இருவர்

 

உப தலைப்பு: தமிழினத் தலைவரும், கொடுத்து சிவந்த கரமும்

உள்ளார்ந்த தலைப்பு: சீரழிவின் பிதாமகன்கள்

 

சில நாட்களுக்கு முன் ‘கருணாநிதி சாலையில்’ என்ற தலைப்பில் ஒரு பதிவை போட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக யோசிக்கையில் இன்றைய தமிழகத்தின் சீரழிவுக்கு கருணாநிதிக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதே அளவு பங்கு எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரனுக்கும் இருக்கிறது என்பது புலப்பட்டது. முதலாமவர் தமிழகத்தில் திருடர்களை உருவாக்கினார் என்றால் எம்.ஜி.ஆர்.முட்டாள்களை உருவாக்கியிருக்கிறார்.

என் அப்பா தீவிர திமுக தொண்டர். ஆனால் சிறு வயதிலிருந்தே நான் எம்.ஜி.ஆர். ரசிகனாக மட்டமல்ல வெறியனாக இருந்திருக்கிறேன். என் சட்டையில் பிளாஸ்டிக்கால் ஆன இரட்டை இலையை அணிந்து கொண்டு வாக்கு சேகரித்திருக்கிறேன். தோப்பில் தனித்து இருக்கும் என் வீட்டு சுவரில் அதிமுக போஸ்டர்களை ஒட்டியிருக்கிறேன். எம்.ஜி.ஆர். சாகும் வரை அவர் மீதான இந்த பற்றுதல் என்னிடம் குறையவே இல்லை.

86-க்குப் பிறகு – என் சிந்தனையில் மாற்றம் வந்த பிறகு – அதெல்லாம் எவ்வளவு முட்டாள்தனம் எனத் தோன்றத் தொடங்கியது. ஆனால் இந்த இரு கட்சிகளையும் அதன் தலைவர்களையும், தொண்டர்களையும் அவர்களின் மனப்போக்கையும் புரிந்துகொள்ள இது துணையாக இருந்தது, இருக்கிறது.

இதை திராவிட அரசியல் என்ற வார்த்தையால் குறுக்க தயக்கமாக இருக்கிறது. அதை உருவாக்கிய பெரியாரோ, அண்ணாவோ இவர்களைப் போன்ற பிழைப்புவாதிகள் இல்லை. அது உணர்வுப் பூர்வமானது மட்டுமல்ல அறிவுப்பூர்வமானது. வரலாற்றுக்கு அவசியமானது. இன்றுவரை தமிழகம் தேசிய நீரோட்டத்திலிருந்து தனித்துப் பயணிப்பதற்கு அவர்கள்தான் காரணம். உயர் ஜாதி மேலாண்மையை முன்னிருத்தும் இந்து மத அடிப்படை வாதத்தை ஆதாரமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். வழி வந்த பாஜகவுக்கு  இடம் கொடுக்காமல் இருப்பதற்கு அவர்கள் உருவாக்கிய அடித்தளம்தான் காரணம். தமிழகர்களின் மனதில் இந்த உணர்வு இன்றும் நிலைத்து நிற்பது அவர்களால்தானே அல்லாது அதற்குப் பின் வந்த கருணாநிதியோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதா காரணம் அல்ல. அந்த அடிப்படை உணர்வை சிதைத்து இவர்கள் நடத்திய அரசியல் நாடகத்துக்குப் பிறகும் அந்த அடித்தளம் உறுதியாக இருப்பதாகவே நம்புகிறேன்.

சனிக்கிழமை சட்டப்பேரவையில் நடந்த கூத்து தெளிவாக ஒன்றை புலப்படத்தியிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகிற இவர்கள் எவ்வளவு கீழ்த்தரமானவர்களாக உருவாகி வந்திருக்கிறார்கள் என்பதுதான் அது. அதிமுக, திமுக உறுப்பினர்கள் அனைவருமே இதில் சமமானவர்கள்தான்.

மன்னார்குடி கும்பலின் பிரதிநிதியான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்று தமிழக மக்கள் எல்லோருமே விரும்பினார்கள் என்றாலும் திமுக அதை சட்டப்பேரவையில் முன்னெடுத்தாலும் அவர்கள் நோக்கம் வேறு என்பது மட்டுமே உண்மை. திமுக உறுப்பினர் சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்தது ஏதோ அத்துமீறல் சம்பவம் என்று தோன்றினாலும் தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கான வாய்ப்பு சமீபித்துவிட்ட நிலையில் அது விலகிப்போகிறதே என்ற ஆத்திரமும் ஒரு காரணம். சட்டப்பேரவையில் ஜெயலலிதா நடத்தியது போன்ற ஒரு நாடகத்தைதான் ஸ்டாலினும் நிகழ்த்தியிருக்கிறார் என்பது வெளிப்படை.

ஆட்சி நிர்வாகம் என்று வரும்போது அதிமுகவைவிட திமுக நம்பிக்கை தட்டுகிறது என்றாலும் அக்கட்சியின் அடிமட்டம் வரை அவர்கள் நிகழ்த்தும் அட்டூழியம் தமிழகம் அறிந்துதான். ஊழலை சகஜமாக்கியது அவர்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதே போல சுயமரியாதை இல்லாத, தனித்திறன் இல்லாத, மக்குப் பேர்வழிகளை எம்எல்ஏக்களாக்கி ஒரு அடிமை மனப்பாண்மையை உருவாக்கியதில் எம்ஜிஆரின் பங்கு மிக முக்கியமானது. இரட்டை இலையில் ஒரு கழுதையை நிற்க வைத்தாலும் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தை உருவாக்கியவர் அவர்தான். அதன் தொடர்ச்சியால் விளைந்தவர்கள்தான் இன்றைய அதிமுக எம்எல்ஏக்கள்.

மக்களின் மனப்போக்குக்கு எதிராக பதவிக்காக, பணத்துக்காக, சுகபோகத்துக்காக மக்கள் விரோதிகளாகப் போய் ஒரு விடுதியில் அடைந்துகிடக்கிறார்கள் என்றால் இந்த கேவலத்துக்கு வழி வகுத்தவர் எம்ஜிஆர்தான். அதை ஜெயலலிதாவும், அதற்கு பின் சசிகலா கும்பலும் இதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

பணத்தைக் கொண்டும், காவல் துறையைக் கொண்டும் அப்பல்லோ மர்ம நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி விட்டத் தெம்பின் தொடர்ச்சிதான் கோல்டன் பே ரிசார்ட் நாடகம் மற்றும் சட்டப்பேரவை நிகழ்வுகள். தொலைக்காட்சிகளுக்கோ பத்திரிகைகளுக்கோ அனுமதி மறுக்கப்பட்ட போது ஜெயா டீவி மட்டும் எப்படி உள்ளே நுழைகிறது? அது என்ன அவர்கள் கட்சி அலுவலகமா போயாஸ் கார்டனா? எவ்வளவு துணிவுடன் அதை அவர்கள் செய்கிறார்கள்! எவ்வளவு காவலர்கள் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறார்கள். அப்பல்லோவுக்கு முன்னும், ரிசார்ட்டுக்கு முன்னும் நின்ற காவல் துறைதான் சட்டப்பேரவையிலும் நிற்கிறது. அது அந்த கும்பலின் ஏவல் துறை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தீர்ப்பு தனக்கு எதிராக வரும் என்று தெரிந்தும் இடைப்பட்ட அந்த நான்கைந்து நாட்களில் தான் முதல்வர் பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என சசிகலா துடிக்கிறார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டால் பிறகு பத்து ஆண்டுகளுக்கு அது தள்ளிப்போகும். சாதாரண ஒரு பிரஜையாக சிறைக்கு சென்றால் அங்கு வசதி வாய்ப்பு குறையும், முதல்வராக இருந்துவிட்டு சென்றால் அதற்குரிய சலுகைகள் கிடைக்கும். சசிகலாவைத் தவிர்த்து அந்த குடும்பத்தில் யாரும் உடனே முதல்வராவதற்கான இடம் இல்லை. அதனால் இந்த நான்கைந்து நாட்களில் கட்சி தனதுதான் என்பதை உறுதிப்படுத்திவிட்டுச் செல்ல வேண்டும். இப்படி எத்தனையோ கணக்குகள் அதற்கு பின்னால் இருக்கிறது. அந்த கோபம்தான் ஜெயலலிதா சமாதிக்கு முன் அவரிடம் வெளிப்பட்டது. தெரிந்தோ தெரியாமலோ ஆளுநர் அந்த வாய்ப்பை அவருக்கு தராமல் போய்விட்டார்.

தாங்கள் அனுப்பிய பிரதிநிதிகள்தான் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்று தெரிந்தும் மக்கள் ஏன் அவர்கள் ஆட்சியை ஏற்கத் தயங்குகிறார்கள்? ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் நடத்தக் கோருகிறார்கள்?

உண்மையில் இந்த எம்எல்ஏக்கள் யார் என்றே மக்களுக்குத் தெரியாது, அவர்கள் வாக்களித்தது இவர்களுக்கல்ல. எம்ஜிஆருக்காக, இரட்டை இலைக்காக, ஜெயலலிதாவுக்காக. அந்த இடத்தை ஒரு கொள்ளை கும்பல் வந்து நிரப்புவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த விளையாட்டில் தாங்கள் முட்டாளாக்கப் படுகிறோம் என்பதுதான் மக்களின் கோபத்துக்குக் காரணம். முட்டாளாக்கியது இவர்கள் அல்ல எம்ஜிஆர்தான். அவர் தன்னை சுற்றி உருவாக்கிய பிம்பம்தான். தியாகத்தின் திருஉருவமாக, வள்ளலாக, தூய்மையானவராக, ஏழைகளின் தோழனாக திரையில் உருவாக்கிக்காட்டிய காட்சிகள்தான் அவர் மீதான இந்த மோகத்துக்குக் காரணம். இதையெல்லாம் மக்கள் நம்புகிறார்கள் என்று தெரிந்துவிட்டதால் அந்த நாடகத்தை அவர் நடத்தினார். அதில் வெற்றியும் பெற்றார். அந்த முட்டாள்தானம்தான் தமிழ அரசியலை இந்த சீரழிந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது.

 

Leave a comment