ஆந்த்ரே தார்க்கோவஸ்கியின் ‘இவானின் குழந்தைப் பருவம்’

Ivan01

 

ஜீ. முருகன்

 

இவானின் குழந்தைப் பருவம் படத்தோடு தார்க்கோவஸ்கியின் முதல் சினிமா பருவம் நிறை வடைகிறது. திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவு படித்தபோது அவர் சில குறும்படங்களை இயக்கி யிருக்கிறார் அதில் தி கில்லர், ஸ்ட்ரீம் ரோலர் அன்ட் வயலின் குறிப்பிடக்கூடியவை. ‘தி கில்லர்’ குறும் படம் ஹெமிங்வேயின் சிறுகதையை அடிப்படை யாகக் கொண்டு எடுக்கப்பட்டது. தனது சக மாணவர் அலேக்ஸாண்டர் கார்டனோடு சேர்ந்து இதை இயக்கியிருக்கிறார்.

அவருடைய முதல் முழுநீளப் படம் இவானின் குழந்தைப் பருவம். இது போகோமோலவ்வின் ‘இவான்’ சிறுகதையின் திரையாக்கம். இதற்கான காரணத்தை தார்க்கோவஸ்கி (காலத்தைச் செதுக்குதல் புத்தகத்தில்) கூறும்போது, இரண்டு ஆபத்தான காரியங்களுக்கு இடையிலான சம்பவங்களின் தொகுப்பாக அது இருந்தது. மேலும்  சினிமாவுக்கு மிகவும் ஏற்ற வடிவத்தைக் கொண்டிருந்தது என்கிறார்.

இப்படம் அவருக்கு இறுதித் தேர்வு. திரைப்படக் கல்லூரி மாணவனாக இருந்த அவர் சிறந்த இயக்குநராகப் பரிணாமம் பெற்றதற்கான அத்தாட்சி. இப்படத்தை இயக்கியபோது, தான் செல்லப்போகும் பாதை எது என்றோ, ஒரு கலைஞனாக தான் உணர்த்தப்போவது என்ன என்றோ அவருக்குத் தெளிவில்லாமல் இருந்தது. அதனால்தான் தெளிவான, எல்லாரும் நன்கு அறிந்த ஒரு கதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். இப்போது அவருடைய பணி அதை அழகியலோடும் பொறுப்போடும் வெளிப்படுத்துவது தான். தனது பார்வையின் வழியே அதை மேலும் மெருகூட்டுகிறார். குழந்தைப் பருவ ஞாபகங்களால் தூண்டப்படும் கனவுகளின் கவிதையை இணைக்கிறார்.

இரண்டாம் உலக யுத்தம் நிறைவடையும் தருணம். ரஷ்யப் படை களுக்கும் ஜெர்மன் படைகளுக்கும் போர் உச்சத்தை எட்டியுள்ளது. ரஷ்யாவின் முன்னணிப் படையில் சேர்ந்து பணிபுரிகிறான் பனி ரெண்டு வயதேயான இவான். ஆற்றைக் கடந்து ஜெர்மன் நிலை களுக்குள் புகுந்து வேவு பார்த்துவிட்டுத் திரும்புகிறான். இது அவனுக்கு ராணுவ அதிகாரிகளுக்கு மத்தியில் பெரும் மதிப்பைப் பெற்றுத்தருகிறது. அவனை ஒரு செல்லப்பிள்ளைப் போல அவர்கள் பாவிக்கின்றனர். அவன் மீதுள்ள அக்கறையில், போரின் அழிவி லிருந்து அவனைக் காக்க ராணுவப் பள்ளிக்கு அனுப்ப விரும்பு கிறார் கர்னல். ஆனால் அவன் பிடிவாதமாக மறுத்துவிடுகிறான். அவனுடைய விருப்பமெல்லாம் முன்னணிப் படையில் போரிட்டு ஜெர்மானியர்களைப் பழிவாங்க வேண்டும் என்பதுதான்.

அவன் விருப்பத்தை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். திரும்பவும் இரண்டாம் திட்டத்தில் பங்கேற்கிறான். அப்படிப் போகும் அவன் காணாமல் போகிறான். பெர்லினை ரஷ்யப் படைகள் கைப்பற்றிவிடுகின்றன. குடும்பத்தை விஷம் வைத்துக் கொன்றுவிட்டு இட்லர் தற்கொலை செய்துகொள்கிறான். பின்னர் கைப்பற்றப்படும் ஆவணத்தில் இவானின் படத்துடன் அவனைத் தூக்கிலிட்டதற்கான குறிப்பு கிடைக்கிறது.

குயிலின் குரலைக்கேட்டு அதைத் தேடிச் செல்கிறான் இவான். தோட்டத்தில் மரம், செடி, கொடிகளைத் தாண்டி மேலே மேலே எனச் செல்கிறான். இடையில் ஓர் ஆடு முகம் காட்டுகிறது. பிறகு மெல்லத் தாழ்ந்து வருகிறான். வேர்களால் பின்னப்பட்ட ஒரு சுவர். தொலைவில் தண்ணீர் முகர்ந்து செல்லும் அவன் தாய். அவளை நோக்கி ஓடுகிறான். வாளியில் உள்ள தண்ணீரைக் குனிந்து குடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் சொல்கிறான் “அங்கே ஒரு குயில் கூவிக்கொண்டிருக்கிறது” அப்போது ஒரு வெடிச்சத்தம். திடுக்கிட்டு விழிக்கிறான்.

அவனுக்கு ஆற்றைக் கடந்து உளவு பார்க்கும் பணி காத்திருக் கிறது. அவசரமாக எழுந்து ஓடுகிறான். ஜெர்மன் படைகளின் கடும் பாதுகாப்புக்குள் இருக்கும் அந்த ஆற்றை அவன் கடந்து போகிறான். எறி குண்டுகளும் தோட்டாக்களும் அவ்வப்போது அந்த ஆற்றைப் பதம் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. பீரங்கிகள் ஆங்காங்கே தாக்கக் காத்திருக்கின்றன.

இவான் இழந்துவிட்ட அற்புத வாழ்க்கையும் இப்போது அவன் வாழ்ந்துகொண்டிருக்கும் இரக்கமற்ற, கொடூரங்கள் நிறைந்த போர்ச் சூழலையும் ஆரம்பத்திலேயே உணர்த்திவிடுகிறார் ஆந்த்ரேய்.

போர் முனையில் தந்தையை இழந்துவிடுகிறான் இவான். ஜெர்மன் படைகளின் அட்டூழியத்துக்குத் தாயும், சகோதரியும் பலியாகிவிடுகின்றனர். இதற்குப் பழிவாங்கும் எண்ணம் ஒன்றே அந்தச் சிறுவன் மனத்தை ஆக்கிரமித்துள்ளது. கோபம் அவனுக்குள் சதா கணமும் பொங்கிப் பிரவகித்துக்கொண்டிருக்கிறது. சிரிப்பும் மகிழ்ச்சியுமாக இருந்த அவன் இப்போது எரிச்சலுக்கும் கோபத்துக் கும் அழுகைக்கும் திடுக்கிடும் கனவுகளுக்கும் இறையாகிக் கிடக்கிறான். இவையே அவனுக்கு வயதுக்கு மீறிய முதிர்ச்சியையும் பொறுப்புணர்வையும் அளித்துவிடுகிறது.

ஆற்றைக் கடந்து வரும் அவனைப் படை வீரன் ஒருவன் முதலுதவி மையத்துக்கு அழைத்து வருகிறான். அதன் பொறுப் பாளனான கால்சேவுக்கு அந்தச் சிறுவன் யாரென்று தெரியவில்லை. “எங்கிருந்து வருகிறாய்?” எனக் கேட்கிறான்.

அதற்கு இவான் “என் பெயர் பன்ந்திரேவ். தலைமை நிலை யத்தைத் தொடர்புகொண்டு பிரிவு 51இல் நான் இங்கிருப்பதாகச் சொல்” என்கிறான்.

கால்சேவ் குழப்பம் அடைகிறான். சேரும் சகதியுமாக உள்ள உடைகளைக் கழற்றச் சொல்கிறான். அவன் முதுகெல்லாம் கீறல்கள்.

“இதெல்லாம் என்ன?” எனக் கேட்கிறான் கால்சேவ்.

இதனால் கோபமடையும் இவான் “தேவையில்லாத கேள்வி களைக் கேட்டுக்கொண்டிருக்காதே. தலைமையகத்தைத் தொடர்பு கொண்டு நான் இங்கிருப்பதாகச் சொல். என்ன செய்ய வேண்டு மென்று அவர்களுக்குத் தெரியும்.”

“எனக்கு நீ உத்தரவு போடாதே. நீ யாரென்று சொல்லும் வரை உன்னைப் பற்றி நான் அவர்களுக்குச் சொல்லப் போவதில்லை.”

“நான் ஆற்றைக் கடந்து வருகிறேன்.”

“அதற்கு என்ன அத்தாட்சி?”

“என்னிடம் கேள்வி கேட்பதை நிறுத்து. இல்லையென்றால் இதெற்கெல்லாம் நீ பதில் சொல்ல வேண்டிவரும்.”

அதன் பிறகு கால்சேவ் தலைமையகத்தைத் தொடர்புகொண்டு அந்தச் சிறுவன் குறித்து தெரிவிக்கிறான். ஆனால் அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு அவனை அங்கேயே பிடித்து வைத்திருக்க உத்தரவிடுகிறார்கள்.

இதனால் எரிச்சலடையும் இவான், “நீ பிரிவு 51ஐத் தொடர்பு கொண்டாயா இல்லையா? நானே பேசிக்கொள்கிறேன்” ஒலி வாங்கியை எடுக்க முயல்கிறான். அதற்குச் சம்மதிக்காத கால்சேவ் “சரி தலைமையகத்தில் யாரிடம் பேச வேண்டும்?” எனக் கேட்கிறான்.

அதற்கு இவான் “கேப்டன் கோலின், கர்னல் கிரஸ்னேவ். கர்னலிடம் சொல். நான் இங்கே இருக்கிறேன் என்று. இல்லை என்றால் நானே பேசிக்கொள்கிறேன்.”

பிறகு கால்சேவ் கர்னலைத் தொடர்புகொண்டு பந்த்ரேவ் இங்கே இருப்பதாகச் சொல்கிறான்.

வியப்பும் மகிழ்ச்சியும் அடையும் கர்னல் “தனியாகவா வந்திருக் கிறான். அவனிடம் எதையும் விவாதித்துக்கொண்டிருக்காதே. கோலின் விரைவில் அங்கு வருவார். அதுவரைக்கும் அவனிடம் பக்குவமாக நடந்துகொள். அவனுக்கு வேண்டியதைச் செய்து கொடு. அவன் அதிகக் கோபக்காரன். முதலில் அவனிடம் ஒரு பேப்பரையும் பென்சிலையும் கொடு. அவன் என்ன எழுதித் தருகிறானோ அதை உடனே எனக்கு அனுப்பிவை. புரிகிறதா?”

பிறகுதான் கால்சேவ் இவானின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்கிறான். அவனைக் குளிக்கவைத்து உணவு தருகிறான். அசதி யில் உணவு மேஜையிலேயே தூங்கிவிடும் அவனைத் தூக்கிக் கொண்டு போய்ப் படுக்கையில் கிடத்திப் போர்த்திவிடுகிறான்.

அங்கு வரும் கேப்டன் கோலின் இவானைப் பார்த்ததும் ஓடிவந்து இடுப்பில் தூக்கிவைத்துக்கொள்கிறான். இவானும் அவனை அணைத்துக்கொள்கிறான்.

ராணுவப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்போவதாகக் கோலினி டமிருந்து தெரிந்துகொள்ளும் இவான், கோபத்துடன் ஓடிவந்து கர்னலின் சட்டையைப் பிடித்துக்கொண்டு “எதற்காக என்னை ராணுவப் பள்ளிக்கு அனுப்பப் போகிறீர்கள்? அப்படி அனுப்பினால் நான் அங்கிருந்து ஓடிவிடுவேன்” எனக் கோபத்துடன் சொல்கிறான்.

அவர் சொல்கிறார் “போர் உனக்காக நடக்கவில்லை.”

அதற்கு இவான் சொல்கிறான் “லக்காவ், மோரோஸ் இரண்டு பேரும் பெரியவர்களாக இருந்ததால்தான் கொல்லப்பட்டார்கள். என்னால் எங்கே வேண்டுமானாலும் போக முடியும். நான் தனி ஆள். எனக்கென்று யாரும் இல்லை.”

“எல்லாம் முடிவாகிவிட்டது. சொன்னதுபோல நடக்கவில்லை என்றால் தண்டனைதான் கிடைக்கும்.”

“நீங்கள் யார் முடிவுசெய்வதற்கு? நீங்கள் என்ன என்னுடைய அப்பாவா? எனக்கு நான்தான் பாஸ்.”

“நீதான் பாஸா? நீதான் எனக்குப் பிரச்சினை..”

இந்த அளவுக்கு இவானுக்குரிய முக்கியத்துவம் அங்கே பெருகிக் கிடக்கிறது.

கால்சேவ் கோலினிடம் கேட்கிறான் “போர் முடிந்ததும் அந்தச் சிறுவன் என்ன செய்வான்?”

அதற்குக் கோலின் “போர் முடிந்த பிறகு, கர்னல் அல்லது கட்டா சோனச் யாராவது அவனைத் தத்தெடுத்துக்கொள்வார்கள்” என்கிறான். கட்டாசோனச் இன்ஸ்பெக்டர். அந்தக் கிழவனுக்கும் இவான் மீது பிரியம் அதிகம்.

கால்சேவ், முதலில் கடுமையானவன்போலத் தோன்றினாலும் அவனுக்குள் காதலுக்காகவும் கலைக்காகவும் ஏங்கும் மனம் ஒன்று இருக்கிறது. மருத்துவ உதவியாளாக இருக்கும் மாசாவிடம் அவனுக் குள்ள காதலை வெளிப்படுத்த முடியாமல் அவளிடம் அளவுக்கு அதிகமாகக் கடுமையாக நடந்துகொள்கிறான். கேப்டன் கோலின் அந்த இடைவெளியில் நுழைந்து மாசாவைத் தன்வசப்படுத்தி விடுகிறான்.

பீர்ச் மரங்களுக்கிடையே கோலினுக்கும் மாசாவுக்கும் நடக்கும் உரையாடல், கால்வாயைக் கடக்கும்போது அவன் அணைத்து அளிக்கும் முத்தம் எல்லாம் போர்ச் சூழலிலிருந்து அவர்கள் தங்களுக்குள் புதைந்துகிடக்கும் மனித உணர்வுகளை மீட்டெடுக் கும் எத்தனம்தான்.

கோலினின் அழைப்பால் வசீகரிக்கப்பட்டு அவனை அணைத்துக்கொள்ள வரும் மாசாவை, ‘போதும் இங்கிருந்து கிளம்பு’ என அனுப்பி வைத்துவிடுகிறான் கோலின். இதுதான் எல்லை. இங்கு இதற்கு மேல் அனுமதி இல்லை என்பதை உணர்த்திவிடுகிறான்.

பீர்ச் மரங்களுக்கிடையிலான இந்தக் காதல் காட்சி, பாலே நடனம் போல அசைவுகள் கொண்டது. நீளநீளமான வெண் மரங்களுக்கிடையே அசையும் தாபம் நிறைந்த கோலின், மாசா, அவர்களுடையேயான இடைவெளி குறுகி, நீண்டு அலைவுறுகிறது. அவர்களுடைய உரையாடல் கச்சிதமாக இருக்கிறது.

கோலின் கேட்கிறான் “நீ உக்ரைனிலிருந்துதானே வருகிறாய்?”

“எதற்காகக் கேட்கிறீர்கள்?”

“நீ அழகாகவும் அழுத்தமானவளாகவும் இருக்கிறாய்.”

“இல்லை, எங்கள் ஊருக்கு மாஸ்கோவிலிருந்து ரயிலில் 20 நிமிடத்தில் சென்றுவிடலாம்…”

“எங்கள் நகரத்திலிருந்து சைபீரியாவுக்கு 200 மைல். ஓவியன் சுரிகோவ் எங்கள் நகரத்தைச் சேர்ந்தவன்தான். அவனைத் தெரியுமா?”

“எங்கள் ஊருக்கு அருகிலும் நிறைய எழுத்தாளர்கள் இருக்கி றார்கள். ஒருமுறை மரங்களுக்கிடையே நடந்துவரும்போது லியோ டால்ஸ்டாயைப் பார்த்தேன். அவர் ரொம்ப உயரம். சாம்பல் நிற முடி. நாங்கள் மரங்களுக்கிடையே நடந்துபோனோம்.”

இக்காட்சி போர்ச் சூழலுக்கு முரணான, அமைதியான, காதல் நிறைந்த ஒரு வாழ்க்கையை ஞாபகமூட்டுகிறது.

ஆந்த்ரேயின் வேறு எந்தத் திரைப்படத்திலும் இல்லாத காதல் காட்சி இது. காரணம் அவருடைய இந்தத் திரைப்படத்தில் மட்டுந் தான் யதார்த்தமான மனிதர்களை நாம் பார்க்கிறோம். நிஜமான ஒரு வாழ்க்கையைச் சந்திக்கிறோம். ஆந்த்ரேயின் மற்றத் திரைப் படங்கள் எல்லாம் அதீத துயர நாடகம். அங்கே யதார்த்தத்துக்கு இடமில்லை.

இந்தத் திரைப்படத்தில் வரும் முதல் கனவைப் போலவே இன்னும் இரண்டு கனவுக்காட்சிகள் இடம்பெறுகின்றன. உளவு பார்த்துவிட்டுச் சோர்ந்து படுத்திருக்கும் இவானுக்கு மிக அருகில், கூரையிலிருந்து கசியும் நீர் சொட்டிக்கொண்டிருக்கிறது. அந்தச் சப்தம் அவன் பிரக்ஞையில் ஊடுருவிக் கிணறாக மாறுகிறது. அவனும் அவன் தாயும் கிணற்று நீரைப் பார்த்தபடி நட்சத்திரங்களைப் பற்றி உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். சட்டென்று அவன் கிணற்றுக்கடி யில் உட்கார்ந்து நீரில் தெரியும் சூரியனைப் பிடிக்க முயல்கிறான். அப்போது தண்ணீர் இறைத்துக்கொண்டிருக்கும் வாளி அவன் அம்மாவின் கை நழுவி அவனை நோக்கி வருகிறது. அவன் ‘அம்மா..’ என்று அலறிக் கத்துகிறான். கிணற்றிலிருந்து மேலே வந்து தெறிக்கும் நீர், கீழே கிணற்றடியில் இறந்துகிடக்கும் அவன் அம்மாவின் உடலை நனைக்கிறது. இவான் திடுக்கிட்டு விழித்துக் கொள்கிறான்.

இன்னொரு கனவு, அவனும் அவன் சகோதரியும் ஆப்பிள் ஏற்றிச் செல்லும் லாரியின் மேல் பயணிக்கின்றனர். ஏராளமான ஆப்பிள்கள் லாரியில் நிரம்பியிருக்கின்றன. அதில் சிறந்த ஆப்பிள்களைத் தேர்ந்தெடுத்து அவன் சகோதரியிடம் தர, அவள் எல்லாவற்றையும் வேண்டாமென்று மறுத்துவிடுகிறாள். லாரி சட்டென்று ஓர் ஏரிக்குள் செல்கிறது. ஆப்பிள்கள் கரையில் சரிந்துவிழுகின்றன. அவற்றை அங்கே மேய்ந்துகொண்டிருக்கும் குதிரைகள் உண்ணத் தொடங்கு கின்றன. இக்காட்சி சர்வடர் டாலியின் சர்ரியலிஸ ஓவியங்களை ஞாபகமூட்டுகிறது. குதிரை என்ற படிமம் ஆந்த்ரேயின் ஆந்த்ரே ரூப்ளே, சோலாரிஸ் படங்களிலும் தொடர்ந்து இடம்பெறுகிறது. குதிரை, கம்பீரமும் வலிமையும் ஆச்சர்யமும் ரகசியமும் கொண்ட இயற்கையின் உன்னதக் குறியீடாக மாறுகிறது.

ராணுவப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுவிடுவோம் என அஞ்சும் இவான் சொல்லாமல் கிளம்பிவிடுகிறான். எல்லோரும் அவனைத் தேடிக்கொண்டிருக்கிருக்கின்றனர்.

வழியில், போரில் தன் மனைவியையும் வீட்டையும் இழந்த கிழவன் ஒருவனை, அந்தச் சிதிலங்களுக்கிடையே சந்திக்கிறான் இவான். வெடிகுண்டால் சிதைந்து போயிருக்கும் அந்த வீட்டின் மரச்சட்டங்கள் கத்தி போல நீட்டி இவானை வரவேற்கின்றன.

கிழவனுக்கு அங்கே மிஞ்சியிருப்பது ஒரு கோழி, கிரீச்சிடும் சத்தத்துடன் காற்றில் சதா அசைந்துகொண்டிருக்கும் ஒரு கதவு மட்டுந்தான். கிழவனின் முகத்தில் துயரமும் பீதியும் உறைந்திருக் கின்றன. பைத்தியம் அவனைப் பீடித்திருக்கிறது. கையில் சட்ட மிடப்பட்ட ஒரு சான்று. அதைச் சுவரில் மாட்ட ஓர் ஆணியை அவன் தேடிக்கொண்டிருக்கிறான். இவானைப் பார்த்ததும் “இங்கேதான் வைத்தேன், எங்கே போனதென்று தெரியவில்லை. நீ வெகு தொலைவுக்குப் போகிறாயா?” எனக் கேட்கிறான்.

இவான் “ஆமாம்” என்கிறான்,

“இப்போது எல்லோருமே வெகுதொலைவுக்குப் போகிறார்கள். ஏன் போகிறார்கள்? யாருக்குத் தெரியும்? நான் ஆணியைத் தொலைத்துவிட்டேன், தேடித் தருவாயா?”

இவான் ஓர் ஆணியைத் தேடி எடுத்துத் தருகிறான். அதை வாங்கிப் பார்க்கும் கிழவன் “நான் தேடிக்கொண்டிருந்தது இதுவல்ல” எனக் கூறி அதைக் கீழே எறிந்துவிடுகிறான்.

“உன்னுடைய அம்மா எங்கே? அவள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறாளா? ஜெர்மன் படை என்னுடைய மனைவியையும் கொன்றுவிட்டது. கண்ணாடி போட்டிருந்த அந்த உயரமான மனிதன்! அவனுடைய முடி தோள் வரை இருந்தது. என்னுடைய பெலகேயா மீண்டும் வருவாள். அவளுக்காக ஒரு வீட்டை நான் தயாராக வைத்திருக்கிறேன்.”

இடிந்து தரைமட்டமாகிக்கிடக்கும் வீடு, இறந்த தன் மனைவிக் காகக் காத்திருக்கும் கிழவன், நீண்ட கயிற்றால் கட்டப்பட்டு அங்கு மேய்ந்துகொண்டிருக்கும் கோழி. இதெல்லாம் போர் நிகழ்த்தி யிருக்கும் பேரழிவின் சாட்சிகள். இவை இவானை மேலும் துயர முற்றவனாக மாற்றுகின்றன. தன் துயரை மிஞ்சும் ஒரு துயரத்தை அங்கே சந்திக்கிறான்.

அவனைத் தேடிக்கொண்டு வரும் கர்னலுடன் அவன் திரும்பிப் போகும்போது, அந்தக் கிழவனுக்காக ஒரு ரொட்டியை வைத்து விட்டுச் செல்கிறான் இவான்.

இவான் படிப்பதற்கென்று கால்சேவ் சில புத்தகங்களைத் தருகிறான். அவற்றையெல்லாம் தலைமையகத்தில் தங்கியிருந்த போது படித்துவிட்டேன் என்கிறான் இவான். பிறகு கால்சேவ் அவனுடைய பெட்டியில் வைத்திருக்கும் புத்தகத்தைக் காட்டி, “அது என்ன புத்தகம்?” எனக் கேட்கிறான்.

“அது போரின் பேரழிவு குறித்த புத்தகம்.”

“படங்கள் இருக்கின்றனவா?”

“புத்தகம் முழுவதும் படங்கள்தாம். ஸ்பிரிச்சன் கேள்விப்பட்டி ருக்கிறாயா? பிரிட்ஸ் (ஜெர்மானிய அரசன்) போல அவனும் ஒருவன்.”

இவான் அந்த ஓவியங்களைப் பார்த்து உற்சாகமடைகிறான்.

“இவர்களெல்லாம் ஜெர்மானியர்களா?”

“ஆமாம், இதெல்லாம் பழைய கோட்டோவியங்கள்.”

“எலும்பும் தோலுமாக இந்தக் குதிரையில் உட்கார்ந்திருக் கிறானே, இவனைப் போலவே ஒருவனை நான் மோட்டார் சைக்கிளில் பார்த்தேன். இங்கே பார், அவர்கள் மக்களை எப்படிச் சித்திரவதை செய்கிறார்கள்!”

“இது கற்பனைதான்.”

“கற்பனை! ஆனால் அவர்களை எனக்குத் தெரியும்.”

ஓவியத்தில் உள்ள இன்னொருவனைக் காட்டி “இவனும் பிரிட்ஸ் தானா?”

“இல்லை. இவன் ஜெர்மன் மருத்துவனாகவோ எழுத்தாள னாகவோ இருக்கலாம்.”

“அவர்களிடம் எழுத்தாளர்களே இல்லை. சதுக்கத்தில் வைத்து அவர்கள் புத்தகங்களை எரித்ததை நான் பார்த்தேன். மண்ணெண் ணெயைப் புத்தகங்களின் மீது ஊற்றி அவற்றை எரித்தார்கள் அவர்கள்.”

“இவன் 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஓர் எழுத்தாளன்.”

“ஒருவேளை இருக்கலாம்…”

இப்படியாக ஜெர்மானியர்கள் என்றால் கொடுமைக்காரர்கள், இரக்கமற்றவர்கள் என்ற எண்ணம் இவான் மனத்தில் ஊறிக் கிடக்கிறது. இதற்குப் பழிதீர்க்கவே இரண்டாவது திட்டத்திலும் பிடிவாதத்துடன் பங்கேற்கிறான்.

அவனை அதிகம் நிலைகுலையச் செய்வது தாயின் இறப்புதான். அந்த அரவணைப்பை, கதகதப்பை, அன்பை அவன் இழந்து விட்டான். போர் இந்த அநீதியை அவனுக்கு இழைத்துவிடுகிறது.

போருக்கு முதல் பலி குடும்பங்கள்தான். ஒவ்வொரு இறப்பு நேரும்போதும் ஒரு குடும்பம் சிதைகிறது. நிலைகுலைகிறது. போர் குடும்பங்களின் மீது மீட்டெடுக்க முடியாத துயரத்தைக் கொண்டு வந்து கவிழ்க்கிறது. பல குடும்பங்களை இல்லாமல் ஆக்குகிறது. நாசிஸம் ஓர் இனத்தையே அழிக்க நினைத்தது.

இவானின் குழந்தைப் பருவம் பன்னிரெண்டு வயது சிறுவனின் ஆன்மாவில் போர் என்ற ராட்சதன் வரைந்த ஒரு காயத்தின் சித்திரம்.

ரஷ்யாவின் வெற்றியைக் கொண்டாடவோ இட்லரின் நாசிஸம் முடிவுக்கு வந்ததை வரவேற்கவோ இல்லாமல், போரின் கொடூரத்தை உணர்த்தவே தார்க்கோவஸ்கி விரும்பியிருக்கிறார்.

பழிவாங்கும் எண்ணம் வளர்ந்த மனிதனுக்கு வருவது இயல்பு. ஆனால் அது பன்னிரெண்டு வயது சிறுவனுக்கு ஏற்படுவதும், அதற்காக அவன் தன் உயிரையே தியாகம் செய்வதும் வரலாற்றின் துயரம். இதுவும் ஒரு விதமான தற்கொலையே. சிறுவன் ஒருவனைத் தற்கொலைக்கு நிர்ப்பந்திக்கிறது என்றால் அது எப்படிப்பட்ட சமூகமாக இருக்க முடியும்? இவானின் இந்தத் துயர முடிவுக்கு அவன் குடும்பத்தை அழித்த ஜெர்மன் படைகள் மட்டும் காரணமல்ல, ரஷ்யாவும்தான். இந்த இரண்டு நாடுகள் மட்டுமல்ல போரை நிர்ப்பந்திக்கிற, வரவேற்கிற, ஏற்றுக்கொள்கிற, தூண்டுகிற, உதவுகிற எல்லா நாடுகளும், இனக்குழுக்களும், மத நிறுவனங்களும், மனித மனங்களும்தான்.

ஒரு சிறந்த கலைஞனைக் கட்டமைப்பதில் அவனுடைய குழந்தைப் பருவம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை இங்கே சொல்லியாக வேண்டும். பன்னிரெண்டு பதின்மூன்று வயது வரையிலான அவனுடைய வெகுளித்தனமான அனுபவங்கள்தான் வாழ்க்கை என்ன என்பதை அவனுக்குக் கற்றுத்தருகிறது. ஏராளமான கனவுப் படிமங்களைத் தனக்குள் ஏராளமாக உருவாக்கி வைத்துக் கொள்கிறது. வாழ்நாள் முழுவதும் அவை அவனுக்குள் பொங்கி பிரவகித்துக்கொண்டே இருக்கிறது. மிரர் படத்தில் நோய்வாய்ப்பட்டுப் படுத்திருக்கும் கதாநாயகன் தனது குழந்தைப் பருவம் குறித்த நினைவுகளை அசைபோட்டபடி இருக்கிறான். அவைதான் இன்னும் அவன் வாழ்வதற்கான அர்த்தத்தையும் மகிழ்ச்சியையும் தருகின்றன.

இவானின் குழந்தைப் பருவம் படத்தில் இடம்பெறும் கனவுகள் குறித்துத் தனது காலத்தைச் செதுக்குதல் புத்தகத்தில் பிரதானப் படுத்தி எழுதுகிறார் தார்க்கோவஸ்கி. கனவு தனக்குள் வைத்துள்ள கவிதைத்தன்மையைப் படத்தில் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகளை விளக்குகிறார்.

தார்க்கோவஸ்கியின் படங்களில் குறிப்பாக மிரர், சோலாரிஸ் படங்களில் குழந்தைப் பருவம் குறித்த கனவுகள்  இடம்பெறுவதை இங்குக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவானின் குழந்தைப் பருவம் படத்தில் வரும் முதல் கனவில் “அங்கே ஒரு குயில் கூவிக்கொண்டிருக்கிறது” என அவன் தன் அம்மாவிடம் சொல்லும் காட்சி தனது அனுபவம்தான் என்கிறார் தார்க்கோவஸ்கி.

போர்ச் சூழலைப் பின்னணியாகக் கொண்ட இப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த எல்லாரும் சொன்னது அந்தக் கனவுக் காட்சி களைப் பற்றித்தான். அவைதான் அவருடைய தனித்தன்மையை, மேதமையை எடுத்துக்காட்டியது.

டி.எஸ்.எலியட் படைப்பாளியைப் பண்பட்ட ஊடகம் எனச் சொல்வதுபோல, தார்க்கோவஸ்கியோ முக்கோணப் பட்டகம் என்கிறார். அதன் வழியாக ஊடுறுவும் ஒளி, பல்வேறு வண்ணங் களாகப் பிரிவது போல வாழ்க்கைச் சம்பவங்கள் அவனுக்குள் பல்வேறு விதமாக ரூபம் கொள்கின்றன. அந்த ரூபங்கள்தான் அவனுடைய படைப்புகள். அந்த நிகழ்வு குறித்துத்தான், தனது அடுத்த படமான ஆந்த்ரே ரூப்ளேவில் அவர் ஆராய்ந்தார்.

இவானின் குழந்தைப் பருவம் தந்த அனுபவமும் பார்வையும் தான் ஆந்த்ரே ரூப்ளே படத்துக்கான அஸ்திவாரமாக இருந்துள்ளது.