ஷோபாசக்தி-யின் ‘ம்’

ஜீ.முருகன் ( G Murugan )

‘முப்பதாயிரம் வருடங்களாகக் கொடிய யுத்தம்! ஒரு இலட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டார்கள், அய்ம்பதினாயிரம் அங்கவீனர்கள், இருபதாயிரம் விதவைகள், பத்தாயிரம் பேருக்கு பைத்தியம். பூசா, மகசீன், களுத்துறை,பாரிய இடப்பெயர்வுகள், புலப்பெயர்வுகள், இயக்கங்கள், மாவீரர்கள், தமிழீழ ஒறுப்புச் சட்டம், தமிழீழ சிறை, துரோகிகள், பேச்சுவார்த்தை மானுட ஒன்றுகூடல் பொங்கு தமிழ் கதைகளும், பெருங்கதைகளும் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. எல்லாக் கதைகளையும் கேட்டுக்கேட்டு ‘ம்’ சொல்லிக்கொண்டேயிருக்கும் என் சனங்களுக்கு…’ இப்படித்தான் இந்த நாவலை அர்ப்பணம் செய்கிறார் ஷோபா சக்தி. சமீபத்தில் என்னால் முழுமையாக வாசிக்க முடிந்த புத்தகங்களில் ஒன்று அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ (மூன்றாவது முறையாக வாசிக்கிறேன்), இன்னொன்று ஷோபசக்தியின் ‘ம்’. முன்பு அவருடைய ‘கொரில்லா’ நாவலையும், ‘தேசதுரோகி’ சிறுகதைத் தொகுப்பையும் வாசித்திருக்கிறேன். ‘ம்’ அவர் எழுத்தின்மேலிருந்த மரியாதையையும் நம்பிக்கையையும் இன்னும்கூட்டியிருக்கிறது. இவரைப்போன்றே இலங்கை எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களும், சக்கரவர்த்தியின் எழுத்துக்களும் (இரண்டாவது யுத்தம்) கவனத்துக்குரியவைகளாக இருக்கின்றன. அ.முத்துலிங்கத்தின் ‘கெர்னல் கிட்டுவின் குரங்கு’ கதையை வாசித்த போதுதான் இலங்கை பிரச்சினைக்கும் அவருக்கும் ஏதோ ஒட்டு உறவு உண்டு என்பதை தெரிந்துகொண்டேன். சக்கரவர்த்திக்கும், ஷோபாசக்திக்கும் ரத்தமும் சதையுமான உறவு. தமிழில் கொடிகட்டியும் கட்டாமலும் பறக்கும் எழுத்தாளர்களோடு ஒப்பிடுகையில் ஷோபசக்தி சற்று மேலானவராகவே தெரிகிறார். உணர்ச்சிவசப்படாமல் தயக்கமில்லாமல் சொல்லமுடியும், இவருடைய எழுத்து சர்வதேச தரம் கொண்டதென்று. தீவிரமும், எள்ளலும், லகுவானதுமான இவருடைய நடை அபூர்வமானதாகவே தோன்றுகிறது. சகபடைப்பாளியாக என்னைப் பொறாமை கொள்ளச் செய்யகூடியதாகவும் இருக்கிறது. அவசியத்தை மீறி ஒரு வரிகூட எழுதப்படவில்லை என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம். சம்பவங்கள் நிகழும் இடங்களைப்பற்றி விவரிப்புகள்கூட கச்சிதமாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது. தேர்ந்த தொழில் நுட்பம் கொண்டவராக தெரிகிறார் ஷோபாசக்தி. தீவிரமான வாழ்வு மட்டுமே படைப்பை நிறைப்பதில்லை. சொல்லபட்ட விதத்தில்தான் அது ஒளிர்வுபெறுகிறது. சொல்பவனின் அக்கறை எதைச் சார்ந்துள்ளது என்பதும் முக்கியமான விஷயம். இன்னொரு சந்தோஷமான விஷயம் நாவல் 168 பக்கங்கள் மட்டுந்தான். அதிலும் 85 எம்.எம் காலம் மட்டுமே கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன பக்கங்கள். 500, 600 பக்கங்களை பார்த்து மிரண்டு போயிருப்பவர்களுக்கு இது ஆறுதளளிக்கக்கூடிய விஷயம்தானே. ஷோபாசக்தியைப்போல இலங்கை இனப் பிரச்சனையில் போராளியாகவோ, வதைகளுக்கு ஆளானவராகவோ, புலம்பெயர்ந்தவராகவோ உள்ள ஒருவர் இந்த எழுத்தை எப்படி மதிப்பிடுவார் என்று எனக்குத் தெரியவில்லை. தீராநதியில் பிரசுரம் செய்யப்பட்ட பத்மாநாப ஐயரின் நேர்காணலில் ஷோபாசக்தியின் ஆன்டி எல்.டி.டி.ஈ மனப்பான்மையே அவருக்கு தமிழில் வரவேற்பை பெற்றுத் தந்துள்ளதாகக் கூறுகிறார். எழுத்தின் வீரியம்தான் இந்த மதிப்பை ஷோபாசக்திக்கு வழங்கியுள்ளதாக நான் கருதுகிறேன். எழுதமட்டும் தெரிந்தால் போதாது, கவனத்தைப்பெற வாய்சவடால்களும், விற்பனை நுட்பமும் தெரிந்திருக்கவேண்டும் என்ற தகுதியெல்லாம் ஷோபாசக்திக்கு தேவையிருக்கவில்லை. கொரில்லா யுத்தங்களை மேற்கொள்பவர்களோ, அரசியல் இயக்கங்கங்களோ, ஜனநாயக அரசாங்கங்களோ, சர்வாதிகார அரசாங்கமோ நிகழ்த்தும் மனித படுகொலைகளுக்கு அவர்கள் எந்த நியாயங்களை கற்பித்தாலும் மனித குலம் அவர்களை மன்னிக்கப்போவதில்லை. அவர்களின் புனிதத் தேரின் சக்கரங்களில் அடிப்பட்டு சாகும் மனித உயிர்களுக்கு பதிலாக எதைத் தரமுடியும்? தேர் வேண்டுமானால் அதன் இலக்கை சென்று அடையலாம். இப்படி ஒரு புனிதத் தேரில் அடிப்பட்டு உயிர் மீண்டு வந்தவன்தான் நேசகுமாரன். ‘ம்’ கதையைச் சொல்லிச் செல்பவன். பிரதான கதாபாத்திரமும் அவனே. ஆரம்பம் முதலே அவன் சித்திரவதைக்கு தன்னை ஒப்புக்கொடுத்துவிடுகிறான். தனது உடலை பிளேடால் கீறி தோழர் அமிர்தலிங்கத்தின் நெற்றியில் திலகமிடுவதிலிருந்தே தொடங்குகிறது. அவன் புகலிடமான அந்த ஐரோப்பிய நகரத்தில் தன் சொந்த மகளின் கர்ப்பத்திற்கு காரணமாக இருந்தான் என்பதற்காக ஏதோ ஒரு இயக்கத் தோழர்கள் அவனை தாக்குவது வரை இந்த சித்திரவதை அவனை தொடர்கிறது. குற்றங்களை காரணம் காட்டி, மனிதர்களும், இயக்கங்களும் ஒருவருக்கொருவர் தண்டனைகளை பரிமாறிக்கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு மடிகிறார்கள். இந்த மனிதர்களுக்கு என்ன பைத்தியம் பிடித்தவிட்டதா என்று அலறத்தோன்றுகிறது. இந்த சித்திரவதைகளை நிகழ்த்தும் பாத்திரங்களாகவே மனிதர்கள் இருக்கிறார்கள். இந்த அபத்த நாடகம் குறியீடு போல ஒரு இடத்தில் நிகழ்த்திக்காட்டப்படுகிறது. ‘மன்னித்து விடுங்கள் சுவாமி, நான் கள்ளுக் குடித்தது இதுதான் முதற் தடவை, இது தான் கடைசித் தடவையும்’ ‘நான் ஒரு தனிமனிதன், நீங்கள் ஒரு தனிமனிதன் என்றால் மன்னித்து விடுவேன். ஆனால் நாம் இருவருமே தனிமனிதர்கள் அல்ல. உங்கள் தவறுக்கும் நிச்சயமாக அமைப்பு தண்டனை வழங்கும், இல்லாவிட்டால் இயக்கம் நடத்த முடியாது ஒப்புக் கொள்கிறீர்களா?’ ‘ஓம்’ கலைச்செல்வன் மௌனமானான். நேசகுமாரன் கலைச்செல்வன் சட்டையைக் கழற்ற சொன்னான். கலைச்செல்வன் மறுபேச்சுப் பேசாமல் சட்டையைக் கழற்றினான். ஒரு பனையைச் கட்டிப் பிடிக்குமாறு நேசகுமாரன் உத்திரவிட்டான். கலைச்செல்வன் கட்டிப் பிடித்தான். நேசகுமாரன் இடுப்பு பெல்டை அவிழ்த்துக் கலைச்செல்வனின் முதுகில் வீசினான். இரண்டு மூன்று அடிகள் அடித்தவன் நிறுத்திவிட்டு ‘தோழர் நான் செய்வது சரிதானே?’ என்று கலைச்செல்வனிடம் கேட்டான். ‘சரி’ என்றான் கலைச்செல்வன். நேசகுமாரன் மீண்டும் கலைச்செல்வனை அடிக்க ஆரம்பித்தான். அபத்தங்கள் முதல் பக்கத்திலேயே சுட்டிக்காட்டப்படுகிறன. பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய தூதுவரின் செயலர் கல்பனா சர்மாவிடம், இந்திய அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கிக்கொள்ள வேண்டுமென்று கேட்கிறார்கள். அவர் சொல்கிறார், ‘புலிகள் மீதான தடையை விலக்குவது குறித்து நிச்சயம் பரிசீலனை செய்கிறோம், அதுசரி, புலிகள் உங்கள் மீது விதித்திருக்கும் தடையை எப்போது விலக்கிக்கொள்ளப்போகிறார்கள்?’ பதினெட்டு வருடங்களாக வெளியில் எவருடனும் எந்தவிதத்தொடர்பும் இல்லாதிருந்தவரிடம் (கனகரட்ணம் சண்முகநாதன்) ‘பிரபாகரன் எங்கே ஒளிந்திருக்கிறான்’ என்ற பைத்தியக்காரத் தனமான கேள்வி அதிகாரிகளால் கேட்கப்பட்டபோது வேலுபிள்ளை பிரபாகரன் வன்னியில் சர்வதேச பத்திரிகையாளர்கள் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார். சிறையிலிருந்து வெளியே வந்த கனகரட்ணம் சண்முகநாதன் இறந்து விட்டதாக அரசாங்கத்தால் சான்று வழங்கப்பட்டுவிடு அவர் கூறுகிறார்: ‘எனவே எனது இப்போதைய கவனமெல்லாம் நான் உயிருடன் இருப்பதை எப்படியாவது நான் அரசாங்கத்திற்கு நிரூபித்துக்காட்டவேண்டும் என்பதே’ ‘மாவோ சே துங் சிந்தனைகள்’ என்ற மாவோவின் புகழ் பெற்ற புத்தகத்தை தீவிரமாகப் படித்துக்கொண்டிருந்த போது ஜே.வி.பி.யினரைச் சிறையில் அடைத்துவைத்துக் காவலுக்கு நின்ற போலிசார் மாவோ அரசு சிறிலங்கா அரசுக்கு வழங்கிய நவீனரக துப்பாக்கிகளைத் தங்களது கைகளில் வைத்திருக்கிறார்கள். தங்களோடு சிறையிலிருக்கும் சவுரிமுத்து பாதிரியாருக்கு நேசகுமாரனும், பக்கிரியும் தந்திரமாக ஒரு யோசனை சொல்கிறார்கள், குற்றத்தை ஒப்புக்கொண்டால் விடுதலை செய்யப்படுவார் என்று. குற்றமே செய்திடாத அந்த பாதிரிக்கு பைத்தியக்கார நீதிபதி 32 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்குகிறான். அதே போன்று குற்றத்தை ஒப்புக்கொள்ளும் இயக்கக்காரர்களான நேசகுமாரனையும் பக்கிரியையும் விடுதலை செய்கிறான். நேசகுமாரன் என்கிற கதாநாயகன் தீரமிக்க புரட்சிக்காரனாகவோ, சாகசக்காரனாகவோ, எந்த கணத்திலும் நியாயம் மறக்காதவனாகவோ சித்திரக்கப்படுவதில்லை. தான் பெற்ற மகளுடனேயே உடலுறவு கொண்டு அவளை கர்ப்பமடையச் செய்கிறான். தனக்கு உதவி செய்யும் சிறிகாந்தமலரை முட்டாள்தனமாக காட்டிக்கொடுக்கிறான். தன்னுடன் போலிஸ்நிலையத்திற்கு குண்டுவைக்க உதவிய கலைச்செல்வனையும் அவன்தான் காட்டிக்கொடுக்கிறான். தன் கண்ணெதிரிலேயே அவன் போலிஸ்காரர்களால் சுட்டுக்கொல்லப்படுவதை பார்க்கிறான். நெருக்கடியான ஒரு கணத்தில் முட்டாள்தனமான அவன் நடத்தையால் சந்திரகலா என்கிற பெண் காரில் வைத்து கொல்லப்படுகிறாள். இறுதியில் பக்கிரி புலிகளிடம் சிக்க அவனே காரணமாகிறான். அவனுடைய கோழைத்தனத்திலிருந்து அவனால் மீள முடியாமல் போகிறது. வெலிகட சிறையில் சிங்களக் கைதிகள் கொல்லவரும்போது ‘நான் புலி அல்ல, நான் பயங்கரவாதி அல்ல, நானொரு கிறித்துவ பாதிரியார்… சகோதரர்களே எனக்கு இரக்கம் காட்டுங்கள்…’ என்று கதறி அழுகிறான். இந்த நாவலின் பிரதான நிகழ்வுகளில் ஒன்று சிறை அதிகாரிகளின் ஒப்புதலோடு வெலிகட சிறையில் நடக்கும் படுகொலைகள். சிங்களக் கைதிகள் தமிழ் சிறைக்கைதிகளை இரக்கமின்றி கொல்லப்படுகிறார்கள். படுகொலைகள் நிகழும் பக்கங்கள் மிக நுட்பமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. ‘ஜேயவேவா’ என்ற கோஷத்துடன் வரும் மரணத்தின் கோர தாண்டவம் நம்மை பீதிகொள்ளச் செய்கின்றன. துயரங்களும், அவமானங்களும், வலிகளும் நிறைந்த வரிகளுக்கிடையே அவரால் எல்லாவற்றையும் இயல்பாக கேலிசெய்துகொண்டும் போக முடிகிறது என்பதுதான் ஷோபாசக்தியிடம் நாம் காணும் வசீகரம். ‘மாலை ஆறுமணியளவில் குணசேகரனிடமிருந்து ‘இன்று வேண்டாம்’ என்ற தகவல் கோணேஸ்வரன் மூலம் எங்களுக்கு வந்து சேர்ந்தது. ஏன் அப்படி ஒரு செய்தியை அனுப்பினார் என்பதை நான் பின்பு தெரிந்துகொண்டேன். எங்கள் சிறையின் பின்புறம் மதிலுகள் உண்டு. மதிலுகளுக்கு அந்தப் பக்கம் குடியிருப்பு வீடுகள். எங்களிடையே இருந்த சில வைக்கம் முகமது பஷீர்கள் ‘மதிலுகளு’க்கு அப்பால் இருந்த நாராயணிகளிடம் பிரியாவிடை கேட்டுப் பெற்றிருக்கிறார்கள். நாராயணிகள் மூலம் வெளியே செய்தி பரவி பதற்றம் தொற்றியிருக்கிறது.’ பிரதான கதையோட்டத்தை இடையீடும் செய்யும்விதமாக இடம்பெறும் சில பகுதிகள் நாவலின் அர்த்தத்தை வேறுதளத்திற்கு கொண்டுபோவதாக இருக்கிறது. எதேச்சையாக இல்லாமல் ஷோபாசக்தி மிக கவனமாக இதை செய்திருக்கிறார். ஏர்னஸ்ட், நேசகுமாரனின் தந்தை மகனின் சித்திரவதையை கண்டு கதறும் இவர் ராஜேந்திரன் என்ற 12 வயது சிறுவனை வீட்டு வேலைக்கு என்று கொண்டுவருகிறார். நீரில் முக்குவதுபோல் அவனை வேலைகளில் போட்டு முக்குகிறது அந்த குடும்பம். ஏர்னஸ்டின் மகள்கள் மார்த்தாளும் மரியாளும் தங்கள் சந்தோஷத்திற்காக அவனை பிரம்பால் அடித்து சித்திரவதை செய்து மகிழ்கிறார்கள். நேசகுமாரன் தண்டனை அனுபவித்துவரும் ஐரோப்பா சிறையில் அவனுக்கு திரையிட்டுக்காட்டப்படும் படத்தில், இரண்டு விபச்சாரிகளை அழைத்துக்கொண்டுபோய் சித்திரவதை செய்து மகிழ்கிறார்கள் இரண்டு சகோதரர்கள். அந்த விபச்சாரிகளிடம் இரக்கம் காட்டும் விடுதியின் உரிமையாளன் அந்த இரண்டு சகோதரர்களையும் அழைத்து வந்து அந்த பெண்களுக்கு எதிரிலேயே சித்திரவதை செய்கிறான். நாவலின் இறுதி அத்தியாயத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது. பனிப்பிரதேசத்தில் வாழும் ஒரு கிழவனுக்கு துர்நாற்றம் வீசும் பிரேதம் கிடைக்கிறது. அதை கொண்டு வேடிக்கை காட்டுகிறான். அதை பிய்த்து மற்றவர்களுக்கு உணவளிக்கிறான். தானும் உண்கிறான். பாரத்தை ஏற்றிக்கொண்டு வரும் குதிரை வண்டிக்காரன் மலையில் ஏற முயற்சிக்கிறான். அந்த நோஞ்சான் குதிரை வண்டியை இழுக்க முடியாமல் திணறுகிறது. கோபமுற்ற வண்டிக்காரன் சாட்டையால் அந்த குதிரையை விளாசுகிறான். அதைக்கண்டு பதறிப்போகும் கிழவன் தடுக்கப்பார்க்கிறான். வண்டிக்காரனின் சாட்டை கிழவனின் முகத்தில் சொடுக்கப்பட கிழவன் மனம் பிறழ்ந்துபோகிறான். இவ்வாறு முடிவுபெறுகிறது நாவல். நாவல் நிகழும் காலம் நம்முடைய சமகாலம் என்பதும், நமக்கு மிக அருகில் இருக்கும் நிலப்பகுதியில் நடந்தவை என்பதும் இப்போதும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் நம்மையும் பொறுப்பாளியாக மாற்றுகிறது. இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் நாமும் பார்வையாளனாக இருந்ததுபோன்ற ஒரு குற்ற உணர்வைக்கூட இந்த நாவல் ஏற்படுத்திவிடுகிறது. 1981, 82 என்று வருடங்களை குறிப்பிடும்போதெல்லாம் இக்காலகட்டத்தில் நாம் வாழ்ந்த பாதுகாப்பான வாழ்க்கையை ஞாபகப்படுத்துகிறது. ஒரு பிரதி பரவலாக பேசப்படுவதற்கும், அது புதைமணலில் புதைந்து போவதற்குமான காரணகாரியங்கள் இங்கே தெளிவாக இருப்பதில்லை. இந்த சூழலையும் மீறி இந்த நாவல் கவனத்தைபெறும் என்று நம்புவோம்.

1 Comment

  1. March 13, 2009 at 11:15 am

    eppadi irukkireergal? nalam dhane?


Leave a comment