திகைத்தாள். முயக்கத்தின் முடிவில் அவன் சரீரம் உடைந்து திரவமென அவளுக்குள் இறங்கினான். அவள் அவனை இறுக்கி அணைத்து முத்தமிட்டாள். அசையாமல் நீண்டநேரம் அவள் மேல் கிடந்தவன் சரிந்து கீழே படுத்தான். அவன் பக்கம் ஒருக்களித்தவள் அவனுடைய முகத்தை தனது மார்பில் வைத்து அணைத்துக் கொண்டாள். ஒரு குழந்தை போல அவளுடன் அவன் படுத்துக்கிடந்தான். அவள் கேட்டாள், ‘உங்களுக்கு கல்யாண மாயிடுச்சா?’. ‘ஏன்’. ‘இல்ல சும்மாதான் கேட்டேன்’. ‘ஆயிடுச்சி’. ‘அவுங்ககிட்ட இப்படித்தான் செய்விங்களா?’. ‘இப்படித்தான்னா?’. ‘சாமிவந்ததுமாதிரி, மொரட்டுத்தனமா…’. ‘ஏன் பிடிக்கலையா?’. ‘பயமா இருந்திச்சி, சுயநினைப்பு இல்லாம செய்யற மாதிரி… எங்க அப்படியே செத்துபோயிடுவீங்களோன்னு பயந்தேன்’ என்றாள் அவள்.
.
சென்ஷி said,
April 26, 2009 at 10:57 am
மூச்சு முட்ட வைக்கின்ற கதைகள்… முழுதாய் படித்து இன்னமும் முடிக்கவில்லை. தொகுப்பை முழுமையாய் அளித்தமைக்கு நன்றி!
முழுக்க படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்
Prasanna Rajan said,
February 4, 2011 at 9:42 am
கதைகளை இன்னும் முழுதாக படித்துமுடிக்கவில்லை. அதை தொகுப்பாக போட்டதற்கு நன்றி. ‘வனம்’ சிற்றிதழ் இன்னும் வெளிவருகிறதா??
அண்ணா நூற்றாண்டு நிகழ்வு -7 | கலக்கல்ஸ்.காம் said,
March 25, 2017 at 12:47 am
[…] “ மஹா விஜயம்” – இரா.சங்கர். https://gmuruganwritings.wordpress.com/மான்/ ( எட்டாவது கதை: மஹா […]