தமிழிலக்கியச் சூழலில் லட்சிய எழுத்தாளனின் மாதிரி ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த எழுத்தாளன் சிறுபத்திரிகையிலிருந்து வந்தவனாகவும், நுண் அரசியல் பேசக்கூடியவனாக இருக்க வேண்டும், இடதுசாரி சிந்தனை கொண்டவனாக, பெரியார், அம்பெத்கர், மார்க்ஸ், காந்தி போன்றவர்களைப் படித்தவனாக இருக்க வேண்டும், சமூக நீதியைப் பேசக் கூடியவனாக இருக்க வேண்டும், தலித்தாகவோ, தலித்துகளுக்காக குரல் கொடுப்பவனாகவும் இருக்க வேண்டும், வேறு சாதியாக இருந்தால் குற்றவுணர்ச்சி கொள்பவனாகவும், தன் சாதியினர் தலித்துகள் மீது நிகழ்த்திய வன்செயல்களுக்கு மன்னிப்பு கேட்பவனாக இருக்க வேண்டும், பெண்ணுரிமைப் பேசுபவனாகவும், ஆணாதிக்கத்தை கண்டிப்பவனாகவும் இருக்க வேண்டும் இப்படியாக பல லட்சணங்கள்.
இந்த அளவுகோள்களுக்குப் பொருந்தி வராதவர்கள் எப்போதுவேண்டுமானாலும் குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம் கண்டிக்கப் படலாம். எழுத்தாளனுக்குத்தானே இந்த தகுதி வேண்டும், வாசகனுக்கு இல்லையே. அதனால் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்டு அவனை குற்றவுண்ரவு கொள்ளச் செய்யலாம். சாதி வெறியனாக, ஆணாதிக்கம் கொண்டவனாக அடையாளப்படுத்தப்படலாம்.
இந்த பதிவுக்கு காரணம் கண்மணி குணசேகரன் தொடர்பான சர்ச்சைதான் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். காடுவெட்டி குருவுக்கு அவர் முகநூலில் எழுதிய இரங்கற்பா பலரை (என்னையும்தான்) அதிர்ச்சியடையச் செய்து கண்டனங்களை சந்தித்தார். அஞ்சலை, நெடுஞ்சாலை, வந்தாரங்குடி, நடுநாட்டு சொல்லகராதி என அவருடைய குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகள் இருந்தாலும் அவரை மன்னிக்கக் கூடிய மனநிலை யாருக்கும் இல்லை.
வெளிப்படையாக அவர் தன் அடையாளத்தை முன் வைத்து பேசியதால் அவரை படித்தவர்கள் படிக்காதவர்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என எல்லோருடைய கண்டனத்துக்கும் உள்ளானார். இது எதிர்பார்த்த எதிர்வினைதான். பாமக இன்று கையிலெடுத்திருக்கும் ஆபத்தான அரசியல் நிலைப்பாட்டின் விளைவு இது. குரு ஒரு பாஸிஸ சக்தியாக அடையாளம் காணப்பட்டிருந்தார்.
தனது வலதுசாரி அரசியலை வெளிப்படையாக முன் வைப்பதன் மூலமும், இந்துத்துவா ஆதரவு மூலமும், விஷக் கொடுக்கை மேலே உயர்த்திக்காட்டுவதன் மூலமும் ஜெயமோகனும் இதே போன்ற வெறுப்பை, தூற்றுதலை, கண்டனங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறார். அவருடைய பங்களிப்புகள் இங்கே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
இது நேரடி தாக்குதல் என்றால் பல எழுத்தாளர்கள் அவர்களின் சாதி தெரிந்ததன் காரணமாகவே அவர்களுடைய நடவடிக்கைகளும், எழுத்தும் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டு வருகின்றன. சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவர்கள் குற்றவாளிகளாக முன்னிறுத்தப்பட்டு வருகிறார்கள்.
‘பிள்ளைகொடுத்தால் விளை’ சிறுகதை எழுதியதற்காக சுந்தர ராமசாமி தலித்துகளுக்கு எதிரானவராக, சாதி அபிமானியாக முன்னிறுத்தப்பட்டார். அதுவரை அவர் சம்பாதித்திருந்த நற்பெயர்கள் தெருவில் வீசப்பட்டன.
ஏதோ ஒரு ஆதாயத்துக்கு ஆசைகாட்டப்பட்டு நானும் சில நண்பர்களும் ஒரு சாதிக் கட்சியின் பாசறைக்குள் சென்று, அதே வேகத்தில் திரும்பி வந்தபோது ஆதிர்ச்சியடைந்தவர்களில் ஒருவர் மனுஷ்ய புத்திரன். ஆனால் சல்மாவைத் தொடர்ந்து மனுஷ்ய புத்திரனும் திமுகவின் தீவிர தொண்டனாகி எனக்கு அதிர்ச்சியளித்துவிட்டார். வரும் தேர்தலில் அவர் சட்டப்பேரவை உறுப்பினராகி, அமைச்சர் பதவி பெற்றுக்கொண்டு தன் இருப்பிடத்தை தலைமைச் செயலகத்துக்கு மாற்றிக்கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அவரைப் பார்க்கப் போனால் பக்கத்து அறையில் நண்பர் இமயத்தையும் ஒருவேளை சந்திக்கலாம்.
என் லட்சிய எழுத்தாளனின் கனவுகளை தகர்த்தவர்களில் இமயமும் ஒருவர். விருதாச்சலத்தில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு அவரும் வந்திருந்தார். திமுக கரை வேட்டியுடன் சாட்சாத் ஒரு அரசியல் தலைவர் போலவே வந்திருந்திருந்தார். இத்தனை அறிவுஜீவிகள் குழுமியிருக்கும் அவைக்குள் எந்தத் தயக்கமும் இல்லாமல் தன் திமுக அடையாளத்தோடு வர அவருக்கு என்ன துணிச்சல் வேண்டும்? என் அதிர்ச்சியை நண்பர்களிடம் வெளிப்படுத்தினேன். அவர்கள் சொன்னார்கள் அரசுப் பள்ளி ஆசிரியரான அவர் பள்ளிக்குக் கூட இதே கெட்டப்பில்தான் போவாராம். அரசியல் செல்வாக்கு இருப்பதால் யாரும் அவரை கண்டுகொள்வதில்லையாம்.
இதைவிட அதிர்ச்சி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் செல்பி எடுத்து முகநூலில் அவர் பகிர்ந்தகொண்ட போது ஏற்பட்டது. நாடே கவனித்துக்கொண்டிருந்த 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பு அன்று பாட்டியாலா நீதிமன்றத்தில் வாசிக்கப்பட இருந்தது. கனிமொழிக்கும் ராஜாவுக்கும் தன் ஆதரவைத் தெரிவிக்க இமயமும் தில்லி சென்றிருக்கிறார்.
திமுகவின் சாதாரணத் தொண்டன் போல உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஒரு எழுத்தாளனைப் பார்த்தது உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது. இது இமயத்தின் உருவத்தையொத்த வேறு மனிதனோ என்றுகூட சந்தேகம் ஏற்பட்டது.
தலித் எழுத்தாளராக அறியப்படும் அவர் நியதிப்படிப் பார்த்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவாளராகத்தான் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதையும் தாண்டிய ஏதோ விசுவாசம் அவரை திமுகவோடு அடையாளப்படுத்திக்கொள்ளச் செய்கிறது. அவருக்குள் இருக்கும் இந்த முரண்பாடு எழுத்துலகில் பெரிதுபடுத்தப்படாததும் ஆச்சர்யம்தான்.
இந்த அதிர்ச்சிக்கும் கண்டனங்களுக்கும் காரணம் ஒரு எழுத்தாளன் சாதியையோ வெகுசன அரசியலையோ கடந்தவனாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பால் எழுவது. அப்படி ஒரு பார்வை, கருத்தியல் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஒரு எழுத்தாளனை நுண்ணுர்வு கொண்டவனாக, நேர்மையானவனாக, எல்லோருக்கும் பொதுவான ஒரு நீதியை, வாழ்வை கனவு காண்பவனாக, உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் துயரச் சம்பத்துக்கும் மனம் வருந்துபவனாக, ஒரு புழுபூச்சிக்குக் கூட துன்பம் விளைவிக்காதவனாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமான ஒரு எதிர்பார்ப்புதான். அவனை பிரத்தியேகமான ஆளுமையாக பார்ப்பதில் தவறு எதுவும் இல்லை. அதே நேரத்தில் அவன் சமூகத்துக்குள் பலதளைகளால் பிணைக்கப்பட்டிருக்கிறான் என்பதும் அதிலிருந்து விடுபடும் எத்தனங்கள் கொண்டவனாக இருக்கிறான் என்பதையும் ஏற்றுக்கொள்ளவே வேண்டும். பலர் இப்படியான எத்தனங்கள் எதையும் செய்வதில்லை என்பதும் உண்மையே. கண்மணி குணசேகரனும், ஜெயமோகனும் அப்படிப்பட்டவர்களாகக் கூட இருக்கலாம்.
எதை எழுதினால் சர்ச்சைக்குள் சிக்காமல் தப்பிவிடலாம் என்ற கவனத்தோடு படைப்புகளை எழுதிவிட்டு எந்தப் பெரிய பிரச்சினையின் போதும் வாய் திறந்து எந்த கருத்தையும் கூறாமல் மெளனித்திருப்பவன்தான் நல்ல எழுத்தாளனாக இருக்க முடியுமா என்ற கேள்வியையும் நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.
சமூகத்தில் மையம் கொள்ளும் பிரச்சினைகளை, முரண்பாடுகளை தன் படைப்பில் நேர்மையாக எதிர்கொள்வபன்தான் பொறுப்பான படைப்பாளியாக இருக்க முடியும். தப்பித்தல் அவனுக்கு அழகல்ல. அப்படி எழுதப்படும் படைப்புகளை படிப்பதும் அதன் மீது ஆரோக்கியமான விவாதத்தை முன் வைப்பது மட்டுமே படைப்புச் சூழலை நல்ல திசையில் நடத்திச்செல்லும் உந்து சக்திகளாக இருக்க முடியும். ஆனால் பல நேரங்களில் ஒரு படைப்பாளியின் சாதிய அடையாளமே அவனை குழித்தோண்டி புதைக்க காரணமாகிவிடுவதுதான் துரதிஷ்டம். தங்களை தலித்துகளின், இடதுசாரி சிந்தனையாளர்களின் பிரதிதிகளாகக் காண்பித்துக்கொள்வதற்காகவே எதிரிகளை கண்டுபிடிக்கும் காரியத்தில் இறங்கிவிடுகிறார்கள். இந்த பலவீன உத்திகளை கையாளத் தொடங்கும் போது உண்மையான படைப்புகள் கூட மதிப்பிழந்து போவதும், நேர்மையான படைப்பாளன் கூட மனம் நொந்து போவதும் நடக்கிறது.
எதையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதும், ஆய்வுக்கு உட்படுத்துவம் ஆவசியமே. இதில் நேர்மை இருக்க வேண்டும். முன்தீர்மானமோ உள்நோக்கமோ இருந்தால் எல்லாம் விஷமாகவிடும், நாசமாகிவிடும்.
Leave a Reply