டான் குயிக்ஸாட்

%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-1

டால்ஸ்டாயின் போரும் வாழ்வும், தாஸ்தாவஸ்கியின் கரமச்சோவ் சகோதரர்கள் எல்லாம் படிக்கும் போது 100 ஆண்டுகளுக்கு முன்பே இது போல எழுதியிருக்கிறார்களே என வியந்ததுண்டு. அதே போல பால்ஸாக்கின் கதைகளை வாசித்த போது 200 ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு நுட்பமாகவும் உளவியல் தன்மையுடனும் எழுதியிருக்கிருக்கிறாரே என ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மிகுவல் டீ செர்வான்டீஸின் டான் குயிக்ஸாட் நாவலின் முதல் பகுதி 1605- திலும் இரண்டாம் பகுதி 1615-திலும் வெளிவந்திருக்கிறது. இதெல்லம் நடந்தது 400 ஆண்டுகளுக்கு முன். அதுவும் அந்தக் காலத்திலேயே ஒரு நவீன செவ்வியல் நாவல். பெரிய வியப்பு இது.

கதைக் களமும், சதா அதில் இழையோடும் நகைச்சுவையும், காதலும், மர்மமும், சாகசமும், இலக்கியம், தத்துவம், அரசமைப்பு, சட்டங்கள் குறித்த ஆழ்ந்த புரிதல் இதெல்லாம் நம்மை வியக்க வைக்கிறது. முக்கியமாக அதன் நவீன கதை சொல்லல் முறைதான் நம்மை வசீகரித்துவிடுகிறது.

பரிதாபத் தோற்றம் கொண்ட, மத்திய வயதைக் கடந்த, வீரசாகசக் கதைகளைப் படித்து அரைக்கிறுக்கனாக மாறிப்போன டீ லா மன்ச்சாவின் டான் குயிக்ஸாட்டும், அவன் உதவியாளனும், சதா பழமொழிகளை உதிர்க்கும் குடும்பந்தஸ்தனுமான சான்க்கோ பான்ஸாவும் வீரச் செயல்கள் புரிய மேய்ச்சல் வெளியில் பயணிக்கிறார்கள்.

முதல் பயணம் (முதல் பகுதி) முடிந்து இரண்டாம் பயணம் தொடங்கும் போது சிட் ஹேமட்டி பெனென்கெலி என்பவர் அரபு மொழியில் எழுதிய டான் குயிக்ஸாட்டின் வரலாறு ஸ்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளி வந்துவிடுகிறது. அதே போல இரண்டாவது பயணம் முடிவதற்குள்ளாகவே டான் குயிக்ஸாட் வரலாற்றின் இரண்டாம் பகுதி டார்டிசில்லாஸ் என்வரால் எழுதப்பட்டு வெளி வந்துவிடுகிறது. மேலும் அந்த வரலாற்றில் டான் குயிக்ஸாட்டைப் பற்றியும் சான்க்கோ பான்ஸா பற்றியும் தவறாக எழுதப்பட்டுள்ளது. இதனால் மன வருத்தம் அடைகிறான் டான் குயிக்ஸாட். அதனால் அதில் எழுதப்பட்டுள்ளது போல சார்க்கோஸா நகருக்குச் செல்லாமல் அதை பொய்யாக்கும் விதமாக பார்ஸிலோனாவுக்கு செல்கிறான். மேலும் அந்த வரலாற்றில் சொல்லப்படும் பாத்திரத்தைக் கொண்டு அது வேறு டான் குயிக்ஸாட் என அறிவிக்கச் சொல்கிறான்.

நாவலின் முதல் பகுதி குறித்த விமர்சனம், அதில் உள்ள குறைகள் இரண்டாம் பகுதியில் சுட்டிக்காட்டப்படுகிறது. இது செர்வான்டிஸ் எழுதிய நாவலாக இல்லாமல் டான் குயிக்ஸாட் என்கிற நிஜ பாத்திரத்தைப் பற்றி பெனென்கெலி எழுதிய வரலாற்றின் மொழி பெயர்ப்பு நூலாகவே நாவல் முழுவதும் குறிப்பிடப்படுகிறது.

டான் குயிக்ஸாட் என்ற பிரதானப் பாத்திரம் ஒரு பைத்தியக்காரனைப் சித்திரிக்கப்பட்டிருந்தாலும் அவன் கடைபிடிக்கும் ஒழுக்கம் நேர்மை அவனிடம் வெளிப்படும் அற உணர்வு, இறுதியான அவன் மரணம் அவனை ஒரு காவியப் பாத்திரமாக்கிவிடுகிறது. அதற்கு ஈடானதுதான் சான்க்கோ பான்ஸாவின் பாத்திரமும். அவன் ஒரு பெருந்தீனிக்காரன், பொய்யன், கோழை என்றாலும் அவனை நுட்பமான அறிவு கொண்டவனாக, மற்றவர்களை மகிழ்விக்கும் கோமாளியாக படைத்திருக்கும் விதம் டான் குயிக்ஸாட்டு இணையான காவியப் பாத்திரமாக மாற்றிவிடுகிறது. ஒரு நீண்ட நாடகத்தின் ஒரு பகுதியாக ஒரு தீவின் ஆளுநராக அவன் நியமிக்கப்பட்டவுடன் அவனது பாத்திரம் மேன்மை கொண்டுவிடுகிறது.

cervantes-03

இது வாசகர்களுக்கான நாவலாக மட்டும் இல்லாமல் எழுத்தாளர்களுக்கான நாவலாக இருப்பதுதான் சிறப்பு. மனப்பூர்வமாக சொல்வதென்றால் தமிழில் மட்டுமல்ல உலக இலக்கியங்களிலேயே இதற்கு ஈடான ஒரு நாவல் இன்னும் எழுதப்படவில்லை என்றே சொல்லலாம். தமிழ் நாவல் இலக்கியம் தொடங்கி 100 ஆண்டுகளை கடந்தும் டான் குயிக்ஸாட்டை ஒப்பிடும் போதும் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகவேத் தோன்றுகிறது. காரணம் இது போன்ற நாவல்களைப் படைக்க உலகு தழுவியப் பார்வை, பரந்துபட்ட அறிவு, செவ்வியல் மற்றும் நவீன காலப் படைப்புகளை ஆழ்ந்து கற்றல், பாரபட்சமற்ற ஒரு விமர்சனப் பார்வை, ஹாஸ்ய உணர்வு, உளவியல் அறிவு, கருணை மனம், அற உணர்வு, பல்மொழிப் புலமை, கற்பனை வளம், சமூக அவலங்கள் மீதான கோபம், அரசும், சட்டமும், மதங்களும் தனிமனிதன் மீது செலுத்தும் ஆதிக்கம் பற்றிய புரிதல், அதன் அபத்த செயல்பாடுகளை சுட்டிக்காட்டும் துணிச்சல் என பல தகுதிகள் உள்ள படைப்பாளியால் மட்டுமே இது சாத்தியம்.

இதை தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ள சிவ.முருகேசன், நேர்த்தியாக வெளியிட்டுள்ள சந்தியா பதிப்பகத்தாரை அவசியம் பாராட்டியாக வேண்டும். முதல் பகுதி 552 பக்கம், இரண்டாம் பகுதி 656 பக்கம். மொத்த விலை 850 ரூபாய்.