The Banishment

banishment

நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல ரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.

-கொரியந்தியர் 13: 2

 

 

தி பேனிஸ்மென்ட் சயஜின்சேவின் இரண்டாவது திரைப்படம். முதல் படம் தி ரிட்டன். மூன்றாவது எலினா.

முதல் படத்திலேயே உலக சினிமா விரும்பிகளை திரும்பிப் பார்க்கச் செய்தவர் சயஜின்சேவ். கிறிஸ்தவ மதத் தொன்மங்களை அடிப்படையாகக் கொண்டு குடும்ப உறவுகளின் நிலையை ஊடுருவிப் பார்க்கும் அவரது தனித் திறன் அனைவரையும் கவர்ந்தது.

இரண்டாவது படமான தி பேனிஸ்மென்ட் அவர் மீதான நம்பிக்கையை இன்னும் கூட்டியுள்ளது. தார்க்கோவஸ்கியின் சாயல் இருந்தாலும் இவரது படங்கள் யதார்த்தத்தில் வேரூன்றியுள்ளன. காட்சிகளில் ஆழ்ந்த நிதானமும் அழுத்தமும் காணப்படுகின்றன. மனித குலத்தை பீடித்துள்ள ஒரு துயரம் அவற்றில் கனத்துக் கிடக்கிறது. எதையோ இழந்துவிட்ட வலி உணர்த்தப்படுகிறது. பதற்றம் கொள்ளச் செய்கிறது. இப்படத்தின் முதல் காட்சியிலேயே அப்பதற்றம் மெல்ல நமக்குள் ஊடுறுவி விடுகிறது.

இப்படத்தின் பிரதானப் பாத்திரமான அலேக்ஸாண்டரின் அண்ணன் மார்க் கிராமப் புறத்திலிருந்து நகரத்தை நோக்கி காரில் வேகமாகப் வந்துகொண்டிருக்கிறான். தனித்த ஒரு வால்நெட் மரத்தை மையம் கொண்டு அக்காட்சி சுழல்கிறது. அமைதியான நிலவெளியை அந்த கார் கிழித்துகொண்டு செல்கிறது. நகர வீதிகளில் நுழைந்து அதன் உயர்ந்த கட்டடங்களுக்கு நடுவில் பாய்கிறது. மார்க் குண்டடிப்பட்டிருக்கிறான். அவனது கை மோசமாக காயமடைந்திருக்கிறது. தனது தம்பியின் வீட்டுக்குத்தான் அவன் செல்கிறான். அங்கு அவனுக்காக காத்திருக்கும் அலேக்ஸ், குண்டை அப்புறப்படுத்தி மார்க்குக்கு சிகிச்சை அளிக்கிறான். அப்போது, அவனுடைய மனைவி வேரா, மகன் கீர், மகள் ஈவா எல்லோரும் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து, அலேக்ஸ் குடும்பத்துடன் தனது பூர்வீக கிராமத்துக்கு சென்றுகொண்டிருக்கிறான். ரயில் நிலையத்தில் இறங்கி பரந்த மேய்ச்சல்வெளி வழியே வீட்டை நோக்கி அவர்கள் நடந்துசெல்கிறார்கள்.

அது தனித்த ஒரு வீடு. பக்கத்தில் வால்நெட் மரத் தோப்பு. எதிரில் மேய்ச்சல் வெளி. ஆலேக்ஸ் வீட்டை தயார்படுத்துகிறான். புது இடம் குழந்தைகளை உற்சாகம் கொள்ளச் செய்கிறது. வால்நெட் மரங்களுக்கிடையே குடும்பத்துடன் உலாவச் செல்கிறான் அலேக்ஸ்.

வீட்டில் ஆப்பிள் சாலட் தயாரித்துக்கொண்டிருக்கிறாள் வேரா. அப்போது அவளுக்கு குமட்டல் எடுக்கத் தொடங்குகிறது. அலேக்ஸ் அவளிடம் அவள் உடல்நிலை குறித்து விசாரிக்கிறான். அவள் சற்றே குழப்பத்துடன் காணப்படுகிறாள்.

அவளுக்கு ஒயின் தருகிறான் அலேக்ஸ். அதை அருந்துகிறாள். பின்னர் தயக்கத்துடன் தான் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்கிறாள். அது அவனுடையது இல்லை என்கிறாள்.

அவன் அதிர்ந்துபோகிறான். நிலைகொள்ளாமல் வால்நெட் தோப்பில் திரிகிறான். ரயில்நிலையத்துக்குச் சென்று தன் சகோதரன் மார்க்குக்கு போன் செய்து அவனை சந்திக்க வேண்டும் என்கிறான். அன்று இரவு மார்க், அலேக்ஸுக்காக ஒரு கேஸினோ பாரில் காத்திருக்கிறான். ஆனால் அலேக்ஸ் அவனைப் பார்க்காமலேயே திரும்புகிறான்.

காலையில் வீடு திரும்பும் அலேக்ஸிடம் அவள் பேச விரும்புகிறாள். ஆனால் அவளை அமைதியாக இருக்கும்படி கோபத்துடன் கூறுகிறான் அவன்.

அலேக்ஸ் அப்பாவின் நண்பர் ஒருவர் அவனைப் பார்க்க வருகிறார். தன் இரு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு அவருடைய ஜீப்பிலேயே அவருடைய பண்ணை வீட்டுக்குச் செல்கிறான் அலேக்ஸ். குழந்தைகளுடன் வீடு திரும்பும் அலேக்ஸிடம் திரும்பவும் பேசக் தொடங்குகிறாள் வேரா. அவள் பேசுவதையோ, அவளது விளக்கத்தையோ விரும்பாத அவன் கேட்கிறான், நீ ‘அவனை’ காதலிக்கிறாயா? அவள் புன்னகைக்கிறாள். இதனால் ஆத்திரமடையும் அவன் அவளுடைய கன்னத்தில் அறைகிறான்.

ஜீப்பில் தன் மகனுடன் சகோதரன் மார்க்கை பார்க்க ரயில்நிலைத்துக்குச் செல்கிறான். வழியில் கீர் தன் அப்பாவிடம் அலேக்ஸின் நண்பன் விக்டர் குறித்து ஒரு விஷயத்தை சொல்கிறான். அலேக்ஸ் பணம் சம்பாதிக்க வெளியூர் சென்றிருந்த சமயத்தில் விக்டர் வீட்டுக்கு வந்து போனதாக. இது அலேக்ஸை மேலும் அதிர்ச்சியடையச் செய்கிறது.

அங்கு மார்க் காரில் இவனுக்காக காத்திருக்கிறான். அலேக்ஸ் அவனிடம் சொல்கிறான்,  நம் குடும்பத்துக்கு ஏன் இப்படி நேர்கிறது  எனக்கு பயமாக இருக்கிறது. இப்படியே போனால் அவளை கொலை செய்ய நேரிடும்’.

மார்க் சொல்கிறான், ‘அப்படியென்றால் அவளை கொன்றுவிடு. மேல் மாடியில் மேஜை டிராயரில் இருக்கிறது துப்பாக்கி. இல்லையென்றால் மன்னிப்பதைத் தவிர வேறு வழி இல்லை.’

‘நீ சொல்வது போல செய்தால் உன்னைப் போல நானும் என் குழந்தைகளை இழக்க நேரிடம்.’

இரவு தூங்கச் செல்லும் முன் கணவன் மனைவி இருவரும் பேசத் தொடங்குகின்றனர்.

உங்களிடம் பேசவே பயமாக இருக்கிறது.

எனக்கும்தான். ஆனால் பேச வேண்டி இருக்கிறது.

உங்களையும், உங்கள் அண்ணனையும் எனக்குத் தெரியும். கீரும் உங்களைப் போல மாறிக்கொண்டிருக்கிறான்.

வேரா, இதற்காக உண்மையில் நீ என்னிடம் மன்னிப்பு கேட்க விரும்பினால், எனக்கும் என்னுடைய குழுந்தைகளுக்கும் உதவ விரும்பினால் நான் உனக்க உதவுகிறேன்.

இந்த குழந்தை அலேக்ஸ்…

உங்கள் குழந்தைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. இந்த குழந்தையை நீ என்ன செய்யப்போகிறாய் என்பது எனக்குத் தெரியவேண்டும்.

அலேக்ஸின் பேச்சு அவளை கலங்கச் செய்கிறது.

அலேக்ஸ் நாம் இரக்கமில்லாதவர்களாக மாறிக்கொண்டிருகிறோம். நீ ஆபத்தானவன். எப்போதும் நீ அப்படித்தான் இருக்கிறாய்.

banish

வேரா நான் உன்னை துன்புறுத்த விரும்பவில்லை, தாக்க விரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் நீ என்ன செய்ய விரும்புகிறாய் எனத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் அவ்வளவுதான். வேரா நீ பிரச்னையில் சிக்கிக்கொண்டிருக்கிறாய். இது உனக்குப் புரிகிறதா.

வேரா சொல்கிறாள், நீ ரொம்பவும் களைத்துப் போய்விட்டாய். நீ ரொம்பவும் சோர்ந்து போய்தானே இருக்கிறாய். சொல் நீ என்ன செய்யலாம் என இருக்கிறாய்.

உரையாடலை முடிக்கும் விதமாக அலேக்ஸ் நாம் தூங்கலாம் என எழுந்துகொள்கிறான்.

அவனுடைய மனப் போராட்டம் அவளை அவன் மீது இரக்கம் கொள்ளச் செய்கிறது. மறுநாள் விடியும் போது உறங்கிக்கொண்டிருக்கும் அவனை ஒரு குழந்தையைப் போல அவள் பார்க்கிறாள்.

குழந்தைகள் இருவரையும் அலேக்ஸின் நண்பன் விக்டர் தனது வீட்டு அழைத்துச் சென்று விடுகிறான்.

வால்நெட் மரங்களுக்கிடையே நடந்த படி இருவரும் உரையாடலைத் தொடர்கின்றனர்.

அலேக்ஸ் சொல்கிறான், அந்த ஆபாசமான விஷயங்களை விட்டுவிடுவோம். நம் குழந்தைகளின் நலனுக்காக நாம் முக்கிய முடிவை எடுத்தாக வேண்டும். எல்லாவற்றையும் மறந்துவிட்டு புதிதாக வாழத்தொடங்குவோம்.

நீ என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நான் சம்மதிக்கிறேன். ஆனால் அந்த முடிவை உடனே எடு. எனக்கு ஆட்சேபனை இல்லை என்கிறாள் வேரா.

அலேக்ஸ், தன் சகோதரன் மார்க்குக்கு போன் செய்து கருக்கலைப்புக்கு ஏற்பாடு செய்கிறான். இரவு இரண்டு டாக்டர்கள் வந்து கருக்கலைப்பு செய்கின்றனர். விடியும் வரை அவள் படுக்கையிலேயே இருக்க வேண்டும். வேறு பிரச்னை இல்லை என்று சொல்லிவிட்டுச் செல்கின்றனர். ஆனால் வேரா படுக்கையில் இறந்துகிடக்கிறாள். வேறு ஒரு டாக்டரை வரவழைத்து சோதனை செய்ததில் இது உறுதிப்படுத்தப்படுகிறது.

அலேக்ஸ் அதிர்ந்து போகிறான். இப்படி ஒரு விபரீதம் நிகழும் என அவன் எதிர்பார்த்திருக்க வில்லை. மார்க்கின் மீதும் அவனுக்கு ஆத்திரம் எழுகிறது.

அந்த டாக்டர் ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்கிறான். அவள், மாரடைப்பில் இறந்ததாக பதிவு செய்வதாக அலேக்ஸை ஆறுதல் படுத்துகிறான். ஆம்புலன்ஸ் வந்து அவளுடைய சடலத்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறது.

இந்த சூழல் மார்க்குக்கு மாரடைப்பை ஏற்படுத்திவிடுகிறது. அவன் காலைவரை படுக்கையிலிருந்து எழுந்துகொள்ளாமல் ஓய்வெடுக்க வேண்டும் என்கிறான் டாக்டர். அடக்கம் செய்ய வேண்டிய கடமை இருப்பதால் அவனால் அதை பின்பற்ற முடிவதில்லை. காரில் அலேக்ஸுடன் செல்கிறான் மார்க்.

மருத்துவமனையிலிருந்து சடலம் கொண்டுவரப்பட்டு அடக்கம் நடத்தப்படுகிறது. வதந்தி பரவும்முன் அவளை அடக்கம் செய்ய வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு ஏற்படுகிறது. யாருக்கும் சொல்லாமல் குழந்தைகள் வீடு திரும்பும் முன்பே இதெல்லாம் நடக்கிறது.

அவள் இறந்ததை உறுதிசெய்யும் டாக்டர், அவளுக்கு பக்கத்தில் இருந்த இரண்டு பொருள்களை அலேக்ஸிடம் காட்டுகிறான். ஒன்று தூக்க மாத்திரைகள் இருக்கும் ஒரு டப்பா. அவள் அதிக அளவிலான தூக்கமாத்திரைகளை விழுங்கிய இறந்திருக்கிறாள். இது ஒரு தற்கொலை என்கிறான். மற்றொன்று கர்ப்பத்தை உறுதி செய்யும் மருத்துவச் சான்றிதழுக்கு பின்னால் எழுதியிருந்த ஒரு கடிதம்.

அடக்கம் முடிந்து வீடு வரும் அலேக்ஸ், மேல் மாடியில் மார்க் வைத்திருக்கும் கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அவனது நண்பன் ராபர்ட்டை தேடிப் போகிறான். ராபர்ட் வீட்டில் இல்லை. அவனுக்காக காரிலேயே காத்திருக்கிறான். மழை பெய்யத் தொடங்குகிறது. வீட்டுக்கு வரும் ராபர்ட் காரில் காத்திருக்கும் அலேக்ஸை கண்டு வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே இருவரும் மேஜைக்கு முன் எதிரெதிரே உட்கார்ந்திருக்கின்றனர். மேஜைமேல் அந்த கடிதமும், கைத்துப்பாக்கியும் இருக்கிறது. ராபர்ட் எழுந்து ஜன்னலுக்குச் சென்று மழையை வேடிக்கைப் பார்க்கிறான். இருவரும் எதுவும் பேசிக்கொள்வதில்லை.

அப்போது அடுத்த அறையிலிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. ராபர்ட் வேகமாகச் சென்று ரிஸீவரை எடுத்துப் பேசுகிறான். அது வேரா.

படம் பின்னோக்கி நகர்கிறது. வேரா அதிக அளவிலான தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள். அவளுடைய வீட்டுக்குச் செல்லும் ராபர்ட் அவளுக்கு உதவி செய்கிறான்.

மறுநாள் திருப்பவும் அவன் வருகிறான். அவள் உடல்நலம் குறித்து விசாரிக்கிறான். சர்க்கஸ் பார்க்க போயிருக்கும் குழந்தைகள் வரும் வரை அவனை தன்னுடன் இருக்கச் சொல்கிறாள்.

குடும்ப புகைப்படங்களை அவனிடம் காட்டுகிறாள். அலேக்ஸின் அப்பா, அலேக்ஸ், மார்க் இருக்கும் புகைப்படும், மார்க் தன் குடும்பத்துடன், ஈவா ஒருவயது குழந்தையாக இருக்கும் போது வேராவுடன், வேராவின் அம்மா, வேரா  திருமணத்துக்கு முன்பு, பிரசவ ஆஸ்பத்திரியில் எடுத்த புகைப்படம் என.

ராபர்ட்டிடம் வேரா சொல்கிறாள், ராபர்ட் இதெல்லாம் ஏதோ ஒரு வித த்தில் நடக்கிறது. அவற்றை கவனிக்க நமக்கு நேரமிருப்பதில்லை.

நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன்.

ராபர்ட் கேட்கிறான், இக்குழந்தை அலேக்ஸ் உடையது தானே?

இது அலேக்ஸின் குழந்தைதான். ஆனால் இல்லை. அது இப்படித்தான். நம் குழந்தைகள் நம் குழந்தைகள் இல்லை. உண்மையில் அவர்கள் நம் குழந்தைகளே இல்லை. அப்படிப்பார்த்தால் நாமும் நம்முடைய பெற்றோரின் குழந்தைகள் இல்லை. உனக்குப் புரிகிறதா. இரவெல்லாம் நான் விழித்துக்கொண்டே இருக்கிறேன். தூங்கக்கூடப் போவதில்லை. அவனுடைய சுவாசத்தை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அவன் நம்மை ஒரு பொருளைப் போல விரும்புகிறான். கடவுளே, சில ஆண்டுகளாக நான் இப்படித்தான் வாழ்கிறேன். நான் ஏன் தனியாக இருக்கிறேன். வழக்கமாக அவன் பேசுவதைப் போல இப்போது அவன் பேசுவதில்லை போல இருக்கிறது. நான் நினைக்கிறேன். அவன் முன்பே பேசியிருக்கிறான். அவனுக்கு எந்த விளக்கத்தையும் அளிக்க முடிவதில்லை.

நான் ஏதாவது செய்தாக வேண்டும். அவன் இதேபோல சென்றுகொண்டிருந்தால் எல்லாமே சாக நேரிடும். சாவதற்காக நான் ஒன்றை பெற்றுப்போட விரும்பவில்லை. இறப்பு இல்லாமல் நாம் வாழமுடியும். அதற்கு வாய்ப்புகள் உள்ளன.

என் தனி ஒருத்தியாள் இது முடியாது. எல்லோரும் ஒன்று சேரவேண்டும். ஒருவருக்கு ஒருவர் என இருக்க வேண்டும். இதற்கு முடிவு கிடையாது. இது ஒரு முடிவற்ற சுழற்சி. இதை எப்படி அவனுக்கு விளக்குவேன். அவன் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பதை எப்படி அவனுக்கு பார்க்கச் செய்வது, புரியவைப்பது.

ஈவா, கீர் இருவரும் வீட்டு வருகிறார்கள். ராபர்ட் வீட்டுக்கு வந்திருப்பதை பார்த்த்தும் கீர் ஆத்திரமடைகிறான். அவன் ஏன் இங்கே இருக்கிறான் என்று வேராவிடம் கேட்கிறான். அவள் அழுகிறாள்.

படம் நிகழ்காலத்துக்குத் திரும்புகிறது. அலேக்ஸ் குழந்தைகளை கூட்டிவர விக்டர் வீட்டுக்கு காரில் கிளம்புகிறான். அந்த ஒற்றை வால்நெட் மரத்தைக் கடந்து கார் கிராமத்தை நோக்கிப் போகிறது. அங்கே பெண்கள் கோதுமை வயிலில் அறுவடையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பெண் பாடுகிறாள். இன்னொரு பெண் எதிர்பாட்டுப் பாடுகிறாள்.

banishment460

வேராவுக்கு கருக்கலைப்பு செய்யும் தருணத்தில் விக்டர் வீட்டில் குழந்தைகள் எல்லோரும் பஸுல்ஸ் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். பிரித்துப் போடப்பட்ட லியர்னர்டோ டாவின்ஸியின் தி அனவன்சியேன் (the Annunciation) ஓவியத்தை ஒன்றணைத்துக்கொண்டிருக்கின்றனர்.

நசாரத் நகரத்தைச் சேர்ந்த மேரிக்கும் தச்சனான ஜோசப்புக்கும் நிச்சயதார்த்தம் நடத்தப்படுகிறது. ஒரு நாள் தேவதை கேப்ரியேல் அவளுக்கு முன் தோன்றி சொல்கிறாள்,

மேரி, கடவுளின் அருள் உனக்கு கிடைத்திருக்கிறது. உன்னுடன் இருப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.

மேரி இதனால் பதற்றம் கொள்கிறாள். அவளால் இதை புரிந்துகொள்ள முடியவில்லை.

பயப்படாதே மேரி. கடவுள்தான் அவனை உனக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவன் குழந்தையாக உனக்கு பிறப்பான். அவன் பெயர் ஏசுவாக இருக்கும். அவன் பெரிய மனிதனாக வளர்ந்து புகழ்பெறுவான். அவனை எல்லோரும் தேவ குமாரன் என அழைப்பார்கள்.

மேரி அந்த தேவதைக்கு முன் மண்டியிட்டு, கடவுளின் கட்டளையை ஏற்றுக்கொள்வதாக சொல்கிறாள். பின்னர் தேவதை அங்கிருந்து சென்றுவிடுகிறது. இச்சம்பவத்தைத்தான் டாவின்ஸியின் ஓவியம் பதிவு செய்திருக்கிறது.

வேரா ராபர்டிடம் பேசும் போது அவன் எனக் குறிப்பிடுவது இதைத்தான். வேரா கருவுற்றிருப்பது ஒரு தேவ குமாரனைத்தான். அது கடவுளின் குழந்தை. அலேக்ஸுடையதோ, வேறு யாருடையதோ அல்ல. இக்குழந்தை மட்டுமல்ல எல்லாக் குழந்தைகளும் கடவுளின் குழந்தைகள்தான்.

குழந்தைகள் படுக்கச் செல்லும் முன் விக்டரின் அம்மா பைபிள் ஒன்றை ஒரு குழந்தையிடம் கொடுத்து வாசிக்கச் சொல்கிறாள்.

அது கொரியந்தியர் 13ஆம் அதிகாரத்தில் உள்ள 1 முதல்13 வரையிலான வசனங்கள்.

நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்.

நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல ரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.

எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது, அன்புக்கு பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.

அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது.

அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.

சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.

அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.

நம்முடைய அறிவு குறையுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறையுள்ளது.

நிறைவானது வரும் போது குறைவானது ஒழிந்துபோம்.

நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போல சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன், நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.

இப்போது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பாக்கிறோம், அப்பொழுது முகமுகமாயப் பார்ப்போம், இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன்.

இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.

 

குழந்தைகள் மீது உரிமை பாராட்டும் இன்றை மனித சமூகத்தின் முன் இத்திரைப்படம் முக்கிய பிரச்னை ஒன்றை முன்வைத்துள்ளது.

குழந்தைகள் பொதுவானவை. என்னுடையது என்றோ அவனுடையது என்றோ உரிமை பாராட்ட முடியாது. நம் குழந்தைகள் நம்முடையதே அல்ல.

வேராவை பொருத்தவரை அது தெய்வாம்சம் கொண்டது. அதை யாரும் உரிமை பாராட்டுவதை அவள் விரும்புவதில்லை. இரண்டு உடல்கள் கூடும் காம வேட்கையின் வெற்று விளைவல்ல அது. அதையும் தாண்டிய தன்மை கொண்டது. அவள் தேவ குமாரனை கருக்கொண்டிருக்கிறாள். அதனால்தான் அதைக் கொல்ல அவள் விரும்பவில்லை. அலேக்ஸ் மட்டுமல்ல ராபர்ட்டால் கூட அதைப் புரிந்தகொள்ள முடிவதில்லை.

கருக்கலைப்புக்கு பின் அதிக தூக்க மாத்திரகளை விழுங்கி அவள் தற்கொலை செய்துகொள்கிறாள். ஒரு பெரிய உண்மையை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. அதுதான் அவளை தனிமைப்படுத்துகிறது. துயரத்தில் ஆழ்த்திவிடுகிறது.

அவள் தான் குற்றவாளியாக்கப்படுவதை விருப்பவில்லை. தன் விளக்கத்தை எந்த விதத்திலும் புரிந்தகொள்ள முடியாத, கேட்க விரும்பாத கணவனிடம் அவள் எப்படி விளக்குவாள்.

அவனைப் பொருத்த வரை குழந்தை அவனுடையது இல்லை என்றால் வேறு யாருடையது.

மார்க், அலேக்ஸ், அலேக்ஸின் மகன் வீர் எல்லோரும் இந்த உடமை சமுதாயத்தின் வாரிசுகள்தான். மகனே தாயின் ஒழுக்கத்தை கண்காணிப்பவனாக இருக்கிறான். தன் தந்தையை தவிர வேறு ஆண்கள் யாரும் வீட்டுக்கு வருவதை அவன் விரும்புவதில்லை.

அலேக்ஸ், குழந்தைகள் எல்லோரும் அவளை தனிமையில் விட்டுவிட்டு அவர்களது உலகத்தில் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். கணவனின் குழந்தைகளை பெற்றெடுக்கவும், அவர்களை பேணிக்காக்கவும் மட்டுமே அவள் விடப்பட்டிருக்கிறாள்.

அவள் வயிற்றில் இருக்கும் தேவகுமாரன் தானாக உயிர்த்தவன். அவனை யாரும் உரிமை பாராட்டுவதை அவள் விரும்பவில்லை. அவன் பொதுவானவன். அவன் இந்த பிரபஞ்சத்தின் குழந்தை. உண்மையில் அவள் முகத்தில், அவளுடைய இயக்கத்தில் தேவாம்சம் படிந்திருக்கிறது. சாதாரண மனிதர்களின் போக்கு அவளை அதிருப்தியடைச் செய்கிறது.

வால்நெட் மரத்தின் முன் தொடங்கும் படம் வால்நெட் மரத்தின் முன்பே முடிகிறது. முதல் காட்சியில் புழுதியாக இருக்கும் நிலம், கடைசி காட்சியில் அறுவடை நடந்துகொண்டிருக்கும் நிலமாக இருக்கிறது. முதல் காட்சியில் கிராமத்திலிருந்து மார்க் காரில் நகரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறான். கடைசி காட்சியில் அலேக்ஸ் கிராமத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறான். வேரா சொல்வதைப் போல, எல்லாமே ஏதோ ஒரு கதியில் நடந்துகொண்டிருக்கிறது. முடிவில்லாமல் ஒரு சுழற்சியில்.

இப்படம் குழந்தைகள், பெரியவர்கள் என்ற இரு தளத்தில் இயங்குகிறது. குழந்தைகள் உலகம் கபடமில்லாமலும், பெரியவர்களின் உலகம் வன்மம் நிறைந்ததாகவும் இருக்கிறது. குழந்தைகள் உலகம் தேவாம்சம் பொருந்தியதாகவும், பெரியவர்களின் உலகம் அதை முற்றிலும் இழந்த, வெறுமையும், துயரமும் படிந்த குற்றவாளிகளின் உலகமாக இருக்கிறது.

தாம் எதை இழந்தோம் என்ற பிரக்ஞை இன்றி பெரியவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அன்பு அவர்களிடமிருந்து விலகிச் சென்றுவிட்டிருக்கிறது.

அந்த இழப்பை உணர்பவள் வேரா மட்டுமேயாக இருக்கிறாள். அதுவே அவளை தனிமைப்படுத்துகிறது, தற்கொலைக்கு தள்ளுகிறது. முதல் முறை ராபர்ட்டால் காப்பாற்றப்படும் அவள் இரண்டாம் முறை சிக்கிகொண்டு விடுகிறாள்.

மரணமில்லாத வாழ்க்கையை விரும்பிய அவள் மரணத்தை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.

 

இப்படம் ஆர்மேனிய அமெரிக்க எழுத்தாளரான வில்லியம்ஸ் சரோயனின் தி லாபிங் மேட்டர் நாவலை அடிப்படையாக்கக் கொண்டு எடுக்கப்பட்டது. தி ரிட்டன் படத்தில் பிரதான வேடத்தில் நடித்த கான்ஸடடின் லவரன்கோதான் இதில் அலேக்ஸ் பாத்திரத்தில் நடித்துள்ளார். இரண்டு படங்களிலும் தந்தை பாத்திரம். இரண்டிலுமே அவர் பணம் சம்பாதிப்பதற்காக குடும்பத்தை விட்டு சென்று திரும்ப வருபவராக இருக்கிறார். இந்த கால இடைவெளி குடும்பத்தை வேறு ஒன்றாக மாறி வைத்திருக்கிறது. பிரச்னை அங்கிருந்தே தோன்றுகிறது. தந்தை பாத்திரம் திரும்பவும் அதை சரிசெய்ய போராட வேண்டியிருக்கிறது. மகன்களுடனான போராட்டத்தில் தி ரிட்டன் படத்தில் அவரே பலியாக வேண்டியிருக்கிறது. தி பேனிஸ்மென்டில் மனைவியை பலி கொடுக்கிறார். வரலாறு தந்தை என்ற பாத்திரத்தின் மீது ஏற்றி வைத்திருக்கும் சுமையை அவர் சுமந்துகொண்டிருக்கிறார். அதற்கு பொருத்தமான ஒரு நடிப்பை லவரன்கோ வெளிப்படுத்துகிறார்.

வேரா பாத்திரமேற்றிருக்கும் மரியா பொனிவியா நார்வே- ஸ்வீடிஸ் நாடகக் கலைஞர். குடும்பப் பெண் என்கிற சராசரியான தோற்றத்துக்கு அப்பால் அவருடைய பாத்திரம் வடிவம் கொள்கிறது. அதில் நிதானமும், தேய்வாம்சமும், விலகிய பார்வையும் வெளிப்படுகிறது.

ஈடன் தோட்டத்திலிருந்து வெளியேறிய, அறிவை சுவீகரித்துக்கொண்ட மனிதர்களின் துயர நிலையை உணர்த்தவே அவள் அப்படி தோற்றம் தருகிறவளாக இருக்கலாம்.

(அடவியில் வெளிவந்த கட்டுரை)