சாயும் காலம் – சிறுகதைத் தொகுப்பு

ஜீ. முருகன்

jacek-yerka1

1. பாரிச வாயு

ஈஸ்வரன் கோயிலில் புறாக்கள் இல்லை. கோபுரம் வெறுமனே கிடந்தது. எப்போது அவைகள் அந்த கோபுரத்தைத் துறந்து பறந்து போயினவென்று தெரியவில்லை. முன்பைவிட இப்போது கோபுரம் ரொம்பவும் சிதிலப்பட்டுக் கிடந்தது. கிருஷ்ணனிடம் அவனுடைய மாமா புறா வாங்கிவரச் சொன்னதும் அந்த கோபுரம்தான் ஞாபகத்திற்கு வந்தது. நகரத்திற்கு வெளியே, ஒதுக்குப்புறமாக இருந்த அதில் புறாக்களைப் பிடித்தால் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கமாட்டார்கள் என்று அவன் நினைத்தான்.

மசூதி இங்கிருந்து பார்த்தாலே தெரிகிறது. இதே தெருவில் நடந்துபோனால் மார்க்கெட் தெருவின் மையப் பகுதியில் இணைந்துவிடலாம். வலதுபக்கம் திரும்பி நடந்தால் கொஞ்சம் தூரம்தான்.

இன்னும் பொழுது சாய்ந்த பிறகு வந்திருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. இந்த வருஷம்போல எப்போதும் வெய்யில் காயவில்லையென்று வயதானவர்கள் சொல்கிறார்கள். பலமான மழைபெய்தாலும் இப்படித்தான் அவர்கள் முணுமுணுக்கிறார்கள். காற்றின் ஸ்பரிசமே கொஞ்சமும் இல்லை. அவனுக்கு வேர்த்துக் கொட்டியது. வேர்வை ஈரத்தில் சட்டை முதுகோடு ஒட்டிக்கொண்டது.

மார்க்கெட் தெருவில் கொஞ்சதூரம்தான் நடக்க வேண்டுமென்றாலும் அது அவ்வளவு சுலபமான காரியமல்ல. சுவாசத்தை அடைக்குமளவுக்கு எழும் அழுகிய காய்கறிகள், மீன் கருவாடுகளின் துர்நாற்றங்களுக்கிடையே கால்களை ஒரு சர்க்கஸ் வீரனின் சாதுர்யத்துடன் உபயோகிக்கத் தெரிந்திருக்கவேண்டும்.

மசூதியின் பிரதான வாயிலைக் கண்டுபிடிப்பதில் அவனுக்குக் கொஞ்சம் சிரமமாகிவிட்டது. இரண்டு பலசரக்குக் கடைகளுக்கு மத்தியில் இருக்கும் குறுகிய சந்துதான் மசூதிக்குப் போகும் வழி என்று யாரும் நம்பமாட்டார்கள். காம்பவுண்ட் சுவருக்குள் கொஞ்சம் விசாலமான இடத்தை ஓதுக்கிவிட்டு மத்தியில் அது கட்டப்பட்டிருந்தது. அவன் உள்ளே நுழைந்தபோது முகப்பில் யாரும் தென்படவில்லை. எப்போதும் வியாபாரிகளின் கூக்குரல்கள், அசுத்தங்களுக்கு மத்தியில் இப்படி ஒரு அமைதியா என்று அவன் வியந்தான்.

மேலே பார்த்தான். கோபுரத்தின் உச்சிவரை புறாக்களின் சந்தடியே காணோம். பாதி கோபுரத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு எதிரெதிரான ரேடியோக் குழாய்களில் ஒன்றில் ஒரு காகம் மட்டும் உட்கார்ந்திருந்தது. புறாக்கள் எங்கே போய்விட்டன? விசாலமான அந்தக் கட்டடத்தில் வேறு எங்காவது அவைகள் வாசம் செய்யலாமென்று அவனுக்குத் தோன்றியது. இடது பக்கமாகத் திரும்பிய சுற்றுப்பாதையை அனுமானித்து நடந்தான். பிரதான கட்டடத்தின் மாலை நிழல் சுற்றுச்சுவர் வரை நீண்டிருந்ததால் தரை கொஞ்சம் வெப்பம் தணிந்து காணப்பட்டது.

தெற்குப் பக்கத்தில் இன்னும் ஒரு கட்டடம் தென்பட்டது. பிரதான கட்டிடத்திற்கும் அதற்குமிடையே மண்டபம் போன்ற கான்கிரீட் கூரை. அதன் மத்தியில் ஒரு அகன்ற திறப்பு. கீழே நீர்த்தொட்டி. கட்டடத்தை ஒட்டிய நீளமான வராண்டாவில் ஒரு மெலிந்த கிழவர் உட்கார்ந்து அந்த நீர்த்தொட்டியையே வெறித்தபடி இருந்தார். தலையில் கச்சிதமான ஒரு வலைகுல்லா. ஒரு ஆப்பத்தைப்போல அது அவருடைய தலைமேல் கவிழ்ந்திருந்தது.

யாரோ தன்னை நோக்கி வருவதை உணர்ந்ததும் திரும்பி உற்றுக் கவனித்தார். அவருக்குப் பக்கத்தில் போய் நிற்பது வரையில் எதுவும் பேசாமல் பார்வையில் வினவிக்கொண்டிருந்தார். இங்க புறா எதாச்சும் கிடைக்குங்களா?’’ என்று அவன் கேட்டான். எங்கிருந்து வர்ற தம்பி?’’ என்று கேட்டார் உருது உச்சரிப்புடன். அவன் தனது கிராமத்துப் பெயரைச் சொன்னான். ஒரு பொறாக் குஞ்சுகூட இங்க இல்லே’’ என்றார் வருத்தம் தொனிக்க. அவைகள் இங்கே வசித்தபோது அவைகளிடம் அதிக சினேகம் கொண்டிருந்திருக்க வேண்டும். அதுங்களுக்கு என்னக் கேடோ! ஒன்னுகூட தங்கல. எல்லாம் அல்லாவுக்குத்தான் வெளிச்சம்’’ என்று மெல்ல முனகினார்.

அவைகள் இல்லையென்று தெரிந்த பிறகும்கூட ஏனோ அவன் தேடினான். மெல்ல அசைந்து அசைந்து நடந்துபோகும் ஒரு புறாவைக் கற்பனை செய்துகொண்டு இதுபோன்ற ஒரு காட்சி அங்கே தென்படுமென்று அவன் எதிர்பார்த்தான்.

தான் புறப்படவேண்டியதை உணர்ந்து அவன் திரும்பியபோது அங்கிருந்த நீர்த் தொட்டியைக் கவனித்தான். தரைமட்டத்தில் அது தோண்டப்பட்டிருந்தது. மேலிருந்து வந்த வெளிச்சத்தில் அந்த இடமே பிரகாசமாகத் தென்பட்டது. தெளிந்த நீருக்கடியிலிருந்து இரண்டு நீர்த்தாவரங்கள் புறப்பட்டு அந்தத் தடாகம் முழுவதும் கிளைத்துப் பரவியிருந்தன. அந்த வினோதமான தாவரங்களை இதுவரை அவன் எங்குமே பார்த்ததில்லை. அதன் நீண்ட தண்டுகளும், சிறிய சிறிய கீற்றான இலைகளும் எளிதாகக் கவர்ந்துவிடும் வடிவ நேர்த்தியுடன் காணப்பட்டன. அதையே பார்த்துக் கொண்டிருந்தான். இது என்னச் செடி’’ என்று கிழவனிடம் கேட்டான். அது ஒரு பாசி ரகமென்றும், தண்ணீரைச் சுத்தம் செய்வதற்காக இங்கே வளரவிட்டிருப்பதாகவும் அவர் சொன்னார். அவருக்கு அதன் பெயர் தெரியவில்லை. இது குடிக்கிற தண்ணிதானே?’’ என்று கேட்டான் அவன். அந்த நீரைச் சுவைத்துப் பார்க்க அவனுக்கு ஆவல் ஏற்பட்டது. இது குடிக்கிற தண்ணியில்ல. தொழுகைக்கு வர்றவங்க கைகால் கழுவுறதுக்காக’’ என்றார்.

மார்க்கெட் தெருவை விட்டு வெளியேறும்போது அத்தெருவின் முனையில் இருந்த கறிக்கடைகாரரைக் கேட்டுப் பார்க்கலா மென்று யோசனை தோன்றியது அவனுக்கு. கடையின் இரண்டு பக்கமும் கோழிக்கூண்டுகள் உயரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. மினுமினுப்பான மாமிசத் தோரணங்களுக்குப் பின்னால் அவர் தென்பட்டார். அவரிடம் விசாரித்தான். ராஜீவ் காந்தி நகரில் ஒரு ஆள் விற்பதற்கென்றே புறாக்களை வளர்த்து வருவதாக அவர் சொன்னார்.

ராஜீவ்காந்தி நகர் ஊருக்குத் தெற்கே தார்ச் சாலையின் ஓரத்தில் இருக்கிறது. இங்கிருந்து எப்படியும் ஒரு கிலோமீட்டர் தூரமாவது இருக்கும். ஒரு வாடகை சைக்கிள் இந்தப் பயணத்தைச் சுலபமாக்கும் என்றாலும் அவனுக்குத் தெரிந்த சைக்கிள் கடை எதுவும் இங்கே இல்லை. புதியவர்களுக்கு அவர்கள் தரமாட்டார்கள்.

கடைக்காரனுக்கும் அவனுக்கும் தெரிந்த நபரைத் தேடும் சிக்கலை எதிர்கொள்வதைவிட நடந்தே போய் வந்துவிடலாம். கூட்டமும் குண்டுகுழிகளும் நிறைந்த இந்தப் பாதைகளில் சைக்கிளை ஓட்டிச் செல்வதைவிட இதுதான் சுலபமான காரியமென்று அவனுக்குத் தோன்றியது.

தாலுகா அலுவலகத்தைக் கடந்த போது அங்கே பரபரப்புடனும் சலிப்புடனும் தென்பட்ட மனிதர்களைப் பார்த்தான். காகங்களின் எச்சங்களால் பூசப்பட்ட மரங்களுக்குக் கீழே அவர்கள் உட்கார்ந்தபடியும், இங்குமங்கும் நகர்ந்து கொண்டும், கும்பல்கும்பலாக நின்று விசாரித்தபடியும் இருந்தார்கள். நிறைய காகங்கள் அந்த மரங்களில் இரைந்து கத்திக்கொண்டிருப்பதை அவன் எப்போதும் பார்த்திருக்கிறான். எந்தக் காலத்திலும் இங்கே புறாக்கள் வசிக்காது என்று அவனுக்குத் தோன்றியது. இந்த மனிதர்களில் பெரும்பாலானவர்கள் கிராமங்களிலிருந்து வருபவர்கள். இங்குமட்டுமல்ல இந்த நகரத்தின் எல்லா இடங்களிலும் அவர்களுடைய உருவங்கள்தான் நிறைந்து காணப்படுகின்றன. அவர்களுக்கு எவ்வளவோ வேலைகள் இங்கே, வேலைகள் இல்லையென்றாலும் அவர்களை ஈர்த்து அணைத்துக் கொள்கிறது இந்த நகரம். மண்டிகள், உரக்கடைகள், முனியாண்டிவிலாஸ் ஓட்டல்கள், பிராந்திக் கடைகள், தியேட்டர் வாசல்கள், பஸ்டாண்ட் முழுவதும் அவர்கள்தான். இந்த மனிதர்களைப் போலவே புறாக்களும் மரம் செடி கொடிகள், தூய்மையான காற்று இவைகளை விட்டுப் புழுதியும் இரைச்சலும் மண்டிய இந்த நகரத்திற்கு வந்துவிடுகின்றன போலும்.

ராஜீவ்காந்தி நகரில் அந்த வீடு முன்னமே இருந்தது. பிரதானச் சாலையிலிருந்து இடது பக்கமாகப் பிரிந்து செல்லும் தெருவின் வலது பக்கமாக இரண்டு வீடு தள்ளி அவனுடைய வீடு. வீட்டுக்கு முன்னால் பக்கவாட்டாக, மட்டமான பார்சல் பலகைகளால் தைக்கப்பட்ட பெரிய கூண்டு வைக்கப்பட்டிருந்தது. வீட்டுக் கூரைக்கு மேலே உயரமான கம்பத்தின் முனையில் சதுரமான ஒரு மூங்கில் படலும் அதன்மேல் இரண்டு சாம்பல் நிறப்புறாக்களும் உட்கார்ந்திருந்தன. இன்னும் இந்த உலகத்தில் புறாக்கள் அற்றுப்போய்விடவில்லை என்று அவன் மனம் நிம்மதி கொண்டது.

தெருவுக்கும் அவன் வீட்டு வாசலுக்கும் இடையே சாக்கடைக் கால்வாய் மேல் போடப்பட்டிருந்த கருங்கல்லைக் கடக்கும்போதே வீட்டுக்குள்ளிருந்து ஒரு கறுத்த மனிதன் வெளிவந்து நின்றான். தொளதொளப்பான ஒரு நீலநிற டவுசரை அவன் அணிந்திருந்தான். ஏன் புறா ஏதாச்சும் வேணுமா?’’ என்று கேட்டான் அவன். ஆமாம்’’ என்றான். வளர்க்கிறதுக்கா, இல்லே வைத்தியத்துக்கா?’’ “வைத்தியத்துக்குத்தான். அக்காவுக்கு ஒரு பக்க கண்ணை மூட முடியலை. வாயும் ஒரு பக்கமாக இழுத்துப் பிடிச்சிருக்கு, அதுதான்’’ என்றான்.

நரம்புக் கோளாறுதான், டாக்டர் வைத்தியமெல்லாம் அதுக்கு செல்லுபடியாகாது’’ என்றவன் ஒரு டம்ளர் பிராந்தி எடுத்து இந்த பொறா ரத்தத்த அதுல கலந்து குடிச்சா போதும், வேற எந்த வைத்தியமும் வேண்டாம்’’ என்று சொன்னான். ஒன்னுன்னா முப்பது ரூபா, ரெண்டா புடிச்சிகிட்டா ஐம்பத்தஞ்சி ரூபாய்க்கு தர்றேன். பத்துநா கழிச்சி இன்னொரு தபா சாப்பிடலாம்’’ என்றான்.

கிருஷ்ணன் யோசனை செய்துவிட்டு இப்ப ஒன்னுமட்டும் குடுங்க, வேணும்ன்னா திரும்ப வந்து வாங்கிக்கிறேன்’’ என்றான். அவனுடைய மாமா ஒன்று மட்டும்தான் வாங்கிவரச் சொல்லியிருந்தார். அவனுடைய சகோதரிக்கு வந்திருக்கும் நோயை அவர் பாசிசவாயுஎன்று அழைத்தார். பாரிச வாயுஎன்றுதான் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறான். அவரிடம் போய் நீங்கள் சொல்வது தவறு என்று சொல்ல முடியாது. நிச்சயமாக அதை விரும்பமாட்டார்.

கூண்டிலிருந்து ஒரு புறாவைப் பிடித்து அவன் வெளிக்கொண்டுவந்தான். அவனுடைய விரல்கள் சரியாக அதைப் பிடிக்காததால் அதன் சிறகுகள் படபடத்தன. ஒரு சணல் கயிற்றால் அதன் கால்களைக் கட்டி கிருஷ்ணனிடம் கொடுத்தான். சிறிய குருத்தெலும்புகளுக்கு மேல் அதன் மெல்லிய தோல்கள் நழுவிச் செல்வதை அவன் விரல்கள் உணர்ந்தன. காற்றைக் கையில்பிடிப்பதைப் போல எவ்வளவு லேசாக இருக்கிறது! பறவைகளை கையில் வைத்திருப்பதே அற்புதமான விஷயம்தான். அதே நேரத்தில் அதன் கழுத்து அறுபட ரத்தம் சொட்டும் கற்பனையையும் அவனால் தவிர்க்க முடியவில்லை. எவ்வளவு சமாதானங்கள் இருந்தாலும் பறவைகளிடம் இப்படி இரக்கமில்லாமல் நடந்துகொள்ளக்கூடாது என்பது அவன் கருத்து. அவனுடைய மாமாவோ கோழி அறுக்கும் போது அவன் பார்த்திருக்கிறான். ரொம்பவும் உற்சாகமாகவும் நேர்த்தியாகவும் அதைச் செய்துவிடுவார்; ஏதோ பழிவாங்குவது போல.

அந்த மனிதன் வீட்டுக்குள் பார்த்து சொன்னான் பிளாஸ்டிக் பையி ஏதாச்சுமிருந்தா எடுத்தா.’’

ஒரு நீலநிற பாலிதீன் பையுடன் கிருஷ்ணன் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தான். ஐந்தே முக்காலுக்குத்தான் அடுத்த பஸ். இன்று வழக்கத்தைவிட அதிகமாகக் கூட்டமிருப்பதாக அவனுக்குப்பட்டது. அந்தப் பேருந்து கட்டடத்தின் நிழற்குடை மூன்று மணிக்குமேல் உபயோகப்பட்டாது. சூரியனின் சாய்வான கிரணங்கள் உள்ளே பிரவேசித்துவிடுகிறது. ஜனங்களெல்லாம் நிழலுக்காக கடைகள், தூண்கள் என்று நிழல்பார்த்து ஒண்டிக்கொண்டிருந்தார்கள். மரங்களில்கூட காற்றின் சலனமில்லை.

நாலரை மணி பஸ்ஸுக்கே அவன் போய்விட்டிருக்கலாம். எல்லாம் இந்த பிராந்தி பாட்டிலால் வந்தது. புறாவுடன் அரைபாட்டில் பிராந்தியும் வாங்கிவரும்படி அவன் மாமா சொல்லியனுப்பியிருந்தார். வைத்தியத்துக்கு மட்டும்தான் என்றால் அரைபாட்டில் ரொம்ப அதிகம். அவனுடைய மாமா இந்த விஷயத்தில் உத்தமர். வீட்டில் எல்லோரும் அப்படித்தான் கருதி வருகிறார்கள். ஒயின்ஷாப்புக்குப் போவதற்கு அவன் சங்கடப்பட்டான். வீண் பழியைத் தவிர்ப்பதற்கு வேறு ஆட்களுடைய உதவி அவனுக்குத் தேவைப்பட்டது. எல்லாவற்றிலும் கரைகண்ட அவன் ஊர்க்காரர்கள் பலர் இங்கே சுற்றிக்கொண்டிருக்கும்போது இது ஒன்றும் ஆகாத விஷயமல்ல. அப்படித்தான் இது அவன் கைக்கு வந்து சேர்ந்தது.

எவ்வளவு உஷாராக இருந்தும் பஸ்ஸில் அவனால் இடம்பிடிக்க முடியவில்லை. படியில் கால்வைக்கும் முன்னமே கூட்டம் நிறைந்துவிட்டது. அவன் எப்போதும் செய்வதைப்போலவே மையப்பகுதிக்கு முன்னேறினான். ஒல்லியாக இருப்பது இப்படிப்பட்ட சமயங்களில் அவனுக்கு வசதியாகப் போய்விடுகிறது. அவன் கவனமாக இருந்தும் பை ஓரிடத்தில் சிக்கித் திரும்பியது. பையை மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டு முன்னேறி கொஞ்சம் நெகிழ்வாக இருந்த மையப் பகுதிக்கு வந்துவிட்டான். இறங்குபவர்கள், ஏறுபவர்களின் நெருக்குதலிலிருந்து ஓரளவு தப்பித்துவிடலாம். இருந்தும் பஸ் நகரத்தைவிட்டு வெளியேறும் போது அந்த இடத்திலும் நெரிசல் அதிகமாகி அசௌகர்யம் எங்கும் நீக்கமற நிறைந்திருந்ததை அவன் கவனித்தான். இந்த பிராந்தி பாட்டில் மட்டும் இல்லையென்றால் பையை உட்கார்ந்திருப்பவர்களில் யாரிடமாவது கொடுத்துவிடலாம்.

நகரத்தை விட்டு இரண்டு கிலோமீட்டர் தள்ளி பஸ்ஸை ஓரமாக நிறுத்திவிட்டார் ஓட்டுனர். டிக்கட் புக்கிங். பயணிகளின் அதிருப்திக் குரல் தவளை இரைச்சல்போல எழுந்து பரவியது. படிக்கு அருகில் நின்றுகொண்டிருந்தவர்கள் இறங்கிக்கொண்டார்கள். ஒரு விடுதலையை அனுபவிக்கும் திருப்தி அவர்களுடைய முகங்களில் காணப்பட்டது. பஸ் நின்று போனதால் உள்ளே காற்றோட்டம் சுத்தமாக தடைபட்டது. உடல்கள் புழுக்கத்தில் பொங்கத் தொடங்கின. பின் பக்கத்தில் ஒரு குழந்தை சிணுங்க ஆரம்பித்தது.

நடத்துனர் பரபரப்போடு இயங்குவதுபோலத் தென்பட்டாலும் அவர் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டிருந்தார். ஒரு பயங்கரமான கனவுக்குள் சிக்கி மீளமுடியாது தவிப்பதுபோல கைகளை அசைத்துக் கொண்டிருந்தார். குழந்தையின் அழுகை இப்போது உச்சத்துக்குப் போய்விட்டது. எந்த சமாதானத்துக்கும் அது தயாரில்லை. மேலே கம்பியோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டிருந்த பையை ஒரு தரம் பார்த்துக்கொண்டான். அவனுடைய கைக்குப் பக்கத்தில் முன்னும் பின்னும் நிறைய கைகள். முதல் குழந்தையுடன் இன்னும் இரண்டு குழந்தைகள் சேர்ந்துகொண்டன. நடத்துனரும், ஓட்டுனரும் பலருடைய சாபங்களுக்கு ஆளாகிக்கொண்டிருந்தார்கள். சில துடுக்கான பேர்வழிகள் டிரைவருக்கு விசிலடித்து சமிக்ஞை செய்து பார்த்துவிட்டார்கள். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் பிரம்மை பிடித்தவர்போல அவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். பத்து நிமிட துன்ப துயரங்களுக்குப் பிறகு பஸ் புறப்பட்டது.

பஸ்ஸைவிட்டு இறங்கியபோது புதிதாகப் பிறப்பெடுத்து வந்தவன்போல உணர்ந்தான். பஸ் பிரயாணமே இப்படித்தான் என்று ஆகிவிட்ட பின் அவனுக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை. இறங்கியதும் முதல் வேலையாக பையைத் திறந்து பார்த்தான். அதற்கொன்றும் ஆகவில்லை. கண்களைச் சிமிட்டி தலையைத் திருப்பிப் பார்த்தது.

2. குரங்குகளின் வருகை

சித்திரை மாதத்தில் ஒரு நாள் உச்சிப்பொழுதில் அவை காட்டைவிட்டு ஊருக்குள் பிரவேசித்தன. அப்பொழுது எங்கள் கிராமத்தில் பெரும்பாலானவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். இரவு முழுக்க கண்விழித்து கூத்துப் பார்த்த தூக்கமயக்கம் அவர்களை ஆட்கொண்டிருந்தது. மஞ்சள் நிற வேட்டியுடுத்தி, கைகளில் காப்புக்கட்டி, பூநூல் மாட்டியிருந்த கூத்தாடிகளில் பாதிப்பேர் நாடகக் கொட்டகையில் இடமில்லாமல் பண்ணை நிலங்களிலிருந்த மாட்டுக்கொட்டகைகளிலும், பம்பு செட்டுகளிலும், மரத்தடிகளிலும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

அவ்வூர் சிறுவர்கள் உறங்கவில்லை. தண்டாயுதம், சூலாயுதம், ஆங்காங்கே ஜிகினா காகிதம் ஒட்டப்பட்ட வில் அம்பு முதலிய ஆயுதங்களுடன் மறைவான இடங்களை நோக்கி அவர்கள் போய்க்கொண்டிருந்தார்கள். இரவு முன்வரிசையில் இடம்பிடித்துப் பார்த்த கூத்தினை பகல் நேரத்தில் அவர்கள் ஆடிப்பார்க்கப்போகிறார்கள். ஆட்ட களம் வெறிச்சோடி தூங்கி வழியும் நாடகக்கொட்டகையின் அருகில் சில சிறுவர்கள் வண்ணக்காகிதங்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்களோ மதிய உணவுக்குப்பின் தங்களுடைய வாழைத் தோட்டங்களிலும் வயல்களிலும் மும்முரமாக வேலைபார்த்துக் கொண்டிருந்தார்கள். எதிர்பாராத இந்தச் சந்தர்ப்பத்தில் அவை காட்டிலிருந்து இறங்கி வந்தன. ஒன்றல்ல, இரண்டல்ல ஐம்பதுக்கும் மேற்பட்ட குரங்குகள்.

குரங்குகளை முதலில் பார்த்தது பாஞ்சாலையம்மாதான். வாழைத் தோட்டத்தில் நிம்மதியுடன் வெளிக்குப் போய்கொண்டிருந்தவள், பின்னால் ஏதோ சலசலப்பு கேட்கிறதே என திரும்பிப் பார்த்தவள், குரங்குகளைக் கண்டவுடன் வெலவெலத்துப் போய், தோட்டத்தைவிட்டு வெளியே ஓடிவந்தாள். இதற்குமுன் அவள் குரங்குளைப் பார்க்காதவள் அல்ல. காடுகளிலும் கோயில்களிலும் பார்த்திருக்கிறாள். இப்படி திடுதிப்பென்று வாழைத் தோட்டத்துக்குள் பார்ப்போமென்று நினைத்திருப்பாளா அவள்?

மத்தியானமே கண் விழித்துவிட்ட முருகேசக் கவுண்டன் அன்று உடைக்கப்போகும் சுரைக்காய் தண்டாயுதங்களுக்கு கலர் காகிதம் ஒட்டிக்கொண்டிருந்தான். அவன் இன்னும் மத்தியானச் சாப்பாட்டை முடிக்கவில்லை. அவனுடைய மகன் கொண்டுவந்து வைத்துவிட்டுப்போனது பக்கத்திலேயே இருந்தது. வாதாபி தர்பாரில் பஃபூனாக வரும் மாதவக் கவுண்டனை இந்தச் சுரைக்காய் தண்டாயுதங்களால்தான் துரத்தித் துரத்தி அடிக்கவேண்டும். அடித்து உடைக்க வேண்டும். அப்போதுதான் பார்வையாளர்கள் மகிழ்ந்து சிரிப்பார்கள். ஒன்பது நாள் வன்னியன் கூத்தில் ஐந்தாம் நாள் ஆட்டம் முடிந்திருந்தது.

பிள்ளையார் கோயிலுக்கு முன்னால்தான் ஆட்டப் பந்தல். கோயிலை அணைத்த மாதிரி வடக்குப் பக்கத்தில் தென்னங்கீற்றாலான ஒரு கொட்டகை. இதில் தான் வேஷம் தரிப்பது, கலைப்பது, சாப்பிடுவது, தூங்குவது எல்லாம். பின்பக்கம் அழிஞ்சன் கிளைகளால் ஆன வேலி வேயப்பட்டிருந்தது. முருகேசக்கவுண்டன் கீற்றுக் கொட்டகையில் உட்கார்ந்து கலர் காகிதம் ஒட்டிக் கொண்டிருந்த அத்தருணத்தில்தான் வேலி வழியாக திடீரென்று உள்ளே புகுந்துவிட்ட குரங்குகள் கோபுரத்தின் மேலும், ஆட்டப்பந்தல் மேலும் தாவிக் குதித்தன. அப்போது ஆட்டப்பந்தல் மேல் கேட்ட சத்தம் அவனை திடுக்கிடச் செய்தது. அவனது தலைக்கு மேலும் அதே சத்தம் தொடர்ந்த போது அவன் அவசரத்துடன் எழுந்து வெளியே வந்து பார்த்தான். குரங்குகளைக் கண்டு துணுக்குற்றான். சுரைக்காய் ஒன்றைக் கையிலெடுத்து அவைகளை விரட்ட ஆரம்பித்தான். ஆட்டக் களத்தை எங்கே துவம்சம் செய்துவிடுமோ என்று அஞ்சினான் அவன். இந்த ரகளையால் மிரண்டு எழுந்த சிலரும் அவனுடன் சேர்ந்து கொண்டார்கள்.

அதன் பின் வந்த நாட்களில் வாழைத் தோட்டங்களும், தென்னந் தோப்புகளும், மாந்தோப்புகளும் அவைகளுக்கு விளையாட்டுக் களமாயின. வீடுகளுக்குள் புகுந்து சட்டி பானைகளை உருட்டுவது, கட்டுத்தறியில் இருக்கும் மாடுகளை அச்சுறுத்துவது, நாய்களைச் சீண்டுவது என அதன் விளையாட்டுகள் பெருகின.

செங்கல்வாடியான் வீட்டு மாங்காய்த் தோப்பில்தான் அவைகள் கூடாரமிட்டிருந்தன. அது டவுனில் இருக்கும் ஒரு முசல்மானுக்குக் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த வருஷம் நல்ல காய்ப்பு. காவலுக்கு உட்கார்ந்திருந்த கிழவன், அவைகளின் தொல்லை தாங்காமல் நகரத்துக்குப் போய் மொதலாளியிடம் குரங்குகளுடன் மாரடிக்க தம்மால் ஆகாதென்று சொல்லிவிட்டான். வாழைத்தோட்டங்களில் புகுந்து வாழைத்தார்களைச் சாய்த்து அவைகள் செய்யும் நாசத்தைத் தாங்காத விவசாயிகள், முற்றிய தார்களை உடனே வெட்டிக்கொண்டு போகும்படி வியாபாரிகளை நச்சரித்துக் கொண்டிருந்தனர்.

கூத்துக் காலத்துச் சந்தோஷங்கள் ஒரு புறமிருக்க குரங்குகளின் விளையாட்டுக்களை காணவொண்ணா காட்சியாகக் கண்டு பரவசமுற்றார்கள் சிறுவர்கள். தோட்டம் தோட்டமாக அவைகளைத் தேடிப்போனார்கள். குறும்புத்தனமாகக் கற்களை வீசி விரட்டினர். அவைகள் சீறிக்கொண்டு எதிர்க்கையில் பயந்து ஓடிவந்தார்கள். கேபிள் டிவி ஒயர்களைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு தலைகீழாக அவை நடக்கையில் அதியத்துடன் பார்த்தார்கள். பயன்பாடின்றிப் போன ஐந்தாறு டிவி ஆண்டனாக்களை தாட்சண்யமில்லாமல் உடைத்துப் போட்டன குரங்குகள்.

ஊருக்குள் வந்துவிட்டால் எந்தத் தெருவில் அவைகள் நுழைகிறதோ அங்கே உள்ளே ஓடி எல்லா கதவுகளையும் சார்த்திவிட்டு கிலேசத்துடன் சிரித்துக் கொண்டனர் பெண்கள்.

திரும்பவும் வந்த வழியே அவைகள் காட்டுக்குள் போய்விடும் என்ற அவர்களுடைய எதிர்பார்ப்பு பலிக்கவில்லை. கிழக்குக் காட்டிலிருந்து இறங்கிவந்த அவைகள் மேற்கு திசைத் காட்டுக்குப் போகத்தான் இங்கே வந்துள்ளனவே தவிர நிரந்தரமாகத் தங்காது என்று சொன்ன சில அனுதாபிகளின் கூற்றுகள் உண்மையல்ல என்று ஆகியது.

குரங்குகளை எப்படித் திரும்புவம் காட்டுக்குள் ஓட்டுவது என்ற கேள்வி எல்லோருடைய மனதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. எங்கும் எப்போதும் அவைகள் வரலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டார்கள் அக்கிராமத்தினர். வாதாபி சூரனின் படைகளுடன் வன்னிய மகாராசனின் படைகள் மோதும் வேளையில் இடையே வாலியின் படைகள் எங்கே புகுந்துவிடப்போகிறதோ என்று அச்சத்துடன் இருந்தார்கள் ஆட்டக்காரர்கள். அப்படி ஒன்றும் நடக்காதது அவர்களை நிம்மதியடையச் செய்தது.

கூத்து முடியும் வரை காத்திருந்த ஜனங்கள் அடுத்த நாளே மும்முரமாக யோசிக்கத் தலைப்பட்டார்கள். ஆளாளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். ஊரில் இருந்த எல்லா வேட்டைக் காரர்களும் ஒன்று சேர்ந்து துப்பாக்கியால் அவைகளை வேட்டையாடிவிடலாம் என்றார்கள். ஒரு சாராரோ, அது பாவம் என்றும் தெய்வக் குற்றம் என்றும் சொல்லித் தடுத்தனர். அதனால் அம்முயற்சி கைவிடப்பட்டது. சிலரது யோசனைப் படி பட்டாசுகள் வாங்கிவந்து வெடித்தார்கள், பறை அடித்தார்கள், அனுமனுக்குப் பொங்கல் வைத்தார்கள்; ஒன்றுக்கும் அவை பயப்படுவதாக இல்லை. புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்ட ஒருவன், தண்ணீர்ப் பாம்புகளைப் பிடித்துவந்து பொட்டலமாகக் கட்டி அவைகளிடம் போட்டால் பாம்புகளைக் கையில் பிடித்தபடி கத்தியே அவை செத்துப்போகும் என்றான். இந்த யோசனை பலரையும் அச்சமடையச் செய்தது. அப்படி ஒரு கொடுமையைச் செய்வதைவிட சுட்டுக் கொன்றுவிடுவதே உத்தமம் என்று அது தவிர்க்கப்பட்டது. இன்னொருவன் இறுதியாக சொன்ன யோசனை எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. அதைச் சொன்னவன் ஆற்றுத்தெரு வடிவேல் உடையான். மொடாக் குடியனாக இருந்தாலும்கூட அவனது யோசனையைச் செயல்படுத்தவே எல்லோரும் ஆர்வம் கொண்டார்கள்.

இத்திட்டம் உருக்கொண்ட அன்று சாயும்காலமே யாரும் எதிர்பார்க்காத அந்த விபத்து நடந்தது. பஃபூன் மாதவன் பம்புசெட் பள்ளத்தில் விழுந்து, தலை மோட்டாரில் அடித்து நசுங்கிச் செத்துப் போனான். மாதவனின் இறப்பு குறித்து நிறைய வதந்திகள் ஊருக்குள் உலாவந்தன. காப்புக் கட்டிக் கொண்டு கூத்தில் சேர்ந்த பிறகும்கூட சாராயம் குடித்ததால் நேர்ந்த தெய்வகுற்றம் தான் என்றார்கள், தூங்கும் போது தவறி விழுந்துவிட்டான் என்றார்கள்,பங்காளிகள்தான் அடித்துப்போட்டு விட்டார்கள் என்றார்கள், பம்புசெட்டில் தூங்கிக் கொண்டிருந்த பஃபூனை குரங்குகள்தான் பள்ளத்தில் உருட்டிவிட்டன என்றுகூடச் சொன்னார்கள்.

குரங்குகள் ஊருக்குள் வந்தது, நெருப்பில் இறங்கிய வன்னியனின் பாதத்தில் தீக்கொப்புளங்கள் போட்டது, பஃபூன் மாதவன் செத்துப்போனது இவை எல்லாவற்றையும் பார்த்த ஊர்க்காரர்கள் இதெல்லாம் ஏதோ பெரும் தீங்கின் முன் அறிகுறி என்றே கருதினர்.

வடிவேல் உடையான் சொன்ன திட்டத்தின் முதல்படி அந்த மந்தையிலிருந்து ஒரு குரங்கு பிடிக்கவேண்டும் என்பது. அதனால் ஒரு குழு குரங்குகள் முகாமிட்டிருந்த மாங்காய்த் தோப்பை நோக்கிப் புறப்பட்டது. இன்னும் சில குழுக்கள் குரங்குகள் அதிகமாக புழங்கும் இடங்களைக் குறி வைத்து வேட்டையைத் துவக்கின. குரங்கைப் பிடிக்கப்போகிறோம் என்பதே எல்லோரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள் காலியாக இருந்தன. தோட்ட வேலைகள் தடைப்பட்டன.

சுருக்குக் கயிறுகளுடனும் தடிகளுடனும் தோட்டம் தோட்டமாக அலைந்தார்கள், கண்ணிகள் வைத்தார்கள்; எதிலும் அவைகள் பிடிபட மறுத்தன, லகுவாக நழுவிச்சென்றன. ஊரின் பலமுனைகளிலிருந்தும் வியூகம் அமைக்கப்பட்டு குரங்கு வேட்டை நடந்தது.

கடும் முயற்சிக்குப் பின்னால் ஒரு குரங்கு அகப்பட்டது. அதைச் சாதித்தது காளி கோயிலுக்கு அருகிலிருந்த பூங்காவனம்தான். மிரண்டு ஓடிக்கொண்டிருந்த குரங்குக்கூட்டத்திலிருந்து பிரிந்த குரங்கொன்று பூங்காவனத்தின் வீட்டுக்குள் நுழைந்த போது அவள் கதவைச் சார்த்திவெளியே தாளிட்டாள். ஆட்களைக் கூட்டிவர ஓடினாள். வீட்டுக்குள் பெரும் ரகளை நடந்து கொண்டிருந்தது. அதனுடன் வந்த சில குரங்குகள் வீட்டுக் கூரை மேல் பரபரப்புடன் இங்கும் அங்கும் ஓடி அதைக் காப்பாற்ற முயற்சித்தன. ஒரு பெரிய கொசுவலை கொண்டுவரப்பட்டு கதவைத் திறந்ததும் வெளிப்பட்ட குரங்கை வலையில் பிடித்தனர். ஒரு பெண்ணின் சாதாரண தந்திரத்திலேயே அகப்பட்டு விடுவோம் என்று தெரிந்திருந்தால் ஊர்ப்பக்கம் வந்திருக்குமோ என்னமோ அது.

இன்னும் பிரிக்காமல் இருந்த கூத்துக் கொட்டகைக்கு எதிரே பிடிப்பட்ட குரங்கைக் கொண்டுவந்து, பாய்ச்சல் காளையைக் கட்டுவது போல ஒரு நீண்ட கயிற்றின் நடுவில் பிணைத்தார்கள். கயிற்றின் இரண்டு முனைகளையும் இரண்டு குழுக்கள் பற்றிக்கொண்டிருந்தன. ஊரே அங்கே கூடிநின்றிருந்தது. சிறு கற்களை வீசியும் நீண்ட கழிகளால் சீண்டியும் அதை வேடிக்கை பார்த்தது கூட்டம். மிரண்டுபோன குரங்கு கண்களை உருட்டி உருட்டி கிறீச்சிட்டபடி முன்னும் பின்னுமாகக் கயிற்றில் இழுபட்டது. ஆக்ரோஷத்துடன் சீறிக்கொண்டு முன்னால் பாய முயற்சித்து தலைகுப்புற விழுந்தது. இரண்டு மூன்று பேர் குரங்கை அசையாமல் பிடித்துக்கொண்டு கருநீலச் சாயத்தை முகத்தில் பூசினர். ஒரு பையனின் பழைய டவுசர் சட்டையை கொண்டு வந்து மாட்டினர். புது அவதாரம் பூண்டது குரங்கு. இத்தனை நாள் குரங்குகள் செய்த சேட்டைகளுக்கெல்லாம் பழி வாங்கிவிட்டதான திருப்தி பெரும்பாலானவரின் முகத்தில் தெரிந்தது.

இறுதியாகக் கயிற்றிலிருந்து விடுவிக்கப்பட்ட குரங்கை நீண்ட கழிகளுடன் கிழக்குப் பார்த்து விரட்டினர். சிறிது தூரம் ஓடிய குரங்கு நின்று திரும்பிப் பார்த்துவிட்டுத் திரும்ப ஓடியது. ஊர் எல்லையைத்தாண்டும் வரை விரட்டிக்கொண்டு போயினர். அக்காட்சி ஒரு குரங்கை விரட்டுவது போல இல்லாமல் சிறு பையனை விரட்டுவது போலத் தோன்றியதால் சிலர் மனவருத்தம் கொண்டனர்.

மனிதர்களால் அவலட்சணப்படுத்தப்பட்ட அக்குரங்கு தனித்து தோப்பை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. இத்தந்திரம் புரியாத தோப்பிலிருந்த குரங்குகளோ, இதை ஏதோ இதுவரை காணாத புதுவகை மிருகம் என நினைத்து மிரண்டு தோப்பிலிருந்து இறங்கி காட்டை நோக்கி ஓடின. எப்படியாவது மந்தையில் சேர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பின்னாலேயே இதுவும் ஓட எல்லா குரங்குகளுமே காட்டுக்குள் சென்றுவிட்டன. மனிதனின் தந்திரத்தில் மீண்டும் ஒருமுறை தோல்வியைச் சந்தித்தன குரங்குகள்.

குரங்குகளை விரட்டி விட்ட சந்தோஷத்தில் இருந்த ஊர்ஜனங்களோ சிறிது சிறிதாக வெறுமையை உணர ஆரம்பித்தனர். ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்த கூத்தும் முடிந்து விட்டது. வேடிக்கை பார்க்கக் கிடைத்த குரங்குகளும் காட்டுக்குத் திரும்பிபோய் விட்டன. சிறுவர்கள்தான் அதிகம் ஏமாந்து போனார்கள்.

இச்சம்பவம் நடந்து பல மாதங்கள் கழித்து, சம்பவத்தை எல்லோரும் மறந்து கொண்டிருந்த தருவாயில், ஒரு குழந்தை வாலுடன் பிறந்ததுதான் அந்தக் கிராமத்தினரை அதிர்ச்சிடையச் செய்தது.

3. இரண்டாவது மரணம்

அவனைத்தேடி அவனுடைய சகோதரன் வந்துவிட்டுப் போனதாக அலுவலகத்தில் சொன்னதும் குழம்பிப்போனான். வீட்டுக்கு வரச்சொல்லி தன்னுடைய விலாசத்தை ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போயிருந்தார்.

அவனுக்கு உடன் பிறந்த சகோதர்கள் யாரும் இல்லை. இருந்த ஒரே தம்பியும் பத்து வருஷங்களுக்கு முன்பே இறந்துபோய் விட்டான். தூரத்து உறவில் கூட அப்படி யாரும் இந்த நகரத்தில் வசிப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. எந்த சொந்தபந்தக் கொடிகளும் எட்டாத தூரத்திலிருக்கிற நகரமிது; யார் அவனைத் தேடி வந்திருக்க முடியும்?

அவன் மறுத்தான். வேறு யாரையோ தேடிவந்திருக்க வேண்டுமென்று அலுவலக உதவியாளனிடம் வாதிட்டான். இவனுடைய ஊர், பேர் எல்லாவற்றையும் அவர் சரியாகச் சொன்னதாக அவன் உறுதிப்படுத்தினான்.

அலுவலகத்தை விட்டுக் குழப்பத்துடனேயே புறப்பட்டான். அழைப்புச் சீட்டுகளுடன் வீடுகளைக் கண்டுபிடித்து பழுதான டிவிக்களை சரிசெய்து தருவது அவனுக்கு வேலை. ஆறு வருஷங்கள் கழிந்துவிட்டன, இந்த வேலையை மேற்கொண்டு. இந்த நகரம் முழுக்க அவனுக்கு அத்துப்படி இதுநாள் வரை ஒரு உறவினைக்கூட இங்கே அவன் சந்தித்ததில்லை.

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு திரும்புவம் அந்த விலாசத்தைப் பார்த்தான். அவனுடைய அறைலிருந்து பக்கம்தான். நடந்தேகூட அங்கே போய்விடலாம்.

போய் பார்த்துத்தான் ஆகவேண்டுமாயென்ன? போகாமலேயே இருந்துவிடலாம். ஆனால் அவருக்கு என் விலாசம் தெரிந்திருக்கிறது, மீண்டும் என்னைத் தேடிவந்து விட்டால் பார்க்காமல் இருந்ததற்கு என்ன சமாதானம் சொல்வது?

யாராக இருந்தாலும் அவர் ஒரு மனிதர், அதிலும் என் உறவுக்காரர், என்னைத் தெரிந்திருப்பவர், சந்திக்க விரும்புபவர். தினம் தினம் எத்தனையோ விலாசங்களுக்குப் போய் எத்தனையோ விதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். அவர்களில் ஒருவராக இவரையும் நினைத்து ஏன் போய்ப் பார்க்கக்கூடாது? இறுதியாக அவரைப் பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தான்.

எத்தனையோ முறை இதே தெருவில் அவன் போய் வந்திருக்கிறான் என்றாலும் இந்த வீட்டை அவன் கவனித்ததில்லை. சற்று உயரமான மதில் அவன் பார்வையை மறைத்திருக்கிறது. வீடு கண்ணில் பட்டிருந்தால் அதன் தோற்றம் நிச்சயம் அவன் கவனத்தைக் கவர்ந்திருக்கும்.

இதேபோன்ற வீட்டை வேறு எங்கோ பார்த்திருப்பது போல அவனுக்கு நினைவு. அவனுக்கு வியப்பாக இருந்தது. இந்த நகரத்திற்குப் பொருத்த மில்லாத ஒரு வீடு. இரண்டு மரத்தூண்கள் தாங்கி நின்ற முன் கூரைக்குப் பின்னால் உள்ளடங்கியமாதிரி ஒரு பெரிய கதவு. கதவிலிருந்த செதுக்குச் சிற்பங்கள், வடிவங்கள் எல்லாமே அவனுக்குப் பரிச்சயமானவை. அவன் வீட்டுத் தலைவாசலில்கூட இதே பாணியிலான செதுக்கல்கள் உண்டு.

அழைப்பு மணியின் பொத்தானை அழுத்தினான். கதவுக்குப்பின்னால் யாரை சந்திக்கப் போகிறோமோ என்ற பெரும்புதிர் அவனைக் கிளர்ச்சிக் குள்ளாக்கியது. கதவின் தாழ்ப்பாள் நீங்கும் சத்தம் கேட்டது. கதவு திறந்துகொண்டு ஒரு பெண் வந்து நின்றாள். இதற்குமுன் எப்போதும் அவளை அவன் பார்த்ததில்லை.

நீங்க…’’

பெயரைச்சொன்னதும் அவளுடைய முகம் மலர்ந்தது.

உள்ள வாங்க’’

நீண்டநாட்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த விருந்தாளியை வரவேற்பது போல அவனை அவள் வரவேற்றாள்.

விசாலமான ஒரு வரவேற்பறைக்குள் அவன் நுழைந்தான். நான்கு தூண்கள் வைத்து ஒரு கோயில் மண்டபம் போல அது கட்டப்பட்டிருந்தது. கூரையில் சதுரமான ஒரு திறப்பு. அதைச் சுற்றி மேல் சுவர். சுவரின் நான்கு பக்கங்களிலும் நான்கு ஜன்னல்கள். தூண்களுக்கு நடுவே பிரகாசமான ஒளி மேலிருந்து வந்து தரையில் விழுந்தது. அங்கே ஒரு குழந்தை அழுதபடி இருந்தது.

உட்காருங்க’’ என்று ஒரு நாற்காலியைக் காண்பித்தாள் அவள். பெட்டியைச் சுவர் ஓரமாக வைத்துவிட்டு அவன் உட்கார்ந்தான்.

உங்கண்ணா நீங்க வருவீங்கன்னு இன்னிக்கெல்லாம் வீட்லதான் இருந்தார். இப்பதான் கொஞ்சநேரத்துக்கு முன்னாடி ஆண்டாள கூட்டிகிட்டு வர்ரதுக்கு ஸ்கூல் வரைக்கும் போயிருக்கார், இப்ப வந்துடுவார்.’’

குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, “சித்தப்பா வந்திருக்காங்க பாரு, அவுங்க எதிர்க்க அழக்கூடாது என்ன. இங்கியே அவருகூட விளையாடிக்கிட்டிரு, காப்பி வச்சிக்குடுக்கலாம்’’

குழந்தையை அவனுக்கு எதிரில் கொண்டு வந்து இறக்கிவிட்டாள்.

அவள் உள்ளே போய் மறைந்ததும் குழந்தையை தூக்கி மடியில் வைத்துக் கொண்டான். அது அழுகையை நிறுத்திவிட்டு வியப்புடன் அவனைப் பார்த்தது. அவனுடைய பாக்கட்டில் இருந்த பேனாவை எடுக்க அது பிரயத்தனப் பட்டதைக் கண்டு அவனே எடுத்துக்கொடுத்தான். வாங்கியதும் அவனையே பார்த்துக்கொண்டு அவசரத்துடன் வாயில் வைத்துக்கொண்டது.

மாடிக்குச் செல்லும் இந்த மரப்படிகளில் ஏற்கனவே அவன் தாவி ஏறிச்சென்றிருப்பதுபோல ஒரு நினைவு. இந்தக் கதவுகளின் வழியேகூட எண்ணற்ற தடவை அவன் போய் வந்திருக்கிறான். எப்போதோ அவன் நுகர்ந்திருந்த ஒரு மணத்தை இந்த ஜன்னல்களில் நுழைந்து வந்த காற்று சுமந்து வந்தது. பழைய மணம். காலத்திலும் தூரத்திலும் வெகு தொலைவு பயணித்து இங்கே வந்திருக்கிறது.

காப்பியுடன் அவள் வந்தாள். காப்பியை அவனிடம் கொடுத்துவிட்டு குழந்தையை வாங்கிக்கொண்டு தூணுக்குப் பக்கத்தில் போய்த் தரையில் உட்கார்ந்துகொண்டாள். பெரிய ரகசியம் ஒன்றை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறாள் அவள். அது உடையப்போகும் ஆனந்தம் அவளிடம் தெரிந்தது.

நேத்துதான் மாமாவுக்கு காரியமெல்லாம் முடிஞ்சது’’ என்றவள் சற்று இடைவெளிவிட்டு, “காரியத்துக்காவது கூப்பிடுங்கன்னு அவருக்கிட்ட சொன்னேன். அவர்தான் வேணாம்ன்னு சொல்லிட்டார்’’

காப்பியை மெல்லப்பருகிக் கொண்டே அவன் கேட்டுக் கொண்டிருந்தான். சகஜமான அவளுடையபேச்சு அவனை ஆச்சர்யப்பட வைத்தது.

மாமாவுக்கு வயசாயிடுச்சி. எண்பதுக்குக் கிட்டத்தட்ட இருக்கும். இவ்வளவு வயசுவரை வாழ்ந்ததே பெரிய விஷயம். இதுக்கெல்லாம் தெய்வகுடுப்பன வேண்டும். நாமெல்லாம் அறுவதையே தாண்டுறமோ என்னமோ. அத்தை சாவும்போது அவுங்களுக்கு அறுவத்தியஞ்சு வயசுதான். அப்பெல்லாம் இவர் அங்க இங்க ஓடி வேலை செஞ்சுகிட்டிருந்தார். இந்த வீட்டையே அவருதான் கட்டினார். எல்லா வேலையும் அவரோடதுதான். மரவேலை முடியமட்டும் இரண்டு வருஷமாச்சி. இந்த வீடுகட்டுன செலவுல ரெண்டு வீடு கட்டியிருக்கலாம்’’ என்று சொல்லி அவள் சிரித்தாள்.

நீங்க இந்த ஊருக்கு வந்தபோதே அவருக்குத் தெரியும். உங்கள வீட்டுக்கு கூப்பிடலேயேங்கிற வருத்தம் அவருக்கு எப்பவும் உண்டு. மாமா இருக்கிற வரைக்கும் எதுவும் உங்களுக்குத் தெரியவேணாம்ன்னு விட்டுட்டார்.’’

மாமாஎன்று அவள் குறிப்பிடுவது யாரை என்றுதான் புரியவில்லை அவனுக்கு. ஏற்கனவே, இவனுக்கு எல்லாமே தெரியும் என்பதுபோல ஏன் பேசுகிறாள் இவள்?

வெளியே ஸ்கூட்டர் சத்தம் கேட்டது.

அவர் வந்துட்டார்’’ என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறப்பதற்காக எழுந்து போனாள்.

அவரை எதிர் கொள்வதற்குத் தன்னைத் தயார் படுத்திக்கொண்டான். ஏனோ அவன் மனம் பதற்றமடைந்தது. சிரித்துக்கொண்டே அவர் உள்ளே வந்தார். பின்னால் கான்வென்ட் உடையில் இருந்த மகளுடன் அவளும் வந்தாள்.

அப்பு வந்து ரொம்ப நேரமாச்சா?’’ என்று கேட்டுக்கொண்டே அவனிடம் வந்தார்.

இப்பதான் கொஞ்சம் நேரமாச்சி’’ என்று எழுந்தான்.

உட்கார் உட்கார்’’ என்று சொல்லிக்கொண்டே இன்னொரு நாற்காலியை அருகில் இழுத்துப்போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்.

இதற்குமுன் அவன் அவரைப் பார்த்திருக்கிறான். அவனுக்கு ஞாபகம் வந்துவிட்டது. பெரியம்மா சாவின்போதுதான் அது. அவனிடம் வந்து பேசியிருக்கிறார். அவன் என்ன செய்கிறான், என்ன படிக்கிறான் என்று விசாரித்தார். அவர் யார் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் அப்பா பிறந்து வளர்ந்த ஊருக்குப் போனால் அது போல நிறையப் பேர் அவனிடம் விசாரிப்பது வழக்கம்தான்.

வேட்டி சட்டையில் மிகச்சாதாரணமாகத்தான் அவர் இருந்தார். கபடமில்லாத ஒரு முகம். மீசையை வழித்துவிட்டிருந்தார்.

வேலையெல்லாம் முடிஞ்சாச்சி இல்லையா?’’

முடிச்சிட்டுதான் வந்தேன்’’ என்றான். அவரை எப்படி அழைப்பது என்று விளங்கவில்லை அவனுக்கு.

ஆண்டாளம்மா இங்க வாங்க’’

அந்தப் பெண் அவரிடம் போய் ஒட்டிக்கொண்டு நின்று சங்கோஜத்துடன் இவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

நம்மப் பாட்டி பேரத்தான் இவளுக்கு வச்சிருக்கேன்’’ என்று சிரித்தவர்,

ரொம்ப பழைய பேரா இருக்குன்னு எல்லோரும் சொன்னாங்க… ஆண்டாள்நல்லாத்தானே இருக்கு’’ என்று அவனைப்பார்த்து மீண்டும் சிரித்தார்.

அவனுக்குப் பக்கத்திலிருந்த காலி டம்ளரை எடுத்துக்கொண்டு அவன் மனைவி உள்ளே போனாள்.

சித்தப்பாவுக்கு வீட்டச் சுத்தி காமிக்கலாமா?’’ என்று தன் மகளிடம் சொல்லிக்கொண்டே அவர் எழுந்தார்.

அப்பு வா’’ என்று அவனை அழைத்தார்.

அவனுடைய சித்தப்பாவை அவன் அய்யா இப்படித்தான் அழைப்பது வழக்கம். அந்த வார்த்தையை அப்படியே இவர் பயன்படுத்தியது இவனை வசியப்படுத்தியது. தயங்கியபடி எழுந்து அவருக்குப்பின்னால் நடந்தான். அச்சிறுமியும் நாணம் தெளிந்தவளாக ஓடிவந்து இவன் கையைப் பிடித்துக்கொண்டாள்.

எல்லா அறைகளும் வரவேற்பறையை ஒட்டியே இருந்தன. ஒரு கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனவர் தயங்கி வெளியே நின்ற அவனை உள்ள வா’’ என்று கூப்பிட்டார்.

அறை இருட்டாக இருந்தது. முதலில் எதுவுமே அவனுக்குப் புலப்படவில்லை. அது பூஜை அறை. சிறு சிறு மின் விளக்குகளுக்குப் பின்னால் நிறைய சாமி படங்கள் மாட்டி வைக்கப்பட்டிருந்தன. எல்லாப் படங்களும் அலங்காரமான ஒரு மர ஸ்டாண்டில் பொருத்தப்பட்டிருந்தன.

கீழே தனியாக ஒரு படம் மாட்டியிருந்தது. புதிதாக அதற்கு மாலை அணிவித்திருந்தார்கள். சிறிய மின் விளக்குதான் என்றாலும் உருவத்தைத் துல்லியமாகவே அது காட்டியது. வயதான ஒருவரின் ஓவியம். அந்த மனிதரை அவன் பார்த்திருக்கிறான். இந்த முகம் யாருடையது? அருகில் நின்றுகொண்டிருந்தவரை அவன் திரும்பிப்பார்த்தான்.

இது…?’’

தெரியலையா?’’

மீண்டும் அந்த ஓவியத்தை அவன் பார்த்தான்.

அவன் அய்யாதான் அது. எப்படி மறக்க முடியும்?

அதிர்ச்சியுடன் அதையே அவன் பார்த்துக்கொண்டிருந்தான். அவருடைய வாழ்நாளில் புகைப்படமே எடுத்துக்கொள்ளவில்லை என்று அவன் அம்மா சொல்லியிருக்கிறாள். ஆனால் இங்கே அவருடைய ஓவியம் ஒன்று இருக்கிறது.

ஆண்டாளம்மா சாமி கும்பிடுங்க’’ என்று அவர் தன் மகளிடம் சொன்னார்.

அவள் கைகளைக் கூப்பி கும்பிட்டாள்.

அப்பு வா போகலாம்’‘ என்று அவனை வெளியே கூட்டிக்கொண்டு வந்தார்.

இன்னொரு அறைக்குள் நுழைந்ததும் அந்த மணம் திரும்பவும் அவன் நாசியில் உக்கிரமாகத் தாக்கியது. அது என்ன என்பதை அவன் புரிந்துகொண்டான். சிறுவயதில் அவன் அய்யாவின் பிணத்தருகே நின்றிருந்தபோது நுகர்ந்த மணம்தான் அது.

அவர் படுத்திருந்த கயிற்றுக் கட்டிலுக்குப் பின்னால் சுவரில் சதுரமாக மஞ்சள் பூசி சாம்பல்பட்டை இட்டு பொட்டு வைத்திருந்தார்கள். அருகே ஒரு குத்துவிளக்கு எரிந்தபடி இருந்தது. அறையின் ஒரு மூலையில் இருந்த நாற்காலியைப் பார்த்துத் திகைத்து நின்றான். கறுத்த நிறத்தில் அது கம்பீரமாக உட்கார்ந்திருந்தது. அவன் அய்யா செய்து முடிக்காமல் விட்டுப்போன நாற்காலியைப் போல ஒன்று. அச்சு அசல் அதுவேதான்.

அவர் சொன்னார், “போன ஞாயிறு எட்டில்தான் அப்பா உயிர்விட்டார்.’’

இருபது வருஷங்களாகிவிட்டன அவர் இறந்து என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். அவன்தான் அவருடைய சிதைக்கு கொள்ளி வைத்தவன். இப்போதுதான் அவர் இறந்தார் என்றால்?

அவனுடைய அம்மாவைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னால் அப்பாவுக்கு வேறு சில பெண்களுடன் உறவு இருந்ததாக அவனுக்கு சொல்லியிருக்கிறார்களே தவிர இப்படித் தனியாக ஒரு குடும்பம் உண்டென்று யாரும் சொன்னதில்லை. அதற்கான தடயங்களும் இதுநாள் வரை அவனுக்குப் தென்பட்டதுமில்லை.

ஒரு மனிதனின் வாழ்க்கை இரண்டாகக் கிளைத்து இரண்டு மரணப்பூக்களைப் பூப்பது சாத்தியம்தானா?’’ என்று அவன் தன்னையே கேட்டுக்கொண்டான்.

என்னுடைய அப்பா முன்பே இறந்து விட்டார். இது என்னுடைய அப்பா இல்லை. இது கற்பனையான ஓவியம் மட்டுமே. அப்படி ஒருவரை நீங்கள் கற்பனை செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய கற்பனையால் என்னைக் குழப்ப வேண்டாம். நான் போய்விடுகிறேன். என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்என்று அவன் அவரிடம் சொல்ல நினைத்தான். ஆனால் சொல்ல முடியவில்லை. அவருடைய உறவைத் துண்டித்துக் கொள்வதற்கான துணிச்சல் அவனுக்கு வரவில்லை.

கணவன் மனைவி இருவரும் நம் வரவால் எவ்வளவு மகிழ்ந்து போயிருக்கிறார்கள், எதற்காக நம்முடன் உறவு கொண்டாட வேண்டும்? நம்மால் ஆகக்கூடியது என்ன இருக்கிறது இவர்களுக்கு?’

இவர்களுக்கு எல்லாமே தெரியும். ஒரு கனவைப் புதிர்போல அவனுக்கு முன் பரிமாறிவிட்டு நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை ஏன் இத்தனை புதிராக இருக்கிறது? எனக்குத் தெரியாமல் இன்னும் எத்தனை புதிர்களை அது தனக்குள் மறைத்து வைத்திருக்கிறது?

மரப்படிகளின் வழியே அவனை மாடிக்கு அழைத்துக்கொண்டு போனார். அங்கு அவருக்குத் தனி அறை ஒன்று இருந்தது. அது அவருடைய அலுவலக அறை. துணி வியாபாரம் செய்வதாக அவனிடம் சொன்னார்.

எதிரெதிரான இரண்டு ஷோபா நாற்காலிகளில் அவர்கள் உட்கார்ந்தார்கள்.

இந்த ஓவியத்தை யார் வரைந்தது?’’ என்று முத்துசாமி கேட்டான். அய்யாவோட படம் ஒன்னுகூட எங்ககிட்ட இல்லை. போட்டோவே எடுத்துக்கலைன்னு அம்மா சொன்னாங்க’’

நான் கிராமத்தில் இருந்த போது ஒரு நாடோடி ஓவியன் வரைந்து கொடுத்தான்’’ என்றார் அவர்.

அவருடைய கண்கள் கலங்கியிருந்தன. இருவரும் பேசாமல் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தார்கள்.

அவர் சொன்னார், “இதெல்லாம் கனவுபோலத்தான் இருக்குது. இந்த ஊருக்கு நீ வந்தபோது சந்தோஷமா இருந்தது. அதே சமயத்தில் நான் கண்டுகிட்டிருந்த கனவ எங்க கலச்சிடப்போறியோன்னு பயமாவும் இருந்தது.’’

இரவு உணவை அவர்களுடனேயே சாப்பிட்டான்.

புறப்படும் முன்பு அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு கேட்டார், “அப்பு இங்கேயே தங்கிக்கொள்ளேன். இதுவும் உன்னுடைய வீடுதான்’’

இது எப்படி என்னுடைய வீடாக முடியும்?’

பிறகு வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டு அவன் கிளம்பி வந்துவிட்டான்.

வாழ்க்கையின் பெரிய ரகசியமொன்று பல வருஷங்கள் புதைந்திருந்து இன்று வெளிப்பட்டிருக்கிறது. அதுவாக வந்து அவனுக்கு முன்னால் பெரிய ஓவியமாக விரிந்திருக்கிறது. அந்தரங்கமான நிழல்களாக, பரவசப்படுத்தக்கூடிய ஒளியாக, பூடகமான தூரிகைத் தீற்றல்களாக, புதிரான வண்ணச் சேர்க்கைகளுடன்… அது கனவின் மொழி போல, தர்க்கம், ஒழுங்குக்கு அப்பாற்பட்டது.

இனி இந்த ஓவியத்தை என்ன செய்வது?

அவன் அய்யாவுக்கு இன்னொரு குடும்பம் இருந்ததும், அங்கு இன்னொரு கிளையாக அவர் வாழ்ந்து மடிந்ததும் தெரிந்தால் அவன் அம்மா என்ன சொல்வாள், எப்படி இதை எதிர்கொள்வாள்?

இரவு வெகுநேரம் அவன் தூங்கவில்லை. மொட்டை மாடியில் கைப்பிடிச் சுவர்மேல் உட்கார்ந்து இரவு நகரத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய சகோதரனை நினைத்த போதே அவன் மனம் கனத்தது. தன்னை மன்னித்து விடும்படி அவனிடம் கேட்கவேண்டும் போல ஓர் உணர்வு எழுந்தது.

4. மாயக்கிளிகள்

தனது இனத்துடன் வனங்களில் திரிந்து கொண்டிருந்தவளிடம் பிரேமைகொண்டு பட்டமகிஷியாக்கிக் கொண்டான் அரசன். மலைநாட்டுக்காரி ராணியாகி விட்டாள். அவள் இங்கே வரும்போது சீதனமாகப் பாடல்களைக் கொண்டு வந்திருந்தாள்; ஏராளமான பாடல்கள். அவள் பாடத்தொடங்கிய கணத்திலேயே நறுமணம் கமழ்ந்தது. துரிதமாக வளர்ந்து பூத்தன செடிகளெல்லாம். அவள் வருகைக்குப் பின்னர் அந்தப்புரத்திற்கு விதவிதமான பறவைகள் வரத்துவங்கின. புதுப்புது வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள் காணக்கிடைத்தன.

வேட்டைக்குப் போனவன் இப்படி மணக் கோலத்துடன் திரும்பி வருவானென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சூன்யக்காரி என்று குமைந்தார் கிழட்டு மந்திரி. ஒரு மலைநாட்டுக்காரி கீர்த்திமிக்க இந்நாட்டின் மகாராணியாவதை அவருடைய மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அரச வம்சத்தில் இதுவரை எப்போதும் சம்பவிக்காத ஒரு இழுக்காக இதைக் கருதி வருந்தினார்.

ஒரு குழந்தையைப்போல இயல்பு கொண்டவனான அரசனோ மிதமிஞ்சிய ஆர்வத்தில் காரியங்களைச் செய்து விடுபவனாகவும் இருந்தான். மந்திரியின் வார்த்தைக்குச் செவிசாய்ப்பவன் தான் என்றாலும் இது இராஜ்ய விஷயமல்லவே.

அரசனை நீண்ட இரவுகளில் வைத்து தாலாட்டினாளவள். காதல் போதையில் மூழ்கிக்கிடந்தான் அவன். இப்படியாக நாட்கள் நகர்ந்தன. அரசனின் சிறுபிள்ளைத்தனமான காதல் விளையாட்டுகள் அவளுக்கு சீக்கிரமே திகட்டிப் போனது. வழி வழியாக அரசர்களின் பத்தினிகள் உலவிவந்த அந்தப்புரத்தில் தான் கொண்டுவந்து வைத்திருப்பது ஒரு காட்டாறு என்று உணராதது அவனுடைய பிசகுதான். சரசங்களில் லயித்துப் போயிருந்தானேயல்லாது அவளிடம் எழுந்த வேட்கை வரம்புகளைக் கடந்து பரவக்கூடியது என்பதை அறிந்தானில்லை. அவளுடைய பாடல் சரீரத்திலிருந்து எழுந்தது என்பதையும் அவள் அவனிடம் வேண்டிநின்றது பரவசத்தையல்ல, வலியை என்பதையும் அவன் உணரத்தவறிவிட்டதன் விளைவு, அவள் வேறு ஆடவர்களுடன் நாட்டம் கொள்பவளானாள்.

மரகதம் போன்று ஒளி வீசும் பத்துக் கிளிகளை அரசன் அவளுக்காகப் பரிசளித்திருந்தான். அந்தக் கிளிகளை கொடிகளாலான ஒரு அழகிய கூண்டு செய்து தனது சயன அறையில் வளர்த்து வந்தாள் அவள். அவற்றில் இரண்டைக் கொன்று எறிந்துவிட்டு அதற்குப் பதிலாக இரண்டு படைவீரர்களைக் கிளிகளாக்கி கூண்டுக்குள் வைத்துக்கொண்டாள். தான் விரும்பிய போதெல்லாம் அவர்களை மானுடர்களாக்கி கூடிக் களித்து வருவது நடந்தது.

அரண்மனையின் பாதுகாப்போ கிழட்டு மந்திரியின் கையில். அவருடைய உளவாளிகளின் கண்கள் அரண்மனைக்குள் எங்கும் நீண்டு உளவு பார்த்து வந்ததை அரண்மனைக்குப் புதியவளான ராணி அறிந்து கொள்ளாதது அவளுடைய துரதிஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.

செத்து விறைத்துப்போயிருந்த கிளிகள் இரண்டும் மந்திரிக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தன. அந்தப்புர மதில்சுவருக்கு வெளியே கிடைத்ததாகச் சொல்லி உளவாளிகளில் ஒருவன் அவைகளைக் கொண்டுவந்து அவரிடம் சேர்த்திருந்தான். விசாரித்ததில் கிளிகள் இரண்டும் அரசன் ராணிக்கு பரிசாகக்கொடுத்தவை என்பது அவருக்குத் தெரியவந்தது. அந்தப்புரத்தில் வளரும் கிளிகளைக் கணக்கிட்டு வரும்படி ஆளனுப்பினார். திரும்பி வந்தவனோ எல்லாக் கிளிகளுமே கூண்டில் பத்திரமாக இருக்கிறதென்று சொன்னான். கண்களை மூடி யோசனை பண்ணிப்பார்த்த மந்திரி சூட்சுமம் புரிந்து சிரித்தார். அவருக்குப் புரிந்து விட்டது, அவளுடைய காதல் பாடல்களுக்கு செவியை அறுத்துக் கொடுத்துவிட்ட அரசனுக்கு எங்ஙனம் புரியவைப்பது? அதனால் அவளுடைய சதியைத் தானே தகர்த்தெறிவது என்ற முடிவுக்கு வந்தார்.

மந்திரியின் உத்தரவுப்படி ஏவலன் வந்து கிளிகளை கணக்கிட்டதுமே ராணிக்கு விளங்கிவிட்டது. சற்றே கலக்கமடைந்தாள். விபரீதம் உணராமல் கொன்ற கிளிகளை வெளியே ஏன் எறிந்தோம் என்று தன்னையே நொந்துகொண்டாள். அந்தப்புரத்துத் தோட்டதிலேயே மண்ணில் போட்டு புதைத்துவிட்டிருக்கலாம். தன்னுடைய துரோகம் அரசனுக்குத் தெரியவருமானால் நிகழப்போகும் பின்விளைவுகள் என்னவோ என்று அச்சம் கொண்டாள். சிறிது நேரத்திலேயே இந்த அச்சம் அவளை விட்டு அகன்றது. தன்னைச் சுதாகரித்துக்கொண்டுவிட்டாள்.

அந்தி மங்கிய நேரத்தில் அரசன் அந்தப்புரத்திற்கு வந்தான். வழக்கமாக அவனை வரவேற்கும் பாடலை அவள் பாடவில்லை. பேசிய இரண்டு மூன்று வார்த்தைகள் கூட உற்சாகமில்லாமல் வெளிவந்ததைக் கண்ட அரசன் அவளிடம் சொன்னான், “உன்னுடைய வருத்தம் எனக்குப் புரிகிறது கண்ணே. உனக்கு நான் அன்புடன் பரிசளித்த கிளிகள் பிரச்சினைக்குரியதாக மாறுமென்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்? அந்நிய நாட்டு உளவாளிகள் கிளிகளாக உருமாறி கூண்டுக்குள் பதுங்கியிருப்பதாக மந்திரி சந்தேகப்படுகிறார். இது நாட்டின் பாதுகாப்புக்கே வந்திருக்கும் அச்சுறுத்தல் அல்லவா? அதனால்தான் அவற்றைக் கண்டுபிடித்து கொன்று விடும்படி மந்திரிக்கு உத்தரவு வழங்கிவிட்டு வந்திருக்கிறேன். உன்னதமான நம் காதலை முன்னிட்டு என்னை நீ மன்னிக்க வேண்டும். அந்தக் கிளிகளுக்குப் பதிலாக வேறு கிளிகளை உனக்கு வாங்கித் தந்துவிடுகிறேன்’’ என்றான்.

வினோதமாகத்தான் இருக்கிறது மந்திரியின் சந்தேகம். அந்தப்புரத்தில், அதிலும் நம் சயன அறையில் இப்படி ஒரு சதி நடக்குமென்று நீங்கள் நம்புகிறீர்களா?’’ என்று கேட்டாள் ராணி.

அதற்கு வாய்ப்பு இல்லைதான், இருந்தாலும் மந்திரி ஆதாரமில்லாமல் சந்தேப்படமாட்டார். அதிலும் என் அன்புக் கண்ணாட்டிக்குப் பரிசளித்த கிளிகள் மேல் அவருக்கென்ன விரோதம் இருக்கப்போகிறது சொல்’’ என்று சொல்லி அவளைத் தழுவினான்.

தனது புகைச்சலை மறைத்தபடியே அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் ராணி. ஆனால் முன்பு அவளிடம் இருந்த உற்சாகத்தைக் காணாத அரசன், “இன்னும் என்ன வருத்தம் ராணி? கிளிகளைக் கொல்லப்போகிறார்களே என்றா? எனக்கு மட்டும் வருத்த மில்லையா என்ன? அதிலும் கிளி நமது நாட்டின் தேசியச் சின்னமாயிற்றே. ஆனால் கொல்லப்பட இருக்கும் கிளிகள் அந்நிய நாட்டு உளவாளிகள்தானே?’’

அப்படியிருந்தால் எனக்கென்ன ஆட்சேபனை இருக்கப்போகிறது அரசே? ஆனால் இந்தச் சந்தேகம் விபரீத விளைவுகளில் கொண்டுபோய் விட்டுவிடக்கூடாதே என்பதுதான் என் கவலை.’’

விபரீதமாக முடியுமளவுக்கு இதில் என்ன இருக்கிறது?’’

கொல்லப்பட்டது உளவாளிகள் இல்லை, உண்மையான கிளிகள்தான் என்று ஆகுமானால் நாட்டின் தேசியச் சின்னத்தை அரசனே அவமானப்படுத்திவிட்டதாக மக்கள் கலகம் செய்யக்கூடுமில்லையா?’’

நீ சொல்வது சரிதான். ஆனால் மந்திரி அனுபவமிக்கவர். எல்லாவற்றையும் சரியாகவே அவர் செய்வார், உனக்கு கவலைவேண்டாம். ஆமாம் எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் இந்த ராஜாங்க விஷயங்களைப் புரிந்துகொண்டாய்?’’ என்று சொல்லி அவளை ஆலிங்கனம் செய்தான்.

அவள் சொன்னாள், “மந்திரியை அளவுக்கதிகமாகவே நீங்கள் நம்புகிறீர்கள்.’’

இந்தக் குற்றச்சாட்டை அவன் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் அவளைச் சுகிப்பதில் மூழ்கினான். அவனுடைய விளையாட்டை அனுமதித்துக்கொண்டே மந்திரியின் சதியை முறியடிக்க மனசுக்குள் சூட்சுமம் வரைந்துகொண்டிருந்தாள் அவள்.

ஆலோசனை மண்டபத்தில் மந்திரியுடன் சம்பாஷனையில் இருந்த அரசனிடம் ஒரு சேவகன் வந்து சொன்னான், “அரசே தங்களைக் காண ஒரு வில்லாளன் வந்திருக்கிறான்.’’

உள்ளே வரச்சொல்’’ என்றவன் ஏதோ யோசனை தெளிந்தவனாக, “வேண்டாம் வேண்டாம் தோட்டத்துக்கே அழைத்துச் செல். நாங்கள் அங்கு வந்துவிடுகிறோம்’’ என்று சொல்லிவிட்டு மந்திரியைப் பார்த்தான். மந்திரியும் தனது புன்சிரிப்பால் அரசனின் யோசனையை ஆமோதித்தார். ஆழ்ந்த ஞானமும், மதிநுட்பமும் வாய்ந்த மந்திரியின் மேற்பார்வையில் காரியங்களையாற்ற அரசன் முயற்சித்துக்கொண்டிருந்தான். தனது முன்யோசனையில்லாத திட்டங்கள் தோல்விகண்டதால் அவன் சற்றே சுதாகரித்துக்கொண்டுவிட்டான். அச்சிக்கல்களிலிருந்து மீள்வதற்கு மந்திரியையே அவன் நம்பினான்.

வில்லாளனின் கண்களைக்கட்டி ரகசியப் பாதையின் வழியாக அந்தப்புரத்துக்குக் கூட்டிவந்தான் அந்த சேவகன். கண்கட்டு அவிழ்க்கப்பட்டதும் பளிச்சிட்ட தோட்டத்தின் வனப்பு அவனை மயக்கியது. ஒரு காட்டின் தன்மை அங்கே குடிகொண்டிருந்ததைக் கண்டு வியந்தான்.

அரசனும் மந்திரியும் அங்கு வந்து சேர்ந்தார்கள். வில்லாளன் அவர்களை வணங்கி நின்றான்.

மந்திரியார் சொன்ன வில்லாளன் நீதானா?’’ என்று கேட்டான் அரசன்.

ஆம் எஜமானே தங்களுடைய உத்தரவுப்படி அந்த வேடதாரிக்கிளிகளை இனம்கண்டு கொல்வதற்கு வந்திருக்கிறேன்’’ என்றான் வில்லாளன்.

கிளிக்கூண்டை எடுத்துவரும்படி ஒரு சேவகனை அனுப்பயிருந்தார் மந்திரி. கூண்டு வந்து சேர்ந்தது. கூண்டில் நிலைகுலைவு ஏற்பட்டதால் கிளிகள் படபடத்து ஆர்ப்பாட்டம் செய்தன.

கூண்டைக் கொடுத்தனுப்பிவிட்டு நடக்க இருப்பவைகளைக் காணும்பொருட்டு சாளரத்தின் வழியே கவனித்துக் கொண்டிருந்தாள் ராணி. தனது திட்டப்படியே எல்லாம் நடைபெறவேண்டுமென்று கடவுளை வேண்டிக்கொண்டாள்.

அரசன் சொன்னான், “வில்லாளனே! கிளிகள் நம்நாட்டின் தேசியச்சின்னம், அதே நேரத்தில் ராணியின் நேசத்துக்குரியவைகள். எங்களது…’’ மந்திரி குறுக்கிட்டுச் சொன்னார்.

அரசே, இதையெல்லாம் இவனிடம் எதற்காக நாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்?’’

அரசனின் முகம் சிறுத்துவிட்டது. வில்லாளனைப் பார்த்து எரிச்சலுடன் சொன்னான், “ஏய் அற்பனே, எதற்காக உன்னை அழைத்து வந்திருக்கிறார்கள் என்பது உனக்குத்தெரியுமில்லையா? பேச்சைக் கேட்டுக்கொண்டு நிற்காதே. பேச்சைக் கேட்கும் நாய் வேட்டையைப் பிடிக்காது என்பார்கள். நீ எப்படி இந்தக் கிளிகளை வேட்டையாடப் போகிறாய்?’’ என்றவன் மந்திரியைப் பார்க்காமலேயே சொன்னதைச் செய்’’ என்றான்.

கூண்டுக்குப் பக்கத்தில் போய்நின்ற வில்லாளன் அதைத்திறப்பதற்காகக் கையைவைத்தான். அரசன் பதற்றத்துடன் கேட்டான், “எதற்காக கூண்டைத் திறக்கிறாய்? எல்லாக்கிளிகளுமே பறந்துபோய்விட்டால், என்ன செய்வது?’’

ஏஜமானே என்னை மன்னித்து விடுங்கள். கூண்டுக்குள் இருக்கும் கிளிகளை என்னால் கொல்ல முடியாது.’’

ஏன் முடியாது?’’ என்று சினத்துடன் கேட்டான் அரசன்.

அப்படிக் கொல்வது தர்மமல்ல, கிளிகள் கூண்டுக்குள் இருந்தால் அவைகளை இனம் காண்பது கடினம்.’’

அரசன் ஏளனத்துடன் சிரித்தான்.

கூண்டுக்குள் இருக்கும் கிளிகளையே உன்னால் இனம்கண்டு கொல்ல முடியாதென்றால், வான்வெளியில் பறக்கும் கிளிகளை எப்படிக் கொல்லப்போகிறாய்?’’

எஜமானே உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். நிச்சயம் அவைகளை வேட்டையாட என்னால் முடியும். அப்படி முடியாவிட்டால் உன் உயிரை இழக்கவும் நான் தயாராக இருக்கிறேன்’’ என்றான் வில்லாளன்.

மந்திரிக்கு ஏற்கனவே இது குறித்து ஞானம் உண்டாதலால் வில்லாளனை அவன் விருப்பப்படியே அனுமதிக்கும்படி அரசனைக் கேட்டுக்கொண்டார். அரசன் ஒப்புக்கொண்டான்.

கூண்டைத் திறந்துவிட்டதும் கிளிகள் எல்லாம் படபடத்துப் பறந்து சென்றன. தோட்டங்களின் ஊடே அவைகளை விரட்டிக்கொண்டு போனான் வில்லாளன். கிளிகளும் அவனும் மரங்களூடே மறைந்து போனார்கள்.

அரசனும் மந்திரியும் அவனுடைய வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தார்கள் ராணியும்தான்.

சிறிது நேரத்தில் அம்புகளால் தாக்கப்பட்ட மூன்று கிளிகளையும் கொண்டுவந்து அரசனுக்கு முன்னால் வைத்தான் வில்லாளன். பிறகு தன்னுடன் எடுத்து வந்திருந்த ஒரு பாத்திரத்தைத் திறந்து அதிலிருந்த தீர்த்தத்தை அள்ளி அவைகள் மேல் தெளித்தான். தீர்த்தம் பட்ட மாத்திரத்திலேயே அம்மூன்று கிளிகளும் மூன்று மானுடப் பிண்டங்களாயின. அவைகளைக் கவனித்த மந்திரி அதிர்ச்சியில் மூர்ச்சையுற்றார். இரண்டு படை வீரர்களுடன் அவருடைய மகனும் அங்கே இறந்து கிடந்தான்.

ராணி சிரித்துக்கொண்டாள்.

மறுநாள் சதுக்க மைதானத்தில் மக்கள் கூடி நின்றிருந்தனர். அவர்களுக்கு நடுவே உயரமான பலிபீடத்தின் மேல் ஒரு பெண் பலியிடுவதற்குத் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாள். கூட்டம் கேலியும் கிண்டலுமாக அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சிலர் அனுதாபப்படவும் செய்தார்கள்.

ராஜாங்க விஷயங்கள் என்றால் என்ன கிள்ளுக்கீரையா? மகாமேதாவிகளே அதைக் காப்பாற்றுவதற்கு எப்படியெல்லாம் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அதில்போய் சிக்கினால் தலைதப்புமா?’’

உண்மையில் அங்கே பலியிடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது பெண் அல்ல; அது ஒரு ஆண்தான்; பரிதாபத்துக்குரிய வில்லாளன்தான் அவன். ஒரு பெண்ணாக அலங்கரித்து அவனை அங்கே நிறுத்தி வைத்திருந்தார்கள். அவமானத்தில் குன்றிப்போய் கிடக்கிறான் அவன். ஒரு தவறும் செய்யாத தனக்கு ஏன் இந்தத் தண்டனை என்று அவன் மனம் குமுறிக்கொண்டிருந்தது.

மந்திரியின் வேண்டுகோளின்படி வில்லாளனுக்கு மரணதண்டனை கொடுத்த அரசனும் நிம்மதியாக இல்லை. எதுவும் தெளிவாகவில்லை அவனுக்கு. அந்நிய தேசத்து உளவாளிகள் கிளிகளாகி அந்தப்புரத்திற்குள் புகுந்து விட்டார்கள் என்று மந்திரி சொன்னபோதே இந்தக் குழப்பம் அவனைப் பிடித்துக்கொண்டது. உளவாளிகளுடன் மந்திரியின் மகனும் கொல்லப்பட்டதுதான் இன்னும் அவனுக்குப் புரியாத புதிராக இருந்தது. பிள்ளையைப் பறிகொடுத்த துயரத்தில் இருக்கும் மந்திரிக்காக வேண்டியே இந்தத் தண்டனையை வில்லாளனுக்குக் கொடுக்க நேர்ந்தது. மேலும் எல்லாக் கிளிகளும் பறிபோய்விட்ட வருத்தத்தில் இருக்கும் ராணிக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றும் அவனுக்குத் தெரியவில்லை.

மந்திரி ஏன் வில்லாளனைப் பெண்ணாக்கி சிரச்சேதம் செய்யவேண்டுமென்று கேட்கிறார்? வில்லாளன் உண்மையிலேயே குற்றவாளிதானா?’ என்றெல்லாம் அவன் யோசனை செய்து கொண்டிருந்தான். தனது உத்தரவுக்காகக் காத்திருக்கும் பலிபீடத்தையே அவன் நிம்மதியில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான். இப்படியே காலம் கடத்த முடியாது; அவகாசம் நெருங்கிவிட்டது. உத்தரவிடுவதற்காக அவன் எழுந்தான். அப்போது அந்தப்புரத்திலிருந்து ஒரு கடிதத்தைக் கொண்டு வந்திருந்தான் சேவகன். ராணிதான் அந்த அவசரக் கடிதத்தை அனுப்பியிருந்தாள். கூண்டிலிருந்து பறந்துபோன பத்துக் கிளிகளும் திரும்பி வந்துவிட்டன. வில்லாளனை விடுதலை செய்யுங்கள்என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

5. சாயும் காலம்

கொஞ்ச நாட்களாகவே அய்யாவுக்கு உடம்புக்கு முடியவில்லை. ரொம்பவும் பலவீனமடைந்து கொண்டு வந்தார். எந்த நேரத்திலும் அவர் எங்களை விட்டுப் பிரிந்து விடலாம் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழிக்கும் போதே இந்தப் பாரம் கவிந்து விடும்.

நெற்கதிர்களுக்கிடையே பின்னப்பட்ட சிலந்தி வலைகளிலும் வரப்புகளில் அடர்ந்து வளர்ந்திருந்த புற்களிலும் உமிழ்நீர்க் குமிழ் போலத் திரட்சி கொண்டு படிந்திருந்தது பனி. இந்த வருஷம் பனி கடுமைதான். அய்யாவுடைய மரணத்தை இந்தக் குளிர் இன்னும் துரிதப்படுத்திக் கொண்டிருந்ததுபோல எனக்குப்பட்டது.

விடியற்காலையிலேயே விழிப்பு வந்துவிட்டாலும் அன்று போர்த்தியபடி படுத்துக்கிடந்தேன். களத்தில் சாணி தெளிக்கும் சத்தம் கேட்டது. அதன் பிறகு தண்ணீர்த் தொட்டிக்கருகே பாத்திரங்கள் உராயும் சத்தம். எனக்கு முன்னமே அவள் எழுந்து வேலைகளை தொடங்கிவிட்டிருந்தாள். பனியில் நனைவது ஆகாது என்றாலும் அவளுக்கான வேலைகளைப் பகிர்ந்து கொள்ள யார் இருக்கிறார்கள்? அம்மா உயிருடன் இருந்திருந்தால் இவள் இவ்வளவு சிரமப்படத் தேவை இருக்காது.

அம்மா ரொம்பவும் அவசரமாகவே போய்ச் சேர்ந்துவிட்டாள். வயோதிகம் வருவதற்கு முன்னமே புற்று நோய் அவளைக் கொண்டுபோய்விட்டது. அவளுடைய சத்தத்தால் நிறைந்திருந்த இந்த வீடும் தோட்டமும் சட்டென்று நிசப்தமுற்று வெறுமை குடிகொண்டுவிட்டது.

எவ்வளவு நேரம் இப்படி யோசனையுடன் படுத்துக் கொண்டிருப்பது என்ற சொரணை இருந்தாலும் எழவில்லை. தாழ்வாரத்தில் படுத்திருக்கும் அய்யாவைப் போய்ப் பார்த்தாக வேண்டும். மரணம் நெருங்க நெருங்க அவரைப் பார்க்க அச்சமாக இருந்தது. ஒரு மனிதனுடைய மரணத்தை அவ்வளவு சுலபமாக எதிர்கொண்டுவிட முடியுமாயென்ன?

அவருடைய நண்பர்கள், உறவினர்களென்று சிலர் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இறுதி நாட்களில் அவரைப் பார்த்துவிட வேண்டுமென்பது அவர்களுடைய அவா. அய்யாவைப்போல நீண்ட வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு எவ்வளவோ உறவுகள், நண்பர்கள். அலைகள் ஒரு புள்ளியில் தொடங்கி விரிந்து விரிந்து பெரிதாகி அடங்கிவிடுவது போல அய்யாவும் மௌனத்தில் அமிழ்ந்து போகப்போகிறார்.

ஒரு வழியாகப் படுக்கையிலிருந்து எழுந்துகொண்டேன். தாழ்வாரத்தைக் கடக்காமல் வெளியே போய்விட முடிந்தால் எவ்வளவோ ஆறுதலாக இருக்கும்.

மரக்கட்டிலில் போர்வைக்குள் அவர் தன்னை சுருட்டிக் கொண்டிருந்தார். இடது காலானது போர்வையை விட்டு விலகி வெளியே வந்துவிட்டிருந்தது. போர்வையை மெலிந்திருந்த அந்த காலின் மேல் இழுத்துவிட்டு அவரையே உற்றுக் கவனித்துப் பார்த்தேன். பற்களற்ற வாயில் உள்ளிழுத்துக் கொண்டிருந்த உதட்டுத் தசைகள் லேசாக அசைகின்றன. மனம் அமைதியடைந்தது. வாசல் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து பனிச் சீந்தல் உள்ளே போகாதவாறு கதவைச் சாத்தினேன்.

பளிச்சிட்ட காலை வெளிச்சம் தங்க நிறத்தில் தென்னை மரங்களின் மேலும் வயல்வெளிகளிலும் படர்ந்திருந்தது. தோட்டத்துக்காரர்களெல்லாம் அவர்களுடைய வேலைகளைத் தொடங்கி விட்டிருந்தனர். இந்தக் கிராமத்தின் நடைமுறைகளோடு ஒன்றிப் போவதற்கு இன்னும் எவ்வளவு காலமாகும்? தினமும் என்னுடைய விழிப்புக்கு முன்னமே எல்லா வேலைகளும் தொடங்கி விடுகின்றன. செய்ய வேண்டுமென்றால் எவ்வளவோ வேலைகள் எனக்காக இங்கே காத்திருக்கின்றன. ஆனால் சிலவற்றை மட்டும்தான் செய்யமுடிகிறது. வேலை செய்வதைவிட உத்தரவுகள் பிறப்பிப்பது சுலபமாக இருப்பதால் மனம் சோம்பேறித்தனத்துக்குத் துணைபோகச் சொல்கிறது. அதேநேரத்தில் குற்ற உணர்விலிருந்தும் விடுபட முடியவில்லை. திடீரென்று ஒரே நாளில் முழு விவசாயக்காரனாக மாறிவிட முடியுமா என்ன?

சுப்பராயன் வந்திருப்பதாக மனைவி சொன்னாள். எவ்வளவு நாட்களாகிறது இவனைப் பார்த்து! ஆறு மாசமிருக்குமா? அதிகமாகக்கூட இருக்கும். கட்டுத்தறியின் அருகில் அவனைப் பார்த்தேன். இன்னும் மிச்சமிருந்த இருளாலும் பனியாலும் மறைக்கப்பட்டவனாக அவன் சாணம் அள்ளிக்கொண்டிருந்தான்.

பருவங்களின் வருகையைப் போலவே அவனுடைய வருகையும் நிகழ்ந்துவிடுகிறது. திடீரென்று ஒரு இரவிலேயே ஒரு பனிக்காலமோ மழைக்காலமோ தொடங்கிவிடுவது போலவே அவனும் இங்கே வந்து எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகிறான்.

அவனிடம் முன்பிருந்த உற்சாகம் இல்லை. மந்த கதியில் இயங்கிக் கொண்டிருந்தான். வயோதிகம் அவனையும் தின்று கொண்டிருந்தது. அவள் சாப்பிடக் கூப்பிட்டும் பிறகு சாப்பிடுவதாகச் சொல்லிவிட்டான். சாப்பிட்டாலும் முன்புபோல அவனால் முடியுமா? வாழை இலை முழுவதும் சாப்பாட்டை நிறைத்தாலும் வேண்டாமென்று சொல்லாத பசி அவனிடம் அப்போது இருக்குமா?

என்னிடம் அவன் அதிகம் பேசவில்லை. எப்ப வந்தண்ணாஎன்று விசாரித்ததற்கு இதோ இப்பத்தான் என்றானே அதுதான். ஏன் அவனுக்கு என்ன ஆனது?

சாணி வாரிக் கொட்டிவிட்டு தென்னை மரநிழலில் போய் உட்கார்ந்து கொண்டான். உரப் பை ஒன்றை எடுத்து நார் பிரிக்கத் தொடங்கினான். பிரித்த நார்களை ஒரு பக்கமாகக் குவித்து வைத்தான். மாடுகளுக்கு இன்று புதுக் கயிறுகள் தயாராகிவிடுமென்று நான் முடிவு செய்து கொண்டேன்.

அவன் இங்கே வரும்போதெல்லாம் இப்படி ஏதாவது வேலைகள் அவனுக்கென்று காத்திருந்தன. போன முறை வந்த போது கிணற்றுக்குள் இறங்கி சுவர்களில் வேர்விட்டு அடர்ந்திருந்த செடிகளையும் புற்களையும் பிடுங்கிச் சுத்தம் செய்துவிட்டுப் போனான். இடுப்பில் கயிற்றைக் கட்டிக் கொண்டு கிணற்றின் சுவர்களில் குரங்கு போலத் தாவித்தாவி செடிகளைப் பிடுங்கி எடுத்து மேலே கொண்டு வந்தான்.

அவன் எங்கே இருந்தாலும் அவனுடைய உயிர் மூலம் இங்கேயே நிலை கொண்டிருந்ததாகவே தோன்றும். அவன் இங்கிருந்து போகும்போது எதையோ ஒன்றை மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டவனைப் போலவும், திரும்பவும் அதை எடுத்துப் போகத்தான் வந்தவன் போலவும் வருவான். ஐந்தாறு வருஷமிருக்கும் அவன் இங்கிருந்து போய். வேறொரு தோட்டத்தில் வேலைசெய்து கொண்டிருந்த அவனுடைய மகன் ஒப்பந்த காலத்துக்கு முன்னமே எங்கோ ஓடிப்போய்விட்டதால் அதற்குப் பதிலாக இவன் போகவேண்டிய நிர்ப்பந்தம். பணம் கொடுத்து பைசல் செய்துவிடுவதாக அய்யா சொல்லியும் கூட அவன் கேட்கவில்லை. இங்கிருந்து போய்விடுவது என்ற தீர்மானத்தில் உறுதியாக இருந்தான். இது எங்களுக்கு வியப்பாக இருந்தது. அம்மா ரொம்பவும் வருத்தப்பட்டாள். நாங்கள் யாரும் அவனை ஒன்றும் சொல்லி விடவில்லை என்பது தெளிவு. பிறகு ஏன் அவன் இங்கிருந்து போகவேண்டும்? ஒன்றும் புரியவில்லை.

அம்மாவுக்கு அவனிடம் தனிவாஞ்சை உண்டு. எல்லா வீட்டுச் சமாச்சாரங்களையும் அவனிடம் பகிர்ந்துகொள்வாள். வீட்டுக்குள் வர முடியாவிட்டாலும் அவனும் எங்கள் குடும்பத்தில் ஒருவனைப்போலவே இருந்தான். அவனுக்குத் தெரியக்கூடாத ரகசியம் எதுவும் உண்டா என்று எங்களுக்குத் தெரியவில்லை.

அய்யாவை அவருடைய படுக்கையிலிருந்து கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு போய்த் தோட்டத்தில் உட்கார வைக்கப்போனபோது எழுந்து நின்று அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அய்யா அவன் வந்திருப்பதைக் கவனித்தாரா என்று தெரியவில்லை. மிக ஆழத்தில் கலைந்து கொண்டிருந்த நினைவுகளில் இவன் முகமும் கலைந்து விட்டிருக்கலாம். இவனைக் கவனிக்க வேண்டும் என்ற பிரயாசையும் அவரிடம் தென்படவில்லை. அவருடைய கண்கள் ஒளிமங்கியிருந்தன.

பொழுது உச்சிக்கு வந்துவிட்டிருந்தது. அதே இடத்தில் உட்கார்ந்து பிரித்துப் போட்டிருந்த நார்களைக் கயிறாகத் திரித்துக்கொண்டிருந்தான் அவன். எதற்காக இன்னும் சாப்பிடாமல் உட்கார்ந்திருக்க வேண்டுமென்று வருத்தமாக இருந்தது. அவள் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்துவிட்டாள். எனக்கு பசியில்லம்மா அப்புறம் சாப்பிடறேன்என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான்.

மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் உறங்கி எழுவது எனக்குப் பழக்கமாகிவிட்டது. கட்டிலில் கிடந்தபடி ஜன்னலின் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். கிணற்று மேட்டின் மேல் வளர்ந்திருந்த வேப்பமரத்தில் மரங்கொத்தி தென்பட்டது. தினமும் இதே நேரத்தில் அதைப்பார்க்க முடிகிறது. வேறு போக்கிடம் எதுவும் அதற்கு இல்லைபோலும். மதிய நேரத்தைக் கழிக்க அது ஏன் வேறொரு மரத்தைத் தேர்ந்தெடுக்கக்கூடாது? உயிர்களின் நடவடிக்கைகள் விநோதமாகத்தான் இருக்கின்றன.

மாடுகளெல்லாம் அறுவடையான வாழைத் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சாய்ந்திரத்துக்குள் இரண்டு ஜோடி மாடுகளுக்கான கயிறுகளை அவன் திரித்துவிட்டிருந்தான். நான்கும் திடமான கயிறுகள். இன்னும் ஆறேழு மாசத்துக்குக் குறையாமல் தாங்கும். முண்டு முடிச்சுகள் இல்லாமல் அவ்வளவு நேர்த்தியாக இருந்தன கயிறுகள்.

பொழுது சாய்ந்ததும் அவனும் நானும் மாடுகளையெல்லாம் ஓட்டிக்கொண்டு வந்து தீனித் தொட்டியில் தண்ணீர் காட்டி கட்டுத்தறியில் கட்டினோம். அவன் அந்தக் கயிறுகளைக் கொண்டு வந்தான். இருவரும் ஒவ்வொரு மாடாகப் பிடித்து பழைய கயிறுகளை அவிழ்த்துவிட்டு புதுக்கயிறுகளை மாற்றினோம். போரிலிருந்து வைக்கோல் பிடுங்கிவந்து எல்லா மாடுகளுக்கும் அவன் போட்டான். பரபரப்புடன் வைக்கோலைத் தின்னத் தொடங்கின மாடுகள்.

மலைக்கப்பால் விழுந்த சூரியனின் கிரணங்கள் வானத்தில் அடர்ந்து கிடந்த மேகங்களின் மேல் வண்ணங்களைப் பூசிவிட்டு மெல்ல மங்கத்தொடங்கின. இருள் கிழக்கிலிருந்து படர ஆரம்பித்தது.

நான் தொட்டிக்குச் சென்று கைகால்கள் அலம்பிக்கொண்டு திரும்பினேன். அவனோ பழைய கயிறுகளைக் கொண்டுபோய்க் கொட்டகையில் இருந்த பரணில் எறிந்துவிட்டு வெளித்திண்ணைக்கு அருகில் வந்து நின்றுகொண்டிருந்தான். வீட்டிற்குள் என் மனைவியின் அழுகுரல் கேட்டது.

6. ஆற்றோடு போனவன்

நான்கு வருஷங்களுக்கு முன்னால் ஒரு மழை நாளில் தொலைந்து போய்விட்ட தன் மகனை அவள் திரும்பவும் திண்ணையில் காண்கிறாள் அல்லது அப்படி ஒரு கனவு மயக்கம் அவளை ஏமாற்றிவிட்டுச் செல்கிறது. சேவல் மூன்றாவது முறையாகக் கூவிய பின்புதான் தினமும் அவள் விழித்தெழுவாள். இன்று சேவல் கூவிய மாதிரி தெரியவில்லை. ஒருவேளை அவளுடைய செவி விழித்துக்கொண்டபோது அதன் சப்தம் ஓய்ந்துவிட்டிருக்கலாம். கதவைத் தள்ளித் திறக்கிறாள். வெளியே சாம்பல் நிறப் பனி எல்லாவற்றையும் கோர்த்துத் தழுவிக் கொண்டிருக்கிறது. மரங்களெல்லாம் நின்றவாக்கிலேயே தூங்கிக் கொண்டிருக்கின்றன. திண்ணையில் அவன் படுத்திருக்கிறான். வேட்டியை அவிழ்த்து கழுத்து வரைப் போர்த்திக் கொண்டு கால்களை மடக்கித் தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய தலைப் பக்கம் ஒரு மூட்டை கிடக்கிறது.

அந்த விடியற்காலையில் பனியானது எல்லாவற்றையுமே உறுதிப்படுத்த முடியாதவைகளாக ஆக்கிவிட்டிருந்ததால் அவன் நிஜமாகவே திரும்ப வந்துவிட்டானா?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டாள். அல்லது வழக்கமான என் கனவுக் குழந்தையா?’

சகாதேவா!’’ மெல்லக் குரல் கொடுத்துப் பார்க்கிறாள். எந்தச் சலனமும் இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில் அவன் படுத்துக்கிடந்தான். பக்கத்தில் உட்கார்ந்து அவனுடைய கால்களை மெல்ல வருடியதும் அவனுக்கு விழிப்புத் தட்டுகிறது. சோர்வுடன் எழுந்து உட்கார்கிறான். உண்மையாகவே அவன் திரும்பிவிட்டான்என்று தனக்குத்தானே உறுதி சொல்லிக் கொண்டாலும், பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு எலியாக உருமாறி வளைக்குள் ஓடி ஒளிந்துகொள்ளவோ, ஒரு பொன்வண்டைப்போல புர்ரென்று பறந்துபோய்விடவோ கூடும் என்ற சந்தேகம் அவளைக் கலவரப்படுத்துகிறது. அவனுடைய கையைப் பற்றிக் கொள்கிறாள். அவனை விட்டு விட்டு எங்கேயும் போய்விடக்கூடாது என்று தனக்குத்தானே உறுதி சொல்லிக் கொள்கிறாள்.

எனக்குப் பசிக்குது’’ என்கிறான்.

நான்கு வருஷங்களுக்குப் பிறகு அவன் பேசுவது அவள் காதில் ஒலிக்கிறது.

இதோ அவன் பேசுகிறான். அவனுக்கு நல்ல பசி. கடைசியாக எப்போது சாப்பிட்டானோஅவள் மனம் பதறுகிறது.

உள்ளே சென்று கஞ்சியை மையப்பிசைந்து ஒரு சொம்பில் ஊற்றி வந்து அவனிடம் கொடுக்கிறாள். அவனுடைய வறண்ட தொண்டையில் ஒரு நதியின் குளிர்ச்சியாக அது இறங்கியிருக்க வேண்டும். நெஞ்சின் மேல் கைவைத்துக்கொண்டு புத்துணர்ச்சி பெற்றவன் போல அவளைப் பார்க்கிறான்.

கடவுளே! அவன் பேச்சு, பார்வை எல்லாமே மாறிவிட்டது. அவன் நன்றாக வளர்ந்துவிட்டான்.

முன்பெல்லாம் தான் ஒரு மலைப்பாம்பைப் பெற்றெடுத்து விட்டதாகவே அவளுக்குத் தோன்றும். அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் தடித்தனம் புகுந்து கொண்டிருக்கும். மற்ற குழந்தைகளைப் போல் அவன் இல்லை. பத்தாம் வகுப்பு படிக்கும்போது அவனுக்கு பத்தொன்பது வயசு.

அவன் இறுதித் தேர்வு எழுதப்போன அன்று விடியற்காலையிலிருந்தே மழை பெய்யத் தொடங்கியிருந்தது. ஆற்றில் வெள்ளம் உயர்ந்துவிட்டால் என்ன செய்யப் போகிறானோ என்ற கவலையோடுதான் அவனை அனுப்பி வைத்தாள். அதுதான் கடைசியாக அவனைப் பார்த்தது.

அவனுடன் பரீட்சை எழுதப் போயிருந்த பையன்களில் சிலர் அவளிடம் வந்து சொன்னார்கள். பறக்கும் படையிடம் அவன் அகப்பட்டுக் கொண்டானாம். அவனுடைய ஜட்டிக்குள்ளிருந்து மனப்பாடச் செய்யுள்கள் எழுதப்பட்டிருந்த ஒரு காகிதத்தை அவர்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் அதை எடுத்துத் தர மறுத்து விட்டானாம். சங்கடத்துக்குள்ளான அதிகாரிகள் ஒரு போலீஸ்காரரை உதவிக்கு அழைத்திருக்கிறார்கள். மிரட்டி, அடித்த பிறகும் கூட அவருக்கு முன்னால் பேசாமலேயே நின்றிருந்தானாம். பலாத்காரத்துடனேயே அவர் அதை எடுத்திருக்கிறார். ஆத்திரமடைந்த அதிகாரிகள் அவனைப் பரீட்சை எழுதக்கூடாது என்று சொல்லி ஸ்கூலைவிட்டு வெளியே துரத்திவிட்டார்களாம். அப்போதுதான் அவனைக் கடைசியாகப் பார்த்ததாக பையன்கள் சொன்னார்கள். அன்று நகரத்துக்கு போய் வந்த ஊர்க்காரர்களில் ஒருவர், அவன் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது ஆற்றில் இறங்கி நடந்ததாகவும் மேல் வெள்ளத்தில் அவன் அடித்துச் செல்லப்பட்டதாகவும் சொன்னார். பலரும் தடுத்தும் கேட்காமல் அவன் ஆற்றைக் கடக்க முயன்றானாம்.

ஊர்க்காரர்கள் சிலர் அவன் உடலைக் கரையெங்கும் தேடினார்கள். வெள்ளம் வடிந்த பிறகு பல நாட்கள் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. அப்போதும் அவன் உடல் கிடைக்கவேயில்லை. அவன் திரும்பவும் வரவில்லை.

அவன் இறந்துவிட்டிருப்பான் என்பதை அவள் நம்ப விரும்பவில்லை. அவள் தனக்குத் தானே உறுதி சொல்லிக்கொண்டாள், ‘எனக்குத் தெரியும் அவன் திரும்பவும் வருவான். அவனுடைய அய்யாவைப்போல அவனும் ஆற்றோடு கரைந்து போயிருக்க மாட்டான்.

அடுப்புக்கு மேலே மண் சுவரிலிருந்த செங்கற்களால் ஆன சிறிய ஜன்னலின் வழியே நுழைந்த காலைச் சூரியனின் சாய்ந்த கிரணம் அவனுடைய பாதங்களைப் பொன்போல மின்னச் செய்தது. அடுப்பில் விறகைத் தள்ளிவிட்டபடி அவள் உட்கார்ந்திருக்கிறாள். ஒளிக்கம்பத்தில் மிதந்த தூசிகளையே வெறித்தபடி இருக்கிறான். அவனுடைய முகத்தில் அமைதி இல்லை.

அய்யா கடைசியாக ஒரு நாற்காலி செய்து கொண்டிருந்தாராமே…’’

வியப்புடன் அவனைப் பார்க்கிறாள்.

உனக்கு யார் சொன்னது?’’

அவன் பதில் சொல்லவில்லை.

பட்டறையில பரண்மேலே கெடக்கும். அது உபயோகப்படாது. கீழ பலகை அடிக்கல இன்னும்’’ என்றாள்.

பரணுக்குள் இருளும் தூசியும் அப்பிக்கிடக்கின்றன. மூக்கைத் துளைத்து உள் நுழைந்த தூசியில் காலத்தின் நெடி தெரிகிறது. இருபது வருஷங்கள் இருளையே சுவாசித்து வாழ்ந்த பொருள்களெல்லாம் அவனுடைய கைப்பட்டதும் மிரள்வதுபோல தென்படுகின்றன. அங்கே கிடந்த சாமான்களிலேயே கொஞ்சம் பெரியதாகக் கிடந்த அதைக் கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமாக இல்லை. கை கால்களிளெல்லாம் கறுத்த தூசிகளை அப்பிக்கொண்டு நாற்காலியைக் கீழே இறக்கிக் கொண்டு வருவதைக் குழப்பத்துடன் பார்த்தபடி நிற்கிறாள் அவள்.

அவன் தன்னுடன் கொண்டுவந்திருந்த மூட்டையைப் பிரித்து தச்சுச் சாமான்களை எடுத்து வைத்தான். அவள் ஆச்சரியத்துடன் கேட்கிறாள், “இந்த வேலை உனக்கெப்படி தெரியும்?’’

அவளுக்குப் பதில் சொல்ல அவசியமில்லாதவன் போல பரணிலிருந்து ஒரு பலகையையும் தேடி எடுத்துக்கொண்டு கீழே இறங்கி வந்தான். அது இன்னும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கவில்லை. அவனுடைய தலையில் பூக்களைப் போல ஒட்டடை படிந்திருந்தது. அதை எடுத்துவிட்டுக்கொண்டே அவள் கேட்டாள், “நீ எங்க போயிருந்தே? இவ்வளவு நாள் எங்க இருந்த? இங்க சிலபேரு சொன்னாங்க, ஆத்து வெள்ளம் உன்னை அடிச்சிகிட்டு போய்ட்டதா.’’

ஆமாம். ஆத்து வெள்ளம்தான் அடிச்சிகிட்டு போச்சி.’’

அப்புறம்?’’

பலகையை ஒழுங்குபடுத்துவதிலேயே அவனுடைய முழு கவனம் இருந்தது. அவன் சொன்னான், “நான் கண் விழிச்ச போது மரத்தாலான ஒரு சின்ன வீட்டில் இருந்தேன். அந்த மரங்களெல்லாம் சுடுகாட்டுச் சிதையிலிருந்து எடுத்ததாக இருக்க வேண்டும். எல்லாம் பாதி எரிந்து போன கட்டைகள். அது சுடுகாடுதான். அங்கதான் அந்த வீடு இருந்தது.’’

பலகையின் மேற்பரப்பை இழைத்து முடிக்கையில் வியப்புடன் அவனைப் பார்த்தாள். அவனுடைய வேலையில் வெகுகாலம் பழகியது போன்ற நேர்த்தியிருந்தது.

அந்த வீட்லதான் ஒரு மனுஷன் இருந்தார். அவர்தான் என்னக் காப்பாத்தி இருக்கணும். அவருக்கு கறுத்த உடம்பு, கொஞ்சம் எடுப்பான பல்லு. ஒரு நாலு மொழ காடாவை இடுப்பில் சுற்றிக் கொண்டிருந்தார்.’’

உண்மையா அவர் யாருன்னு உனக்குத் தெரியலையா?’’

அவள் தனது ஆவலையும் வெட்கத்தையும் மறைக்க முயன்றாள்.

நான் அவர்கிட்ட எதுவும் கேட்கல. அவரும் சொல்லல.’’

என்னப்பத்தி ஏதாவது கேட்டாரா?’’ அவள் நெகிழ்ந்து போயிருந்தாள்.

பலகையின் நீளத்தைக் குறைப்பதில் முனைந்திருந்தானேயொழிய அவளுடைய கேள்விக்கு உடனே அவன் பதில் சொல்லவில்லை.

ஒரு நாள் அவர் கேட்டார் என்னைப்பற்றி ஏதாவது உனக்கு ஞாபகம் இருக்கா?’’ என்று. நான் சொன்னேன், ‘ஒரு எலி. ஒரு நாள் பட்டறையில் உங்களுக்கு எதிரே உட்கார்ந்து நீங்கள் மரப்பலகையில் பூக்கள் செதுக்குவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த எலியானது அப்போதுதான் உங்களுடைய கோவணத்துக்குள்ளிருந்து வெளிவந்து எட்டிப் பார்த்தது. நான் சிரித்தேன். என்னை விரட்டினீர்கள்.’ ‘’

இங்கே என்ன நடந்ததுன்னு அவர் கேட்கவே இல்லையா?’’

இல்லைஎன்று தலையாட்டினான்.

நீயாவது சொல்லியிருக்கலாமே…’’

எதை?’’

உங்களுடைய சாவுக்கு அம்மாதான் காரணமுன்னு ஊர்க்காரங்க சொல்றாங்க. குடிச்சிட்டு வந்து நீங்க அவளை அடிச்சதனால ஆத்திரம் தாளாம உங்களுடைய விரையைப் பிடிச்சி நசுக்கி தூக்கில் மாட்டிட்டதாப் பழி சொல்றாங்க. நீங்க தூக்கில தொங்கன கயிறு இன்னும் உத்திரத்திலேயேதான் தொங்கிக்கிட்டிருக்கு. அம்மா இன்னும் அதை அவிழ்க்காம அப்படியே வச்சிருக்கா…’’

இதையெல்லாம் எதுக்கு நான் சொல்லணும்?’’ என்று கோபமாக இடையீடு செய்தான்.

ஒரு வாழை மரம் முறிவதுபோல அவள் கீழே உட்கார்ந்தாள். இது நாள் வரை அவளைத் தாங்கியிருந்த பலமெல்லாம் சட்டென்று வற்றிப்போய்விட்ட மாதிரி இருந்தது அவளுக்கு.

அவன் சொன்னான், “அவர் என்கிட்ட குலாவிக்கிட்டிருந்ததா நெனப்பா உனக்கு? அவர் சதா காலமும் ஒரு உபயோகமற்ற பெரிய நாற்காலியைப் பிடித்துத்தான் தொங்கிக்கொண்டிருந்தார். அவ்வளவு பெரிய நாற்காலியை எப்படியாவது செய்து முடிக்கணுமாம் அவருக்கு.’’

அங்கே போய்க்கூட இதே வேலைதானா? என்ன மனுஷன்என்று அவள் முணுமுணுத்தாள்.

இந்தக் கூரையை முட்டும் உயரம் இருக்கும் அந்த நாற்காலி. சாவறதுக்கு முன்ன யார்கிட்டயோ செய்து கொடுக்கிறேன்னு வாக்கு கொடுத்திருந்தாராம். சீக்கிரம் அவன் இங்க வந்துடுவான். அதற்குள்ள எப்படியாவது செய்து முடிக்கணும்னு சொல்லிக் கொண்டிருந்தார், சதா அதே சிந்தனைதான்.’’

ஆமாம்’’ என்றாள் ஆழ்ந்த ஒப்புதலுடன். மேலும் சொன்னாள், “அவ்வளவு கஷ்டப்பட்டு யாரும் செய்யமாட்டாங்க.’’

அவன் கேட்டான், “எல்லாச் சாமான்களையும் மூட்டையாக் கட்டி ஆத்துல தூக்கிப் போட்ரப்போறேன்னு சொன்னையாமே நீ’’

அவளுடைய முகம் சோர்ந்துவிட்டது.

பலகை இன்னும் நாற்காலியுடன் பொருந்தி வரவில்லை. நூல் கணக்கில் அதைக் குறைத்துக் கொண்டிருந்தான். தனக்குள் பேசிக்கொள்வது போல அவன் சொன்னான், “ஒரு நாள் அவரைத் திட்டிட்டேன். இது என்ன பயித்தியக்காரத்தனம்? இவ்வளவு பெரிய நாற்காலி செய்யிறீங்களே இதல உட்காரக்கூடிய அளவுக்கு அவன்கிட்ட சூத்து இருக்கான்னு.அவருக்கு பயங்கரக் கோபம் வந்திடுச்சி. உங்கம்மா உருப்படியில்லாத ஒன்னைத்தான் பெத்து வளர்த்திருக்கான்னு சொல்லிட்டு எழுந்து ஆத்த ஒட்டிய மாதிரி நடந்து போனார். அப்ப போனவர்தான், திரும்ப வரவேயில்லை. ஆற்றுப் போக்கிலேயே அவரைத் தேடித்தேடி சலிச்சுப் போச்சி.’’

ஆணிகளின் உதவியுடன் பலகையைக் கச்சிதமாக இணைத்தான். கீழ்பக்கமாகத் தட்டி பிடிப்பைப் பரிசோதித்தான். அவள் பெரும் துக்கத்தைச் சுமந்துகொண்டு முந்தானையால் நாற்காலியின் மேல் படிந்திருந்த தூசிகளைத் தட்டிவிட்டாள். அவனோ யோசனையில் மூழ்கியவனாக எட்டி நின்று ஒரு முறை நாற்காலியைப் பார்த்துவிட்டு கொஞ்சம் தண்ணி கொண்டா’’ என்றான். அவள் தண்ணீர் கொண்டு வர உள்ளே சென்றாள். முதன் முதலாக அந்த நாற்காலியில் தன்னை உட்காரச் சொல்வானென்று ஏனோ ஒரு எதிர்பார்ப்பு அவளுக்குள் எழுந்தது. தண்ணீருடன் அவள் திரும்பி வந்து பார்க்கையில் பட்டறையில் இருட்டு மட்டுமே எஞ்சி நின்றது. பதற்றத்துடன் இருளை துழாவிச் சென்றவளின் கைகளுக்கு அவனோ அந்த நாற்காலியோ தட்டுப்படவில்லை; அந்தத் தூக்குக் கயிறுதான் தட்டுப்பட்டது.

கடவுளே திரும்பவும் அவனை ஏன் அழைத்துக் கொண்டாய்?’ என்று தரையில் விழுந்து புரண்டாள்.

விலகாது நின்றிருந்த பனியில் மரங்கள், பட்சிகளெல்லாம் விழிப்புற்று எழுந்தன. சூரியனின் கிரணங்கள் உக்கிரம் பெற்று காயத் தொடங்கிவிட்டன. ஏனோ அவள் மட்டும் வெளிவரவில்லை.

7. தலைகீழாக ஒரு மனிதன்

அலுவலகத்துக்கு விடுமுறை என்றாலே பள்ளிச் சிறுவர்களைப் போல மனசு சந்தோஷம் கொண்டுவிடுகிறது. வீட்டுப்பாடம், பிரம்படி, டெஸ்ட் என்று எந்த அச்சுறுத்தல்களும் இல்லையென்றால் கூட அலுவலக வேலைகளிலிருந்து கழன்று அந்த ஒரு நாளை நம் விருப்பப்படி செலவிடுவது மகிழ்ச்சிதரக்கூடிய விஷயம்தானே? அதிலும் ஒரு எழுத்தாளனுக்கு அது எவ்வளவு மகிழ்ச்சி தரும் என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா?

ஞாயிற்றுக்கிழமைகளை வேறு எதற்காகவும் நான் இழக்க விரும்புவதில்லை. மற்ற விடுமுறை தினங்கள் என்றால்கூட அப்படித்தான். வழக்கத்தைவிட அன்று முன்னமே விழிப்பு வந்துவிடும். சுமைகள் அழுந்தாத மனதுடன் சிறிது நேரம் படுக்கையிலேயே இருக்கவேண்டும். குளிப்பது, பேப்பர் பார்ப்பது நண்பர்களுக்குக் கடிதம் எழுதுவது, புத்தகங்கள் வாசிப்பது இடையே சமையலை ருசிப்பது என அன்றைய பொழுதைக் கழிக்க வேண்டும். யாராவது நண்பர்கள் தேடி வந்து விட்டால்தான் பிரச்சினை. அந்த நாளை அவர்களுக்காகப் பறிகொடுக்க வேண்டியிருக்கும்.

போன ஞாயிற்றுக்கிழமையை இப்படித்தான் நான் பறிகொடுத்தேன். ஆனால் நண்பர்களுக்காக இல்லை. இது வேறு சமாச்சாரம். அன்று விடிந்ததும் காப்பி கொண்டு வந்த என் மனைவி சொன்னாள், ‘ஒரு ஆள் குப்பைத் தொட்டிக்குள் தலைகீழாக நின்று கொண்டிருக்கிறான்என்று. தெருவில் வழக்கத்திற்குமாறான சலசலப்பு கேட்டதன் அர்த்தம் அப்போதுதான் எனக்கு விளங்கியது.

அவனைப் போய் பார்க்க எனக்கு விருப்பமில்லை. கும்பல் கூடும் இடங்களில் போய் நின்று வேடிக்கை பார்ப்பது எனக்கு உவப்பான காரியமில்லை. ஆனால் ஒரு மனிதன் குப்பைத் தொட்டிக்குள் தலைகீழாக நின்று கொண்டிருப்பது என்னை வியப்படையச் செய்தது.

இந்த மனிதர்களின் காரிய வினோதங்களுக்கு அளவே இல்லை. என்னவெல்லாமோ வேடிக்கை செய்கிறார்கள்; சாதனை என்கிறார்கள். தன்னை முன்னிறுத்திக் காட்டவேண்டும் என்ற ஆர்வத்தில் இப்படி ஏதாவது செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது அவர்களுக்கு. உலகமே சர்க்கஸ் கூடாரமாக மாறிவிட்டதோ என்று கூடச் சில நேரங்களில் தோன்றும்படி விஷயங்கள் போய்விடுகின்றன.

இங்கே ஒரு மனிதன் குப்பைத் தொட்டிக்குள் தலைகீழாக நின்றுகொண்டிருக்கிறானாம். வேறு இடம் எதுவும் அகப்படவில்லை போலும். எல்லோரும் அவனைப்போய் வேடிக்கை பார்ப்பார்கள். இரக்கப்பட்டு அல்லது அவனுடைய சாதனையை மெச்சி சிலர் காசுகளைப் போடக்கூடும். இதை எதிப்பார்ப்பவனாகக்கூட அவன் இருக்கலாம். உடலை வருத்திக்கொண்டு இப்படி பிச்சை கேட்பது எப்படிப்பட்ட காரியம் என்றுதான் புரியவில்லை. சரீரத்தை சாட்டையால் புண்ணாக்கி ரத்தம் கசியச் செய்தால்தான் மனிதனுக்கு இரக்கம் வருமா? உதவவேண்டுமென்று தோன்றுமா?

சாகசம் பிச்சைக்காக மட்டும் நிகழ்த்தப்படுவதில்லை. சுயதிருப்திக்காகவும், புகழ் பெறுவதற்காகவும் நிழ்த்தப்படுகின்றன. குப்பைத் தொட்டிக்குள் தலைகீழாக நின்று இவன் எதற்கு சாகசம் செய்கிறானோ தெரியவில்லை. அருகில் கோயிலோ, சாமியோ எதுவும் இல்லை என்பதால் பிரார்த்தனையாக இருக்கவும் வாய்ப்பில்லை. தலைகீழாக நின்று சிலர் தேகப்பயிற்சி செய்வார்கள்; அவர்களுக்கு ஒரு சுவரோ அல்லது சுவர் மூலையோ போதும்; இந்த நாற்றம் வீசும் குப்பைத் தொட்டிகள் அவசியமில்லை.

அவன் ஒருவேளை நேராக நின்றுநின்று சலித்துப்போனவனாகக்கூட இருக்கலாம்

குப்பைகளுக்கு இந்த நகரத்தில் பஞ்சமில்லை. நான் கிராமத்தில் இருந்தவரை இவ்வளவு குப்பைகளைப் பார்த்ததில்லை. நாகரீகம் வளரவளர குப்பைகளின் அளவும் பெருகிவிட்டது. அந்தஸ்துக்குத் தகுந்த மாதிரி தினமும் இங்கே ஒவ்வொரு வீடும், அலுவலகமும் ஏராளமான குப்பைகளை உற்பத்தி செய்கின்றன. இந்தக் குப்பைகளால் மாநகராட்சி மூச்சுத்திணறிப் போகிறது. நகரத்துக்கு வெளியே தனி இடம் பிடித்து வாகனங்களில் அள்ளிக்கொண்டுபோய் கொட்டிவிட்டுவருகிறது. இதில் ஏராளமான மனிதர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.

என்னுடைய நண்பர் ஒருவருடைய வீட்டுக்கு இப்படிப்பட்ட ஒரு பிரதேசத்தின் வழியாகத்தான் போகவேண்டும். சுடுகாடும் குப்பை மைதானமும் இரண்டறக் கலந்த ஒரு பிரதேசம். குப்பை மேடுகளுக்கு நடுநடுவே கல்லறைகள். ஒரு பிணமோ அல்லது குப்பைமேடோ அங்கே எப்போதும் புகைந்து கொண்டிருக்கும்.

அங்கே குப்பைகளுக்கு நடுவே நிறைய மனிதர்களைப் பார்க்க முடிகிறது. காகிதம், பாலிதீன் கவர்கள், பாட்டில்கள், பிளாஸ்டிக் சாமான்கள் என்று பொறுக்குபவர்கள் மூட்டைகளுடன் திரிகிறார்கள்; குப்பைகளைக் கிளறிக் கொண்டிருக்கிறார்கள்.

உடைந்த பாட்டில்கள், நாப்கின்கள், மினுமினுக்கும் மாத்திரை அட்டைகள், வளையல் துண்டுகள், பேண்டேஜ் துணிகள், சிதைந்த பொம்மைகள், சிகரெட் பாக்கட்டுகள், ஆணுறைகள், அழுகிய காய்கறிகள், பழங்கள், பூஞ்சைபடிந்த பிரட் துண்டுகள்… இவை வெறும் குப்பைகள்தானா? மனித நாகரீகம் இல்லையா? இவைகள் குப்பைகளாவதற்கு முன்னால் எத்தனை மனிதர்களின் தேவையாகவும், ஆசையாகவும், விருப்பமாகவும் இருந்திருக்கின்றன!

குப்பைப் பொறுக்கிகள் நாள் தோறும் பச்சையான ஒரு வாழ்க்கையை அங்கே தரிசித்துக்கொண்டிருக்கிறார்கள். நாசியை அழுகச் செய்யும் அந்த நாற்றத்தில் நம்மால் முடியுமா? வாழ்க்கையில் புனிதமான பேருண்மை ஒன்று புதைந்திருப்பதாக நம்புகிறவர்கள் பிரசங்கிகளையோ, புத்தகங்களையோ தேடிப்போவதைவிட கார்ப்பரேஷன் குப்பைகளை அவதானிப்பது சிறந்தது. இவ்வளவு மகத்துவம் கொண்ட குப்பைகள் தெருவில் அனாதரவாக இரைந்து கிடக்கும் போது வருத்தமாக இருக்கிறது. குறைந்தபட்சம் சுகாதாரத்தைக் கணக்கில் கொண்டாவது இவைகளுக்கு தொட்டிகள் வைக்க மாநகராட்சி கருணை கூர்ந்து ஆவன செய்யவேண்டும்.

எங்கள் வீட்டு குப்பைகள் கூட தினமும் அந்தத் தெருக்கோடித் தொட்டிக்குத்தான் போய்ச்சேருகின்றன; அடித்தல், திருத்தல் மலிந்த என் கதைப் பிரதிகள் உட்பட. தலைகீழாக நிற்பவன் இலக்கிய வாசகனாக இருக்கும் பட்சத்தில் அவைகளை வாசிக்க நேர்ந்தால் என்னைப்பற்றி என்ன நினைப்பான்? எப்படிப்பட்ட விபத்து இது?

எழுத்தாளன் வீட்டுக் குப்பைகளைக் கொட்டுவதற்கு அரசாங்கம் தனியாக தொட்டிகள் வைக்க ஏற்பாடு செய்யும்வரை அப்படிப்பட்ட காகிதங்களை எரித்துவிடுவது என்ற தீர்மானத்துக்கு வந்தேன். கேஸ் அடுப்பு உபயோகத்தில் இருக்கும் எனது வீட்டில் அவைகளை எரிப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான விஷயமில்லை. வீட்டுக்குச் சொந்தக்காரியிடம் சத்தியபிரமாணம் செய்து கொடுத்திருக்கிறேன் விறகடுப்பு உபயோகிப்பதில்லை என்று. அப்படி ஏதாவது வரம்பு மீறல் நடந்தது தெரிந்தால் உடனே மூட்டை கட்டிக்கொண்டு குடும்பத்துடன் கிளம்பி விட வேண்டியதான். பேசாமல் அந்தக்காகிதங்களை தெருவில் போட்டுக்கூட எரித்து விடலாம். ஆனால் பலருடைய சந்தேக் கண்களை சந்திக்க வேண்டிவரும். ஏதோ பெரிய குற்றம்செய்துவிட்டு தடயங்களை மறைப்பது போல. பத்திரப்படுத்தி வைக்க அது ஒன்றும் பொக்கிஷமும் அல்ல. கழிவு, மனக் கழிவு; வேறு எதையும் விட சகிக்கமுடியாத ஒன்று.

மொட்டை மாடியில் கூடப் போட்டு எரித்து விடலாம். வீடுதான் பற்றி எரிகிறது என நினைத்து யாராவது தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் சொல்லிவிட்டால்?

அணுக்கழிவுகளை பீப்பாய்களில் அடைத்து வைத்துக்கொண்டு எங்கே கொண்டுபோய்க் கொட்டலாம் என்று யோசித்துகொண்டிருக்கும் நாடுகளின் நிலைதான் எனக்கும். குப்பைகள் இப்போது சர்வதேசப் பிரச்சினையாகிவிட்டன. மனிதன் கைபட்ட இடமெல்லாம் குப்பைகள்தான். காற்று, நீர், மண், வான மண்டலம் எல்லாவற்றையும் குப்பைகளால் நிறைத்துவிட்டான். இங்கேயும் பற்றாதென்று வேறு கிரகங்களுக்கு இடம் தேடிப்போய்விட்டான்.

எச்சுபெரியின் குட்டி இளவரசனுக்கோ சிறுகோள் போதும் வாழ. அதையே அற்புதமாகப் பராமரித்துக் கொள்கிறான். அவனை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பாவோபாப் மரங்களைக் களையெடுக்கிறான்; எரிமலையைச் சாம்பல் நீக்கி சுத்தம் செய்கிறான். அங்கே அற்புதமான ரோஜாச்செடி ஒன்றை வளர்க்கிறான். அதுதான் அவனுடைய காதலி. ஒரே நாளில் நாற்பத்தி மூன்று முறை சூரிய அஸ்தமனங்களைப் பார்க்கலாம் அவன். வேறு கிரகங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தாலும் கூட அவனுக்கு வேண்டியதெல்லாம ஒரு சின்ன ஆட்டுக்குட்டிதான்.

எச்சுபெரியோ ஆட்டுக்குட்டிக்கு ஒரு கழுத்துப்பட்டை வரைந்து கொடுக்காமல் விட்டதுதான் பெரும் சோகம். குட்டி இளவரசனை அவர் நிம்மதியில்லாமல் செய்துவிட்டார். ஆட்டுக்குட்டியிடமிருந்து அந்த ரோஜா மலரை அவன் எப்படி பாதுகாக்கப்போகிறானோ.

வெகுநேரம் இப்படியே யோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் என் மனைவி அவசரமாக உள்ளே வந்து அந்தத் தகவலைச் சொன்னாள். குப்பைத் தொட்டியில் இருப்பவன் செத்துப்போய் கிடக்கிறான் என்று. யாரோ அவனைக் கொலை செய்து அங்கே எறிந்துவிட்டுப்போயிருக்கிறார்கள். கொன்றது யாரென்று தெரியவில்லை. இறந்து கிடந்தவனும் எங்கள் பகுதியைச் சேர்ந்தவன் இல்லை.

8. வாய்ப்பு

பாதையோரத்தில் இருந்த ஒரு மரத்தடியில் அவன் உட்கார்ந்திருந்தான். ஓடைபோலக் குறுகலான ஒரு பாதையது. அவர்கள் வரக்கூடிய அதே வழக்கமான நாளில் அந்தக் காலைப் பொழுதில் குழுமம், குழுமமாக மலையிலிருந்து இறங்கி வந்து அவனைக் கடந்து போனார்கள்.

மலைப்பாறைகள் பழக்கப்படுத்தியிருந்த தாவல் நடையுடன், தலையிலும் தோள்களிலும் பழங்களைச் சுமந்துகொண்டு சந்தைகூடும் ஊரை நோக்கி அவர்கள் நடந்தார்கள். அவனுடைய ஊரில் பயன்படுத்தும் மூங்கில் கூடை போல இல்லாமல் அவர்கள் சுமந்து சென்ற கூடைகளில் அழகிய வடிவங்கள் பின்னப்பட்டிருந்தன. விளக்குகளுக்கு மண்ணெண்ணெய் வாங்கிச் செல்லும் பாட்டில்கள் எல்லாக் கூடைகளிலும் தொங்கிச் சென்றன.

அவர்களுக்காகத்தான் காத்திருந்தானா என்று உறுதியாகச் சொல்லமுடியாது என்றாலும் அவன் இப்படித்தான் கொஞ்ச காலமாக இருக்கிறான். அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவரும் அவனை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பகட்டான அவன் உடையைப் பற்றியோ, நாகரீகத் தன்மையைப்பற்றியோ எந்த ஒரு வியப்பையும், மதிப்பையும் அவர்கள் வெளிப்படுத்திச் செல்லவில்லை. நீங்கள் வேறு, நாங்கள் வேறு என்பது போல இருந்தது அவர்களின் போக்கு.

இளம்பெண்கள் கூட அவன்மேல் கவனத்தைத் திருப்பவில்லை என்பதுதான் அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. என்ன ஜென்மங்கள் இவர்கள்? ஏன் இப்படி உதாசீனம் செய்கிறார்கள்?’ என்று மனசுக்குள் பொருமினான்.

அதோ அவர்களோடு போகிறாளே குழந்தைத் தனமும், பிரகாசமான முகமும் கொண்ட ஒரு பெண், அபூர்வமான அழகியவள். அவளுக்குப் பின்னால் நடந்து போகும் காட்டுமுகம் கொண்ட அந்த மனிதனால் அதை உணர்ந்து ஒரு முத்தம் தர முடியுமா அவளுக்கு? காதலின் உன்னதத்தை இவர்களால் அனுபவிக்கமுடியுமா? எந்தக் காதல் விளையாட்டுமில்லாமல் மிருகங்களைப் போல புணர்ந்து இனவிருத்தி செய்து கொண்டிருப்பவர்களா இவர்கள்? இதுபோல் இல்லாமல் அவர்களுடைய தோட்டங்களில், பாதைகளில், மரங்களுக்கிடையில், வீடுகளில் வேறுமாதிரியானவர்களாக, வேறுமாதிரியான சந்தோஷங்கள் கொண்டவர்களாக ஏன் இருக்கக்கூடாது என்றும் தோன்றியது.

அப்போது அவன் எதிர்பாராத வகையில் வரிசையிலிருந்து பிரிந்து ஒரு கிழவன் மட்டும் மரத்தடியை நோக்கி வந்தான். முட்டி வரை தொங்கும் நீண்ட சட்டைக்குக் கீழே அம்மணமான கால்களைக் கொண்டிருந்தான். கையில் நீண்ட ஒரு கைத்தடி. வெகுதூரம் நடந்து வந்ததில் களைத்துப்போயிருக்க வேண்டும். இளைப்பாறுவதற்காகச் சிறிது நேரம் நம்முடன் இருப்பானேயானால் அவனிடம் என்னபேசுவது?’ என்ற சங்கடம் அவனைப் பற்றிக் கொண்டது.

பொழுது சாயும் வரை இங்கேயே இருப்பாயா?’’ என்று கேட்டான் கிழவன்.

எப்போது நாம் எழுந்து போகப்போகிறோம் என்பது தெரியவில்லை என்பதால் இருப்பேன்என்று சொல்லிவைத்தான்.

அப்படியானால் இந்தத் தடியைக் கொஞ்சம் பத்திரமாகப் பார்த்துக்கொள். திரும்ப வரும்போது வாங்கிக்கொள்கிறேன்.’’

அவனுடைக் கையில் கொடுக்காமல் மரத்தின்மேல் அதைச் சாய்த்து வைத்தான்.

தம்பி, இது இந்த இடத்திலேயே இருக்கட்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் இதைத் தொட்டுவிடாதே’’ என்று சொல்லிவிட்டு அவன் போய் விட்டான்.

அந்த வரிசையில் கடைசியாகச் சென்றவன் இவனைப் பார்த்து மெல்ல சிரித்துக்கொண்டே நடந்தான். ஏன் அவன் சிரித்தான்?

அவர்கள் போனபிறகு கைத்தடியைத் திரும்பவும் கவனித்தான். அது வழவழப்பாக இருந்தது. காலம் காலமாக பல கைகளுக்கு மாறி அது தேய்ந்திருக்கவேண்டும்; பல காததூரம் அது நடந்திருக்கவேண்டும்.

அவன் கிராமத்தில் சொல்வார்கள், திருமணமான முதல் நாளன்று அண்ணன் தம்பிகள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராகச் சென்று கூடிய பின்புதான் கணவன் போவானாம். கதவுக்கு வெளியே கைத்தடியும் செருப்பும் இருந்தால் ஆள் உள்ளே இருக்கிறார்கள் என்று அர்த்தம். இப்போதும் அப்படித்தானா என்று தெரியவில்லை. இதோ போய்க்கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள் எல்லோரும் அந்த வழக்கத்தைக் கொண்டவர்கள்தான் என்பதை அவனால் நம்ப முடியவில்லை.

மரத்துக்கு அருகே சென்று கைத்தடியைக் கவனித்துப் பார்த்தான். அதன் தலைப்பகுதி ஒரு பாம்பின் தலைபோலவும், விரைத்த ஆண்குறியைப் போலவும் தோற்றங்கள் கொண்டிருந்தது. அது சாதாரண திடப்பொருள் போலத் தென்படவில்லை. அதன் இருபுறமும் பளிச்சிட்ட சிறு குமிழ்கள், வளைந்த ஒரு மூங்கிலின் கணு அல்லது செதுக்கல் என்று யூகம் செய்தாலும் அது ஏதோ ஒன்றின் அசாதாரணக் கண்கள் எனவும் தோன்றின. அதன் கூர்மையான வாய்ப் பகுதி விஷத்தையோ அல்லது சகலத்தையும் கருக்கொள்ளவைக்கும் விந்துவையோ உமிழத் தயாராக இருப்பது போல் பட்டதவனுக்கு.

அவன் திரும்ப வரும்வரை இதைத் தொடாமலும், யாரும் எடுத்துச் செல்லாமலும் பாதுகாத்துத் தரவேண்டும். தந்தேனென்றால் ஒரு புன்னகையை(அது கேலிச் சிரிப்பாகவும் இருக்கலாம்) உதிர்த்துவிட்டு, சலிப்பான இந்த வாழ்க்கையுடன் இந்த மரத்தடியிலேயே என்னையும் விட்டுவிட்டுப் போய்விடுவான்.

நீண்ட நேரம் குழப்பத்துடனேயே உட்கார்ந்திருந்தான்.

இதுபோன்றதொரு சவாலை எப்போதும் அவன் சந்தித்ததில்லை. எல்லாச் சௌகரியங்களும் அவனுக்குத் தடையற்று கிடைத்துக்கொண்டிருந்தன. கல்வி அறிவைக்கூட அப்படித்தான் பெற்றான். அந்த அறிவு அவனை என்ன செய்தது? இந்த மரம் செடிகொடிகளிலிருந்து வெகுதூரம் அவனைப் பிரித்து வைத்தது. இயற்கையில் ஒளிந்திருக்கும் பொக்கிஷங்களைக் கொள்ளையடிக்கக் கற்றுத் தந்தது அவ்வளவுதான்.

அவன் இங்கே திரும்பி வந்து பார்த்த பிறகுதான் இவையெல்லாம் அவனுக்குப் புரியத் தொடங்கியது. இங்கே எல்லாம் அவனை மிரட்சி கொண்டு பார்த்தன. அன்னியமான ஒரு உணர்வுக்கு அவன் ஆட்பட்டிருந்தான். மரம், செடி, கொடிகளுடனும் ஏன் இந்த கிராமத்து மனிதர்களுடன் கூட அவனால் இயல்பாக ஒட்டி உறவாட முடியவில்லை. அவனைக் கண்டாலே அவர்கள் ஏனோ விலகிச் சென்றார்கள்.

அவன் இந்த மண்ணில் அனாதரவாக விடப்பட்டதுபோல் உணர்ந்தான். அவனை ஒதுக்கிவிட்டு எல்லாம் அதனதன் இயல்புக்கு இயங்கிக்கொண்டிருப்பது போல் பட்டது.

இப்போது கிழவன் அவனுக்கு ஒரு வாய்ப்பை வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறான்; உனக்கு ஆற்றல் இருந்தால் இதைத் தொடு என்று சமிக்ஞை செய்துவிட்டுப் போயிருக்கிறான்; இதிலிருந்து வெளியேறுவதற்கான ஒரு மார்க்கத்தைக் காட்டிச் சென்றிருக்கிறான்; சந்தேகமில்லை.

ஏதோ ஒன்று எனக்காகக் காத்திருக்கிறது; மரணம் அல்லது பேரற்புதம்.

கைத்தடியின் தலையை அவன் பற்றினான்.

9. பயணம்

விலாசத்தில் குறிப்பிட்டிருக்கும் அதே ஊர்தான், சந்தேகமில்லை. தடம் மாறி அதே பெயரில் இருக்கும் வேறொரு ஊருக்கும் வந்துவிடவில்லை என்பது நிச்சயம். ஆனால் அவனுடைய நண்பர் சொல்லி அனுப்பியபடி இருந்திருந்தால் பேருந்து நிலையத்தில் இறங்கியதும் ஒரு விசாரிப்பிலேயே குகனுடைய வீட்டைக் கண்டுபிடித்துவிட்டிருக்கலாம். இப்போது அவன் வந்து இறங்கியிருப்பது அவன் நினைத்துக்கொண்டிருந்தது போலச் சின்ன ஊரில் அல்ல; இரண்டு பிரதான சாலைகள் வெட்டிச் செல்லும் சந்திப்பில் இருந்த ஒரு குட்டிநகரத்தில். பிரமாண்ட துணிக்கடைகள், நகைமாளிகைகள், புதுப்படங்கள் திரையிடப்பட்ட திரையரங்குகள், நிமிடத்துக்கு ஐந்தாறு பஸ்கள் வந்துபோகும் பேருந்து நிலையம்; இவ்வளவு பெரிய ஊரில் அவனை எப்படிக் கண்டுபிடிப்பது? யாரிடம் போய் அவனைப்பற்றி விசாரிப்பது?

அவன் சந்திக்கப்போவதோ ஒரே ஒரு நாவல் மட்டுமே எழுதியிருக்கிற ஒரு எழுத்தாளனை. அதிகபட்சம் ஐநூறு வாசகர்கள் அந்த நாவலை வாசித்திருக்கக்கூடும். இலக்கிய வரலாற்றில் பதியும்படியான சாதனை எதையும் அவன் படைத்திடவில்லை. சாதி அடையாளமோ, அரசியல் பின்னணியோ எதுவும் இல்லாதவன்.

குகன் என்பது அவனுடைய உண்மையான பெயராகத் தெரியவில்லை. அது புனைபெயராக இருந்தால் நிலைமை இன்னும் மோசம். இங்கே இருப்பவர்களுக்கு அவனுடைய புனைபெயர் தெரிந்திருக்க நியாயமில்லை.

அஞ்சலக அலுவலகத்தில் விசாரித்தால் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் முதலில் அலுவலகம் எங்கே இருக்கிறதென்று விசாரித்து, அவனுக்குத் தபால் கொடுக்கும் ஆள் யார் என்பது தெரிந்து அவனிடம் இவனைப்பற்றி விசாரிக்கவேண்டும். இந்நேரம் அலுவலகம் திறந்திருக்குமா என்பது சந்தேகந்தான்.

முதல் முயற்சியாகப் பேருந்து நிலையத்திலேயே பத்திரிகைகள் விற்கும் கடைகளில் விசாரிப்பது என்று அவன் முடிவு செய்தான். ஏதாவது ஒரு கடையில் சில பத்திரிகைகளை அவன் தொடர்ந்து வாங்கக்கூடியவனாக இருக்கலாம். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எழுத்தாளனாக அவன் அறிமுகமாகியிருக்கக்கூடும்.

குகன் என்ற ஒரு எழுத்தாளனைத் தெரியுமாவென்று முதல் கடைக்காரரிடம் விசாரித்தான். அவனோ ஏளனமான ஒரு புன்னகையுடன் தெரியாதுஎன்பது போல் தலையாட்டிவிட்டு தனது வாடிக்கையாளன் ஒருவனுக்கு சிகரெட் கொடுத்துக் கொண்டிருந்தான். இரண்டாவது கடைக்காரன் கொஞ்சம் யோசித்து அப்படி யாரும் இல்லையே’’ என்றவன், “எந்தப் பத்திரிக்கையில் அவர் எழுதியிருக்கிறார்?’’ என்று கேட்டான். அவனால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. பெரிய பத்திரிக்கை ஒன்றிரண்டில் அவனுடைய சிறுகதைகள் வந்திருப்பதாக நினைவு. தெளிவாகத் தெரியவில்லை. அவனுடைய நாவல் ஒன்று வெளிவந்திருப்பதாகச் சொன்னான்.

பட்டிமன்றத்துக்கெல்லாம் போய்ப் பேசுவாரா?’’ என்று கேட்டான்.

நவீன எழுத்தாளன் பட்டிமன்றத்தில் பேசுவதா? “தெரியவில்லை’’என்றான் சங்கடத்துடன். இங்கே முத்து என்று ஒரு ஆள் இருப்பதாகவும் அவனை விசாரித்தால் தெரியுமென்றும் கடைக்காரன் சொன்னான். அவனொரு இலக்கிய ஆர்வலன். இலக்கியக் கூட்டங்களில் சொற்பொழிவுகள் செய்பவன். மேலும் அவன் ஒரு ஜோசியக்காரன். சாமியார் போல ஊர்சுற்றிக் கொண்டிருப்பவன். சூன்யத்தில் மிகப்பெரிய ஆளாம்.

ஒரு இலக்கியவாதி சூன்யக்காரனாக இருப்பது எப்படிப்பட்ட ஒரு சுவராஸ்யமான விஷயம்! அவனைச் சந்திக்கும் ஆவல் அதிகமானது அவனுக்கு. பேருந்து நிலையத்தில் புரோக்கராக இருக்கும் ஒருவனைக் கூப்பிட்டு அவனுக்கு முத்துவைக் காட்டும்படி சொன்னான். ஒரு சைக்கிள் கடை பேரைச் சொல்லியனுப்பினான். அங்குதான் அவன் உட்கார்ந்திருப்பானாம். அவன் அந்த புரோக்கரை பின்தொடர்ந்தான். அவனிடம் என்ன வேலை?’ என்று அந்த புரோக்கர் விசாரித்தான். ஜோசியம் பார்ப்பதற்காக வந்திருப்பதாகச் சொன்னான்.

சைக்கிள் கடைக்கு போவதற்கு முன்னமே வழயிலேயே அவன் எதிர்ப்பட்டான். உங்களத் தேடிகிட்டு வந்திருக்காங்கஎன்று அவனை அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு புரோக்கர் போய்விட்டான்.

கடைக்காரர் அவனைப்பற்றிச் சொல்லும் போது முதலில் ஒரு சாமியாரைத்தான் சந்திக்கப்போகிறோம் என்று இவன் நினைத்திருந்தான். ஆனால் அவன் ஒரு சோக்குப் பேர்வழிபோலத் தெரிந்தான். சிவப்புநிறச் சட்டை, பாலிஸ்டர் வேஸ்டி, நெற்றியில் சந்தனப்பொட்டு. ஆனால் பார்வையில் ஏதோ விபரீதத் தன்மை புலப்பட்டது.

குகன் என்ற ஒரு எழுத்தாளனைத் தேடி வந்திருப்பதாக இவன் சொன்னான்.

அவனுக்குக் குகனைத் தெரிந்திருந்தது. அருகிலிருந்த ஒரு மலையாளியின் டீக்கடைக்கு இவனை அழைத்துச் சென்றான் அந்தப் பேர்வழி. டைல்ஸ் கல்லால் அலங்கரிக்கப்பட்ட அந்த குறுகிய கடையில் ஒரு பெஞ்சில் இருவரும் உட்கார்ந்தனர். அது ஒரு மலையாளியின் கடையென்று பார்த்த உடனேயே தெரிந்தது.

டவுன் ஸ்கூலில் குகனும் இவனும் ஒன்றாகப் படித்தவர்களாம். படிக்கும் காலத்திலேயே குகன் கவிதைகள் எழுதுவானாம். இருவருக்கும் நெருக்கமான உறவு இல்லையென்றாலும்கூட அவனைத் தெரிந்திருந்தான். குகன் பக்கத்திலிருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன்.

அவன் சொன்னான், “நீங்க அங்க போறது பிரயோஜனப்படாது.’’

வியப்புடன் அவனைப் பார்த்தான்.

அவன் அநேகமாக அங்கே இருக்கமாட்டான்.’’

எப்படிச் சொல்றீங்க’’ என்று கேட்டான்.

அவன் சிரித்தான். எனக்கு அவனைத் தெரியும்; அவன் வீட்டில் இருக்கமாட்டான்.’’

வெளியூர் ஏதாவது போயிருப்பாரா?’’

நிரந்தரமாகவே அவன் போய்விட்டிருப்பான்.’’

இந்த ஆரூடம் அவனுக்கு எரிச்சலூட்டியது. முக்காலத்தையும் உணர்ந்தவர்கள் போலப் பேசும் ஜோசியர்களை அவன் வெறுத்தான். அவர்களுடைய கூற்றுக்களெல்லாம் பிழைப்புக்காகப் பின்னப்பட்ட ஜோடனைகள் என்பது அவன் அபிப்பிராயம்.

உங்களுக்கு எப்படித் தெரியும்?’’

அவன் நமட்டுச் சிரிப்புடன் சொன்னான், “உங்களுக்கு கடவுள், சாஸ்திரம், ஜோசியம் இதிலெல்லாம் நம்பிக்கையில்லை இல்லையா?’’

ஆமாம்என்பது போல் தலையாட்டினான்.

எனக்குக்கூட நம்பிக்கையில்லை’’ என்றவன் கூர்ந்து இவன் முகத்தைப் பார்த்தான், இவனில் ஏற்படும் குழப்பத்தை ரசித்தபடியே சொன்னான், “ஆனால் ஐம்பூதங்கள் இருக்கிறதல்லவா, அதை நம்புகிறீர்களா?’’ என்று கேட்டான்.

அதை ஆமோதித்து இவனும் புன்னகைத்தான்.

அவன் விளக்கம் கொடுத்தான், “ஐம்பூதங்கள் தான் இந்த உலகத்தின் ஆதாரம், மூலம், சக்தி. எல்லா வஸ்துகளும் அதனால்தான் இருக்கின்றன. கல், மண், தாவரங்கள், பறவைகள், பூச்சிகள், நீ, நான், நம் பேச்சு, சிந்தனை, ஆணவம், அகங்காரம் எல்லாம்.

இவன் ஆமோதிப்பதுபோல் தலையாட்டினான். ஏற்கனவே தெரிந்த விஷயம்தானே இதெல்லாம்.

அவன் தொடர்ந்து சொன்னான், “ஐம்பூதங்கள்தான் இறைவனின் தூதுவர்கள். இவை மூலம்தான் இறைவன் தனது கட்டளைகளை நிறைவேற்றிக்கொள்கிறான். இறைவனென்றால் இங்கே வணங்கப்படும் தெய்வங்கள் அல்ல. இயற்கை என்ற மகா சக்தி. மனிதனின் அறிவுக்குள் அடங்காத பேரறிவு. ஆகச்சிறியதும் ஆகப்பெரியதும் அதுதான். மிக நுண்ணிய அணுவில் ஆற்றலாக உள்ளதும் அதுதான். அணுவைப் பிளக்கையில் பேராற்றலுடன் அது வெளிப்படுகிறது.’’

அவன் சிரித்தான். ஒரு ஆழ்ந்த மௌனத்துக்குப் பின் சொன்னான், “வேடிக்கை என்னவென்றால் அணு தானாக பிளப்பதில்லை. மனிதன் அதைப் பிளக்கிறான். எல்லாவற்றையும் அவன் பிளந்து பார்க்கிறான். பேரழிவை நிகழ்த்திவிட்டு மீண்டும் அதைத் தனது கட்டுக்குள் கொண்டுவர நினைக்கிறான். முடியுமா அது? அடங்குமா அது? பொறுக்குமா இந்த துவேஷத்தை?

மனித மனம் பிரபஞ்சத்தின் ஆன்மாவுக்கு எதிர்த் திசையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஐம்பூதங்களுக்கு எதிரான துவேஷத்தை அவன் கொண்டுவிட்டான். அவனால் அவைகளுடன் உறவாட முடியாமல் போய்விட்டது. அவைகள் சொல்வதை உற்றுக் கேட்கும் பொறுமையை அவன் இழந்து விட்டான்.

எனக்கு அவைகளுடன் பேசும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தின் இரகசியங்களை என்னிடம் அவை சொல்கின்றன. அவைகளுடன் ஆழ்ந்து உரையாடக் கற்றுக்கொண்டுவிட்டால், ஈடுபாடு கொண்டுவிட்டால், இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை உயிர்களின் பிறப்பும், இறப்பும் வாழ்க்கையும் தெரிந்துவிடும்.’’

உங்களுடைய மரணம் கூடத் தெரியுமா?’’ என்று இவன் கேட்டான்.

அவன் சொன்னான், “உங்களால் நம்ப முடியாதுதான். யாராலும் நம்ப முடியாத விஷயங்கள் இவை. என் மரண தினத்தை நான் அறிவேன். நாற்பத்தொன்பதாவது வயதில், எனது மரணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. துல்லியமாகச் சொல்வதானால், 2015 ஜனவரி மாதம், 25ம் தேதி, 3.00 மணிக்குமேல் ஒரு நொடி கூட என் உயிர் தாமதிக்காது.’’

வியப்புடன் அவனைப் பார்த்தான் இவன். அவனது நம்பிக்கையும், தீர்மானமும் உண்மையாகவே ஆச்சரியப்பட வைத்தது.

என்னுடைய தாத்தா அப்படித்தான் இறந்தார். என் அப்பாவும் அப்படித்தான் தன் இறுதி நாட்களைத் தெரிந்தேதான் கழித்தார். அவர்கள்தான் எனக்கு இந்தப் பக்குவத்தைக் கற்றுத்தந்தார்கள்.

நாங்கள் ஜோசியக்காரர்களாக இருந்தாலும் முழுஉண்மையை யாரிடமும் சொல்வதில்லை. எப்படிச் சொல்ல முடியும்? இதைக் கேட்கும் பக்குவம் யாரிடம் இருக்கிறது? யோசித்துப்பாருங்கள் தன்னைப்பற்றி முழு உண்மை தெரிந்தால் மனிதகுலம் என்னவாகும்? ஆடு மாடுகளுக்கோ மற்ற உயிர்களுக்கோ இந்தப் பிரச்சினையில்லை. இந்தத் துயரமெல்லாம் மனிதர்களுக்குத்தான்.’’

பீதியுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தான் இவன்.

டீ அருந்திக்கொண்டே அவன் கேட்டான், “உங்களுடைய மரண நாளை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டுமா? சொல்லுங்கள் அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?’’

இவன் திகைத்தான். இந்தக் கேள்விக்கு உடனே பதில் சொல்ல இயலவில்லை. அவனுக்குள்ளாகவே பலமுறை அவன் கேட்டுக்கொண்ட கேள்விதான் இது; என்றாலும் சகமனிதன் ஒருவன் அதைக் கேட்கும் போது அவன் அதிர்ச்சி அடைந்தான். மேலும் அவனுடைய மரணம் கேட்டவனுக்குத் தெரியக்கூடியதாக இருக்கும்போது இது மேலும் பீதியடையச் செய்தது; முகம் வெளிறிப்போய்விட்டது; இங்கிருந்து போய்விடவேண்டும் என்ற உந்துதல் எழுந்தது. இவர்களின் உரையாடலை அருகில் இருந்த சிலர் கவனித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து இவன் வெட்கினான்.

அவனோ நிலைமையைப் புரிந்து கொண்டவனாக இவனுடைய கையைப் பற்றிக்கொண்டான். பயப்படாதீர்கள், இந்த நிமிஷம்வரை உங்களுடைய மரணத்தைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவைகளிடம் இதுபற்றி நான் கேட்கப்போவதும் இல்லை’’ என்றான் புன்னகையுடன்.

நான் புறப்படுகிறேன்’’ என்றான் இவன்.

டீக்கு காசு கொடுத்துவிட்டுப்போங்கள் என்னிடம் இல்லை’’ என்று சிரித்தான் ஜோசியக்காரன்.

திரும்புவும் அவன் பேருந்து நிலையத்துக்கு வந்தான். பொழுது சாய்ந்து விட்டது. சிறிதுநேரத்தில் இருட்டிவிடும்.

பயணிகளுக்கான சிமெண்ட் திட்டின் மேல் உட்கார்ந்து கொண்டான். அவனுக்கு நேர் எதிரே உயரத்தில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது. சிலர் நின்று அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவனுக்குப் புறத்தே இருந்த எல்லாவற்றையும் புகைமூட்டம் வந்து கவ்விக் கொண்டது போல தோற்றம் தர, தனக்குள் குமைந்துகொண்டிருந்தான். அவன் நினைத்துக் கொண்டிருந்ததுபோல எதுவும் இல்லை. சாரமற்றதென்றும், வெற்று ஆரவாரங்கள் என்றும் அவன் வெறுத்தொதுக்கிய லௌகீக வாழ்க்கையிலிருந்து இப்படி ஒரு தாக்குதல் வருமென்று அவன் கருதவில்லை.

மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான். யாரும் இதிலிருந்து தப்பப்போவதில்லை. எப்போது என்பது மட்டும்தான் மறைபொருள். இந்தச் சாதாரண உண்மையை ஏன் நம்மால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஒவ்வொருவரும் தங்களை நித்தியமான உயிராக பாவித்து கொள்வதில்தான் பிரச்சினை இருக்கிறது. பயம் இங்கிருந்துதான் பிறக்கிறது.

அந்த ஜோசியன் இன்னொரு குழப்பத்தையும் உண்டு பண்ணிவிட்டான். குகன் வீட்டில் இருக்க மாட்டானென்று. அவன் நிரந்தரமாகப் போய்ச் சேர்ந்திருப்பான் என்றல்லவா அவன் சொல்லிவிட்டான். பிறகு எதற்காக அங்கே போகவேண்டும்?

ஒரு வேளை அவன் வீட்டிலேயே இருந்தால்?

இங்கிருந்து மூன்று மைல் தொலைவில்தான் அவனுடைய கிராமம். அவனைப் பார்க்க இருநூறு கிலோமீட்டர் தூரம் வந்துவிட்டு இங்கே ஒரு ஜோசியன் சொன்ன ஆரூடத்தை நம்பித் திரும்ப போவது எவ்வளவு முட்டாள்தனம்!

அந்தக் கிராமத்துக்குப் போய்வருவது என்று தீர்மானித்தான்.

பஸ்ஸைவிட்டு இறங்கியதும் அவன் வீடு கிட்டத்திலேயே இருக்கிறது என்று சொல்லியிருந்தான் அவன். அவன் இறங்கும் போது இரவு எட்டு மணியாகி விட்டிருந்தது. அவனுடன் நிறுத்தத்தில் இன்னொரு ஆளும் இறங்கினார். அதே ஊர்க்காரர் போல் தெரிந்தார். அவரிடம் குகனின் வீடு எங்கிருக்கிறது என்று கேட்டான். ரோட்டுக்கு வலது பக்கமாக நாட்டு ஓடு வேய்ந்த ஒரு வீட்டைக் காண்பித்தார். சின்னக் கிராமம்தான். மொத்தமாக நாற்பது ஐம்பது வீடுகள் இருக்கலாம். ரோட்டுக்கு இரண்டுபக்கமும் அவைகள் தென்பட்டன. வேறு தெருக்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தெருவிளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. இடது பக்கத்தில் நான்கு வீடுகள் தள்ளி இரண்டு கிழவர்கள் பேசிகொண்டிருந்தார்கள். அவர்களைத்தவிர வேறு ஒருவரும் தெருவில் தென்படவில்லை.

கதவு லேசாக ஒருக்களித்து விடப்பட்டிருந்தது. கதவில் தட்டினான். ஒரு இளைஞன் வெளியே வந்தான். அவனிடம் குகனைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன் என்றான். உள்ள வாங்கஎன்று கூட்டிக்கொண்டு போனான் அவன்.

அந்த இளைஞன் அவனுடைய தம்பியாம். குகன் ஊரில் இல்லை என்று சொன்னான். எங்கே போயிருக்கிறான் என்று யாருக்கும் தெரியவில்லை. வீட்டிலிருந்து போய் ஒரு மாசத்துக்கு மேலாகிறது. யாரோ ஒரு நண்பனைப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் போனவன் தான், திரும்பவே இல்லை. தெரிந்தவரை தேடியாகிவிட்டது. நண்பர்களிடம் விசாரித்தாகிவிட்டது. ஒருவருக்கும் தெரியவில்லை.

ஜோசியன் சொன்னதுபோலவே குகன் வீட்டில் இல்லை. இது அவனுக்குள் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியது. ஒரு வேளை இது எதேச்சையாகவும் நடந்திருக்கலாம் அல்லது அவன் வீட்டிலிருந்து போய்விட்ட விஷயத்தை யார் மூலமோ அவன் கேள்விப்பட்டிருக்கலாம்.

குகனுடைய தம்பி, அப்பா, அம்மா மூவர்தான் வீட்டில் இருந்தது. அவனுடைய அம்மா இவனைப் பார்த்ததும் அழுது புலம்பினாள். அவன் பிழைப்பைக் கவனிக்காமல் கதை கிதை என்று ஊரைச்சுற்றிக் கொண்டிருந்தது பற்றி ஆரம்பத்தில் கண்டிப்பதுண்டாம். பின்னால் அவன் போக்குப்படி விட்டுவிட்டாளாம். தம்பி விவசாயத்தைப் பார்த்துக்கொள்கிறான். அவன் அப்பாவுக்கு இதுபற்றியெல்லாம் அக்கறை இருந்ததாகத் தெரியவில்லை. கஞ்சா புகைத்துக்கொண்டு காலம் கழிக்கிறார். அவன் எங்குவேணாலும் போகட்டும். ஒரு தடவை வந்து தலையைக் காட்டிட்டுப் போயிடலாமில்லேஎன்று அவள் ஆதங்கப்பட்டாள்.

இரவு அங்கேயே தங்கிவிட்டான். சாப்பாடு முடித்து அவனுடைய தம்பியுடன் திண்ணையிலேயே படுத்துக்கொண்டான். தன்னுடைய அண்ணன் சம்பந்தமாக வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தான் அவன். குகனைப்பற்றி குற்றச்சாட்டுகள் எதையும் முன் வைக்காதது ஆறுதலாக இருந்தது. தனது சகோதரன் நேர்மையான ஒரு மனிதன் என்பதை அவன் புரிந்து கொண்டிருந்தான். புத்தகம் படிப்பது, எழுதுவது இதெல்லாம் ஒன்றும் தனக்கு விளங்கவில்லை என்று சொன்னான். தான் சம்பாதிப்பதில்லை என்ற காரணத்தாலோ என்னவோ வீண்செலவுகள், ஆடம்பரங்கள் எதிலும் அவனுக்கு நாட்டம் இருந்ததில்லை என்று சொன்னான். டவுனுக்கோ அல்லது எங்கேயாவது ஊர்ப் பிரயாணம் போவதாக இருந்தால் அம்மாவிடம் கேட்பதோடு சரி. எவ்வளவு சொல்லியும் கல்யாணம் இப்போது வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டானாம். வயசு அதிகமாகிவிட்டதால் செய்து கொண்டிருந்திருக்கலாம் என்று இவன் அபிப்பிராயப்பட்டான். கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்தால் அவன் இப்படி வெளியே போயிருக்கமாட்டானாம்.

இவனுக்கு முன்பே அவனுடைய தம்பி உறங்கிவிட்டான். தூக்கம் வராமல் நீண்ட நேரம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்து பின்பு தூங்கிப்போனான்.

மறுநாள் காலை அவனுடைய தம்பியுடன் வயற்காட்டுக்குப் போய்வந்தான். காலை உணவை முடித்துக்கொண்ட பின் புறப்படுவதற்கு முன்னால் அவனுடைய புத்தக அலமாரியைப் பார்க்கவேண்டுமென்று தோன்றியது. வீட்டின் பின்புறத்தில் தோட்டத்தை ஒட்டிய அறையில்தான் அது இருந்தது. அந்த அறையை அவன் மட்டுந்தான் பயன்படுத்திவந்திருக்கிறான். ஐம்பது அறுபது புத்தகங்கள்தான் அதில் இருந்திருக்கும். சில கதைப் புத்தகங்கள் தவிர்த்து மீதி இருந்தவை எல்லாமே கவிதைத் தொகுப்புகள். அங்கே அவனுடைய கையெழுத்துப் பிரதி ஒன்று கிடைத்தது. ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதியிருந்தான். அடித்தல் திருத்தல்களோடு காணப்பட்டது. பத்திகளை மாற்றிப்போட்டு வாசிப்பதற்கான குறியீட்டு அடையாளங்கள் ஆங்காங்கே இடப்பட்டிருந்தன. அது கதையின் முதல் வரைவாக இருக்கலாம். அவன் கடைசியாக எழுதியது அதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றியது.

நான் நாரயணனைப் பார்க்க அவன் ஊருக்குச் சென்றிருந்தேன். அவன் ஊரில் இல்லை. அவன் எங்கே போயிருக்கிறான் என்று யாருக்கும் தெரியவில்லை…இவ்வாறாக அக்கதை தொடங்கியது.

10. வேட்டை

மன்னன் மந்திரியை நோக்கி நான் அந்த ஞானி தூபானைச் சந்தேகித்துக் கொலை செய்தால், மன்னர் சிந்துபாத் அவர் வளர்த்த வல்லூறைக் அவரே கொன்றதைப் போன்ற மூடத்தனமான செயலைச் செய்தவன் ஆவேன்’’ என்றார்.

ஆயிரத்தொரு இரவு அரபுக் கதைகள்

எனக்கு நினைவு தெரிந்து வீட்டில் நிறைய புறாக்கள் இருந்தன. இதற்கென்றே அய்யா கூண்டு ஒன்றைச் செய்து வைத்திருந்தார். வீட்டுக்கு எதிர்த்த மாதிரி இப்போது வேப்பமரம் நிற்கும் இடத்தில்தான் அந்த மரக்கூண்டு வைக்கப்பட்டிருந்தது. புறா வேண்டுமென்று யாராவது வந்துகொண்டிருப்பார்கள். அம்மாவுக்கு அவைகளைப் பிடித்துக் கொடுக்கவே விருப்பம் இருக்காது; அய்யாவுக்கும்தான். இருந்தாலும் அவரால் இல்லையென்று சொல்ல முடிந்ததில்லை. இப்படி இழப்புக்கள் இருந்தாலும் கூட கூண்டில் புறாக்கள் வற்றவில்லை. பின்பு எப்படி அவைகள் அற்றுப்போயின? வேட்டைக்கார கவுண்டனைக் காரணமாகச் சொல்லாம். அவனுடைய துப்பாக்கி ரவைகளுக்குப் பலியாகி விழுந்தவைகளும், பயத்தில் பறந்து போனவைகளும் ஏராளம். அய்யாவின் உத்தரவின் பேரில்தான் அவன் அப்படி செய்தான்.

வேட்டைக்கார கவுண்டனுக்கு உண்மையான பெயர் எதுவென்று தெரியவில்லை. எங்கள் அய்யாவைவிட அவன் நல்ல கறுப்பு. பெரிய மீசை வைத்திருப்பான். எனக்கு அவனைப் பார்த்தாலே பயம். ஆற்றைத்தாண்டி மலையடிவாரத்தில்தான் அவனுடைய வீடு. ஒரு முறை அய்யாவுடன் நானும் அங்கு போயிருக்கிறேன். பூத்திக்குரங்கை காட்டிலிருந்து சுட்டுக்கொண்டுவந்திருந்தான். சிகப்பு நிற மாமிசக் குவியலுக்குப் பக்கத்தில் அதன் தலை மட்டும் தனியே உட்கார்ந்திருந்தது. வேட்டைக்காரன் முகம் போலவே குரங்கின் முகமும் அட்ட கறுப்பு. அதைப் பார்த்துவிட்டு வந்தபிறகு பல இரவுகளில் அந்தக் குரங்குத்தலை கனவுகளில் வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தது. மாமிசப் பாறைகளுக்கு மேல் வேட்டைக்காரன் உட்கார்ந்திருக்க அதன் தலை ஒரு பருந்தைப்போல வான்வெளியில் பறந்துகொண்டிருக்கும். ஒரு கனவில் அந்தக் கருங்குரங்கின் வாலைப் பிடித்தபடி பள்ளிக்குப் போகிறேன்.

கருங்குரங்கை வேட்டையாடுவது அவ்வளவு லேசான காரியமில்லை என்று சொல்வார்கள். தோட்டா துளைத்த இடத்தில் மூலிகைத்தழைகளைப் பறித்து நிரப்பிக்கொண்டு தப்பி விடுமாம் அது. அய்யாகூட அவனுடைய வேட்டைக்குழுவில் இருந்ததாக ஞாபகம். ஆனால் அவரிடம் துப்பாக்கி எதுவும் இருந்ததாக நினைவில்லை.

ஒரு நாள் வேட்டைக்கார கவுண்டன் எங்கள் வீட்டுக்குத் துப்பாக்கியுடன் வந்தான். அவன் வந்ததை முன் அறிவிப்பு செய்தது எங்கள் நாய். அவன் தோப்பில் வந்து கொண்டிருந்ததைப் பார்த்ததுமே குரைக்கத்தொடங்கியது. பக்கத்தில் வந்த பிறகும் அவன் பயப்படாததைக்கண்ட நாய் பின்வாங்கி, திண்ணையில் உட்கார்ந்திருந்த அய்யாவுக்குப் பக்கத்தில் வந்து நின்று குரைத்தது. அவன் மெல்லச் சிரித்துக்கொண்டே வந்தான். அவனைக் கண்டதும் நான் அய்யாவுக்குப் பக்கத்தில் போய் ஒட்டிக்கொண்டேன்.

வா’’ என்றார் அய்யா. அய்யாவுக்கு எதிர்த்த திண்ணையில் வந்து உட்கார்ந்தவன் துப்பாக்கியைச் சுவரில் சாய்த்து வைத்தான். எங்கள் நாயைப் பார்த்துச் சொன்னான், “ஒன்னும் புண்ணியமில்லே.’’ அப்போது நாய் குரைப்பை நிறுத்திவிட்டிருந்தது. நாம என்ன வேட்டைக்கா வச்சிருக்கோம்? ஏதோ ஒப்புக்கு வீட்டாண்ட இருக்கட்டுமே’’ என்றார் அய்யா.

கருப்பனை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?’’ என்றான் வேட்டைக்காரன் பெருமிதத்துடன். இருக்குஎன்பதுபோல தலையாட்டி அய்யா சிரித்தார். எங்கள் ஊரில் யாராவது நாய்களின் சாகசங்களைப்பற்றிப் பேச ஆரம்பிப்பார்களேயானால் அந்தப் பேச்சு எங்கு தொடங்கினாலும் கருப்பனைப்பற்றிப் பேசாமல் முடிவடையாது என்பது நியதி. நான் அதைப் பார்த்ததில்லை என்றாலும் அந்த நாயைப்பற்றிச் சொல்லப்பட்ட கதைகளைக் கேட்டிருக்கிறேன். அய்யாகூட அடிக்கடி வீட்டில் அதைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருப்பார்.

அந்தக்கதைகளின் சாரம் கருப்பன் அருமையான ஒரு வேட்டை நாய் என்பதுதான். கறுப்பு என்றாலும் பளபளப்பான உடம்பு. வேட்டைக் குழுவுடன் காட்டுக்குள் புகுந்துவிட்டால் பாதி வேட்டை அதனுடையதுதான். சுற்றி வளைக்கப்பட்ட மிருகம் மிரண்டு ஓடுகையில் கருப்பன் துரத்திச் சென்று அதன் குரல்வளையைக் கவ்விக்கொள்ளும். துப்பாக்கிக் குண்டுக்குத் தப்பிவிட்டாலும் கருப்பனிடமிருந்து தப்பிக்க முடியாது. யாரும் சொன்னதில்லை. அதில் உண்மை இருக்குமென்று நானும் நம்பினேன். அப்படி நம்புவதில் சொல்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் ஒருவிதமான சந்தோஷம் இருந்தது.

தனது எஜமானன் வந்தால்தான் வேட்டைக்கு வருவேன் என்று எப்போதும் கருப்பன் அடம் பண்ணியதில்லை. வேறு யாராவது வந்து கவுண்டரே கருப்பன கொஞ்சம் வேட்டைக்கு அனுப்புங்கஎன்று கேட்டால் அவனும் மறுக்கமாட்டான். தன்னைக் கூட்டிப்போக வேட்டைக்குழு வந்தவுடன் அதுவும் எழுந்து ஆயத்தமாகிவிடும்.

கருப்பன் ரொம்பவும் கறார்ப் பேர்வழி. யார் தன்னை வேட்டைக்குக் கூட்டிக்கொண்டுபோனாலும் அவனுடைய பங்கைச் சரியாகக் கொடுத்துவிட வேண்டும். வேட்டை மிருகத்தைவிட்டு அப்பால் நகராது. கறியை அறுத்துப் பங்கு போடும்வரை காத்திருக்கும். முதல் பங்கை அதற்குப் போட்டுவிட வேண்டும். அவனை மீறி ஒரு துண்டு கறியைக்கூட யாரும் எடுத்துப் போக முடியாது; கடித்துக் குதறிவிடும்.

இப்படிப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரனான கருப்பனுக்குத் தானே எமனாக இருப்போமென்று வேட்டைக்காரன் நினைத்திருப்பானா? ஒரு நாள் வேட்டையின்போது அவனுடைய துப்பாக்கி ரவைகளே அதைப் பலி வாங்கிவிட்டதாம். இரவு வேட்டை அது. மான்குட்டி என்று நினைத்து பக்கத்திலிருந்த கருப்பனைச் சுட்டுவிட்டான். தான் வீழ்த்திவிட்டு நின்ற மானுக்குப் பக்கத்திலேயே அதுவும் விழுந்து செத்துப் போனதாம்.

ஆச்சாரிய நேத்து ராத்திரி போலீசு வந்து மெரட்டிட்டு போச்சின்னு சொன்னாங்களே’’ என்றார் அய்யா. அவன் மயிரத்தான் புடுங்குவானுங்க’’ என்றான் வேட்டைக்காரன். எதா எவனாச்சும் வந்து ஒரு துப்பாக்கி சாமான எடுக்கச் சொல்லு பார்ப்போம். இவனுங்கள மாதிரி ஆயிரத்தெட்டு போலிசப் பாத்துட்டான் அந்த கம்மாளன். ஒரு தடவ புதுசா வந்த ஒரு இன்ஸ்பெக்டரு திருப்பத்தூருக்கு கொண்டுபோயிட்டான் ஆச்சாரிய. அவனோட ரிவால்வரு ஒன்னுக்கு குதிர சரிய விழலேன்னு இவன்கிட்ட காமிச்சருக்கான். சாமான கொண்டுவரச்சொல்லி அங்கியே வச்சி கொஞ்ச நேரத்துல சரிபண்ணி குடுத்திருக்கான். இனி ஆச்சாரி வெளியவே வரமுடியாதுன்னு சொன்னாங்க. மூணே நாளு, வெளிய வந்துட்டான். இந்த சுத்து வட்டாரம்ன்னு இல்லே, மேற்க சீம மொத்தமும் இவன் அடிச்சு குடுத்த ஏனங்கதான். வேற எவனாலும் இப்படி செய்யவும் முடியாது’’ என்றான் வேட்டைக்கார கவுண்டன். ஊட்டுக்கு ஆளுவுட்டிருந்திங்களாம்; ஏனத்த கையோட எடுத்துகிட்டு வரச்சொல்லி. என்ன சமாச்சாரம்?’’

நம்ம பொறாவுல ரெண்டு மூணு பொறா மட்டும் கூட்டுக்கு வரமாட்டாம பித்தலாட்டம் பண்ணுதுங்க. ஒழிஞ்சிபோன்னு விடலாம்ன்னாலும் இருக்கிறதையும் கெடுத்து கூட்டிக்கிட்டு போயிடுச்சின்னா என்ன பண்றது? சுட்டா கறிக்காவது ஆவட்டுமே’’ என்றார் அய்யா.

அதுக்கின்னா எங்கப்போயிடப்போறா கழுத? எங்கஇருக்குன்னு சொன்னீங்க?’’

அய்யா காண்பித்தார். அதோ கொஞ்சம் வளர்த்தியா இருக்கே தென்னமரம் அதுலதான்.’’

அவன் தனது துப்பாக்கியை முதுகுப் பக்கம் மறைத்துப் பிடித்தபடி அந்த மரத்தருகில் போனான். எனக்கு அவன் சுடுவதைப் பக்கத்திலிருந்து பார்க்கவேண்டுமென்று ஆசை. அய்யாவையும் கூப்பிட்டேன். அங்கே போகக்கூடாது என்று சொல்லிவிட்டார். எச்சரிக்கையாகிவிட்டால் ஒரு புறாகூடக் கிடைக்காதாம்.

அவன் போன சிறிது நேரத்திலேயே டொபுக் கென்று ஒரு வெடிச்சத்தம் கேட்டது. குண்டடிபட்ட ஒரு புறாவைத் தூக்கிக்கொண்டு வந்தான். அதனுடன் இருந்த மற்ற புறாக்கள் பீதியுடன் எழுந்து பறந்து போய்விட்டன. பிறகு அவைகள் இங்கு வரவில்லை.

மீதி இருந்த புறாக்களின் ஒழுக்கத்தின் பேரில் சந்தேகமில்லை என்பதால் அய்யாவுக்குக் கொஞ்சம் நிம்மதி. அவற்றிலிருந்தும் திருட்டுப் புறாக்கள் உற்பத்தியாவதற்கு அதிக நாட்கள் ஆகவில்லை. திரும்பவும் வேட்டைக்காரக் கவுண்டனை அழைத்துவர ஆள் அனுப்பினார். கவுண்டன் துப்பாக்கியுடன் வந்தான். புறாக்கள் சில காணாமல் போயின. வைத்தியத்துக்கென்று கொடுத்தவை, கறிக்காக அறுத்தவை என புறாக்களெல்லாம் அத்துப்போய்விட்டன.

காலியாக நின்ற கூண்டைப் பார்க்கும் போதெல்லாம் மீண்டும் புறா வளர்க்க வேண்டும் என்ற ஆசை எழும். ஆனால் வீட்டில் யாரும் அதற்கான முயற்சியை எடுக்கவில்லை. பிறகு அந்த மரக்கூண்டை அய்யாதான் யாரிடமோ எடுத்துப்போகச் சொல்லிவிட்டார்.

11. மஞ்சள் பாம்புகள்

ஊரில் உதியனைப் பற்றி நிறையத் தப்பபிப்ராயங்கள் உண்டு. யாருமே போக அஞ்சும் கூடுவான் பொந்தில் ஏதோ மாந்தரீக காரியங்களில் ஈடுபட்டிருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். ஊருக்கு ஒருவனும் தலைச்சன் பிள்ளையுமான ஈனப்ப அம்பட்டன் செத்தபோது சுடுகாட்டில் புதைத்திருந்த பிணத்தை உதியன் களவாடிக்கொண்டுபோய்விட்டதாக ஈனப்பனின் தம்பி கூனன் உறுதியாக நம்பினான். பிணத்திலிருந்த மூளையையும், கைகளையும் வெட்டி எடுத்துச் சூரணம் செய்துவிட்டானாம்.

உதியனுக்கு எதிரில் இவ்வளவு பகிரங்கமாக குற்றம் சொல்ல ஊரில் யாருக்கும் தைரியம் போதவில்லை. உதியன் ஊரில் இருக்கும் நாள்களில், பொழுது சாய்ந்ததும் கூனன் சாராயத்தை ஊற்றிக்கொண்டு, வீட்டுக்கு முன் வந்து திட்டிக்கொண்டிருப்பான்.

உதியனை ஊருக்குள் பார்ப்பது அரிதான விஷயம். அவன் எப்போதும் காடுகளில் திரிந்துகொண்டிருப்பவன். பெற்றோர்கள் மேலே போய்ச் சேர்ந்துவிட்டார்கள். பங்காளிகளுடன் பகை. சிறுவனாக இருந்தபோதே காடு அவனை சுவீகரித்துக்கொண்டுவிட்டது.

அவனுடைய தெருக் குழந்தைகளைத் தவிர ஒருவரும் இங்கே அவனுக்காகக் காத்திருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் காட்டிலிருந்து திரும்பி வரும் போதும் அவர்களுக்காக அவன் மஞ்சள் பாம்புக் குட்டிகளைப் பிடித்துக்கொண்டு வருவான். அவன் தலையில் தூக்கிக்கொண்டு வரும் பச்சை மூங்கில் கூடை முழுவதும் பாம்புகளாக நெளிந்துகொண்டிருக்கும். அவன் வீட்டுக்கு வந்துவிட்டான் என்பது தெரிந்ததும் அத்தெருக் குழந்தைகள் எல்லாம் ஓடிவந்து அங்கே சேர்ந்துவிடுவார்கள்.

அவன் கூடையைக் கவிழ்த்ததும் பாம்புகள் எல்லாம் தரையில் நகர ஆரம்பிக்கும். பிள்ளைகள் ஆளுக்கொன்றாகப் பிடித்துக்கொள்வார்கள். குழந்தைகளை ஒன்றும் செய்யாத சாதுக்கள் அவை. பச்சைப் பாம்புகளைப் போல கூரான முகமும் முதுகுப்புறம் லேசாகக் கறுத்தும் வயிறு மஞ்சள் நிறமாகவும் இருக்கும். பூனைக் குட்டிகளைப் போல அவற்றைக் குழந்தைகள் கைகளில் வைத்து கொஞ்சிக்கொண்டிருப்பார்கள். பெற்றொர்களுக்கோ வயிற்றில் புளியைக் கரைக்கும். உதியனைத் திட்டித்தீர்ப்பார்கள். அவற்றை தெருவிலேயே வீசிவிட்டு வரும்படி பிள்ளைகளுக்குக் கட்டளை இடுவார்கள். அதனாலேயே அவற்றை மறைத்து வைக்கவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. பள்ளிக்குச் செல்லும் போது கூடவே அவற்றையும் எடுத்துச்சென்றார்கள்.

ஒரு நாள் பள்ளியில் இந்த விஷயம் பெரிய கலவரத்தையே உண்டு பண்ணிவிட்டது. மூன்றாம் வகுப்பு வாத்தியார் பிள்ளைகளை வாய்ப்பாடு எழுதச் சொல்லிவிட்டு மேஜைமேல் உட்கார்ந்து வேர்க்கடலையை உறித்துத் தின்றுகொண்டிருந்தார்.

ஒரு பையன் எழுந்து வாத்தியாருக்கு முன் நின்று கையைக் கட்டிக்கொண்டு நின்று சொன்னான், “சார் பாபு பைக்குள்ள பாம்பு வச்சிருக்கான்.’’

அவர் மேஜை மேலிருந்து கீழே நழுவினார். அவர் பாபுவைப் பார்த்த போது அவனுக்குப் பக்கத்திலிருந்த பையன்கள் பாதுகாப்பான தூரத்தில் விலகி உட்கார்ந்திருந்தனர்.

டேய் எந்திரிடா’’ என்று பாபுவைப் பார்த்து பதற்றத்துடன் சொன்னார். அவன் தயக்கத்துடன் எழுந்து நின்றான். இரண்டு கைகளாலும் கால்சட்டையை இழுத்து விட்டுகொண்டான்.

பாம்பா வச்சிருக்கே நீ?’’. அவனை நோக்கி ஒரு அடியும் எடுத்துவைக்க அவர் விரும்பவில்லை. வேறு ஏதாவது விஷயமாக இருந்திருந்தால் இந்நேரம் அவனுடைய முதுகில் இடி இறங்கியிருக்கும். அவன் எதுவும் சொல்லாமல் தன்னுடைய சகா சேட்டுவைப் பார்த்தான்.

சொல்லுடா’’ என்று மேஜை மேலிருந்த பிரம்பை நீட்டினார். அவனை எட்டவில்லை அது.

சேட்டுகூட ஒரு பாம்பு வச்சிருக்கான் சார்’’ என்றான். ஏதோ கமர்கட் வைத்திருப்பது போல. அவனும் எழுந்து நின்றான். சேட்டு பையிலிருந்த ஓட்டை வழியே(எலி உபயம்) ஒரு மஞ்சள் பாம்பு வெளியே வந்து தலையைக் காட்டியதை அவர் பார்த்தார். குற்றவாளிகளாக நின்று கொண்டிருந்த பையன்கள் வாத்தியார் இவர்கள் மூன்று பேர்தான் அந்த வகுப்பறைக்குள் இருந்தார்கள். மற்ற பையன்கள் எழுந்து ஓடிவிட்டார்கள்.

இது ஸ்கூலா இல்ல பாம்பாட்டி மடமாடா ராஸ்கேல்…’’ என்று கோபத்திலும் பதற்றத்திலும் கத்தினார் வாத்தியார். அவரின் முகம் சிவந்துவிட்டது.

பாம்பு இப்போது பைக்குள்ளிலிருந்து முழுவதும் வெளிவந்து விட்டிருந்தது. கூர்மையான அதன் தலையிலிருந்து நாக்கு வெளியே வந்துவந்து போனது வாத்தியாரைக் கிலிகொள்ளச் செய்தது. மற்ற பிள்ளைகளைப் போல அவருக்கும் இங்கிருந்து ஓடத்தான் விருப்பம். ஆனால் செய்யமுடியவில்லை.

மற்ற ஆசிரியப் பெருந்தகைகளும் அங்கே வந்து கூடிவிட்டார்கள். ஆனால் அவர்கள் உள்ளே வராமல் படல் தடுப்புக்கு அந்தப் பக்கமிருந்தே எட்டிப் பார்த்தார்கள். ஒரு வாத்தியாரினியும் அதில் அடக்கம். தனது மினி சைஸ் கொண்டைக்குள்ளேயே பாம்பு புகுந்துவிட்டது போல நடுங்கிக்கொண்டிருந்தாள் அவள்.

பையன்களை நெருங்க எந்த வாத்தியாருக்கும் தைரியமில்லை. வகுப்பறை வாசலில் வந்து நின்ற தலைமை ஆசிரியர் அந்த இரண்டு குற்றவாளிகளையும் உடனே பள்ளியை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்தார்.

கீழே தவழ்ந்துகொண்டிருத பாம்பை சேட்டு எடுத்துக் கயிறு போலச் சுருட்டி கால்சட்டை ஜோபியில் சொருகிக்கொண்டு கம்பீரத்துடன் நடந்துபோனான். பாபுவின் கண்களில் மட்டும் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

அவர்கள் பள்ளிக் கட்டடத்தை விட்டு வெளியேறியதும் தலைமை ஆசிரியர் சொன்னார், “இனிமே நீங்க ரெண்டு பேரும் ஸ்கூல் பக்கமே வர வேணா. உங்க அப்பா அம்மா வந்து கெஞ்சினா கூட சேக்கமாட்டேன்.’’ அவருடைய சொட்டைத் தலையை மூடி முடியாமல் நின்ற முடிக்கற்றை கூட ஒரு பாறை மேல் கரும்பாம்பு ஊர்வது போலத்தான் இருக்கும் சேட்டுக்கு.

அவர்கள் போன பின்பு தலைமை ஆசிரியர் நடத்திய விசாரணையில் மஞ்சள் பாம்புக்குட்டிகள் வைத்திருந்ததாக ஆறு மாணவர்கள் பிடிபட்டார்கள். அதில் ஒரு சிறுமியும் அடக்கம். அவள் பாம்பைத் தனது ஜியாமட்ரி பாக்சில் ஒளித்து வைத்திருந்தாள். அவர்களும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். மறுநாள் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நடந்த சமரச பேச்சுவார்த்தைக்குப் பின் சுமுகத் தீர்வு எட்டப்பட்டது. பிள்ளைகள் மீண்டும் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த அனுமதி பாம்புகளுக்குக் கிடைக்கவில்லை. சேட்டு அதற்குப் பிறகு பள்ளிக்கூடம் பக்கமே வருவதில்லை. ஒரு நாள் தலைமை ஆசிரியர் பஸ்ஸிலிருந்து இறங்கி பள்ளிக்கு வரும்போது எதிர்கொண்ட அவன் சொட்டைத் தலையாஎன்று சொல்லிவிட்டு ஓடிவிட்டானாம்.

வீட்டில் சில குழந்தைகளுக்குப் போதுமான அளவுக்கு உதை கிடைத்தது. இச்சம்பவத்துக்குப் பின் தங்கள் குழந்தைகளை இனி உதியன் வீட்டுப் பக்கம் அனுப்புவதில்லை என்று உறுதிபூண்டார்கள் பெற்றோர்கள். ஆனால் சில குழந்தைகள் கேட்பதாக இல்லை. அங்கு இங்கு சாக்குப் போக்குக் காட்டி உதியன் வீட்டுக்குள் போய் நுழைந்துகொண்டார்கள். குட்டி நண்பர்களைப் பார்க்காமல் அவர்களால் இருக்க முடியவில்லை.

மஞ்சள் பாம்புகளைத் தவிர வேறு சில பாம்புகளையும் உதியன் வீட்டில் பார்க்கலாம். அதுவெல்லாம் விஷப்பாம்புகள் என்று அவன் சொன்னான். ஆனால் அவை கூடக் குழந்தைகளை ஒன்றும் செய்ததில்லை. சில தைரியமான வாண்டுகள் மட்டும் அவற்றைக் கையில் பிடித்துப் பார்த்து மகிழ்ந்தன. ஆனால் மஞ்சள் பாம்புகளைப் போல வேறு எதுவும் அவர்களுக்கு உற்சாகத்தைத் தருவதில்லை. அந்த மஞ்சள் நிற ஒளிர்தல் அவர்களை வசீகரித்தது.

இந்தப் பாம்பு மட்டும் ஏன் இப்படி மஞ்சளா மின்னுது?’’ என்று ஒருமுறை ஒரு சிறுவன் கேட்ட கேள்விக்கு உதியன் பின்வரும் கதையைத்தான் சொன்னான்.

முன்னொரு காலத்தில் நடந்ததாம் அது. எப்போதும் போல பொழுது விடிவதற்காகக் காத்திருந்த ஜனங்களுக்கு அன்று பயங்கர ஏமாற்றம். அன்று வெகு நேரமாகியும் சூரியன் உதிக்கவில்லை. உலகத்தை இருள் கவ்விக்கொண்டுவிட்டது. ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள்; ஒரு மாதமாகியும் சூரியன் உதிக்கவில்லை. அவர்கள் காத்திருப்பு வீணாயிற்று. ஜனங்கள் பீதியில் உறைந்துகிடந்தார்கள். வெளிச்சமில்லாமல் எப்படி? தீப்பந்தங்களுடனும், விறகுக் கட்டைகளுடனும் எத்தனை நாட்கள் காலத்தை தள்ளுவது? நட்சத்திரங்கள், நிலா எதுவுமே அவர்கள் கண்ணுக்குப் புலப்படவில்லை. காலத்தைக் கணிக்க முடியாமல் தூக்கம் வந்த போது தூங்கினார்கள், பசிவந்தபோது சாப்பிட்டார்கள். ஒரு வேலையும் செய்யமுடியவில்லை.

சூரியன் எங்கேபோய்த் தொலைந்தான்? யார் அவனைக் களவாடிக்கொண்டு போனது? ஒருவருக்கும் தெரியவில்லை. கொஞ்சம் பேர் துணிவுடன் சூரியனைத் தேடிப் புறப்பட்டார்கள். அதில் உதியனின் கொள்ளுத்தாத்தாவுக்கு தாத்தாவும் ஒருவர். காடு, மேடு என்று அலைந்து திரிந்தார்கள். பறவைகளின் கூடு, எலிவளை, மரப்பொந்து, பாறை இடுக்கு; அவர்கள் தேடாத இடமில்லை.

உதியனின் தாத்தா சோர்வுற்று, களைத்து ஒரு மரத்தடியில் சுருண்டு படுத்துவிட்டார். ஒரு மாதமாக வெளிச்சத்தையே காணாத அவருடைய இமைத் தசைகளை ஊடுருவி ஒரு வெளிச்சம் கசிந்து வருவதை உணர்ந்து திடுக்கிட்டு விழித்தார். சுற்றிலும் பார்த்தார். அவருக்குச் சற்று அருகே ஒளிக்கயிறு ஒன்று சுருண்டு கிடந்தது. அருகில் போய்ப் பார்த்த பிறகுதான் அது பாம்பென்று தெரிந்து. அதன் வயிறு புடைத்திருந்தது. சூரியனை விழுங்கிவிட்ட தவிப்பு அதன் மேனியில் தெரிந்தது.

கத்தியினால் அதன் வயிற்றைக் கிழித்தார். சூரியன் விடுபட்டு மேலெழுந்தான். உலகம் வெளிச்சத்தில் விழித்தது. காட்டு மிருகங்களெல்லாம் சந்தோஷக் கூச்சல் எழுப்பிச் சூரியனை வரவேற்றன. செத்துக்கிடந்த பாம்புக்கருகில் சில முட்டைகளும் இருந்ததை அவர் கண்ணுற்றார். அந்த முட்டைகளிலில் இருந்து வந்தவைதான் மஞ்சள் பாம்புகள் என்றான் அவன். இந்த மகத்துவம் குழந்தைகளை வியக்க வைத்தது.

பள்ளி விஷயம், பெற்றோர்களின் கண்டிப்பு இந்தத் தடைகளைவிட பின் வந்த நாட்களில் நடந்துவிட்ட சம்பவங்கள்தான் அக்குழந்தைகளைச் சோர்வடையச் செய்தது.

முன் எப்போதும் போல அன்று சாயுங்காலமும் கூனன் குடித்துவிட்டு வந்து உதியன் வீட்டுக்கு முன் நின்று திட்டிக்கொண்டிருந்தான். உதியன் எப்போதும் இந்த ஊளையைப் பொருட்படுத்துபவன் அல்ல. ஆனால் அன்று அவனுடைய சொற்களில் வழக்கத்தைவிட அதிக விஷம் கலந்திருந்தது. உதியனின் வம்சத்தைத் தரம் தாழ்த்திப் பேசினான். மேலும் அவன் பேச்சுக்கு அத்தெருவில் இருந்த சிலர் ரசிர்களாக மாறி இருந்தார்கள். திண்ணையில் அமர்ந்து புன்னகையுடன் அவன் பேச்சை ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

வீட்டுக்கு வெளியே வந்த உதியன் அவனை எச்சரித்தான், “கூனா, என்னப் பத்தி எதுவேனா பேசு. என் பரம்பரையைப்பத்தி எதனா பேசின நான் சும்மா இருக்கமாட்டேன்’’.

கூனன் அவன் எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. இன்னும் குடித்து போதையை அதிகப்படுத்திக்கொண்டுவந்து ஏசினான். நிற்க முடியாமல் தெருவில் சாய்ந்தவன் படுத்த பிறகும் விஷச் சொற்கள் அவன் வாயிலிருந்து வெளிவந்தவண்ணமிருந்தன.

மறுநாள் காலை அத்தெரு முனையில் கூனன் செத்துக்கிடந்தான். அவனுடைய வலது காலில் பாம்புக் கடி இருந்ததை ஒருவன் கண்டு சொன்னான்.

உதியன் வீட்டில் இல்லை. எப்போது வீட்டிலிருந்து கிளம்பிப்போனான் என்று யாருக்கும் தெரியவில்லை. அதற்குப்பிறகு உதியன் ஊர் திரும்பவில்லை. குழந்தைகளோ உதியனின் வருகைக்காகக் காத்திருந்தார்கள். மஞ்சள் பாம்புகள் இல்லாத அவர்களுடைய உலகம் இருண்டு கிடந்தது.

12. கன்னி

பரந்து விரிந்த ஒரு முடிவற்ற மண்டபம். அதன் எண்ணிக்கையற்ற தூண்கள் ஆரக்கால்களென எழுந்து பாழ்வெளியில் மறைந்தன. நிழல்களற்ற வெளிச்சம் அதில் நிறைந்திருக்கிறது. எங்கோ கத்திய ஒரு பறவையின் குரல் மண்டபம் முழுக்கப் பரவி நிலைக்கிறது. சில பறவைகள் அங்குமிங்குமாகப் பறந்து கொண்டிருந்தன. பளிங்கு நிறத்தாலான தூண்களில் படர்ந்து ஏறிய கொடிகளில் வயலட் நிறப் பூக்கள் பூத்திருந்தன.

இரவு பகலற்ற அந்த மண்டபத்துக்கு எண்ணற்ற நிர்வாணிகள் சதா காலமும் விந்தணு போல நுழைந்து வந்து கொண்டிருந்தார்கள். மரணம் அவர்களை வரவேற்று அழைத்து வந்துகொண்டிருந்தது. அவர்களில் ராமசாமி கவுண்டனும் ஒருவன். பெண்கள் எல்லோரும் ஒன்றுகூடி உற்சாகத்துடன் அவனை வரவேற்றார்கள்.

அந்தப் பெண்கள் குழாமின் மூத்த அன்னை அருகில் வந்து அவன் உருவைப் பரிசோதித்தாள். அவள் சொன்னாள், எழுபது ஆண்டுகள் இவன் உயிர் வாழ்ந்திருக்கிறான். இவனுடைய லாபநஷ்ட கணக்குகள் கணக்கில்லாத பக்கங்களாக நீள்கின்றன. எழுச்சிகளும் வீழ்ச்சிகளும் ஒன்று கலந்த இயக்கம் வற்றி, உலர்ந்துவிட்டிருக்கிறது இவன் உருவம்.’’

சருகாக மடிந்துகிடந்த அவன் ஆண் குறியையும் விதைகளையும் கையில் ஏந்தியபடி சொன்னாள், “இது ஏராளமான விந்தை பெண்களின் யோனிக்குள் இறைத்து ஓய்ந்திருக்கிறது. இவன் முகத்தில் நிலைத்திருப்பது வேறொன்றுமில்லை; ஒரு பெண்ணின் மலர்ந்த சரீரம்தான். சாகும் முன் இவன் நினைவில் தோன்றி மிதந்தது அதுதான்.’’

அவனைச் சூழ்ந்து நின்ற பெண்கள் ஒன்று சேர்ந்து அவனுக்காக ஒரு பாடலைப் பாடினார்கள். அப்பாடல் ஒரு குளிர்ந்த காற்று போல அவன் உடலைத் தழுவி எழுந்து மண்டபத்தை நிறைத்தது. மூத்த அன்னையானவள் சில பெண்களை அருகில் அழைத்தாள். அவர்களுக்குக் கட்டளையிட்டாள், “இவனுடைய மனைவியும் மகளும் ஏற்கெனவே வந்து சேர்ந்துவிட்டார்கள். அவர்களை இங்கே அழைத்து வாருங்கள்.’’ வேறு சில பெண்களை அழைத்துச் சொன்னாள், “இவனை குளிப்பாட்டி கொண்டு வாருங்கள்.’’

வெண் இறகுகளாலான பல்லக்கில் வைத்து ராமசாமி கவுண்டனை தூக்கிச் சென்று ஒரு அகன்ற நீர்த் தடாகத்தின் அருகே இறக்கினர். அவர்களில் கனத்த சரீரம் கொண்ட ஒருத்தி கரை மேல் கால்களை நீட்டி அமர்ந்தாள். தனது கால்களின் மேல் படுக்க வைத்து குளிப்பாட்டினாள். அவனுடைய தொப்புளிலும், சுருங்கிய தோல் மடிப்புகளிலும், தலை முடியிலும் தங்கியிருந்த அழுக்கு போகத் தேய்த்துவிட்டாள். அவன் கண்களைத் திறந்து அவற்றையும் சுத்தம் செய்தாள்.

சந்தனப் புகை காட்டி அவனை உலர்த்தினர் அப்பெண்கள். மீண்டும் அவனை அப்பல்லக்கில் வைத்து மூத்த அன்னையிடம் கொண்டு வந்தனர். அங்கே அவனுக்காக அவனுடைய மனைவியும் மகளும் காத்திருந்தனர். அவர்கள் தங்கள் கூந்தலில் ஏராளமான மலர்களைச் சூடியிருந்தனர். கைகளில் புதிய வளையல்களை அணிந்திருந்தனர்.

அவர்கள் இருவருக்கும் முன் அவனைக் கொண்டு வந்து கிடத்தினார்கள். அவனுக்காக அழகிய படுக்கை ஒன்று தயார் செய்யப்பட்டிருந்தது. தனது விரல்களால் அவனது பரந்த நெற்றியை தடவிக்கொடுத்தாள் அவன் மனைவி. அவன் மகளோ வியப்புடன் அவன் உருவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

தனது நரைத்த கூந்தலை முன்தள்ளி கோதியபடி மூத்த அன்னை வந்தாள். அவன் மனைவியிடம், அவனுக்கு வாக்கப்பட்ட கதையைச் சொல்லும் படி கட்டளையிட்டாள்.

அவள் சொன்னாள், “முத்துக் கவுண்டனின் மகளாகப் பிறந்து வந்தேன், என்னோடு பிறந்தவர்கள் ஐந்து பெண்கள், தரித்திரம் கொலுவிருந்த இடத்தில் குடிசை கட்டி வாழ்ந்து வந்தோம், காட்டில் விறகெடுத்து சீவனம் செய்து வந்தோம், பெரிய மனுஷியான மறாவது மாசத்திலேயே இந்த கவுண்டன் வந்து பெண் கேட்டான், முதல் தாரம் ஓடிவிட இரண்டாவதாக வாக்கப்பட்டேன், முன் ஜென்ம புண்ணியந்தான் இந்த தர்மராஜா எனக்கு வாய்த்தது, வாக்கப்பட்ட நாள் முதலாய் மகாராணி உபசரணை, மண்ணுக்குப் போகும் வரை கை தொட்டு அடித்ததில்லை, ‘அடியேஎன்று ஒரு வார்த்தை சொன்னதில்லை, ஆனாலோ பெரு உணர்ச்சிக்காரன் இவன், மன்மதனின் மறுபிறப்பு, முதல் நாள் இரவிலேயே மூர்ச்சையாகி விழுந்துவிட்டேன், மடிமேல் கிடத்தி காமம் இது என்றான், நாளாக நாளாக பக்குவப்படுத்திவைத்தான், பருவ பாடம் சொல்லித் தந்தான், ஜீவசத்து வற்றாத காட்டுச் சுனையிவன், மண்ணில் சிந்திய வித்தில்கூட கருக்கூடி பயிர்விளையும், நானோ எட்டை கருக்கொண்டேன், இரண்டு பழுதாகி ஆறை பெற்றெடுத்தேன், என் கடைசி குழந்தைக்கு வயசு நான்கிருக்க சர்ப்பமது தீண்டி எனக்கு சாவு வந்து சேர்ந்தது அம்மா, குழந்தை போல மனம் கொண்ட இந்த அப்பாவி மனுஷன் மேல் பழிசொல்லி வந்துவிட்டாள் இதோ நிற்கும் கைகாரி, ஊர் மேயப் போனவளை தடுத்தது தப்பென்று தற்கொலையில் போய் விழுந்தாள், பாவி மகளை கொன்றுவிட்டானென்று ஊர் தூற்ற வழிவைத்தாள். வருஷங்கள் பல கடந்து என் தர்மராஜா வந்து வந்து விட்டான்…’’ கண்ணீர் வழிய தன் கதையை அவள் சொல்லி முடித்தாள்.

அவள் மகள் சொன்னாள், “என் தாயானவள் சொன்ன தர்மராஜா கதை கேட்டீர், என்னை பழிகாரி என்று சொன்னவளின் கன்னி கழிந்த கதையைக் கேட்டீர், பெரும் காமம் கொண்டவனிடம் பிள்ளை பெற்ற கதையைக் கேட்டீர், இந்த மன்மதன் கால்பட்ட இடமெல்லாம் செழுமை கொண்ட கதையைக் கேட்டீர், ஈரம் காணாது பாலையான என் கதையை கேளுங்கள், மூத்தவர்கள் இரண்டு பேரும் கணவன்மாரோடு போனபின்னே, தாயான இவளும் என்னை தவிக்கவிட்டு போனபின்னே பருவமெய்தி காத்திருந்தேன், முதுமை கண்ட பின்னும் மோகம் தீராத இப்பாவியோ பெண்ணொருத்தியை கூட்டிவந்து மூன்றாம் தாரம் என்றான், அவள் சொல் கேட்கச் சொன்னான், அவள் தொடைக்குநடுவே துயில்கொண்டான், நானோ தினவெடுக்கும் தேகத்துடன் இவர்கள் சல்லாபம் பார்த்திருந்தேன், எங்கள் ஊர் பையன் ஒருவன் பார்வையாலே கண்ணிவைத்தான், சாடையாலே காதல் சொன்னான், வாழ்ந்திருக்கும் காலமெல்லாம் அவன் துணையாக சம்மதித்தேன், தேகம் தீண்டாமல் சமயம் வர காத்திருந்தோம், பொறாமைக் காரன் எவனோ போட்டுக்கொடுத்தான் இந்த பாவியிடம், கரண்டியை காயவைத்து தொடையில் இட்டான் முத்திரையை, பழிக்காகச் சொல்லவில்லை பாருங்கள் தாயே இந்த தழும்புகளை, ஆறுதல் சொல்ல யாருண்டு, காதலென்று வந்தவனோ காணாமல் போய் மறைந்தான், அவனைப் பெற்றவர்களோ என்னை பரத்தையாக்கிப் பேசினார்கள், பாவப்பட்ட தேகமிது எதற்குத் தாயே இருக்கவேண்டும், பழிகளை கயிராக்கி கழுத்தில் சுருக்கு வைத்தேன், கன்னி கழியாமலேயே கட்டையிலே வெந்து போனேன்…’’ அவளும் தன் கதையை கண்ணீருடன் முடித்தாள்.

அழுவாதே மகளே, உன் துயரம் எதுவோ அதை நான் தணியச் செய்வேன், உன் ஏக்கம் எதுவோ அதை நான் போக்கி வைப்பேன், காலம் கடந்து போனால் என்ன, நீதி தேவன் உனக்கு துணையிருப்பான்’’ மூத்த அன்னை அவளுக்கு ஆறுதல் சொன்னாள். ராமசாமிக் கவுண்டனின் அருகில் வந்து அவன் வற்றிய தேகத்தைக் காலிருந்து மேல் நோக்கி நீவினாள், வயிற்றைத் தட்டினாள், மார்பை நீவினாள். மூடிய அவன் கண்களைத் திறந்து அதை உற்றுப் பார்த்தாள். சற்றே அவனிடமிருந்து விலகி நின்று வான் நோக்கி வணங்கினாள்.

அவனுடைய உடல் சற்றே குலுங்கி விழித்தது. அவன் கை கால்கள் அசைந்தன. கண்களைத் திறந்து பார்த்தான். அவன் உதடுகள் எதையோ முணுமுணுத்தன.

மூத்த அன்னை அவன் மனைவிக்குக் கட்டளையிட்டாள், “அவனுக்கு பசிக்கிறதாம், அவனுக்கு பால்கொடு.’’

அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்த அவள் அவனை மடியில் கிடத்தித் தன் முலையை அவனுக்கு உண்ணக்கொடுத்தாள். அவன் தலையை வருடி விட்டாள். அவன் இளமை தேகம் அவளுக்கு ஞாபகத்தில் வந்தது. பெரும் தாபத்துடன் தன் மார்பைத் தழுவிய அவனது உறுதியான கரங்களை ஞாபகம்கொண்டாள். அவனது சரீரம் மெல்ல மெல்ல மலரத் தொடங்கியது. சுருக்கங்கள் நீங்கி தசைகள் உறுதிகொண்டன. அவன் வாலிபனாகிக்கொண்டிருந்தான். கீழே படுக்கையில் கிடத்திவிட்டுப் பார்த்த அவளுக்கு அவன் முகம் மாறியிருப்பது போலத் தோன்றியது. பதற்றத்துடன் அந்த வாலிபனின் முகத்தில் தன் கணவனின் முகத்தை தேடத்தொடங்கினாள்.

எழ முயற்சித்த அவனுக்கு மூத்த அன்னை கட்டளையிட்டாள், “அப்படியே படுத்திரு மகனே, விளையாடியவை போதும், ஓய்வெடுத்துக்கொள், எல்லாவற்றையும் கவனித்தபடி வெறுமனே படுத்திரு.’’

அவன் மகளிடம் கேட்டாள், “மகளே அவனைப் பார், அவன் யார் என்று அடையாளம் தெரிகிறதா?’’

அவள் அவனை கவனித்துப் பார்த்தாள். அவளுடைய காதலன் அங்கே படுத்திருந்தான். அவள் முகம் மலர்ந்தது. அவனருகே அமர்ந்து தாபத்துடன் அவனைத் தழுவிக்கொண்டாள்.

வேண்டாம்’’ என்று கத்தினாள் அவள் தாய். இது உன் காதலன் இல்லை, உன்னுடைய அப்பா.’’

தன் தாயின் குரலை அவள் பொருட்படுத்தவில்லை. அவன் நெற்றி, கன்னம், மார்பு என முத்தங்களை வெறியோடு பதித்துக்கொண்டிருந்தாள். கிழே சுருண்டிருந்த கேசத்தை வருடி அவன் குறியைப் பற்றி அங்கேயும் முத்தம் பதித்தாள். நரம்புகள் புடைத்து விழிப்புற்று எழுந்தது அது. அவன் மேல் கவிழ்ந்து நீண்டாள். அவனுடைய சிறுத்த மார்புக் காம்புகளைக் கடித்தாள். நாவினால் அவன் உதடுகளை வருடினாள். ஒரு கையால் அவன் குறியை நீவிக்கொடுத்தாள்.

உலகம் பொறுக்காத பாவமிது’’ என்று பதறினாள் அவள் தாய். உன் கைகளில் தவழும் அதுதான் உனக்கு வித்திட்டது. உனது அகங்காரம் கொண்ட தேகத்துக்கு சக்தியைக் கொடுத்தது.’’ அவள் கண்ணீர் சிந்தினாள்.

மூத்த அன்னை சொன்னாள், “உன் அழுகைக்கு இங்கு அர்த்தம் இல்லை மகளே, இது ஒரு கனவு, வாழ்வின் வற்றாத பெருங்கனவு, பேதங்களில்லாமல் உடல்கள் உருக்கொண்டு புதையும் வெளியிது, தாபமுறும் உடல்களைத் தடைசெய்வதுதான் பாவம், அதைத் தடுக்காதே.’’

அந்த இளம்பெண்ணோ அவன் மேல் அமர்ந்து அவன் குறியை தனக்குள்வாங்கிக்கொண்டாள். அவள் உடல் சிலிர்த்தது. கண்களை மூடித் தலையை உயர்த்தி வானத்தைப் பார்த்தபடி அவள் இயங்கினாள். அவனுடைய குறியின் முனை அவள் கர்ப்ப அறையைத் தொட்டு நீங்கியபோதெல்லாம் அவள் ஒரு யுகமென அவனோடு வாழ்ந்து கழிந்தாள். பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள், பேரர்களுடன் விளையாடினாள், பெருங்கனவில் நீந்தினாள்.

சூழுந்திருந்த பெண்கள் முன் போலவே மிக நீண்ட பாடல் ஒன்றை பாடிக்கொண்டிருந்தனர்.

அவள் இயங்கினாள். அவள் கண்கள் மூடியிருந்தன. கீழே அவன் உரு மெல்ல மெல்லக் கரைந்துகொண்டு வந்தது. அவளுடைய உருவும்தான். இருவரையும் முதுமை ஒருசேர தழுவிக்கொள்ளத் தொடங்கியது. அவளுடைய முலைகள் தளர்ந்து வற்றி அசைந்தன. குறிகளின் இறுக்கம் தளர்ந்து ஸ்பரிஸம் மங்கின. அவள் அவன் மேல் சரிந்தாள்.

சூழ்ந்து நின்ற பெண்கள் பாடிய பாடல் மண்டபத்தின் ஒளியில் கரைந்து மங்கியது. அப்பாடலின் வார்த்தைகளை பறவைக் கூட்டமொன்று கொத்திச் சென்றது.

13. புழு

அரசாங்கம் அறிவித்திருந்த சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் நிறுவப்பட்டதுதான் ராமசாமிகவுண்டர் பிணக்கிடங்கு. அதன் உரிமையாளன் குணசேகரன் என்கிற 29 வயது வேதியியல் பட்டதாரி. இவனுடைய நண்பர்களில் சிலர் சோப்பு கம்பெனி, ஷாம்பு கம்பெனி எனத்தொடங்கி கையைச் சுட்டுக்கொண்டபோது இவனுக்கு மட்டும் இந்த யோசனை எப்படி வந்ததென்று ஆச்சரியப்பட்டவர்கள் பலர்.

ராமசாமி கவுண்டர் பிணக்கிடங்கின் வெற்றி, இன்னும் இரண்டு மூன்று போட்டிக் கிடங்குகளை நகரத்தில் தோற்றுவித்திருந்தாலும் அதன் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. கிடங்குக்கான வாடகை, மின்சார பில், டெலிபோன் பில், ரசாயனப் பொருட்கள் வாங்குவதற்கான செலவு, ஐஸ் கட்டிக்கான செலவு, உதவியாளன், பாதுகாவலன் இவர்களுக்கான சம்பளம், வங்கித் தவணை, இன்னும் உபரிச் செலவுகள் போக வந்த லாபம் கணிசமாகவே இருந்தது. அரசாங்கத்தில் பெரிய உத்தியோகம் பார்த்திருந்தால்கூட இதை சம்பாதித்திருக்க முடியாது.

முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என முறையே 4,10, 25 படுக்கைகள் கொண்ட மூன்று பிரிவுகள் இங்கே உண்டு. மூன்றாம் வகுப்புக்கு வெறும் ஸ்டீல் கட்டில்கள், இரண்டாம் வகுப்புக்கு குஷன் வசதி, முதல் வகுப்புக்கு குஷன் வசதியுடன் குளுகுளு வசதியும் உண்டு. முதல் வகுப்பில் வசதி படைத்த தொழிலதிபர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் என வி.ஐ.பி.களுக்கு அளிக்கப்பட்டது.

அது இருபாலர் பிணக்கிடங்கு. பிணங்கள் வரம்பு மீறுவதில்லை என்பதால் பெண் சடலங்களுக்கென்று தனிப்பகுதிகள் எதுவும் இல்லை.

வெளிநாட்டு உறவினர்களுக்காகக் காத்திருப்பவை, சுடுகாட்டில் இடம் கிடைக்காதவை, அபூர்வ விஞ்ஞானிகள், மாபெரும் தலைவர்கள், விசாரணைக்குரியவையென இங்கே பலதரப்பட்ட பிணங்கள் தங்கிச் சென்றன. நாள், வார, மாத, வருஷ முறையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

பிணக்கிடங்கு என்றவுடன் ஏதோ சகித்துக்கொள்ள முடியாத நாற்றம் வீசும் இடமாக நீங்கள் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட தரமான மருந்துகளின் விசேஷத் தன்மையினால் மிதமான ஒரு வாசனைனையத் தவிர்த்து வேறு எந்தத் துர்நாற்றத்தையும் நீங்கள் நுகரமுடியாது. மிகைப்படுத்தப்பட்ட ஓய்வு விடுதியாகக்கூட நீங்கள் இந்தப் பிணக்கிடங்கை கற்பனை செய்துகொள்ளலாம்.

முதல் மற்றும் இரண்டாம் வகுப்பை ஒட்டியே குணசேகரனின் அலுவல் அறை. அதற்கடுத்து ஸ்டோர் ரூம். மூன்றாம் வகுப்பு எதிர்புறத்தில் இருந்தது. இரண்டு பகுதிகளையும் பிரிக்கும் வராண்டா நீண்டு சென்று கேட்டருகில் முடிகிறது. அங்கேதான் ஒரு ஸ்டூல்போட்டு உட்கார்ந்திருக்கும் வாட்ச்மேன் கண்ணனை சந்திக்கலாம். கிடங்கைப் பாதுகாப்பதுடன் மணி என்கிற மணிவண்ணனுடன் கிடங்குக்கு வரும் பிரேதங்களை எடுத்துச்சென்று படுக்கையில் கிடத்தி வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துகொடுக்க வேண்டும். பிரேதங்கள் டிஸ்சார்ஜ் ஆகிப் போகும்போது உரிமையாளர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். கண்ணன் இதற்குத் தனியாக சன்மானத்தை எதிர்பார்ப்பதுண்டு.

பிணங்கள் புழங்கும் இடம்தானே, கடுமையான சவால்கள் எதுவும் இல்லாத நிம்மதியான தொழில் என்று உங்களுக்குத் தோன்றக்கூடும்; வாஸ்தவம்தான். ஆனால், அசம்பாவிதங்களும் சிலபொழுது நடந்துவிட்டிருக்கிறது. செத்துப்போய்விட்ட சிலர் இங்கே வந்து உயிர்பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் கிழடுகள்தான் இப்படிப்பட்ட பிரச்சனைகளை உண்டுபண்ணிவிடும்.

ஏசுபொருமான் கூட மூன்றாம் நாள்தான் உயிர்த்தெழுந்தார் என்று சொல்கிறார்கள். ஒரு தோழரோ அன்று இரவே எழுந்து உட்கார்ந்து கொண்டார். அங்கே படுத்திருக்கும் பிணங்களையெல்லாம் பார்த்து முழங்கினார், “தோழர்களே! இன்னும் எத்தனை நாளைக்கு இப்படிச் சவமாக உறங்கிக்கொண்டிருப்பீர்கள், விழித்தெழுங்கள்.’’

தோழரை வீட்டுக்கு அனுப்பும் வரை குணசேகரன் கம்பெனி பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. இதுவரை சந்தித்திராத புதிய பிரச்சினைகளை அவர் கொண்டுவந்தார். சதா புகார்களாக வெளிவந்து கொண்டிருந்தன அவரிடமிருந்து. ஜன்னலில் காற்று வரவில்லை, விளக்குகள் எரியவில்லை, மருந்துகள் சரியில்லை எனக் குற்றம் சாட்டியபடியே இருந்தார். மேலும் அந்த மருந்துகளை அவன் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கிறானாம், என்ன துரோகம்!

கிடங்கின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவை வெற்றிகரமாகக் கொண்டாடி முடித்திருந்தான் குணசேகரன். சிறப்பு விருந்தினராக நகரத்தின் மேயர் வருகை தந்திருந்தார். வங்கி மேலாளர், சிரிப்பு நடிகர், எழுத்தாளர் என பல பிரபலஸ்தர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர். மேயரின் சிறப்புரைதான் அனைவரையும் கவர்ந்தது. பிரேதங்களின் மானம் காப்பாற்றப்படவேண்டும். அவைகளுக்கு நாம் செலுத்த வேண்டிய மரியாதையை முறையாகச் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இங்கே வாழ்கின்ற ஒரு சமுதாயத்தினர் – பெயரை அவர் குறிப்பிடவில்லை – தனது குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால் அவசர அவசரமாக ஏதோ ஒரு செத்த எலியைத் தூக்கி எறிவதுபோல எறிந்துவிட்டு வந்துவிடுகிறார்கள். இது மனித உயிர்களுக்கு அவமரியாதை செய்யும் செயல். அவசரமில்லாமல் உறவினர்கள் எல்லாம் வந்து சேர்ந்த பிறகு சடங்குகளையெல்லாம் முடித்த பிறகுதான் அவைகளை எடுத்துக்கொண்டுபோய் அடக்கம் செய்யவேண்டும். இத்தகைய நாகரீகத்தைக் காக்க இது போன்ற பிணக்கிடங்குகளால்தான் முடியும் என்று சொன்னபோது கைதட்டலைப் பெற்றார். அவருடைய கட்சித் தொண்டர்களும் உடன் வந்திருந்து இத்தகைய உற்சாகக் கைதட்டல்களை வழங்கிக் கொண்டிருந்தார்கள். மேலும் ஏழைப் பிணங்களுக்கும், அனாதைப் பிணங்களுக்கும் இலவச சேவை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அனாதைப் பிணங்கள் ஏன் இங்கே வந்து காத்திருக்கப் போகின்றன என்றுதான் பலருக்கும் புரியவில்லை.

ஒரு எழுத்தாளரின் கூற்று பின்வருமாறு இருந்தது. வசதி வாய்ப்புகளைத்தேடி தனது வீட்டை, ஊரை, ஏன் நாட்டை விட்டே கலைந்துபோய்விட்டான் மனிதன். நவீன சமூகம் மனித உறவுகளை எல்லாம் சிதறியடித்து விட்டது. தூரத்தாலும் காலத்தாலும் பிரிந்துகிடக்கும் இவர்களை இதுபோன்ற பிணக் கிடங்குகள்தான் மீண்டும் சேர்த்து வைக்கும் ஏற்பாடுகள் செய்கிறது, இதை வரவேற்க வேண்டும்’’ என்று சொன்னார்.

ஜனத்தொகையும், நோய்களும் நேர்விகிதத்தில் பெருகிவிட்ட இந்த நகரத்தில் சுடுகாட்டில் இடம் கிடைப்பது அரிதாகிவிட்டதென்றும் அதுவரை பிரேதங்கள் கெடாதவாறு காக்க இத்தகைய பிணக்கிடங்குகள் அவசியம். இதுபோன்ற பிணக்கிடங்குகள் அமைக்க குணசேகரனைப்போல வேறு யாராவது முன்வருவார்களேயானால் அவர்களுக்கு கடன் உதவி செய்ய தன்னுடைய வங்கியின் கதவுகள் எப்போதும் திறதிருக்கும்’’ என்றார் வங்கி மேலாளர்.

சிரிப்பு நடிகரோ தன் பாணியில், ஒரு ஆளை பிணம்போல படுக்கவைத்துவிட்டு செத்தவனுடைய மனைவி எப்படி அழுவாள், கடன் கொடுத்தவர் எப்படி அழுவார், கடன் வாங்கியவர் எப்படி அழுவார், உடன் தண்ணியடித்த நண்பர் எப்படி அழுவார் என்றெல்லாம் நடித்துக்காட்டி எல்லோரையும் சிரிக்கவைத்தார்.

இந்த விழா ஏற்படுத்தியிருந்த உற்சாகம் வடிவதற்குள்ளாகவே பிணக்கிடங்குக்கு புதுப்பிரச்சினை ஒன்று முளைத்தது. வெளிநாட்டிலிருந்து மருந்துகளை வாங்கி சப்ளை செய்யும் டீலர் வடிவில் அது வேர் பிடித்தது. கமிஷனுக்கு ஆசைப்பட்ட அவன், இன்னும் மருந்துகள் வந்து சேரவில்லை என்று பொய் சொல்லிவிட்டு வேறு கிடங்குக்காரர்களுக்கு அனுப்பிவிட்டான். கேட்கும்போதெல்லாம் இதோ வருகிறது, அதோ வருகிறது என்றான். மருந்துதான் வந்து சேரவில்லை. மருந்துக்காக குணசேகரன் காத்துக் கொண்டிருக்கலாம். பிணங்கள்?

இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஒரு புதுமருந்துக் கம்பெனியின் பிரதிநிதி வந்திருந்தான். வெளிநாட்டுக் கம்பெனி ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு உள்நாட்டிலேயே அந்த மருந்தைத் தயாரித்துக் குறைந்த விலையில் தருகிறதாம் அவனுடைய கம்பெனி. மாதிரி பாட்டில்கள் சிலவற்றைக் கொடுத்துவிட்டுப் போயிருந்தான். இந்த நெருக்கடியான சூழலில் அந்த மருந்துகளை உபயோகப்படுத்திப் பார்த்துவிடுவதென்ற முடிவுக்கு வந்தான். கிடங்குக்குப் புதிதாக வந்திருந்த ஒரு பிணத்துக்கு அம்மருந்தையே பயன்படுத்திப் பார்த்தான். மருந்து அற்புதமாகவே வேலை செய்தது. இனி எல்லாப் பிணங்களுக்கும் இதையே பயன்படுத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

ஆர்டர் கொடுத்த உடனே மருந்துகள் வந்து சேர்ந்தன. விலையும் மலிவாகவே இருந்தது. புதுத்தெம்புடன் காரியங்கள் நடந்தேறின.

இரண்டு நாட்கள் கழிந்துதான் அந்த விபரீதத்தை அவர்கள் கவனித்தார்கள். மருந்து வாசனையுடன் பிணங்கள் அழுகும் வாசனையும் கலந்து வர ஆரம்பித்தது. குணசேகரன் பதறிப்போய்விட்டான். அவசரமாகக் கம்பெனிக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னான். அவர்களும் தாமதிக்காமல் தனது பிரதிநிதி ஒருவனை அனுப்பி வைத்தனர். அவன் பரிசோதித்துப் பார்த்துவிட்டு தவறு தங்களுடைய மருந்தில் இல்லை என்றும், முன்பு உபயோகித்த மருந்துடன் புது மருந்து கலந்ததால்தான் பிணங்கள் அழுகத் தொடங்கியிருக்கின்றன என்றும் சொன்னான். இதற்கு ஆதாரமாக ஆரம்பத்தில் தங்களுடைய மருந்தை மட்டுமே உபயோகித்த பிணம் மட்டும் கெடாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டினான் அப்பிரதிநிதி.

இத்தவறைத் திருத்துவதற்கு ஏதாவது வழிமுறைகள் உண்டா எனக் கேட்டதற்கு கம்பெனியின் ஆராய்ச்சிப் பிரிவில் கேட்டுச் சொல்வதாகச் சொல்லிவிட்டுப் போனான். மறுநாள் அவனிடமிருந்து இனி ஒன்றும் செய்யமுடியாதுஎன்பதே பதிலாக வந்தது.

அதிர்ச்சியில் நிலைகுலைந்துவிட்டான் குணசேகரன். நிச்சயம் வேறு எதாவது வழிமுறைகள் இருக்குமென்றும், விசாரித்துப் பார்க்கலாமென்றும் மணி அவனைத் தேற்றினான். ஆனால் விசாரிப்புகள் எதுவும் பலனளிக்கவில்லை.

எல்லாமே பாழ். கிடங்குக்கு இனி எதிர் காலம் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டான் அவன். துரிதமாக எல்லாப் பிணங்களையும் சொந்தக்கார்கள் வாங்கிச் கொண்டுபோய்விட்டால் மீள்வதற்கு வழி இருக்கிறது. விஷயத்தை முற்ற விடாமல் புது அனுபவத்துடன் கிடங்கைத் தொடர்ந்து நடத்திவிடலாம். எல்லா உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தான். உண்மையைச் சொல்லாமல் முடிந்த அளவுக்கு சீக்கிரமாக வந்து பிரேதங்களை எடுத்துச் சென்றுவிடும்படி சொல்லியிருந்தான். மொத்தமிருந்த 24 பிணங்களில் பதினோரு பிணங்களை உறவினர்கள் வந்து எடுத்துச் சென்றுவிட்டார்கள். வாதத்தில் ஈடுபட்ட ஒரு சில சொந்தக்காரர்களை சமாளித்து அனுப்பினான். இறந்தவரின் புனிதத்தை பாழாக்கிவிட்டதற்காக நூகர்வோர் நீதி மன்றத்துக்குப் போவேன் என்று மிரட்டிவிட்டு போயிருந்தார் ஒருவர். குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்த முதல் வகுப்பில் காலியாக இருந்த இரண்டு படுக்கையில் இரண்டாம் வகுப்புப் பிணங்களைப் படுக்க வைத்தான். மீதியிருந்த ஒன்பது பிணங்களுக்கும் ஐஸ் கட்டிகளை வாங்கி வந்து கொட்டினான்.

இரவு பகலாகத் தூங்காமல் பைத்தியம் பிடித்தவனைப் போலநடமாடிக்கொண்டிருந்தான். இந்தத் தொழிலை ஆரம்பித்தபோது இவ்வளர்ச்சியை எப்படி எதிர்பார்க்கவில்லையோ அது போவே இத்தகைய சரிவையும் அவன் எதிர்பார்க்கவில்லை.

இன்னும் இரண்டு மூன்று நாட்கள்தான் தாக்குப்பிடிக்கும் என்று மணி சொன்னான். ஆமாம் பிறகு எல்லாப் பிணங்களும் அழுகி புழு வைத்துவிடும். அப்படி நடந்தால் பிணங்களைத் திரும்ப எடுத்துப்போக வரும் உரிமையாளர்களுக்கு என்ன பதில் சொல்வது? புழுக்களையா வாரிக்கொடுக்க முடியும்?

இரண்டு நாட்கள் கழிந்துதான் அந்த விபரீதத்தை அவர்கள் கவனித்தார்கள். மருந்து வாசனையுடன் பிணங்கள் அழுகும் வாசனையும் கலந்து வர ஆரம்பித்தது. குணசேகரன் பதறிப்போய்விட்டான். அவசரமாகக் கம்பெனிக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னான். அவர்களும் தாமதிக்காமல் தனது பிரதிநிதி ஒருவனை அனுப்பி வைத்தனர். அவன் பரிசோதித்துப் பார்த்துவிட்டு தவறு தங்களுடைய மருந்தில் இல்லை என்றும், முன்பு உபயோகித்த மருந்துடன் புது மருந்து கலந்ததால்தான் பிணங்கள் அழுகத் தொடங்கியிருக்கின்றன என்றும் சொன்னான். இதற்கு ஆதாரமாக ஆரம்பத்தில் தங்களுடைய மருந்தை மட்டுமே உபயோகித்த பிணம் மட்டும் கெடாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டினான் அப்பிரதிநிதி.

இத்தவறைத் திருத்துவதற்கு ஏதாவது வழிமுறைகள் உண்டா எனக் கேட்டதற்கு கம்பெனியின் ஆராய்ச்சிப் பிரிவில் கேட்டுச் சொல்வதாகச் சொல்லிவிட்டுப் போனான். மறுநாள் அவனிடமிருந்து இனி ஒன்றும் செய்யமுடியாதுஎன்பதே பதிலாக வந்தது.

அதிர்ச்சியில் நிலைகுலைந்துவிட்டான் குணசேகரன். நிச்சயம் வேறு எதாவது வழிமுறைகள் இருக்குமென்றும், விசாரித்துப் பார்க்கலாமென்றும் மணி அவனைத் தேற்றினான். ஆனால் விசாரிப்புகள் எதுவும் பலனளிக்கவில்லை.

எல்லாமே பாழ். கிடங்குக்கு இனி எதிர் காலம் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டான் அவன். துரிதமாக எல்லாப் பிணங்களையும் சொந்தக்கார்கள் வாங்கிச் கொண்டுபோய்விட்டால் மீள்வதற்கு வழி இருக்கிறது. விஷயத்தை முற்ற விடாமல் புது அனுபவத்துடன் கிடங்கைத் தொடர்ந்து நடத்திவிடலாம். எல்லா உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தான். உண்மையைச் சொல்லாமல் முடிந்த அளவுக்கு சீக்கிரமாக வந்து பிரேதங்களை எடுத்துச் சென்றுவிடும்படி சொல்லியிருந்தான். மொத்தமிருந்த 24 பிணங்களில் பதினோரு பிணங்களை உறவினர்கள் வந்து எடுத்துச் சென்றுவிட்டார்கள். வாதத்தில் ஈடுபட்ட ஒரு சில சொந்தக்காரர்களை சமாளித்து அனுப்பினான். இறந்தவரின் புனிதத்தை பாழாக்கிவிட்டதற்காக நூகர்வோர் நீதி மன்றத்துக்குப் போவேன் என்று மிரட்டிவிட்டு போயிருந்தார் ஒருவர். குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்த முதல் வகுப்பில் காலியாக இருந்த இரண்டு படுக்கையில் இரண்டாம் வகுப்புப் பிணங்களைப் படுக்க வைத்தான். மீதியிருந்த ஒன்பது பிணங்களுக்கும் ஐஸ் கட்டிகளை வாங்கி வந்து கொட்டினான்.

இரவு பகலாகத் தூங்காமல் பைத்தியம் பிடித்தவனைப் போலநடமாடிக்கொண்டிருந்தான். இந்தத் தொழிலை ஆரம்பித்தபோது இவ்வளர்ச்சியை எப்படி எதிர்பார்க்கவில்லையோ அது போவே இத்தகைய சரிவையும் அவன் எதிர்பார்க்கவில்லை.

இன்னும் இரண்டு மூன்று நாட்கள்தான் தாக்குப்பிடிக்கும் என்று மணி சொன்னான். ஆமாம் பிறகு எல்லாப் பிணங்களும் அழுகி புழு வைத்துவிடும். அப்படி நடந்தால் பிணங்களைத் திரும்ப எடுத்துப்போக வரும் உரிமையாளர்களுக்கு என்ன பதில் சொல்வது? புழுக்களையா வாரிக்கொடுக்க முடியும்?

பிரச்சினையின் தீவிரம் குணசேகரனைச் சீரழித்துக்கொண்டிருந்தது. படுத்தால் படுக்கை முழுவதும் புழுக்கள் நெளிவதுபோல இருந்தது அவனுக்கு. நரம்பு முழுவதும் புழுக்கள் ஊரும் உணர்வு. ஒவ்வொரு பிணத்திலிருந்தும் புழுக்கள் உதிர்ந்து பரவுகின்றன. கிடங்கு முழுவதும் புழுக்கள். இது பிரமையா? கனவா? நிஜமா? பைத்தியம் பிடித்தவன்போல லெட்ஜரை எடுத்து மணியிடம் வீசி எல்லாப் புழுக்களின் விலாசங்களையும் குறித்துக்கொள்ளச் சொன்னான். டெலிபோன் நெம்பர் உள்ள புழுக்களிடம் பேசி மற்றப் புழுக்களுக்கு நேரடியாகப்போய் தகவல் சொல்லச் சொல்லிவிட்டு புழுமேல் விழுந்து புழுபோல நெளிந்து அழுதான். மருந்துக் கம்பெனி பிரதிநிதி அறைக்குள் வருகிறான். உன்னை யார் வரச்சொன்னது?’’ என்று கத்துகிறான் குணசேகரன். அவனோ புன்சிரிப்புடன் பையிலிருந்து ஒரு மருந்து பாட்டிலை எடுத்து இது எங்கள் கம்பெனி தயாரித்துள்ள புது மருந்து. இதை உபயோகித்தால்…’’ குணசேகரன் அவன் வாய் மேல் குத்துகிறான். அப்போதும் அவன் கோபித்துக்கொள்ளாமல், “இல்லை சார், நீங்கள் இதை வாங்கித்தான் ஆகணும்; இதை போட்டுப்பார்த்த பிறகு…’’ “மணி, அந்தப் புழுவ எடுத்து இவன் மேல போடு’’ என்று கட்டளை இடுகிறான். மணி தனது சட்டைப் பாக்கட்டிலிருந்து ஒரு புழுவை எடுத்து பிரதிநிதியின் முகத்தில் வீசியெறிகிறா£ன். அது அவனுடைய மூக்கைப் பற்றிக் கொள்கிறது. குணசேகரன் ஓடி அவனுடைய கைகள் இரண்டையும் முதுகுக்குப் பின்னால் வளைத்துப் பிடித்துக்கொள்ள, புழு அவனுடைய மூக்கைக் கொறித்துத் தின்னத் தொடங்குகிறது. அவனை முழுதாகத் தின்று தீர்த்து ஒரு பன்றியளவுக்குப் பெருத்து வளர்கிறது புழு. குணசேகரன் சிரித்தான். புழுவும் சிரித்தது. அதை ஒரு கயிற்றில் பிணைத்து வெளியே கூட்டிக்கொண்டு நடக்கிறான். வராண்டாவில் ஊர்ந்து போய்க்கொண்டிருந்த புழுக்களை ஒரு கூடையில் பிடித்துப் போட்டுக் கொண்டிருந்த மணி சொன்னான், “இந்த பொணங்கள கட்டிக்கிட்டு மாரடிக்கிறத விட நீங்க விவசாயத்தப் பார்த்துக்கிட்டு ஊர்லயே இருந்திருக்கலாம் சார். இந்தப் பொணமெல்லாம் இப்படி புழுவா போச்சே சார்.’’ “மனுசன் ஒடம்புலெயிருந்து வேற என்ன கொட்னமுன்னு எதிர்பார்க்கிற? விபூதியும் சந்தனமுமா? இந்தப் புழுவையெல்லாம் வீட்டுக்குக் கொண்டு போயி சமைச்சுச் சாப்பிடு. ரொம்ப ருசியா இருக்கும். மீந்தா பிரிட்ஜ்ல வச்சி சாப்பிடு. வாட்ச்மேன் எங்க?’’ “உள்ளதான் இருக்காரு, புழுவெல்லாத்தைம் தனித்தனியாக கூடையில வாரி அட்ரஸ் எழுதி ஒட்டச் சொல்லியிருக்கேன்.’’ குணசேகரன் பிடித்திருந்த புழு நாக்கை விலாசுகிறது. மூன்றாம் வகுப்பின் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போகிறான். அங்கே வாட்ச்மேன் கண்ணன் புழுக்களைக் கூடையில் அள்ளிப்போட்டுக் கொண்டிருந்தான். புழு கயிற்றை இழுத்துக்கொண்டு இன்னும் அழுகாமல் இருந்த பிணத்தை நோக்கி நகர்கிறது. குணசேகரன் கண்ணனிடம் சொன்னான், “புழுவுக்கு மனுசனோட ருசி தெரியுது. மனுசனுக்குத்தான் புழுவோட ருசி தெரியல.’’ பிணத்தைத் தின்று தீர்த்துவிட்டு புழு திரும்பி வருகையில் ஒரு மாடு அளவுக்குப் பருத்திருக்கிறது. சரீரத்தைப்போலவே அதன் பசியும் அதிகரித்திருக்கவேண்டும். கண்ணனிடம் சென்ற புழு அவனுடைய காலைப் பற்றிப் பிடித்து தின்னத் தொடங்கியது. அவன் அலறியவாறு தன்னைக் காப்பாற்றச் சொல்லி குணசேகரனிடம் வேண்டினான். ஆனால் அவன் எதுவும் செய்யாமல் சிரித்தபடி நின்றிருந்தான். உள்ளே வந்த மணி இதைப்பார்த்துவிட்டு வெளியே ஓடினான். ஓடு. நீ மட்டும் தப்பிச்சி போயிடுவியாயென்ன?’’ என்று பரிகசித்தான் குணசேகரன். புழு இப்போது இரண்டு மடங்காகப் பருத்து விட்டது. தன்னையும் அது விடப்போவதில்லை என்பதை அறிந்த குணசேகரன் ஒரு காதலியின் அணைப்புக்காக ஏங்குபவன் போல அதன் முன் நின்றான். ஒரு பழத்தை எடுத்து உண்பதுபோல அவனையும் எடுத்து விழுங்கி ஏப்பம் விட்டது புழு. பல்கிப்பெருகிய அதன் பசிக்கு இன்னும் தீனி வேண்டுமே. பெரும் பலத்துடன் ராமசாமி கவுண்டர் பிணக்கிடங்கின் சுவரை உடைத்துக்கொண்டு வெளியே வந்தது. சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு சந்தோஷத்தில் புரண்டு எழுந்து சிரித்தது. வெளியே இன்னும் எவ்வளவு உயிர்கள் மிச்சமிருக்கின்றன!

உரத்து சிரித்தது.

கவிதை பாடியது,

ஆதியிலும் மீதியிலும் நின்ற புழு

சிரிக்கும் பாடும்

நடனமிடும்

எழுதும் படிக்கும்

புணரும் இனம் விரிக்கும்

உழும் உண்ணும்

ஆளும் அகங்காரம் கொள்ளும்

அழிக்கும் புழு

அண்டப் புழு

ஆகாசப்

புழு.

14. மந்திர வாள்

வாட்களை வடித்தெடுக்கும் அவன் அந்த தேசத்தில் மட்டுமல்லாது பக்கத்துத் தேசங்களிலும் பிரபலஸ்தன். மன்னர்கள் முதல் படைவீரர்கள் வரை அவன் வடிவமைக்கும் வாள்களால் வியப்பும் அச்சமும் கொண்டிருந்தனர். அவன் கேட்ட உலோகங்களைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டு எப்போது வடித்துத் தருகிறானோ அதுவரை பொறுமையுடன் காத்திருந்து வாங்கிச் சொன்றார்கள். உலோகங்களைக் கலந்து விதவிதமான வடிவங்களில், விதவிதமான குணாம்சங்களுடன் வாள்களைத் தனது பட்டறையில் உருவாக்கினான். எதிரியுடன் மோதுகையில் எதிரியை நம்பிக்கை இழக்கச்செய்யக்கூடிய வாள், தன்னில் எழுதிய மந்திரத்துக்குப் பணிந்து நடக்கும் வாள் என அற்புதங்கள் புரியக்கூடிய வாள்களையும் அவன் செய்துவந்தான்.

நிலவொளிகூட இல்லாத நள்ளிரவு. அவனுடைய வீட்டுக்கதவு தட்டப்பட்டது. கதவைத்திறந்தான். விளக்கொளியில் வந்தவனின் முகம் தெரிந்தது.

நேற்றே வருவதாக அல்லவா சொன்னீர்கள்’’ என்றான் இவன்.

என்னுடைய நிலைதான் உங்களுக்குத் தெரியுமே! யார் கண்ணிலும்படாமல் இங்கே வந்துபோவது எவ்வளவு சிரமமாக இருக்கிறது!’’ என்றவன், “வாளைப் பார்க்கலாமா, காட்டுங்கள்’’ என்றான் ஆவலுடன்.

மரப்பெட்டி ஒன்றைத்திறந்து அதிலிருந்து வாளை எடுத்துவந்து அவனிடம் கொடுத்தான். கையில் வாங்கியதும் உறையிலிருந்து வெளியே எடுத்துப் பார்த்தான். தாமிரம் கலந்து செய்யப்பட்டிருந்ததால் வாள் விளக்கொளியில் செந்நிறத்தில் மின்னியது. வாளை நல்ல வெளிச்சத்துக்குக் கொண்டுபோய் உற்றுக் கவனித்தான்.

இதில் என்ன எழுதியிருக்கிறது எனக்குப் புரியவில்லையே’’ என்றான் அவன்.

நீங்கள் கேட்டதைத்தான் எழுதியிருக்கிறேன், வாளுக்குப் புரியும்.’’

மகிழ்ச்சியடைந்த அவன் தனது இடுப்பில் வைத்திருந்த சிறு பையை உருவி நீட்டியபடி சொன்னான், “எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். என்னால் முடிந்தது இவ்வளவுதான். காரியம் வெற்றிகரமாக முடிந்துவிட்டதென்றால் எதுவேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்.’’

நான் கேட்டது எவ்வளவோ அதை மட்டும் கொடுத்தால் போதும்.’’ என்றான் இவன்.

வியப்புடன் பையிலிருந்து பத்துப் பொற்காசுகளை மட்டும் எண்ணிக் கொடுத்தான்.

விடை பெற்றுகொண்டு அவன் போனதும் இவன் முணுமுணுத்தான், ‘முட்டாள்கள்.

வாளுடன் சென்றவனோ ஊர் எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த குதிரையில் ஏறிக் காட்டை நோக்கிப் பறந்துபோனான்.

ரகசியமான ஒரு மலைக்குள் தீப்பந்த வெளிச்சத்தின் அவனுடைய சகாக்கள் எல்லோரும் அவனுக்காகக் காத்திருந்தனர். அவன் உள்ளே நுழைந்ததும் மகிழ்ச்சியுடன் அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்.

அவர்களுக்கு முன் வாளைச் சமர்ப்பித்துச் சொன்னான், “நாம் எதிர்பார்த்திருந்த வாள் இதுதான். அவனைப் பழிவாங்கப்போகும் ஆயுதம் இதுதான். நம் விசுவாசிகளை ஒன்று திரட்டுங்கள் நாளைய மறுநாள் காலை படை அரண்மனையைக் கைப்பற்றிட வேண்டும்.’’

உற்சாகத்துடன் அவர்கள் புறப்பட்டுப்போனார்கள்.

அந்த விடியற்காலைப் பொழுதில் யாரும் எதிர்ப்பார்த்திராத அந்த வேளையில் அவர்களுடைய படை அரண்மனையை முற்றுகையிட்டது. தூங்கி வழிந்து கொண்டிருந்த வீரர்களைக் கொன்று அரண்மனை வாயிலைத் திறந்து உள்ளே நுழைந்தது.

திடுக்கிட்டு விழித்த மன்னனோ தனது பரிவாரங்களை அரைகுறையாகத் திரட்டிக்கொண்டு எதிரே வந்துநின்றான். இப்படி ஒரு தாக்குதல் வருமென்று அவன் எதிர்பார்க்கவில்லை.

கிழக்கு வானத்தில் செம்மை படரத்தொடங்கியிருந்தது.

புரட்சிப்படையின் தலைவனோ தனது பரிவாரங்களுக்குத் தலைமை வகித்து முன்னால் வந்து நின்றான். பழிவாங்கும் உணர்வில் கொந்தளிப்புடன் காணப்பட்டான். நேரத்தைக் கடத்த விரும்பவில்லை அவன். உறையிலிருந்த வாளை உருவி தனது குலதெய்வத்தை வணங்கிவிட்டு எதிரியை நோக்கி வீசினான். பறந்துசென்ற வாள் எதிரில் நின்றிருந்த மன்னனை நோக்கிப் பாய்ந்தது. அவன் சுதாகரித்துக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் தராமல் அவன் தலையைச் சீவிவிட்டுப் பறந்து போய் வான்வெளியில் மறைந்தது. தலைவேறு முண்டம் வேறாகிச் சரிந்தான் மன்னன். கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்திருந்தது. அவனுடைய படைகளோ ஸ்தம்பித்து நின்றுவிட்டன. மேலும் உயிர்ச்சேதத்துக்கு இடமில்லாமலேயே பணிந்து நின்றார்கள். அவர்களுடைய முன்னாள் மன்னன் அல்லவா இவன். மறுநாள் நாடே கோலாகலம் பூண்டது. மீண்டும் அவன் சிம்மாசனத்தில் அமர்ந்தான்.

வான்வெளியில் பறந்துபோன மந்திரவாளோ தன்னில் எழுதப்பட்ட கட்டளையை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்தது. அருகிலிருந்த இன்னொரு தேசத்திற்குச்சென்று அந்த தேசத்து மன்னின் தலையையும் சீவியது. பின்பு இன்னொரு தேசம்; இப்படியே ஒன்பது தேச மன்னர்களின் தலையையும் சீவி எறிந்து விட்டுத் திரும்பி வந்தது.

அது திரும்பவும் பறந்துவருவதைக் கண்டு ஆனந்தமுற்றான் அதை ஏவிய மன்னன். அப்போதுதான் அவனுக்கு வாளின் ஞாபகம் வந்தது. ஆனால் அவனுடைய ஆனந்தம் சில நொடிகள் கூட நீடிக்கவில்லை; அவன் தலையும் உருண்டு சிம்மாசனத்திற்கடியில் போய் விழுந்தது. மன்னனின் தலையைச் சீவி ஏறிஎன்ற வாசகங்களுடன் வாள் செயலற்று ரத்தத்தோடு உறைந்தது.

15. நாய்

தெருவில் ஒரு வீட்டுக்கு முன்னால் படுத்திருந்தது அந்த நாய். அவனைக் கண்டதும் தலையைத் தூக்கிப்பார்த்து வாயை லேசாகத் திறந்து உர்ரென்றது. நமக்கிடையில்தான் எந்தப் பிரச்சினையும் இல்லையே, பிறகெதற்கு இப்படி என்னைப் பயமுறுத்துகிறாய்?’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே சற்று விலகி நாயைக் கடந்து போனான். அது விசுக்கென்று எழுந்து நின்று குரைத்ததும் நடையைத் துரிதப்படுத்தினான். நாயும் குரைத்துக்கொண்டே அவன் பின்னால் ஓடி வந்தது.

நாயினுடைய குரைப்பு ஏதோ கடமைக்கென்று இராமல் உண்மையிலேயே விரோத பாவத்துடன் இருந்தது. நிச்சயம் அது நம்மைப் பதம்பார்க்காமல் விடாது என்று யூகித்தவன் ஓடத் துவங்கினான். நாயும் அவனை விடாமல் துரத்தியது. ஓடுவதை நிறுத்திவிட்டால் நாயும் நின்றுவிடும் என்ற வழக்கமான உத்தியை இங்கே பரீட்சித்துப் பார்க்க அவன் துணியவில்லை. இந்த சந்தர்ப்பத்தை நாய் பயன்படுத்திக் கொண்டால்?

இக்காட்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிலர் நாயை விரட்ட முயன்றார்கள். அப்போதும் அது விடவில்லை. அவனுக்கு மூச்சுவாங்கியது. ஓடிக்கொண்டே தலையைத் திருப்பிப் பார்த்தான். அது நெருங்கி வந்துவிட்டிருந்தது. இப்படி ஓடியே செத்துப் போவதைவிட நாயிடமே கடிபட்டுவிடாலாமென்ற முடிவுடன் ஓடுவதை நிறுத்தினான். கைகால்கள் படபடத்தன. மேலே பிதுங்கி வந்த மார்பை அழுத்தித் தேய்த்து விட்டுக்கொண்டான். நாயும் அவனுக்குச் சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்தது. இப்போது அது குரைக்கவில்லை. கண்களில் குரோதம் இல்லை. நாயும் ஏதோ சமரசத்துக்கு வந்துவிட்டது போலத் தெரிந்தது. சற்றே தன்னை நிதானப்படுத்திக்கொண்டு கேட்டான், “ஓடுகிற நாயைக் கண்டால் துரத்துகிற நாய்க்கு இளப்பம் அப்படித்தானே?’’ நாய் தன் பளிச்சிடும் கண்களை முடித் திறந்து சொன்னது, “உன்னை மனிதன் என்று தானே நினைத்துக் கொண்டிருந்தேன்.’’

தன் கேள்விக்காக வெட்கப்பட்டான். பயத்தில் எதையோ உளறிக் கொட்டி விட்டோமேஎன்று வருந்தினான். திரும்பவும் நாய் கேட்டது, “இதற்குப் போய் ஏன் யோசிக்கிறாய்? இது யோசிக்க வேண்டிய விஷயமா?’’ அவன் பதில் எதுவும் சொல்லாமல் நின்றான். ஒரு கல்லுக்கு அருகில் போய் நின்ற நாய் காலைத் தூக்கி மூத்திரம் பெய்துவிட்டு ஓடிப்போனது.

16. சிம்மாசனம், இளவரசி மற்றும் மரணம்

ஒரு அரசன் இருந்தான். அடர்ந்த காடுகளும், உயரமான மலைகளும், வற்றாத நதிகளையும் கொண்ட ஒரு நிலம் அவனுக்கு உரியதாக இருந்தது. அவனுடைய துரதிஷ்டம் ஆண் வாரிசு இல்லை. ஒரு மகள் மட்டுந்தான். எல்லா இளவரசிகளையும் போல அவளும் ஈடு இணையற்ற பேரழகியாக இருந்தாள். அவள் அழகில் ஈர்க்கப்பட்டு பெண் கேட்டு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள். அரசன் தனது மந்திரியிடம் சொன்னான், “என் மகளுக்கு கணவனாக வரக்கூடியவன் அரச பரம்பரையை சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையல்ல. அவன் அறிவும், தைரியமும், பலமும் கொண்டவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவனைக் கண்டுபிடிக்கும் மார்க்கமென்ன? கூறுங்கள்!’’

மந்திரிக்கு இந்த யோசனை பிடிக்கவில்லை. அரச வம்சமில்லாத சாதாரணக் குடியிலிருந்து ஒருவன் அரசனாவதில் அவருக்கு விருப்பமில்லை. அப்படி ஒருவனுக்குக் கீழ் அவரால் எப்படி பணி செய்யமுடியும்? அதனால் சூழ்ச்சி மிக்க ஒரு திட்டத்தை அவர் முன் மொழிந்தார், ‘திசைக்கொன்றாக நான்கு வாசல் கொண்ட ஒரு அரண்மனை. அதன் மத்தியில் இளவரசியின் இருப்பிடம். அரண்மனையின் நான்கு வாசல்களிலிருந்தும் கிளம்பும் பாதை பல கிளைகளாகப் பிரிந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து உருவாகும் புதிர் பாதையைக் கடந்து எவனொருவன் இளவரசியை வந்தடைந்து அவளை வசீகரிக்கக் கூடிய பரிசுப்பொருளைச் சேர்க்கிறானோ அவனுக்கே இளவரசியும் இந்த நாடும் சொந்தம். வழி தவறியவர்களின் தலை துண்டிக்கப்படும்.

நான்கு வாய்ப்புகளில் உள் நுழையும் ஒருவனுக்கு மரணத்தின் பல வாயில்கள் அங்கே திறந்துவிடப்பட்டிருந்தன. அந்நாட்டின் ஆண்களும் பெண்களும் இரவு பகலாகப் பாடுபட்டு தமது இளவரசிக்காக அப்படியொரு அரண்மணையை அங்கே எழுப்பினார்கள்.

ஆட்சி பீடத்துக்கு ஆசைப்பட்டவர்களும், இளவரசியின்பால் காதல்கொண்டவர்களும், சாகசப் பிரியர்களும், சவால்களுக்குத் துணிந்தவர்களும், அசட்டு தைரியசாலிகளும், தத்துவவாதிகளும், புரட்சிக்காரர்களும், சூதாட்டக்காரர்களும் அந்த அரண்மனைக்குப் புறப்பட்டு வந்தார்கள். அந்த புதிருக்குள் பிரவேசித்தார்கள். நீங்களும் துணிச்சலான பேர்வழிதான். இவர்களுடன் நீங்களும் இப்போது அந்த புதிருக்குள் வந்துவிட்டீர்கள். மன்னிக்கவேண்டும் வாசகரே. இந்த கதையின் இறுதிப் பகுதியில் உங்கள் தலை துண்டிக்கப்படப் போகிறது. இந்த கதையிலிருந்து வெளியேறவோ, புத்தகத்தை மூடிவைக்கவோ, வீசிவிடவோ, எரித்துவிடவோ போவதில்லை நீங்கள். நான் எச்சரித்தும் கூட இதோ வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள். வெறும் வார்த்தைகள் நம்மைக் கொன்றுவிடுமா என்ற தைரியம்தான். உங்கள் அசட்டுத் துணிச்சலுக்கு நன்றி. உங்களுடைய சக பயணி நான்தான். அழைத்துப் போவது என் கடமை. நாம் போவோம்.

அரண்மனையின் கிழக்கு வாசலில் நாம் நிற்கும் போது கோமாளியைப் போல உடையணிந்த ஒரு காவலாளி நம்மை வரவேற்கிறான். இளவரசிக்கு நீங்கள் இருவரும் என்ன பரிசை எடுத்துச் செல்கிறீர்கள்?’’ என்று அவன் கேட்கிறான். நான் காவலாளியிடம் சொல்கிறேன். நான் ஒரு வாசகனைக் கொண்டு செல்கிறேன். இவர் ஒரு கதையைக் கொண்டு செல்கிறார்.’’ ஒரு ரோஜா மலரை என்னிடம் கொடுத்து நம்மை வழியனுப்பி வைக்கிறான். ஒரு நீண்ட பாதையில் நாம் நுழைகிறோம். பயணம் எளிதாக இருக்கிறது. நமக்குள்ளிருந்த அச்சத்தைப் போக்கும் படி சற்றே வெளிச்சம் நமக்குத் துணை செய்கிறது. அப்பாதையின் முடிவில் அப்பாதை இரண்டாகப் பிரிகிறது. எதைத் தேர்ந்தெடுப்பது?’ காரண காரியங்களுக்கு இடமில்லா அவற்றைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை எனக்கே வழங்கிவிட்டு காத்திருக்கிறீர்கள். இருவரும் ஆளுக்கொரு பாதையில் பயணிப்போம் என்கிற என் யோசனையை பதற்றத்துடன் நிராகரிக்கிறீர்கள். என்னைப் பின்தொடர்வதாகச் சொல்கிறீர்கள். நான் இடது பக்கப் பாதையைத் தேர்ந்தெடுத்து நடக்கிறேன். அதன் முடிவில் இன்னொரு கிளை. எதிர் சுவரில் ரோஜாவின் இதழாலும், ரத்தத்தாலும் தங்கள் பெயரையும் இளவரசியின் பெயரையும் அருகருகில் எழுதிச் சென்றிருக்கிறார்கள். சிம்மாசனமோ, இளவரசியின் முத்தங்களோ கிடைக்கப்போவதில்லை, வெறும் பயணம், தேர்ந்தெடுத்தல், வேதனை, மரணம்…இப்படி ஒரு குரல் கேட்கிறது. ஒரு ஆவியின் குரல் போல வயலில் காற்று பயணிப்பது அமானுஷ்யமாக ஒலித்துச் செல்கிறது. இது போன்ற எண்ணற்ற குரல்களைக் கேட்டபடி நாம் பயணிக்கிறோம். சில நேரங்களில் பறவைகள் கிரீச்சிடும் சப்தமும் கேட்கிறது. ஒருவேளை அந்தச் சுவருக்கு வெளியே ஒரு காடு இருந்திருக்கலாம். பாதையின் சில இடங்களில் காற்று இசையாக உருக்கொண்டு நம் செவிகளை நிறைக்கிறது. சுவர்களில் ஆங்காங்கே நேர்த்தியான ஓவியங்களும், சில இடங்களில் ஆபாசமான வரிகளும், சித்திரங்களும் தென்படுகின்றன. ஒரு சித்திரத்தில் பெண் ஒருத்தியை ஒருவன் சிம்மாசனத்தின் மேல் வைத்து தனது நீண்ட குறிகொண்டு புணர்கிறான். அந்தச் சித்திரம் உங்களை முகம்சுழிக்கச் செய்கிறது. பாதையின் ஓரிடத்தில் முதல்முறையாக ஒரு மனிதனை எதிர்கொள்கிறோம். அந்தக் குள்ளன் நம்மை வரவேற்கிறான், “பயணிகளுக்கு என் வணக்கம்.’’ நாமும் உற்சாகத்துடன் பதில் வணக்கம் சொல்கிறோம். மேலும் நான் விளக்குகிறேன், “நாங்கள் பயணிகள் இல்லை. நான் ஒரு எழுத்தாளன், இவர் எனது வாசகர்.’’ “அப்படியானால் அபூர்வமான இரண்டு பயணிகள் என்று திருத்திக்கொள்கிறேன்.’’ நீங்கள் ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் கேட்கிறீர்கள், “நீ எதற்காக இங்கே வந்தாய்?’’ அந்தக் குள்ளன் சொல்கிறான், மற்றவர்களைப் போல சிம்மாசனத்துக்காகத்தான். சிம்மாசனம் பரம்பரைச் சொத்தாக இருந்த வரை இந்த வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவே இல்லை. இந்த அரிய வாய்ப்பை நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்? சாவு எல்லோருக்கும்தான் கிடைக்கிறது, ஆனால் இந்தச் சிம்மாசனம்? ஆனால் பாருங்கள் இந்தப் புதிர்ப் பாதையில் நுழைந்த யாரும் இதுவரை இளவரசி இருக்குமிடத்தைச் சென்று சேர்ந்ததே இல்லை. பல நாட்களாக நான் இந்தப் பாதைகளில்தான் சுற்றிக்கொண்டிருக்கிறேன். எனக்கு இந்தப் பாதைகள் ஓரளவுக்கு பரிச்சயமாகிவிட்டன. அதனால் என் அனுபவத்தைக் கொண்டு இங்கே சிக்கித் தவிப்பவர்களுக்கு வழிகாட்டத் தொடங்கிவிட்டேன்.’’ “அதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறாய்?’’ என்று கேட்கிறீர்கள் நீங்கள். இதுதான் என்று இல்லை. அவர்களிடம் என்ன இருக்கிறதோ அது. நீங்களாக இருந்தால் கொஞ்சம் வார்த்தைளைக் கேட்பேன்.’’ அவன் கூற்று நம்மை வியப்படையச் செய்கிறது. இந்த வாசகனிடம் என்ன கேட்பாய்?’’ “அவர் படித்த புத்தகங்களிலிருந்து சில வார்த்தைகள்.’’ நீங்கள் சிரிக்கிறீர்கள். ஏன் சிரிக்கிறீர்கள்?’’ என்று அவன் கேட்கிறான். எதுவும் ஞாபகத்தில் இல்லை. என்னால் எதையும் தரமுடியாது’’ என்கிறீர்கள் அவனை ஏமாற்றத்தில் ஆழ்த்தும் விதமாக. நான் இது போல நிறையப் பேரைப் பார்த்துவிட்டேன். எதுவும் அவர்களது ஞாபகத்தில் இல்லை. வாசிப்பும் ஒரு பழக்கமாகிவிட்டது; புகைப்பதைப் போல. எழுத்துக்களிலும் ஒன்றுமில்லை. எழுத்தாளர்களெல்லாம் சில்லறை வித்தை காண்பிக்கும் தந்திரக்காரர்களாக மாறிவிட்டார்கள். இந்த ஒன்றுமில்லாததை எழுதுபவனும் ஒன்றுமில்லாததைப் படிப்பவனும் சேர்ந்து ஏதோ ஒப்பற்ற காரியமாற்றுவது போல பாவனையை மேற்கொண்டுவிட்டனர் அவ்வளவுதான்.’’ இக்கூற்று என்னை திடுக்கிடச் செய்கிறது. தனக்குத் தானே பரிந்து பேசுவது அவமானத்துக்குரியது என்றாலும் என்னால் எதுவும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. நீ எங்கள் இருவரையுமே அவமானப்படுத்திவிட்டாய். ஒரு எழுத்துக்குப் பின்னால் இருக்கும் உழைப்பு, தியாகம் என்ன வென்று உனக்கு தெரியுமா? தன்னையே அவன் விவாதப் பொருளாக்கிக்கொள்கிறான், வார்த்தைக் கூட்டத்தில் தன்னைத் தொலைத்துவிட்டு கனவுலகின் தர்க்கங்களுக்குள் விழுகிறான், இப்படிப்பட்ட புதிர் பாதையொன்றில் வாசகனை இழுத்துக்கொண்டு அலைகிறான்… இதில் எதையுமே உன்னால் புரிந்துகொள்ளமுடியாது. காரணம் நீ சிம்மாசனத்துக்காகவும் பொருளுக்காகவும் ஆசைப்படும் சராசரி மனிதன், வெறுக்கத்தக்க ஒரு குள்ளன்.’’ என் வார்த்தைகள் அவனை மோசமாகத் தாக்கியிருக்கவேண்டும். அவன் முகம் வாடிப்போனது. அவன் உங்களைப் பார்த்துச் சொல்கிறான், “நீங்கள் இந்த எழுத்தாளனைப் பின்பற்றிச் செல்வதை விட ஒரு எஙூயைப் பின்பற்றிச் செல்லலாம். எஙூ தனது இயல்பில் ஒரு சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து அழைத்துச்செல்லும், அது முட்டாள்தனமான கருத்துக்களையோ, தத்துவங்களையோ சொல்ஙூக் கொண்டிருப்பதில்லை. நேற்று உங்களைப் போலவே ஒரு கவிஞனை சந்தித்தேன். ஒரு நீண்ட காதல் காவியத்தை பரிசாக எடுத்துக்கொண்டு இளவரசியைக் காணப் புறப்பட்டிருந்தான். எல்லாக் காதலர்களையும் போல அவனும் தனது இதயத்தை அவளுக்கு காணிக்கையாக்குவதாக எழுதியிருந்தான். நான் சொன்னேன், “இளவரசிக்கு இருதயக்கோளாறு எதுவும் இருப்பது போலத் தெரியவில்லை. வேண்டுமானால் உன் குறியை அறுத்துக்கொடு அவளுக்கு உபயோகமாக இருக்கும் என்றேன். அவன் என்னைத் திட்டிக்கொண்டே போய்விட்டான்.’’ நான் எரிச்சலுடன் சொல்கிறேன், “உன் கிண்டல் போதும். உன் வழியைப் பார்த்துக்கொண்டு நீ போகலாம்.’’ “உங்கள் விருப்பம் இதுதான் என்றால் எனக்கு வருத்தமில்லை. நான் போய் வருகிறேன். இன்னும் சிறிது இசைவாகப் பேசியிருந்தால் இந்தப் பாதையில் நான் சந்தித்த ஒரு கிழவனைப் பற்றிச் சொல்லியிருப்பேன்’’ என்கிறான் ஆவலைத் தூண்டும் விதமாக. யார் அர்ஜென்டீனாவிலிருந்து வந்தவனா?’’ என்று நீங்கள் கேட்கிறீர்கள். இல்லை, ரஷ்யாவிலிருந்து’’ என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட்டான். அந்தப் பாதை கிளை பிரியும் இடத்தில் நின்று சத்தமாக அவன் சொன்னான், “அய்யா எழுத்தாளரே, உங்கள் கையிலிருக்கும் ரோஜா மலர் பத்திரம்.’’ “அந்தப் பாதை கிளை பிரியும் இடத்தில் அவனுக்கு மரணம் காத்திருக்கிறது’’ என்று வன்மத்துடன் நான் சொல்கிறேன். உங்களுக்கு எப்படித் தெரியும்?’’ அதிர்ச்சியுடன் வினவுகிறீர்கள். சிரித்துக்கொண்டே நான் நடக்கிறேன். எனக்கு எப்படித் தெரியாமல் போகும். இந்த உரையாடல், அதற்குப் பிறகான பயணம் உங்களை அதிகம் சோர்வடைச் செய்கிறது. இருவரும் பேசிக்கொள்ளாமல் நடக்கிறோம். இதுவரை போயிராத பாதைகள், விளங்கிக்கொள்ளமுடியாத சூழ்ச்சிகள், அவமானங்கள், மரணத்தை நோக்கிய நம் பயணம்… வாசகரே, நாம் எதைப்பற்றிப் பேசிக்கொள்வது? எந்த வார்த்தைகள் அர்த்தமுள்ளவையாக இருக்கும்? நம் பயணத்தைப் பற்றிய யூகங்கள் இருளெனச் சூழ கபாடபுரத்துக்கு அடியில் ஓடும் மரண நதியில் சவப்படகொன்றில் நாம் பயணிக்கிறோம். எனது விருப்பத்துக்குரியவளின் குரல் ஒலித்துச் செல்வதை நான் கேட்கிறேன், ‘அதோ அங்கே பார். பூமியின் கீழ் ஐந்தடிக்கும் கிழே சிறுபுல் என்மேல் படர்ந்தால், இனிமையான பட்சிகள் என் மேல் பாடினால், வெளியுலகம் அப்பொழுது பாழடைந்து மடியும். இரவின் வானக்கூரையில் அநேக நட்சத்திரங்கள் தெரியும். என் மேல் மெல்லிய காற்று தடவிச் செல்லும்…அக்குரலை நோக்கி ஓடுகிறேன். அதைப் பிடிப்பதற்குள் அது கரைந்துவிடுகிறது. வாசகரே, உங்களை விட்டு வேறொரு பாதையில் நகர்ந்துவிட்டேன். என் மனம் காதலின் துயரத்தில் கனத்திருக்கிறது. காதல் மரணத்தைச் சுலபமாக்குகிறது வாசகரே வெகு சுலபமாக்குகிறது. நீங்களோ வேறு மனநிலையில் நிலைத்திருக்கிறீர். தகர்த்தெறியுங்கள், மறுநிர்மாணம் செய்யுங்கள்என்ற சுவர் வாசகம் உங்கள் கவனத்தை ஈர்க்கிறது. மீண்டும் மீண்டும் வாசித்து மன எழுச்சி கொள்கிறீர்கள். எல்லாம் சுபிட்சமடையப் போவதாக ஒரு கனவு உங்களை ஆட்கொள்கிறது, பின்பு கலைகிறது. இயலாமையில் குமைகிறீர்கள், விரல்களை இறுக்கிச் சுவர்களில் அறைகிறீர்கள். சதை பிய்ந்து கோக்கோ கோலா நிறத்தில் ரத்தம் சொட்டுகிறது. தத்துவங்களும், கொள்கைகளும் மனிதனை எப்படி அலைக்கழிக்கின்றன! உங்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. உங்கள் இறுதியான நம்பிக்கை உங்களைக் கைவிட்டால் உங்களால் என்ன செய்ய முடியும்? உங்களால் இனி வேறொன்றைத் தேர்ந்தெடுக்க முடியாது. நீங்கள் நிராதரவாக விடப்பட்டிருக்கிறீர்கள். நானும்தான் வாசகரே. நம் பயணத்தின் இறுதிவரை எதையும் நாம் பெறவில்லை. இதோ நமக்கு முன் மரணம் காத்திருக்கிறது. நம் இருவரில் ஒருவருக்குத்தான் உயிர்பிழைக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.இந்தப் பொறியிலிருந்து உங்களை நான் காப்பாற்றியாகவேண்டும். எழுத்தாளன் சாகலாம், வாசகன் சாகக்கூடாது.

நாம் இந்தப் புதிரின் விளிம்பில் நிற்கிறோம். அதோ வெளிச்சம் உமிழும் வெளிவாசல் தெரிகிறது பாருங்கள். அதுதான் வெற்றியின் இலக்கு. அங்கே சென்றால் காவலர்கள் உங்களை இளவரசியின் இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்வார்கள். அங்கே அந்தப் பேரெழில் கொண்ட இளவரசியைச் சந்திக்கிறீர்கள். உங்களைக் கண்டு அவள் மகிழ்கிறாள். எனக்காக நீங்கள் கொண்டு வந்திருக்கும் பரிசுப் பொருள் யாதென்று கேட்கிறாள். வாசகன் சாகக்கூடாதுஎன்ற வாசகம் வரையிலான கதையின் பகுதியை அவள் கையில் தருகிறீர்கள். விநோதமான இப்பரிசு அவளை வியப்படையச் செய்கிறது. கதையை அப்போதே அவள் வாசிக்கத் தொடங்குகிறாள். கதையின் போக்கில் அவள் முகம் இறுகுவதை கலவரத்துடன் கவனிக்கிறீர்கள். படித்து முடித்த பின் கதையை சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டு, “அந்தச் சித்திரத்தை நீயும் பார்த்தாய் அல்லவா? சிம்மாசனத்தில் கட்டப்பட்டிருக்கும் பெண் யார்?’’ என்று கேட்கிறாள். பதற்றத்துடன் தெரியவில்லை’’ என்கிறீர்கள். அது யார் ஜாடையில் வரையப்பட்டிருக்கிறது?’’ “எனக்குத் தெரியவில்லை.’’ “அந்த ஆடவன்?’’ “அதுவும் தெரியாது இளவரசி, அவள் ஒரு பெண், அவன் ஒரு ஆண், இது மட்டுந்தான் எனக்குப் புரிந்தது.’’ “நீ முட்டாள் வாசகன்’’ அவள் கர்ஜிக்கிறாள். மேலும் சொல்கிறாள், “அந்தக் குள்ளன் சொன்னது சரிதான். தனக்குள்ளேயே ஆயிரம் குழப்பங்களைக் கொண்ட பைத்தியக்காரனை நம்பி நீ ஏன் வந்தாய்? அவனுடைய விடுதலையையே அவன் தேடிக்கண்டு பிடிக்க முடியாத போது உன்னை எப்படிக் காப்பாற்ற முடியும்?’’ ஒரு காவலாளியை அருகே அழைத்து கட்டளை இடுகிறாள், “இந்த முட்டாள் வாசகனை ஏமாற்றிய கயவனைக் கண்டு பிடித்து அழைத்து வாருங்கள். கையில் ரோஜாவுடன் அந்த புதிர்பாதையில்தான் அவன் திரிந்துகொண்டிருப்பான்.’’ இளவரசியின் உத்தரவுப் படி நீங்கள் விடுதலை செய்யப்படுகிறீர்கள். கொலையாளிகள் பின் தொடர புதிர்பாதையில் இதோ நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

17. உருமாற்றம்

இந்தக் கதையைச் சொல்பவர் சிறுவனாக இருந்தபோது அவளுக்கு வாலிபப் பருவம். அவருடைய வீட்டுக்குப் பின்பக்கம்தான் அவளுடைய வீட்டுத்தோட்டம். ஒன்றுக்கு ஒன்று முதுகைக் காண்பித்தவாறு இரண்டு வீடுகளும் பக்கத்துப் பக்கத்து தெருக்களைப் பார்த்தபடி இருந்தன. அவளுடைய தெரு ஊரின் கடைகோடியில் இருந்தது. அங்கே இருந்த ஐந்தாறு வீடுகளும் மண்மேடுகளுக்கும் குட்டிச்சுவர்களுக்கும் இடம் விட்டுதாறுமாறாகக் கிடந்தன. அவளுடைய வீட்டுக்கெதிரே மண்டிக்கிடந்த புல் பூண்டுகளுக்கிடையே வண்ணானுடைய இரண்டு கழுதைகள் மேய்ந்து கொண்டிருப்பதை அவர் எப்போதும் பார்த்துவந்திருக்கிறார். முன்னங்கால்கள் இரண்டும் கட்டப்பட்டு கால்களில் ரத்தம் கசிய தாவித்தாவி அவை மேய்ந்து கொண்டிருக்கும்; அவைகளின் கண்களில் வலியின் வேதனை வழிந்து கொண்டிருக்கும்.

அவளுடைய குடும்பத்தைப்பற்றி எப்போதும் ஊரில் அவதூறாகவே பேசிவந்தார்கள். வேறு குடும்பங்களைப்பற்றி அவ்வப்போது இதுபோன்ற அவதூறுகள் எழுந்ததுதான் என்றாலும் இந்தக் குடும்பத்துக்கு நேர்ந்ததுபோல் இல்லை. அவர்களும் தங்களைப்பற்றி ஜாடைமாடையான பேச்சுகளையும், வசவுகளையும் பொருட்படுத்துவதும் இல்லை. எல்லாமே மரத்துப்போனதும், பழகிப்போனதுமாக ஸ்திரப்பட்டுவிட்டது அவர்களுக்கு.

அவளுடைய அம்மாவுக்குத் தன் பெண்களைக் கண்டிப்பதிலோ, ஒழுக்கமாக நடத்துவதிலோ அக்கறை இருந்ததாகவும் தெரியவில்லை. அவளுடைய அப்பாவுக்கு இதனால் பொறுப்புகள் குறைந்திருந்தது. தன் நிலை குறித்து திருப்தியுற்றவராகவே தெரிந்தார். அவர் அதிகம் பேசுவதில்லை. கூட்டிக்கொடுப்பவன் என்ற அபிப்ராயம் அவரைப்பற்றி பரவலாக இருந்து வந்தது. இதனால் நிச்சயம் அவர் வருத்தப்பட்டிருக்கத்தான் வேண்டும்.

அவளுடைய மூத்த சகோதரிக்கு ஒரு காதலன் உண்டு. ஏற்கெனவே திருமணமான அவன் இந்த குடும்பத்துக்கென்று நிறைய உதவிகள் செய்தான். அவன் உதவியிருக்காவிட்டால் அந்தக் குடும்பம் இன்னும் நிலைகுலைந்து போயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இளையவளோ அவளைப்போல இல்லை. அவளுடைய காதல் பரந்துவிரிந்த சாம்ராஜ்ஜியம். அந்தக் கிராமத்திலிருந்த இளைஞர்கள் மட்டுமல்லாது பக்கத்து ஊர் இளைஞர்களும் அவளைக் காதலித்தார்கள். சுற்றிச் சுற்றி வந்தார்கள். திருமணமான ஆண்களும் இதில் அடக்கம். அவர்களில் எத்தனை பேரை அவள் காதலித்தாள் என்பது உறுதிப்படத் தெரியவில்லை.

அவள் பேரில் பைத்தியமாகிப்போன சில இளைஞர்கள், அவளைப் பற்றித் தெரிந்தும் திருமணம் செய்து கொள்ள முன் வந்ததுண்டு. அந்த வாய்ப்புகளை எல்லாம் அவள் ஏனோ உதாசீனம் செய்துவந்தாள். அசட்டுத்தனமான இந்த உளறல்களைக் கேட்டு அவர்களைக் கிண்டல் செய்து அனுப்பினாள். அவள் மேல் கொண்ட அபரிமிதமான காதலில் ஒருவன் அவளை அடிக்கவும் செய்திருக்கிறான். அவனுக்குத் துரோகம் செய்கிறாளாம் அவள்! எல்லையற்ற காதலால் நிறைந்திருந்த மனதுக்குத் துரோகம் என்று ஏதாவது உண்டோ?

அவளும் சில பொழுது யோசித்திருக்கலாம்; அவர்களில் ஒருவனைக் கல்யாணம் செய்து கொண்டுவிடலாமென்று. எந்தக் காதலனின் பெற்றோர் இதற்குச் சம்மதிப்பார்கள்? எங்கேயாவது ஓடிப்போய்த்தான் செய்துகொள்ள வேண்டும். திரும்பி வந்தால் ஊர்க்காரர்கள் நிச்சயம் இருவரையும் கொன்று போட்டிருப்பார்கள்.

பள்ளி இறுதியாண்டு படிக்கும்போதே அவளுடைய காதல் விளையாட்டுகள் ஆரம்பமாகிவிட்டன. எத்தனைபேர் நேசிக்க வந்தாலும் காதல் மட்டும் அவளிடம் வற்றவேயில்லை. தோட்டம், புதர் என்று மறைவான இடங்களில் காதல் செய்ததில் மூன்று முறை கருக்கலைப்பு செய்யவேண்டியிருந்தது. ஒரு முறை மரணத்தின் விளிம்பைத் தொட்டு வந்திருக்கிறாள்.

அந்த சம்பவம் நடந்த இரவுக்கு முன்பு வரை அவள் குதூகலமாகவே நாட்களைக் கழித்திருந்தாள். காதலைவிட மதிக்கத் தகுந்த விஷயம் வேறு ஒன்றும் அவளுக்குத் தென்படவில்லை.

அன்று இரவு அவளுடய காதலன் ஒருவன் அவளைத் தேடிவந்தான். அவளுடைய அப்பா பந்தலுக்குக் கீழே திண்ணையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். தானியப் பானைகள் அடுக்கிவைத்திருந்த உள் அறைக்குள் அவளும், அவளுடைய அக்காவும் படுத்தபடி பேசிக்கொண்டிருந்தார்கள். அவன் உள்ளே வந்தான். அவனைப் பார்த்ததும் மூத்தவள் எழுந்துபோய் அவள் அம்மாவுடன் தாழ்வாரத்தில் படுத்துக்கொண்டாள்.

அவனை அவள் அப்போது எதிர்பார்க்கவில்லை. வருவதாகவும் அவன் சொல்லியிருக்கவில்லை. அவள் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். அவன் பக்கத்தில் உட்கார்ந்தான். ஏதோ ஒரு திகிலுணர்வு அவளைப் பற்றிக்கொண்டது. அவன் எதுவும் பேசாமல் அவளுடைய முகத்தைப் பார்த்தான்.

உங்க ஊட்டுக்காரிக்கு ஒடம்பு பரவாயில்லையா?’’ என்று கேட்டாள்.

அப்படியேதான் படுத்திருக்கா’’ என்றான் அவன். அவனுடைய முகம் இறுகிப்போயிருந்தது. அவன் எப்போதும் இப்படித்தான் அவள் இரக்கப்படும்படியாக நடந்துகொண்டான். வழக்கத்துக்கு மாறாக அவளிடம் எதையோ எதிர்ப்பார்த்தவன் போல தயக்கத்துடன் தெரிந்தான்.

ஏன் இப்படி உட்கார்ந்திருக்கே?’’ என்று கேட்டாள்.

இன்னிக்கு எங்க வீட்டுக்குப் போயிடலாமா?’’

வியப்புடன் அவனைப் பார்த்தாள்.

ஏன்?’’

அதுக்கில்ல, இன்னிக்கிமட்டும் அங்க இருந்திட்டு வரலாம், நானே கொண்டுவந்து விட்டுட்டுப்போறேன்.’’

அங்கெல்லாம் வேண்டாம். வீட்டுல ஆளுங்க இருப்பாங்க’’ என்றாள்.

தூங்கிக்கிட்டிருப்பாங்க. தோட்டத்துக் கதவ திறந்து விட்டுட்டு வந்திருக்கேன்.’’

ஏதாவது வம்பு வரும், வேண்டாம்.’’

வராது’’ என்றான் பிடிவாதத்துடன்.

கோபத்துடன் அவனைப் பார்த்தபடி உட்காந்திருந்தாள். அவள் மறுத்திருந்தால் அவன் ஒன்றும் செய்துவிடப் போவதில்லை. ஏனோ அவன் மேல் இரக்கம் ஏற்பட்டது.

இருவரும் தாழ்வாரத்தைக் கடக்கும்போது உமா’’ என்றாள் அவளுடைய அக்கா. இதென்ன புதுப்பழக்கம்?’ என்பது போல அது ஒலித்தது. பதிலுக்கு இவள் ஊம்என்று குரல் கொடுத்துவிட்டு அவனுடன் போனாள்.

ஊரே நிசப்தமாக இருந்தது. கதை சொல்பவரின் வீட்டுக்குப் பக்கத்து வீடுதான் அவனுடையது. சீக்காளியான பெண்ணை அவன் மணந்துகொண்டு வந்திருந்தான். அவளுக்குக் காசநோய் என்று ஊரில் பேசிக்கொண்டார்கள். இதனால் ஊரின் இரக்கப் பார்வை அவன் மேல் விழுந்திருந்தது. அவனுடைய இது போன்ற தவறுகள் மன்னிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

அவளைக் குறுக்குச் சந்து வழியாகக் கூட்டிக்கொண்டு போனான். தோட்டத்துக் கதவைத் தொட்டுக்கொண்டு போனது சந்து. தோட்டத்தில் இடது பக்கமாகக் கிணறு இருந்தது. அதையொட்டி நடந்து வீட்டுக்குள் போனார்கள். நடுக்கூடம் இருட்டிக் கொண்டிருந்தது. விளக்கைப் போட்டபோது பயத்துடன் அவனை ஒட்டிக் கொண்டாள். எதையும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பிரயத்தனம் அவனிடம் தென்படவில்லை. அச்சத்துடன் ஏதோ ஒரு அசம்பாவிதத்தை எதிர்பார்த்தபடி அவனுடன் போனாள். அவனுடைய அறைக்கு அவளை அழைத்துக்கொண்டு போனான். அறைக்குள் நுழைவதற்கு முன்னால் பக்கத்து அறையில் ஒருக்களித்துவிடப்பட்டிருந்த கதவுக்குப் பின்னாலிருந்து யாரோ இங்கே கவனிப்பது போல இருந்தது அவளுக்கு.

உள்ளே போனதும் அங்க யாரு இருக்காங்க?’’ என்று கேட்டாள்.

அவதான்’’ என்றான், அவசியமற்ற ஒரு பதிலைச் சொல்வதுபோல.

கட்டில் அந்த அறையின் முக்கால் பங்கை அடைத்துக் கொண்டடிருந்தது. தடிமனான ஒரு புது மெத்தை அதன் மேல் படுத்திருந்தது. இவையெல்லாம் அந்த சீக்காளிப் பெண்ணின் சீதனமாக இருக்கலாம். இப்படி ஒரு கட்டிலில் என்னைக் கிடத்திப் பார்க்கவேண்டும் என்ற ஆசை போலும் என்று யோசித்தபடி கட்டிலில் உட்கார்ந்தாள். அவன் எழுந்துபோய்க் கதவைச் சாத்திவிட்டு வந்தான்.

உங்கவீட்டுக்காரிக்குப் படுக்கை இங்க இல்லையா?’’

இல்லே.’’

அவுங்களுக்கு அங்க பயமா இருக்காது?’’

அவுங்க பாட்டி வந்து படுத்திருக்காங்க.’’

பாட்டின்னா?’’

அவுங்க அப்பனப் பெத்தபாட்டி. கூடியவரைக்கும் என்னைத் தூர இருக்கச் சொல்லிட்டாரு டாக்டர்.’’

சரியாயிடுமா?’’

நம்பிக்கையில்லை; வியாதி முத்திடுச்சாம்.’’

பெரிய ஆஸ்பத்திரிக்கு எங்கயாவது கூட்டிக்கிட்டுப் போறதானே.’’

அவன் அதற்குமேல் பேச விரும்பவில்லை. அவளுடைய ஆடைகளைக் களைந்தான். மறுத்தும்கூட அவளை முழு நிர்வாணமாக்கினான். தன்னைத் தயார்படுத்திக் கொள்ளாமலேயே அவனுக்கு இணங்கினாள். மனசுக்குள் ஏதோ ஒரு பெரிய தடை விலகாமல் நின்றது. இந்த அறைக்குள் நடக்கும் எல்லாவற்றையும் யூகித்துக்கொண்டு, உற்றுக் கவனித்தபடி அடுத்த அறையில் பரிதாபத்துக்குரிய ஒரு பெண் இருக்கிறாள் என்பதை நினைத்தபோது, தன் மேல் புரண்டுகொண்டிருக்கும் அவனை வீசியெறியவேண்டும்போல் எரிச்சல்தான் வந்தது. அவனுடைய உராய்வு எந்த கிளார்ச்சியையும் அவளிடம் உண்டாக்கவில்லை. ஏதோ கட்டாயத்துக்கு என அவனை அனுமதித்திருந்தாள். என்ன கட்டாயம் என்றுதான் புரியவில்லை அவளுக்கு.

முயக்கத்துக்குப் பின் அணைத்தவாக்கில் படுத்துக்கிடந்தவனிடம் கேட்டாள், “இதெல்லாம் அவுங்களுக்குத் தெரிஞ்சா?’’

யாருக்கு?’’

உன் வீட்டுக்காரிக்கு.’’

அவன் ஒன்றும் பேசவில்லை.

அவுங்க இந்த நிலையில் இருக்கும்போது நாம இங்க வந்து…’’

அவகூட நானும் சாகணுமா?’’

எதுவும் பேசாமல் வெறுப்புடன் அவனைப் பார்த்தாள்.

போகலாம்’’ என்றாள்.

இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி போகலாம்’’ என்றான் கெஞ்சும் குரலில். இன்னொருமுறை அவளை ருசி பார்க்கும் வேட்கை அவனிடம் இருந்தது. அவளைத் தழுவினான். அவளுடைய வெற்றுடம்பு இப்போது அதிகம் கூசியது. விளக்கை அணைத்துவிடும்படிச் சொன்னாள். இருக்கட்டுமே’’ என்றான். எந்தத் தடையுமில்லாமல் அவள் உடலை உணரவேண்டும் அவனுக்கு. யாரோ பாக்கிறமாதிரி இருக்கு’’ என்றாள் அவள்.

எங்கே?’’

பக்கத்து ரூம்ல இருந்து.’’

அங்கிருந்து எப்படிப் பார்க்க முடியும்?’’

எனக்கு அப்படித்தான் தோணுது. வௌக்க நிறுத்துங்க.’’

அப்படிப் பாத்தாதான் என்ன?’’ என்று கோபத்துடன் சொன்னவன் அவளுடைய உடலை வெறியுடன் மலர்த்தி மேலே கவிழ்ந்தான். அவசரமாக அவளுக்குள் தன்னைப் பொருத்திக்கொண்டு நிதானமில்லாமல் இயங்கினான். இதில் அவன் எந்த சுகத்தையும் அனுபவிப்பவனாக அவளுக்குத் தெரியவில்லை. அது ஏதோ பழி தீர்த்தல் போல இருந்தது.

ஏன் ஜடம் மாதிரி படுத்திருக்கே, பிடிக்கலையா?’’ என்றான் இயக்கத்தை நிறுத்திவிட்டு. அவளுடைய வெறுப்பான பார்வையைச் சந்திக்க முடியாமல் அவமானப்பட்டவன் போல பாதியிலேயே கீழே சரிந்து படுத்தான். அவளை நிர்ப்பந்திக்க முடியாது என்ற நிலையில் அவனால் வேறு என்ன செய்ய முடியும்?

அவள் எழுந்து ஆடைகளை உடுத்துக்கொண்டாள். அங்கிருந்து வெளியேறி வந்த வழியே நடந்தாள். தனக்குப் பின்னால் அவன் வருவது தெரிந்தும் அவள் எதுவும் பேசவில்லை. இதுநாள் வரை இல்லாத ஒரு வெறுப்பு அவளுக்குள் தலைதூக்கி நின்றது. வீடு வரை அவளுடன் வந்து விட்டுவிட்டு அவன் திரும்பப் போய்விட்டான்.

இது நடந்த ஐந்தாறு நாட்களில் அவனுடைய மனைவியின் மரணச் செய்தியை அவள் கேட்க நேர்ந்தது. உள்ளுக்குள் புதைந்திருந்த துக்கத்தின் கனலில் அவள் மனம் வெந்து சாம்பலாகிப்போனதான ஒரு பிரமைக்கு அவள் ஆட்பட்டாள். இதுநாள் வரை காதல் என்ற ஒன்றை யாரும் காணத புதுவிதமாகக் கற்பிதம் செய்து கொண்டிருந்தோமோஎன்றுகூட அவளுக்கு நினைக்கத் தோன்றியது. விளையாட்டுணர்வு வற்றி, நோய்வாய்ப் பட்டவள் போலக் காணப்பட்ட அவளைக்கண்டுதான் ஊர்க்காரர்கள் குழம்பிப்போனார்கள். ஏன் இப்படி இருக்கிறாள்?’ என்று அடுத்தவர்களைப் பார்த்துக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: